பார்வையே ரம்மியமாய்

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#1
வணக்கம் தோழமைகளே, மறுபடியும் நானே. இது குறுநாவல் போட்டிக்கான கதை. கடிதத்திற்கு அளித்த ஆதரவை இதற்கும் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வந்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளவும்.

டைட்டில் கொஞ்சம் ஏடாகூடமா வைக்க சொன்னதால ஏலேலோ ஐலசான்னு வைச்சேன் மக்களே. ஹீரோ Marine Engineer அப்படிங்குறதைத் தவிர வேற எந்த சம்பந்தமும் இல்லை கதைக்கும் டைட்டிலுக்கும். அதுக்காக நம்ம தல சஷிம்மா கேள்வி மேல கேள்வி கேட்டு என்னை வைச்சு செஞ்ச காரணத்தால :censored::censored::censored: உங்ககிட்ட இருந்தாவது தப்பிச்சுக்கலாமுன்னு டைட்டிலை மாத்திட்டேன். ;););)
 
Last edited:

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#2
பார்வையே ரம்மியமாய்

பார்வை - 1

"மதுர குலுங்க குலுங்க
நீ நையாண்டி பாட்டுப் பாடு"


அலறிக் கொண்டிருந்தது அங்கிருந்த லவுட் ஸ்பீக்கர்கள். ஸ்பீக்கரை விட அங்கிருந்த ஆட்களிடமிருந்து வந்த சத்தம் சற்றுத் தூக்கலாக இருந்தது. கரகாட்டம், சிலம்பாட்டம், மற்றும் மயிலாட்டம் ஆடும் கலைஞர்கள், சில வாத்தியக் கலைஞர்கள், இவர்களோடு நண்டும் சிண்டுமாக ஆறேழுப் பொடுசுகள் என்று அந்தப் புகை வண்டி நிலையமே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது இவர்கள் கொடுத்த அலப்பறையில்.

ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளிவந்தவர்களில், 'இவைய்ங்களுக்கு இதே வேலையா போச்சு' என்ற முகச்சுளிப்புடன் சிலரும், 'அப்படி யாருக்குடா இந்த வரவேற்பு' என்ற ஆர்வத்துடன் சிலரும் அந்த இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.

கரகாட்டம் மற்றும் கோலாட்டக் கலைஞர்களுக்கு ஈடாகத் தன்னுடைய நடனத் திறமையை நிரூபித்துக் கொண்டிருந்தான் பாண்டியன். ஒடிசலான தேகம். பளபள மஞ்சள் கலர் சட்டை. தொடை தெரிய தூக்கிக் கட்டிய கைலி. கண்களில் போன திருவிழாவுக்கு வாங்கிய டூப்ளிகேட் ரேபான். இவன் தான் பாண்டி என்று எல்லோராலும் பாசமாக மற்றும் கோபமாக அழைக்கப்படும் பாண்டியன்.

பாண்டியனின் தற்போதைய சந்தோஷத்திற்குக் காரணம் அவனுடைய ஆருயிர்த் தோழனும், உறவுமுறைப்படி பங்காளியுமான பிரபாகரன் இன்று வேலை முடிந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மதுரை வருகிறான் என்பதே. பிரபாகரன் இங்கு இருக்கும்வரை இனி மதுரையே இவர்கள் கைக்குள் இருப்பதாக ஒரு நினைப்பு பாண்டியனுக்கு.

பாண்டியிடமிருந்து கரகாட்டப் பெண்களைக் காப்பதே அந்தக் குழுவில் உள்ள ஆண்களுக்குப் பெரும் வேலையாகிப் போனது. அவர்களுடைய முறைப்புகளும் கடுப்புகளும் எல்லை மீறுவதற்குள்ளாக பிரபாகரன் வந்தப் புகை வண்டி மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்திருந்தது அதிர்ஷ்ட வசமாக. வேகமாக வந்து ஒரு சிறுவன் பாண்டியின் காதில் இத்தகவலைக் கூறிவிட்டு ஆட்டத்தில் ஐக்கியமானான்.

