Chocolate boy - 13

#1
சாக்லேட் பாய் – 13

“ Lets break up.......”

ஹர்ஷா பேசிய வார்த்தைகள் தர்ஷினியின் பூ மனதை ரணமாக்கியிருக்க அதன் வலியில் முகம் சுருங்க கூட நேரமில்லாமல் பணியில் முழ்கியிருந்தாள் தர்ஷினி. மூன்று மாத கால பயிற்சிக்கு பின் அவள் தேர்ந்தெடுக்கபட்ட முதல் திட்டப்பணி அது. மனம் இயங்க முரண்டினாலும் இழுத்து பிடித்து தன் வேலைகளை செவ்வனே செய்து கொண்டிருந்தாள். அவ்வப்போது ஒரு ஏக்க பார்வையை ஹர்ஷா மீது வீசவும் தவறவில்லை ஆனால் அவனோ மறந்தும் அவள் புறம் திரும்பவில்லை.

“அவ்வளவு தானா.... நம் காதல் அவ்வளவு தானா ஹர்ஷா? எல்லாம் முடிந்துவிட்டதா? என் மனம் உனக்கு புரியவேயில்லையா? நான் எதிர்பாராத தருணத்தில் அது நிகழ்ந்துவிட்டதில் சிறிது பதறிவிட்டேனடா..... நீ கணவனாக இருந்திருந்திருந்தாலும் கூட உன் முதல் முத்தத்தில் படபடத்து தான் போயிருப்பேன்.ஏற்கனவே நீ ஒரு முறை என்னை முத்தமிட்டிருக்கிறாய். அன்று அதில் துளியும் காமம் கலந்திருக்கவில்லை ஆனால் இன்றோ சத்தியமாய் உன் முத்தத்தில் காமம் கலந்திருந்தது. என் பெண்மை உனக்கு புரியவில்லையா ? இந்த காலத்தில் ஆயிரம் பெண்கள் ஆயிரம் வகையில் இருக்கலாம்.... உன் தர்ஷி எவ்வகை என உனக்கு தெரியவில்லையா?” கண்களும் கைகளும் வேலையில் முனைப்பாக இருக்க அவள் மனம் மட்டும் மௌனமாய் கதறிக் கொண்டிருந்தது.

இப்படியே ஒரு வாரம் கடந்துவிட்டது. ஹர்ஷாவிடம் எந்த மாற்றமும் இல்லை. இப்பொழுதெல்லாம் அவன் தர்ஷினியின் கணினியில் குறியீட்டை மாற்றுவதில்லை. சாடையாக பேசி சீண்டுவதில்லை . இரவில் அவள் போனில் அழைத்தாலும் பேசுவதில்லை. அவள் அனுப்பும் எந்த குறுஞ்செய்திக்கும் பதிலளிப்பதில்லை. புதிதாக தொடங்கிய திட்டப்பணியில் சிக்கி கொண்டவளுக்கு அவனிடம் பேச சின்ன அவகாசம் கூட கிடைக்கவில்லை. முன்பொருமுறை அவர்களிடயே கருத்து வேறுபாடு வந்தபோது ஹர்ஷா சிறிதும் தயக்கம் காட்டாமல் தானே வந்து பேசினான் ஆனால் இப்போதோ அவர்களிடையே காதல் இருந்ததா என எண்ணும்மளவுக்கு விலகியிருந்தான். முதல் நான்கு நாட்கள் மட்டுமே சிறிது கவலையாக தெரிந்தான் அதன்பின் வழக்கம் போல் சிரிப்பு தான்.... அரட்டை தான்....

அலுவலகத்தில் அனைவரிடமும் முகம் மலர்ந்து பேசுபவன் அவளிடம் மட்டும் பாராமுகமாக இருப்பது தர்ஷினிக்கு வேதனையாக இருந்தது.இதுவரை அங்கே யாரும் ஹர்ஷாவின் கோப முகத்தை பார்த்ததில்லை. அவனின் சுடுசொல்லை கேட்டதில்லை ஆனால் தர்ஷினி மட்டுமே அவ்விரண்டையும் கண்டிருக்கிறாள். ஏனென்றால் அவள் மட்டுமே அவனுடையவள். ஊரில் அனைவரிடமும் சிடுமூஞ்சியாய் இருப்பவர்கள் தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் அன்பாய் பேசுவார்கள். மற்றவர்களிடம் சிரித்து சிரித்து பேசுபவர்கள் தன்னவரிடம் மட்டும் தன் கோபத்தையும் வருத்தத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். இது இயற்கையின் இயல்பான முரண்பாடு.

மேலும் ஒரு வாரம் முடிந்திருக்க, திட்டப்பணிகளின் முதற்கட்ட வேலைகள் முடிந்து தர்ஷினிக்கு சற்று ஓய்வு கிடைத்தது. இத்தனை நாள் பெரும்பாலும் டீம் லீட்டின் அறையிலேயே இருப்பாள். இன்று தான் தன் இருக்கைக்கு திரும்பியிருந்தாள். அதுவும் மதியத்திற்கு பிறகு தான் இந்த ஓய்வு. தர்ஷினி கிடைத்த இந்த சிறிய சந்தர்ப்பத்தை தவறவிட விரும்பவில்லை. தன் இருக்கைக்கு திரும்பியதும் அவளது பார்வை தன்னவனை தான் தேடியது. மகேஷின் கணினியில் ஏதோ சரிபார்த்து கொண்டிருந்தான் ஹர்ஷா. தனது அலைபேசி எடுத்து அவனுக்கு அழைப்பு விடுத்தாள் தர்ஷினி.

