எக்குதப்பா சிக்கிட்டேனோ? 6

#41
எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? 6


அடுத்தடுத்த நாட்களில் சித்தார்த் நிறுவனம், தொழிற்சாலை என்று தன் மாமன் ராம்குமாரோடு ஓய்வின்றி அலைந்து கொண்டிருந்தான்.

சத்யவர்த்தினி ஜனார்த்தனனை குற்றவாளி என்று நிரூபிக்க போதுமான சாட்சிகளை தேடுமாறு மேலிடத்தில் அழுத்தம் கொடுத்து கொண்டிருந்தாள்.

மார்த்தாண்டன் சித்தார்த்தின் நிழல் போலவே அவனை பாதுகாக்கும் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தான்.

பூவிழி, அங்குள்ள வேலையாட்களுடன் வாயடிப்பது, மாலையில் குழந்தைகளும் ஓவியப் பயிற்சி, ஓய்வு நேரத்தில் அவள் மனம் போன போக்கில் ஓவிங்கள் வரைவது‌ என்றிருந்தாள். ஆனால் இரு நாட்களாக அவளிடம் தொய்வு காணப்பட்டது.‌ நடையின் துள்ளல் பேச்சின் வேகம் குறைய தொடங்கி இருந்தது.

ஜெயலட்சுமி தன் வகுப்பை முடித்து விட்டு வழக்கம் போல பூவிழியை காண அவள் அறைக்கு வந்தாள்.

கதவை திறந்த பூவிழியின் முகம் வாடி போயிருந்ததை கவனித்து, "என்னாச்சு பூவு, உனக்கு உடம்பு ஏதும் சரியில்லையா?" என்று அவள் நெற்றியில் கைவைத்து பார்க்க,

"எனக்கென்ன, நல்லா தான் இருக்கேன் ஜெயாக்கா" என்று அலுத்தப்படி உள்ளே கட்டிலில் வந்து குத்துக்காலிட்டு உம்மென்ற முகத்தோடு அமர்ந்து கொண்டாள்.

"ஏன்டி இப்படி அலுத்துக்கிற இப்ப"

"போ க்கா இன்னியோட ஏழுநாள் ஆச்சு, தில்லு பேபி என்கூட பேசி" என்று அவள் சிணுங்களும் கவலையுமாக சொல்ல,

"தாத்தா ஏதோ கோவத்தில பேசாம இருப்பாரு, நீதான சொல்லாம ஓடிவந்த, ஃபோன் செஞ்சு மன்னிப்பு கேட்டு இருக்கலாம் இல்ல," ஜெயா ஆலோசனை வழங்கினாள்.

"மனசு கேக்காம நேத்து ஃபோன் பண்ணேன் தெரியுமா! அந்த கிழம் ஃபோன் எடுக்கவே இல்ல" சொல்லிவிட்டு கண்கள் கலங்க முகம் சுருங்கி தேம்பினாள் பூவிழி சின்ன பெண் போல.

"எடுக்கலயா! சரி நீ எத்தனை முறை டிரை பண்ண?" ஜெயா யோசனையோடு கேட்க,

"ஒரு தடவ தான்" ஒற்றை விரல் காட்டி பதில் தந்து ஜெயாவிடம் ஏகத்திற்கும் முறைப்பை பெற்றுக்கொண்டாள்.

"முறைக்காத க்கா, எத்தனை நாள் கழிச்சு நான் ஃபோன் பண்றேன் ஓடி வந்து எடுக்க வேண்டாமா? வழுக்க தலை, நரைச்ச மீசை அந்த கிழத்துக்கு இம்புட்டு வீம்பு இருந்தா, இந்த பூவுக்கு எம்புட்டு இருக்கும்! அதான்" என்று ராகம் இழுத்தாள்.

"வீம்பு இருக்கறவ ஏன் இப்படி தாத்தா கிட்ட பேசி நாளாச்சுனு புலம்பிட்டு இருக்கியாம்?" ஜெயாவும் அவளுக்கு தோதாய் வாதாடினாள்.

பின்னே பூவிழியை குழந்தை பருவத்தில் இருந்து பார்த்து வருபவள் ஆயிற்றே, அவளின் ஒவ்வொரு குறும்புதனமும் கெட்டிகாரத்தனமும் இவளுக்கு அத்துப்படி. பூவிழியின் பக்கத்துவீடு தான் ஜெயலட்சுமியின் தாய்வீடு. அவள் திருமணம் முடிந்து இங்கு வரும் வரை பூவிழி ஓய்வு எடுத்துக் கொள்ளவதே ஜெயாவின் மடியில் தான். இல்லாத சேட்டைகள் செய்துவிட்டு தில்லை நாயகத்திடம் தப்பிப்பதற்காக இவர்கள் வீட்டில் அடைக்களமாகி விடுவாள். பழைய நினைவுகளில் ஜெயாவின் இதழில் மென்மையாய் புன்னகை விரிந்தது.

