• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பார்வையே ரம்மியமாய் - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பார்வை - 8

பட்டின் சுகம் வெல்லும் விரல்

மெட்டின் சுகம் சொல்லும் குரல்

எட்டித் தொட நிற்கும் அவள் எதிரே எதிரே

பிள்ளை மொழிச் சொல்லை விட

ஒற்றைப் பனைக் கள்ளை விட

போதை தரும் காதல் வர

தொலைந்தேன்... தொலைந்தேன்... என்று அவர்கள் காதலில் தொலைந்தே போயினர் பிரபாகரனும் மீனலோசினியும். நாட்கள் மிக இனிமையாக நகர இருவரும் அலைப்பேசியில் பேசியே தங்கள் காதல் பயிரை வளர்த்துக் கொண்டனர்.

பிரபா, மீனாவிடம் மட்டுமல்லாது குமரப்பன், லலிதா, முகில் என்று அனைவரிடமும் அவ்வப்பொழுது பேசி விடுவான். அதிலும் குறிப்பாகக் கோதையம்மாளிடம் நாள் தவறாது பேசிவிடுவான். தன்னுடையே அப்பத்தாளே மீண்டும் கிடைத்தது போல் அவ்வளவு சந்தோஷம் பிரபாகரனுக்கு. மீனாவே சில சமயங்களில் பொறாமைப்படும் அளவுக்கு நீண்டு கொண்டு இருந்தது அவர்களின் உரையாடலகள்.

"அம்மத்தா இன்னிக்கு சேவ கரெக்ட் டைமுக்கு கூவிருச்சுங்க்ளா" என்று மீனாவும்,

"எனக்கு கூவிருச்சு கண்ணு உனக்கு?" என்று கோதையும், இவ்வாறு இருவரும் அடிக்கடிக் கேட்டு ஹைபை கொடுத்துக் கொள்வார்கள்.

வெயில் என்றும் பாராமல் மழை என்றும் பாராமல் மொட்டை மாடியே கதி என்று இருந்தான் பிரபாகரன். அவனுக்குத் தான் அங்கு வீட்டில் ஒழுங்காக சிக்னல் கிடைக்காதே. 'டவர் வைச்சிருந்தா இவ்வளவு கஷ்டம் வந்திருக்குமா' என்று மூத்த மாமாவின் முணுமுணுப்பை வேறு அடிக்கடி கடக்க வேண்டியிருந்தது.

மூன்று மாப்பிள்ளைகளும் ஒருவாறு அவர்களது மனைவிகளால் கிட்டத்தட்ட எச்சரிக்கப்பட்டு இருந்தார்கள் முதல் முறையாக. "இங்காருங்க என் தம்பி எங்க மூணு பேருக்காக இது வரைக்கும் எவ்வளவோ விசயத்தைப் பொறுத்துப் போயிருக்கான். பணத்தைப் பண்மென்டுப் பார்க்காம உங்களுக்காகத் தாராளமா செலவு பண்ணியிருக்கான்.

மொத மொறையா அவென் ஒரு விசயத்துல ஆர்வமா இருக்கான். அதை நல்லபடியா அவனுக்கு முடிச்சுக் கொடுக்க வேண்டியது கூடப் பொறந்தவுகளா எங்கக் கடமை, பொறுப்பு. எங்களோட புருஷனெங்குற முறையில உங்களுந்தேன் அந்தப் பொறுப்பு இருக்கு. அதால இந்த கண்ணாலத்தை எங்க அம்மாவுக்குத் துணையா முன்ன நின்டு நல்லபடியா முடிச்சுக் கொடுங்க.

இதுல எதாவது உங்க மூணு பேரால சிக்கல் வந்ததா தெரிஞ்சுது, அப்புறம் நல்லாயிருக்காது பார்த்துக்கிடுங்க" என்று மூன்று தமக்கைகளும் தங்களது கணவன்மார்களுக்குத் தனித்தனியாக வேப்பிலை அடித்திருந்தார்கள். அதற்குப் பலனும் இருந்தது.

