Chocolate boy - 15

#1
சாக்லேட் பாய் – 15

தந்தை தனது காதலை ஏற்றுக் கொள்ளாத கவலை ஒரு புறம் என்றால் முத்த விஷயத்தில் முறுக்கி கொண்டு நிற்கும் ஹர்ஷாவின் கவலை மறுபுறம் என தர்ஷினி ரொம்பவும் தான் அயர்ந்து போனாள். இப்போது தந்தையிடம் எதையும் பேச முடியாது என உணர்ந்தவள் ஹர்ஷாவிடம் பேசலாம் என எண்ணினாள். அவன் கோபம் மறந்து பேசிவிட்டாலே போதும் பாதி கவலை தீர்ந்துவிடும். மனதில் புது தெம்பு பிறக்கும் என தன் போக்கில் யோசித்துக் கொண்டிருந்தவள் கைபேசியை எடுத்து கொண்டு தன்னறைக்கு செல்ல திரும்பினாள்.

“ முதல்ல இந்த கருமம் பிடிச்ச செல்போன தூக்கி போட்டு உடைக்கணும்” மகளின் பேசியை பிடுங்காத குறையாக வாங்கினார் மல்லிகா. தந்தையின் கோபத்தை எண்ணி தான் தர்ஷினி மிகவும் பயப்படுவாள். ஆனால் அவரே சற்று தன்மையாக நடந்து கொள்ள மல்லிகா தான் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து கொண்டிருந்தார்.

“இப்போ நடந்தை எல்லாம் அவன் கிட்ட ஒப்பிக்க தான போன எடுத்துட்டு போற” என கேட்டதில் தர்ஷினியின் முகம் கன்றி போனது. கண்கள் கண்ணீரை சொறிந்தது.

மகளின் முகமும் கன்னத்தில் அவர் அடித்த தடமும் மனதை பிசைய,” இங்க பாரு தர்ஷினி மா. நம்ம குடும்பத்துல இது வரைக்கும் யாரும் காதல் கல்யாணமெல்லாம் பண்ணதில்லை மா. நம்ம சொந்தகாரங்களுக்கு தெரிஞ்சா தப்பா பேசுவாங்கடா. நாங்க உனக்கு மும்முரமாக மாப்பிள்ளை பார்த்துட்டிருக்குற நேரத்தில இதெல்லாம் தேவையா சொல்லு” என்றார் வாஞ்சையாக.

ஆக அவள் காதலிக்கிறாள் காதலிக்கிறாள் என்பதை தான் பிடித்து கொண்டு தொங்குகிறார்களே தவிர அவள் யாரை காதலிக்கிறாள்? அவன் எப்படிப்பட்டவன்? அவன் குடும்பம் எப்படி? என்பதையெல்லாம் அவர்கள் விசாரிக்கவேயில்லை. தர்ஷினிக்கு ஆயாசமாக இருந்தது.

இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை பிடித்து கொண்டு,” அம்மா.... நான் சொல்றத கொஞ்சம் கோபப்படாம கேளுங்க. நான் உங்கள மீறி காதலிச்சிட்டேன்னு நீங்க கோபப்படுறது நியாயம் தான் ஆனா நீங்க நினைக்குற மாதிரி நாங்க ஊர் சுற்றியதில்லை..... அவர் வீட்ல கூத்தடிச்சதுமில்லை...... உங்க பொண்ணும் அப்படிபட்டவளில்ல. ஹர்ஷாவும் அப்படிபட்டவரில்லைமா. நீங்க ஒரு முறை.... ஓரே ஒரு முறை ஹர்ஷா கிட்ட பேசி பாருங்க. அவரை பற்றி விசாரிங்க..... அதுக்கு அப்புறம் முடிவு பண்ணுங்கம்மா ப்ளீஸ்.....” தாயின் பதிலை கூட எதிர்பார்க்காமல் எழுந்து அறைக்கு சென்றுவிட்டாள்.

அறைக்குள் வந்தவள் முகம் கழுவி உடை மாற்றி விட்டு கட்டிலில் அமர்ந்தாள். அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை. ஹர்ஷாவிடம் பேச முடியாமல் போனதில் மேலும் மனம் கலங்கியது.நாளைக்கு ஆபிஸ் போனதும் ஹர்ஷாவை பார்த்து பேசிக் கொள்ளலாம் என எண்ணியவளுக்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பது அப்போது தான் நினைவு வந்தது. மாலை வேறு யாரோ இருவர் வந்து தர்ஷினியை பிடித்திருப்பதாக சொல்லி சென்றது நினைவிற்கு வர கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது அவளுக்கு.

