Chocolate boy - 21

#1
சாக்லேட் பாய் – 21

இரவின் மடியில் செல்லமாய் சாய்ந்திருந்த வெண்ணிலா.... தன் ஒளியால் பூமியின் ஒரு பாதியை தாலாட்டிக் கொண்டிருந்தது. வானிலிருந்த விண்மீன்கள் உதிர்ந்து பூமியில் சிதறியது போல மின்விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தன. சகோதரிகள் ஏதும் பேசாமல் அந்த சுகந்தத்தை அனுபவித்தவாறு கைபிடி சுவற்றில் சாய்ந்திருந்தனர்.

வர்ஷினி தான் அமைதியை கலைத்தாள்.

“ ஏய் தர்ஷூ.... என்னை கை பிடிச்சி தர தர னு இழுத்துட்டு வந்துட்டு பேசாம நின்னுட்டு இருக்கே?”

“ இல்ல வர்ஷு.... நிலா... இந்த லைட்ஸ்.... இந்த காத்து.... எல்லாம் ரொம்ப ரம்மியமா இருக்கில்ல... அதான் அப்படியே நின்னுட்டேன்”

“ உனக்கு என்னம்மா.... கல்யாண தேதி குறிச்சாச்சு இனிமே இப்படி கவிதையா தான் பேசுவ” என தங்கையை சீண்டினாள்.

“ நீயும் தானே அமைதியா நின்னே... ஏண்டி என்னை மட்டும் இப்படி ஓட்டுற” என்றாள் பரிதாபமாக.

“ ஹா...ஹா.... சரி... சரி... அழுதுடாத.... எதுக்கு இழுத்துட்டு வந்த... அத சொல்லு”

“ நீ தானே அவங்கெல்லாம் போனதுக்கு அப்புறம் என்ன நடந்தது னு சொல்றேன் சொன்னே?”

“ ஆமாயில்ல... ஆனா தர்ஷூ ஹர்ஷா ஏன் உன்கிட்ட எதுவுமே சொல்லல” என கேட்க, என்ன சொல்வது என தெரியாமல் விழித்தாள் தர்ஷினி.

“ மறந்துட்டேனே... அம்மா தான் உன் போன வாங்கி வைச்சிடாங்கயில்ல” என அவளே பதிலை கூற, மௌனமாய் நின்றாள் தர்ஷினி.

“ சரி... சரி... அப்செட் ஆகாத... லவ் மேரேஜ்ல இதெல்லாம் சகஜம். முதல்ல உன் லவ் ஸ்டோரிய சொல்லு” என ஆவலாக கேட்க, தர்ஷினி மறுத்தாள்.

“ ம்ஹூகும்.... நீ முதல்ல சொல்லு... அப்புறமா நா... நான் சொல்றேன்”

“ அந்த கதையெல்லாம் இங்க வேணாம். கையில காசு வாயில தோசை” என கறாறாக கூற, வேறுவழியின்றி தர்ஷினியும் தன் காதல் கதையை கூறினாள். ஆனால் கவனமாக ஹர்ஷாவை அடித்ததை மட்டும் மறைத்துவிட்டாள். ஹர்ஷாவின் கவுரவமும் அவளுக்கு முக்கியமல்லவா?

“ ம்.... நல்லா தான் பாஸ்வேர்டு வைச்சி விளையாடியிருக்கீங்கடி. “ என்றவள் தான் கேட்டறிந்ததும், அதன் பின் நடந்ததையும் கோர்வையாக கூற தொடங்கினாள்.

அன்று சனிக்கிழமை.....

ஆடிட்டரான தர்ஷினியின் தந்தை தன் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். அன்று சனிக்கிழமை அதுவும் மதியவேளையாதலால் அதிக வேலை இல்லை. ஏதோ கோப்புகளை சரி பார்த்துக் கொண்டிருந்தவரின் கைபேசி அழைக்க அதை எடுத்து பார்த்தார். தரகர் சீனிவாசன் தான் அழைத்திருந்தார். அதை பார்த்ததும் சந்திரசேகரின் முகம் மலர்ந்தது. தர்ஷினியின் விவரங்களை அவரிடம் தான் கொடுத்ததிருந்தார்.