மாப்பிள்ளை மூவருக்குக் கூட இந்தத் திருமணத்தில் பெரிதாகக் குறை கூற ஒரு விஷயமும் இருப்பதாகத் தெரியவில்லை. பொள்ளாச்சியில் அவர்களுக்குக் கிடைத்த மரியாதையே அவர்களை வாயடைத்துப் போகச் செய்திருந்தது. அதனால் தற்சமயத்துக்கு தங்களது மனைவிகளின் பேச்சைக் கேட்டே நடப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.

பிரபா அளவுக்கு இல்லாவிடிலும் மீனாவும் அவ்வப்பொழுது பிரபாவின் தமக்கைகளிடமும் அவர்களின் கணவர்களிடம் அலைப்பேசியில் உரையாடிக் கொண்டுதான் இருந்தாள். பிள்ளைகளுக்கு கணக்கு டியூஷன் கூட சமயத்தில் நடந்தது. மீனாவுடைய பாசமான மற்றும் மரியாதையான பேச்சும் கூட இவர்களின் இந்த முடிவுக்குக் காரணம் எனலாம்.

எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க, ஒப்புத் தாம்பூலம் மாற்றுவதற்காக பெண் வீட்டினர் மதுரைக்கு வந்தார்கள். பிரபா எவ்வளவோ முயன்றும் மீனாவை வரவழைக்க முடியவில்லை. அதில் கொஞ்சமல்ல ரொம்பவே வருத்தம் பிரபாவுக்கு.

இந்நிகழ்ச்சி முடிந்த கையோடு இன்னும் ஒரு வாரத்தில் அவன் வேலைக்காக லண்டன் சென்றாக வேண்டும். அங்கிருந்து தான் இம்முறை அவனுடைய பணி தொடங்குகிறது. அதற்கு முன்பாக மீனாவை ஒரு முறை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று அவன் கொண்ட பேராவலை சம்பிரதாயம் என்ற பெயரில் அடக்கி விட்டனர் இரு வீட்டாரும் இணைந்து.

கோதையம்மாள், குமரப்பன், லலிதா, முகில், இவர்களுடன் இணைந்து அவர்களின் மிகவும் நெருக்கமான உறவுகள் சில பேர் என்று ஒரு இருபது பேர் மதுரைக்கு வந்தார்கள். அனைவருக்குமே பிரபாவின் வீட்டையும் மனிதர்களையும் மிகவும் பிடித்திருந்தது.

அனைத்துமே யாருடைய தயவும் இல்லாமல் சுந்தரவடிவு மற்றும் பிரபாவின் உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி எனும் பொழுது அவர்களின் மகிழ்ச்சி இரு மடங்கானது. எந்தத் தயக்கமும் இன்றி அவர்களைத் தன்னுடைய உணவு விடுதிக்கும் அழைத்துச் சென்று காண்பித்தார் சுந்தரவடிவு.

அங்கிருந்த உணவு வகைகளைப் பார்த்து கொங்கு நாட்டவருக்கு ஆச்சரியமே. "ஏனுங்க்கா மதுரைனாலே பரோட்டா தானுங்களே விசேசமே. அது உங்க கடையில இல்லீங்க்ளா?" ஆச்சரியமாகக் கேட்டார் உறவுமுறைப் பெண் ஒருவர்.

"அதெல்லாம் செய்யக் கூடாதென்டு எங்க அத்தை உத்தரவும்மா. அவுக இப்ப இல்லையென்டாலும் அவுக வார்த்தையை என்னால என்னிக்குமே மீற முடியாது தாயீ. சாப்பாட்டுக் கடை வைச்சிருக்கவுக தன் கடையில சாப்பிட வாரவுக வவுத்துக்கு ஒரு நாளுந் துரோகஞ் செய்யக் கூடாதென்டு அடிக்கடி சொல்லுவாக. அவுக யோசனைப்படி இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பமென்டு எல்லாமே வயித்துக்குக் கேடு விளைவிக்காத உணவு வகைதேன் நம்ம கடையில.

காலைலைக்கும் ரவைக்கும் மட்டுந்தானுங்களே. நம்ம கடையில ஃபேமசானதென்டா இட்லியும் மீன் குழம்புந்தேன்.