“ தர்ஷினி டீ குடிக்க வா” என மல்லிகா வந்து அழைத்தார். என்ன இருந்தாலும் தாய் மனம் இல்லையா? அவள் மீது பயங்கர கோபம் இருந்தாலும் அவள் சாப்பிடாமல் இருப்பது வருத்தமாக இருந்தது அவருக்கு.அம்மாவின் அன்பில் நெகிழ்ந்து போனாள் தர்ஷினி.

தற்செயலாக மணியை பார்த்தவள் “ சே.... ஒரு மணி நேரமாவா இப்படியே உட்கார்ந்திருக்கோம்” என வியந்தாள். அமைதியாக சென்று டீயும் சிறிது பலகாரமும் சாப்பிட்டு மீண்டும் அறைக்குள் புகுந்துவிட்டாள். சிறிது நேரத்தில் மல்லிகா யாருடனோ போனில் பேசிக் கொண்டு தர்ஷினியின் அறைக்கு வந்தார்.

“ நான் அவ கிட்ட கொடுக்குறேன் நீயே பேசு” என்றவர் போனை தர்ஷினியிடம் நீட்டி,” அக்கா பேசுறா” என்றார். வர்ஷினி.... தர்ஷினியின் உடன் பிறந்தவள். இப்போது திருமணமாகி காஞ்சிபுரத்தில் இருக்கிறாள்.

தர்ஷினிக்கு உயிர் வந்தது போல் இருந்தது. வர்ஷினி அவளது செல்ல அக்கா. இருவரும் தோழியர் போல எப்போதும் ஒன்றாக தான் சுற்றுவர். நிச்சயம் வர்ஷினி தன் மனதை புரிந்து கொள்வாள் என நினைத்தவள் ஆவலாய் பேசியை வாங்கி பேசினாள்.

“ வர்ஷூ....”

“ ஏய்... தர்ஷூ அங்க என்னடி பண்ணி வைச்சிருக்கே? அம்மா என்னென்னவோ சொல்றாங்க” என்றாள் அவள். அவள் குரலிலிருந்த கடுப்பு தர்ஷினியின் நம்பிக்கையை மொத்தமாய் கொன்றது.

“ வர்ஷூ நீயாவது புரிஞ்சிப்ப னு நினைச்சேன்” ஏமாற்றம் மேலிட கூறினாள்.

“ என்னத்த புரிஞ்சிக்கிறது தர்ஷூ? அப்பா பற்றி தெரிந்தும் எப்படிடி இவ்ளோ தைரியமா லவ் பண்ண? நாலு வார்த்தை சேர்ந்தாப்ல பேசவே ரொம்ப யோசிப்ப....இப்போ அப்பா முன்னாடி நின்னு பேசுறியாம்? அம்மா கிட்ட எதிர்த்து பேசுறியாம்? என்ன தர்ஷூ இதெல்லாம்?” அவள் பங்கிற்கு தன் கோபத்தை காட்ட தர்ஷினியால் எதுவும் பேச முடியவில்லை.

“அது மட்டுமில்லாம அந்த பையன் வீட்டுக்கு வேற போனியாம்.... ?”

“ உனக்கு என்னை பற்றி தெரியாதா வர்ஷூ? நான் தப்பு பண்ணியிருப்பேன் னு நினைக்கிறியா?” நேரிடையாகவே கேட்டுவிட்டாள் தர்ஷினி.அவளது ஒழுக்கத்தை பற்றி தப்பாக கணிப்பதை அவளால் சகிக்க முடியவில்லை..அவள் காதலித்தாள் தான் காதலிக்க மட்டும் தான் செய்தாள். காதல் என்ற பெயரில் வேறு எந்த எல்லை மீறல்களையும் அவள் செய்யவில்லையே. சின்ன தீண்டலை கூட அனுமதிக்கவில்லையே. அதனால் தானே இன்று ஹர்ஷாவை இழந்து விட்டோமா இல்லையா என்பது கூட தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறாள். அவளது உத்தமதன்மையை யார் எடுத்துரைப்பது?

“ ஏய்.... நான் ஒன்னும் அப்படி நினைக்கல. ஆனா பார்க்குறவங்க அப்படி தானே நினைப்பாங்க. ஏதோ உன் நல்லதுக்கு தான் சொல்றேன் தர்ஷூ. அப்பா இந்தளவு அமைதியா இருக்குறதே அதிசயம் தான். தேவையில்லாம பிரச்சனைய வளர்க்காத”

“ நீயாவது எனக்கு சப்போர்ட் பண்ணுவ னு எதிர்பார்த்தேன் வர்ஷூ” என்றவளை பார்த்து மல்லிகா முறைத்தார்.

