• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வணக்கம் தோழமைகளே, சொன்னபடி மறுநாளே வராததுக்கு சாரி... கொஞ்சம் பெர்சனல் வர்க், அதான் முடியாமப் போச்சு. அதனாலதான் இப்போ காலங்கார்த்தால வந்துட்டேன். எல்லோருக்கும் தேஜூவையும் சுரேஷ் ஆதித்யாவையும் ரொம்பப் பிடிச்சிருந்ததுனால ஒரு குட்டி பிரியாணி ம்ஹூம் வெஜ் பிரியாணி ம்ஹூம் குஸ்கா ம்ஹூம் தயிர்சாதம் ;););)
நீங்களே படிச்சிட்டு சொல்லுங்க
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அத்தியாயம் - 17

நியூசிலாந்து ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் தன் வீட்டிற்கு அழைத்த மித்ரன் கிடைத்தத் தகவலில் சுகமாய் அதிர்ந்து போனான். விஸ்நாதன் தான் இவனுடைய அழைப்பை ஏற்றுப் பேசினார். "மித்ரா வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதாப்பா? கிளம்பிட்டியா?"

"ஹ்ம்ம் எல்லாம் முடிஞ்சுதுப்பா. ஏர்போர்ட் வந்துட்டேன். நாளை மதியம் சென்னைக்கு வந்திடுவேன்ப்பா. பார்த்தி அண்ணாவை ஏர்போர்ட் வரச் சொல்லியிருக்கேன்ப்பா."

"நாளைக்கு ரொம்ப நல்ல நாளா இருந்துச்சு மித்ரா. அதான் நாளைக்கே உன்னோட நிச்சயத்தை வைச்சுக்கலாமின்னு முடிவு பண்ணியிருக்கோம். நீயும் இந்தியால இருக்கும் பொழுது செஞ்சா நல்லாயிருக்குமில்ல. அதான், மளமளன்னு வேலையில இறங்கிட்டோம். நாங்க எல்லாரும் இன்னைக்கு நைட் திருச்சிக்குக் கிளம்பிடுவோம்.

நாளைக்கு உனக்குத் திருச்சிக்கு ஃபிளைட் டிக்கெட் போட்டு அதை உனக்கு மெயில் பண்ணியிருக்கேன். நீ சென்னையில டிரான்ஸிட் எடுத்துத் திருச்சிக்கு வந்திடுப்பா. நேரம்தான் கொஞ்சம் கம்மியா இருக்கும். நீ வந்ததும் வேக வேகமா நிச்சயத்தை நடத்துற மாதிரி இருக்கும். இப்படி ஏற்பாடு பண்ணதுல அப்பா மேல உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே?" விவரங்களைக் கூறி முடித்தார் விஸ்வநாதன்.

கேட்ட மித்ரனுக்குத் தலைகால் புரியவில்லை சந்தோஷத்தில். என்ன பேசுவதென்றுத் தெரியாமல் வார்த்தைகளுக்குத் தடுமாறியவன், "அதெல்லாம் ஒன்னுமில்லைப்பா. நான் நாளைக்கு சீக்கிரம் வந்துடுறேன்ப்பா" என்று அசடு வழியக் கூறினான் மித்ரன்.
"இப்போதைக்கு நிச்சயத்தை சிம்பிளா வீட்டளவுல பண்ணிக்கலாம். கல்யாணத்தை கிராண்டா பண்ணிடலாம். லிங்கேஷ்வரன் மாமா அவங்க வீட்டிலேயே வைச்சுக்கலாமுன்னு சொல்லிட்டாங்க. அதால அங்கதான் நிச்சயம் நடக்குது. ஏர்போர்ட்ல உன்னைப் பிக் அப் பண்ணிக்க தேஜூவோட அண்ணன் வருவான். நீ அவங்க கூட வந்துடு மித்ரா. சரியா" என்று கூறி அழைப்பைத் துண்டித்தார் விஸ்வநாதன்.


'தேஜூ வீட்டுல நிச்சயதார்த்தமா? அந்த வாயாடி கிண்டல் பண்ணியே ஒரு வழி ஆக்கிடுவாளே. இத்தனை நாள் கேட்கும் போதெல்லாம் மழுப்பியதுக்கும் சேர்த்து வைச்சு செய்யப் போறா' இவ்வாறுதான் நினைக்கத் தோன்றியது மித்ரனுக்கு. சம்ரிதி மேலுள்ள பாசத்தினால் லிங்கேஷ்ரன் தாத்தா இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் போல என்று எண்ணிக் கொண்டான்.

