அரும்பாகி மொட்டாகி பூவாகி 6

#1
Hi friends.. ஐந்தாவது எபிசோடிற்கும் ஆறாவது எபிசோடிற்கும் இடைவெளி அதிகமாகி விட்டது. ஸ்கூல் பசங்க காரணத்தோடு தான் வந்திருக்கிறேன். ஜுரம், பயங்கர தலைவலி.. நல்லாதான் இருந்தது. ஏன்னா டயர்டா இருந்ததால் எழுத முடியவில்லையே தவிர நிறைய படிக்க முடிந்தது. Had a good time. இப்போ ஆறாவது அத்தியாயத்தோடு வந்திருக்கேன். நீங்களும் லைக்ஸ் அன்ட் கமென்ட்ஸோட வந்து திரெடை சிறப்பிச்சிட்டுங்க🙂🙂
ஆவலுடன் வித்யா செல்வம்.
 
#2
அத்தியாயம் 6
“பசிக்குது. ஆனா சாப்பிட சோம்பேறித்தனமா இருக்கு.. என்ன பண்ண சாமி” என ஒருவன் போய் ஊருக்கு வந்த சாமியாரிடம் கேட்டானாம். அதற்கு சாமியார் பக்கத்திலிருந்த வாழைப்பழம் ஒன்றை எடுத்து “இந்தா மகனே இதை சாப்பிடு.. கடிக்கத் தேவையில்லை.அப்படியே தொண்டையில் வழுக்கிக்கொண்டு போய் விடும்” என்று அவனிடம் நீட்ட, “சாமி, நல்ல ஐடியா.. ஆனா அந்த வாழைப்பழத் தோலை மட்டும் கொஞ்சம் உரிச்சுக் குடுத்திடுங்களேன்” என்று சொன்னானாம்.
அப்படிப்பட்ட வாழைப்பழ சோம்பேறி நம்ம அரவிந்த். ஏற்கனவே சொன்னது போல பள்ளியில் 35 டார்கெட் வைத்துப் படிப்பவனுக்கு பள்ளி முடியும் வரை, ஏன் இன்று வரையும் கூட புரியாதது 35 எடுத்தால் பாஸ் எனும் போது ஏன் நூறுக்கும் தொண்ணூற்று எட்டுக்கும் இப்படி போராடுகிறார்கள் என்பதுதான். அதுவும் இந்த கண்மணி ‘இந்த பரிட்சையில் தொண்ணூற்று ஐந்து தான் வரும்மா. ஒரு ப்ராப்ளம் ல கேர்லெஸ் ஆ தப்பு பண்ணிட்டேன்' என்று தாயிடம் கண்ணைக் கசக்கும் போது வேற்றுகிரக வாசியைப் போல் தான் அவளைப் பார்ப்பான்.
கல்லூரியிலும் அதே கொள்கையைத் தான் பின்பற்றினான். அவன் உடல் வலித்தாலும் சளைக்காமல் செய்யும் ஒரே வேலை டான்ஸ். பள்ளியில் எல்லா வருட ஆண்டு விழாவிலும் அவன் நடனம் நிச்சயம் இருக்கும்.
கல்லூரியில் ஃப்ரெசர்ஸ் டே அன்று இவன் ஆட, எழுந்த கை தட்டில் அரவிந்திற்குள்ளே இருந்த டான்சர் முழுதாக விழிந்தெழுந்தான்.
அப்புறம் எந்த புரோகிராமையும் அவன் விட்டதில்லை. எந்த புரோகிராமும் அவனை விட்டதில்லை. இன்ட்ரா காலேஜ், இன்டர் காலேஜ் எங்கும் அவன் டான்சிற்கு இடம் உண்டு. எதுவுமே செய்யாதவன் இதையாவது ஆர்வமாக செய்கிறானே ன்னு நம்ம அருணாச்சலம் , பாரதிக்கு கூட சந்தோசம் தான். அதனால் போட்டிக்காக அங்கே இங்கே போவதில் பெரிதாக ஆட்சேபிக்கமாட்டார்கள்.
அப்படி ஒரு இன்டர் காலேஜ் புரோகிராமுக்காகத்தான் ஆந்திரா வந்தான். அங்குதான் மேக்னாவையும் பார்த்தான்.
நகரமும் அல்லாமல் கிராமமும் அல்லாமல் இரண்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்ட அந்த ஊரில் பல ஏக்கர் வளைத்துப் போட்டு பெரிதாக எழும்பியிருந்தது அந்த கல்லூரி.
