டேய் உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது 9

#1
பகுதி – 9

வெகு சாதாரணமாய் தன்னை காட்டிக் கொள்ள, சூரி ஒப்பனைகள் ஏதுமின்றி பூங்காவிற்கு கிளம்பியிருந்தாள். ஒரு வர்ணமும் பூசப்படாத அவளின் திருமுகம், அதிகாலை சூரியனின் பொலிவை ஒத்திருந்ததை அவள் அறியவில்லை.

பூங்காவின் நுழை வாயிலிலேயே, நித்தி சூரியை ஓடி வந்து கட்டிக் கொண்டாள். முகிலன் தன் இரு கைகளையும் இருபுற பேன்ட் பாக்கெட்களிலும் நுழைத்துக் கொண்டு இவளையே ஆழ்ந்து பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தான்.

அந்த பார்வையை எப்படி எதிர் கொள்வது எனப் புரியாமல் நித்தியை அணைத்தபடியே அவர்களுக்கு முன்பிருந்த சீசாவை நோக்கி வேகமாய் நடந்துவிட்டாள் சூரி.

சூரியின் தடுமாற்றம் ஏனோ முகிலனின் இதழ்களின் புன்னகையை மேலும் பெருதாக்கியது. அவர்கள் பூங்காவிற்குள் நுழைந்து ஒரு மணிநேரம் கழிந்திருக்க, இருவரும் ஏறக் குறைய, அங்கிருந்த அனைத்து விதமான விளையாட்டு சாதனங்களிலும் விளையாடி முடித்து இருந்தனர்.

ஊஞ்சலில் நித்தியை அமரவைத்து, பின்புறமாய் நின்று, சூரி அவளை ஆட்டுவித்துக் கொண்டிருக்க, அவளை பின்புறமாய் நெருங்கி நின்ற முகிலன், “என்ன மேடம் உங்களுக்கு பசிக்கவே இல்லையா..? இன்னும் எவ்ளோ நேரம் இப்படி விளையாடிட்டே இருக்கப் போறீங்க?’’ என கேட்க, கிளம்ப ஒரு சாக்கு கிடைத்துவிட்டதை எண்ணி மகிழ்ந்த சூரி முகத்தை வெகு சாதரணமாய் வைத்துக் கொண்டு அவனை நோக்கி திரும்பினாள்.

“ஆமாம் சார்..! நித்தி கூட விளையாடிட்டே இருந்ததுல அது எனக்கு தெரியவே இல்ல. நேரம் ஆச்சு சார் கிளம்பனும். நித்தி பாப்பா ஆன்டி கிளம்புறேன்..” என நித்தியிடமும் விடை பெற முயல, நித்தி பாவமாய் தன் மாமனை பாத்தாள்.

‘ஹெலோ எங்க மேடம் உடனே கிளம்புறீங்க. இன்னைக்கு எங்க வீட்ல தான் உங்களுக்கு லஞ்ச். மூர்த்தி அண்ணா உங்களுக்காக பாத்து பாத்து சமச்சி வச்சி இருக்கார். வாங்க வீட்டுக்கு போகலாம்.’’ என்று நித்தியை தோளில் தூக்கிக் கொண்டு அங்கிருந்த நடக்க ஆரம்பித்துவிட்டான்.

“வருகிறாயா..? என்ற கேள்வி இல்லை. வா என்ற உத்தரவு மட்டுமே அவன் குரலில் விஞ்சி இருந்தது.

“என்னடா... இது இவரோட ஒரே ரோதனையா போச்சு. செம பிகரா இருக்கோமேன்ற நினைப்பு இல்லமா வீட்டுக்கு வா... ரோட்டுக்கு வான்னு உசுரை எடுத்துகிட்டு. நானே தாவி குதிக்குற மனசை உள்ள இழுத்து வச்சா வம்படியா வந்து தண்ணி ஊத்தி விளையாடிக்கிட்டு. சூரி ஜாக்கிரதைடி.. இவர் ஊத்துற தண்ணியில மனசு பந்து மாதிரி மிதந்துச்சு.. கன்பார்மா டெலிவரிக்கு கவர்மென்ட் ஹாஸ்பிடல் தான். மண்டையில நல்லா ஏத்திக்க.’’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டவள், அவன் பின்னோடு நடந்தாள்.

