என்ன கொடுமை சார் இது? Final

#1
ப்ரியன் - ப்ருந்தாவின் திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிந்திருந்த நிலையில்.. அதே ப்ரியன் வீட்டு மொட்டை மாடி.. இரவு நேரம்.. பௌர்ணமி வானம்.. தேகம் தீண்டும் தென்றலின் குளுமை.. அன்று தனிமையில் உழன்று கொண்டிருந்த ப்ரியன்.. கடவுளிடம் அன்று கேட்காத வரத்தை இன்று கேட்டுக் கொண்டிருந்தான்.


கை வளைவில் இருந்த ப்ருந்தாவோடு தனித்திருக்கும் இந்த பொழுது உறைந்து போக வேண்டிக் கொண்டிருந்தான்.


"ப்ரியன்.."


"ஹ்ம்ம்.. சொல்லு அம்மு.."


"இன்னிக்கு ஃபங்ஷன் நல்லா போச்சுல்ல? அத்தை வெண்மதியப் பார்த்ததும் குழந்தையா மாறிட்டாங்க தெரியுமா? அவக்கூடயும், தருண்கூடயும் சேர்ந்து எதிர்வீட்டு அண்ணாவ ஒரு வழி பண்ணிட்டாங்க"


"எதுக்காம்..?"


"தருணுக்கு கிஃப்ட்ங்கற பேர்ல 'எது எடுத்தாலும் பத்து ரூபாய்' கடைல உள்ள குட்டி கார் வாங்கி குடுத்திருக்காராம்.. அத நானும் பார்த்தேன்.. இதுக்கு அந்த மனுஷன் எதுவும் வாங்காமலே வந்திருக்கலாம்பா.. அதப் பார்த்ததும் தருண் டென்ஷன் ஆகிட்டான்.. அதுக்கு மூணு பேரும் சேர்ந்து என்ன பண்ணாங்க தெரியுமா?"


"என்ன பண்ணாங்க? நீங்களே வச்சிக்கோங்கனு திருப்பி குடுத்துட்டாங்களா?"


"இல்லங்க.. கேக் உள்ள உப்புக்கல்ல வச்சு, ஜூஸ்ல புளிய கரைச்சு ஊத்தி குடுத்துட்டாங்க.. ஹாஹாஹா.."


"வெண்மதிக்கு வால் நீளம்.. சின்னப்பையனையும் சேர்த்து கெடுக்குறா.."


"அப்டிலாம் இல்ல.. தருணுக்கு நல்ல விஷயங்கள் எவ்ளோ கத்துக் குடுக்கறா தெரியுமா? எனக்கு அவள ரொம்ப பிடிச்சிருக்குது"


இரண்டு மாதங்களுக்கு முன்பு.. இதே இடத்தில் தருணிற்கு நல்லுரைக் கூறி சமாதானப்படுத்தி.. தன்னையும் தெளிவுறச் செய்தவள் அல்லவா?


"ஹ்ம்ம்.. அது என்னவோ சரி தான்.." என்றான், ஒத்துக் கொள்ளும் பாவனையில்..!


இருவரும் பேசிக் கொண்டிருக்கையிலேயே.. ப்ருந்தா, "ஆவ்வ்" என்ற சிறு அலறலுடன் துள்ளி.. ப்ரியனை இறுகக் கட்டிக் கொண்டாள்.


எதைப் பார்த்து அலறுகிறாள் எனத் திரும்பி பார்த்தவனின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது. பைப் ஏறி குதித்து, மூச்சு வாங்க இருக்கைகளையும் இடைப் பற்றி நின்று கொண்டிருந்தவன்... சாட்ஷாத் நம் மாயக்கண்ணனே தான்.. தவறு! தவறு!! வெண்மதியின் மாயக்கண்ணன்!!!


ஆம்! ஆதவன் எதிர்பார்த்தது போலவே.. பார்கவிக்கு வெண்மதியை மிகவும் பிடித்துவிட்டது. உடனடியாக திருமணம் செய்து கொள் என அடம்பிடிக்கவே ஆரம்பித்துவிட்டார். அதோடு நிறுத்தாமல் வெண்மதி வீட்டிலும் பேசி.. சென்ற வாரத்தில் நிச்சயதார்த்தத்தையும் முடித்துவிட்டார். இன்னும் மூன்று மாதங்களில் திருமணம் என முடிவாகியிருந்தது.


இந்நிலையில் இன்று தருணின் பிறந்தநாளிற்கு ஆதவனையும் அழைத்திருந்தனர். ஃபங்ஷனில் கலந்து கொண்டவன்.. வீட்டின் பின்புறம் வந்து.. பைப் ஏறி இதோ மொட்டை மாடியில் திருடனைப் போல் குதித்து ப்ருந்தாவை அலற விட்டுக் கொண்டிருக்கிறான்.


"ஏண்டா.. அதான் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க தான? இன்னும் என்னத்துக்குடா இப்டி வந்து குதிச்சுக்கிட்டு இருக்க? பேச நினைக்கறதக் கீழயே அவக்கிட்ட பேச வேண்டியது தான..?"


"என்ன இருந்தாலும் பழச மறக்கக்கூடாதுல்ல.. அதோட கீழ ஒரே க்ரௌடு மச்சி.. ஓவர் டிஸ்டபர்ன்ஸ்.. எப்டியும் அந்த பொடிப்பயலோட ஆட்டம் போட இங்க தான் வருவா.. மோர் ஓவர்.. சாகசம் பண்ணாம சும்மா நேரடியா பேசறது இந்த வீராதி வீரக் காதலன் ஆதவனுக்கு இழுக்கு.."