ஒயிலாய் சேலை கட்டி, இதுக்கு முன்னே சத்தியமாய் சேலையே கட்டியதில்லை என்று நடையை சாட்சியாய் வைத்து ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும் இளைஞிகளும், சத்தியமாய் ரெண்டு நாளில் தந்திருவேன் என்று அண்ணனையோ, அக்கா கணவரையோ தாஜா செய்து அவர்கள் கல்யாணத்திற்குப் போட்ட கோட்டை போட்டுக் கொண்டு “ப்ளீஸ் கம் திஸ் வே” என்று வழிகாட்டிக் கொண்டிருந்த இளைஞர்களும் அந்த கல்லூரி விழாவிற்கு வண்ணம் சேர்த்துக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் தங்கள் திறமையையெல்லாம் காட்டி எப்படி தங்கள் கல்லூரிக்கு அதிக பரிசுகள் வாங்குவது என்று இளைஞர் இளைஞியர் கூட்டம் கூட்டம் போட்டு அந்த விழாவிற்கு உயிர் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
கடைசி நேரத்தில் டிரெயின் டிக்கெட் கிடைக்காததால் அரவிந்த் கல்லூரியிலிருந்து ஒரு சிறு பேருந்து ஏற்பாடு செய்து அதில்தான் பயணம். இரவெல்லாம் பயணத்தில் கொட்டம் அடித்து அந்த களைப்பு சிறிதும் இல்லாமல் சொல்லப்போனால் ஆடிய ஆட்டமே பூஸ்ட்டாக மாறி போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போதே ஆங்காங்கே மேக்னாவைப் பார்த்தான்‌. பேபி பிங்க் நிற சேலையில் இளம்பச்சை வண்ணத்தில் ஆங்காங்கே மயில்கள் தோகைவிரித்து நடனமாடும் படியிருந்த அழகிய சேலையில் , அழகியாய் வலம் வந்தவளை எல்லோருமே பார்க்கத்தான் செய்தனர். “ச்சே.. எப்படி இருக்கா…” என்று அரவிந்தும் மனதிற்குள் கொஞ்சமாய் ரசித்துவிட்டு ஓடி விட்டான். கடமை அழைத்துக் கொண்டு இருந்ததே. நாள் முழுக்க நொடி போல் போக, இரவு அம்மாவுக்கு அட்டென்டன்ஸ் கொடுக்க, விழாவிற்காக மைதானத்தின் நடுவில் போட்ட மேடை, அதைச்சுற்றிய கூட்டம் இவற்றிலிருந்து விலகி கட்டிடங்கள் பக்கம் நகர்ந்தான்.
 
#3
ஃபோனில் அம்மாவின் எண்னை அழுத்தி காதில் வைத்தான்.
‘ஹலோ’
‘அம்மா..'
‘அரவிந்த்.. என்னடா.. கல்ச்சுரல்ஸ்லாம் நல்லா போச்சா..?'
‘ம்ம்.. போய்கிட்டே இருக்குமா..'
‘இன்னும் முடியலையா?..'
அம்மாவின் ஷாக் குரல் கேட்க கைக்கடிகாரம் காட்டிய எட்டு மணியைப் பார்த்தபடி பெருமூச்சு ஒன்று விட்டான்.
‘அம்மா.. நீ காலேஜ் படிச்சுதானே பேங்க் மேனேஜர் ஆன?'
‘ஏன்டா?'
‘எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு.. கல்ச்சுரல்ஸ் எப்படி நடக்கும்னு தெரியாதா.. மெயின் ஈவன்ட்ஸ்லாம் இனிமேதான் இருக்கு..'
‘நான்லாம் முதலில் ப்ரைஸ் டிஸ்ட்ரிபுயூசன் முடிஞ்சதும் கிளம்பிடுவேனே.. '
‘பஸ் ஏறி வந்தாலும் போன் போட்டு சீன் போடுறீங்களேம்மா..'
சிரித்தபடி, ‘சரி.. ஒழுங்காய் சாப்பிடு.. சீக்கிரம் தூங்கு.. ஓகேவா.. பை..'
‘பை மா ’
ஃபோனைக் கட் செய்தவன் அப்பொழுதுதான் தனது சுற்றத்தைப் பார்த்தான்.