“ எப்படி தர்ஷூ எதிர்பார்த்த? என் கிட்ட நீ லவ் பண்றத சொன்னியா என்ன? போன வாரம் நான் வந்தப்ப கூட நீ எதுவும் சொல்லலையே.... இப்போ பிரச்சனை னு வரும் போது தான் இந்த அக்கா ஞாபகம் உனக்கு வருதில்ல?” வர்ஷினி ஆற்றாமையோடு கேட்க மீண்டும் மௌனமானாள் தர்ஷினி.

“ அப்புறம்....” என ஏதோ கேட்க வந்தவள் அலைபேசியை அன்னையிடம் கொடுக்குமாறு கூற, தர்ஷினி அலைபேசியை மல்லிகாவிடம் கொடுத்தாள்.

அந்த புறம் வர்ஷினி என்ன கேட்டாளோ,” ஆமாடி. அந்த தரகர் தம்பி தான் கூட்டிட்டு வந்துச்சி. அவங்க ஜாதக பொருத்தம் கூட பார்த்துட்டாங்களாம். இவ ஆபிஸ்லேந்து வர வரைக்கும் காத்திருந்து பார்த்துட்டு போனாங்க” மகளிடம் பேசியபடியே அறையை விட்டு வெளியேறினார் மல்லிகா. அன்னை சென்றதும் கண் மூடி சாய்ந்தாள் தர்ஷினி. அவள் மனகண்ணில் ஹர்ஷாவின் சிரித்த முகம் தெரிய, அவள் மனம் ஹர்ஷாவின் அருகாமையை தேடியது. அன்று கேன்டீனில் அவன் முத்தமிட்டது நினைவு வர, உடல் ஒரு முறை சிலிர்த்தது. காதலும் காமமும் போட்டியிட, மென்மையும் வன்மையும் கலந்த அதிஅற்புத முத்தமது. இதுவரை தர்ஷினி உணர்ந்திராத உணர்ச்சிகளை அவளுக்கு அறிமுகபடுத்திய முத்தமது. அந்த புதுவகையாக உணர்வு தான் அவள் பெண்மையை தட்டி எழுப்பி எச்சரித்தது. கிறக்கத்தோடு அவன் மீண்டும் நெருங்க பயத்தில் அறைந்துவிட்டாள்.

பெருமூச்சோடு கண்களை திறந்தவளுக்கு அவமானத்தில் கன்றிய அவனது முகம் நினைவு வந்தது.” பாவம்.... நான் அறைவேன் னு ஹர்ஷா கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டான்.” மனம் அவனுக்காக வருந்தியது.இதுவரை ஹர்ஷா அவளிடம் அப்படி நடந்து கொண்டதேயில்லை. அவனோடு அவன் வீட்டில் தனிமையில் கூட இருந்திருக்கிறாளே.... கண்ணியமாக தான் நடந்து கொண்டான். தினமும் பாஸ்வேர்டு மாற்றி வைத்து விளையாடும் போது கூட அவளை பயமுறுத்த நெருங்கி வருவானே தவிர தொடமாட்டான். அன்று ஏதோ ஒரு சலனம், தன்னவள் என்ற உரிமையில் சற்று எல்லை மீறி விட்டான். எடுத்து சொல்லியிருந்தால் கட்டாயம் புரிந்து கொண்டிருப்பான் என மனம் அவனுக்காக வாதாடியது.

ஆனால் அந்த எல்லை மீறலும் தவறு தானே? என்ன தான் ஆத்மார்த்தமான காதலர்களாக இருந்தாலும் திருமணம் என்ற பந்தம் உருவாகும் வரை அந்த உறவு புனிதபடுவதில்லை. நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த எதையோ பழக்கவழக்கங்கள், சடங்குகள் காலபோக்கில் மாறிவிட்டன, மறைந்துவிட்டன. ஆயினும் திருமணம் மட்டும் பல நூற்றாண்டுகளாக மாறாமல் மறையாமல் அப்படியே பின்பற்றபடுகிறதே ஏன்? திருமணம் தரும் உரிமையையும், நம்பிக்கையையும், பாதுகாப்பையும் மற்ற எந்த பந்தம் தருவதில்லையே. தர்ஷினியின் மனதில் பல்வேறு எண்ணங்கள் ஓட தன்னையுமறியாமல் மெல்ல கண்யர்ந்தாள்.

தொடரும்......

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
FB_IMG_1561571184146.jpg
 

Advertisements

Latest updates

Top