பூவிழியின் முகம் கவலையில் சோர்ந்து இருந்தது. என்ன தான் இருந்தாலும் தாத்தா தான் அவளுக்கு எல்லாம், சிறு வயதிலிருந்தே பார்த்து பார்த்து வளர்த்து அவளை ஆளாக்கி விட்டவர், அவருடன் சண்டையிட்ட நாட்கள் அதிகம் தான். ஆனால், முழுதாக ஒருவாரம் பேசாமல் இருந்ததில்லை.

முதல்முறை தான் அவசரப்பட்டு விட்டோமோ! என்று யோசனை தோன்றியது பூவிழிக்குள். தன் தாத்தா தன்னிடம் பேசாமலேயே இருந்துவிடுவாரோ என்ற பயமும் அவளுள் பரவியது.

"ஜெயாக்கா, என்னை இப்பவே பஸ் ஏத்தி விடு, நான் போய்‌ தில்லு பேபிய பார்த்துட்டு வரேன்" என்று வேகவேகமாக தன் கைப்பையை எடுத்து பொருட்களை சோதித்தவளை‌ பார்த்து ஜெயா தலையில் அடித்து கொண்டாள்.

"ஏய், ஒருவாரத்துக்குள்ள இங்க லீவ் எல்லாம் கொடுக்க மாட்டாங்க, என்ன திடீர்னு என் பூவுக்கு தாத்தா மேல் பாசம் பொங்கி வழியுது?" கிண்டலாகவே‌ கேட்க,

"இது பாசம் இல்ல, பயம்! மத்தவங்களுக்கு மாதிரி தாத்தாக்கும் நான் வேண்டாதவளா போய்டுவேனோன்னு பயம், அந்த கிழத்தைவிட்டா என்னை தண்டிக்கவும் தட்டி கேட்கவும் வேற யாரு இருக்கா?" பூவிழியின் கண்களில் தாரைதாரையாய் கண்ணீர் வழிய, அதை புறங்கையால் துடைத்து கொண்டே பேசினாள்.

ஜெயாவிற்கு இது கேட்டு கேட்டு அலுத்துப்போன இவளின் வசனம்! இருந்தும் அவள் அழுவது பொறுக்காமல், "செய்றது எல்லாம் கேக்குமாறிதனம், இதுல தாத்தா பேசலன்னு சென்ட்டிய பிழியற, தாங்கல" என்க.

பூவிழி அப்பாவியாய் அவள் முகம் பார்த்து உதடுகள் பிதுங்க தேம்பினாள்.

ஜெயா தன் தலைக்குமேல் கைகளை தூக்கி கூப்பி, "நீ அழ ஆரம்பிக்காத மகராசி, தாத்தா தினமும் ஃபோன்ல உன்னப்பத்தி என்கிட்ட கேட்டுட்டு தான் இருக்காரு, அவருக்கு உன்மேல இம்மியளவு கூட பாசம் குறையில போதுமா" என்று சொன்னதுதான் தாமதம் சட்டென துள்ளி எழுந்தாள் பூவிழி.

"பேத்திகிட்ட பேச மாட்டாராம், உன்கிட்ட மட்டும் என்னை பத்தி தினமும் விசாரிப்பாராமா?"

"நீ செஞ்சுட்டு வந்த வேலையால அவருக்கு உன்மேல கொஞ்சம் வருத்தம், கோபம் எல்லாம் இருக்கு. அதோட நீ புது ஊர்ல எப்படி இருக்கியோன்னு பயமும் இருக்கு. கிட்டத்தட்ட பத்து வருசம் உன்ன கண்ணுல வச்சு வளர்த்தவர் இல்லையா!" ஜெயலட்சுமி விளக்கம் தர,

"ஆமா, எனக்கு இங்க வேலை வாங்கி கொடுத்ததே நீதான். உன்கிட்ட மட்டும் பேசுவாராம், எங்கிட்ட பேசகூடாதாம், இது எந்த ஊரு நியாயம்?" பூவிழி அவளிடம் ஏட்டிக்குப் போட்டி பேசினாள்.

அவள் தலையை தட்டியவள், "ஏன் டீ இங்க வேலை இருக்குன்னு தான நான் சொன்னேன், சொல்லாம, கொள்ளாம நானா உன்ன ஊரைவிட்டு ஓடிவர சொன்னேன்!" ஜெயாவின் பார்வையில் கண்டிப்பு தெரிந்தது.