"எடோய் என் மாப்பிள்ளை வண்டி வந்துருச்சு. நான் போய் அவனைக் கூட்டியாரேன். எங்க தலை தெரிஞ்சதும் இங்கிருக்குற அம்புட்டு பயலுக காதும் செவிடாகுற மாதிரி ஒரு கொட்டு அடிக்கணும் புரியுதா? சத்ததுக்கு ஏத்த மாதிரிதான் இன்னைக்குப் படிக்காசு கிடைக்கும். சொல்லிபுட்டேன் ஆமா" என்று பொதுவாக நின்று அனைவரின் காதுகளிலும் விழுமாறு சத்தமாகக் கூறியவன், இரண்டு பேரை மட்டும் தனியாக அழைத்து,

"எழுதிக் கொடுத்த வசனமெல்லாம் ஞாபகம் வைச்சிருக்கீங்களாடா? நீங்க கூவுற கூவுல என் மாப்பி உச்சி குளிர்ந்து போயிடணும். இது மட்டும் நடந்துச்சு அண்ணன் உங்க ரெண்டு பேரையும் தனியா கவனிப்பேன்" என்று அவர்களின் காதைக் கடித்துவிட்டு அலப்பறையாக புகை வண்டி நிலையத்திற்குள் நுழைந்தான்.

அங்கோ இவன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து வருவதற்குள் மொத்த ரயிலுமே காலியாகிப் போயிருக்க "மாப்பி... மாப்பி" என்று பாண்டி மட்டுமே தொண்டை வறளக் கத்திக் கொண்டிருந்தான். வெறுத்துப் போனவனாகத் தன்னுடைய அலைப்பேசியைக் கையில் எடுத்து அழைப்பு விடுக்க,

அழைப்பு ஏற்கப்பட்டதற்கு அடையாளமாக பெரும் சத்தம் வந்து பாண்டியின் காதை அடைத்தது. எங்கிருந்து இவ்வளவு சத்தம் என்பது புரிந்த நொடி வேக எட்டுக்களை எடுத்து வைத்து ஓட்டமும் நடையுமாக வெளியே வந்து சேர்ந்தான் பாண்டி. மூச்சு வாங்க ஓடி வந்தவன் கண்ட காட்சி,

சுற்றிலும் ஆண்களும் பெண்களுமாய் சூழ்ந்து ஆடிக் கொண்டிருக்க, அவர்களுக்கு நடுநாயகமாக நின்று பாட்டின் சத்தத்தை விட அதிக சத்தமாக விசிலடித்துக் கொண்டிருந்தான் பிரபாகரன்.

கருமையான கேசம் அலை அலையாக அடங்க மாட்டேன் என்று சண்டித்தனம் செய்ய, இதழ்களுக்குப் போட்டியாகக் கூடவே சேர்ந்து சிரிக்கும் கண்களில் அவ்வளவு குறும்பிருந்தது. கூர்மையான நாசி, அளவான மீசை, ஆறடிக்குக் கொஞ்சமே கொஞ்சம் குறைவான உயரம், மாநிறத்தில் ஆண்மையின் மொத்த உருவமாக எந்தக் கவலையுமில்லாமல் ஆடிப் பாடிக் கொண்டிருந்தான் பிரபாகரன் சுருக்கமாகப் பிரபா.

பாண்டியைப் பார்த்தவுடன், "என்ன மாப்பி உன்னை வரவேற்க கரெக்ட் டைமுக்கு வந்துட்டோம் பார்த்தியா" என்று வாய் பேசினாலும் கால்கள் ஆட்டத்தை நிறுத்தவில்லை. பாண்டி வேகமாக வசனம் பேச வேண்டிய ஆட்களைத் தேட அவர்களோ மெய்மறந்து பிரபாவுடன் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

"நிறுத்து... நிறுத்து... நிறுத்துங்கடா. இந்தா எல்லாரும் காசை வாங்கிட்டுக் கிளம்பு" என்று கோபமே உருவாக பாண்டி சொல்ல, அவனை அருகில் வந்து ஆரத் தழுவிக் கொண்டான் பிரபா.

"டேய் மாப்பி கூல்யா, கோவிச்சுக்கிட்டியா என்ன?" என்று அப்பொழுதும் நடனக் கலைஞர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்புவதிலேயே குறியாக இருந்தவனின் தோள் மீது வம்படியாகக் கையைப் போட்டுக் கொண்டே கேட்டான் பிரபா.

"பின்ன என்னடா உன்னை வரவேற்க நான் வந்தா இவன் என்னை வரவேற்கிறானாம். போடா நான் எம்புட்டு பிளான் போட்டிருந்தேன் தெரியுமா? எல்லாம் வீணா போச்சு" விடாமல் முறுக்கிக் கொண்டான் பாண்டி.

