• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

குழந்தை வளர்ப்பு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதா..? குஷியாக்க இதையெல்லாம் செய்யுங்கள்! #GoodParenting

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
குழந்தை வளர்ப்பு என்ன அவ்வளவு சிரமமானதா? 'என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க? இல்லையா பின்ன? அதுவும் இந்தக் காலத்துப் பசங்களை வளர்க்கிறது..?' என்று பலர் முணுமுணுக்கக்கூடும். ஏனென்றால் குழந்தை வளர்ப்பு என்பது சிக்கலானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இன்றைய பெற்றோருக்கு மாறிவிட்டது.
குழந்தைகளோடு கூடிக்களிப்பதுதான் மனதுக்கு மகிழ்ச்சிதரும் நிகழ்வு என்பதுபோய், குழந்தைகளைவிட்டு ஒரு ஒருமணிநேரம் ரிலாக்ஸாக தனித்திருந்தால் போதும், மனசு அமைதியாகிவிடும் என்று நிறையப் பெற்றோர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். இத்தனைக்கும் ஒரே ஒரு குழந்தை இருக்கும் குடும்பங்கள்தாம் இன்று அதிகம். அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகள். இதற்கே இவ்வளவு போராட்டங்கள்.
'ஒண்ணு வேணும்னா, இப்போவே அது வேணும். அது நடக்கலைன்னா வீட்டையே என் மகன் ரெண்டாக்கிடுவான். இவனாலேயே எனக்கும் அவனோட அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வருது...' - இதுபோல புலம்பாத அம்மாக்கள் இல்லை. விடுமுறை நாள்களில், மால்களில் அடம்பிடிக்கும் குழந்தைகளையும் அவர்களை அதட்டியபடியே வரும் பெற்றோர்களையும் பார்க்கத்தானே செய்கிறோம்!
அதுமட்டுமில்லை, எவ்வளவுதான் மல்லிகா பத்ரிநாத்,வெங்கடேஷ் பட் சமையல் நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்து குழந்தைகளுக்குப் பள்ளிக்குச் சமைத்துக்கொடுத்து அனுப்பினாலும், அதை முழுவதுமாகச் சாப்பிடாமல் மிச்சம்வைத்துக் கொண்டுவரும் பிள்ளைகள், குழந்தை வளர்ப்பு என்பதைப் புரியாத புதிராக மாற்றிவிடுகிறார்கள்.
இன்னொரு பக்கம், சதா மொபைல் மற்றும் வீடியோ கேம்ஸில் மூழ்கிக்கிடக்கும் பிள்ளைகளை அந்த மோகத்திலிருந்து மீட்டெடுக்க முடியாமல் திணறும் பெற்றோர் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். சரி, கொஞ்சம் வளர்ந்தால் குழந்தைகள் சரியாகிவிடுவார்கள் என்றும் நினைக்க முடியவில்லை. டீன் ஏஜில் இருக்கும் பிள்ளைகள், 'நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது' என்கிற மனோபாவத்தில்தான் இருக்கிறார்கள். 'உன் புருஷன்கிட்ட சொல்லி வை. ரொம்பத்தான் பண்றாரு...' என்று கரகரக் குரலில் பதின்பருவ ஆண்பிள்ளைகள் பேசும்போது திக்கென்றிருக்கிறது.
ஆனால், குழந்தை வளர்ப்பு குறித்த சூட்சமங்களை அறிந்துகொண்டால், அது உண்மையில் அத்தனை கடினமான காரியம் இல்லை என்கிறார் மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன். என்ன அந்த சூட்சமங்கள் என்று கேட்கிறீர்களா? இதோ பிருந்தா ஜெயராமனின் வார்த்தைகள் உங்களுக்காக...
'' * குழந்தை வளர்ப்பு என்பது குழந்தை பிறந்த கணத்திலிருந்து செய்யவேண்டிய ஓர் அதிமுக்கியக் கடமை. குழந்தை பிறந்து 10 வயது வரை அந்தக் குழந்தையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு அதன்பிறகு திடீரென்று குழந்தை வளர்ப்பை நீங்கள் கையில் எடுத்தால், அக்குழந்தை உங்கள் வசப்படாது.
