• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode azhagiyin kaathal thavam 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 18

ஐநூறு வருடங்களுக்கு முன்:

அரசபையில் தோட்ட வேலை பார்ப்பவர் தான் ரவிவர்மன், அவரின் மகன் ஆத்தியவர்மன் பத்து வயது சிறுவன். அப்பொழுது கல்வி எல்லாம் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இருந்தது, ஆகையால் பாடகசாலை அவன் செல்லவில்லை.

ஆனால், அவனுக்கு இயற்கையிலே சொல்லிக் கொடுத்தால், புரிந்து கொள்ளும் ஞானம் அதிகமாக இருந்தது. அரசர் ஒரு தடவை அதை கவனித்து, அவனை தன் பொறுப்பில் பாடகசாலை அனுப்பி வைத்தார்.

அங்கே படித்துக் கொண்டு இருந்த பாசில், இதை முதலில் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் அதன் பிறகான நாட்களில், குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற பெயர் எடுத்து, ஆதி பாசிலை பின் தள்ளிய பிறகு தான் பாசிலின் கவனம் அவன் புறம் திரும்பியது.

“ஏய்! கருப்பு இனத்தை சேர்ந்தவனே! நான் சொல்லுவதை கவனமாக கேள்! என் பேச்சு கேட்டு ஒழுங்காக இருந்தால், நீ பிழைத்துக் கொள்வாய், இல்லையேல் உன்னை நான் நசுக்கி விடுவேன், ஜாக்கிரதை!” என்று எச்சரிக்கை செய்தான் பாசில்.

“நான் என்ன தவறு செய்தேன்? தங்களுக்கு அப்படி என்ன என் மேல் கோபம்? என் பெயர் ஆதித்யவர்மன், தாங்கள் அப்படி அழைத்தால் நல்லது” என்று பதிலுக்கு ஆதி கூறியதை கேட்டு, கோபம் கொண்டான் பாசில்.

கோபத்தில் இருந்த பாசில், ஆதியின் முகத்தில் அப்பொழுது இருந்த சிறு சிறு கரும்புள்ளிகளை பார்த்து, அதை வைத்து கிண்டல் செய்ய தொடங்கினான்.

“உன் முகத்தை பார்த்தால், கரும்புள்ளி என்று அழைத்தால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆகையால் இனி உம்மை, நான் கரும்புள்ளியே என்று தான் அழைக்க போகிறேன்” என்று கூறியதோடு அல்லாமல், தன் கூட படிக்கும் மாணவர்களை அழைத்து, அவனை கரும்புள்ளி என்று அழைக்க செய்து இருந்தான்.

கோபம் கொண்டு அவனை அடிக்க எண்ணினாலும், அவனால் அடிக்க முடியவில்லை. காரணம், அவன் தந்தை அவனுக்கு அத்தனை அறிவுரை வழங்கி இருந்தார்.

“உம்முடைய புத்திகூர்மையை சோதித்து தெரிந்த பிறகு தான், அரசர் உம்மை பாடகசாலைக்கு அனுப்பி இருக்கிறார். அங்கே படிப்பவர்கள் எல்லாம், அரச குல பிள்ளைகள். உம்மை வம்பு வளர்த்தால், அதை கண்டுகொள்ளாமல், கடந்து வர வேண்டியது உம்முடைய பொறுப்பு”.

“நாளை உம்மால், அங்கு ஒரு பிரச்சனை வந்தது என்று எனக்கு செய்தி வர கூடாது, புரிகிறதா உமக்கு?” என்று வினவினார் அவனின் தந்தை.

“எமக்கு நன்றாக புரிகிறது தந்தையே! நான் நன்றாக படித்து, கல்வி ஞானம் பெற்று, தங்களுக்கும், அரசருக்கும் புகழ் சேர்ப்பேன்” என்று தந்தைக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு தான், இங்கே வந்தான்.

அது மட்டுமில்லாமல், அவனுக்கு குரு சொல்லிக் கொடுத்த முதல் பாடமே, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது தான். தந்தை என்றுமே, தன் பிள்ளைக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக தான் இருப்பார், ஆகையால் அவர் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி இருந்தார்.

