தேன் மழை - காதம்பரி

Kathambari

Author
Author
SM Exclusive Author
#1
நீண்டு வளர்ந்து கொண்டிருந்த அந்த ராஜபாட்டை இருபுறமும் செழித்து வளர்ந்து நின்ற மரங்கள் அந்தக் காட்டிற்கு அரணாக இருக்க நடுவில் சுமங்கலி பெண்ணின் நடுவகிடு போல நேராக இருக்க இதமான தென்றல் தவழ்ந்து வந்து அந்தப் புரவிகளின் மேல் பயணம் செய்துக் கொண்டிருந்தவர்களைப் தழுவியது...

“இளவரசே.. “சற்றுத் தயங்கியவாறு அழைத்தவனைப் புரவியை மென்மையாக செலுத்தியவாறு திரும்பிப் பார்த்தான் அவன்!

என்ன ஒரு தேஜஸ் அந்தக் கண்களில்!

நிமிர்ந்து அவன் அமர்ந்திருந்த விதமே தனி கம்பீரத்தை தர, அந்தக் கருமை நிறத்தவனுக்கு ரசிகர் கூட்டமென்று நிறைய உண்டு…

மார்பை மறைக்கவென ஒரு மேலாடையும், இடுப்பில் ஒரு இறுக்கமாக் கட்டியிருந்த கீழாடையும், முறுக்கிய மீசையும், முறுக்கேறிய புஜங்களும், திண்மையான மார்பும், அதிலிருந்த வடுக்களும், கூர்மையான கண்களும்.. அவனை மிகச்சிறந்த வீரன் எனக்கூற "சொல் முத்தழகா.." என்றான் ஆதித்திய கரிகாலன்..

ஆம் அருள்மொழிவர்மனுக்கு மூத்தவன்... வரலாற்றில் சோழத்தின் பக்கங்களிலிருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்ட ஆதித்ய கரிகாலன் தான் அவன்..

சங்கதாரா நூலைத் தழுவி, இடைச்சொருகலாக எனது கற்பனை..

‘முத்தழகா’ என்று ஆதித்தியனால் அழைக்கப்படும் பார்த்திபேந்திர பல்லவன்...

"முத்தழகா.. என்ன புதிதாய் 'இளவரசே' என்ற அழைப்பு.." புரவியில் இருந்து இறங்கியபடியே கேட்டான் ஆதித்தியன்..

"ஆதித்யா உன் முகம் வாட்டத்திற்குக் காரணம் என்ன.."
நண்பனல்லவா புரிந்து கொண்டான்..

"பழுவேட்டரையர் செய்த காரியத்தால்.. எனது மனம் கவர்ந்தவளின் ஊடலுக்கு உள்ளாகியிருக்கிறேன்.. சமாதான முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது.." என்று அவனது எண்ணம் முந்தைய நிகழ்வுக்குச் சென்றது…

முந்தைய நிகழ்வு 1…

அன்று வாயு பகவான், வல்லினம் பேசாமல் மெல்லினம் பேசிக் கொண்டிருந்தார்.. பூஞ்சோலையில் பூந்தென்றலுக்கும், புள்ளினங்களின் புதுப்பாடலுக்கும் இசைந்தார் போல், புஷ்பங்கள் பூத்த கொடிகள் அசைந்து ஆடின.. சோலையின் ஒரு பகுதியில் இருந்த ஓடையின் வளைவுகள், அங்கே நின்று கொண்டிருந்த கன்னியின் இடைவளைவிடத்து தோற்றுப்போய் ஓடிச் சென்று கொண்டிருந்தன...

யார் இந்த காரிகை?? ஆதித்திய கரிகாலனின் மனம் கவர்ந்தவள்.. பெயர் நந்தாவிளக்கு.. நாட்டிய தாரகை.. இவளின் நாட்டியம் எங்கெங்கு நடக்கிறதோ, அங்கெல்லாம் ஆதித்தியனின் விஜயம் இருக்கும்.. பூஞ்சோலையின் ரம்மியமான சூழல் தந்த இனிமையை, சிறிதளவு கூட அந்தக் கன்னியின் கண்களில் காண இயலவில்லை... எதற்காக இந்த வாட்டம்?