“ ஹலோ..... வணக்கம் தம்பி. சௌக்கியமா?”

“ நல்லாயிருக்கேன் சார். நீங்க?”

“ ம்... நல்லாயிருக்கேன். நீங்க நல்ல வரனா சொன்னீங்கன்னா இன்னும் நல்லாயிருப்பேன்” என்றார் சிரித்தபடி.

“ கையில வரன்யில்லாம போன் பண்ணுவேனுங்களா? அருமையான வரன் வந்திருக்கு. எல்லாம் நீங்க கேட்டது போலவே அமைஞ்சிருக்கு. பையன் போட்டோவை வாட்ஸ்சப் ல அனுப்பியிருக்கேன். பையனுக்கு சொந்த ஊரு திருச்சி. ஐ.டி கம்பெனில வேலை. வேலைக்காக சென்னையில வீடெடுத்து தங்கியிருக்காரு. தற்செயலா அவங்க அப்பா அம்மா வந்த இடத்துல என்னை வந்து பார்த்தாங்க. பையனுக்கு சென்னையில வேலைங்கறதுனால இங்கயே பொண்ணு பார்க்குறாங்களாம். நான் உங்க பொண்ணு போட்டோ காட்டினேன். அவங்களுக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க கொடுத்த ஜாதகத்தை வாங்கி கையோட பொருத்தம் பார்த்துட்டாங்க. நாளைக்கு காலையில அவங்களுக்கு ட்ரெயின். அதனால இப்போவே வரலாமா னு கேட்குறாங்க” என படபடவென ஒப்பித்தவர் சந்திரசேகரின் பதிலுக்காக காத்திருந்தார்.

“ இப்படி தீடீர்னு சொன்னா எப்படி தம்பி? விசாரிக்கணுமில்லையா? என் பொண்ணு வேற ஆபிஸ் போயிருக்கா?” என இழுத்தார். தரகரும் யோசித்தார் போலும். அந்த பக்கம் சிறு அமைதி.... அதற்குள் சந்திரசேகர் வாட்ஸ்சப்பில் வந்த ஹர்ஷாவின் போட்டோவை பார்த்தார். நம்ம ஹர்ஷா பற்றி சொல்லவும் வேண்டுமா? பார்த்ததும் பச்சக்...... என்ன சத்தம் னு பார்க்குறீங்களா? எல்லாம் ஹர்ஷா நம்ம தர்ஷினி அப்பா மனசுல ஒட்டுன சத்தம் தான்.

“ஹலோ.... ஹலோ.... “ என சீனு அழைக்க,

“ ஆங்...சொல்லுங்க.....” என பேசியை காதில் வைத்தார்.

“ நீங்க முதல்ல அவங்க அப்பா அம்மா கிட்ட பேசுங்க சார். பிடிச்சியிருந்தா மேற்கொண்டு பேசிக்கலாம்.” என்றதும் சந்திரசேகரும் மேலும் தயங்காமல் ஒத்துக்கொண்டார்.

அதன் பிறகு விரைவாக வீட்டிற்கு வந்தவர், மல்லிகாவிடம் ஹர்ஷாவின் புகைபடத்தை காட்டினார். அவருக்கும் பரம திருப்தி.

மாலை நான்கரை மணியளவில் ஹர்ஷாவின் பெற்றோர் வந்தனர். பார்த்ததுமே சிநேகம் கொள்ளும் சிரித்த முகம் பூமிநாதனுக்கு. ஹர்ஷாவின் தந்தையல்லவா? பனிமலரும் அப்படியே.....

