பார்வையே ரம்மியமாய் - 6

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#1
பார்வை - 6

வீட்டின் மூன்று மருமகன்களையும் ஒன்றிணைத்து பொள்ளாச்சிக்குக் கிளம்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது பாண்டிக்கு. பிரபாகரன் எதிலும் அவ்வளவாக ஈடுபடாமல் பட்டும் படாமல் விலகி நடக்க, சுந்தரவடிவு ஒவ்வொன்றுக்கும் பாண்டியைத் தான் தேட வேண்டியதாகிப் போனது.

"சித்தி அநேகமா பிரபா கண்ணாலத்துல நான் வழுக்கைத் தலையோடத்தேன் சுத்தப் போறேன் பார்த்துக்க. உன் மூணு மருமகன்களையும் ஒன்னா கூட்டியாந்து நிப்பாட்டுறதுக்குள்ளயும் பிச்சுக்கலாம் போல இருக்குது. இந்தப் பாவம் எல்லாம் உங்களை சும்மா விடாது ஆமா. படுத்துறானுகளே என்னைய" என்று புலம்பித் தீர்த்து விட்டான் பாண்டி.

மூவரும் மூன்று திசைக்கு இழுத்தால் அவனும் தான் என்ன செய்ய முடியும். ஒருவழியாகப் பெண் பார்க்கச் செல்வதற்கான நாளைக் குறித்துப் பின் எதில் பயணம் மேற்கொள்வது என்பதில் ஒரு கலகத்தை சமாளித்து, வாடகைக்கு ஒரு வேனை ஏற்பாடு செய்து கொண்டு குடும்பமாக இன்றுப் புறப்பட்டு விட்டார்கள் பொள்ளாச்சிக்கு.

மூன்று தமக்கைகளும் பாண்டியுடன் சேர்ந்து கொண்டு பிரபாவைக் கிண்டல் செய்து கொண்டே வர எல்லாவற்றுக்கும் புன்னகைதான் பதிலாக வந்தது பிரபாவிடமிருந்து. மீனாவின் புகைப்படத்தை அன்று பார்த்ததோடு சரி. ஒருமுறைப் பார்த்ததற்கே அந்தப் பளிங்கு முகமும் கண்களும் ஆழப் பதிந்து போனது மனதில்.

பிரபாவுக்குப் பெண் பார்ப்பது இது ஒன்றும் முதல் முறையல்ல. ஏற்கனவே இரு முறை மதுரையில் கோவிலில் வைத்து இரண்டுப் பெண்களைப் பார்த்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் தோன்றாத ஒரு விசித்திர உணர்வு இப்பொழுதுத் தன்னை ஆட்டி வைப்பது கொஞ்சம் விந்தையாகத் தான் இருந்தது பிரபாவுக்கு. கண்டதும் காதல், வெளிப்புறத் தோற்றம் இதிலெல்லாம் பெரிதாக எந்த ஈடுபாடோ நம்பிக்கையோ இல்லை பிரபாவினிடத்தில்.

பாண்டி சொன்னது போல நேரில் சென்று பேசிப் பார்ப்போம். ஒத்து வந்தால் திருமணம், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கப்பலும் வேலையும். புகைப்படத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு ஒரு முறை வேலைக்கென்று சென்று விட்டால் கண்ணில் படாதது கருத்திலும் பதியாது என்று நம்பிக் கொண்டிருந்தான்.

திண்டுக்கல், பழனி வழியாகப் பயணம் நீள, பழனி தாண்டியதுமே ஒரு இதமான குளுமை பரவுவதை அனைவராலும் உணர முடிந்தது. காதில் ஹெட்போன் வழியாக இளையராஜா வசியம் செய்ய, கண்களோ எங்கெங்கும் சூழ்ந்திருந்த பசுமையில் இமைக்க மறந்து மயங்கிக் கிடந்தது.

பிரபாவுக்கு மிகவும் பிடித்த வான் நீலத்தோடுப் போட்டி போடுவதுப் போல் பச்சைப் பசேலென்று செழித்து வளர்ந்திருந்த வயல் வெளிகள். இவை இரண்டுக்கும் நடுவில் பாலம் அமைத்ததைப் போன்று ஓங்கி உயர்ந்த மலை முகடுகள். அவற்றின் மேல் அமர்ந்து இளைப்பாறிச் செல்லும் மேகங்கள் என்று பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை பிரபாகரனுக்கு.