அவனுக்கிருந்த மகிழ்ச்சியில் உடனடியாக சம்ரிதியிடம் பேச வேண்டும் போல் தோன்ற வேறு யாரிடமும் பேசாமல் வேகமாக அழைப்பைத் துண்டித்துவிட்டு திருச்சியில் சம்ரிதி வீட்டுத் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தான். அங்கோ ரிங் போய்க் கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை.

ஒரு நிமிடம் யோசித்தவன், தேஜூ வீட்டிற்கு சென்றிருப்பார்கள் என்று முடிவெடுத்துக் கொண்டான். நேரில் சென்று சம்ரிதி தன்னைப் பார்த்து வெட்கப்படும் அழகை ரசிக்க வேண்டும், அத்தான் என்று சொல்லச் சொல்லிக் கேட்க வேண்டும், எப்படியாவது தனியாக சந்தித்துப் பேசிவிட வேண்டும், இப்படிப் பலப்பலக் கனவுகளுடன் மித்ரனின் விமானப் பயணம் தொடங்கியது.

'இந்நேரம் மாமா மட்டும் இருந்திருந்தால் கொண்டாடித் தீர்த்திருப்பார் இந்தத் தருணத்தை.' இப்பொழுதும் மனம் மாமாவுக்காக ஏங்கியது. தலையை அழுந்தக் கோதிக் கொண்டு தன்னை ஒருநிலைப் படுத்தியவன், அதன் பின் உதட்டில் உறைந்த மந்தகாசப் புன்னகையுடனே அந்தப் பயணத்தை மேற்கொண்டான். எப்பொழுதும் வெறுப்பாகக் கழியும் விமானப் பயணம் இந்த முறை அத்தனை ஆனந்தமாகக் கழிந்தது.

நிச்சயதார்த்த நாளும் வந்தது. மித்ரனும் சென்னைக்கு வந்து சேர்ந்தான். ஏர்போர்ட்டில் இறங்கியவன் உற்சாகமாகத் தன்னுடைய தாய்க்கு அழைக்க, "சொல்லு மித்ரா. நீ திருச்சிக்கு வந்ததும் தேஜூ அண்ணன் வருவான் உன்னைக் கூப்பிட. நீ அவங்கக்கூட அவங்க வீட்டுக்கு வந்துடு. அங்க தான் ஃபங்ஷன் நடக்குது. நீ வந்துடு" எந்தவித நல விசாரிப்புகளும் இல்லாமல் சுரத்தையே இன்றி வந்தது சுஜாதாவின் குரல்.

இதற்கு முன் விஸ்வநாதனிடம் பேசிய பொழுது தன்னிடம் பேசாத கோபம் அவருக்கு. அதுவுமில்லாமல் விஸ்வநாதன் வேறு, "பார்த்தியா என் பையன் எவ்வளவு சந்தோஷமா இருக்கான்னு. பசங்க வளர வளர மாறிடுவாங்க. அதுவும் அவன் இப்ப இருக்குற ரேஞ்சே வேற. நாமதான் அவங்களுக்குத் தகுந்த மாதிரி நம்மளை மாத்திக்கணும்" அப்படி இப்படி என்று பெரிய லெக்சர் அடித்திருந்தார்.

மித்ரன் லைனில் இருப்பதே மறந்து இவர் தன் நினைவுகளில் மூழ்கியிருக்க, "ம்மா..." என்று விடாமல் கத்திக் கொண்டிருந்தான் மித்ரன் அந்தப்பக்கம். "ம்ச்.. சொல்லு" என்று சலிப்பாகக் கேட்டார் சுஜாதா.

"எதுக்கும்மா தேஜூ வீட்ல போய் நிச்சயத்தை வைச்சிருக்கீங்க? நம்ம மாமா வீட்லேயே வைச்சிருக்கலாமே?" மித்ரனுக்கு இப்பொழுதும் புரியவில்லை.