அதை எல்லாம் நினைத்து பார்த்தவன், அந்த இடத்தை விட்டு செல்வது நல்லது என்று தோன்றியது, ஆகையால் ஒன்றும் கூறாமல் அங்கு இருந்து விலகி சென்றான்.

இவ்வளவு அவமானப்படுத்தியும், அவன் ஒன்றும் கூறாமல் வெளியேறியது இன்னும் பாசிலின் கோபத்தை கூட்டியதே தவிர, குறையவில்லை அவனின் கோபம்.

நாட்கள் செல்ல செல்ல, ஆதி அவனின் அந்த அழைப்புக்கு பழகி இருந்தான். ஒரு காதில் வாங்கி, மறு காதில் விட பழகி இருந்தான். சொல்லிக் கொடுக்கும் பாடங்களை தவிர்த்து, மற்றதை எல்லாம் மனதில் பதிய வைக்கவில்லை அவன்.

அவனின் இந்த செய்கையை பார்த்து, பாசில் அதன் பிறகு அவனை அவ்வாறு அழைப்பதை நிறுத்திக் கொண்டான். அதன் பின் ஆறு வருடங்கள் வேகமாக ஓடியது, பாசில் மனதில் இன்னும் ஆதியை பற்றிய எண்ணம் மாறாமல் அப்படியே இருந்தது.

இதன் நடுவில், அரசர் ஆதியை அழைத்து தன் மகள் மதியழகியை பத்திரமாக பாடகசாலையில் பார்த்துக் கொள்ளுமாறு கூறவும், அவன் சரியென்றான்.

மறுநாள், பாடகசாலைக்கு வந்த மதியழகியை பார்த்து மயங்கி இருந்தனர் இருவர். அதில் ஒருவன் ஆதி, மற்றொருவன் பாசில்.

அவளின் அழகில் மயங்கிய பாசில் ஒரு பக்கமும், தன்னையும் ஒரு மனிதனாக மதிக்கும் அவளின் குணத்தை கண்டு மயங்கிய ஆதி மறு பக்கமும் அடுத்து அவளுக்காக சண்டையிட தொடங்கினர்.

எப்பொழுது அரசர் அவளை, தன்னுடைய பொறுப்பில் விட்டு சென்றாரோ, அவன் அப்பொழுதே அவளின் பாதுகாவலனாக மாறி இருந்தான் ஆதி. பாசில் அவளை நெருங்க நினைத்தால், இவன் அவனை நெருங்க விடாமல் தடுத்து விடுவான்.

“மன்னிக்கவும்! இளவரசி அருகே யாரையும் நெருங்க விட வேண்டாம் என்று, அரசர் எனக்கு கட்டளை விதித்து இருக்கிறார். ஆகையால், தாங்கள் ஒதுங்கி இருப்பது நலம் என நினைக்கிறேன்” என்று ஆதி, பாசிலிடம் கூறவும் அவனுக்கு ஆதியை அடித்து நொறுக்க வேண்டும் என்ற வேகம் வந்தது.

“டேய் கரும்புள்ளி! நீ சற்று ஒதுங்கி நில், என் வழியில் குறுக்கிட்டால், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் தெரிந்து கொள். ஆகையால், நான் இனி மதியிடம் நெருங்கி பழகுவேன், என்னை தடுக்காதே” என்று எச்சரித்தான் பாசில்.

“அப்படி நெருங்க முயற்சித்தால், அரசர் அடுத்து தங்களின் தலையை கொய்து விடுவார், ஜாக்கிரதை” என்று எச்சரிக்கை செய்துவிட்டு சென்றான் ஆதி.

பாசில், நேராக அதே கோபத்துடன் தன் மாமனிடம் சென்றான்.

“மாமா! அந்த கரும்புள்ளி என் வழியில் குறுக்கே நிற்கிறான். அங்கே குருவிடம் நல்ல பெயர் வாங்கியது மட்டுமில்லாமல், இப்பொழுது அரசரின் மகள் மதியழகிக்கும் பாதுகாவலானாக இருந்து, என்னை அவள் அருகில் விடாமல் செய்கிறான்”.