'சாப்புட வாரவுக வாய் வாழ்த்தலையென்டாலும் அவுக வவுறு கண்டிப்பா வாழ்த்துமென்டு' எங்க அத்த அடிக்கடி சொல்லுவாக. இதுல காசு வாரது குறைச்சதேன், ஆனாலும் இதுல கிடைக்குற மனத்திருப்தி... எங்களுக்கு அதுவே போதுமென்டு தோனிடுச்சும்மா" சிரித்துக் கொண்டே சொல்லி முடித்தார் சுந்தரவடிவு.

அந்த ஆத்மார்த்தமான புன்னகை எப்படிச் சாத்தியப்பட்டது என்பது அங்கிருந்த அனைவருக்குமே நன்கு புரிந்தது. அந்தப் புரிதல் நல்லதொரு அபிமானமாக வளரவும் செய்தது.

"ஒரு நாளைக்கு நூத்துக்கணக்குல பரோட்டோ போட்டுக்கிட்டு பரோட்டா மாஸ்டரா இருந்த என்னை இப்படித் தோசை மாஸ்டரா ஆக்கிட்டாங்கம்மா" சிரித்துக் கொண்டே புகார் படித்தார் அங்கு தோசை ஊற்றிக் கொண்டிருந்த நபர்.

"ம்க்கூம் அதுனாலதேன் எங்க மாஸ்டர் ஊத்துற தோசையெல்லாம் பரோட்டா சைசுலேயே வருது" என்று அவருக்குப் பதில் கொடுத்தான் பாண்டி. இவ்வாறுப் பேசிக் கொண்டே அவர்கள் இருவரும் அவர்கள் வேலையைப் பார்க்கப் போயினர். பெண் வீட்டினரும் திருப்தியுடன் ஒப்புத் தாம்பூலம் மாற்றிவிட்டுப் பொள்ளாச்சிக்குத் திரும்பினார்கள்.

குமரப்பனுக்குத் தன்னுடைய சொந்தக் காலில் உழைத்து முன்னேறித் தாயையும் தமக்கைகளையும் எந்த ஒரு குறையுமில்லாமல் பார்த்துக் கொள்ளும் மருமகனை நினைத்துப் பெருமையோ பெருமை. பிரபா தன்னுடைய எதிர்காலத் திட்டம் குறித்தெல்லாம் தெளிவாக அவரிடம் பேசியிருந்தான். அதிலும் அவருக்குப் பெருமைதான்.

கோதையம்மாளுக்கும் லலிதாவுக்கும் சுந்தரவடிவை மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பெண்மணியை நம்பித் தாராளமாகத் தங்கள் பெண்ணைக் கொடுக்கலாம் என்று முடிவே செய்திருந்தார்கள்.

பூங்குளத்தில் கிளம்பியதிலிருந்து அனைத்தையும் தன் தமக்கைக்கு லைவ் டெலிகாஸ்ட் செய்யும் வேலையை மட்டுமே செவ்வனே செய்து கொண்டிருந்தான் முகில். அவனுடைய பேச்சு முழுவதும் பிரபாவின் லண்டன் பயணத்தைப் பற்றியும், அங்கு சென்று அவன் ஏறப் போகும் கப்பல் பற்றியும் அது செல்லும் இடங்களைப் பற்றியுமே இருந்தது. அவனின் ஒவ்வொரு கேள்விக்கும் சளைக்காமல் பதில் சொல்லியிருந்தான் பிரபா.

ஊருக்குத் திரும்பும் வழியில் கோதையம்மாளின் தம்பி முறை உறவுக்காரர் ஒருவர், "ஏனுங்க்கா நம்ம தகுதிக்கு ஏத்த எடம் போலத் தெரியலீங்களே" என்று ஒரு மாதிரியாக இழுக்க,

"எந்த விதத்துல தம்பி அவங்க குறைஞ்சு போயிட்டாங்க? இப்போ நாம தோட்டம், தொறவு, காடு, கரை எல்லாங் கட்டி ஆளுறோமுன்னா இதெல்லாம் நமக்கு முன்னாடி இருந்தவங்க உருவாக்குனது தானே. அதை நாம பெருக்குற வேலையை மட்டும் தானே செய்யிறோம்.

பிரபா தங்கம் அப்படிக் கிடையாது. இப்ப வந்திருக்குற வளர்ச்சி அவங்க சொந்த உழைப்பு, முயற்சி. அதோட நல்ல குணத்துக்கும், உழைப்புக்கும் இன்னும் பெரிய எடத்துக்குப் போவோணும் அந்தத் தம்பி.