‘எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று....
ஏதோ.... அது ஏதோ....
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது...
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னை தொட மாட்டேன்....’

அமைதியான அந்த ஹாலில் ஹர்ஷாவின் அலைபேசி மெல்லிசையை இசைக்க, அனைவரது கவனமும் அங்கே தான் திரும்பியது. தன் கைபேசியை தனது மேஜை மேல் வைத்திருந்தான் ஹர்ஷா. அவனோ ரமேஷின் இருக்கையில். ஹர்ஷா தனது எண்ணுக்கு இப்படியொரு ரின்டோன் வைத்திருப்பது தர்ஷினிக்கு இப்போது தான் தெரியும். அவள் பாடல் வரிகளில் லயித்து போனாள். ஹர்ஷாவின் பேசியில் இந்த பாடலை கேட்டதும் அங்கிருந்த அனைவருக்கும் ஓரே பரபரப்பு. சாரு எழுந்து அவனது மேஜைக்கு அருகில் வர, மகேஷின் இருக்கையிலிருந்து அவசரமாக வந்து கொண்டிருந்தவன் சாரு பேசியை பார்பதற்குள் பாய்ந்து எடுத்தான்.

விடாமல் ஒலித்துக் கொண்டிருந்த பேசியை அணைத்து சட்டைப்பைக்குள் போட்டவன், “ என் போன எதுக்கு எட்டி பார்க்குற?” என்றான்.

“டேய் ஹர்ஷா.... யார்டா அது?” என்றாள் சாரு பேராவலாய்.

“யாராயிருந்தா உனக்கென?”

“ என்னடா இப்படி சொல்லிட்ட நாம என்ன அப்படியா பழகுறோம்” என சிணுங்கினாள் அவள்.

“ ம்ப்ச்.... தெரிஞ்சவங்க சாரு”

“ஓஹோ.... தெரிஞ்சவங்களுக்கு தான் இந்த ரின்டோன் வைப்பாங்களா?” என்றபடி அங்கே வந்தாள் ரம்யா.

“ அப்பாடா.... ரொம்ப சந்தோஷம்டா ஹர்ஷா. இனிமேலாவது நம்ம ஆபிஸ் பொண்ணுங்க பார்வை எங்க மேல படும்” தேவா நிம்மதி பெருமூச்சு விட்டபடி கூறினான்.

“ ஓ.கே...ஓ.கே எல்லாரும் பேசாம இருங்க. ஹர்ஷா அந்த லக்கி கேர்ள் யாரு னு சொல்லுடா” என்றாள் ரீனா. பார்த்தவுடன் பெண்கள் மனதில் பச்சக் என ஒட்டி கொள்ளும் அழகனின் மனதில் ஒட்டி கொண்டவள் யாரென தெரிந்து கொள்வதில் ஆர்வமும் சிறிது பொறாமையாகவும் இருந்தனர் பெண்கள்.

“ ம்ப்ச்.... நான் தான் அன்லக்கி. நான் மட்டும் லவ் பண்ணி என்ன செய்ய அவங்களுக்கு என்னை பிடிக்கலயே” என்றான் வெற்று குரலில். அவன் தனக்காக வைத்திருந்த ரின்டோனில் சிறிது மனம் மகிழ்ந்தவள் ஹர்ஷா பேசியதில் வாடி போனாள்.

“ என்னது உன்னை ஒருத்திக்கு பிடிக்கலையா? ஏதாவது நம்புற மாதிரி சொல்லு ஹர்ஷா” என நொடித்தாள் ரம்யா

“ உண்மையா தான் சொல்றேன் ரம்யா. அவங்களுக்கு என்னை பிடிக்கல. நாங்க இப்போ பேசிக்கிறது கூட இல்லை தெரியுமா?” தர்ஷினி துடித்து போனாள்.

“விடு ஹர்ஷா. உன் அருமை தெரியாதவ. நான் தான் உனக்காக ரெடியா இருக்கேனே... கவலைய விடு” என சாரு மிழிற்ற...

“ச்சீ... வாய மூடுடி. சகிக்கல” என அவளை அடக்கிய ரீனா, “ பேசிக்கிறதில்லனா இப்போ எதுக்கு கால் பண்ணாங்க?” என கிடுக்கிப்பிடி போட்டாள்.

“ அது.... அது....” ஹர்ஷா தடுமாற

“ அன்பில்லனா இத்தனை தடவை கால் பண்ணுவாங்களா ஹர்ஷா? இல்ல நீ தான் இந்த ரின்டோன்ன வைப்பியா சொல்லு? மனசு விட்டு பேசுடா எல்லாம் சரியாகிடும்” ரீனா அக்கறையாய் அறிவிறுத்தினாள். தன் மனசாட்சியாய் பேசிக் கொண்டிருந்தவளை பெருமை பொங்க பார்த்தாள் தர்ஷினி. ஹர்ஷா அமைதியாக நின்றிருந்தான். இப்போது கூட தர்ஷினியை பார்க்கவில்லை அவன்.

தன் அழைப்பை ஏற்று பேசவில்லை என்றாலும் தன்னை வெறுப்பது போல் பேசியிருந்தாலும் அவன் தனக்காக வைத்திருந்த ரின்டோனில் சிறிது மனம் மலர்ந்தவள் அதே மகிழ்ச்சியோடு வீட்டிற்கு கிளம்பினாள்.

தொடரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை

FB_IMG_1545854568965.jpg
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top