“இன்றோடு, இதற்க்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். தாங்கள் அதற்க்கு ஒரு வழி சொல்லுங்கள், அவன் இனி எக்காரணம் கொண்டும் என் வழியில் வருவதை நான் விரும்பவில்லை” என்று கூறிய பாசிலை கண்டு புன்னகைத்தார்.

“நீ என் வாரிசு என்று நிருபிக்கிறாய் மருமகனே! கவலை கொள்ளாதே! நாளையே, அவன் கதையை முடிக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று அவன் மாமன் அலிகான் கூறினார்.

இங்கே அரண்மனையில், அரசர் மதியழகியிடம் பாடகசாலை சென்ற அனுபவம் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்தார்.

“தந்தையே! எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது, எல்லோரும் என்னிடம் நன்றாக பழகுகிறார்கள், அது மட்டும் இல்லை புதிதாக எனக்கு இரண்டு தோழிகளும் கிடைத்து இருக்கின்றனர்” என்று சந்தோஷத்தில் ஆர்பரிக்கும் மகளை, அனைத்துக் கொண்டார்.

அப்பொழுது அங்கே ஆதி, தன் தந்தைக்கு உதவியாக தோட்டத்தில் வேலை பார்ப்பதை பார்த்த மதி, தந்தையிடம் அவனை பற்றி விசாரித்தாள்.

“தந்தையே! அதோ நிற்கிறாரே அவர் யார்? இன்று சிலர் என்னிடம் பேச நினைக்கையில், அவர் தடுத்துக் கொண்டே இருந்தார்” என்று அங்கு நடந்ததை கூறவும், அரசர் அவன் யார் என்பதை மட்டும் கூறினார்.

அதன் பின் அரசர் மகளிடம் சில விஷயங்கள் பேசிவிட்டு, வெளியே தோட்டத்திற்கு வந்தார். ஆதியிடம் இயல்பாக பாடகசாலை பற்றி பேசிவிட்டு, மகளின் பாதுகாப்பு பற்றி இப்பொழுது விசாரிக்க தொடங்கினார்.

“அரசே! என்னை விட சற்று வயது கூடினவர், அவர் பெயர் சப்பாஹ் பாசில். குருவிடம் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது, ஆனாலும் அவர் நம் இளவரசியை பார்க்கும் பார்வை சரியில்லாதது போல் இருந்தது. அதனால் தான், நான் அவரை தடுக்க வேண்டியதாக இருந்தது அரசே”.

“இன்னும் சற்று நேரத்தில், தந்தையுடன் இது பற்றி தங்களிடம் பேச நினைத்து இருந்தேன். இப்பொழுது தாங்கள் கேட்கவும், கூறிவிட்டேன் ” எனவும் அவர் இன்னும் சற்று கவனத்துடன், தன் மகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றார்.

அரசர் அரண்மனையில், தன்னுடன் வந்த ஆலோசகரிடம் இது பற்றி விவாதித்தார்.

“அரசே! தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை, அவன் அலிகானின் மருமகன். அவனின் வளர்ப்பு வேறு, கேட்கவும் வேண்டுமா!”.

“அது மட்டுமில்லாமல், அரசியை மட்டுமில்லாமல், நாம் இப்பொழுது ஆதித்ய வர்மனையும் பாதுகாக்க வேண்டும் அரசே. பாசிலை எதிர்த்து இருக்கிறான், நம் இளவரசியின் பாதுகாப்பிற்காக”.

“ஆகையால், அவனும் இப்பொழுது பாதுகாக்கப்பட வேண்டியவன். நாம் மறைமுகமாக பாதுகாப்புக்கு, சில வீரர்களை அனுப்பி வைக்கலாம் அரசே, அது தான் நல்லது என்று படுகிறது எனக்கு” என்று ஆலோசகர் கூறவும், அரசருக்கும் அதுவே சரி என்று பட்டது.