"சரி சரி விடு க்கா, அதான் தில்லு பேபி எனக்காக தினம் உன்கிட்ட பேசுது இல்ல, இப்ப எனக்கு அதுவே போதும், அந்த கிழம் எத்தனை நாளைக்கு என்கிட்ட கெத்தை மெய்டைன் பண்ணுதுன்னு நானும் பார்க்கதானே போறேன்" என்று முகம் தெளிந்து தோரணை காட்டியவளை பார்த்து ஜெயா சளிப்போடு தலையசைத்தாள். சற்றுமுன் இவள் அழுது வடிந்தாள் என்றால் யாராலும் நம்ப முடியாது.

அதன்பின் இருவரும் பேச்சும் சிரிப்புமாக மாலை சிற்றுண்டிகாக உணவுகூடத்தை நோக்கி நடக்க, வழக்கம் போல் துள்ளிக்கொண்டு வந்த பூவிழி எதன்மீதோ மோதி விழப்போக ஜெயா அவளை பிடித்து கொண்டாள்.

பூவிழிக்கு தான் மோதியது எதன்மேல்! ச்சே யார்மேல் என்று புரிந்து போனது. கலவரத்தோடு பார்வையை உயர்த்தினாள்.

அங்கே பாடிகார்ட் நெற்றி சுருங்க, இடுங்கிய பார்வையோடு அவளை முறைத்து நின்றிருந்தான்.

'அய்யோ அய்யையோ நான் மறுபடியும் இந்த லேம்ப்போஸ்ட் மேலயா வந்து மோதினே! அச்சோ முறைக்கிறானே! பூவு உனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?' அவளின் மனக்குரலை அகல விரிந்த அவள் கண்கள் காட்டி கொடுத்ததோ என்னவோ! மாரி ஓர் அலட்சிய தோள் குலுக்கலுடன் விலகி சென்று விட்டான்.

"எத்தனை முறை சொல்றது பார்த்து நடக்க பழகுன்னு, கண்ணு மண்ணு தெரியாம ஓடிவந்து இடிச்சு, தண்ணீ எடுத்துட்டு வந்த மேல் வீட்டு மாலாக்கா குடத்த உடைக்கறத்துக்கும், கீழ் வீட்டு சந்திரா பாட்டிய இடிச்சு கால உடைச்சதுக்கும் இது என்ன உன் வீடுன்னு நினைச்சியா?" ஜெயா அவளை கண்டிக்க,

"இப்ப எதுக்கு பழைய பாட்டெல்லாம் பாடற க்கா, என் வீட்ல நான் வாரேனு தெரிஞ்சாலே எல்லாரும் அவங்கவங்க போஷனுக்கு தெரிச்சு ஓடுவாங்க, இந்த பரங்கி மலை எப்ப பார்த்தாலும் நான் வர்ற வழியில கேட் போட்டுட்டு நிக்கிறான், என்கிட்ட சிக்குவான் இல்ல, அப்ப இருக்கு இவனுக்கு" பூவிழி ஏகத்துக்கும் எகிறினாள்.

"அப்படி என்ன பண்ணுவ நீ?" உணவு கூடத்தில் தனக்கான சமோசாவை பெற்றுக் கொண்டு இருவரும் மேசையில் அமர்ந்தனர்.

"ம்ம் ராபர்ட் கிட்ட சொல்லி அந்த பாடிகார்ட் சாப்பாட்டுல பேதி மாத்திரை கலக்க போறேன் பாத்துக்க" பூவிழி சாதாரணமாய் சொல்லிவிட்டு சமோசாவை வாயில் திணித்து கொண்டாள்.

"அடிப்பாவி, மார்த்தாண்டன் மேல உனக்கு என்னடி இம்புட்டு ஆத்திரம், அவன் பார்க்க முரட்டுதனமா இருந்தாலும் பலா பழம் மாதிரி நல்ல குணம் தெரியுமா! அதோட சித்தார்த் சார் உயிரை ரெண்டு முறை காப்பாத்தி இருக்கான்"

"முதல்ல இந்த பலாபழ காம்மினேஷன மாத்துங்க ப்பா, கேட்டு கேட்டு சளிச்சு போச்சு, மார்த்தாண்டனா அவன்! வெறும் தண்டம், அதோட என்ன பேரு க்கா இது! ஆளு பார்க்க நீயூ ட்ரெண்டா இருக்கான், பேரு மட்டும் அருத பழசா இருக்கு"

"அவன் பேரு எப்படி இருந்தா உனக்கு என்னடி? அப்பவே நினைச்சேன் என்னடா வந்து ஒருவாரம் ஆச்சே, யார்கிட்டேயும் வம்பிழுக்காம நல்லதனமா இருக்கியே, திருந்திட்ட போலன்னு"

"திருந்தறதா! அது நம்ம வரலாறுலயே கிடையாதே" பூவிழி கைவிரிக்க,

"மறுபடியும் சொல்றேன் பூவு, இங்க ஒழுங்கா உன் வேலைய மட்டும் பார்த்துட்டு இரு. மத்தவங்க விசயம் எதுலயும் மூக்க நுழைக்காத, பணக்காரங்க இடம் இது, இங்க எல்லாருக்கும் ரெண்டு முகங்கள் இருக்கும், கவனமா இருந்துக்க" ஜெயலட்சுமி நீளமான அறிவுரை வழங்க, பூவிழி வாய்பொத்தி சிரித்து கொண்டே, பெரிதாக தலையாட்டி வைத்தாள்.