“உங்க வண்டி இங்கயே இருக்கட்டும். என்னோட வண்டியில போயிடலாம் மேடம். எதுக்கு வீணா ரெண்டு பெட்ரோல் செலவு.’’ என்றவன் தன் இருசக்கர வாகனத்தின் முன்புறம் நித்தியை அமரவைத்தான்.

இவன் பின்னால் எப்படி அமர்வது என சூரி தயங்கியபடி, “சார்.. இட்ஸ் ஓகே நான் என் வண்டியில..’’ என முடிப்பதற்குள், அவளை திரும்பிப் பார்த்து நன்றாக முறைத்தவன், “நித்தி முன்னால ஆர்க்யூ செய்ய வேண்டாம். முதல்ல வண்டியில ஏறுங்க.’’ என ஏறக் குறைய மிரட்டினான்.

அந்த குரலுக்கு பணிந்தாலோ, அன்றி அவன் பார்வைக்கு பணிந்தாலோ, சூரி வேகமாய் அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள். இரண்டாவது தெருவில் இருக்கும் வீட்டை அடைய, முகிலனுக்கு இருபது நிமிடம் தேவைப்பட்டது.

நடந்து செல்பவர்கள் எல்லாம் இவன் வண்டியை முந்தி செல்ல, “இதுக்கு நடந்தே போலாமே போலீஸ்கார்.’’ என்று தொண்டை வரை வந்த வார்த்தைகளை சிரமப்பட்டு சூரி வாய்க்குள்ளேயே அடக்கினாள்.
ஆனால் மருமகளோ, அதை செய்கை வழி மானனிடம் கேட்டு விட, முன்பிருந்த கண்ணாடியின் வழி அவளின் செய்கையை பார்த்துவிட்ட சூரி ‘களுக்’கென்று சிரித்துவிட்டாள்.

புன்னகைக்கும் அவள் உதடுகளையே முன் கண்ணாடியின் வழி உற்று நோக்கிய முகிலன், ‘என்ன’ என்பதாய் புருவங்களை மட்டும் உயர்த்த, இவளும் அக்கண்ணாடியின் வழி அவன் விழிகளை மட்டுமே பார்த்திருந்தாள்.

வீடு வந்துவிட, இவர்களுக்கு முன்பாய் நித்தி குதித்துக் கொண்டு உள்ளே ஓடினாள். இவளை கண்டதும் ராமமூர்த்தி வாயிலுக்கே வந்து வரவேற்றார்.

மாமன் மருமகளின் மௌன சம்பாசனைகளை ரசித்தபடி சூரி உணவினை உண்டு முடித்தாள். இவர்கள் உணவருந்திக் கொண்டிருக்கும் பொழுதே ராமமூர்த்தி அருகில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்கு ஆராதனை காண போவதாய் சொல்லி சென்று இருந்தார்.

உணவுண்டு முடிந்ததும், ஒரு மணிநேரம் ஓடி விளையாடிய களைப்பும், நிறைந்த வயிறும் நித்தியின் விழிகளை தூக்கத்தில் சொக்க வைத்து இருந்தது. உணவு மேஜையில் அமர்ந்த நிலையிலேயே நித்தி சொக்கி விழ, அவள் கைகளை தூய்மைப்படுத்திய முகிலன், படுக்கையில் கொண்டு கிடத்திவிட்டு வந்தான்.

கிளம்ப வேண்டும் என மனது எச்சரிக்க, சூரி எழுந்து நின்றாள். “நானும் கிளம்புறேன் சார். நேரம் ஆச்சு. பிரண்ட்ஸ் தேடுவாங்க.’’ என்றபடி எழுந்து நிற்க, மறுவார்த்தை அவளிடம் ஏதும் பேசாமல், அவள் கரம் பற்றி அருகிருந்த ஊஞ்சல் நோக்கி அவளை இழுத்து சென்றான்.

எதற்காய் எங்கே அழைத்து செல்கிறான் எனப் புரியாத சூரியா திகைப்போடே அவன் செயல்களுக்கு உடன் பட்டு நின்றாள்.

