• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 13: Parakkirama Pandiyan kaalam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 13:

குழந்தையாக இருந்த இளவரசன் சடையவர்மன் வளர்ந்து வாலிபனாகி விட்டான். அவனுக்கு ஐயன் விந்தையன் குருகுலத்தில் நிறையப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவனது உடல் வலிமையோடு அறிவும் வலிமை பெற்று இருக்குமாறு கல்வி கற்பித்தார் குரு விந்தையன். வீர பத்திரன் எப்போதும் நீங்காமல் இருந்தான். இன்னும் ஓரிரு மாதங்களில் இளவரசனது குருகுலவாசம் முடிந்து விடும்.

அன்று இளவரசனை விந்தையன் குருகுலத்தில் விட்டு விட்டுச் சென்ற அரசன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் குருவான விந்தையன் வழிகாட்டியபடி செண்பகப்பொழில் என்ற திருகூட மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அந்த சின்னஞ்சிறிய ஊருக்கு வந்தனர். அமைச்சர் இளந்திரையனுக்கு அது தான் சொந்த ஊர் என்பதால் மன்னருக்கு அங்கே ஒரு அரசாங்கத்தை அமைப்பது எளிதாக இருந்தது. செண்பகப்பொழில், இலைஞ்சி, பைம்பொழில் ஆகிய ஊர்களையும் இன்னும் அங்கே இருந்த காடார்ந்த பகுதிகளையும் ஒன்றாக இணைத்தார்கள். அவர்களுடன் வந்த விவசாயப்பெருமக்கள் அந்த மண்ணை தொட்டு வணங்கி "பூமித்தாயே! ஊர் விட்டு ஊர் வந்திருக்கிறோம்! எங்களை ஏமாற்றாமல் முப்போகம் கொடுப்பாய் அம்மா" என்று வேண்டிக்கொண்டனர். அந்த மண் நல்ல சிவந்த நிறமாக இருந்ததால் செம்புறை மண் என்று கண்டு கொண்டார்கள்.

அதில் அரிசி, உளுந்து காய்கறிகள் எனப்பயிரிடலாம் என திட்டம் வகுத்துக்கொண்டார்கள். மன்னரும் காடுகளை வீரர்கள் உதவியுடன் தோட்டங்களாகவும் விளை நிலங்களாகவும் செய்தார்கள். குற்றாலத்திலிருந்து பொங்கி வரும் அருவியில் வாய்க்கால் செய்து அதனை வயல்களுக்கு வருமாறு அமைத்தனர். அதோடு குளங்களையும் வெட்டினார்கள். இவற்றை செய்து முடிக்க அவர்களுக்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் பிடித்தன. வயல்களில் நெல்லும், கரும்பும் உளுந்தும் தலையாட்டிச் சிரித்தன. அரசருக்கென ஊரின் வடகிழக்கே ஒரு சிறிய அரண்மனையும் அதனை ஒட்டி குடிமக்கள் வாழ வீடுகளும் அமைக்கப்பட்டன. இருந்த வயல்களில் விளை பொருட்கள் மக்களை பசிப்பிணி இன்றி தாங்கின மழைக்காலத்திலும் குளிர் காலத்திலும் வீடுகள் அவர்களைக் காத்தன.

மக்கள் அச்சமின்றி தங்கள்து பணிகளைச் செய்தனர். விந்தையனை சித்தர் என்றே அழைத்தனர். அதனால் அவரிடம் பயிலும் இளவரசனுக்கு நல்ல மரியாதை இருந்தது. எல்லா வசதிகளும் இருந்தும் மன்னருக்கு மதுரையை விட்டுத் தான் வந்தது தாங்க முடியாத சோகமாக இருந்தது. தனது கோழைத்தனமான செயலை எண்ணி எண்ணி கவலைப் பட்டார். அமைச்சர்கள் இளந்திரையனும், நலங்கிள்ளியும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை.

அரசவை கூடியிருந்தது. அமைச்சர்கள் , தளபதி நாடுகாவலதிகாரி எனப்பலரும் கூடியிருந்தனர்.