"எது? இவனுங்க கூவுனதுதான் உன் பிளானா?" என்று அங்கு சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த இருவரையும் சுட்டிக் காட்டிப் பிரபா கேட்டவுடன் அவ்விருவரும் வெகு பவ்வியமாக கைலியைக் கீழிறக்கி சட்டைக் காலரை இழுத்து விட்டுக் கொண்டார்கள்.

வேகமாக அவர்கள் இருவரின் அருகிலும் சென்ற பாண்டி, "அண்ணன் இல்லாத போதும் கரெக்டா உங்க வேலையை செஞ்சிருக்கீங்க டா. என்ன அண்ணனாலதான் அந்தக் கண் கொள்ளா காட்சியைப் பார்க்க முடியாம போச்சு" என்று உச்சு கொட்ட,

"அண்ணே காசு" என்று அவ்விருவரும் ஒற்றுமையாகக் கோரஸ் பாடித் தலையை சொரிந்தார்கள். "உங்களுக்கு இல்லாததாடா?" என்று கேட்டு சற்று அதிகமாகவே அவர்களுக்குப் பணத்தைக் கொடுக்கவும், பணம் வாங்கிய குஷியில் இருவரும் மீண்டுமாகக் கோஷமெழுப்பினார்கள்.

"கலியுக இராம லெட்சுமணர்களே வருக வருக
மதுரை மண்ணின் உத்தம புத்திரர்களே வருக வருக"
என்று அவ்விருவரும் உச்சஸ்தாயில் கத்த, பாண்டி வெகு பெருமையாக மிதப்பாக பிரபாவை ஒரு பார்வைப் பார்க்க, பிரபாவோ வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்கத் தொடங்கிவிட்டான்.


"ஏன்டா உனக்கு இந்தக் கொலைவெறி? நான் ராமன் நீ லெட்சுமணனா?" என்று சிரிப்பும் இருமலுமாக பிரபா கேட்க,

"நான் உன்னைய விட ஆறு மாசம் பெரியவன்டா. நான்தான் ராமன். நீ லெட்சுமணன்" என்று சிரிக்காமல் சொன்னான் பாண்டி.

"நீ ராமனா? ஊருக்குள்ள ஒத்த புள்ளை விடாம துரத்தி துரத்தி சைட் அடிச்சவனெல்லாம் ராமனாடா?" என்று அடக்க மாட்டாமல் மீண்டும் சிரிக்கத் தொடங்கியவன், "ஆமா, இந்த விஷயம் என் தங்கச்சிக்குத் தெரியுமா?" என்று கர்ம சிரத்தையாக வினவினான் பிரபா.

"அவ அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டாடா" என்று முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டுப் பதிலளித்தான் பாண்டி.

"ஏன் மாப்பி? மறுபடியும் சண்டை போட்டியா? ரெண்டு பேரும் அடிச்சுக்காம இருக்கவே மாட்டீங்களாடா?"

"இல்ல மாப்பி. இது வேற" என்று வெட்கப்பட்டுக் கொண்டே பாண்டி கூற,

"ஆத்தீ! அதை விட இது இன்னும் டேஞ்ஜராச்சேடா. ஏன்டா உன்னை மாதிரியே ரெண்டு குட்டிப் பாண்டி டவுசரில்லாம மதுரையை வலம் வர்றது பத்தாதா? மூணாவது வேறயா?" அதிர்ந்து போனவனாக வினவினான் பிரபா.

"ம்ப்ச் இப்பவே வாயை வைக்காதே மாப்பி. எனக்கு... எனக்கு என்னை மாதிரியே ஒரு குட்டிப் பொம்பளைப் புள்ள வேணும்டா" அருகில் வந்து பிரபாவின் சட்டைப் பட்டனைத் திருகிக் கொண்டே பாண்டி கூற,

"உன்னை மாதிரி பொம்பளைப் புள்ளயா" என்று கூறி கற்பனை செய்துப் பார்த்த பிரபா வேகமாகத் தன் தலையை உலுக்கிக் கொண்டு, "மாப்பி நான் எங்கம்மாவுக்கு ஒத்தப் புள்ளடா. இப்படியெல்லாம் சொல்லி எனக்கு நெஞ்சு வலி வர வைச்சுடாத. அதுக்கும் மேல தயவு செஞ்சு நீ வெட்கம் மட்டும் பட்டுடாதே. தாங்க முடியலைடா டேய்" என்று சொல்லியவாறே அவர்களின் காரை நோக்கிப் போனான் பிரபா.

அங்கு அவர்களுக்கு முன்பாக பிரபா கொண்டு வந்திருந்த பெட்டிப் படுக்கைகளுடன் ஆஜராகியிருந்தார்கள் அந்த ஆறேழு வாண்டுகளும்.