ஆட்டம், பாட்டம் கூச்சலில் ஃபோனில் குரல் கேட்பதற்காக விலகி விலகி வந்தவன் கட்டிடத்தின் உள்ளேயே வந்திருந்தான்.
பக்கத்தில் ஆண்களுக்கான டாய்லெட். உள்ளே கண்ணாடிகளும் வாஷ் பேசினும் வரிசைகட்டியிருக்க ஃபோனை அங்கே வாஷ்பேசினின் அருகே வைத்துவிட்டு தலைவாரினான்.
அப்போதுதான் பார்த்தான். அவனுக்கு நேர் பின்னே இருந்த பாத்ரூமில் தரையிலிருந்து இரண்டு இன்ச்க்கு மேல் இருந்த கதவின் இடைவெளியில் இரண்டு கொலுசுகள். அவை சுற்றியிருந்த இரண்டு கால்கள். பத்து வயதிலிருந்து பார்த்த பேய் படமெல்லாம் மனசுக்குள் ட்ரைலர் ஓட்ட மெதுவாய்த் திரும்பினான்.
‘யாரு?.. ஹு இஸ் இன்சைட்?.. '
அதுபாட்டுக்கு உள்ளே இருக்கு.. நீ ஏன்டா வெளியே கூப்பிடுற.. மனசு அலாரம் அடித்தது.
கால்கள் லேசாய் அசைந்தன. வியர்வை விறுவிறுவென்று வெளியேற மெதுவாய் நகர்ந்தான்.. வாசலை நோக்கித்தான்..
அடுத்த அடி எடுத்ததுதான் அவன் அறிந்தது. கண் இமைக்கும் கணத்தில் அந்த கதவைத் திறந்து அது/அவள் வெளியே வந்து அவன் வாயைத் தன் வலது கையால் மூடியிருந்தது/மூடியிருந்தாள்.
இதயம் ஒரு நொடி நின்று அதற்கு ஈடு செய்ய படபடவென்று துடிக்க ஆரம்பித்தது.
'ஸ்.. கீப் கொயட்..' வாயை மூடிய கையின் அழுத்தம் கூடியது.
வாயை அவ்வளவு அழுத்தமாக மூடியிருக்கவே தேவையில்லை.அவனுக்கு இருந்த பயத்தில் வாய் திறந்திருந்தாலும் அப்பொழுது அரவிந்தால் பேசியிருக்க முடியாது. கத்தக் கூட முடியாது. வெறும் காற்றுதான் வந்திருக்கும்.
ஆனால் இவனுக்கு பயத்தில் வேர்த்துக் கொட்டுகிறது. பேய்க்கு வேர்க்குமா.. மூச்சு கூட வாங்குகிறதே..
அந்த கண்களில் அதை விட அதீதமாய் பயம் இருந்தது.
வெளியே தடதடவென ஆட்கள் ஓடிவரும் சத்தம் கேட்டது.
‘ஆ அம்மாய் கண்பிச்சுலேதுடா..'
கண்களின் பயம் இன்னும் கூடியது. இவன் இதயத்துடிப்பின் சத்தத்தை விட அவளின் இதயத்துடிப்பு சத்தமாய் கேட்டது.
வெளியே காலடி சத்தங்கள் தொடர்ந்து கேட்டன. நடுவே கதவை திறந்து பட்பட் என்று மூடும் சத்தமும்.
நடப்பது ஓரளவு புரிய அவளை நோக்கினான். கைகளால் சத்தம் போட மாட்டேன் என்று சைகை செய்ய முதலில் சந்தேகமாய் நோக்கினாள். பின் யோசனையோடு மெதுவாகக் கைகளை எடுத்தாள்.
காலடி சத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் பக்கம் வர ‘இவளோடு இங்கே இருந்தால் இவள் மாட்டினால் தானும் மாட்ட வேண்டும். எதற்கு வீண் வம்பு..'
‘நான் வெளியே போறேன்' என்று கைகளால் சைகை செய்ய , தலையை வேகமாக மறுப்பாய் ஆட்டியவாறு இவன் கையைப் பிடிக்க, இப்பொழுது ஸ்ஸ் சொல்வது இவன் முறை.
‘நீங்க இங்கே இருக்கீங்கனு சொல்லமாட்டேன்’, வாயசைத்தான்
சந்தேகமாய் அவள் பார்க்க, ‘சத்தியமாய்.. எனக்கு பயமாயிருக்கு. நான் போறேன்.’