“ வாங்க.... வாங்க....” உற்சாகமாய் வரவேற்றனர் தர்ஷினியின் பெற்றோர். வந்தவர்கள் தங்களை பற்றியும் தங்கள் குடும்பம் பற்றியும் கூற மிகவும் பிடித்து போனது இருவருக்கும்.

“ மல்லி.... போய் டீ போடும்மா” என மல்லிகாவை கூறிய நேரம்.....

“ம்... வந்து....ஹர்ஷா உங்க பொண்ணு வேலை செய்யற கம்பெனில தான் வேலை செய்றான்.” பூமிநாதன் மெதுவாக பேச்சை தொடங்கினார்.

“ அப்படியா. ரொம்ப சந்தோஷம்.” என ஆச்சரியப்பட்டார் சந்திரசேகர். தரகரிடம் கொடுத்த விவரங்களில் தர்ஷினியின் கம்பெனி பெயரையும் குறிப்பிட்டிருந்ததால் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது என நினைத்தார். அவருக்கு மேலும் குஷியாகி போனது. மாப்பிள்ளையை பற்றி சுலபமாக விசாரித்துவிடலாம் என எணணியவருக்கு அப்போது கூட மகள் காதலித்திருப்பாளோ என தோன்றவில்லை.

“ எங்க பையனும் உங்க பொண்ணும் ஒருத்தர ஒருத்தர் மனசார விரும்புறாங்களாம். கல்யாணம் பண்ணிக்கணும் னு ஆசைபடுறாங்க....” எனவும், சந்திரசேகர் அதிர்ந்து போனார். அவர் இதை சற்றும் எதிர்பார்கவில்லை. மல்லிகா அதிர்ச்சியில் உறைந்தே போனார்.

“ நிறுத்துங்க சார். தரகர் தம்பி சொன்னதுனால தான் நான் உங்கள வரச் சொன்னேன். நீங்க வேற ஏதேதோ பேசுறீங்க.” அவரால் தர்ஷினி காதலிக்கிறாள் என்பதை நம்பவே முடியவில்லை. அதுவும் அதை மூன்றாமானவர் வழியே தெரிந்ததில் வெட்கி போனார்.

“அது.... உங்க பொண்ணு தர்ஷினியோட ஜாதகம் அந்த தம்பி கிட்ட இருக்குறதா ஹர்ஷா சொன்னான். அதனால அவர் கிட்ட போய் பேசுனோம். சரி... அவர் மூலமாவே உங்க கிட்ட பேசுவோம் னு தான் அவர பேச சொன்னோம்” என்றார் பூமிநாதன்.

“ இங்க பாருங்க சார்.... நீங்க ஏதோ தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க. எங்க பொண்ணு அப்படியெல்லாம் பண்ணமாட்டா. எனக்கு இதெல்லாம் பிடிக்காது னு அவளுக்கும் தெரியும் ” என்றார் முகம் இறுக, இப்போதும் அவரால் தன் மகளை விட்டு கொடுக்க முடியவில்லை.


பெருமூச்சு ஒன்றை விட்ட பூமிநாதன்,“ என்னங்க பண்றது.... நாம பிள்ளைங்கள அப்படி தான் நினைக்கிறோம். ஆனா அவங்க அப்படி நடந்துக்கறது இல்லையே.... என்ன இருந்தாலும் பசங்க சந்தோஷம் தானே முக்கியம். அதனால தான் நாங்க ஒத்துக்கிட்டோம்” என்றார்.

“ ஆனா எங்களால அப்படி ஒத்துக்க முடியாது.” என கத்தரிதாற் போல் பேசினார் சந்திரசேகர்.

“ உங்க கோபம் புரியுது. விஷயம் தெரிஞ்ச உடனே நானே ரொம்ப கோபப்பட்டேன். அவனோட சண்டை கூட போட்டேன். ஆனா அவன் சந்தோஷம் உங்க பொண்ணு தான் னு தெரிஞ்ச பிறகு என்ன செய்ய முடியும் சொல்லுங்க” என்றார் பனிமலர் ஆற்றாமை குரலில்.