“சரி அதற்க்கான வேலையை பாருங்கள், ஆலோசகரே! இது நமக்குள் இருக்கட்டும், அரசிகளுக்கு இது பற்றி தெரிய வேண்டாம்” என்று கூறிவிட்டு சென்றார்.

அதன் படி மறுநாள் முதல், நம்பிக்கைக்குரிய வீரர்கள் ஐந்து பேர் மதிக்கும், ஆதிக்கும் பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செயப்பட்டது. இதற்கிடையில், அலிகான் பாசிலிடம் சரியான தருனத்திற்காக காத்து இருக்கும்படி கூறினார்.

ஆகையால் அவன் சற்று தள்ளி நின்றே, மதியை கண்களால் பருகிக் கொண்டு இருந்தான். பெண்களுக்கே இருக்கும் மெல்லிய உள்ளுணர்வினால், மதிக்கு தன்னை யாரோ உற்று பார்கின்றனர் என்று புரிந்தது.

யாரென்று திரும்பி பார்க்க, அங்கே பாசில் விடாமல் இவளையே பார்த்துக் கொண்டு இருந்தது, அவளின் கருத்தில் பட்டது. அவனின் பார்வை பயத்தை கொடுக்கவும், அவள் திரும்பி அங்கே ஆதியை தேடினாள்.

ஒரு மறைவிடத்தில் இவர்களை கண்காணித்துக் கொண்டு இருந்த ஆதி, மதி பயத்தில் தன்னை தேடுவதை உணர்ந்து, அவளருகே நெருங்கினான்.

“இளவரசி! தங்களுக்கு ஏதும் தேவையா?” என்று வந்து கேட்கவும், அவள் அவனை சற்று கூடவே இருக்குமாறு கூறவும், அவன் மறுத்தான்.

“மன்னிக்கவும் இளவரசி! தங்கள் பெயருக்கு எந்த களங்கமும் வர கூடாது என்பதற்காக, நான் சற்று தள்ளி நின்று பாதுக்காக்கிறேன். பயப்பட வேண்டாம்! என்னை மீறி யாரும் தங்களை நெருங்க முடியாது” என்று அவன் வாக்குறுதி கொடுக்கவும், மனமே இல்லாமல் சரி என்றாள்.

அவளின் பயத்தை பார்த்தவனுக்கு, பாசிலை நொறுக்க வேண்டும் என்ற வெறியே இருந்தது ஆதிக்கு. ஆனால் அவன் பொறுமை காத்தான், நிச்சயம் அரசர் இதற்க்கு ஒரு முடிவு எடுப்பார் என்று நம்பினான்.

அவன் நினைத்தது போல், அரசருக்கு இந்த செய்தி கிட்டவும் மறைமுகமாக பாசிலுக்கு எச்சரிக்கை செய்தார். அதில் இருந்து அவன் பாடகசாலை வருவதை, நிறுத்தி இருந்தான்.

அதன் பிறகு, மதி நிம்மதியாக உணர்ந்தாள். ஆதிக்கும், அவன் இப்படி வராமல் இருந்தது மகிழ்ச்சி அளித்தது. அவன் இல்லை என்றாலும், இளவரசியை பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்று கருதி அவன் அதை சரியாக செய்து வந்தான்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
பாசில் வராததை உறுதி செய்த பின்னர், வீரர்களை மீண்டும் அரண்மனை பாதுகாப்புக்கு எடுத்துக் கொண்டார் அரசர். அப்பொழுது சரியான தருணத்திற்காக காத்துக் கொண்டு இருந்த பாசில், அவனின் மாமன் ஆலோசனை படி, ஆதி தனியாக அவனின் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த நேரம், அவனை அடித்து வீழ்த்தினான்.

“இனி இளவரசிக்கு பாதுகாப்பு எப்படி கொடுப்பாய்? என் எதிரி கரும்புள்ளியே! என்னை எதிர்த்தால் இதான் கதி, தெரிந்து கொள்” என்று எக்காள சிரிப்பு சிரித்தான்.