பால்கனிக்கு அவளை அழைத்து சென்றவன் அங்கிருந்த ஊஞ்சலில் அவளை அமர்ந்திவிட்டு, அப்படியே முழங்காலிட்டு அமர்ந்தான். அவனின் செய்கையில் திகைத்து சூரி எழுந்து கொள்ள முயல, அவள் மடியில் அழுத்தம் கொடுத்து அவளை அப்படியே அமர வைத்தவன், “உன்கிட்ட கொஞ்சம்.. இல்ல நிறைய சொல்லணும் சூர்யா. ப்ளீஸ் கொஞ்ச நேரம் இப்படியே உக்காந்து இரேன்.’’ என்றவன், அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தான்.

சூரி அந்த விழிகளுக்கு கட்டுப்பட்டவளாய், “ஓகே நான் நீங்க பேசுறதை கேக்குறேன். பட் நாட் லைக் தட். ப்ளீஸ் எழுந்து எதிர்ல இருக்க சோபால உக்கார்ந்து பேசுங்களேன்.’’ என வேண்டுகோள் வைக்க, முகிலன் எழுந்து அவளுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான்.

சற்று நேரம் அவள் கரங்களை எடுத்து தன் கரங்களுக்குள் பொதித்துக் கொண்டவன், ஆழ்ந்த பெரு மூச்சு ஒன்றை வெளியேற்றிவிட்டு, “உன்கிட்ட எப்படி சொல்றதுன்னே தெரியல சூர்யா. ஆனா உன்கிட்டையாவது இதை நான் சொல்லி தானே ஆகணும்.’’ என்றவன், அவள் கரங்களை விட்டு விட்டு, எழுந்து நின்றான்.

நின்றவன் எதிரே இருந்த வானத்தை வெறித்த படி, “இந்த பதவி, பேர் புகழ் எல்லாமே இப்ப வந்தது சூர்யா. பேசிக்கலி நான் யார் தெரியுமா..? அலமேலு பையன். அலமேலு என்ன கலெக்டரா பேர் சொன்ன உடனே தெரியுறதுக்குன்னு நீ நினைக்கலாம்.

ஆனா நான் எட்டாவது படிக்கும் போது எங்க தெருவுக்கே அலமேலுங்கிற பேர் ரொம்ப பேமஸ். பின்ன ரொம்ப கம்மியான சம்பளத்துக்கு வேலை செய்ற வேலைகாரி பேமஸ் ஆகமா இருந்தா தானே ஆச்சர்யம்.

ஒரு நாளைல பதினேழுமணி நேரம் வீட்டு வேலை மட்டுமே செஞ்சவங்க எங்க அம்மா. அப்பா நான் ஏழாவது படிக்கும் போதே இறந்துட்டார். அவர் அரசாங்கத்தோட தற்காலிக வேலையில இருந்ததாலா பெருசா அரசாங்க உதவின்னு ஒன்னும் கிடைக்கல.

அப்ப எங்க அக்கா பனிரெண்டாவது படிச்சிட்டு இருந்தா. எங்க அம்மாவும் நல்லா துடிப்பா தான் இருந்தாங்க. நான் டென்த் படிக்கும் போது அம்மாவுக்கு அடிக்கடி மயக்கம் வர ஆரம்பிச்சது.

அப்ப தான் முதல் முறையா அரசாங்க ஆஸ்பத்திரிக்கு போனேன். அந்த இடம் தான் வாழ்க்கைனா என்னன்னு எனக்கு கத்து கொடுத்த இடம். அம்மாவுக்கு மாதவிலக்கு சமயத்துல அதிக ரத்தப்போக்கு இருந்து இருக்கு.

அவங்க அதை ஒரு பெரிய விசயமா எடுதுக்காம அசால்ட்டா இருந்து இருக்காங்க. கடைசியா உடம்புல ரத்தத்தோட அளவு ரொம்ப குறைஞ்சி, அது இதயத்தோட செயல்பாட பாதிக்க தொடங்கவும் தான் ஆஸ்பத்திரி போய் பார்க்கணும் அப்படிங்கிற எண்ணமே அவங்களுக்கு வந்து இருக்கு.

அக்கா வெளியூர் கல்லூரி விடுதியில இருந்தா. அதனால நான் தான் எங்க அம்மாவை ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனேன். ஒவ்வொரு இடத்துலையும் மணிக் கணக்கா காத்திருப்போம்.

