• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chocolate boy - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
சாக்லேட் பாய் – 16

“ அவ எழுந்துட்டாளா மல்லி?” மனைவி நீட்டிய காபியை வாங்கியவாறு வினவினார் சந்திரசேகர்.

“இன்னும் இல்லங்க” கணவர் அருகில் அமர்ந்தவாறு பதிலளித்த மல்லிகா தனது காபியை எடுத்து அருந்தினார்.

“ராத்திரியே சாப்பிடல னு சொன்னியே. எழுப்ப வேண்டியது தானே.”

“ மெதுவா தான் எழுந்துகட்டுமே. இப்போ என்ன அவசரம்? இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே? பசிச்சா அவளே எழுந்துடுவா”

“ என்ன சொல்றா உன் பொண்ணு?” காலி தம்ளரை டீபாய் மீது வைத்தபடி கேட்டார்.

“ஹூம்.... என்னத்த சொல்றது? கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி அதையே தான் சொல்றா.... நம்ம தர்ஷினியா இப்படி பேசுறது னு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. குனிந்த தலை நிமிராம நடக்குறவ நம்ம பொண்ணு. அவன் தான் ஏதாவது செய்து நம்ம புள்ள மனச கெடுத்திருப்பான். “ என்றார் ஆற்றாமையோடு .

“ ஆமாமா. நம்ம பொண்ணு பச்சை புள்ள பாரு. ஏன்டி பழிய தூக்கி அவன் மேல போடுற? நேத்து அவ பேசுன பேச்சை கேட்டயில்ல? இவ இடம் கொடுக்காம தான் அவன் தைரியமா வீட்டுக்கு கூப்பிடுவானா?”

“ நேத்து எப்படிங்க தர்ஷினி பேசுனத கேட்டுட்டு அவ்ளோ அமைதியா இருந்தீங்க? நீங்க காச்மூச்சு னு கத்த போறீங்க னு நினைச்சேன்”

“ என்ன செய்ய சொல்ற? இப்போ நாம அடிச்சாலோ திட்டினாலோ அவளுக்கு அடம் தான் கூடும். அவ பாட்டுக்கு இதே மாதிரி அமைதியா இருக்கட்டும் நாம சட்டுபுட்டு னு மாப்பிள்ளைய பார்ப்போம். திடுதிப்பு னு எல்லாம் நடந்தா அவளால ஒன்றும் செய்ய முடியாது. கொஞ்சம் நாள் வருத்தபடுவா அப்புறம் நாம அவ நல்லதுக்கு தான் செய்தோம் னு புரிஞ்சிப்பா” தனது மனவோட்டத்தை மனைவியோடு பகிர்ந்து கொண்டிருக்க தர்ஷினி அறை விட்டு வெளியே வந்தாள்.

“ அப்போ ஹர்.....” என ஏதோ பேச வாயெடுத்த மல்லிகா மகள் வருவதை பார்த்து தன் பேச்சை நிறுத்தினார். காலி தம்ளர்களை எடுத்து கொண்டு சமையலறைக்கு சென்றார். அங்கே தர்ஷினி தனக்கு காபி கலக்கி கொண்டிருந்தாள். மல்லிகா அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அடுத்த வேலையை அவர் ஆரம்பிக்க, காபியோடு பால்கனிக்கு வந்தாள் தர்ஷினி. வாரம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என காத்திருப்பவள், இன்று எப்போதடா இந்த ஞாயிற்றுக்கிழமை முடியும் என ஏங்கினாள். நாளை தானே ஹர்ஷாவை சந்திக்க முடியும். ஹர்ஷாவை பார்த்து பேசி முதலில் அவர்களுக்குள் இருக்கும் பிணக்கை சரி செய்தால் தான் அடுத்து என்ன செய்வது என திட்டமிட முடியும். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து அப்பாவிடம் மல்லு கட்டினால் அவர்கள் இன்னும் இறுக வாய்ப்புண்டு ஆதலால் ஹர்ஷாவை பற்றி அவள் எதுவும் பேசவில்லை. பெற்றோர் இருவரும் அவளை முழுதாக புறகணிக்க , அறைக்குள்ளேயே முடங்கி விட்டாள் அவள்.

தந்தை வெளியே சென்ற நேரத்தில் மல்லிகா சாப்பிட அழைத்தார். தர்ஷினி வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் அறைக்குள் சென்று விட்டாள். ஓரே வீட்டிற்குள் இருந்து கொண்டு இப்படி ஆளாளுக்கு பேசாமல் இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. எப்படியோ அந்த ஞாயிற்றுக்கிழமையை நெட்டி தள்ளினாள்.

திங்கட்கிழமை காலையில் சீக்கிரமாகவே எழுந்து அலுவலகத்திற்கு கிளம்ப ஆயத்தமானாள் தர்ஷினி. எட்டரை மணிக்கு கிளம்புபவள் ஏழே காலுக்கே கிளம்பி நிற்க அவளை ஏற இறங்கப் பார்த்தார் மல்லிகா.

