• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பார்வையே ரம்மியமாய் - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பார்வை - 7

நேரம் நள்ளிரவையும் தாண்டிவிட்டது பிரபா குடும்பத்தினர் மதுரை வந்து சேர்வதற்கு. தூக்கத்தில் ஆளுக்கொருப் பக்கமாக சாமியாடிக் கொண்டிருந்தத் தங்களதுப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மூன்று தமக்கைகளும் தத்தமது இல்லங்களை நோக்கி நகர,

"புள்ளைகளுக்குப் பாலைக் கொடுத்து தூங்க வைங்கத்தா" என்று சொல்லியபடியே சுந்தரவடிவும், பாண்டியும் பிரபாவுடன் நின்றிருந்தனர். பிரபா வேன் டிரைவருக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தான்.

"அண்ணே உங்க வீடு எங்கிட்டுண்ணே. ரொம்பத் தொலைவென்டா இங்கனயே ரவைக்குத் தூங்கி எந்திரிச்சு காலையில கிளம்புங்கண்ணே" பணத்தைக் கொடுத்ததோடு வேலை முடிந்தது என்றில்லாமல் அவரின் நலனிலும் அக்கறைக் கொண்டு விசாரித்தான் பிரபா.

"பரவால்ல தம்பி. நம்ம வூடு இங்கப் பக்கத்துலதேன். நான் போயிக்கிடுதேன். கண்ணாலத்துக்கும் நம்மகிட்டயே வண்டி எடுத்துக்கிடுங்க தம்பி" என்று அட்வான்ஸ் புக்கிங் செய்துவிட்டு அவர் கிளம்பவும் பிரபாவின் அலைப்பேசி 'சொக்குப் பொடி மீனாட்சி' என்று அலறவும் சரியாக இருந்தது.

"ஏன் சித்தி நேத்து ம்ஹூம் இன்னைக்கு காலையில வரைக்கும் எனக்கு இந்தப் பொண்ணு வேண்டாம் கல்யாணம் வேண்டாமென்டு சொல்லிக்கிட்டு ஒரு பய திரிஞ்சானே அவன நீ எங்கிட்டாச்சும் பார்த்த?" என்று பாண்டி நக்கலடிக்க,

"நானும் அவனத்தேன் பாண்டி தேடுறேன். பய சாயங்காலத்துலயிருந்து கண்ணுலயே அம்புட மாட்டேங்குறான்" என்று கூறி சுந்தரவடிவும் பாண்டியுடன் சேர்ந்து கொண்டு புன்னகைத்தார்.

தெரியாத நம்பராக இருக்கவும் செல்லை அணைத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டவனாக, "ம்மா நீயுமாம்மா? அவெங்கூட எல்லாம் சேராதம்மா" என்று சுந்தரவடிவின் தோளின் மீது கையைப் போட்டுக் கொண்டு சலுகையாகப் பிரபா கூற,

"ஏன்டா பேச மாட்ட. பொண்ணு பார்க்க இங்கேயிருந்து அம்புட்டுப் பேரையும் கிளப்புறதுக்கே என் தலை முடியில பாதி போயிடுச்சு. எதையுங் கண்டும் காணாம சுத்திக்கிட்டு இருந்துப்புட்டு, ஒத்த பாட்டுல சோலிய முடிச்சுட்டியே" தன் ஆதங்கத்தைப் பாண்டி கொட்டித் தீர்க்க,

"உனக்குத்தேன் கல்யாணம் முடிஞ்சுடுச்சே மாப்பி. மூணு புள்ளைகளும் ஆகப் போவுது. இதுக்கு மேல உன் தலையில முடி இருந்தா என்ன இல்லாட்டி என்ன?" என்று அசால்ட்டாகக் கூறினான் பிரபா.

"ஹேய் ஹேஹேய்... இது நல்ல கதையா இருக்கே. கல்யாணம் முடிஞ்சுட்டா ஒருத்தனுக்கு முடி இருக்கக் கூடாதா? நல்லா வந்து வாச்சீங்கடா எனக்குன்னு. இனி நீயாச்சு உன் மாமனுங்களாச்சு.