பொள்ளாச்சியிலிருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது பூங்குளம். கிராமம் என்றும் சொல்ல முடியாத நகரம் என்றும் சொல்ல முடியாத அளவுக்கு இரண்டும் கலந்த கலவையாக இருந்தது அந்த ஊர். வழியில் ஓரிருவரிடம் வழி கேட்கப் பேரைச் சொன்னதுமே அவர்கள் காட்டிய மரியாதைப் பெண் வீட்டாரின் பெருமையைச் சொல்லாமல் சொன்னது.

தேசிய நெடுஞ்சாலையிலிருந்துப் பிரிந்து இடது புறமாகத் திரும்ப, இரண்டு பக்கமும் சூழ்ந்திருந்தத் தென்னை மரங்களுக்கு நடுவில் சென்று கொண்டிருந்தது அந்தத் தார்ச்சாலை. தென்னை மரங்களின் அணிவகுப்பு முடிந்ததும் தொடங்கியது பாக்கு மரங்களின் அணிவகுப்பு. இப்பொழுது தார்ச்சாலை மறைந்து வண்டி செல்வதற்கு ஏதுவாகத் தானாக அமைந்திருந்த மண் ரோடு தொடங்கியது.

பாதையை ஒட்டி ஒரு சிறு வாய்க்கால் ஒன்று சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. வாய்க்காலில் கூட்டம் கூட்டமாக மணி வாத்துகள் நீந்திக் கொண்டிருந்தன. அனைவருமே அந்த இயற்கைச் சூழலை மனமார ரசித்துக் கொண்டிருக்க அபஸ்வரமாக ஒலித்தது மூத்த மாப்பிள்ளை நடேசனின் குரல்.

"ஏன் அத்த உங்களுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா? இவங்க வீட்டுக்குப் போறதுக்கு ஒழுங்கா ஒரு தார் ரோடு கூட இல்லை. நம்ம பிரபா படிச்ச படிப்பென்ன, வாங்குற சம்பளமென்ன, அவனுக்குப் போயும் போயும் இப்படி ரோடு கூட இல்லாத குக்கிராமத்துலேயா பொண்ணெடுக்கணும்?" என்று நீட்டி முழக்கினார்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்றுத் தெரியாமல் சுந்தரவடிவு விழிக்க, "எலி ஏன் ஏரோபிளேன் ஓட்டுது?" என்றான் பாண்டி.

"என்னடா பாண்டி நக்கலா? நானும் பார்த்துக்கிட்டுதேன் வாரேன். வர வர நீ கொஞ்சம் ஓவராத்தேன் போயிக்கிட்டிருக்க" மீசையை முறுக்கிக் கொண்டதோடு நில்லாமல் தானும் முறுக்கிக் கொண்டார் அவ்வீட்டினுடைய மூத்த மாப்பிள்ளை.

"ஐய மாமா நான் உங்களைச் சொன்னேன்டு நெனச்சீகளா? இந்தா உங்க மகேன் ஏதோ வெளாடுறானே, அதைத்தேன் சொன்னேன். இந்தா வேணுமென்டா நீங்க கூட பார்த்துக்கிடுங்க. டேய் அந்த செல்லு போனை உங்கப்பாக்கிட்ட காமிடா" என்றதும் ஒருவேளை உண்மையாகத்தான் சொல்கிறானோ என்று யோசிக்கத் தொடங்கிவிட்டது மூத்த சமூகம்.

யோசனையினூடே வீட்டை நெருங்க இப்பொழுது ஆரம்பித்தது மூன்றாவது மாப்பிள்ளை. "நாமெல்லாம் காரை வீட்ல இருக்கோம். போயும் போயும் ஓட்டு வீட்டுலயா பொண்ணெடுக்குறது?" என்று அவர் பங்குக்கு கொஞ்சம் திருப்ப,

"ம்க்கூம்... இங்கனயாவது இம்பூட்டுப் பெரிய வீடு இருக்குது. எங்கக்காளைக் கட்டிக் கொடுக்குறதுக்கு முன்னாடி மாப்பிள்ளை வீடு பார்க்க வந்தப்ப வீட்டையே காணோமேன்டு நானும் பிரபாவும் அலைஞ்சது எங்களுக்குத்தானே தெரியும்" என்று கூறிய பாண்டி அவர் பதில் கூறுவதற்கு முன்,

"வந்தாச்சு, வந்தாச்சு எல்லாரும் இறங்குங்கப்பா ஏய்" என்று கூவிக் கொண்டே தான் முன்னதாக வண்டியில் இருந்து இறங்கித் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான்.