“ எப்பவும் எட்டு மணிக்கு மேல தானே கிளம்புவ?”

“ அது...அது... நேத்து லீவ் போட்டுட்டேன்ல அதான்மா. புது ப்ராஜெட்...நிறைய வேலையிருக்கு... இனியும் போகாம இருக்க முடியாது...” என இழுத்தாள். காதல் வந்துவிட்டால் சகிப்பு, சமாளிப்பு எல்லாம் இலகுவாய் வந்துவிடும் போல..... ஆனால் அவள் என்ன விளக்கம் கொடுத்தாலும் அவள் எண்ணம் தாய் மனம் அறியாமல் இருக்குமா?

“ அப்பா வாக்கிங் போயிருக்கார். அவர்கிட்ட கேட்காம அனுப்ப முடியாது. இரு.... அவர் வந்த பிறகு கிளம்பு” என்றுவிட்டு தன் வேலையை தொடர்ந்தார். தர்ஷினிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்பா வந்துவிட்டால் நிச்சயம் அனுமதி கிடைகாது என எண்ணியவள் சோர்ந்து போனாள்.

ஒரு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்தவரிடம், “ அப்பா.... நா... நான் ஆபிஸ் கிளம்புறேன். நியூ ப்ராஜெக்ட் ஆரம்பிச்சியிருக்காங்கப்பா லீவ் போட முடியாது” என அவர் மறுப்பதற்கு முன் விளக்கம் கூறினாள் தர்ஷினி.

அவர் வாய் திறந்து பேசும் முன்,” ஆமா... ஆமா... அப்படியே வேலை பார்க்க தான் ஆபிஸ் போற பாரு? நீ எதுக்கு... யாரை பார்க்க இப்படி அவசர அவசரமா ஓடுற னு தெரியாதா? பேசாம வீட்ல இரு...” என்றார் மல்லிகா கோபமாக.

அவர் கூறுவது உண்மை தான் என்பதால் தர்ஷினியால் பதில் பேச முடியவில்லை. கண்களில் நீர் கோர்க்க அப்படியே நின்றாள். பின், “ போகட்டுமாப்பா?” என்றாள் தலையை நிமிர்த்தாமலே மெல்லிய குரலில்.

மீண்டும் மல்லிகா கோபமாக ஏதோ பேச வர, கையை உயர்த்தி அவரை நிறுத்தினார் சந்திரசேகர்.

“ இன்னைக்கு போக வேண்டாம் தர்ஷினி. நாளையிலிருந்து போ” என்றார் அமைதியாக.

“ நாளைக்கு போனா மட்டும் அந்த பையன பார்த்து பேச மாட்டாளா? இன்னைக்கு ஒரு நாள் இவள வீட்ல வைச்சி என்ன பண்ண போறீங்க?” – மல்லிகா.

அப்பா ஒரேயடியாக மறுக்கவில்லை என மகிழ்வதா இல்லை இன்று மட்டும் வீட்டில் இரு என்பதில் வேறு விஷயம் ஏதும் இருக்குமோ என பயப்படுவதா என புரியாமல் விழித்தாள் தர்ஷினி.

“ மல்லி.... ஏன் இப்படி சத்தம் போடுற? இன்னைக்கு தர்ஷினிய பொண்ணு பார்க்க பையன் வீட்டிலிருந்து வராங்க.” என்றதும் இரு பெண்களுமே அதிர்ந்து பார்த்தனர். மல்லிகாவிற்கும் இது புதிய செய்தி தான்.

“ என்னங்க... என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல.”

“ நான் வாக்கிங் போயிட்டிருக்கும் போது தான் தரகர் போன் பண்ணாரு.அன்னைக்கு வீட்ல கலந்து பேசிட்டு சொல்றேன்னு சொன்னேனில்லயா..... நம்ம விருப்பம் பற்றி பையன் வீட்ல கேட்டாங்களாம். என்ன சொல்ல னு கேட்டாரு? யோசிச்சேன். சனிக்கிழமை அவங்க வந்தபோது நல்ல விதமா தானே பேசுனாங்க. சரி வர சொல்லுங்க னு சொல்லிட்டேன். பதினோரு மணிக்கு வராங்களாம் அவளை தயாராக சொல்லு” என்றவர் எழுந்து அவரது அறைக்குள் செல்ல அவர் பின்னேயே மல்லிகாவும் சென்றுவிட்டார்.

ஹாலில் தனியாக நின்றிருந்த தர்ஷினிக்கு இதயம் தாறுமாறாக துடித்தது. இப்படியே ஹர்ஷாவை சந்திக்க சென்று விடலாமா? என்ற எண்ணத்தை உடனே கைவிட்டாள். அது தவறல்லவா.... அது தாய் தந்தைக்கு செய்யும் துரோகம் அல்லவா? ஆனால்.... ஆனால் அதற்காக இந்த ஏற்பாட்டிற்கு எப்படி ஒத்துக்கொள்வது?” சிறிது நேரம் யோசித்தவள் தலையை உலுக்கி கொண்டாள். “ முதல்ல இந்த அம்மா போன எங்க வைச்சிருக்காங்க னு பார்க்கலாம்... இல்ல அவங்க போன் கிடைச்சாலும் சரி தான்” என நினைத்தவள் சமையறை, ஹால் மேஜை, கப்போர்டு என எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. அறை கதவை திறந்து கொண்டு யாருடனோ பேசியபடி வரும் தந்தையை பார்த்தவள் அப்படியே நின்றாள். எங்கோ கிளம்பி செல்ல தயாராகி வந்தார் கூடவே மல்லிகாவும்.