'என்ன பேசுகிறான் இவன்? மாமா பெண்ணை இவன் கட்டிக்க மாட்டானாம். நிச்சயம் மட்டும் மாமா வீட்டுல நடக்கணுமா?' கேட்ட சுஜாதாவிற்கு கோபம்தான் வந்தது. இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "இங்க வைச்சா லெக்ஷ்மி எப்படி தனியா எல்லாத்தையும் பார்க்க முடியும்? அதான்" என்று கூறி வேகமாகப் பேச்சை முடித்து அழைப்பைத் துண்டித்தார் சுஜாதா.
《》《》《》《》《》《》


தேஜூ நகத்தைக் கடித்துக் கொண்டு அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் கையில் அலைப்பேசியோடு. சுரேஷ் ஆதித்யாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக எடுப்பதும் பின் வைப்பதுமாக இருந்தாள். அவளும் முடிந்தவரை சம்ரிதியிடம் கேட்டுப் பார்த்துவிட்டாள். இல்லையென்று சாதிப்பவளிடம் இதற்கு மேல் என்ன கேட்பது என்று சோர்ந்து போய் விட்டுவிட்டாள்.

அடுத்ததாக மித்ரனாவதுத் தன்னைக் காப்பாற்றி விடமாட்டானா என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக வந்த செய்தி கதி கலங்கச் செய்தது. இதுவரை விளையாட்டாக இருந்தவளுக்கு இப்பொழுது தான் நிலைமையின் தீவிரம் புரிந்தது.

தன் மனம் சுரேஷ் ஆதித்யாவின் பின் சென்று வெகு நாட்களாகி விட்டதை உணர்ந்தாள். இப்பொழுது இதை எப்படி வீட்டில் சொல்வது என்பதே அவள் தலையாய பிரச்சனை அதுவும் இன்னும் சற்று நேரத்தில் நிச்சயத்தை வைத்துக் கொண்டு. அதிலும் மற்றவர்களை விட அவள் தாத்தாவை எப்படி சமாளிப்பது என்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

தாத்தாவின் மனதை எந்த விதத்திலும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள். அவர் மனதைப் புண்படுத்தாமல் எப்படி இந்த சிக்கலைத் தீர்ப்பது என்று யோசித்தவள் ஒரு கட்டத்தில் தயக்கம் நீங்கி சுரேஷ் ஆதித்யாவை அலைப்பேசியில் அழைத்திருந்தாள்.

"ஹலோ மிஸ்டர்.சுரேஷ் ஆதித்யா..." தயக்கமாக வெளிவந்தது தேஜூவினுடைய குரல்.

"யெஸ் ஸ்பீக்கிங்" ஆழ்ந்து ஒலித்த சுரேஷ் ஆதித்யாவின் குரல் தேஜூவின் உயிர்வரை சென்று தாக்கியது.

"நான் தேஜூ ம்ம்ம் தேஜஸ்வினி பேசுறேன்" தயங்கித் தயங்கியே பேசினாள் பெண்.

"க்கா சொல்லுங்கக்கா" உற்சாகமாக வந்தது சுரேஷின் குரல்.

"அக்காவா..." அதிர்ந்து போனாள் தேஜூ.

"ஆமா நம்ம பஃர்ஸ்ட் மீட்டிங்குலேயே நீ என்னைத் தம்பின்னு தானே கூப்பிட்ட. அப்ப நீ எனக்கு அக்காதானே" அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்டான் சுரேஷ் ஆதித்யா.

"ம்ஹூம் நீ சரிப்பட்டு வர மாட்ட. நான் கட் பண்றேன்" கோபமாகப் பதிலளித்தாள் தேஜூ.

"ஹேய் வினி வைச்சிடாதே. நான் என்ன பண்றது? நான் உன் நம்பரைக் கூட என் ஃபோன்ல அக்கான்னு தான் சேவ் பண்ணியிருக்கேன். இப்பக் கூட அக்கா காலிங்ன்னு தான் வந்தது."

"என் நம்பர் இருக்கா உன்கிட்ட? அப்ப ஏன் இத்தனை நாளா நீ கூப்பிடவேயில்ல?"

"உன் நம்பரும் தெரியும். நீ உன்பிரெண்ட்ஸ் மூலமா என் நம்பர் வாங்கினதும் தெரியும். அதுவுமில்லாம நான் தான் சொன்னனே உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு. அதான் நீயே கூப்பிடுற வரைக்கும் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்."