காசு என்ன கண்ணு பெரிய காசு. நம்ம கிட்ட இல்லாததா? மனுசனுக்குத் தேவை குணமும், உழைக்கோணுங்குற வேகமும் தான். இது ரெண்டுமே பிரபா தம்பிக்கிட்ட நெம்ப இருக்குது.

அதுவுமில்லாம நம்ம மீனாளுக்கும் பிரபா தம்பியை நெம்பப் பிடிச்சிருக்குது. இதை விட வேற என்ன கண்ணு வோணும்?" என்று ஒரே போடாகப் போட்டு அடக்கிவிட்டிருந்தார் கோதை.

********************

பிரபா மறுநாள் சென்னையிலிருந்து லண்டனுக்கு விமானம் மூலமாகச் செல்வதாக ஏற்பாடு. அதனால் வழக்கம் போல் தன்னுடைய பிரயாணத்துக்குத் தேவையானவற்றைப் பேக் செய்யும் வேலையில் கொஞ்சம் பிசியாக இருந்தான். இரண்டு நாட்களாகவே வேலை அதிகம். மீனாவிடம் எப்பொழுதும் போல் உரையாட முடியவில்லை. இன்று இரவு கண்டிப்பாக அழைப்பதாகச் சொல்லி இருந்தான். அதற்காகக் கொஞ்சம் விரைவாக வேலைகளை முடித்துக் கொண்டிருந்தான்.

எப்பொழுதடா வேலை முடியும் என்று காத்திருந்துவிட்டு வேலைகளை முடித்தக் கையோடு அலைப்பேசியைத் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றுவிட்டான் பிரபா. அம்மா, அக்கா, பாண்டி யாருடைய கேலியும் அவனைச் சென்றடையவே இல்லை.

எப்பொழுதும் பிரபா அழைக்கும் பொழுது 'மாமா' என்று உற்சாகமாகப் பதில் வரும் இடத்தில் இன்று வெறும் 'ம்ம்ம்' மட்டுமே வந்தது.

"ஓய் சொக்குப்பொடி, ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருந்தியாடா? எல்லா வேலையும் முடிச்சிட்டு வர லேட்டாயிடுச்சுடா. இனி நாளைக்கு பூரா ஃப்ரீதான். உன்கிட்ட பேசுறது மட்டுந்தேன் நாளைக்கு என் வேலை. சரியாடா மினிக்குட்டி. இப்ப கோவம் போயிடுச்சா என் மினிக்குட்டிக்கு? மாமாகிட்ட பேசலாமே" என்று கொஞ்சிக் கொண்டிருந்தான் பிரபா.

பிரபா இவ்வளவு பேசியதற்கும் பதிலாக வெறும் "ம்ம்ம்" மட்டும் தான் பதிலாக வந்ததுப் பெண்ணிடமிருந்து.

"என்னடா"

"ம்ம்ம்"

"எதாவது பேசுடா. என்னாச்சு என் சொக்குப்பொடிக்கு?"

"ம்ம்ம்"

"மாமா எதாவது உனக்குப் புடிக்காததை செஞ்சுட்டேனா? மாமா மேல கோவமா இருக்கியா?"

இப்பொழுது 'ம்ம்ம்' மாறி "ம்ஹூம்" வந்தது. ஏதோ ஒன்று சரியில்லாததுப் போல் தோன்ற, "மினிக்குட்டி அழறியாடா?" என்றுப் பதறிப் போனவனாக வினவினான் பிரபா. இந்தக் கேள்விக்குப் பதிலாக மௌனமே வந்தது பெண்ணிடமிருந்து.

"எதாவது சொல்லுடா. இப்படிப் பேசாமயே இருந்தா நான் என்ன நினைக்கிறது? நீ எதாவது சொன்னா தானே மாமாவுக்குத் தெரியும். பேசுடா" என்ற கெஞ்சலுக்குப் பிறகே மௌனம் துறந்தாள் மீனலோசினி.