"அமைச்சரே! ஒரு முக்கியமான அறிவிப்பைச் சொல்வதற்காகத்தான் நான் இன்று அரசவையை அழைத்தேன்."

"மன்னா! தங்கள் நல்லாட்சியில் நாடும் மக்களும் நலமாக இருக்கிறார்கள். வயல் விளைந்து வீடுகளில் நெல்லும் பயறு வகைகளும் நிறைந்துள்ளன். அதனால் கருவூலம் கூட திருப்தியான நிலையில் தான் இருக்கிறது. "

"எனக்கும் அது தெரியும் அமைச்சரே! நான் இப்போது அறிவிக்க இருப்பது நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்து எடுத்த முடிவு"

"கேட்கக் காத்திருக்கிறோம் மன்னா"

"இளவரன் சடையவர்மனைப் பற்றி தங்களது கருத்து என்ன?"

"வீரத்திலும் அறிவாற்றலிலும் சிறந்தவர், பண்பிலும் அன்பிலும் சிறப்புற்றுத் திகழ்பவர். இதனை நான் மட்டும் சொல்லவில்லை மன்னா! இந்த நாடே சொல்கிறது"

"மிகவும் நன்று! அப்படியானால் என் வேலை சுலபம் ஆனது. இளவரசனது குருகுலவாசம் இன்னும் ஓரிரு திங்களில் நிறைவு பெற்று விடும் என குருதேவர் செய்தி அனுப்பியிருக்கிறார். அவன் நாடு திரும்பியதும் அவனுக்கு பட்டம் கட்டலாம் என்றிருக்கிறேன்" என்றார்.

இந்தச் செய்தியை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் திகைத்தனர் அவையினர். மன்னரே தொடர்ந்தார்.

"யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை! என் மகன் என்னை விடச் சிறந்த அரசனாக வருவான். அவனை மன்னனாக்கியதும் நானும் அரசியாரும் காசிக்குச் செல்லலாம் என்றிருக்கிறோம். எனக்கு இந்த அரச வாழ்வே வெறுத்து விட்டது. எதுவும் நிச்சயமில்லை. குருதேவரை இது பற்றிக் கேட்டபோதுஈசனின் திருவடிகளைப் பற்றிக்கொள்ளச் சொன்னார். அதனால் நாங்கள் வட நாட்டில் இருக்கும் காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கித் திரும்பலாம் என்றிருக்கிறோம்" என்றார்.

மேலும் மேலும் அதிர்ச்சிகளைக் கொடுக்கிறாரே மன்னர் என அவை பெரு மௌனம் பூண்டது.

"மன்னா! இளவரசருக்குப் பட்டம் சூட்டும் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் தாங்களும் அரசியாரும் ஏன் காசிக்குச் செல்ல வேண்டும்? இதை நமது குடிமக்கள் ஒப்புக்கொள்வார்களா? "

"ஒப்புக்கொள்ளும்படிச் செய்யத்தான் நீங்கள் இருக்கிறீர்களே அமைச்சர்களே! இளவரசனுக்குப் பட்டம் கட்டிவிட்டு நானும் இங்கேயே இருந்தால் தேவையில்லாத பல குழப்பங்கள் ஏற்படும். அவற்றைத் தவிர்க்கத்தான் இந்த யோசனை" என்றார்.

வேறு சிலரும் மன்னர் காசி யாத்திரை செல்வதற்கு ஒப்புதல் அளிக்கத் தயங்கினார்கள். ஆனால் அனைவரையும் பேசியே சரி செய்து விட்டார் மன்னர் சடையவர்மர் சுந்தர பாண்டியர். இளவரசனுக்குப் பட்டம் கட்டப்பட இருக்கிறது என்ற செய்தியை குருகுலத்துக்கும் அனுப்பினார். நாடு முழுவதும் முடி சூட்டு விழா குறித்த பேச்சுக்கள் ஆரம்பமாயின. மக்களுக்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. நாடு அமைந்து இந்தப் பத்தாண்டுகளில் பெரிய விழா எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால் இந்த விழாவை மிகவும் சிறப்பாகச் செய்வார் அரசர் என பேசிக்கொண்டனர்.