'ஆண்டவா..' என்று இங்கு இவள் பல்லைக் கடிப்பது அங்கு சுரேஷ் ஆதித்யாவிற்கு நன்றாகவே கேட்டது. "இதுக்கு மேல நீ வெயிட் பண்ணா அப்புறம் ஆயுசுக்கும் வெயிட் பண்ண வேண்டியதுதான். இன்னைக்கு எனக்கு நிச்சய்தார்த்தம். நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ ஒழுங்கா வந்து எங்க வீட்ல பேசு" அதிகாரமாகவே வந்தது தேஜூவின் குரல்.

"வாட்? என்கேஜ்மென்டா? இப்ப வந்து சொல்ற? உனக்கு இப்பதான் என் ஞாபகம் வந்ததா? இப்ப என்னால வர முடியலைன்னா என்ன பண்ணுவ?" அடுக்கடுக்கான கேள்விகள் சுரேஷ் ஆதித்யாவிடமிருந்து.

காரோடிக் கொண்டிருந்தவன் அதை க்றீச்சிட்டு நிறுத்தும் சத்தம் தேஜூவிற்கும் கேட்டது. "சாரி... ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. என்னால உன்னை மறக்க முடியலை. தூங்கும் போது கூட உன் பார்வை என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. உனக்கான எந்த விருப்பமும் என் மனசுல இல்லைன்னுதான் இத்தனை நாள் நான் முட்டாள்தனமா நம்பிக்கிட்டு இருந்தேன். இப்பதான் புரியுது அது முட்டாள்தனமுன்னு" மெல்லிய குரலில் பதிலளித்தாள் தேஜூ.

"அப்ப நீயும் என்னை லவ் பண்றியா வினி?" கேட்கும் வெண்பஞ்சுக் காதுகளுக்கு வலித்துவிடுமோ என எண்ணும் விதமாக அத்துனை மென்மையாக குழைந்து ஒலித்தது சுரேஷ் ஆதித்யாவினுடைய குரல்.

அவன் குரல் பேதத்தை உணர்ந்தவள், "நீ இப்படியே கேட்டுக்கிட்டே இரு. இங்க என் நிச்சயதார்த்தமே முடிஞ்சிடும்" சிணுங்கிக் கொண்டே கூறினாள் தேஜூ.

"ஹா...ஹா...ஹா.." பெருங்குரலெடுத்துச் சிரித்தவன், "மெரூன் மை பேஃவரட் கலர்" என்றான் சம்பந்தமில்லாமல்.

"அதுக்கு"

"அந்தக் கலர்ல பட்டுப் புடவை கட்டி ரெடியா இரு. இன்னைக்கு நிச்சயதார்த்தம் உனக்கும் எனக்கும் தான் நடக்கப் போகுது. என்னோட கேள்வியெல்லாம் நான் நேர்லயே கேட்டுக்குறேன். கெட் ரெடி பேபி" உற்சாகமாகக் கூறினான் சுரேஷ் ஆதித்யா.

அவன் குரல் கொடுத்த நம்பிக்கையில் விருப்பத்துடன் நிச்சயதார்த்தத்துக்குத் தயாராகத் தொடங்கினாள் தேஜூ மெரூன் கலர் புடவையில்.

மித்ரனும் வந்து சேர்ந்தான் தேஜூவினுடைய வீட்டுக்கு அவளுடைய அண்ணன் தம்பிகள் புடைசூழ. அவன் கண்கள் ஆவலாக சம்ரிதியைத் தேட அவள் தென்படவேயில்லை. அதற்குப் பிறகு தேஜூவின் குடும்பத்தார் மித்ரனை சூழ்ந்து கொள்ள அவனிடம் தனியாகப் பேசத் துடித்த பார்த்திபனுக்கும் நேஹாவுக்கும் அது முடியாமலே போனது.
《》《》《》《》《》《》《》
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அந்த பிரமாண்டமானக் கூடத்தில் சீர்வரிசைத் தட்டுக்கள் பரப்பபட்டிருக்க அதன் நடுவே ஒய்யாரமாக வீற்றிருந்தது மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டத் திருமாங்கல்யம். இது விஸ்வநாதனுடைய குடும்ப வழக்கம். நிச்சய தாம்பூலம் மாற்றும் பொழுதே புதிதாக வாங்கப்பட்ட திருமாங்கல்யத்தையும் வீட்டில் வைத்துப் பூஜை செய்து செய்வார்கள்.
அதன் பின் அவர்களுடைய குலதெய்வக் கோவிலில் அம்மன் பாதத்தில் நாற்பத்தி எட்டு நாட்கள் வைத்துப் பூஜை செய்து எடுத்தப் பிறகுதான் அந்தத் திருமாங்கல்யம் மணப்பெண் கழுத்தில் ஏறும். அந்த வழக்கப்படித் திருமாங்கல்யமும் அங்கே வைக்கப்பட்டிருந்தது.