“இளவரசி மதியை பாதுகாக்க மட்டுமில்லாமல், உன்னை அழிக்கவும் நான் மறுஜென்மம் எடுப்பேன் சப்பாஹ் பாசில். மதியழகி எனக்கு மட்டும் தான், அவளை மணமுடித்து பாதுகாப்பேன்”.

“உன்னால் ஒன்றும் செய்ய முடியாது, இது நான் வணங்கும் அந்த சிவனின் மேல் ஆணையாக கூறுகிறேன்” என்று கூறிவிட்டு கடைசி மூச்சை நிறுத்தி இருந்தான்.

அந்த இடத்திற்கு தற்செயலாக வந்த அரண்மனை வீரர் ஒருவர், ஓடி சென்று இந்த விஷயத்தை அரசரிடம் தெரிவித்தார். உடனே அரண்மனைக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்துவிட்டு, அரசர் தன்னுடன் சில வீரர்களையும், ஆலோசகரையும் அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்கு விரைந்தார்.

அவர் அங்கு விரைந்து செல்லும் பொழுதே, ஆதியின் பெற்றவர்களுக்கு விஷயம் தெரிந்து, ஆதியுடன் அவர்களும் விஷம் குடித்து மாய்ந்து போயினர் அதே இடத்தில். அரசருக்கு அதிர்ச்சியாக இருந்தது, மகளை காத்த ஆதியின் மேல் மதிப்பு இருந்தது முன்பு.

இன்று வீரர் வந்து சொன்ன செய்தி கேட்டு, அவருக்கு மனதில் அவன் மீண்டும் மறுஜென்மம் எடுக்க வேண்டும் என்று விரும்பினார். அவன் நினைத்தது போல், மகளையும் மணம் முடித்து, அந்த பாசிலையும் அழிக்க அவனுக்கு மீண்டும் மறுஜென்மம் கொடுக்குமாறு, மனமார இறைவனை வேண்டினார்.

ஆதியின் குடும்ப உறுப்பினாராக அரசரே முன்னின்று, அவர்களின் இறுதி சடங்கை செய்து முடித்தார். இது பற்றி அரசிகளுக்கும், மகள், மகனுக்கும் எதுவும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்.

மகளுக்கும், மகனுக்கும் அரண்மனையிலே குருவை வரவழைத்து எல்லா கல்வியையும் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். வருடங்களும் உருண்டோடியது, ஒரு முறை மகள் வரைந்த வீரனை பார்த்து, எங்கோ பார்த்த முகம் போல் இருக்கிறதே, என்று நினைவடுக்கில் தேடினார்.

தெரியவில்லை அவருக்கு அப்பொழுது, மகளிடம் கேட்டதற்கு கனவில் வந்த மாவீரன், இவரை தேடி பிடித்து எனக்கு மனமுடியுங்கள் என்று கூறவும், மகளின் விருப்பத்திற்கு சம்மதித்ததோடு அல்லாமல், அவனை தேடவும் வீரர்களை அனுப்பினார்.

அந்த முகம் அவருக்கு எங்கோ பார்த்தது போல் இருக்கவும், திரும்பவும் தன் நினைவடுக்கில் தேடினார். அப்பொழுது அந்த படத்தில், இரு புருவத்திற்கும் நடுவில் இருந்த திரிசூலம் அவருக்கு, அதை ஆதியின் முகத்தில் பார்த்த நியாபகம் வந்தது.

மீண்டும், அந்த படத்தை உற்று பார்த்தவருக்கு அது ஆதியே தான் என்று உறுதி ஆனது. மறுஜென்மம் எடுத்து இருப்பான் உறுதியாக என்று எண்ணி, மீண்டும் வீரர்களை அழைத்து நன்றாக தேட சொல்லி இருந்தார்.


“கடவுளின் முடிச்சு இதுவாக இருந்தால், நிச்சயம் நீ மறுஜென்மம் எடுத்து இருப்பாயடா ஆதி! உனக்காக என் மகள் மட்டுமல்ல, நானும் காத்துக் கொண்டு இருக்கிறேன்” என்று மனதிற்குள் சந்தோசம் அடைந்தார்.