"நீங்க எதுக்கு மாமா இப்ப வேலைக்குப் போறீங்க? கல்யாணம் முடியிற வரைக்கும் இங்கேயே இருக்கலாமில்லிங்க்?" குரல் ஏகத்துக்கு பிசிறடித்தது.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
"இப்பக் கிளம்புறதுக்கே இந்தப் பாடு. இன்னும் கல்யாணம் முடிஞ்சு கிளம்புறதா இருந்தா அவ்வளவுதேன்" சிரிப்புடன் கேட்டான் பிரபா.

"எனக்கு அழுகை அழுகையா வருது. உங்களுக்கு சிரிப்பா இருக்குதுங்களாக்கும். போங்க மாமா" அழுகையுடன் சேர்ந்து கொஞ்சம் கோபமும் வந்தது.

"கல்யாணம் முடிச்சு நான் எம் பொண்டாட்டியோட பார்க்க வேண்டிய வேலையே நிறைய இருக்கும். அப்பப் போய் வேலைக்குப் போகச் சொல்றியேடா" கிசுகிசுப்பாகப் பேசினான் பிரபா.

அவர்கள் பேசத் தொடங்கிய நாளிலிருந்து முதல் முறையாக மறைமுகமாகத் தான் என்றாலும் தங்கள் அந்தரங்கம் குறித்து இன்றுதான் மனம் திறந்திருக்கிறான் பிரபா. அந்தக் கிசுகிசுப்பான குரல் பெண்ணவளை வசியம் செய்ய அழுகை எல்லாம் மறைந்து ஒரு மோன நிலையில் அலைப்பேசியைக் காதில் வைத்த வண்ணம் மௌனமாக அமர்ந்திருந்தாள் மீனலோசினி.

"டேய் மினிக்குட்டி, வீடியோ கால் போடட்டா?" மீண்டும் கிசுகிசுப்பான குரலில் பிரபா கேட்க,

"ம்ஹூம்" வெட்கத்துடன் தலை ஆட்டினாள் பாவை.

"ஏன்டா?" தாபம் மிகுந்த குரலில் பிரபா வினவ,

"அழுமூஞ்சியா இருக்கேன் மாமா" சிணுங்கலாகப் பதில் வந்தது அவனுடைய சொக்குப் பொடியிடமிருந்து.

"எந்த மூஞ்சியா இருந்தாலும் பரவாயில்ல. எனக்கு உன் கண்ணைப் பார்க்கணும் போல இருக்குடா. ஹப்பா என்ன கண்ணுடா சாமி, அப்படியே மனுஷனை உள்ள சுருட்டி வைச்சுக்குற மாதிரி.

அதெப்படி கண்ணுக்குள்ள தூங்கப் போறேன், தங்கப் போறேன்னு இந்த கவிஞருங்க எல்லாம் லூசுத்தனமா பாட்டு எழுதுறாங்களேன்னு நான் யோசிச்சிருக்கேன். இப்ப இல்ல தெரியிது அவங்க எல்லாம் எவ்வளவு அனுபவிச்சு எழுதி இருக்காங்கன்னு.

ஒரே ஒரு தடவை வீடியோ கால் போட்டுப் பேசலாம்டா. என் செல்ல மினிக்குட்டி இல்ல" பிரபாவுக்கு ஊருக்கு செல்லும் முன் அவனுடைய சொக்குப் பொடியைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

"இன்னைக்கு உங்கப் பேச்சும் சரியில்ல. குரலும் சரியில்லீங்க் மாமா. எதைப் பார்க்குறதா இருந்தாலும் நீங்க நேர்ல வந்துப் பார்த்துக்கோங்க். இப்ப நான் போனை வைக்கிறேனுங்க் மாமா" என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டாள் மீனா.

பேசி முடித்ததும் இருவருடைய மனநிலையும் உல்லாசமாக மாறியிருந்தது. இந்த நொடி உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான மனிதர்களாகத் தங்களைத் தாங்களே உணர்ந்தார்கள் என்றே சொல்லலாம்.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து சுந்தரவடிவின் முன் பள்ளி செல்லும் சிறுவன் போன்ற முகப் பாவத்துடன் வந்து நின்றான் பிரபாகரன். அவர் என்னவென்று விசாரிக்க,

"ம்மா, ஊருக்குப் போறதுக்கு முன்ன நான் போய் உங்க மருமக கிட்ட சொல்லிட்டுக் கிளம்பட்டுமா? இங்க இருந்து பொள்ளாச்சிக்குப் போயிட்டு அப்படியே அங்க இருந்து ரவைக்கு சென்னைக்குப் பஸ் ஏறிக்குவேன்ம்மா. ப்ளீஸ்ம்மா" என்று அவர் புடவை முந்தானையைப் பற்றிக் கொண்டு பின்னாடியே சுற்றி வருபவனைப் பார்த்தால் சிரிப்பு தான் வந்தது சுந்தரவடிவுக்கு.