"இந்த பக்கமெல்லாம் இதைத் தாங்க மச்சு வீடென்டு சொல்லுவாக. பெரிய பணக்காரவுக மட்டுந்தேன் இப்புடி வீட்டுல இருப்பாக. எதுவும் தெரிஞ்சா பேசுங்க. இப்படி என்னத்தையாவதுப் பேசி மானத்தை வாங்காதீக" என்று ரகசியமாகத் தன் கணவரைக் கடிந்து கொண்டார் மூன்றாவது அக்கா சொர்ணம்.

ஏனோ இரண்டாமவர் மட்டும் எதிலும் ஈடுபடாமல் கொஞ்சம் சிந்தனை வசப்பட்டவராகவே சுத்திக் கொண்டிருந்தார். அவரின் மீதே தன் மொத்த கவனத்தையும் குவித்து அவரைத் தொடர்ந்து கொண்டிருந்தார் இரண்டாவது அக்கா தனம்.

வீட்டைப் பற்றியும் ரோட்டைப் பற்றியும் குறை கூறிய இரண்டு சமூகமும் அங்கு வீட்டு வாசலில் ஏற்கனவே வந்து நின்றிருந்த சில பல ஆடிக்களையும் பி.எம்.டபிள்யூக்களையும் பார்த்து ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தனர்.

முறைப்படி குமரப்பன் லலிதா தம்பதியினர் முகிலோடு இணைந்து வந்து வாசலிலேயே இவர்களை எதிர்கொண்டு மரியாதையோடு உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஆலிவ் க்ரீன் நிறப் பட்டுடுத்தி காதிலும் மூக்கிலும் வைரங்கள் ஜொலி ஜொலிக்க இரு கரம் கூப்பி இவர்களை வரவேற்ற கோதையம்மாளைப் பார்த்ததுமே மரியாதையுடன் கூடிய பிரமிப்பு பிரபா வீட்டினர் அனைவருக்கும் உதயமானது.

சிறு குழந்தைகளைக் கூட விட்டுவைக்காமல், "வா கண்ணு", "வா சாமி" என்று அன்போடு வரவேற்ற விதமே மதுரைக்காரர்கள் அனைவரையும் பாரபட்சமின்றிக் கவர்ந்தது.

நல்ல நீள அகலத்தோடு வெளியே இரண்டு திண்ணைகள், அதற்கடுத்து வெராண்டா போன்றொரு இடம் அதையும் கடந்தால் நடுவில் முற்றத்துடன் நாற்புறமும் அறைகள் சூழ விசாலமாகக் கட்டப்பட்ட குட்டி அரண்மனை அது. கீழேயே மொத்தமாக நான்கு அறைகள் இருந்தன. பூஜையறையும் சமையலறையும் மட்டுமே தனித்து தெரிந்தது. மற்றதை வகைப்படுத்த முடியவில்லை.

அங்கேயே ஒரு மூலையில் மாடிக்கான படிக்கட்டுகள் செல்ல மேலேயும் இதே போன்ற அமைப்பு இருக்குமோ என்று எண்ணிக் கொண்டான் பிரபா. இது மட்டுமல்லாமல் பிரபா மனதில் ஏகப்பட்ட கேள்விகள் குடி கொண்டிருந்தன. எல்லாமே அவர்களின் தென்னை மற்றும் பாக்கு மரங்களைப் பார்த்தபின் அவர்களுடைய விவசாய முறைகள் குறித்து உருவான சந்தேகங்கள். யாரிடம் கேட்பது என்று தெரியாமல் அமர்ந்திருந்தான் பிரபா.

இவர்கள் வந்து சேர்ந்து நேரம் சரியாக மாலை ஐந்து மணி. முதலில் பிராயணக் களைப்பு போவதற்காகவும் அந்த சூட்டைத் தணிப்பதற்காகவும் இனிப்பு சேர்க்கப்பட்ட வெள்ளரிப்பழம் சிறிய கிண்ணங்களில் வழங்கப்பட்டது. அடுத்துப் பொதுவாக அனைவரையும் அறிமுகப்படுத்தும் படலம் தொடங்கியது. இரு தரப்பினரும் அறிமுகப்படலம் முடித்ததும் சுடச்சுட கேசரியும் வடையும் பரிமாறப்பட்டது.