ஆனால் இன்னும் அவன் கிடைக்கவில்லை என்ற செய்தி, அரசருக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் அவன் பிறந்து இருக்கிறான் என்ற செய்தியை துறவி கூறியபின், மகளை பத்திரமாக அவன் கையில் ஒப்படைக்க துடித்தார்.

ஆனால் அடுத்து துறவி சொன்னதை கேட்டு, அரசருக்கு பயம் பிடித்தது. மகள் கால சக்கரம் வழியாக செல்ல வேண்டும் என்று துறவி கூறவும், அவர் முதலில் மறுத்தார்.

துறவியோ, பாசில் இப்பொழுது இருக்கும் நிலையை எடுத்துக் கூறி, ஆதியால் தான் மகளை காப்பாற்ற முடியும், ஆகையால் மதி மட்டுமே கால சக்கரம் வழியாக செல்ல வேண்டும் என்ற நிபந்தனை விதித்து இருந்தார்.

மகள் அடுத்து சென்ற தகவலை கேட்டு, இனி மகளை பார்க்க முடியாதே என்ற ஏக்கத்தில் தான், நெஞ்சு வலியில் அன்று துடித்தார். ஆனால் அலிகான் போர் தொடுக்க அடுத்து ஏற்பாடு செய்யவும், உடனே மகனை விட்டு எல்லாவற்றையும் செய்து முடித்து இருந்தார்.

மனைவிகளுக்கும், மகள் அவளின் துணையுடன் பாதுக்காப்பாக இருப்பாள் என்று வாக்குறுதி கொடுத்து இருந்தார்.

இன்று:

இதை எல்லாம் ஆதி ஒரு பக்கம் நினைக்க, மறுபக்கம் தஞ்சையில் ஆதி பிறப்பை அவன் தாய்க்கு எடுத்து சொன்ன அந்த பெரியவரும் நினைத்து பார்த்தார்.

அன்றிரவு, இதை எல்லாம் நினைத்து பார்த்த ஆதி அப்படியே கண்ணயர்ந்தான். மறுநாள் காலையில் வேகமாக, அவனின் அழகியை காண மருத்துவமனை விரைந்தான். அங்கே அப்பொழுது தான் அவளும் கண் விழித்ததால், மருத்துவர்கள் அவளை பரிசோதித்துக் கொண்டு இருந்தனர்.

மருத்துவமனை வந்தடைந்த ஆதி, அழகியை பார்க்க அவள் இருந்த icu பகுதிக்கு வந்து சேர்ந்தான். அங்கே அவனின் தாயும், தந்தையும், கூடவே ரமணனும் இருந்தனர்.

“அம்மா! அழகி கண் முளிசுட்டாளா! டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கேட்டான்.

“இப்போ தான் டா கண் முழிச்சா, டாக்டர் உள்ள பார்த்துகிட்டு இருக்காங்க” என்று கூறினார்.

சரியாக பத்து நிமிடம் கழித்து வெளியே டாக்டர் வரவும், அவரிடம் அவளின் நலன் குறித்து விசாரித்தான். இன்னும் இரண்டு நாட்கள், இங்கே அவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று கூறினார்.

ரத்த இழப்பு அதிகம் என்றதால், இன்னும் இரண்டு நாட்கள் இருந்தால் அவளின் முன்னேற்றத்தை பார்த்துவிட்டு, அதன் பின் அனுப்ப உத்தேசித்து இருப்பதாக அவர் கூறவும், அவனும் சரி என்றான்.

உள்ளே சென்று அழகியை பார்த்தவன், சோர்ந்து படுத்து இருந்த அவளை பார்த்து வருத்தம் அடைந்தான். அவளோ, இவனை பார்த்து மென்மையாக புன்னகைத்து, அவனை அருகில் அழைத்தாள்.

“நான் தான் நல்லா இருக்கேன் ல, அப்புறம் ஏன் முகத்தை இப்படி வச்சு இருக்கீங்க? நல்லா சிரிங்க! நம்ம வீட்டுக்கு, உங்க மனைவியா முழு உரிமையோட வர போறேன், அதை நினைச்சு சந்தோஷப்படுங்க” என்று கூறியவளை பார்த்து, கண்ணீர் வழிய சிரித்தான்.