"தாராளமா போயிட்டு வாய்யா. ஆனா பஸ்சுல எல்லாம் வேண்டாம். நீ நம்ம பாண்டியையும் கூட்டிக்கிட்டு நம்ம வண்டியிலேயே போயிட்டு வா. அதுதேன் கொஞ்சம் கௌரதையா இருக்கும். சரியா?"

"அம்மான்னா அம்மாதான். என் செல்ல அம்மா" என்று சொல்லி அவர் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு, "ஆனா மாமா எல்லாரும் கேட்டா என்ன சொல்றது?" என்று கேட்டான் பிரபா.

"அதெல்லாம் உனக்கெதுக்கு. நாங்க பார்த்துக்கிடுவோம். நீ வெரசா பாண்டிக்கு போனைப் போட்டுக் கிளம்பி வரச் சொல்லு. இப்பவேக் கிளம்புனாத்தேன் சரியா இருக்கும்" தான் ஒரு ஐ.எஸ்.ஐ முத்திரைக் குத்தப்பட்ட மகனின் நலனை மட்டுமே விரும்பும் நல்ல அம்மா என்று மீண்டும் நிரூபித்தார் சுந்தரவடிவு. அதற்குப் பிறகு பாண்டியையும் பிரபாவையும் ஏற்றிக் கொண்டு அந்த ஸ்கார்ப்பியோ மதுரை - பொள்ளாச்சி ஹைவேசில் பறந்து கொண்டிருந்தது.

**********************

அன்று மீனா பள்ளியில் வேலை முடிந்துத் திரும்பும் பொழுது, அறிந்தவர் அறியாதவர் அனைவரும் அவளிடம் சொல்லியது ஒரே விஷயத்தைத் தான்.

"சின்னம்மிணி உங்க் வூட்டுக்கு மாப்பிளை வந்திருக்குறாராமுங்கோ" சிறிய ஊர் என்பதாலும் அந்த ஊரிலேயே மிகவும் செல்வாக்கு வாய்ந்த குடும்பத்தினருடைய பெண் என்பதாலும் பிரபா வந்த விஷயம் ஊர் முழுக்கப் பரவியிருந்தது.

இந்தத் திடீர் விஜயத்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை மீனா. இன்று இரவு சென்னைக்குக் கிளம்புவதாகத் தானே சொன்னார்கள். அதற்குள் இங்கு எப்படி? தனக்காகவே வந்தானோ என்று மனம் இறக்கைக் கட்டிப் பறக்கத் தானும் ஸ்கூட்டியில் பறந்து கொண்டு விரைவாக வீடு வந்து சேர்ந்தாள் மீனா.

அடித்துப் பிடித்து வீடு வந்து பார்த்தால் வீடே அமைதியாகக் காட்சியளித்தது. 'மாமா வந்திருந்தால் இந்நேரம் வீடே பேச்சும் சிரிப்புமாக அல்லவா இருக்கும். ஒருவேளை வெளியே எங்கேயாவது போயிருப்பாங்களோ? இல்ல மாமா வரவே இல்லையோ?' என்று தோன்றிய நொடி அத்தனை சந்தோஷமும் வடிந்து போனது பெண்ணவளிடமிருந்து.

அவளுடைய அந்த நொடி நேர மனக்குமுறலையும் விரும்பாதவனாகக் கணீரென்று கேட்டது பிரபாவின் சிரிப்பொலி அடுக்களையிலிருந்து. 'கிச்சனுக்குள்ளயா இருக்காங்க?' என்று விரைந்து செல்ல, அவள் ஆசையைப் பொய்யாக்காமல் அங்கு தான் நின்றுப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான் பிரபா.