* குழந்தை பிறந்த மூன்று, நான்கு மாதங்களில் மற்றவர்களின் முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்துவிடும். குறிப்பாக தன் அம்மாவை நிறையத் தேடஆரம்பிக்கும். பேசத் தெரியாத அந்தக் குழந்தைக்கு அழுகைதான் ஒரே மொழி. பசித்தாலோ, ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டாலோ, அல்லது எறும்புபோன்ற பூச்சிகள் கடித்தாலோ, அல்லது அம்மா தன்னைத் தூக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலோ, அழுகை மூலமாக மட்டுமே அந்தக் குழந்தை தன் உணர்வுகளை வெளிப்படுத்தும். பசி, உறக்கம், உடல் உபாதை எனக் குழந்தையின் அழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் தேவையை உணர்ந்து நிறைவேற்ற வேண்டும். ஆனால், வெறுமனே நீங்கள் தூக்கிக்கொள்ள வேண்டும் என்று அது அழுதால் அதற்கு நீங்கள் செவிமடுக்காதீர்கள். வேறு வழிகளில் குழந்தைக்கு விளையாட்டுக்காட்டி ரிலாக்ஸ் செய்யுங்கள். அப்படியல்லாமல் குழந்தை அழும்போதெல்லாம் தூக்கித் தூக்கி நீங்கள் பழக்கினால், குழந்தை இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டு அழுது, அழுதே உங்களைத் தூக்கிக்கொள்ள வைத்துவிடும். பிடிவாதம் மூலம் காரியம் சாதித்துக்கொள்ள முடியும் என்பதை குழந்தை கற்றுக்கொள்ளும் இடமும் இதுதான்.
* இன்றைய பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு ஒன்று அதீத செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். இல்லையென்றால் கட்டுப்பாடாக வளர்க்கிறேன் பேர்வழி என்று மிரட்டி வதைக்கிறார்கள். 'என் குழந்தை அழுதா என்னால தாங்க முடியாது' என்று பெற்றோரால் அதீத செல்லம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் பொறுப்பற்றவர்களாகவும், நான், எனது என்று சுயநலம் மிகுந்தவர்களாகவும் வளர்வார்கள். ஒரு குழுவாக இணைந்து செயல்பட இவர்களால் முடியவே முடியாது.கேட்பதெல்லாம் கிடைத்தே இவர்கள் வளர்வதால், தோல்விகளை எதிர்கொள்ளத் தெரியாதவர்களாகவும் இருப்பார்கள்.
* அதே சமயம் கண்டிப்பும் தண்டனையுமாக வளர்க்கப்படும் குழந்தைகளும் பயந்த சுபாவம் உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை இல்லாதவர்களாகவும் வளர்வார்கள். சதா திட்டிக்கொண்டே இருக்கும் பெற்றோரிடம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாமல், மனதிற்குள்ளேயே புழுங்கிப் புழுங்கி மனச்சிக்கலுக்கு ஆளாகிவிடுவார்கள்.
* அதனால், ஒரு நல்ல குழந்தை வளர்ப்பு என்பது கனிவு, உறுதி இந்த இரண்டும் கலந்ததாக அமைய வேண்டும். கனிவு ஓ.கே, அதென்ன உறுதி என்று கேட்கிறீர்களா? உங்கள் குழந்தை ஏதாவது தவறு செய்கிறது என்று வைத்துக்கொள்வோம்... நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒன்று, குழந்தையை அடிப்பீர்கள். அல்லது குரலை உயர்த்திக் கத்துவீர்கள். இந்த இரண்டுமே சரியான குழந்தை வளர்ப்பு அல்ல. குழந்தை ஒருவேளை தவறு செய்தால் உங்கள் குரலை உயர்த்தாமல், அதே சமயம் உறுதியுடன் உங்கள் கருத்துகளை அதனிடம் தெரிவியுங்கள்.
