Chocolate boy - 23

#1
சாக்லேட் பாய் – 23

மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு என மூவண்ண கட்டங்களிட்ட டாப்ஸூம் இளஞ்சிவப்பு லெகின்சும் தர்ஷினி உடலை சிக்கென பிடித்திருக்க, அதற்கு பொருத்தமாய் இளஞ்சிவப்பு நிறத்திலேயே காதணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. சின்ன இளஞ்சிவப்பு புள்ளியாய் பொட்டு ஒட்டியிருந்தது அவள் முகத்தில் தனி சோபையை தந்தது. தர்ஷினி முடியை தளர்வாய் பின்னலிட்டு முடிக்க, அவள் காதோரமாய் மஞ்சள் நிற ரோஜா ஒன்றை சொருகினாள் வர்ஷினி.

“ வர்ஷு ...... ஆபிஸுக்கு எதுக்கு ரோஸ்?” தர்ஷினி சிணுங்கினாள்.

“ உன் ஹீரோ அங்க தானே இருக்கார்” என கண்ணடித்தவளை, “ ஆரம்பிச்சிட்டியா?” என போலியாய் முறைத்தாள்.

“ ம்ஹூம் வேண்டாம்..... எல்லாரும் கேலி பண்ணுவாங்க” என எடுக்க போக

“ வைச்சிக்கோ.... நிச்சயம் முடிஞ்சி முதல் முறையா ஆபிஸ் போறே.... லட்சணமா போயிட்டு வா” என்ற அன்னையின் வார்த்தையில் இன்னும் கோபம் எட்டி பார்த்தது. தர்ஷினி பூவை எடுக்காமல் அப்படியே வைத்து கொண்டு திரும்ப, அவள் அருகில் அவளது அலைபேசியை வைத்து விட்டு போனார் மல்லிகா.

“ ம்... நேர்லயே பார்த்து பேச போறேன். இனிமே இது எதுக்கு?” என எண்ணினாலும் போனை எடுத்து கைபைக்குள் போட்டு கொண்டாள்.

“ தேங்க்ஸ் வர்ஷூ....” அக்காவின் கன்னத்தில் முத்திமிட்டு கூற, தங்கையை கிண்டலாக பார்த்தாள் அவள்.

“ என்னடி வேற ஒருத்தருக்கு கொடுக்க வேண்டியத எனக்கு தர்ற”

“ ச்சீ.... போ..... இது உனக்கு தான். எனக்காக அப்பா கிட்ட பேசுனயில்ல? எனக்கு எவ்ளோ ஹேப்பியா இருக்கு தெரியுமா? நீ பேசுனதுனால தான் அப்பா மனசு மாறிச்சு. நான் உனக்கு எத்தனை தேங்க்ஸ் சொன்னாலும் போதாது வர்ஷூ ” மனம் கனிந்து கூறினாள்.

“எப்பவும் இதே மாதிரி ஹேப்பியா இரு. எனக்கு அது போதும் ” தங்கைக்கு பதில் முத்தம் கொடுத்து கூறினாள்.

வர்ஷினி ஊருக்கு கிளம்புவதால் அவளும் தங்கையிடம் விடைபெற்று கொண்டாள். இருவருக்குமே அழுகையில் தொண்டை அடைத்தது.

“ ஏன் வர்ஷூ.... ஈவினிங் நான் வந்ததுக்கு அப்புறம் கிளம்பலாமில்ல” லேசாய் தழுதழுத்த குரலில் தர்ஷினி கேட்டாள்.

“ ம்ப்ச்.... அங்க மாமா தனியா இருக்காரில்ல... நான் போகணுமே தர்ஷூ”

“ அடுத்து எப்போ வருவேடி?”

“ ம் அடுத்த மாசம் வருவேன்.... ஆனாலும் நாம முன்ன மாதிரி என்ஜாய் பண்ண முடியாது. கல்யாண வேலையெல்லாம் இருக்குமில்ல தர்ஷூ....” என்றவளின் கண்களும் கலங்கின.