பிரபா இப்படித் திடீரென்று வந்து நிற்பான் என்று அங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை. வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு விரைவாக எதாவது செய்து கொடுக்க வேண்டுமே என்றெண்ணி லலிதா வேகமாக ரவா பொங்கல் செய்து கொடுத்தார்.

அதன் சுவையில் மயங்கியவனாக, "ரவையில் பொங்கல் கூட செய்யலாமாங்க அத்தை?" என்று கேட்டவாறே சமையலறைக்குள் நுழைந்திருந்தான். கூடவே பாண்டியும் கோதையம்மாளும். பேச்சு அங்கேயே நீண்டு அப்படியே திசை மாறி மீனா பக்கம் செல்ல,

"அப்பத்தா நேத்து உங்க பேத்தி ஒரே அழுகாச்சியாக்கும். அது அழுகவும் எனக்கும் சங்கடமா போச்சா, அதேன் நேர்லயே பார்த்து சொல்லிட்டுப் போகலாமென்டு கிளம்பி வந்துட்டேன்" என்று பிரபா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது தான் மீனா வந்து சேர்ந்தாள்.

"நல்லா கேட்டுக்கிடுங்க அப்பத்தா. இது வரைக்கும் எத்தன தாட்டி இவனைக் கப்பலுக்கு அனுப்பிட்டு எங்க சித்தி கண்ணைக் கசக்கிட்டு இருந்திருக்கும். அப்பயெல்லாம் வராத சங்கடம் சாருக்கு இப்ப வந்துடுச்சாமா" என்று பாண்டி சொல்ல அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரிக்க, வேறு வழியில்லாமல் பிரபாவும் சிரித்துதான் சமாளிக்க வேண்டியிருந்தது.

மீனா வந்த வேகத்துக்குத் தனக்கு முதுகுக் காட்டி நின்று கொண்டிருந்தவன் மீது மோதி நின்றாள். அவள் மோதிய வேகத்துக்குக் கையில் இருந்த காஃபிக் கோப்பையை சிந்தாமல் பிடித்து விட்டாலும் திரும்பிப் பார்த்து அது மீனா என்று தெரிந்ததும் யாருக்கும் தெரியாமல் தானாகவே கொஞ்சம் காஃபியை சட்டையில் ஊற்றிக் கொண்டான் பிரபா.

"என்ன கண்ணு பார்த்து வரமாட்டியா?"

"ஐயோ காஃபி சூடா வேற இருந்துச்சே!" என்று ஆளாளுக்குப் பதற,

"ஒன்னுமில்லைங்க அப்பத்தா. மேலுக்கு எல்லாம் சுடலைங்க அத்தை. இந்த டிரெஸ்சை மட்டும் மாத்திக்கிட்டா போதும். பாண்டி கார்ல இருக்குற பெட்டியில இருந்து ஒரு சட்டை எடுத்துத் தாடா" என்று கூலாகச் சொன்னான் பிரபா.

பாண்டியும் அதே போல் எடுத்து வந்து தர, பிரபாவைப் பார்த்த மகிழ்ச்சியிலும் அதிர்ச்சியிலும் சிலைப் போல் நிற்கும் மீனாவை உலுக்கி, "போ கண்ணு தம்பிக்குப் பாத்துரூமைக் காட்டு" என்று கூறி கோதை அனுப்பி வைத்தார்.

லலிதாவோ மீனாவின் கையில் ஒரு புது துண்டைக் கொடுத்து, "இதைக் கொடு கண்ணு. அப்படியே மாப்பிள்ளைக் கிட்ட அந்த சட்டையை வாங்கி வெரசா வாசிங் மிசின்ல போடு" என்றார்.

'பய பிளான் ஒர்க் அவுட் ஆயிருச்சு. என்னமா பிளான் பண்றான்ய்யா!' என்று பாண்டி முணுமுணுத்தது யார் காதிலும் விழவில்லை.

கோதையின் அறைக்குள் இருந்த குளியலறைக்குப் பிரபாவை அழைத்துச் சென்றாள் மீனா. பாத்ரூமைக் காட்டிவிட்டு வெளியே செல்ல முற்பட்டவளை, அவள் கரத்தைப் பிடித்துக் கதவோரமாக சாய்த்து அவள் நகர முடியாத வண்ணம் அரணாக நின்றான் பிரபா.