சின்ன பிள்ளை போல் சொன்னவனைப் பார்க்க அவளிற்கு முதலில் அதிசயமாய் இருந்தது.
இவனுக்குப் புரிந்திருக்கும். பயந்து ஒரு பெண் ஒளிந்திருக்கிறாள். நான்கு பேர் இவளைத் தேடுகிறார்கள் என்று. எதைப் பற்றியும் கவலை இல்லாமல் இவனுக்குப் பயமாயிருக்கிறதாம்.
வியப்பு கோபமாய் மாற அவன் கைகளைப் பற்றிய தன் கைகளை சட்டென்று விலக்கினாள்.
'பை ' என்று சொல்லி வெளியேறியவனை முறைத்தவள் பெருமூச்சு ஒன்று விட்டாள். இது என்ன சினிமாவா.. யார் என்ன என்று தெரியாத பெண்ணிற்காக யார் உயிரைப் பணயம் வைப்பார்கள்..
வெளியே நான்கு அறைகள் தள்ளி இரண்டு பேர் ஒரு அறையின் வாசலில் நிற்க உள்ளேயிருந்து இரண்டு பேர் வந்தனர்.
‘இக்கட லேது'
இவர்கள் அறைக்கு மூன்று அறைகள் தள்ளியிருந்த அறைக்கு அதே போல் இரண்டு பேர் வெளியிலிருக்க இரண்டு பேர் கதவைத் திறந்து உள்ளே சென்றனர்.
‘யார் நீங்க.. என்ன வேண்டும்?..'
வெளியில் வந்தவனை சந்தேகமாக பார்த்துக் கொண்டிருந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதில் நெடியவன் தான் பேசினான்.
‘எங்க வீட்டு பொண்ணைக் காணோம் நீங்க போங்க. நாங்க பாத்துக்கிறோம்’ நல்ல தமிழில்தான் பேசினார்கள்.
'யாரு.. அந்த பிங்க் ஸாரி கட்டின பொண்ணா?'
இப்பொழுது உள்ளேயிருந்த இரண்டு பேரும் வெளியே வந்து நால்வராயினர்.
நடுங்கிய கைகளைப் பாண்ட் பாக்கெட்டிற்குள் விட்டுக் கொண்டான் அரவிந்த்.
ஆமா.. அவள்தான். நீ பாத்தியா..
‘இப்போதான் நான் உள்ளே வரும் போது அந்த படியில் மேலே போய்க் கொண்டிருந்தாள். ‘அவர்கள் மூளை யோசித்து இவன் மேல் சந்தேகம் வரும் முன் கடகடவென்று அடுத்து பேசினான்.
‘மேலே தானே கேர்ள்ஸ் டாய்லெட் இருக்கு. ஸோ.. பயப்படாதீங்க. இங்கேயே வெயிட் பண்ணுங்க. வந்துடுவாங்க. '
உள்ளே அவள் தலையில் அடித்துக் கொண்டாள். அரவிந்தும் மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டாலும் பேச்சை நிறுத்தவில்லை.
‘ஆனால் மாடியிலிருந்து வெளியேற பின் பக்கம் இன்னொரு வழியிருக்கு.. ஒருவேளை அந்த வழியாக இறங்கியிருப்பாங்களோ.. '
உடனே நால்வரும் பரபரப்பாகி தங்களுக்குள் பேசி இரண்டு பேர் அந்த இரண்டாவது வழியின் வாசலை நோக்கி ஓட இரண்டு பேர் மாடியை நோக்கி ஓடினார்கள்.
ஹுரே என்று கைகளை மெதுவாய் மடக்கி தன்னை மெச்சிக் கொண்டவன் வாசலை நோக்கி நகர்ந்தான்.
இரண்டு மரங்கள் தள்ளி நின்றவன் சிறிது நேரத்தில் சுற்றும் முற்றும் பார்த்தபடி விரைவாய் வந்தவளைப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்து புன்னகைத்து,
‘ரொம்ப நன்றி சார்' என்றாள்.
நன்றியெல்லாம் இருக்கட்டும். என் ஃபோனை எடுத்துட்டு வந்தீங்களா
ஃபோனா..
கோபமாய்ப் பார்த்து, பயத்தில் ஃபோனை வாஷ்பேசின் பக்கத்திலேயே வச்சிட்டு வந்திட்டேன். நீங்களாவது எடுத்துவிட்டு வருவீங்கன்னு பார்த்தா, இதைக்கூட பண்ண மாட்டீங்களா..