தாத்தா பற்றிய அவள் ஏக்கம் குறைந்து போக அதன்பிறகு வழக்கம்போல கலகலப்பாகவே சுற்றி வந்தாள். அவளுக்கு எதிலும் ஒரு சுவாரஸ்யம் தேவையாக இருந்தது.

ராபர்டிடம் சென்று வகைவகையான உணவுகளைப் பற்றி அவன் சொல்ல சொல்ல கெட்டுக் கொண்டிருப்பாள். ராபர்டும் சளைக்காமல் சொல்லி கொண்டு இருப்பான். தன் திறமையை பற்றி வாய் ஓயாமல் பேச யாருக்கு தான் கசக்கும்.

சாவித்திரியிடம் உட்கார்ந்து அவர்களின் காதல் கதைகளை தோண்டி துருவி கேட்டு கொண்டிருப்பாள். இந்த நான்கு வருட காதல் திருமண வாழ்வில் தங்களுக்கு குழைந்தை இல்லை என்பதை தவிர, ராபர்ட், சாவித்திரி தம்பதியருக்கு வேறு மனக்குறைகள் பெரிதாய் இருக்கவில்லை.

அவர்கள் கள்ளத்தனமாக சந்தித்து காதல் பரிமாறிக் கொண்ட தருணங்களை சாவித்திரி சிறு வெட்கம் இழையோட சொல்வதை கேட்க கேட்க பூவிழிக்கு அத்தனை தித்திப்பாக இருக்கும். அதோடு அவர்களின் திருமணத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பையும் இருவரும் ஒன்று சேர போராடிய போராட்டத்தையும் கேட்க இவள் மனதிற்குள் ஏதோ பிசைவது போல தொன்றும்.

தோட்டகாரனிடம் அங்குள்ள ஒவ்வொரு செடி, மலர், மரம், இலை, தழை என அனைத்தையும் விசாரிப்பாள். அந்த தோட்டகார தாத்தாவிற்கு அவளின் ஓயாத பேச்சு ஏதோ தேன்மழை போல. இதுவரை அவரின் பேச்சுக்கள் அந்த தோட்டத்து தாவரங்களோடு நின்றுவிட்டு இருந்தன. அந்த தோட்டம் முழுவதும் அழைத்து சென்று அவளுக்கு மகிழ்ச்சியாக காட்டுவார்.

இவளிடம் மாட்டிக்கொண்டு முழி பிதுங்குவது வாயில் காவலன் பிரதாப் சிங் தான். அவருக்கு தெரிந்ததோ அரைகுறை தமிழ். பூவிழி தனக்கும் இந்தி தெரியும் பேர்வழி என்று அரைகுறை இந்தி வார்த்தைகளை சகட்டுமேனிக்கு பேசி, அவரை தலையை பிய்த்துக் கொள்ள செய்து விடுவாள். இப்போதெல்லாம் இவள் அந்த பக்கம் வந்தாலே பிரதாப் சிங் தப்பித்தோம் பிழைத்தோம் என்று எங்காவது ஒளிந்து கொள்வார்.

இதற்கு மேல் இருக்கவே இருக்கிறார்கள் பிரபாவும் கீர்த்தியும்.

பூவிழி அங்கு வந்து வெறும் இரண்டு வாரங்கள் தான் கடந்தன என்பதை தன் துறுதுறு நடவடிக்கைகளால் மறக்க செய்திருந்தாள் அவள்.

அந்த மான் கூட்டத்தில் புதிதாக இணைந்த முயல் குட்டியாய் எந்த பாகுபாடும் இன்றி துள்ளி திரிந்தாள் பூவிழி.

இதையெல்லாம் ஓரளவு கண்டும் காணாமல் விட்டிருந்தாள் சத்யவர்த்தினி.

பூவிழி எல்லாரிடமும் போல சித்தார்த்திடமும் எதார்த்தமாக பேசி, பழகுவது தெரிய வந்தால், சத்யவர்த்தினியின் போக்கு எவ்வாறு இருக்கும்?

சிக்கிட்டேனோ? பார்க்கலாம்...
I love this story very nice sis 😂😂😂😂😍😍😍😍😘😘😘
 

Advertisements

Latest updates

Top