“ மாப்ள.... தப்பா எடுத்துக்காதீங்க... மாப்பிள்ளை வீட்ல ஏதோ ஊருக்கு போறாங்களாம். உடனே வரட்டுமானு கேட்டாங்க. சரி நமக்கும் பையன பிடிச்சி போச்சு. எதுக்கு தள்ளி போடணும் னு வர சொல்லிட்டேன். நீங்க அவசரமா கிளம்பற மாதிரி ஆயிடுச்சி”

“..............................”

“ ஆங்.... சனிக்கிழமை அவங்க வரும் போதே ஜாதகம் பார்த்துட்டு தான் வந்தாங்க மாப்ள. தர்ஷினியையும் அன்னைக்கே பார்த்துட்டாங்க. இப்போ நாங்க ஜாதகம் பார்க்க தான் கிளம்பிட்டு இருக்கோம்.நீங்க கிளம்பி வாங்க மாப்ள”

“..............................”

“ என்னத்த பண்ண சொல்ற? இப்படி அவசர அவசரமா செய்ய வைச்சிட்டா உன் தங்கச்சி” இப்போது வர்ஷினியிடம் பேசுகிறார் என புரிந்தது.

“ சரி வர்ஷினி! உடனே கிளம்பி வாம்மா. காருல தானே வருவீங்க.... பதினோரு மணிக்குள்ள சென்னை வந்திடலாம். மாப்பிள்ளை கிட்ட இவ காதல் விவகாரமெல்லாம் சொல்லிடாத. மானம் போயிடும்.”

“...................”

“ எனக்கு அவள் கூட பேச விருப்பமில்லை வர்ஷினி. இதோ பக்கத்துல தான் நிற்குறா. பேசுறதெல்லாம் கேட்டுட்டு தான் இருக்கா. விவரம் புரியாதா என்ன? சரிம்மா.... அவங்க பதினோரு மணிக்கு வந்திடுவாங்க. வேலையிருக்குமா..” என அழைப்பை துண்டித்துவிட்டு, “ மல்லி....பதினோரு மணிக்கு அவளை பொண்ணு பார்க்க வராங்கனு உன் பொண்ணு கிட்ட சொல்லிடு.” என்றார் எங்கோ பார்த்தபடி.

“ அதான் கேட்டுட்டு இருக்காளே... தர்ஷினி கட்டில் மேல பட்டு புடவை, நகையெல்லாம் எடுத்து வைச்சிருக்கேன். சீக்கிரம் தயாராகு....”

தர்ஷினி பயந்து போனாள். இனிமேலும் மௌனம் காப்பதில் அர்த்தமில்லை என நினைத்தவள்,” நான் பட்டு புடவை எல்லாம் கட்ட மாட்டேன்” என தன் முதல் எதிர்ப்பை பதிவு செய்தாள்.

“ பட்டு புடவை கட்ட மாட்டீயா? இங்க பாரு தர்ஷினி.... இவ்வளவு நாள் உன் இஷ்டப்படி இருந்துட்ட... இனிமே எல்லாம் எங்க இஷ்டம் தான் தெரிஞ்சிக்கோ... ஒழுங்கு மரியாதையா எடுத்து வைச்சிருக்க பட்டு புடவையை கட்டி நகையை எடுத்து போடு” என அதட்டலாக கூறிவிட்டு இருவருமே கிளம்பி விட்டனர். என்ன செய்வது என புரியாமல் திகைத்து போனாள் தர்ஷினி. அவளுக்கு வேறு வழியொன்றும் புலப்படவில்லை. கையில் அலைபேசி இல்லை, அலுவலகத்திற்கு செல்லும் வாய்ப்பும் இல்லை. தூது சொல்ல தோழியும் இல்லை.... என்ன செய்வாள் பாவம்?

“இப்படி தான்... இப்படி தான் சில பெண்கள் வேறு வழியில்லாமல் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொள்கிறார்ளோ” என தோன்றியது அவளுக்கு.

“ அய்யோ அந்த நிலைமை எனக்கும் வந்துவிடுமோ” என கலங்கினாள். கடிகாரத்தில் மணி பார்த்தாள் அது ஒன்பதரையை தொட்டிருந்தது. இன்னும் ஒன்றரை மணி நேரமே இருக்கு. ஆனால் அதற்குள் ஏதும் அதிசயம் நிகழ்ந்து விடாதா என ஏங்கினாள் தர்ஷினி.

தொடரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
FB_IMG_1553852935646.jpg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top