முதலில் பெண்ணைப் பார்த்து விடலாமே என்று சுந்தரவடிவு கேட்க, "ஏங்கண்ணு அப்படிச் சொல்லிப் போட்ட? எப்படியிருந்தாலும் மாணிக்கம் தம்பி வகையில நாம எல்லாம் உறம்பிர தானே கண்ணு. அதால எல்லாரும் சாப்பிடுங்க முதல்ல" என்று கோதையம்மாள் கூறிவிட யாராலும் மறுத்துக் கூற முடியாமல் போனது.

மீனலோசினி மாடியில் தன்னறையில் இருந்தவாறே ஜன்னல் வழியாகக் கீழே நடப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். சரியாக அவள் கண்ணில் படுமாறு பிரபாவை அமர வைத்திருந்தான் முகிலன். ஆகாய நீல வண்ணத்தில் டிஷர்ட்டும் கறுப்பு நிற ஜீன்ஸ்சும் அணிந்து எந்தப் பந்தாவும் இல்லாமல் இயல்பானப் புன்னகையுடன் அமர்ந்திருப்பவனைப் பார்த்ததும் கொஞ்சம் பிடித்துத் தான் போனது மீனாவுக்கு.

புகைப்படத்தைவிட நேரில் ஆள் இன்னும் கொஞ்சம் அம்சமாகவே இருப்பது போல் தோன்றியது. 'மதுரையிலிருந்து மதுரை வீரன் கணக்கா வருவாங்கன்னு பார்த்தா இவங்க மேடி மாதிரி இல்ல வந்திருக்காங்க' என்று எண்ணிக் கொண்டவள், அவனை நிமிர்ந்து பார்க்கவே கூடாதென்று மனதோடு உருப்போட்டுக் கொண்டாள்.

கோதையம்மாள் தலையசைக்க லலிதா சென்று அவருடைய ஆசை மகளை அழைத்து வந்தார். பட்டுப் புடவை எல்லாம் அணியாமல் ஆகாய நீலத்தில் அடர் நீல நிறத்தில் பார்டர் போட்டது போல ஒரு டிசைனர் புடவையைத்தான் அணிந்து வந்தாள் பெண். ஒப்பனையும் சரி, நகைகளும் சரி மிகவும் எளிமையாகவே கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.
617DCA83-9254-4382-B940-D6DB39B42FD3.jpeg
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#2
"ஆத்தீ இந்தப் புள்ள காலைப் பார்த்தாலே பொட்டு வைக்கலாம் போல இருக்கு. இந்தப் புள்ள நம்ம ஊர் வெயில்ல எல்லாம் வந்து இருக்குமாக்கா" என்று தனக்கருகில் அமர்ந்திருந்த தமக்கைகளின் கிசுகிசுப்பைக் கேட்டுத்தான் தலை நிமிர்த்திப் பார்த்தான் பிரபா.

அவள் தலை குனிந்து நின்ற தோற்றம், இரு தாமரை இதழ்கள் இமைகளாக மாறி கண்களை மூடியிருப்பது போல் தோன்றியது பிரபாவுக்கு. பின்னலில் சூட்டப்பட்டிருந்த குண்டு மல்லியின் சரங்களில் ஒன்றிரண்டு முன்புறம் வந்து விழுந்திருக்கக் கழுத்தில் மெல்லியதாக ஒற்றைச் சங்கிலி மட்டுமே.

அதிலிருந்த ப்ளூ சபையர் அவ்வப்பொழுது ஜொலித்துத் தன்னுடைய மதிப்பை சொல்லாமல் சொல்லிக் கொண்டது. இரு கைகளிலும் நான்கைந்து மெல்லிய தங்க வளையல்கள். மொத்தமாகவே இவைகளை மட்டும் தான் அணிந்திருந்தாள் மீனா. எந்தவித ஒப்பனையும் இல்லாமலே அழகாக இருப்பவள் இதிலெல்லாம் அவ்வளவாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது இயல்புதானே.