நீ அவெங்க கையைப் புடிப்பியோ, கால்ல விழுவியோ? நீயே உன் கல்யாணத்தை நடத்திக்க. உன் மண்டையில முடி இருக்கா இல்லையான்டு நான் கல்யாணத்தன்னைக்கு வந்து பார்த்திக்கிடுதேன்.

இங்காரு சித்தி இனிமே எதுக்காச்சும் என்னைய கூப்பிட்ட, பார்த்துக்க" பொங்கிவிட்டான் பாண்டி.

"என் ராசா, நீ மட்டும் இல்லாட்டி இந்த விசயம் இம்புட்டு சுளுவா முடிஞ்சுருக்குமா? ஏன்டா பாண்டி இம்புட்டுக் கோவப்படுற? இந்தக் கண்ணாலம் மட்டும் நல்லபடியா முடியட்டும். உன்னைத் திருப்பதிக்கு கூட்டிப் போய் முடியிறக்கறதா நான் அந்த ஏழுமலையானுக்கு நேர்ந்துக்கிடலாமென்டு இருக்கேன்" என்று நமட்டுச் சிரிப்புடன் சொன்னார் சுந்தரவடிவு.

"ஆக ஒட்டு மொத்தக் குடும்பத்துக்கும் என் முடியிலதேன் கண்ணு. நீ என்னத்த வேண்டிக்கிறது? இந்தக் கல்யாணம் முடிஞ்சும் என் மண்டையில முடி இருந்தா நானே திருப்பதிக்குப் போய் மொட்டை அடிச்சுக்கிறேன். போதுமா? இப்ப திருப்தியா ரெண்டு பேருக்கும்?" படபடவென பாண்டி பொரிந்து கொண்டிருக்கும் பொழுதே பிரபாவின் அலைப்பேசி மறுபடியும் அதே பாடலைப் பாடியது.

இம்முறையும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வரவும் எடுத்துப் பேசினான் பிரபாகரன். முகில் தான் அழைத்திருந்தான். முகில் காலேஜ் ஹாஸ்டலில் சேர்ந்த நாளிலிருந்தே அவன் வீட்டுக்கு வரும் நாட்களில் அக்கா தம்பி இருவரும் உறங்குவது மட்டும் ஒரே அறையில் தான்.

கீழே உள்ள அறைகளில் ஒன்று கோதையம்மாள் பயன்படுத்துவது. மற்றொன்று விருந்தினருக்கானது. மாடியில் குமரப்பன் - லலிதா தம்பதியினர் ஒரு அறையிலும், மீனாவுக்கும் முகிலுக்கும் தனித்தனியாக வெவ்வேறு அறைகளும் இருந்தன. இது போக விருந்தினருக்காக இங்கொரு அறையும் இருந்தது.

தம்பி ஹாஸ்டலில் சேர்ந்ததிலிருந்து ஒரு வாரக் கதையும் ஒட்டு மொத்தமாக பேசித் தீர்ப்பதற்காக இருவரும் எதாவது ஒரு அறையில் ஒன்றாகக் கதை பேசியபடித் தூங்குவது வழக்கம். இன்றும் அவ்வாறு தூங்கியிருக்க அர்த்த ராத்திரி ஒரு மணிக்கு மீனா தம்பியை எழுப்பினாள்.

"முகில், டேய் முகில்... எந்திரி கண்ணு"

"இப்ப எதுக்குங்க்கா உசுப்பி விடுறீங்க். தூக்கம் வருதுங்க்கா."

"இல்ல கண்ணு அவியெல்லாம் மதுரைக்குப் பத்திரமா போயிட்டாங்களா என்னன்னு தெரியலை. ஒரு போன் போட்டுக் கேளு சாமி."