சீட்டு வாங்குற இடத்துல இருந்து, ரத்தத்தை டெஸ்ட் கொடுக்குற இடம் வரைக்கும். நாங்க கொஞ்சம் பக்கத்துல போகும் போது, இவங்க டாக்டருக்கு தெரிஞ்சவங்க, நர்சுக்கு தெரிஞ்சவங்க, இங்க வேலை செய்றவங்க அப்படின்னு யாராச்சும் குறுக்க வந்து அவங்க வேலையை முடிச்சிட்டு போவாங்க.
 
#2

அது தான் அப்படின்னா அம்மாவை அட்மிசன் போட்ட வார்ட்ல கூட ஒன்னு பெட்டு கொடுக்க காசு இருக்கணும். இல்ல தெரிஞ்சவங்க சிபாரிசு இருக்கணும். ரெண்டும் இல்லாத எங்க அம்மாவுக்கு அங்க ஒரு கிழிஞ்ச பாய் தான் கிடைச்சது.

வாழ்கையில வயித்துக்கு சாப்பாடு இல்லாதப்ப கூட நான் இவ்ளோ வேதனைபட்டது இல்ல சூர்யா. ஆனா மொதோ முறையா அம்மாவை அங்க வச்சி வைத்தியம் பார்க்கும் போது, “ச்சே.. நம்மகிட்ட காசு இருந்தா அம்மாவை தனியார் ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போய் வைத்தியம் பார்க்கலாமேன்னு ரொம்ப வேதனைப்பட்டேன்.

எங்களை மாதிரியே காசு இல்லாதவங்க நம்ம இந்திய நாட்ல அதிகம் இல்லையா..? அங்க இருந்த நிறைய பேர் காசு இல்லாத ஏழையா இருந்தாலும் மனசுல மாசு இல்லாத மனுசங்களா இருந்தாங்க.

அம்மாவை அங்க இருந்த மத்த நோயாளிகளும், அவங்க குடும்பத்தை சேர்ந்தவங்களும் தான் அன்பா பாத்துகிட்டாங்க. நான் படிச்சிகிட்டே நைட் ஹோட்டல்ல சர்வர் வேலைக்கு போக ஆரம்பிச்சேன்.

அம்மா அங்க இருந்த ரெண்டு மாசத்துல அங்க இருந்த டாக்டர் நர்ஸ் எல்லாரும் நல்ல பிரண்ட்ஸ் ஆயிட்டாங்க. அப்ப தான் அங்க இருக்க பிரச்சனைகள் பத்தி எனக்கு கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது.

அரசாங்க மருத்துவமனையோட தரம் அங்க வேலை செய்றவங்க மட்டும் தீர்மானிக்கிறது இல்லை . அதுக்கு பின்னாடி நாம கற்பனை பண்ணி பார்க்க முடியாத அரசியல் இருக்கு சூர்யா. நம்ம பெரிய உலகத்தோட மினியேச்சர் தான் ஹாஸ்பிடல். அங்க இங்க இருக்க மாதிரி, நல்லது, கெட்டது, அரசியல், தந்திரம் எல்லாமே இருக்கும்.

அம்மாவுக்கு கர்ப்பப்பை ஆப்ரேசன் பண்ண தேதி குறிச்சி இருந்தாங்க. சரியா அன்னைக்கு ராத்திரி அம்மா இதயம் செயல்பட முடியாம இறந்து போயிட்டாங்க.

எனக்கு உலகமே இருண்ட மாதிரி இருந்தது. இப்ப சொந்தம் கொண்டாடுற அத்தனை பேரும் அந்த நேரத்துல துக்கம் விசாரிக்க கூட வரலை சூரி. நான் என் படிப்பை நிறுத்திட்டு என் அக்காவை படிக்க வச்சேன்.

நான் படுத்து தூங்கின இடத்தை கேட்டா சிரிப்ப. தூங்க இடம் இல்லாம சில நேரம் ஊர்ல ஒதுக்கு புறமா இருக்க மரத்துல ஏறி தூங்கி இருக்கேன். அக்கா படிப்பு முடிச்சிட்டு கிடச்ச வேலையில ஒட்டிகிட்டு அவ என்னை படிக்க வச்சா.