'கண்ணிமையில் தூண்டிலிட்டுக்

காதல் தனைத் தூண்டி விட்டு

எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழையே'

சத்தமில்லாமல் வந்து பிரபாவின் மனதோடு இசையமைத்துப் போனார் இளையராஜா. இமைக்க மறந்துப் பார்த்திருந்தான் பாவையை.

"இங்கன வாம்மா" என்று கூறி மீனாவைத் தன்னருகில் அமர்த்திக் கொண்டார் சுந்தரவடிவு. "அழகா இருக்க தாயீ" என்று கூறி கள்ளங்கபடமில்லாமல் தனக்குத் திருஷ்டிக் கழிக்கும் அந்த வெள்ளந்திப் பெண்மணியை முதல் சந்திப்பிலேயே மிகவும் பிடித்துப் போனது மீனாவிற்கு.

அவளிடமும் ஒருமுறைத் தன்னுடைய மகள்கள் மருமகன்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார் பேரன் பேத்திகள் உட்பட. ஒவ்வொருவரை அறிமுகப்படுத்தும் பொழுதும் நிமிர்ந்து பார்த்து சிறு புன்னகையைத் தந்தவள் பிரபாவைப் பற்றிச் சொல்லும் பொழுது மறந்தும் கூட நிமிர்ந்துப் பார்க்கவில்லை.

முகிலன் சென்று கோதையம்மாளின் காதைக் கடிக்க, "இப்படி நாம எல்லாரும் சுத்தி இருந்தா இவிய ரெண்டு பேரும் பார்த்துக்க கூட மாட்டாங்க. ரெண்டு பேரும் கொஞ்சம் தனியா போய் பேசிட்டு வரச் சொல்லாங்களா?" என்று சுந்தரவடிவிடம் நேரிடையாகவே கேட்டார் கோதை.

"தாராளமா போய் பேசிட்டு வரட்டுங்கம்மா" என்று சுந்தரவடிவும் உடனடியாக சம்மதத்தைத் தெரிவித்துவிட்டார்.

"நெம்ப சந்தோஷம் கண்ணு. அப்புறஞ்சாமி, நான் உனக்கு அத்தை முறையாகோணும், மொறைய மாத்திப் புடாத கண்ணு" என்று கூறி நலுங்காமல் சிரிக்கும் அந்த வயதானப் பெண்மணியை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்.

முற்றத்துக்கு எதிரில் இருந்த ஒரு அறைக்குப் பிரபாவைக் கூட்டிச் சென்றான் முகில். அவர்களைப் பின்தொடர்ந்து மீனா சென்றாள். முதலில் பிரபாவும் முகிலுமே தங்களுடைய படிப்பு குறித்துக் கொஞ்ச நேரம் வளவளத்துக் கொண்டிருந்தார்கள். வாய் முகிலோடு பேசிக் கொண்டிருந்தாலும் கண்கள் எதிரில் அமர்ந்திருக்கும் பாவையை நொடிக்கொரு தரம் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது.

தலை குனிந்திருந்தாலும் மீனாவும் அதை உணரவே செய்தாள். இதுவே தொடர, "நீங்க பேசிக்கிட்டிருங்க். நான் இப்ப வந்துடுறேனுங்க்" என்று சொல்லிவிட்டு முகிலன் நாசூக்காக வெளிநடப்பு செய்ய,

"தைரியம் வந்துடுச்சுங்களா மீனலோசினி? இப்பவாவது என்னை நிமிர்ந்துப் பார்த்துப் பேசுவீங்களா?" என்று பேச்சைத் தொடங்கி வைத்தான் பிரபாகரன்.

"என்ர வூட்டுக்குள்ளார எனக்கென்னங்க் பயம்" என்று கூறி முதல் முறையாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் மீனா. அந்தக் கண்களில் குடியேறி விடத் துடித்த மனத்தை அடக்கியவாறே,

"உங்களுக்குப் பயமில்லாமலா உங்க தம்பி இவ்வளவு நேரம் இங்க இருந்தாரு" உதட்டை மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டு வினவினான் பிரபாகரன்.

"எனக்கு ஒன்னும் பயமெல்லாம் இல்லீங்க். நேத்து மாணிக்கம் சித்தப்பா போன்ல சில விஷயம் சொன்னாருங்க். நீங்க கனடாவுக்கு வேலைக்குப் போகப் போறதா. எனக்கு அப்படி வெளிநாட்டுக்கு வாரதுல எல்லாம் விருப்பம் இல்லீங்க்.