முதலில் தயாராகி வந்தது மித்ரன் தான். வந்து பார்த்திபன் அருகில் அமர்ந்தவன் அங்கு நடக்கும் நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் உள்வாங்கத் தொடங்கினான். விஸ்வநாதன் சுஜாதா தம்பதியருக்கு எதிரில் தேஜூவினுடைய பெற்றோர் அமர்ந்திருக்க முதல் முறையாக மித்ரனின் புருவம் யோசனையாகச் சுருங்கியது.

அதையும் கூட தன்னுடைய மாமா இல்லாத காரணத்தினால் இருக்கும் என்று சிந்தித்தவனுக்கு, என்ன முயன்றும் தன்னுடைய தாயாரின் செயலில் இருக்கும் ஒதுக்கத்திற்கும் முகத்தில் வலுக்கட்டாயமாக ஒட்டி வைக்கப்பட்ட சிரிப்பிற்கும் காரணம் கண்டறிய முடியவில்லை. ஏதோ தவறு நடந்திருப்பதாக உள்மனம் சந்தேகிக்கத் தொடங்கியது.

தேஜூ வலுக்கட்டாயமாக நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள் அவள் அறையிலிருந்து வெளிவராமல். உடன் சம்ரிதியைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவுமில்லை. சம்ரிதி ஆரம்பத்தில் அவள் மெரூன் நிறத்தில் புடவை அணிவதைப் பார்த்தவள், "தேஜூ ஏன் இந்தக் கலர்? மித்ரன் மாமாவுக்கு லைட் கலர்ஸ் தான் பிடிக்கும்" என்று அவளையும் அறியாமல் சொல்லிவிட,

"உன் மித்ரன் மாமாவுக்கு உன்னைக் கூடத்தான் பிடிக்கும்" என்று தேஜூவிடமிருந்து வந்த பதிலில் அதற்குப் பின் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

லிங்கேஷ்வரனின் மூத்த மகன் அவர் காதில் ஏதோ சொல்ல, "சரி நாம லக்னப் பத்திரிக்கை வாசிச்சுடலாம். அப்புறம் அவங்க ரெண்டு பேரும் மோதிரம் மாத்திக்கட்டும்" என்று சொன்னவர் லக்னப் பத்திரிக்கையை வாசிக்கத் தொடங்க, மணமகனின் விவரங்கள் கூறி முடித்து மணமகளின் விவரங்களும் சொல்லி சரியாக மணமகளின் பெயரைச் சொல்லும்முன் "நிறுத்துங்க" என்று இரண்டு குரல் ஓங்கி ஒலித்தது.

ஒரு குரல் மித்ரனுக்கு சொந்தமானது. மற்றொன்று சுரேஷ் ஆதித்யாவினுடையது. அங்கிருந்த அனைவரும் இருவரையும் குழப்பமாக மாறி மாறிப் பார்க்க மித்ரன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்துவிட்டான். அப்பொழுது தான் தேஜூவும் சம்ரிதியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள்.

யாரையும் பார்க்கவுமில்லை யாரிடமும் எதுவும் கேட்கவுமில்லை. அங்கிருந்தத் திருமாங்கல்யத்தைக் கையில் எடுத்தவன் விறுவிறுவென்று சென்று அதை சம்ரிதியின் கழுத்தில் கட்டியிருந்தான். அதை அணிவிக்கும் பொழுது மித்ரன் ஆசையாக சம்ரிதியின் முகத்தைப் பார்க்க அவளோ பயந்து போய் அங்கிருந்த அனைவரையும் பார்த்தாளேயன்றி மறந்தும் மித்ரனின் முகம் காணவில்லை.

நொறுங்கிப் போனான் மித்ரன். அருகில் முகத்தில் மலர்ந்த சிரிப்புடன் நிற்கும் தேஜூவைப் பார்த்தவன், "ஐ எம் சாரி தேஜூ. நான் எப்போதும் உன்னை இந்த மாதிரி கண்ணோட்டத்துல பார்த்ததே இல்ல. நான் செஞ்சது உன் மனசைக் காயப்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சிடும்மா" உணர்ந்து மன்னிப்பை யாசித்தான் மித்ரன்.

