Chocolate boy - 22

#1
சாக்லேட் பாய் – 22


ஞாயிற்றுக்கிழமை......

மகளின் அழுது சோர்ந்த முகமும், மனைவியின் வாய் ஓயாத புலம்பலும் சேகருக்கு மிகுந்த மனவுளச்சலை தந்தது. அவரால் வீட்டில் இருக்கவே முடியவில்லை. தர்ஷினிக்கு உடனடியாக மாப்பிள்ளை பார்த்துவிடலாமா என வேறு ஒரு புறம் யோசனை ஓட, மூச்சு முட்டியது போல் இருந்தது அவருக்கு. பேசாமல் கிளம்பி தன் அலுவலகத்திற்கு வந்துவிட்டார்.

நாற்காலியில் கண் மூடி சாய்ந்திருந்தவர் அலைபேசியின் ஒலியில் அதை எடுத்து பார்த்தார். வர்ஷினி தான்.....

“ சொல்லுமா.... வர்ஷினி....”

“ அப்பா.... எங்கப்பா இருக்கீங்க?”

“ ஆபிஸ்ல தான்மா”

“ அப்பா.... நேற்று அம்மா போன் போட்டு விவரமெல்லாம் சொன்னாங்கப்பா. நம்ம தர்ஷூவா இப்படி னு என்னால நம்பவே முடியலப்பா.”

“ எனக்கும் அப்படி தான் இருந்தது. ஆனா உன் தங்கச்சி நல்லா நம்ப வைச்சிட்டா” வெறுமையாய் ஒலித்தது குரல்.

“ அப்பா.... நா...நான் ஒன்று சொல்லலாமாப்பா” தயங்கியவாறு கேட்டாள் வர்ஷினி.

“ சொல்லுமா...”

“ அப்பா.... அம்மா விஷயத்தை சொன்ன உடனே எனக்கும் ரொம்ப கோபம் வந்துச்சுப்பா. ஆனா அப்புறம் நிதானமா யோசிச்சி பார்க்கும் போது வேற மாதிரி தோணுதுப்பா”

“........”

“ அந்த பையன பற்றி தரகர் சொன்ன போதும் அவங்க அப்பா அம்மா வந்து பேசுன போதும் உங்களுக்கு அவன பிடிச்சி தானப்பா இருந்தது. தர்ஷினி விரும்புறா னு தெரிஞ்ச உடனே எப்படிப்பா பிடிக்காம போயிடுச்சி. நீங்க மாப்பிள்ளை பார்த்து கட்டி வைச்சாலும் தர்ஷினியோட விருப்பம் கேட்டு தானப்பா முடிவு பண்ணியிருப்பீங்க?”

“ உண்மை தான் மா. ஆனா இந்த காலத்தில காதல் கீதல் னு சுத்துறது எல்லாம் பேஷனாகி போச்சுமா. சும்மா டைம்பாஸுக்கு லவ் பண்றாங்க.”

“ அப்படி டைம்பாஸுக்கு பண்ணியிருந்தா அந்த பையன் வலிய வந்து கல்யாண பேச்சை ஆரம்பிம்மானப்பா? நல்ல பையனா இருக்க போய் தானே அப்படி செய்தான். இல்லனா அவங்க காதலிக்கிறது நமக்கு தெரியற வரைக்கும் ரகசியமாக காதலிச்சிட்டு இருந்திருக்கலாமில்லையா?” மகள் சொல்வது சரி தான் என தோன்றினாலும் மனம் ஏற்க மறுத்தது.

“ நல்ல பையனா இருந்தா தர்ஷினிய வீட்டுக்கு கூப்பிட்டிருப்பானாமா? அதுவும் தனியா இருக்குற வீட்டுக்கு? உன் தங்கச்சியும் போயிருக்கா.....” வெறுப்பாய் கூறினார் சேகர்.

“ தர்ஷினி போனது தப்பு தான் பா.ஆனா அவன் நல்ல பையனா இருக்க போய் தானேப்பா தன்னோட வீட்டுக்கு கூப்பிட்டிருக்கான். கெட்டவனா இருந்திருந்தா பார்க், பீச் னு தான் கூட்டிட்டு சுத்தியிருப்பான். அவன் வீட்டுக்கு போனதை தர்ஷினி தைரியமா சொல்றானா அவங்க கண்ணியமா பழகியிருக்காங்க னு தானே அர்த்தம்?” வர்ஷினி பேச பேச, அவனோட சுத்தியா? என கேட்டதும் கோபத்தில் சிவந்த தர்ஷினியின் முகம் நினைவிற்கு வந்தது.