என்னால எங்க வீட்டாளுங்களை விட்டுப் போட்டு, இந்தத் தோட்டம், மாடு, கன்னு இதையெல்லாம் விட்டுப் போட்டு அம்புட்டுத் தொலைவு வந்து இருக்க முடியாதுங்கோ. என்ர வூட்ல அல்லாத்துக்கும் நீங்க வெளிநாடு வேலைக்குப் போறதுல சந்தோஷமுங்க. என்னைத் தவிர.

அதால நீங்களே என்னை புடிக்கலைன்னு சொல்லிச் சொல்லிடுங்க். அவ்வளவுதானுங்க விசயம்" படபடவென்று அனைத்தையும் கொட்டி விட்டாள் மீனா.

"ஆக ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புடிக்கலையென்டு சொல்லத்தேன் இருந்திருக்கோம்" என்று கூறிச் சிரித்தான் பிரபா.

"நீங்க ஏனுங்க்..." எப்படிக் கேட்பது என்று தயங்கியவள் "யாராவது லவ்?" என்று கேள்வியாக நிறுத்தினாள்.

"அதெல்லாம் இல்லங்க" என்று பிரபா சொல்லவும் மனதோடு ஒரு இதம் பரவுவதை நன்றாகவே உணர்ந்தாள் மீனா.

"பின்ன வேற என்ன காரணமுங்க்?"

"அம்மா நீங்க ரொம்பப் பெரிய வீட்டுப் பொண்ணுன்னு சொன்னாங்க. எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயம் பண்றதுதான்ங்க கனவு லட்சியம் எல்லாமே. நடுவுல பணப் பிரச்சனை, அக்காங்க கல்யாணம் இதுக்காகவெல்லாந்தேன் நான் இந்த வேலைக்கு இன்னும் போயிக்கிட்டிருக்கேங்க.

இன்னும் ரெண்டு வருஷம் தான்ங்க இந்த வேலை. அதுக்குள்ளாற நான் எதிர்பார்க்குற அளவு பணத்தை சேர்த்துட்டு வேலையை விட்டுட்டு நிலம் வாங்கி விவசாயம் பண்றது அப்படின்னு முடிவு பண்ணியிருக்கேங்க.

நீங்க ரொம்பப் பெரிய இடமா... அதேன் நீங்க எப்படி என் கூட என் லட்சியத்தை அனுசரிச்சுப் போவீங்கன்னு யோசிச்சு தள்ளித் தள்ளிப் போட்டுக்கிட்டு இருந்தேங்க. எங்க அம்மா இந்தாட்டி விடாப்பிடியா புடிச்சுக் கூட்டிட்டு வந்துட்டாங்க" தன் நிலையைக் கூறி முடித்தான் பிரபா.

"பெரிய வூட்டுப் பிள்ளைங்கெல்லாம் வேலை செய்ய மாட்டாங்கன்னு உங்க கிட்ட ஆருங்க சொன்னது?"

"இல்லீங்க நீங்க வேற போட்டோவுல தேவதை கணக்கா அம்பூட்டு அழகா இருந்தீங்களா..." மேற்கொண்டு பிரபா பேசுவதற்குள் இடையிட்டாள் மீனா.

"போட்டோவுல அழகா இருந்தேன்னா அப்போ நேர்ல அழகா இல்லீங்களா" கேட்ட பிறகே தன் கேள்வியின் அர்த்தம் விளங்கியது மீனாவுக்கு. கண்களைச் சுருக்கிக் கொண்டு உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

அவள் முக பாவனைகளை ரசித்துப் பார்த்தவன், "அப்போ ஓகே சொல்லிடலாங்களா?" என்று மீனாவிடமே திருப்பிக் கேட்க, இம்முறை நிஜமாகவே வெட்கப்பட்டுத் தலைக் கவிழ்ந்தாள் பெண். அந்த வெட்கத்தை ரசிக்க விடாமல் அதற்குள்ளாக பிரபாவை அழைத்து விட்டார்கள் அவன் வீட்டார்.

அறையிலிருந்து வெளிவந்த இருவரது மலர்ந்த முகமுமே சம்மதத்தைச் சொல்லாமல் சொல்ல, மேற்கொண்டுப் பேசலாமா என்று குமரப்பன் கேட்டார்.