தன் மனம் கவர்ந்த சோழ இளவரசருடன் உண்டான ஊடலின் விளைவு தான் இது.. ஊடலின் மூலக்காரணம், ஸ்ரீவிஜய தேசத்து இளவரசி விஜயரேகாவை, பழுவேட்டரையர் பயணக் கைதியாகப் பிடித்து வைத்திருப்பதால் (ஸ்ரீவிஜய தேசத்து இளவரசியை ஆதித்யனுக்குத் திருமணம் செய்தால், ஈழம் மற்றும் பாண்டிய நாட்டுடனான விஜயதேசத்தின் நட்பு பாராட்டுவதை தவிர்க்கவே இந்த உத்தி)

அந்த மென்மையான சூழலுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது அந்த வலிமையான உருவத்தின் வருகை... உருவத்திற்கு உரியவன் ஆதித்ய கரிகாலன்.. சோழ நகரத்தின் அடுத்த அரசர் என்று முடிசூடப் போகின்றவன்.. தன்னில் சரிபாதியைச் சமாதானப்படுத்தும் முயற்சியாக பூஞ்சோலைக்குள் புகுந்தான் அந்தச் சுந்தரச்சோழர் புதல்வன்..

பக்கத்தில் வந்து நின்ற அவனைக் காணாமல், பாராமுகம் காட்டினாள் நந்தாவிளக்கு..

"நேசஅழகிக்கு, இன்னும் என் மேலான ஊடல் கடுகளவும் குறையவில்லையோ.."

" இது என்ன புது அழைப்பு நேசஅழகி என்று, என் பெற்றோர் இட்ட பெயர் நந்தா விளக்கு இருக்கும்போது.."

“நீ என்னுள் உருவாகிய நேசத்திற்கு அழகு சேர்த்தவள்.. ஆதலால் எனக்கு நீ நேசஅழகி தான்.. “என்ற ஆதித்தியனின் குரலில் ஒரு உறுதி இருந்தது. அது அவன் கருமை நிற புஜங்களின் உறுதிக்கு இணையாக இருந்தது..

அவனின் நேசஅழகி சற்று விலகிச் சென்று அங்கிருந்த வழவழப்பான பாறைகளில் அமர்ந்து கொண்டாள்..

அவள் அருகில் சென்ற ஆதித்தியன், ஒரு சிறு மரப்பேழையை அவளின் முகத்தருகில் நீட்டினான்.. ‘என்ன ‘ என்பது போல் இருந்தது அவளது விழிப்பார்வை.. ‘திறந்து பார்’ என்பது போல் பாவனை செய்தான்…

அவனிடமிருந்து மரப்பேழையை வாங்கியவள்.. திறந்து பார்த்தாள்… அவன் எதிர்பார்த்திருந்த எந்த ஒரு பிரதிபலிப்பும் தெரியவில்லை அவளின் வதன முகத்தில்.. மாறாக

“கணையாழி (முத்திரை மோதிரம்) கொண்டுவந்து காரிகையின் கரம் பிடித்துவிடலாம் என்று கற்பனையோ.. “ ஏளனம் மிகுந்திருந்தது அவளின் குரலில்…

“இத்துணை இடரிலும் இந்த இனியவளின் இன்முகம் இவன் இருதயத்தில் இருக்கிறது என்று பறைசாற்றவே இது… “

இடர்--ஆம் இடரேதான் சோழகுலத்தை வஞ்சம் தீர்க்க ஒரு கூட்டமே அன்று சோழத்தில் உலாவிக் கொண்டிருந்தது…

“பொன்னைப் பெற்றுக் கொண்டு இந்தப் பாவை புன்னகைப் பூத்து விடுவாள் என்று எந்தப் புரவலர் கூறினார்.. “ என்று வார்த்தைகளில் விளையாடினாள்…

“புரவலரிடத்து புத்தி கடன் பெறும் அளவிற்கா.. இந்தப் புரவி வீரனின் புத்தி உள்ளது.. “என்றான் பொய்க் கோபத்தோடு..