"எங்கக்காக்கள் பெத்த ரத்தினங்களே, எப்படிடா இருக்கீங்க எல்லாரும்? முப்பெரும் தேவியரும் அதான்டா என் மூணு அக்காக்களும் நலமா? அவர்களுக்கு வாக்கப்பட்டு வந்த என் அப்பாவி மாமாக்கள் நலமா?" என்று அவர்களை நோக்கிப் பிரபா தொடுத்தக் கேள்விக் கணைகளுக்கு,

"சூப்பர் மாமா, நல்லா இருக்கோம் மாமா, டாப்பு டக்கரு மாமா" என்று ஆளுக்கொருப் பதிலாகத் தந்தார்கள் அந்த மழலைப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள்.

"அப்பாவி மாமாக்களா? அடப்பாவி மாமான்னு வேணா சொல்லு அதேன் அவெய்ங்களுக்குப் பொருத்தமா இருக்கும்" வாய் தன் பாட்டுக்கு முணுமுணுக்க பிரபாவின் பெட்டிகளை அந்த மகேந்திரா ஸ்கார்ப்பியோவினுள் வைத்துக் கொண்டிருந்தான் பாண்டி.

"ஏன்டா இப்படி குண்டக்க மண்டக்க பேசுற" என்ற பிரபாவின் கேள்விக்கு,

"சின்ன புள்ளைகென்டு நினைக்காத மாப்பி. அம்புட்டும் விஷம். நான் இப்ப எதாவது சொன்னேன்டு வையி, நாம வீடு போய் சேர்றதுக்குள்ள நாம பேசுன மேட்டரு போயிரும். இங்கனதான இருக்கப்போற, நாம சாவகாசமா பேசுவோம். இந்தாட்டி எத்தனை மாச லீவு மாப்பி? மூணு மாசமா ஆறு மாசமா?" என்று முன்னதை முணுமுணுப்பாகவும் பின்னதை சத்தமாகவும் கேட்டான் பாண்டி.
 
Last edited:

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#4
"இந்தாட்டி ஆறு மாசம் இங்கன தான் பாண்டி. ஆற அமர இருந்து வீட்டையும் மதுரையையும் ரசிக்கப் போறேன். கம்பெனியில சொல்லிட்டேன்டா. அஞ்சு மாசம் கழிச்சுத்தான் வருவேன்டு" பேசிக் கொண்டே பிள்ளைகள் அனைவரையும் நடு இருக்கையிலும் பின் இருக்கையிலுமாக அமர வைத்துவிட்டுத் தான் வந்து டிரைவர் இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்தான் பிரபா.

பாண்டியும் பெட்டிகளை ஏற்றி வைத்து விட்டு வந்து டிரைவர் இருக்கையில் அமர, அந்த மகேந்திரா ஸ்கார்ப்பியோ மதுரை ஹைவேசில் வேகமெடுக்கத் தொடங்கியது. இருக்கையை சாய்த்துவிட்டு கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தவாறு பிரபாகரன் கண்ணை மூடிக் கொள்ள, அவன் மனமறிந்தவனாக இளையராஜாவின் ராகங்களை ஒலிக்க வைத்தான் பாண்டியன்.

மெச்சுதலாக அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டான் பிரபா. பின்னிருந்து எழும் பிள்ளைகளின் சத்தமோ, அவர்களை மிரட்டும் பாண்டியின் குரலோ, வாகன நெரிசலோ எதுவுமே பிரபாவைப் பாதிக்கவில்லை. அவன் சிந்தை முழுவதையும் இளையராஜா ஆக்கிரமித்திருந்தார்.

பிரபாகரன் விவசாயக் குடும்பத்தில் ஒரு ஏழைத் தாய் தந்தையருக்கு மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு நான்காவதாகப் பிறந்தவன். தந்தை சிறு வயதிலேயே இறந்துவிட்டதால் தாயாரின் தலையில் குடும்பப் பொறுப்பு மொத்தமும் விழ, பிரபா வளர்ந்தது முழுக்க முழுக்க அவன் அப்பத்தாளிடம்தான்.