"வரத் தெரிஞ்சவங்களுக்குப் போகத் தெரியாதுங்களாக்கும். அதெல்லாம் அவங்க பத்திரமா போயிருப்பாங்க. நீங்க பேசாம போய் தூங்குங்கக்கா. எனக்குத் தூக்கம் வருதுங்க்கா" தூக்கம் முற்றிலுமாகக் கலைந்துவிட்ட பொழுதிலும் தமக்கையிடம் வார்த்தையாடிக் கொண்டிருந்தான் முகிலன்.

"என் கண்ணு இல்ல, என் தங்கம் இல்ல. ஒருக்கா அக்காவுக்காக கேளு சாமி" மீனாவும் விடுவதாக இல்லை.

நன்றாகத் திரும்பி அவள் முகம் தெரியும் வகையில் படுத்துக் கொண்டவன், "சரி கேட்டுச் சொன்னா எனக்கு என்னங்க்கா கிடைக்கும்" கட்டிலுக்கு அருகில் டென்ஷனுடன் நின்றிருக்கும் தமக்கையிடம் அழகாக டீல் பேசினான் இளையவன்.

"நீ அடுத்த வாரம் வரும் போது அக்காவுக்கு சேலரி கொடுத்திருப்பாங்கல்ல அதை முழுசா உனக்கே தந்திடுறேன் தங்கம். இப்ப போன் பண்ணு சாமி"

"ஹைய! இனி யாருக்கு வேணும் அந்த ஐயாயிரம் ரூபாய். இனி இந்த சில்லறைக் காசெல்லாம் எனக்கு வேண்டாம். இப்ப ஐயாவோட ரேஞ்சே வேற. என்ர மச்சான் பெரிய ஆளாக்கும். கப்பல்ல பல நாட்டுக்குப் போய் வாரவங்க. அதால என்ர மச்சான் போற ஊருலயிருந்தெல்லாம் எனக்குத் தேவையானதெல்லாம் வாங்கிட்டு வருவாராக்கும். வேற எதாவது பெட்டர் டீல் இருந்தா சொல்லுங்க்கா. இல்ல என்னைய தூங்க விடுங்க" விடாமல் சீண்டிக் கொண்டிருந்தான் சின்னவன்.

இப்பொழுது என்ன சொல்லி முகிலை வழிக்குக் கொண்டு வருவது என்பது தெரியாமல் "முகிலு" என்று பாவமாக அழைத்தாள் மீனலோசினி.

அதற்கு மேலும் அவளைக் கெஞ்ச விடாமல் சிரித்தபடியே, "க்கா என்ர போன்ல மச்சான் நம்பர் இருக்குதுங்க். மச்சான்னு போட்டே ஸேவ் பண்ணி வைச்சிருக்கேன். நீங்களே கூப்பிட்டுக் கேளுங்க்கா" என்றான்.

"ஐயோ நானெல்லாம் பேச முடியாது முகிலு. அம்மாவுக்கும் அம்மத்தாவுக்கும் தெரிஞ்சுது அவ்வளவு தான். கொஞ்சம் நீயே கேட்டு சொல்லேன். ப்ளீஸ் என் செல்ல முகில் இல்ல."

"நானும் பார்க்கத்தானே போறேன், நீங்க போனும் கையுமா சுத்தப் போறதையெல்லாம்" என்று கூறியபடியே அவனுடைய அலைப்பேசியை எடுக்க,

ஐயோ அவனுடைய அலைப்பேசியில் இருந்து அழைத்தால் நமக்கு எப்படி அவங்க நம்பர் தெரியிறது என்று மனதுக்குள் அலறியவளாக, கொஞ்சம் தயக்கமும் வெட்கமும் போட்டி போட,

"முகில் இதுல இருந்து கால் பண்றியா?" என்று கூறியபடியே தன்னுடைய அலைப்பேசியை எடுத்து நீட்டினாள் மீனா.

"இப்ப மட்டும் அம்மாவும் அம்மத்தாவும் திட்ட மாட்டாங்களாக்கும். நம்பர் எக்ஸ்சேஞ்சுக்கு நல்ல நேரம் பார்த்தீங்க்கா" என்று கூறிச் சிரித்தபடியே அவளுடைய அலைப்பேசியிலிருந்தே பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்திருந்தான்.