"ஹ.. உன் பேய்க்கு பேயோட்டணும்னு வந்துருக்க.. அதுக்கு இம்புட்டு பில்டப்பா?"


திருடனோவென பயந்து கணவனைக் கட்டி கொண்ட ப்ருந்தா, திருடனல்ல தன் புதுத் தோழி வெண்மதியைத் திருடவிருக்கும் ஆதவனெனத் தெரிந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நண்பர்கள் பேசுவதை சின்னச் சிரிப்புடன் பார்த்திருந்தாள்.


"ஹிஹி.. அப்டியும் சொல்லலாம்.." அசடு வழிந்து கொண்டிந்தவனின் அலைபேசி அழைத்தது.


"பேசுகிறேன்... பேசுகிறேன்...

உன் இதயம் பேசுகிறேன்…"


ரிங் டோனை வைத்து அழைப்பது யாரென தெரிந்து கொண்டவன்.. சட்டென சைலண்ட் மோடில் போட்டு விட்டு ப்ரியனைப் பார்த்தான். அவன் திகைத்துப் போய் ஆதவனிடம் 'ஆமாவா' எனத் தலையசைத்துக் கேட்டான்.


ஆதவன், 'ஆம்' என பதில் தலையசைப்பைத் தந்ததும்.. அவசரமாக தன் ஷார்ட்ஸின் பாக்கெட்டைத் துழாவி அலைபேசியை எடுத்து வேகமாக அணைத்து வைத்தான்.


இருவரையும் புரியாமல் பார்த்து நின்ற ப்ருந்தாவின் அலைபேசி சொன்னது.. வெண்மதி அழைக்கிறாள் என..!


எடுத்துப் பார்த்து விட்டு இருவரிடமும்.. "வெண்மதி" என்றாள்.


"வேணாம் ப்ருந்தா.. அட்டெண்ட் பண்ணாத.."


"ஆமா அம்மு.. கட் பண்ணுடி.."


இருவரையும் ஒற்றைத் தலையசைப்பில் அலட்சியம் செய்து.. அழைப்பை ஏற்று பேசி விட்டு ஆதவனிடம்.. "வெண்மதி உங்கள கீழ கூப்பிடறா அண்ணா.. நீங்க ஏன் கால் அட்டெண்ட் பண்ணல?" என்று கேட்டாள்.


"அது.. அது.. ப்ரியன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டிருக்குது.. நான் அப்புறம் போறேன் ப்ருந்தா.."


"ரெண்டு பேரும் டெய்லியும் பேச தான செய்றீங்க? போய் என்னனு கேட்டுட்டு வந்துடுங்க"


எப்டி தவிர்ப்பது எனப் புரியாமல்.. ப்ரியனின் கையைப் பிடித்துக் கொண்டு, "நீயும் வாடா.." என்றான்.


"அவங்க எதுக்கு.. என்னவோ ஃபர்ஸ்ட் மீட்டிங் மாதிரி இப்டி ஜெர்க் ஆகறீங்க?"


பதட்டமாக இன்னும் ப்ரியனை ஒட்டி நின்று கொண்டவன், "பப.. பர்ஸ்ட் மீட்டிங் இல்ல ப்ருந்தா.. ஃபர்ஸ்ட் நைட்.." என்றான்.


"வாட்!!! யாருக்கு?"


"எனக்கும் இவனுக்கும் தான்." என்று உளறிக் கொட்டினான்.


"ஹா...ங்ங்ங்!!!" என்று முகத்தை அஷ்டகோணலாக்கினாள்.


"டேய்ய்ய்!!!" ப்ரியன் ஆதவனின் காலை நச்சென மிதித்தான்.


"ஆஆ!!!" என்று காலைப் பிடித்தவன் பின்பு தான்.. தான் என்ன உளறினோம் என்று புரிந்து நாக்கைக் கடித்துக் கொண்டான்.


இருவரையும் முறைத்து விட்டு, "நீங்க பேசிட்டு இருங்க.. நான் போய் பார்த்துட்டு வர்றேன்.." என்றாள்.


"நோ அம்மு.. போகாத.." - ப்ரியன்.


"வேணாம் வேணாம்.." - ஆதவன்.


இருவரும் ஒரே நேரத்தில் அதிர்ந்து அலறினர்.


"எதுக்கு ரெண்டு பேரும் இப்டி பண்றீங்க? பாவம் வெண்மதி ரொம்பப் பதட்டமா வேற பேசற மாதிரி இருக்குது."


"சொன்னா கேளு அம்மு.. நீ போக வேணாம்.."


"ஆமா ப்ருந்தா.. அவ ஏதாவது வாய்க்கா தகராறுக்கு பஞ்சாயத்து பண்ண கூப்பிடுவா.. போகாத.."


"ச்சு.. போங்க ரெண்டு பேரும்.. ப்ராப்ளம் வரும் போது ஹெல்ப் பண்ணலனா அது என்ன மண்ணாங்கட்டி ஃப்ரெண்ட்ஷிப்பாம்.? நான் போறேன்" என்று விறுவிறுவெனக் கீழே இறங்கி சென்றுவிட்டாள்.


இருவரும் திரும்பி, ஒருவர் முகத்தை ஒருவர் இமைக்காமல் பார்த்துக் கொண்டே.. கோரஸாக, "ஒருத்தருக்கு ரெண்டு பேர் இவ்ளோ தூரம் சொல்றோம்.. கேக்காம போறா? என்ன கொடுமை சார் இது?!" என்று கூறி, நெற்றியில் நோகாமல் அறைந்து கொண்டனர்.
 

Advertisements

Latest updates

Top