மாய மழை

JeyaBharathi

Well-known member
#1
மாய மழை

ஓடுகளிடை ஊடுருவி
ஆங்காங்கே ஒழுகியோடி
இரவுறக்கம் திருடியமழை...

நடுவீட்டில் வைத்த பாத்திரத்தில்
இன்னிசையாய் சொட்டிட்டு
இரகசியமாய் சிணுங்கிய
நடுநிசி அடைமழை...

பதமாய் பருப்புவேக
அம்மாவைத்த அண்டாவில்
நாள்கணக்கில் குடியேறிய
நன்னீர் மழை....

விடுமுறையில் சிறையெடுக்கும்
தீப்பெட்டி தொழிற்சாலையில்
தற்காலிக விடுதலையாய்
பொழிந்த ஒரு கோடைமழை..

காக்கைக்கும் நரிக்கும்
கல்யாணமென கதையளக்க
வெயிலோடு உறவாடியமழை...

அடம்பிடித்து வாங்கிய
பட்டாசு நமத்துபோக
நசநசத்து தூறிய
ஐப்பசி அடைமழை..

முற்றமடைக்க
மண்புழு கூட்டிவந்து
படிதாண்ட பயம்விதைத்து
கொட்டித்தீர்த்த சாரல்மழை...

ரசித்தசைக்கும் நொடிபொழிய
கிளையெங்கும் சேகரமாகி
காத்திருக்கும் நீர்முத்து மழை..

காலச்சுழல் குடியேற்றிய
கான்கரீட் கானகத்தில்
காணொளியில் மட்டுமாய்
கண்ணில் பட்டும்

அனிச்சையாய் தெறிக்கும்
நியாபக சாரல்களில்
மனமெங்கும்
குளுமைவிதைக்கும்
மாய மழை ❤️ ❤️
 

Sponsored

Advertisements

Top