"மச்சான் நான் முகில் பேசுறேனுங்க."

"சொல்லு முகில். நம்பர் புதுசா வரவும் முதல் தடவை கட் பண்ணிட்டேன். நீ எங்கிட்ட வேற நம்பர் கொடுத்திருந்தியா, அதான் தெரியலை."

"நான் கொடுத்தது தாங்க மச்சான் என்ர நம்பரு. இங்க ஒருத்தவங்களுக்கு நீங்க பத்திரமா மதுரைக்குப் போய் சேர்ந்துட்டீங்களான்னு தெரிஞ்சுக்கணுமாமா. அதுக்குத் தானுங்க நல்லா தூங்கிட்டு இருந்தவனை உசுப்பி விட்டு கேட்கச் சொல்றாங்க.

இதுல போன் பண்றது வேற அவிய போன்ல இருந்து பண்ணனுமாம். ஏனுங்க மச்சான் நீங்களே இந்த நாயத்தைக் கேளுங்க. இப்படி என்னை உசுப்பி விட்டு அவங்க போன்ல பேசச் சொல்றதுக்குப் பதிலா அவங்களே உங்கிட்ட பேசி இருக்கலாம் இல்லீங்" என்று முகில் பேசிக் கொண்டே போக தொப் தொப்பென்று முகில் அடி வாங்கும் சத்தம் இங்கு பிரபா வரைக் கேட்டது.

ஹா...ஹாவென்று பெருங் குரலெடுத்துச் சிரித்தான் பிரபாகரன். "ஐயோ மச்சான் என்ர காது போச்சுங்க். இவ்வளவு சத்தமாவா சிரிப்பீங்க்? அக்கம் பக்கம் வீட்டுல இருக்குறவங்க எல்லாம் பாவமுங்க மச்சான்" இப்பொழுது பிரபாவையும் கலாய்க்கத் தொடங்கி இருந்தான் முகில்.

சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த பாண்டியை அருகில் இழுத்து அவன் தோளில் கையைப் போட்டவாறே, "அவனுக எல்லாம் தூங்குனா என்ன? தூங்காட்டி எனக்கென்ன? நான் சிரிக்கிறது உன் பக்கத்துல இருக்குறவங்களுக்கும் கேட்கணுமில்ல. அதான் இந்தச் சத்தம். நாங்க பத்திரமா வீட்டுக்கு வந்துட்டோமுன்னு அவங்க கிட்ட சொல்லிடு முகில்" என்றான் மச்சான்.

"சாடிக்கேத்த மூடிங்க மச்சான். இதுக்கு மேல நான் இங்க இருந்தேன்னு வைங்க நான் தூங்கின மாதிரிதான். அதனால நீங்களே உங்க வாயால நீங்க பத்திரமா ஊருக்குப் போய்ட்ட விவரத்தை என்ர அக்கா கிட்ட சொல்லிடுங்க் மச்சான். குட் நைட்" என்று கூறியவாறே அலைப்பேசியை மீனாவிடம் நீட்டினான் முகில்.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
'ம்ஹூம் நான் மாட்டேன்' என்று சைகையிலேயே கூறி மறுத்துக் கொண்டிருந்தவளின் கைகளில் வலுக்கட்டாயமாக அலைப்பேசியைத் திணித்துவிட்டு, "நான் என்ர ரூமுக்குப் போறேனுங்கக்கோவ்" என்று சொல்லி அவன் அறையைப் பார்த்துப் போய்விட்டான் முகில்.

இங்கு மதுரையிலோ பாண்டியைப் பிடித்து வீட்டுக்குள் தள்ளிவிட்டு, நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் தாயாரிடம் அசடு வழிந்துவிட்டு வேக வேகமாக மொட்டை மாடிக்கு ஏறப் போன பிரபாவைத் தடுத்தது பாண்டியின் குரல்.