* உதாரணத்துக்கு, உங்கள் குழந்தை படிக்காமல் சதா டிவி பார்த்துக்கொண்டே இருக்கிறது, அல்லது மொபைல் போனில் மூழ்கிக்கிடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே குழந்தையை அடிக்கப் பாயாமல், 'இங்க பாருடா கண்ணா... தினமும் ஈவ்னிங் ஒரு மணிநேரம் டிவி பார்க்க அம்மா உன்னை அலோ பண்றேன். ஆனா அதையும் தாண்டி அம்மா பேச்சைக் கேட்காமல், நீ தொடர்ந்து மொபைல் பாக்குற. டிவி பாக்குற. இனிமேல் இப்படிச் செய்தா, இனி நீ வழக்கமா டிவி பாக்குற நேரத்தில்கூட டிவி பார்க்க அம்மா அலோ பண்ண மாட்டேன். அதனால கவனமா நடந்துக்கோ' என்று உறுதியான குரலில் தெரிவியுங்கள்.
* மறுநாள், உங்கள் பேச்சை மதித்து குழந்தை டிவி பார்க்கும் நேரம் முடிந்ததும் அதை ஆஃப் செய்துவிட்டு படிக்கவந்தால் நலம். அப்படி இல்லாமல், அப்போதும் முதல்நாள்போல டிவி பார்க்க ஆரம்பித்தால், அதற்கடுத்த நாள்களில் உங்கள் குழந்தையை முற்றிலும் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள்.
* இதற்காகக் குழந்தை அழுது அடம்பிடித்தால், அதை அடிக்காதீர்கள். உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள். தொடர்ந்து இதுபோல உங்கள் உறுதியைக் காண்பித்தால், குழந்தைகள், 'இனி அம்மாகிட்ட நம்மா பாச்சா பலிக்காது' என்று முடிவுசெய்து உங்கள் வழிக்கு வருவார்கள். ஆனால், ஒரு நாளிலேயே இந்த மாற்றம் குழந்தைகளிடம் வந்துவிடாது. உங்களின் தொடர்ந்த உறுதியும், பொறுமையும் மட்டுமே அவர்களை உங்கள் வழிக்குக் கொண்டுவரும்.
* குழந்தைகளுடன் வெளியே ஷாப்பிங் செல்வது என்றால் கிளம்புவதற்கு முன்பே, 'ஷாப்பிங்ல உங்களுக்குப் பிடிச்ச ஐஸ்க்ரீமை நாங்க வாங்கித் தர்றோம். ஆனா, பாக்குற பொருளை எல்லாம் கேக்கக் கூடாது. அப்படிக் கேட்டு பிடிவாதம் பண்ணா, இனிமேல் உங்களை மறுபடியும் ஷாப்பிங் கூட்டிட்டுப்போக மாட்டோம். நாங்க சொன்னா அதைச் செய்வோம்னு உங்களுக்குத் தெரியும்ல? அதுக்கேத்த மாதிரி நடந்துக்கோங்க' என்று அறிவுறுத்தி அழைத்துச் செல்லுங்கள். இப்படி ஓரளவு குழந்தைகளைத் தயார்செய்து வெளியில் அழைத்துக்கொண்டு சென்றால், குழந்தைகளும் பிடிவாதம் இல்லாமல் நடந்துகொள்வார்கள்.
* பார்க், பீச் என்று குழந்தைகளை வெளியே அழைத்து வந்துவிட்டு, அங்கேயும் குழந்தைகள் முன் கடுமையாக வாக்குவாதம் செய்துகொள்ளும் பெற்றோர் நம் ஊரில் நிறைய இருக்கிறார்கள். குழந்தை வளர்ப்பில் மிக மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? அவர்கள் முன் இப்படி பெற்றோர் சண்டைபோட்டுக்கொள்ளவே கூடாது என்பதுதான். தொடர்ந்து குழந்தைகள் முன் பெற்றோர் சண்டையிட்டுக் கொள்ளும்பொழுது, குழந்தைகள் மனதளவில் கடும் அதிர்ச்சிக்கும், குழப்பத்திற்கும் ஆளாகிறார்கள். குழந்தை ஏதேனும் தப்பு செய்யும்போது, 'அப்படியே அப்பா புத்தி' என்று அம்மாக்களும், 'அம்மாவோட ஜெராக்ஸ்தானே இவன்...' என்று அப்பாக்களும் குற்றம் சொல்லச் சொல்ல, குழந்தைகள் மனதளவில் தங்களைச் சுருக்கிக்கொள்கிறார்கள். தங்கள் பெற்றோரிடமிருந்து தங்களை விலக்கிக்கொள்ளவும் செய்கிறார்கள்.