சட்டையில்லாமல் வெறும் பனியனுடன் அவன் நின்ற தோற்றமும், அந்த அருகாமையும் அவனிடமிருந்து வெளிவந்த பெர்ப்யூமின் மெல்லிய வாசனையும் பெண்ணுக்குள் கலகமூட்ட கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டாள் மீனலோசினி.

மூடிய கண்களுக்கு வலிக்காமல் முத்தமிட்டவன், "ஓய் சொக்குப் பொடி நேர்ல வந்து பார்த்துக்க சொன்னில்ல. இப்ப நான் நேர்ல வந்துட்டேன். கண்ணைத் தொறந்து என்னைப் பாரு" என்று அவள் காதோரத்தில் கிசுகிசுக்க, அந்தக் குரலுக்கு மயங்கியவளாய் கண்களைத் திறந்தாள் மீனா.

அவள் கண்ணோடு கண் கலந்தவனாக, அவள் தலை முடி கோதி, வெண்டைப் பிஞ்சு விரல்களோடு விரல் கோர்த்து, "ஏன்டா நேத்து அழுதே?" என்று கேட்க பதில் பேசத் தோன்றாமல் அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள்.

"இப்ப எப்படி போன் பேசுறோமோ அதே மாதிரி ஷிப்புக்கு போன பிறகும் பேச முடியும்டா. மதுரையில இருக்குறதுக்குப் பதிலா ஷிப்ல இருப்பேன். அவ்வளவு தான்டா வித்தியாசம். இதுக்குப் போய் அழலாமா?" என்று கேட்டவாறே அவளைத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான் பிரபா.

அவன் அணைப்புக்குள் அடங்கியவளாய் தலையை மட்டும் நிமிர்த்தி, "எனக்கு நீங்க என்னை விட்டுட்டு ரொம்ப தூரம் போற மாதிரி இருந்துச்சுங்க் மாமா. அழுகை அழுகையா வந்துச்சு தெரியுமா" சொல்லும்போதே உதடு பிதுங்கியது.

இதற்கு மேல் தாங்க முடியாதவனாக அந்த உதட்டைத் தன் வசமாக்கிக் கொண்டான். முதல் முத்தம் முடியாமல் நீண்டு கொண்டே போனது. ஆசிரியை மாணவியாக மாறிக் காதல் பாடம் படிக்கத் தொடங்கினாள். 'கணக்கு டீச்சரா' என்று ஒரு காலத்தில் பயந்தவன் இன்று அந்த டீச்சருக்கே பாடம் கற்பித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

முதல் முத்தத்தைப் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியோடு பிரபாவின் பயணம் தொடங்கியது. தன் மீது உயிராக இருக்கும் மீனாவே தங்களதுத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தப் போகிறாள் என்ற உண்மை அறியாதவனாக லண்டன் சென்று கப்பலில் ஏறினான் பிரபாகரன்.
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
ஹப்பா ஒரு வழியா ஃபர்ஸ்ட் வந்துட்டேன் ??

சூப்பர் எபி அக்கா ??

கணக்கு டீச்சர்க்கு ரொமான்ஸ் பாடம் எடுக்குது பயபுள்ள ??
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
சூப்பர் சாங் :love::love:(y)(y)... அவ்வளவு அழகா சொல்றீங்க ஒவ்வொரு வார்த்தையும் மதுர தமிழும் கொங்கு தமிழும் போட்டி போடுது.(y)(y) கணக்கு வாத்தியார கணக்கு பண்ணறதுன்னு சொல்றாங்களே அது இதுதானுங்களா:unsure::unsure::ROFLMAO::ROFLMAO: next டூயட் படுவாங்கனு கனா கண்டா இப்படி கொளுத்தி போட்ரீகளே:oops::oops: நியாயம் தானா இது கொஞ்சம் ரோசனை பண்ணுங்கம்மணி. நம்ம சின்னம்மணிய அழ வைக்காதீக அம்புட்டுதேன் சொல்லிபோட்டேன்:love::love:
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
அழகாக கவிதையா போய்கிட்டு இருக்குது கடைசியில் ஆப்பு வச்சுட்டியே சகி மா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top