"சித்தி நானும் இன்டைக்கி இங்கயே படுத்துக்கிறேன்" என்று சுந்தரவடிவிடம் கூறிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்து உள்ளிருந்தவாறே க்ரில் கேட்டினை வெளிப்புறமாகப் பூட்டியவன் சாவியை எடுத்துப் பிரபாவிடம் தூக்கிப் போட்டுவிட்டு,

"விடியிறதுக்குள்ள பேசி முடிச்சின்டா கதவைத் தொறந்துகிட்டு வந்து சேரு மாப்பி. எங்களுக்குத் தூக்கம் வருது. நாங்க போய் தூங்குறோம்" என்று கூறிவிட்டுத் திரும்பினான் பாண்டி.

அவனைப் போக விடாமல் க்ரில் கேட்டிலுள்ள கம்பியின் ஊடாகக் கையை விட்டு அவன் சட்டையைப் பிடித்து இழுத்து, பாண்டியின் தலையைக் கேட்டில் முட்ட வைத்து, அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் ஒன்றினைப் பதித்துவிட்டு இரண்டிரண்டுப் படிகளாகத் தாவி ஏறி விரைவாக மொட்டை மாடியினைச் சென்றடைந்தான் பிரபா. "அடேய்" என்று பாண்டி கத்தியது பிரபாவின் காதுகளில் விழவே இல்லை.

இவ்வளவு களேபரத்தையும் என்ன பேசுவதென்றுத் தெரியாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டே இருந்தாள் மீனா.

"ஹலோ மீனலோசினி லைன்ல இருக்கீங்களா? எதாவதுப் பேசுங்க" என்றான் பிரபா மொட்டை மாடியில் கட்டைச் சுவற்றில் அமர்ந்தவாறே.

வெறும் 'ம்ம்ம்' மட்டுமே பதிலாக வந்தது அந்தப் பக்கத்திலிருந்து. "என்னங்க இது சாயங்காலம் அவ்வளவு போல்டா பேசுனீங்க. இப்ப என்னடான்னா வாயே திறக்க மாட்டேங்குறீங்களே" என்றான் பிரபா.

"அது வேண்டாமுன்னு சொல்லச் சொல்றதுக்காகப் பேசிப்போட்டேனுங்க்" என்று வேகமாகப் பதில் தந்தவள், "இப்ப என்ன பேசுறதுன்னு தெரியலீங்க்" என்பதை முணுமுணுப்பாகக் கூறினாள் மீனா.

"சரி நீங்க என்ன பேசுறதுன்னு யோசிச்சு வைங்க. நாம நளைக்குப் பேசலாங்களா?" சிரிப்புடன் பிரபா வினவ,

"சரிங்க்" என்று கூறி வேகமாக அழைப்பைத் துண்டித்திருந்தாள் மீனா. அப்பொழுது தான் அடைப்பட்டிருந்த மூச்சும் வெளியே வந்தது. தன் நிலையை எண்ணித் தானே சிரித்துக் கொண்டு, அலைப்பேசியால் தன் தலையில் தட்டிக் கொண்டாள். பின் நினைவு வந்தவளாக பிரபாவின் அலைப்பேசி எண்ணை எந்தப் பெயரில் சேமித்து வைப்பது என்று சிந்தித்தாள்.

சிந்தித்தவளுக்கு 'சொக்கநாதன் நாந்தான்டி' என்ற வரிகள் மனதுக்குள் ஓட, சிரிப்புடன் 'சொக்கு' என்ற பெயரில் சேமித்துக் கொண்டாள். அலைப்பேசியை வைத்துவிட்டுப் படுக்கையில் விழுந்தவள் உதட்டில் உறைந்தப் புன்னகையுடன் உறங்கிப் போனாள்.

இங்கு பிரபாவுக்கும் அதே நிலைதான். கீழே வீட்டுக்கும் போகத் தோன்றாமல் அப்படியே மொட்டை மாடியிலேயே படுத்துவிட்டான். மறக்காமல் தன்னுடைய அலைப்பேசியில் 'சொக்குப்பொடி' என்ற பெயரில் மீனாவின் அலைப்பேசி எண்ணை சேமித்து வைத்துக் கொண்டான்.