"உங்க சீயான் வயல்ல சீரக சம்பா சாகுபடி போட்டாகன்னா ஊரு சனமே நம்ம வரப்பு வழியாதான்ப்பு கடந்து போகும். வாசனை புடிக்கன்டே அந்த வழியாத்தான் போவாக வருவாக. அம்பூட்டு வாசனையா இருக்கும் அந்த அரிசி. இப்பெல்லாம் எங்க அப்படி வாசம் வருது? கண்ட கண்ட உரத்தைப் போட்டு மண்ணு வீணா போச்சு" இப்படியாகப் பல விவசாயக் கதைகளைக் கேட்டே வளர்ந்தான் பிரபாகரன்.

தந்தை இறந்த பிறகு பிரபாவின் தாய் சுந்தரவடிவால் தனியாளாக விவசாயத்தை மேற்கொள்ள முடியவில்லை. வானம் பொய்த்துப் போவது, தண்ணீர் பற்றாக்குறை, உரங்களின் விலையேற்றம், இடைத்தரகர்களின் தலையீடு என்று ஏகப்பட்டத் தடைகள். உழும் நிலத்தில் களையெடுக்கத் தெரிந்த சுந்தரவடிவுக்கு இந்தக் களைகளை அகற்றும் மார்க்கம் புரியவில்லை.

விளைவு, நிலத்தை விற்றுவிட்டு மாமியார் மற்றும் தன்னுடைய நான்கு பிள்ளைகளுடன் அப்பொழுது ஓரளவு வளர்ச்சி அடைய ஆரம்பித்திருந்தத் தன்னுடைய பிறந்த ஊரான மதுரை திருப்பரங்குன்றத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு சிறிய அளவில் ஒரு சாப்பாட்டுக் கடையைத் தொடங்கி அதில் வரும் வருமானம் மூலம் பிள்ளைகளைப் படிக்க வைத்தார்.

தங்கம், தனம், சொர்ணம் என்று மூன்று அக்காக்கள் பிரபாவுக்கு. பெயரளவிலாவது இவையெல்லாம் இருக்கட்டுமென்று அவர்களின் தந்தை இவ்வாறு பெயர் சூட்டியிருந்தார் போல.

மூவரின் திருமணம், சீர்வரிசை, பிரசவம் என்று சுந்தரவடிவு திணறிப் போனதென்னவோ உண்மை. பிரபாகரன் தலையெடுத்து சம்பாரிக்கத் தொடங்கிய பின்னர்தான் அவர் கால்கள் சொஞ்சம் ஓய்வெடுக்கத் தொடங்கின.

மூன்று அக்காக்களுக்கும் மதுரையின் சுற்று வட்டாரத்துக்குள்ளாகவே சம்பந்தம் தகைந்திருந்தது. மூத்த அக்கா வீட்டுக்காரர் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிபவர். இரண்டாவது மாப்பிள்ளை சிறு அளவில் கட்டிட வேலைகளை கான்டிராக்ட் எடுத்து செய்பவர். மூன்றாமவரோ சிறிய அளவில் மெக்கானிக் ஷாப் வைத்திருந்தார். எது இருக்கிறதோ இல்லையோ மூன்று மாப்பிள்ளைகளிடமும் மாப்பிள்ளை முறுக்கு இன்னும் குறையாமல் இருந்தது.

பிரபா படித்தது கடல் பொறியியல் (Marine Engineering). திட்டமிட்டோ அல்லது லட்சியத்திற்காகவோ இதில் சேரவில்லை. தானாக அமைந்தது. இறுதியாண்டு படிக்கும்பொழுதே ஜூனியராக அதாவது ஐந்தாம் நிலைப் பொறியாளராக கேம்பசிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டான்.

அதன் பிறகு ஒவ்வொரு நிலைக்கும் படித்துப் பரீட்சை எழுதி, நான்கு, மூன்று, இரண்டு என்று முன்னேறி இன்றுத் தலைமைப் பொறியாளராக (சீஃப் என்ஜினியர்) டேங்கர் கப்பலில் பணிபுரிகிறான்.

தமக்கைகள் மூவரின் திருமணத்திற்காக வாங்கியிருந்த கடன்களையெல்லாம் அடைத்து முடிக்கவே போதும் போதுமென்றானது பிரபாவுக்கு. அதன் பிறகும் அவர்களுக்கென்றே செலவு செய்து கொண்டிருந்தவனை அவனுடைய அப்பத்தா தான் சொந்தமாக ஒரு வீடு கட்டுமாறு பணித்தார்.

அவர் விருப்பப்படியே கிட்டத்தட்ட இரண்டு கிரவுன்ட் நிலம் வாங்கிப் போட்டான் பிரபா. தோப்பு வீடென்றால் கொள்ளைப் பிரியம் அப்பத்தாவிற்கு. அவர் ஆசையை நிறைவேத்துவதற்காகவே சற்றே பெரிய இடமாகவே வாங்கினான் பிரபா.