அந்தக் கணத்திலேயே அவனும் அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.. ஆனால் அவளோ எழுந்து நடக்கத் தொடங்கினாள்..

“எழுந்து சென்றாள்.. என்ன எண்ணிக்கொள்வது… “

“எட்டி நின்று பேசுவதே உசிதமென்று.. “

“எட்டி நின்று பேச நான் என்ன ஏவல் ஆளா.. “

“ஏவல் வேலைகள் தான் எதிரி தேசத்து இளவரசிக்கு ஏகபோகமாக நடக்கிறதே… “

“பிழை என்னிடத்தில் இல்லை.. பழுவேட்டரையர் விருப்பம்.. “ என்றவன், அவனின் நேசஅழகியின் இடையை இழுத்து, அவளை தன் இதயத்தின் அருகில் இருத்திக் கொண்டான்…

“அன்னியவளிடத்து இந்தச் செயல் அதிகப்படி அல்லவா… “

“அத்தை மகளிடத்து இந்த அணைப்பு அவசியமல்லவா.. “ என்றான் இதயத்திலிருந்து இதழ் அருகே அவளைக் கொண்டு சென்ற படியே..

“இவளிடம் மட்டும் தான் இந்தப் பேச்சு.. “என்றாள் தன் அபிநயம் பிடிக்கும் கரங்களால் அவனை அழகாகத் தள்ளி நிறுத்தியபடியே…

“அரண்மனை அரியணை ஏறியவுடன், அத்துணை பேரிடமும் அறிவிக்கப்படும்…நீ சுந்தரச்சோழர் தமக்கை மகவென்று.. “

பதிலேதும் கூறமால் மரப்பேழையை எடுத்து அவனிடத்து தந்துவிட்டு நடக்க ஆரம்பித்தாள்…

அதை வாங்கியவன், பச்சைப் புல்லிடத்து தந்துவிட்டு.. அங்கிருந்த மரத்திலிருந்து பலாசம் மலர் ஒன்றைப் பறித்தான்..

அதற்குள் அவனின் நேசஅழகி அங்கிருந்த அன்னப்பட்சிகளுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்து இருந்தாள்… யாரின் நடையில் மென்மை அதிகம் என்று விவாதமே நடத்தலாம்…

புஷ்பத்தை ஏந்தியவன் ,அவளின் முன்னே சென்று நின்றான்..

அவள் புன்னகைத்தாள்…

“கடைசி ஆயுதமா…? கன்னியைக் கவிழ்ப்பதற்கு… “என்றாள்

“இல்லை.. பலாசம் மலராவது என் பாசத்திற்குப் பரப்புரை பொழியாதா என்ற அவா.. “

“தங்களின் பாசத்தை கூற பலாசம் மலரெதற்கு.. தங்களின் ஒரு பார்.. “ என்று அவள் வாக்கியம் முடிக்கும் முன்பே…

அதற்குள் காலந்தியின்(குதிரை) கனைப்புச் சத்தம் கேட்டதால்..

துரோகிகளின் வரவோ என எண்ணியபடி “கடம்பூர் அரண்மனை விருந்தில் உன் நாட்டிய நிகழ்ச்சி காண வருவேன்.. “ என்று அவளை அனுப்பினான் …

உரையாடலை அந்தக் கணத்திலேயே உறைய வைத்துவிட்டவன், சிந்தை முழுவதும் நிரப்பியவளைச் சமாதானப்படுத்த முடியவில்லை என்ற சஞ்சலத்துடன் அங்கிருந்து கிளம்பினான்…

ஆதித்யனின் நேசஅழகி அவனைக் கடைசியாகப் பார்த்தது அன்றுதான்…

இந்தச்சணம் காட்டிற்குள்…

முத்தழகன் இளவரசரின் வாடிய முகத்தை கண்டு வாட்டம் கொள்ளாமல்.. மெளனச் சிரிப்பு சிரித்தான்.. சிரிப்பின் காரணம், அவனுக்கும் ஒரு முந்தைய நிகழ்வு இருந்தது..