'இவளைப் பேச வைக்கவே நான் ரொம்பப் பேசணும் போலயே. பேசுறதுக்கே இந்தப் பாடுன்னா இன்னும் மத்ததுக்கெல்லாம்... டேய் பிரபா விடா முயற்சி விஸ்வரூப வெற்றிடா. இதைவிட உனக்கு வேற என்னடா வேலை? நாளையிலிருந்து மினி குட்டிக்கிட்ட பேசுறது மட்டுந்தான் உன் வேலை' மனதோடு எண்ணிக் கொண்டான். உற்சாக மிகுதியில் உறக்கம் கண்களை விட்டு வெகுதூரம் சென்றிருந்தது. சந்தோஷ மிகுதியில் ஹோவென்றுக் கத்த வேண்டும் போல் தோன்றியது. சூழ்நிலைக் கருதி அடக்கி வாசித்தவன் சூரியன் உதிக்கும் நேரத்தில் ஒருவழியாக உறங்கிப் போனான்.

******************

எண்ணியது போலவே தினமும் பல முறை அவனுடைய மினிக்குட்டியிடம் பேசிவிடுவான் பிரபா. தினமும் மீனா காலையில் கண் விழிப்பதே 'ஓய் சொக்குப்பொடி' என்கிற பிரபாவின் அழைப்பில்தான் என்றாகிப் போனது.

பிரபாவுடைய மரியாதையான வாங்க போங்க என்ற அழைப்புகளெல்லாம் ஒருமைக்கு மாறியிருந்தது. மீனா நக்கலாக வினவ, 'எனக்கு நானே மரியாதை கொடுத்துப் பேசிக்க முடியுமா' என்று கெத்தாகப் பதில் கொடுத்திருந்தான் பிரபா.

இதுவரை உடைகளில் எல்லாம் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளாத மகன் இப்பொழுது ஒரு நாளைக்குப் பலமுறை உடை மாற்றுவதை வெளியில் கேலியாகவும் உள்ளுக்குள் மகிழ்ச்சியாகவும் பார்த்து வியந்து கொண்டார் சுந்தரவடிவு.

பாண்டி, தங்கம், தனம், சொர்ணம், சுந்தரவடிவு, கூடவே வாண்டுகள் என்று அனைவருக்கும் மிகப் பெரிய என்டர்டெயின்மென்டே பிரபாதான் என்றாகிப் போனது. அவனும் ஒற்றை ஆளாக சலிக்காமல் இவர்களை சமாளித்துக் கொண்டு வந்தான்.

மீனாவோ மறுநாளே முகிலின் துணையோடுத் தன் அம்மத்தாவிடம் கெஞ்சிக் கொஞ்சி அவர் மூலமாகத் தன் தாயாரிடமும் அனுமதி வாங்கிய பின்னரே பிரபாவிடம் சகஜமாகப் பேசத் தொடங்கினாள்.

மீனா பொழுதுபோக்கிற்காகத் தான் சொந்த ஊரில் உள்ள பள்ளியிலேயே வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள். சிறு பள்ளி தான் என்றாலும் கட்டுப்பாடுகள் அதிகம். ஆசிரியர்கள் கூட வகுப்பறைக்கு அலைப்பேசி எடுத்துச் செல்லவெல்லாம் அனுமதி கிடையாது.

எப்பொழுதும் இடைவேளை நேரங்களின் பொழுது மற்ற ஆசிரியைகள் தங்கள் அலைப்பேசியைத் தேடிப் போக மீனா அவ்வாறல்லாமல் பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது வழக்கம். இப்பொழுதெல்லாம் முதல் ஆளாக இடை வேளை நேரத்தில் அலைப்பேசியைத் தேடிப் போகும் மீனா மிஸ்சை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அப்பள்ளியின் பிள்ளைகள்.