அங்க குருகுலத்தில் மன்னரிடமிருந்து வந்த செய்தியைப் படித்ததும் மிக்க மகிழ்ச்சி கொண்டார் குருதேவர் விந்தையன். இளவரசனை அழைத்து விஷயத்தைச் சொன்னார்.

"இன்னும் எனது கல்வி கூட நிறைவு பெறாத நிலையில் ஏன் தந்தை இந்த முடிவை எடுத்தார்?" என்றார் கலக்கத்துடன்.

"மகனே! பாண்டியா! உனது தந்தை புத்திக்கூர்மை மிக்கவர். அதனால் தான் அவர் நன்றாக இருக்கும் போதே உனக்கு முடிசூட்டிப் பார்க்க நினைக்கிறார். அவரது விருப்பத்துக்கு நீ இணங்கத்தான் வேண்டும்"

"தந்தையின் விருப்பமும் உங்களது விருப்பமும் அதுவானால் நான் கட்டாயம் முடி சூட்டிக்கொள்கிறேன் குருவே" என்றான்.

"பாண்டியா! உன்னிடம் மிக முக்கியமான விஷயத்தை இப்போது சொல்லப்பொகிறேன். அதோ அந்தக் குடிலில் கதவைச் சாத்தி விட்டு வா. வெளியே உனது நண்பன் வீர பத்திரன் நின்றிருந்தால் அவனை உணவு தயாராகி விட்டதா என பார்த்து வரச் சொல்" என்றார்.

இது நாள் வரையில் அனைவருக்கும் பொதுவாகவே கல்வி போதித்த குருதேவர் ஏன் இன்று இப்படி சொல்கிறார் என்ற வியப்புடன் அவர் சொன்னதைச் செய்தான்.

"பாண்டியா! ஆசான் அகத்தியரது பதின்மூன்றாம் தலைமுறை மாணவன் என உனக்குத்தெரியும் அல்லவா?"

"ஆம் குருவே"

"அகத்தியர் வெறும் தத்துவஞானி மட்டுமல்ல பாண்டியா! அவர் வானியல், மருத்துவம், கணிதம் என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியிருக்கிறார் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே!"

"நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் குருவே! அவர் இறந்தவர்களைக் கூடப் பிழைக்க வைக்கும் மந்திரத்தைக் கற்றவர் எனக் கூறுவார்கள்"

வெறுப்புடன் சிரித்தார் விந்தையன்.

"இது தான் நமது நாட்டின் பிரச்சனை! அறிவாற்றலில் சிறந்து விளங்கிய ஒருவரது ஆற்றல்கள் மிகவும் பெரிதாக்கப்பட்டு உயர்வு நவிற்சியின் எல்லையைக் கூட கடந்து விடுகிறது. யாராலும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்க முடியாது பாண்டியா! நான் இப்படிச் சொல்வதால் எனக்கு ஆசான் அகத்தியர் மீது மரியாதை இல்லையோ என நீ நினைக்க வேண்டாம். அவரை ஒரு விஞ்ஞானியாக, மருத்துவராக, வானியல் அறிஞராக நான் பார்க்கிறேன். அவரது அறிவாற்றலை வியக்கிறேன்."

"ஆனால் குருவே?"

"முதலில் நீ ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். மந்திரம் என்பது வெறும் சடங்குகளாகச் சொல்லப்படுபவை! அவற்றைக் கொண்டு இறந்தவனை பிழைக்க வைக்க முடியாது. அது மட்டுமல்ல மருந்து தான் ஒருவருடைய நோயை குணப்படுத்துமே தவிர மந்திரங்கள் அல்ல!"