“ம்ஹூகும் முடியாது.... எங்களால இத ஏத்துக்கவே முடியாது. நீங்க ஆம்பள புள்ளய பெத்து வச்சிருக்கீங்க. உங்களுக்கு இது சாதாரண விஷயமா இருக்கலாம். ஆனா நாங்க பொண்ண பெத்தவங்க உங்கள போல யோசிக்க முடியாது. நாளைக்கு ஊருக்குள்ள நாங்களும் தலை நிமிர்ந்து நடக்க வேண்டாமா” என சீறினார் மல்லிகா.

“ஷ்..... மல்லி அமைதியா இரு. சார்.... இதை பற்றி பேச எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை.இது... இது நடக்காது... இத இப்படியே விட்டுடுங்க” என சட்டென பேச்சை முடித்துவிட்டார் தர்ஷினியின் தந்தை. தன் மகள் தன்னை பற்றி சிறிதும் யோசிக்கவில்லையே என அவர் மனம் குமைந்தது.

“எப்படிங்க விடுறது? பசங்க ஆசைப்பட்டுடாங்களே. அவங்க வேற ஏதும் முடிவு பண்ணிட்டா என்ன செய்றது?”

மல்லிகா, “ எங்க பொண்ணு எங்க பேச்சை மீறி எதுவும் செய்யமாட்டா.அவள நாங்க பார்த்துப்போம். நீங்க உங்க பையன அடக்கி வைச்சா போதும். என் பொண்ணு தலைநிமிர்ந்து கூட நடக்கமாட்டாங்க. உங்க பையன் தான் அவ மனச கலச்சிருக்கான். தர்ஷினி எங்க கிட்ட எதுவுமே சொல்லலயே. இவன் தான் ஏதோ நாடகமாடுறான்” என்றார் கோபமும் ஆதங்கமுமாக.

மல்லிகா இப்படி சொன்னதும் ஹர்ஷாவின் பெற்றோர் இருவருக்குமே கோபம் வந்துவிட்டது. என்னவோ இவர்களின் மகளுக்கு விருப்பமேயில்லாது போலவும் தன் மகன் தான் அவளை துரத்தி துரத்தி காதலிப்பது போலவும் அல்லவா பேசுகிறார்கள்.

ஆனால் அவர்கள் வாய் திறக்கும் முன்பே,” மல்லிகா.... என்ன பேச்சு இது? தப்பு நம்ம பொண்ணு மேலேயும் தான் இருக்கு. தர்ஷினி சொல்லாம தான் அவ ஜாதகம் தரகர் கிட்ட இருக்கு னு அவங்களுக்கு தெரியுமா? இத்தனை நாள் அவ காதலிக்கிறது கூட தெரியாம தானே இந்த வீட்டுல இருந்திருக்கோம். அவ நம்ம பேச்சை மீறி எதுவும் செய்யமாட்டா னு எந்த நம்பிக்கையில சொல்றே? நம்ம பொண்ணு தப்பு பண்ணா நாம தான் அவளை கண்டிச்சி திருத்தணுமே தவிர இவங்க கிட்ட கோபப்படுறது நியாயமேயில்லை. நமக்கு இதுல சம்மதம் இல்லை னு சொல்லிட்டோமில்ல....அவ்வளவு தான் நாம செய்ய வேண்டியது. போ.... போய் டீ போடு.” என மனைவியை அதட்டி அனுப்ப, அங்கே பலத்த மௌனமே ஆட்சி செய்தது.

சந்திரசேகர் தனது விருப்பமின்மையை சூசகமாக அதே சமயம் அழுத்தமாக கூறிய பின் அவர்களுக்கும் என்ன பேசுவது என தெரியவில்லை. அந்த நேரம் தான் தர்ஷினி அலுவலகத்திலிருந்து வந்தாள்.