* இன்றைய பெற்றோர் குழந்தை வளர்ப்பில் செய்யும் ஆகப் பெரிய தவறு என்ன தெரியுமா? குழந்தைகளுக்கு எதற்கெடுத்தாலும் பொருள்களை கிஃப்ட்டாக வாங்கிக்கொடுத்து ஊக்குவிப்பது. 'முதல் மார்க் வாங்கினா சைக்கிள் வாங்கித்தர்றேன்', 'சமர்த்தா சாப்பிட்டா கார் பொம்மை வாங்கித் தர்றேன்' - இப்படி ஒவ்வொரு விஷயத்தை நிறைவேற்றவும் பொருள்களை லஞ்சமாகக் கொடுக்கிறார்கள் பெற்றோர்கள். குழந்தைகளுக்குப் பணத்தின் அருமை புரியாமல்போக, இது பெரும் காரணமாக அமைந்துவிடுகிறது. அதுமட்டுமல்ல, ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்து ஒரு வேலையை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்கிற தவறான பாடத்தை அவர்கள் இதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். அதனால், பிள்ளைகளை உத்வேகப்படுதி நல்ல விஷயங்களைச் செயல்படுத்த நினைத்தால், பொருள்களைக் கொடுத்து அவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.
* 'அம்மூ... மேத்ஸ்-ல போன தடவையைவிட இந்தத் தடவை அதிகமா மார்க்ஸ் வாங்கியிருக்க. அதனால, இன்னைக்கு அம்மா உனக்குப் பிடிச்ச வெங்காய பக்கோடா செய்து தர்றேன்', 'நீ இன்னைக்கு ரன்னிங்ல ஃபர்ஸ்ட் வந்ததை செலிபிரேட் பண்ண, நாம இன்னைக்கு மொட்டை மாடில நிலாச்சோறு சாப்பிடலாமா?' - குழந்தைளை இப்படி உற்சாகப்படுத்தலாம், பாராட்டலாம்.
* இதுவே சற்று வளர்ந்த குழந்தைகளை ஊக்குவிக்க நினைத்தால், உங்கள் மகனை அல்லது மகளை தன் நண்பர்களோடு வெளியே செல்ல அனுமதிப்பது, அல்லது உங்கள் மகன் அல்லது மகளின் நண்பர்களை வீட்டுக்கு அழைத்துச் சாப்பாடு செய்துகொடுப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இதனால், பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான புரிதல் பலப்படும். இதன் மூலம் பதின்பருவக் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் கம்ஃபர்ட்டாக உணர்வார்கள்.
* கடைசியாக ஒன்று... குழந்தை வளர்ப்பில் அம்மா அல்லது அப்பா இருவரில் யார் அதிகம் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்களோ, அவர்களோடு இணைந்து மற்றவரும் செல்ல வேண்டும். இதையெல்லாம் ஓரளவு செயல்படுத்த ஆரம்பித்தால் போதும், நீங்களே உணர்வீர்கள் குழந்தை வளர்ப்பு அவ்வளவு கடினமானதில்லை .
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
சரி எது? தவறு எது என்று உணர்ந்த மனிதநேயம், அன்பு, கருணை மிகுந்த யாவரும் குழந்தை வளர்ப்பினை ஒரு வரமாக நினைத்து வளர்ப்பார்கள்.
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அருமையான தகவல் நன்றி ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top