"புரிந்தது குருவே"

"நல்லது! நான் சொல்லியபடி ஆசான் அகத்தியரும் அவரிடம் கல்வி கற்ற சில மாணவர்களும் மிக மிக அரிய கண்டுபிடிப்புகள் சிலவற்றைச் செய்திருக்கிறார்கள். என்ன காரணத்தாலோ அவைகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவில்லை. அவைகள் ஒரு இடத்தில் குறிப்பு எழுதி வைக்கப்பட்டு மறைந்து வைக்கப்பட்டுள்ளன"

"அவை என்ன கண்டுபிடிப்புகள் குருவே?"

"அதைப் பற்றியும் தெளிவாகத் தெரியவில்லை. இதோ இந்த ஓலையைப் பார்" என்று மிகவும்பழுப்பேறி மண் ஒட்டியிருந்த ஒரு ஓலையைக் கொடுத்தார். அதனை வாசித்துப் பார்த்தான். தெளிவாகப் புரியாவிட்டாலும் மனிதர்களுக்கு மிகவும் பயன் படும் சில கண்டுபிடிப்புக்கள் அகத்தியர் மற்றும் அவர்களது மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் தவறான கைகளுக்கு அவை போய் விட்டால் மனித இனத்துக்கு ஈடு செய்ய இயலாத இழப்புக்கள் ஏற்படலாம் என்றும் அதில் எழுதியிருந்தது. குருவை நிமிர்ந்து பார்த்தான் இளவரசன்.

"குருவே! இந்த ஓலை?"

"என் கைக்கு எப்படிக் கிடைத்தது என யோசிக்கிறாயா? இது என்னிடம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இருக்கிறது. நீ அரசனாகப் போவதால் எனக்கு உன் உதவி தேவை! அதனால் தான் உன்னிடம் இதைக் காட்டினேன்"

"என்ன உதவி குருவே! கட்டளையிடுங்கள் காத்திருக்கிறேன்"

"இந்த ஓலையைப் போலவே இதன் தொடர் ஓலை ஒன்றும் என்னிடம் உள்ளது. அதில் இந்தக் கண்டுபிடிப்புக்கள் அடங்கிய ஓலைகள் எங்கே மறைக்கப்பட்டிருக்கின்றன என்ற குறிப்பு இருக்கிறது. அதனைக் கொண்டு நான் அந்த மறைக்கப்பட்ட ஒலைகளை வெளிகொணர நினைக்கிறேன் பாண்டியா! அதற்குத்தான் உன் உதவி தேவை"

"காத்திருக்கிறேன் குருவே! முடி சூட்டு விழா முடிந்தததும் நானே அந்த ஓலைகளைத் தடிச் செல்கிறேன்"

"அவசரப்படாதே! நீ மன்னனாகி விட்டால் உனது முதல் கடமை நாடும் நாட்டு மக்களும் தான். அதனால் பொதிகை மலைக்காடுகளைப் பற்றி நன்கறிந்த ஒரு வீரனை எனக்குத்துணையாக அனுப்பு! ஒரு மன்னனாக உன்னால் இதனைச் செய்ய முடியும். நான் வாழும் காலத்தில் அகத்தியர் பெருமானின் அரிய கண்டுபிடிப்புக்களை மக்களுக்கு அளித்தேன் என்ற பெருமை எனக்குக் கிட்டும். ஆனால் இதனை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். யாரிடமும் சொல்லக் கூடாது"

"புரிந்தது ஆசானே! உங்கள் விருப்பம் போல செயல்படுவேன்" என்றான் இளவரசன். அத்துடன் அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
முதலில் நீ ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். மந்திரம் என்பது வெறும் சடங்குகளாகச் சொல்லப்படுபவை! அவற்றைக் கொண்டு இறந்தவனை பிழைக்க வைக்க முடியாது. அது மட்டுமல்ல மருந்து தான் ஒருவருடைய நோயை குணப்படுத்துமே தவிர மந்திரங்கள் அல்ல!
well said sisView attachment 263திருகூடமலை என்றால் குற்றலாமா sisஅருமையான பதிவு sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top