“........”

“ அப்பா ஏதோ எனக்கு தோணினதை சொன்னேன். தப்பாயிருந்தா மன்னிச்சிடுங்க. ஹர்ஷாவை உங்களுக்கு பார்த்ததுமே பிடிச்சிடுச்சி..... அவன் குடும்பத்தையும் பிடிச்சிடுச்சி..... தர்ஷினிக்கும் பிடிச்சிருக்குற ஒரே காரணத்துக்காக மறுக்க போறீங்களாப்பா? கொஞ்சம் யோசிங்கப்பா” என்றுவிட்டு போனை வைத்தாள் வர்ஷினி. அவளும் தர்ஷினியின் மேல் கோபமாக தான் இருந்தாள் ஆனால் தங்கையின் கலங்கிய குரலில் அவள் கோபம் ஆட்டம் கண்டது. கோபத்தை ஒதுக்கி விட்டு யோசிக்கையில் தங்கையின் தூய்மையான காதல் புரிந்தது.

வர்ஷினி பேசிய பின்பு வெகுவாக குழம்பி போனார் சந்திரசேகர். மகள் பேசியதில் ஒரு மனம் இளக தொடங்க, காதலை வெறுக்கும் இன்னோரு மனமோ ஒத்துக்கொள்ள மறுத்தது. குழப்பத்தில் மீண்டும் கண் மூடி சாய்ந்திருந்தவர் “ உள்ளே வரலாமா?” என்ற குரலில் நிமிர்ந்தார். லேசாக முறுவலித்தபடி ஹர்ஷா நின்றிருந்தான்.

“வா.... வாங்க....” அவனை வரவேற்கலாமா வேண்டாமா என குழம்பியதில் மெலிதாய் ஒலித்தது குரல். உள்ளே வந்தவன் சேகர் காட்டிய இருக்கையில் அமர்ந்தான். சந்திரசேகர் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஏனோ அவன் மேல் கோபம் வரவில்லை.

“ நான் ஹர்ஷா.... போட்டோல பார்த்திருப்பீங்க னு நினைக்கிறேன். நானும் தர்ஷினியும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கிறோம். நேற்று என் விருப்பத்தை அப்பா அம்மா கிட்ட சொல்லி அனுப்பியிருந்தேன். ஆனா நீங்க ஒத்துக்கல னு சொன்னாங்க. ஏன் என்னை உங்களுக்கு பிடிக்கல னு தெரிஞ்சிக்கலாமா?” அவன் நேரிடையாக கேட்க, என்ன சொல்வது என தெரியாமல் விழித்தார் சந்திரசேகர்.

“ அது.... அது... எனக்கு இந்த காதல் .... கத்திரிக்காய் மேலயெல்லாம் நம்பிக்கையில்லை. என் பொண்ண யாருக்கு கட்டி கொடுக்கணும் னு நான் தான் முடிவு பண்ணணும் னு நினைக்கிறேன்.நீங்.....”

அவர் மேற்கொண்டு பேசி முடிக்கும் முன் இடைபுகுந்தவன்,” ஒருவேளை நாங்க தரகர் மூலமா வந்த மாதிரியே பேசியிருந்தால் ஒத்துக்கிட்டு இருப்பீங்கல்ல? யாரோ ஒரு தரகர்....... அவர் சொல்றத நம்பி உங்க பொண்ண கல்யாண பண்ணி தர சம்மதிக்கிறீங்க. நாங்க மனசார விரும்புறோம் எங்கள ஏத்துகிட்டு கல்யாணம் பண்ணி வையுங்க னு நேர்மையா வந்து கேட்குறோம்.. ... எங்க காதலை நம்ப மாட்டீங்களா?” ஆதங்கமாய் கேட்டவனை என்ன சொல்லி மறுப்பது என தெரியவில்லை அவருக்கு. ஹர்ஷா கூறியது அனைத்தும் உண்மை தானே. இவர்களது காதல் விஷயம் தெரியாமல் இருந்திருந்தால் அவர் சம்மதித்து தான் இருப்பார்.