இவள் மட்டும் பயமில்லாமல் தூங்கி எழுந்தா வருகிறாள்.
'நானும் பயத்திலேதானே.. இவள் தன் வாக்கியத்தை முடிக்கும் முன்
ப்ச்.. தள்ளுங்க.. என்று அவளை விலக்கி விட்டு மீண்டும் கட்டிடத்திற்குள் நுழையப் போனவனை கையைப்பிடித்து நிறுத்தினாள்.
லூசா நீங்க.. உள்ளே இப்போ போனால் மாட்டிப்பீங்க
நான் ஏங்க மாட்டுறேன். அவங்க உங்களைத்தானே தேடுறாங்க..
ஏன்னா இந்த பில்டிங்ல வேறு படியெல்லாம் இல்லை. அதைக் கண்டுபிடிச்சதும் நீங்க பொய் சொன்னீங்கனு கண்டுபிடிச்சிடுவாங்க..
அவளையே முறைத்தவன் கேட்டான், “நாலு பேரு தான் தேடுறாங்களா..?”
“தெரியலை..”
“இப்போ, என்ன பண்ணுறது..?”
“உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரையாவது சொல்லி ஃபோனை எடுத்துத் தர சொல்லுங்க..”
“ம்ம்.. சரி.. ஓகே.. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. “
“நான் ஹாஸ்டலைட்”
“இது அவங்களுக்குத் தெரியுமா..”
“ம்ம்..”
“அப்போ ஹாஸ்டலுக்குப் போக முடியாது. வீட்டுக்கு கிளம்புங்க. இப்போ பஸ் இருக்குமா?.”
“பஸ் ஸ்டாண்ட் இங்கே இருந்து நான்கு மைல். காலேஜ் பஸ்தான்.”
“நைட் ஃபுல்லா அந்த பசங்களோட கண்ணாமூச்சி விளையாடப் போறேன்னு சொல்லுங்க.”
கண்கள் லேசாய்க் கலங்க தலையைக் குனிந்தவளைப் பார்த்ததில் வாயிலிருந்து வார்த்தைகள் வர காது கேட்டு சொல்லித்தான் மூளைக்கே அவள் என்ன சொல்கிறான் எனப் புரிந்தது. அப்படி அவன் சொன்னது இதைத்தான்.
“நாங்க பஸ்ல தான் வந்திருக்கோம். பசங்க எல்லாம் புரோகிராம்ல இருக்காங்க. முடிந்தாலும் பாய்ஸ் ஹாஸ்டல்ல தான் தங்குவாங்க. எங்க பஸ்ல இருக்கீங்களா.. காலையில் எப்படியாவது உங்க ஊர் பஸ்ல ஏறிடலாம்.”
அவளைப் பொறுத்தவரை பெரிய உதவி. உயிரைக் காப்பாற்றிக் கொடுப்பதற்கு சமானம். ஆனால் அதனால் அவனுக்கு பிரச்சனை வந்தால்..
“உங்களுக்கு ஒன்றும் தொந்தரவு இல்லையே..”
தான்தானா இத்தனை பெரிய ஆஃபர் கொடுத்தோம் என்று தன்னையே வியந்து கொண்டிருந்தவன் அவள் பேசியதைக் கேட்டதும், தொந்தரவா.. உயிருக்கே பிரச்சனை என்று எண்ணினான்... ஆனால் கண்களில் கவனத்துடன் மெல்லிய குரலில் கேட்டவளிடம் ஏனோ அதைச் சொல்ல முடியவில்லை.
“அதெல்லாம் ஒன்றுமில்லைங்க..”
பேச்சை மாற்ற எண்ணி “ஆமா.. உங்க பேர் என்ன?..”
“மங்களகீதா.. “
“வாட்..”
“மங்களகீதா.. “அவனுக்கு கேட்கவில்லையோ என்று கொஞ்சம் சத்தத்தைக் கூட்டி அவள் சொல்ல, “அழகான பெயர் “, ரசனையாய் அவளைப் பார்த்தான்.
அவன் பார்வையின் மாற்றத்திற்கும், அவனுடைய பாராட்டிற்கும் எப்படி ரியாக்ட் செய்வது என தெரியாமல் தலைகுனிந்தாள், இன்னும் ஒரு நாளில் மேக்னா என்று பெயர் பெறப் போகும் மங்களகீதா.
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top