சமூகத்துல நாலு பேர் மதிக்கிற அளவுக்கு கட்டாயம் பெரிய ஆளா வரணும்ங்கிற வெறியோட படிச்சேன். காலேஜ் படிச்சிட்டு இருக்கும் போதே போட்டி தேர்வுக்கு தயாராக ஆரம்பிச்சேன்.

சரியான வழிகாட்டுதல் இல்லாததால முதல்ல பெருசா என்னால எதையும் சாதிக்க முடியல. ஆனாலும் கிடச்ச கிளர்க் வேலையில ஒட்டிகிட்டேன். அதுக்கு அப்புறம் லோன் போட்டு அக்காவுக்கு நல்ல இடத்துல சம்மந்தம் பேசி முடிச்சேன்.

அவ வாழ்க்கைப்பட்டு போன இடம் ரொம்ப பெரிய இடம். பணம் சில பேரோட அடிப்படை குணத்தை மாத்தும்னு சொல்லுவாங்க. அதை நான் அவகிட்ட தான் பார்த்தேன்.

தன்னோட கடந்த காலத்தை நியாபகப்படுத்துற எந்த விசயத்தையும் அவ தவிர்க்க ஆரம்பிச்சா. நாங்க நல்ல நிலைமைக்கு வந்ததும் வந்து ஒட்ட ஆரம்பிச்ச உறவுகள்ல பணபலம் படைச்சவங்ககிட்ட பழக ஆரம்பிச்சா.

இதெல்லாம் பார்த்து நான் அவகிட்ட இருந்தும் ஒதுங்க ஆரம்பிச்சேன். என்ன தான் அரசாங்க வேலையில இருந்தாலும், இன்னும் மேலப் போகணும்னு படிக்க ஆரம்பிச்சேன்.

சரியா எட்டு வருச உழைப்புக்கு கிடச்ச பலன் தான் இந்த பதவி. முகிலன் ஐ.பி.எஸ். நான் ஐ.பி.எஸ் போட்டி தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கும் போது தான் நித்தி பிறந்தா. அவ பிறந்து சரியா ஒரு வருஷம் கழிச்சி தான் அவளுக்கு இருந்த குறைபாட்டையே கண்டு பிடிக்க முடிஞ்சது.

தன் குழந்தை குறைபாடுள்ள குழந்தைன்னு வெளி சமூகத்துக்கு காட்ட விரும்பாத அக்கா அவளை வீட்டை விட்டு வெளிய எங்கயும் கூட்டிட்டு போக மாட்டா. கிட்ட தட்ட நித்தி ஒரு தங்க கூண்டுல இருந்தா. இந்த உலகத்துல கொடுமையான தண்டனை தனிமை தான் சூரி.

நான் என்னோட ஐ.பி.எஸ் ட்ரைனிங் முடிச்சிட்டு எங்க அக்கா வீட்டுக்கு போகும் போது தான் நித்தி நிலைமை எனக்கு புரிஞ்சது. அப்ப அவ ரெண்டாவது குழந்தையை வயித்துல சுமந்துட்டு இருந்தா.

நித்தி கொஞ்சநாள் என் கூட இருகட்டுமான்னு தான் கேட்டேன். உடனே பெட்டி கட்டி என்னோடவே அனுப்பிட்டா. ஏதேதோ சூழல்ல அனாதையான ரெண்டு பேரும் ஒரே குடும்பமா வாழ ஆர்மபிசோம்.

ரெண்டாவது குழந்தை எந்த குறையும் இல்லாம ஆரோக்கியமா பிறக்கவும் எங்க அக்கா சுத்தமா தன்னோட முதல் மகளை மறந்தே போயிட்டா. எப்பவாவது போன்ல விசாரிக்கிறதோட சரி.

என்னோட பதவி பல பணக்கார, அரசியல் சம்மந்தங்களை எங்க அக்கா வீட்டை நோக்கி படை எடுக்க வச்சிட்டு இருக்கு. ஆனா நான் ரொம்ப உறுதியா கல்யாணம் என்னோட சொந்த விஷயம். அதுல யாரும் தலையிட கூடாதுன்னு சொல்லிட்டேன்.