போனும் கையுமாக இவர்கள் இருவரினுடைய நாட்களும் கழிய, கோதையம்மாள் சொன்னபடி வீட்டுக்கே ஜோசியரை வரவழைத்து திருமணத்திற்கு ஏற்ற நாளைக் குறித்துத் தரக் கூறினார்.

பிரபாகரன், மீனலோசினி இருவருடைய ஜாதகத்தையும் ஆராய்ந்த ஜோசியர் ஐந்து மாதங்கள் கழித்தே இவர்கள் இருவருக்கும் திருமணத்துக்கான நாளைக் குறித்துக் கொடுத்தார். அந்த விபரத்தை சுந்தரவடிவிடம் கோதையம்மாளே தெரிவித்து, பிரபாவின் வேலைக்கும் மற்றவர்களுக்கும் இந்தத் தேதி ஒத்து வருமா என்று கேட்கவும் சொய்தார்.

பின் இரு வீட்டாரும் ஒரு வழியாகக் கலந்துப் பேசி திருமணத்தை ஜோசியர் குறித்துக் கொடுத்தத் தேதியிலேயே ஐந்து மாதங்கள் கழித்தே வைத்துக் கொள்வதாக முடிவெடுத்தனர். திருமணத்தையும் அதற்கு முதல் நாள் நிச்சயதார்தத்தையும் பொள்ளாச்சியில் நடத்திக் கொள்வதாகவும் பேசி முடிவெடுத்துக் கொண்டனர்.

அதற்கு முன்பாகத் திருமணத்தை உறுதி செய்வது போல் ஒப்புத் தாம்பூலம் மாற்றிக் கொள்ளவும், அந்தச் சடங்கை மதுரையில் வைத்து செய்வதற்காக ஒரு நல்ல நாளும் பார்த்து பெண் வீட்டார் அனைவரும் மதுரைக்கு வர ஏற்பாடானது மீனாவைத் தவிர. இத்துடனே மாப்பிள்ளை வீடு பார்க்கும் சடங்கையும் சேர்த்து பிரபா வீட்டிலேயே எளிய முறையில் நடத்தத் திட்டமிட்டுக் கொண்டனர் இரு வீட்டாரும்.

இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு, திருமணத்திற்கு முன் இடைப்பட்ட காலத்தில் பிரபா கப்பலுக்கு வேலைக்கு செல்வதற்கும் அவனுடைய கம்பெனியில் பேசி அனுமதி வாங்கிக் கொண்டான். இப்பொழுது சென்றுவிட்டால் திருமணம் முடிந்து ஒரு ஆறு மாத காலம் இங்கு நிம்மதியாகத் தங்கிவிடலாம் என்பது பிரபாவின் எண்ணம். எல்லாமே நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. பெண் வீட்டாரும் ஒப்புத் தாம்பூலம் மாற்றுவதற்காக மதுரை வந்து சேர்ந்தார்கள்.
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Vanthuten

:LOL::LOL::ROFLMAO::ROFLMAO: yakkaavvvv engittu irunthu immbuttu comedyum allittu vantheenga.. paahhh sirichi mudiyala.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

Kadaisila enna oru kottu.. ellam nallaathaan poyittu irunthathu nu.. yen varavanga veetta paarthu mappillai venaam nu solliruvaangala.. ????
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,883
Location
madurai
அக்கா தம்பி பேச்சு ரொம்ப நல்ல இருக்குதுங்:love::love:....
பாண்டி கல்யாணம் முடிஞ்சதும் உன் மண்டை மேல கொண்டை இருக்கா இல்ல பிளாட் போடலாமானு பாக்கணும்...:p:D
சொக்கிக்கும் , சொக்குபொடிக்கும் சீக்கிரம் கண்ணாலத்த முடிங்கம்மணி... ஏன் தள்ளி போட்டீங்க.... :unsure::unsure::unsure:

நிச்சயத்தப்போ மாமனுங்க என்ன செய்வாங்களோ:rolleyes::rolleyes: இப்போ இருந்தே மனசு பதறுது...:confused::(
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top