"எனக்கு அது நல்லாவே தெரியும் மாமா. இவகிட்ட படிச்சுப் படிச்சுக் கேட்டேனே, நான் மட்டுமா? கிட்டத்தட்ட எல்லாருமே கேட்டோம். மத்த மூணு மாமா மாதிரிதான் மித்ரன் மாமாவும்னு அடிச்சு சொல்லிட்டா" தேஜூவினுடைய பதிலில் பலத்த அடி வாங்கியது மித்ரனின் காதல்.

காதலிப்பதை விடக் காதலிக்கப்படுவதில் ஒரு தனி சுகம் இருக்கும். இத்தனை நாளாகத் தான் காதலிக்கப்படுவதை எண்ணியெண்ணி சுகமாகக் காதல் வானில் பறந்து கொண்டிருந்தவன், சிறகொடிந்த பறவையாகத் தரையில் வீழ்ந்துத் துடிக்கத் தொடங்கினான் மித்ரன்.

ஒற்றைப் பார்வையிலும் ஒற்றை வார்த்தையிலுமே காதலைப் போற்றி வளர்த்தவனுக்கு சம்ரிதி கூறியதாகச் சொன்ன வார்த்தைகளை ஜீரணிக்கவே முடியவில்லை. இத்தனை நாட்களாக சம்ரிதியின் கண்களில் கண்ட காதலும் உரிமையுணர்வும் நிஜமா அல்லது இப்பொழுது அவள் காட்டும் அந்நியத்தன்மையும் ஒதுக்கமும் நிஜமா என்று பகுத்தறியத் தெரியாமல் திண்டாடிப் போனான் மித்ரன்.

சம்ரிதியோ, மாமன் மகள் என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே தன்னை விரும்பியவன் உண்மை அறிந்தால் எவ்வாறு நடந்துக் கொள்வானோ? தான் முதலிலேயே உண்மையை மித்ரனிடம் மட்டுமாவது கூறியிருந்தால் இந்த நிச்சயதார்த்தம் நல்ல முறையில் நடந்திருக்கும். இப்பொழுது தேஜூவின் வாழ்க்கையையும் தன்னுடைய மௌனத்தால் கெடுத்து விட்டோமே என்ற குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருந்தாள்.

சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த லெக்ஷ்மி சம்ரிதி அருகில் வரவும் சம்ரிதி அழத் தொடங்க, திருமணம் முடிந்ததில் ஒரு நொடி நேர மகிழ்ச்சியைக் கூட அவளிடம் காணாத மித்ரன் இதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காமல் தேஜுவின் தாத்தாவிடமும் பெற்றோரிடமும் சென்று வாய் வார்த்தையாக இல்லாமல் கைக் கூப்பி மன்னிப்பை வேண்டிவிட்டு விறுவிறுவென்று கோபமாக வெளியேறிவிட்டான்.

செல்லும் முன் தன்னுடைய தாயையும் தந்தையையும் கோபமாக முறைக்கத் தவறவில்லை. ஏற்கனவே சில பல கீறல்களுடன் இருந்த தந்தை மகன் உறவில் பெரிதாக ஒரு விரிசலே விழுந்தது. அனைவரும் செய்வதறியாமல் திகைத்து நிற்க பார்த்திபன் மட்டும் மித்ரன் பின்னோடு ஓடிச் சென்றான்.

"நாங்க உள்ள வரலாங்களா?" அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது சுரேஷ் ஆதித்யாவினுடைய தந்தையின் குரல். மித்ரனை அடித்து நொறுக்கும் வெறியுடன் கிளம்பிய தன் பேரன்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த லிங்கேஷ்வரன் இவர்கள் புறம் திரும்பி உள்ளே வருமாறுத் தலையசைத்து வரவேற்றார்.

"ஐயா என் பேரு விக்ரமாதித்யாங்க. கேள்விப் பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன் ஆதித்யா க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் பத்தி. இது என் ஒரே மகன் பேரு சுரேஷ் ஆதித்யா.
இப்பக் கொஞ்ச நேரத்துக்கு முன்ன திடீருன்னு வந்து அப்பா நான் ஒரு பொண்ணை விரும்புறேன்ப்பா. இன்னைக்கு அந்தப் பொண்ணுக்கு நிச்சயதார்த்தம். வாங்கப்பா நாம போய் பொண்ணு கேட்கலாமுன்னு சொன்னான்.