ஆனால் திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் அப்பத்தா இறைவனடி சேர்ந்துவிட, சோர்ந்து போனவனாக வீடு கட்டும் பொறுப்பை இரண்டாவது அக்கா தனத்தினுடைய கணவரிடம் ஒப்படைத்து விட்டுத் தன் கப்பல் பணிக்குத் திரும்பிவிட்டான் பிரபா.

வீடு கிரஹப்பிரவேசத்துக்குக் கூட வரவில்லை. கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கழித்து இப்பொழுது தான் நிலத்தில் அவனுடைய பாதங்கள் பதிகின்றன.

நீல நிறம் என்றால் மிகவும் பிடித்தம் பிரபாகரனுக்கு. கப்பலில் வேலை முடிந்ததும் அந்த நீலக் கடலையும் நீல வானத்தையுமே மணிக்கணக்காக ரசித்துப் பார்த்துக் கொண்டேயிருப்பான் இளையராஜாவின் இசையோடு. அதைப் போலவே பசுமை சூழ்ந்த வயல்வெளியையும் நீல வானையும் அதாவது பச்சையும் நீலமும் இணைந்ததாகக் கண்டு களிக்க வேண்டுமென்பது மட்டுமே அவனுடைய நீண்டநாள் கனவு.

அப்பத்தா விதைத்த விவசாயக் கனவு அவனுக்குள் விருட்சமாக வளர்ந்திருந்தது. சொந்த வீடு என்ற கனவு நிறைவேறிவிட்டது. அடுத்ததாகப் பெரிய அளவில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணம் சேமிக்கத் தொடங்கியிருந்தான் பிரபாகரன்.

"இறங்கு மாப்பி" என்ற பாண்டியினுடைய குரலைக் கேட்டுக் கண் விழித்த பிரபா வீட்டைப் பார்த்து அதிர்ந்து போனான். சொந்த வீடு குறித்த தன்னுடைய கடமை முடிந்துவிட்டதாக நினைத்திருந்தவனை மூன்று மாப்பிள்ளைகளும் இணைந்து,

"அப்படியெல்லாம் நீயா ஒரு முடிவுக்கு வந்துடாத தம்பி" என்று சொல்வது போல, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வாசலில் பிரபாவை வரவேற்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.
 
Last edited:

Suvitha

Brigadier
SM Team
#6
முதலில் அடுத்த கதையோடு வந்த சங்கிக்கு வாழ்த்துகள்...😘😘

இப்போ கதைக்கு போவோம்...
இந்த பாண்டி தான் இவ்வளவு அலப்பறை பண்ணுறான்னா பிரபாகரன் அதைவிட அதிகமால்ல பண்ணுறான். ஆனால் இரண்டு பேரின் அழகான தோழமை ரசிக்கவைக்குது.
அப்படியே கதையை விவசாயம் இன்னைக்கு சந்திக்கும் பிரச்சினைகளின் பக்கம் நகர்த்தியது இன்னும் அழகு பா...

இவ்வளவு கஷ்டப்பட்டு 3 அக்கா தங்கையை கரையேற்றியது போதாதாமா? எதற்காக அக்கா மாப்பிள்ளைகள் வரிசைகட்டி நிற்கிறார்கள்...தெரிந்து கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன் தோழி.
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#7
முதலில் அடுத்த கதையோடு வந்த சங்கிக்கு வாழ்த்துகள்...😘😘

இப்போ கதைக்கு போவோம்...
இந்த பாண்டி தான் இவ்வளவு அலப்பறை பண்ணுறான்னா பிரபாகரன் அதைவிட அதிகமால்ல பண்ணுறான். ஆனால் இரண்டு பேரின் அழகான தோழமை ரசிக்கவைக்குது.
அப்படியே கதையை விவசாயம் இன்னைக்கு சந்திக்கும் பிரச்சினைகளின் பக்கம் நகர்த்தியது இன்னும் அழகு பா...

இவ்வளவு கஷ்டப்பட்டு 3 அக்கா தங்கையை கரையேற்றியது போதாதாமா? எதற்காக அக்கா மாப்பிள்ளைகள் வரிசைகட்டி நிற்கிறார்கள்...தெரிந்து கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன் தோழி.
வாழ்த்துகளுக்கு நன்றி சுவி :whistle::whistle::whistle:
 

Sponsored

Advertisements

Top