இருந்தாலும் வீம்பாக,” அதெப்படி பா..... காதலிக்க ஆரம்பிச்ச உடனே பெத்தவங்க எல்லாம் உங்க கண்ணுக்கு வில்லனா தெரியறோம்? தரகர் சொன்ன உடனே கண்ண மூடிகிட்டு சம்மதிச்சிடுவோம் னு எப்படி சொல்லலாம். உங்கள பெத்து வளர்த்து ஆளாக்க தெரிஞ்ச எங்களுக்கு உங்களுக்கு பொருத்தமான துணையை தேடி தர முடியாதா?” என வினவினார். சற்று தரமான கேள்வி தான்.

“ எனக்கு புரியுது அங்கிள். பெத்தவங்க நீங்க எங்கள பராட்டி, சீராட்டி வளர்த்திருப்பீங்க.... எங்களுக்கு எது பிடிக்கும்..... பிடிக்காது னு பார்த்து பார்த்து செய்திருப்பீங்க. அதே சமயம் இந்த வயசுல ஒருத்தர் மேல நேசம் வர்றதும் இயல்பு தானே? ஆனா அதுக்காக நாங்க உங்க கனவுகள சிதைக்க விரும்பல. உங்க சம்மதத்தோட சேரணும் னு தான் ஆசைபடுறோம். நாங்க காதலிச்சிட்டோங்குற விஷயத்தை ஒதுக்கி வைச்சிட்டு உங்க மகளுக்கு நான் பொருத்தம் இல்லை னு ஒரு காரணம்.... ஒரே ஒரு காரணம் சொல்லுங்க. நான் விலகிக்கிறேன்.” என்று விட்டு கைகளை கட்டிக் கொண்டு சாய்ந்து அமர்ந்தவனை பிரமிப்பாய் பார்த்தார் சேகர்.

என்ன காரணம் சொல்வது? குறை கூறவே முடியாத தோற்றம், மிரட்டலோ, கெஞ்சலோ இல்லாத தெளிவான குரல், என்ன குறை என நெஞ்சை நிமிர்த்தி கேட்கும் மிடுக்கு, ஒன்று சொல் விலகி விடுகிறேன் என்ற கம்பீரம்...... எதை குறை என கூறுவார்? எதுவும் சொல்லாமல் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரையும் மீறி அவர் கண்களில் ஒரு ரசனை.....

“ ஓகே அங்கிள்..... நாளைக்கு காலையில வரைக்கும் உங்களுக்கு டைம் தரேன். யோசிச்சி முடிவை சொல்லுங்க. வரேன்” என எழுந்தான்.

“ நாளைக்கும் நான் சம்மதிக்கலனா?” நிச்சயம் அந்த தொனியில் கோபமோ, அலட்சியமோ இல்லை மாறாக சுவாரசியம் இருந்ததோ?

“ சிம்பிள். உங்கள சம்மதிக்க வைக்க வேற என்ன வழியிருக்கு னு யோசிப்பேன்” தோளை குலுக்கி முறுவலோடு சொன்னவன் வாசல் வரை சென்று விட்டு திரும்பினான்.

“ அங்கிள்.... நேற்று அவ நம்மள மீறி எதுவும் செய்யமாட்டா னு எந்த நம்பிக்கையில சொல்ற னு சொன்னீங்களாம். நீங்க தாராளமா தர்ஷினிய நம்பலாம். அவ உங்கள மீறி எதுவும் செய்யமாட்டா. நானே வந்து கூப்பிட்டாலும் வரமாட்டா. தயவுசெய்து அவ போன வாங்கி வைக்கிறது, வீட்ல அடைச்சி வைக்கிறது னு அவள அவமானபடுதாதீங்க. அவ தாங்கமாட்டா..... நானும் அமைதியா இருக்கமாட்டேன்” தந்தைகே அமர்த்தலாக எச்சரிக்கை விடுத்துவிட்டு சென்றான் ஹர்ஷா.