முந்தைய நிகழ்வு 2

சோழகுல இளவரசரும், தனது உற்ற நண்பனுமான ஆதித்த கரிகாலனுக்காக நந்தாவிளக்கிடம் தூது சென்றான் முத்தழகன்.. இளவரசர் அறியாத விடயம் இது..

“வாருங்கள் முத்தழகரே.. இளவரசர் நலமா.. “என்றாள் ஆதித்யனின் நேசஅழகி..

“ நலம் என்று கூறவே என் அவா.. “

எதற்கிந்த பூடகப் பேச்சு என்று புரியாமல் அவனைப் பார்த்தாள்…

“தங்களிடத்து ஒரு வேண்டுகோள்… ஆதித்தனிடம் நீங்கள் கொண்டுள்ள மனத்தாங்கலை மறந்து சமாதானம் அடைய வேண்டும்… “

அவள் கலகலவென சிரித்தாள்..

“எதற்கு இந்த நகைப்பு… “

“நான் அவரை மணக்க சம்மதிக்கப்போகிறவள்… இன்னும் சமாதான நிலையிலே நிற்கிறார் உங்கள் இளவரசர்.. அறிந்து கொள்ளஅவகாசமில்லையோ தங்கள் ஆதித்தியருக்கு… “

“இதை நான் இளவரிசரிடத்து கொண்டு சேர்க்கலாமா…” என்றான் மகிழ்ச்சியுடன்..

“தாரளமாக… “என்றாள் மங்கை அவளும் மகிழ்ந்தபடியே..

மிகுந்த நிம்மதியுடன் விடை பெற்றுக்கொண்டான் முத்தழகன்..

இந்தச்சணம் காட்டிற்குள்..

தன் நண்பனிடம் இதைக் கூற முற்படுகையில் தான், தூரத்தில் இருந்து ஒற்றன் ஒருவன் ஆதித்யனைப் பார்த்து துணி கொண்டு சமிக்ஞை செய்தான்..

“முத்தழகா கடம்பூர் அரண்மனை விருந்தில் சந்திக்கலாம்…” என்று கூறிவிட்டு புரவியை நோக்கி நடந்தான்..

“கடம்பூர் விருந்தை தவிர்த்து விடலாமே ஆதித்தியா… “என்று இறைஞ்சினான் முத்தழகன்…

“இல்லை, என்னைச் சுற்றி பின்னப்படும் பெரிய சிலந்தி வலையை யார் பின்னுகிறார்கள் என்று அறிய எனக்கு ஒரு வாய்ப்பு.. அதை நழுவ விடக்கூடாது.. “ என்று ஒற்றன் இருக்கும் திசை நோக்கிப் பயணித்தான்…

அதுவே ஆதித்தியனை பார்த்திபேந்திர பல்லவன் கடைசியாகப் பார்த்தது…

அதன்பிறகு பார்த்திபேந்திர பல்லவன் மற்றும் நந்தா விளக்கின் செவியை எட்டியது, ஆதித்தியன் கடம்பூர் அரண்மனையில் யாழ் களஞ்சியத்தில் மாண்டு கிடந்தான் என்ற செய்தியே..

உயிர் பிரியும் நேரத்திலும் தன் உற்றவளான நேசஅழகியிடத்து உறைய வைத்துவிட்டு வந்த உரையாடல் உதிரத்தில் நிறைந்திருக்குமோ??
*******

பி.கு..
ஆதித்ய கரிகாலனை கொன்றது யார்…

அருள்மொழிவர்மனை தவிர்த்து உத்தமசோழனுக்கு ராச்சியப் பதவிப் பொறுப்பை அளித்தது எதனால்..

இன்னும் பலப்பல விடையில்லா வினாக்களுக்கு விடையாக இருக்கும் இந்த நூல் ‘சங்கதாரா’-ஆசிரியர் ‘காலச்சக்கரம்’ நரசிம்மா..
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#6
Nice 👌👌 👌 pari dear Arumaiyana Tamil nadai அழகான வார்த்தை சேர்ப்பு neenga sonna book onlinela padikka mudiyuma,?
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#10
Wow...akka...👍👍
Nice...ippadi oru sambavam kettathu ila..
I try to read this book...😊😊😊
Thanks Haritha 🙂
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top