"அதெப்படிங்க? நாங்க ஊருக்குப் போயிட்டு எல்லாரும் கலந்து பேசிட்டு உங்களுக்குத் தாக்கல் சொல்றோங்க" என்று சரியான நேரத்தில் கட்டையைப் போட்டார் இரண்டாவது அக்கா தனத்தின் கணவர்.

அவருடைய இந்தப் பதிலில் பெண் வீட்டாரின் முகம் கொஞ்சம் விருப்பமின்மையை காட்டியது. அதிலும் மீனாவின் முகம் சட்டென வாடிவிட்டது. அதைக் காணப் பொறுக்காதவனாக பாண்டியின் காதோடு ஏதோ ரகசியமாகப் பேசி அவனை அனுப்பிவிட்டுத் தன் அலைப்பேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தான் பிரபா.

சுந்தரவடிவும் வேறு வழியின்றி அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்ப, வாசலில் திண்ணையில் அமர்ந்த பிரபா தன்னுடைய ஷூவை மாட்டினான், மாட்டினான் மாட்டிக் கொண்டே இருந்தான் வெகு நேரமாக.

நேரமாவதைத் தொடர்ந்து மீனாவும் கூட வெளியில் வந்து முகிலின் பின்புறம் மறைந்தவாறு நின்றுப் பார்த்தாள். அந்நேரம் பார்த்து சரியாக ஒலித்தது பிரபாவின் அலைப்பேசி.

'சொக்குப் பொடி மீனாட்சி

சொக்க நாதன் நான்தான்டி'

இந்த இரண்டு வரிகள் மட்டுமே ரிங் டோனாகத் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருக்க, பிரபாவோ அலைப்பேசியை எடுத்துப் பேசுவதாகத் தெரியவில்லை. அங்கிருந்த அனைவரையும் ஒரு நொடிப் பார்த்தவன் மீனாவிடம் மட்டும் புருவம் உயர்த்தி சில நொடிகள் தாமதித்தது அவன் பார்வை. இறுதியாகத் தன் அன்னை சுந்தரவடிவிடம் வந்த பிரபாவின் விழிகள் ஏதோ சொல்ல அதன் அர்த்தம் புரிந்தவராய்,

"அதேன் என் மவனே சொல்லிட்டானே இதுக்கு மேல நாங்க கலந்துப் பேச என்ன இருக்கு. உங்களுக்கு சம்மதமென்டா இப்போவே மேற்கொண்டு பேசிடலாங்க அத்தை" என்று கோதையிடம் சொல்லிவிட்டார் சுந்தரவடிவு.

"நெம்ப சந்தோசம்மா. எல்லாரும் உள்ர வாங்க" என்று கூறியபடியே கோதை முன் செல்ல, அதுவரை மாட்டுவதாகப் பேர் பண்ணிக் கொண்டிருந்த ஷூவை நொடியில் கழட்டி விட்டு அவரை முதல் ஆளாகப் பின் தொடர்ந்தான் பிரபா.

அதன் பிறகு பேச்சு வார்த்தை துரித கதியில் நடைபெற, திருமணத்திற்கான நாளைக் குறிக்கும் பொறுப்பை கோதையம்மாளிடமே விட்டுவிட்டு மதுரைக்குக் கிளம்பினார்கள் பிரபா குடும்பத்தினர்.

இட்லி, இரண்டு வகை சந்தகை, பலாப்பழ பாயாசம் என்று தடபுடலாக ஒரு விருந்து வைத்த பிறகே அவர்களை மன நிறைவோடு அனுப்பி வைத்தனர் லலிதா குமரப்பன் தம்பதியினர். இம்முறை அனைவரின் முன்னிலையிலும் மீனாவிடம் சொல்லிக் கொண்டுப் பதிலாக அவளின் வெட்கம் கலந்த தலையாட்டலையும் பெற்றுக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான் பிரபாகரன்.
 
Last edited:

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#6
பொண்ணு பாத்தாச்சு..... சம்மதம் சொல்லியாச்சு..... ரொம்ப அழகா இருக்கு பொண்ணு வீடு.... சூப்பர்.... 👌👌👌👌👌👌👌
மிக்க நன்றி 😍😍😍
 

Sponsored

Advertisements

Top