இந்த உலகத்துல நான் சந்திச்ச மனுசங்க எல்லாரும் ஏதோ ஒரு வகையில முகமூடி போட்டு இருந்தாங்க. போலியா என் முன்னாடி நடிச்சிட்டு இருந்தாங்க சூர்யா. எப்ப உன்னை பூங்காவுல பார்த்தேனோ... உன்னோட கண்ணுல நான் உண்மையான மனுசத்தன்மையை பார்த்தேன். நடிக்குற முக பாவத்துல ஒரு மனுசியை பார்த்தேன்.

எனக்கு சிபாரிசு எங்கயும் எப்பவும் பிடிக்காது சூர்யா. அம்மாவோட ஆஸ்பிட்டல் வாழ்கை எனக்கு கத்து கொடுத்த பாடம் அது. இந்த சமூகத்தை நான் திருத்தப் பிறக்கல. ஆனா என் அளவுல நான் நேர்மையா இருக்க முடியும் இல்லையா. அதை எப்பவும் நான் கடைபிடிச்சிட்டு இருக்கேன்.
அதான் நீ அன்னைக்கு ஒரு நாள் உன் பிரண்டுக்காக ஹெல்ப் கேட்டு வந்தப்ப செய்யல. எனக்கு அடிபட்டப்ப கூட அங்க இருந்த விதிமுறையை உடைக்க விரும்பல.

ஒரு சராசரி பொண்ணா அது உனக்கு எவ்ளோ மனக் கஷ்டத்தை கொடுத்து இருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுது சூர்யா. ஆனா என்ன செய்ய நான் இப்படித்தான். இனியும் இப்படித் தான்.

இப்படி ஒருத்தனை உன்னோட வாழ்க்கை துணையா உன்னால ஏத்துக்க முடியுமா சூர்யா. ரெண்டு அனாதைகள் சேர்த்து உருவாக்கின இந்த குடும்பத்துக்கு குடும்ப தலைவியா வர முடியுமா..?’’ என்றவன் மெதுவாய் சூர்யாவை நோக்கி திரும்பினான்.

அங்கே அவன் கண்டது விழிகளில் நீர் பெருக்கோடி, விழிகள் சிவந்த சூர்யாவை தான். இத்தனை நேரம் இருந்த தடைகள் விடை பெற, பாய்ந்து சென்று அவனை அணைத்துக் கொண்டவள், “என்னை எப்ப கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வருவீங்க முகிலன்.’’ என்றபடி அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

விழிகள் மகிழ்ச்சியில் மிளிர, “உங்க வீட்ல சம்மதம் வாங்கின அடுத்த நிமிசமே அம்மு.’’ என்றவன் தானும் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

விசும்பலின் ஊடே சூரி, “ஆனா என்னை டெலிவரிக்கு ஜி.எச் கூட்டிட்டு போகக் கூடாது சரியா..?’’ என தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய கேட்க, முகிலன் வெடித்து சிரித்துவிட்டான்.

“அம்மு.. ரூல்ஸ், ரெகுலேசன் எல்லாம் எனக்கு தான். யாரையும் வருத்தாத வாழ்கையை உன்னோட விருப்பபடி நீ வாழலாம். உனக்கு ரொம்ப பிடிச்ச ஹாஸ்பிட்டல்ல குட்டி சூரியை சீக்கிரம் டெலிவரி செஞ்சிடலாம் சரியா.’’ என்றவன் தன் தலையை அவள் தலையோடு முட்டினான்.

இருவரின் விழிகளிலும் சில நீர் துளிகள் தேங்கி இருக்க, அதுக்கு நேர்மறையாய் இருவரின் இதழ் நான்கும் புன்னகையில் விரிந்திருந்தது.

இதழ்களின் இடைவெளி குறைந்து சுழியமான தருணமொன்றில் தொட்டுக் கொண்ட இரு ஜோடி இதழ்களும், பிரிய மனமின்றி, ஒன்றை மற்றொன்று விழுங்க துவங்கின.

கரெக்ட் செய்யப்படுவான்.
 
#3
அடுத்த பதிவோடு மீனு வந்தாச்சு.

கருத்து திரியில் உங்கள் கருத்துக்களுக்கு இன்னும் மறுமொழி கொடுக்கவில்லை. அதி விரைவில் வருகிறேன் நன்றியோடு.

விரைவில் அடுத்த பதிவோடுசந்திக்க விருப்பும்.

மீனு.
 

Advertisements

Latest updates

Top