என்னப்பா நீயே அந்தப் பொண்ணுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தமுன்னு சொல்லிட்ட. இப்பப் போய் எப்படிப்பா நாம கேட்குறதுன்னு கேட்டேங்க. அந்தப் பொண்ணு தான்ப்பா என் வாழ்க்கையே. பரீட்சையே எழுதாம என் வாழ்க்கையில தோத்துப் போக நான் விரும்பலைப்பான்னு சொன்னான்.

அதான் இங்க வந்து உங்ககிட்ட பேசிப் பார்க்கலாமுன்னு வந்தோம். வந்துப் பார்த்தா நீங்க பார்த்திருந்த மாப்பிள்ளைத் தம்பியே எங்க வேலையை சுலபமாக்கிட்டாருங்க.
என் பையன்ங்குறதுக்காக சொல்லலீங்க. தங்கமான பையன். உங்க பொண்ணை ஆயுசுக்கும் கண்ணுக்குள்ள வைச்சுப் பார்த்துப்பான். நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். இதுக்கு மேல பெரியவங்க நீங்க தான் சொல்லணும்." தேஜூ வரச்சொன்னதாகக் காட்டிக் கொள்ளாமலே தான் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்தார் சுரேஷ் ஆதித்யாவின் தந்தை விக்ரமாதித்யா.


தன்னைக் காட்டிக் கொடுக்காமல் பேசிய விதத்திற்காகவே அந்த மனிதர் மேல் பெருமதிப்பு உண்டாகிப் போனது தேஜஸ்வினிக்கு. மெல்ல தன் தாத்தாவிடம் சென்றவள் அவரருகில் அமர்ந்து,

"தாத்தா நான் அன்னைக்குப் பேசும் பொழுது சொன்னது இவரை மனசுல வைச்சுதான். மூணு வருஷத்துக்கு முன்னாடியே வந்து என்கிட்ட காதலிக்கிறதா சொல்லிட்டாங்க. நான் அப்ப மறுத்துட்டாலும் என் மனசுல எனக்கே தெரியாம இவர்தான் தாத்தா இருந்திருக்காரு. உங்க கிட்ட சொல்ல சங்கடப்பட்டுக்கிட்டுதான் மித்ரன் மாமா பேரை சொல்லிட்டேன். நான் பண்ணது தப்புதான் என்னை மன்னிச்சிடுங்க தாத்தா. இப்பக்கூட நான் சொல்லிதான் இவங்க வந்திருக்காங்க. அதைக் கூட சொல்லாம உங்க கிட்ட பேசுற இந்தக் குணம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு தாத்தா" அவருக்கு மட்டும் கேட்கும் வண்ணம் மெல்லிய குரலில் சொல்லி முடித்தாள் தேஜூ.

பேத்தியின் மகிழ்ச்சியே தன் ஒரே குறிக்கோளாக எண்ணி வாழ்ந்த மனிதருக்கு, அந்த ஆசைப் பேத்தியின் இந்த நியாயமான கோரிக்கையை நிராகரிக்க மனம் வரவில்லை. அதுவுமில்லாமல் தான் தேடிய அத்தனைத் தகுதிகளோடு ஒருவன் கண்ணெதிரில் நிற்கையில் மறுக்கக் காரணமும் இல்லை. அதன்பிறகு சுமூகமான முறையில் சிறப்பாக நடைப்பெற்றது சுரேஷ் ஆதித்யா மற்றும் தேஜஸ்வினியினுடைய நிச்சயதார்த்தப் பெருவிழா.

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு, "தாத்தா நான் உங்கப் பேத்திக்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" கம்பீரமாக அனுமதி கேட்டவனுக்கு "தேஜூ மாப்பிள்ளைக்கு வீட்டைச் சுத்திக் காட்டும்மா" என்று உடனடியாக அனுமதி கிடைத்தது.