“என்னை மன்னிச்சுடு அழகி, அவனை நான் அப்போவே அடிச்சு கொன்னு இருந்தா, இப்போ நீ இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க மாட்ட. நீயும், உங்க அம்மா, அப்பா, தம்பி எல்லோர்கூடவும் சந்தோஷமா இருந்து இருக்கலாம்” என்று வருந்தியவனின் தலையை மெதுவாக கோதி, அவனை வருத்தப்படாமல் இருக்குமாறு கூறினாள்.

“இப்படி தான் நாம சேரனும்ன்னு, கடவுள் முன்னமே எழுதி வச்சு இருந்தா, நாம என்ன செய்ய முடியும்? அதனால எல்லாம் நல்லதுக்குன்னு நினைங்க” என்று அவள் அவனை சமாதனம் செய்து கொண்டு இருந்தாள்.

அடுத்து வந்த நாட்களில், ஆதியின் கவனிப்பும், ஆதியின் அன்னை கவனிப்பும், அவளை திருமணத்திற்கு தயார் என்ற நிலையில் தெம்பாக்கியது.

பெரியவர்களும், நல்ல நாள் பார்த்து, பெரிய மண்டபம் பிடித்து இவர்களுக்கு திருமணம் செய்து வைத்து முடித்தனர். மண்டபத்தில், கிருஷ்ணா, விஷ்வா தங்களின் ஜோடியை சைட் அடித்துக் கொண்டும், அண்ணனின் திருமணத்தில் வேலை பார்த்துக் கொண்டும், உற்சாகமாக வலைய வந்தனர்.

திருமணத்திற்கு, ஆதியின் அன்னை காமாட்சி அந்த பெரியவரை அழைத்து இருந்தார். அவர் கண்களில் இருந்த தீட்சண்யம், ஆதிக்கு அவரை எங்கோ பார்த்த உணர்வு, மதிக்கும் அப்படியே.

அவர்கள் கண்டுகொள்ளும் முன்னர், அந்த பெரியவர் அங்கு இருந்து சென்று இருந்தார். அவர் வேறு யாருமில்லை, துறவியின் யோசனைப்படி ஆதியின் வரலாறை அவன் அன்னைக்கு கூற, அரசரை கால சக்கரத்திற்குள் அனுப்பி வைத்தார்.

காமாட்சியிடம் அவர் விஷயத்தை கூறும் பொழுது, முதலில் தன்னை பற்றி கூறாமல் இருந்தவர், மகளை காணும் ஏக்கத்தில் அவர் யார் என்பதை கூறினார்.

அதனால் தான் காமாட்சி, அவருக்கு அழைப்பு விடுத்து இருந்தார். தங்களோடு இருக்குமாறு சொல்லியும், அவர் சிவன் இருக்கும் இடத்தில் இருக்க தான் விருப்பம் என்று கூறிவிட்டார்.

தன்னை பற்றியும், இருவருக்கும் கூற வேண்டாம் என்று தடுத்து விட்டார். ஏனெனில், அவரின் முடிவும் அவருக்கு தெரியும், மகள் இனி கணவருடன் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

இனி எந்தவொரு கஷ்டத்தையும், கொடுக்க அவர் விரும்பவில்லை. மகளை விட, ஆதி பட்ட கஷ்டம் அவர் அறிந்ததே, ஆகையால் தான் அவர் இந்த முடிவு எடுத்து இருந்தார்.

சில பல கலட்டாகளுடன், திருமண சடங்கு எல்லாம் முடிந்து தம்பதிகளாக இப்பொழுது ஆதியின் வீட்டில் நுழைந்தனர். இருவருக்கும், முதல்முதலில் இங்கே ஒன்றாக வந்த நினைவு வந்து, முகத்தில் சிரிப்பு வந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அது அழகாக விஷ்வாவின் புகைப்பட கருவியில், தத்ரூபமாக விழுந்தது.

தொடரும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top