சந்திரசேகருக்கு ஹர்ஷாவை மிகவும் பிடித்துவிட்டது என்பது தான் உண்மை. வர்ஷினி பேசியதில் ஏற்கனவே இளக தொடங்கியிருந்த மனம் இப்போது முழுதும் கரைந்துவிட்டிருந்தது. காதலிப்பது பிடிக்காது தான் இப்பவும் பிடிக்கவில்லை தான். ஆனால் இவனை பிடித்திருக்கிறதே.......

இரவு வீட்டிற்கு வந்த பின் தர்ஷினியை பார்த்தவருக்கு கொஞ்சம் நஞ்சமிருந்த பிடிவாதமும் தளர்ந்தது. தன் எழில் கொஞ்சும் புதல்வியின் பூ முகம், சருகாக உலர்ந்திருக்க தந்தை மனம் துடித்து போனது. “ சரி..... போகட்டும் கழுத... மனசுக்கு பிடிச்சவனோட சந்தோஷமா வாழ்ந்துட்டு போகட்டும்” என செல்லம் கொஞ்சினார் மனதினுள். மனைவியிடம் ஏனோ பகிர இயலவில்லை. எப்படி சொல்வது என யோசித்துக் கொண்டிருக்கும் போதே மல்லிகா புலம்பி முடித்து தூங்கி இருந்தார்.

காலையில் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றவர் ஹர்ஷாவை எதிர்பார்க்க, தரகரிடமிருந்து அழைப்பு வந்தது. சம்மதத்தை தரகர் மூலம் கேட்டிருந்தான் ஹர்ஷா. “ஒருவேளை நான் மறுத்து விடுவேன் என பயமோ” என எண்ணி சிரித்து கொண்டார். அவர் சம்மதம் சொல்லி வைத்த மறு நொடி, ஹர்ஷாவிடமிருந்து அழைப்பு.....

“ தேங்க்ஸ் மாமா..... தேங்க் யூ வெரிமச்” உற்சாகமாய் கூறினான் ஹர்ஷா. அவனது உரிமையான “மாமா” என்ற அழைப்பு.... அப்படி ஒரு நிறைவை கொடுத்தது அவருக்கு.

“ என் பொண்ண சந்தோஷமா பார்த்துக்க.... பா... பாத்துக்கங்க”

“ நிச்சயமா மாமா. என் பொண்டாட்டிய தங்கமா பார்த்துப்பேன். அவளை எனக்கு கட்டி வைச்ச என் மாமனார் மாமியாரையும் சேர்த்து நல்லா பார்த்துப்பேன்” என ஒரேடியாக அவரை கீளீன் போல்டாக்கியான் காதல் கயவன்.

வீட்டிற்கு வந்து மல்லிகாவிடம் கூறியதும் அவர் அதிர்ச்சியில் வாய் பிளந்தார். “ ரெண்டு பேரும் நல்ல பொருத்தமா இருக்காங்க மல்லி.... ஏன் பிரிக்கணும்? அதான் சரி னு சொல்லிடேன்” என கூறி மனைவியை பார்க்க, கணவன் சொன்ன பிறகு அப்பீல் ஏது? அவர் அமைதியாக இருந்தார். மனைவியிடம் சொல்லிவிட்டாலும் மகளிடம் கூற ஏனோ தயக்கமாக இருந்தது. ஹர்ஷாவை பிடித்துவிட்டதாம் ஆனால் மகளை தான் பிடிக்கவில்லை போலும். கொஞ்சமேனும் சங்கடம் இருக்க தானே செய்யும். இன்னும் அவளோடு சகஜமாக பேச முடியவில்லை. எனினும் மனம் நிறைந்தே எல்லாம் செய்தார். அவரின் மனம் புரிந்து ஹர்ஷாவின் வீட்டிலும் காதல் என்ற வார்த்தையை பேசவில்லை.

“அப்புறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே..... “என கூறி முடித்தாள் வர்ஷினி. பரவசத்தின் பிடியிலிருந்தாள் தர்ஷினி. என்னவன் எனக்காக எவ்வளவு செய்திருக்கிறான் என நெகிழ்ந்து போனது அவளின் காதல் மனது. நாளை ஹர்ஷாவை காண இடையில் நிற்கும் இந்த இரவு நீளமாக தெரிந்தது காதலரசிக்கு.

தொடரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 

Sponsored

Advertisements

Top