ஒரு தலையசைப்புடன் முன் நடந்தத் தேஜூவைப் பின் தொடர்ந்தான் சுரேஷ் ஆதித்யா. வேறெங்கும் அழைத்துச் செல்லாம்ல நேரடியாகத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று, "இது தான் என்னோட ரூம்" என்று அலட்சியமாகத் தோளைக் குலுக்கிச் சொன்னவளைக் குறும்பாகப் பார்த்தவன்,

"உன்னை வீட்டைத் தானே சுத்திக் காட்ட சொன்னாங்க, நீ என்னடான்னா உன் ரூமை சுத்திக் காட்டுற" குறும்புச் சிரிப்புடன் வினவினான் சுரேஷ் ஆதித்யா.

"வேணாட்டி போ" என்று சிறுபிள்ளையென முகம் தூக்கிச் செல்பவளைக் கரம் பிடித்துத் தடுத்தவன், "தேவதை மாதிரி இருக்க இந்தப் புடவையில" ஆழ்ந்த குரலில் கூறினான்.

பெண்ணவள் வெட்கப்பட்டுத் தலைக் கவிழ்ந்து கொள்ள அவள் அருகில் நெருங்கி வந்தவன் அவள் தாடையைப் பற்றி நிமிர்த்தி, "வெட்கமெல்லாம் படத் தெரியுமா உனக்கு ஹ்ம்ம்?" என்று குறும்பாக வினவ, அவன் மார்பிலேயே சாய்ந்துத் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள் அவனின் தேவதை.

"இப்பவாவது சொல்லேன் நீயும் என்னை லவ் பண்றியா?" அவளை மென்மையாக அணைத்துக் கொண்டே ஹஸ்கி வாய்சில் வினவ, அவன் மார்பிலேயே மேலும் கீழுமாக முகத்தைப் புரட்டினாள்.

"என்னைத் தேடுனியா?" இந்தக் கேள்விக்கு இடவலமாகத் தலை அசைந்தது. அவள் தன் நெஞ்சில் முகத்தைத் திருப்பத் திருப்ப இவன் தன்னுடைய அணைப்பை இறுக்கிக் கொண்டே இருந்தான்.

"ஆனா நான் பார்த்திருக்கேனே. நான் எப்பவெல்லாம் உன்னை மறைஞ்சிருந்து பார்க்குறேனோ அப்பவெல்லாம் உன் கண்ணு ரெண்டும் சுத்திச் சுத்தி என்னைத் தேடுனதைப் பார்த்திருக்கேனே" என்று கூற அவள் தலை நிமிர்த்தி ஆச்சரியமாக அவனை விழி விரித்துப் பார்த்தாள். அந்தக் கண்களில் மென்மையாக முத்தம் வைத்தான்.

கண்கள் சுருக்கி உதடு குவித்து அடுத்த முத்தத்திற்கு மன்னவன் அனுமதி கேட்க, வெட்கப் புன்னகையையேப் பதிலாகத் தந்தாள் அவனது இதய ராணி. அவளதுப் புன்னகையைத் தன்னுடைய இதழுக்கு மாற்றிக் கொண்டான் அவளது காதல் மன்னவன்.

தன்னுடைய காதல் நிறைவேறுமா என்று தத்தளித்த ஒருவன் தானும் காதலிக்கப்பட்டுள்ளோம் என்று காதல் வானில் சிறகடித்துப் பறக்கத் தொடங்க, ஏற்கனவே பறந்து கொண்டிருந்த ஒருவனோ சிறகொடிந்துத் தரையில் வீழ்ந்திருந்தான். காதல் விந்தையானது தான்.
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
காதல் படுத்தும்பாடு .... ??எப்படியோ நல்ல விதமா முடிஞ்சுது??... பாவம் மித்து... இன்னும் கோபத்தை continue pannu chellam ???... சமி உன்னோட மனசுல உள்ளத சொல்லாம நிறைய குழப்பத்தை create பண்ணிவச்சிருக்க ... ???... Curd rice irukkunu sonnanga engeppa adhu....??
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
காதல் படுத்தும்பாடு .... ??எப்படியோ நல்ல விதமா முடிஞ்சுது??... பாவம் மித்து... இன்னும் கோபத்தை continue pannu chellam ???... சமி உன்னோட மனசுல உள்ளத சொல்லாம நிறைய குழப்பத்தை create பண்ணிவச்சிருக்க ... ???... Curd rice irukkunu sonnanga engeppa adhu....??
அத தான் நானும் தேடிட்டு இருக்கேன் டியர்:p:love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top