உள்ளே நுழைந்தவளிடம் பனிமலர் இயல்பாக பேசுவதையும், தர்ஷினியும் அவருக்கு சிரித்த முகமாக பதில் கூறுவதையும் பார்த்த சந்திரசேகர் உள்ளுக்குள் நொறுங்கி போனார். அவர்கள் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருக்கிறார்கள் என எண்ணி கொண்டார். தான் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் அவர்களோடு உறவாடுகிறாளே என கொதித்து போனார். தர்ஷினியை பார்த்ததும் அவர்களின் முகம் கனிந்து போனதையும் கவனிக்க தவறவில்லை. தர்ஷினி உள்ளே சென்றதும் அவர்களின் பேச்சும் மாறி போனது.

அதுவரை எங்கள் மகனுக்கு பிடித்ததால் தான் ஒத்துக்கொண்டோம் என பேசிக் கொண்டிருந்தவர்கள், “ சார்.... காலம் ரொம்ப மாறி போச்சு. அதுக்கேத்த மாதிரி நாம்மளும் மாறிக்கணும். இப்போ இவங்கள பிரிக்கறதுனால என்ன நடக்க போகுது சொல்லுங்க. நமக்கு ஏதாவது அவார்ட் தர போறாங்களா? சந்தோஷமா அவங்கள சேர்த்து வைப்போமே சார்” – இது பூமிநாதன்.

“ நாம சேர்த்து வைப்போம் னு தான் அவங்க பொறுமையா இருக்காங்க... நாம மறுத்துட்டா மனசோடிஞ்சி போயிடுவாங்க” – இது பனிமலர்.

“ எங்களுக்கு தர்ஷினியை ரொம்ப புடிச்சிருக்கு. தரகர் கிட்ட ஜாதகம் வாங்கி பொருத்தம் கூட பார்த்துட்டோம். அமோகமா பொருந்தியிருக்கு. இனிமே நீங்க தான் சொல்லணும். யோசிங்க.... எங்கள பத்தி, எங்க குடும்பத்தை பத்தி விசாரிச்சி பாருங்க. உங்களுக்கு சம்மதம் னா நாங்க பையனோட முறையா பொண்ணு பார்க்க வர்றோம்” என்று முடித்தார் பூமிநாதன்.

“ வீட்ல கலந்துகிட்டு சீக்கிரமே சொல்றேன். “ சந்திரசேகரால் வேறு என்ன சொல்ல முடியும். தன்னிடம் எதுவும் பேசாமல் இவர்களை வைத்தே காரியம் சாதித்துவிடலாம் என மகள் சாமார்த்தியமாய் காய் நகர்த்தும் போது இவர்களிடம் இனி இதை பற்றி பேச கூடாது என எண்ணியவர் இன்முகமாகவே பேசியனுப்பினார்.

தர்ஷினியை அழைத்து அவர் விசாரித்த போது, அவர் நினைத்தது போலவே தர்ஷினி தன் காதலில் உறுதியாய் இருந்தாள். அழவோ கெஞ்சவோ இல்லை. அவள் கண்ணில் பயத்தையும் மீறிய உறுதி தெரிந்தது. அதிலும் அவள் ஹர்ஷாவின் வீட்டிற்கே சென்றிருக்கிறாள் என தெரிந்ததும் ஆடி தான் போனார் அவர். மல்லிகாவாவது கோபத்தில் கத்தினார்.... ஏன் அடிக்க கூட செய்தார் ஆனால் சேகரோ உள்ளுக்குள் இறுகி போனார். இனியும் தன் மகளிடம் பேசுவது வீண் என புரிந்தது. அதே சமயம் அவள் நினைப்பது நடக்காது என்பதையும் அவளிடம் நேரிடையாக கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

அவர் சென்றதும் மல்லிகா தன் பெரிய மகளுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி அழ, அவள் வேறு தன் பங்கிற்கு தர்ஷினியிடம் குதித்தாள். அந்த இரவு அவர்கள் அனைவருக்குமே கனமாகி போனது.

தொடரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 

Sponsored

Advertisements

Top