ஒரு கொடியில் பூத்த மலர்கள் தான் ஆனால் ஒரே மாலையை சென்று அடைவதில்லையே? அக்கா தங்கை பாசம் அழகானது.... தனித்துவமானது..... வர்ஷினி திருமணத்திற்கு முன்பு வரை இவர்கள் கொஞ்ச நஞ்ச லூட்டியா அடித்தார்கள்? சந்திரசேகரும் மல்லிகாவும் கண்டிப்பானவர்கள் தான் என்றாலும் வீட்டிற்குள் அதை அதிகம் காட்டமாட்டாகள். சமைக்கிறோம் என்ற பெயரில் சமையலறையை அதகளம் பண்ணுவது, செல்ல சண்டை போட்டு வீட்டை ரெண்டாக்குவது, ஒரு ஒரு விஷயத்திற்கும் பட்டிமன்றமே நடத்துவது என அவர்கள் வீடு எப்போதும் அமளி துமளி படும். தர்ஷினி மற்றவர்களுக்கு அமைதியானவள் என்றாலும் வர்ஷினியிடம் மட்டும் சரிக்கு சரி வாயாடுவாள்.ஆனால் என்ன தான் இருவரும் சாதா சர்வ காலமும் முட்டி கொண்டும் சீண்டி கொண்டும் இருந்தாலும் ஒருவரையொருவர் விட்டு கொடுக்க மாட்டார்கள். அவர்களின் உலகம் தனி.... அதில் பெற்றவர்களுக்கு கூட சில சமயம் இடம் இருக்காது.

ஒருவரையொருவர் செல்ல பெயர் வைத்து அழைக்கும் போதும், தவறு செய்யும் போது காட்டி கொடுக்காமல் இருக்கும் போதும், நயமாய் கண்டிக்கும் போதும், தங்கள் பொருட்களை பாகுபாடின்றி உபயோகிக்கும் போதும் , சிறு தமாஷூக்கும் விழுந்து விழுந்து சிரிக்கும் போதும், நம்பிக்கையோடு ரகசியம் பறிமாறி கொள்ளும் போதும், பிறர் வலியை தன் வலியாய் உணரும் போதும், துவழும் போது ஆறுதல் சொல்லும் போதும் சகோதரிகள் இரண்டாம் தாய் தான்.(இந்த விஷயத்தில் நான் மிகவும் கொடுத்து வைத்தவள்)

வர்ஷினி திருமணம் முடிந்து சென்ற பிறகு தர்ஷினி மிகவும் தனித்து போனாள். படிப்பு முடியும் வரை சமாளித்த தனிமை அதன் பின் வெகுவாய் வாட்டியது. உடன் பெற்றோர்கள் இருந்தும் அமைதியாகி போனாள். தனிமை தாளாமல் தர்ஷினி பணி தேடலில் இறங்க, மகளின் நிலைக்கண்டு சேகர் மாப்பிள்ளை தேடலில் இறங்க, இருவர் தேடலில் முதல் வெற்றி தர்ஷினிக்கே கிட்டியது. பின்னே.... அவளது ஜோடி புறா அங்கிருக்க, சேகருக்கு எப்படி வெற்றி கிடைக்கும்?

மகள்கள் கண் கலங்குவதை கண்ட மல்லிகா, “ ஏய்..... என்னதிது? கிளம்புற நேரத்துல அழுகை?” என அதட்ட, அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அன்னையின் தோளில் சாய்ந்து விசும்பினர். அன்னையின் மனம் கரைந்து உருக,” ம்ப்ச்.... அழாதீங்கடி... என்ன செய்றது பொட்டச்சியா பொறந்தா புகுந்த வீட்டுக்கு போயி தானே ஆகணும்.அது தான் நம்ம தலையெழுத்து. நாம ஏத்துக்க தான் வேணும்” என மகள்களின் தலையை வருடியவாறே கூறியவரின் மனமும் தன் தாய் வீட்டை நினைத்து ஏங்கியது. புகுந்த வீட்டில் மகாராணியாய் ஆட்சி செய்தாலும் தாய் வீட்டில் இளவரசியாய் வலம் வந்த சுகம் மறக்குமா?

மூன்று பெண்களும் பேசுவதை கேட்டபடியே வந்த சந்திரசேகருக்கும் கவலை உதித்தது. தர்ஷினி திருமணம் முடிந்து சென்ற பின் காட்சியளிக்கும் வெறுமையான வீடு அவர் மனகண்ணில் தோன்றியது. பெண் மக்களை அருமை பெருமையாய் வளர்ப்பது இன்னொரு வீட்டிற்கு அனுப்பவா? என உழன்ற மனம் தன் மனையாளை நோக்கிய போது மாறியது.

இவள்...... இவள் என் வாழ்வில் வரவில்லை என்றால் என் வாழ்வு அர்த்தம் பெற்றிருக்குமா? இன்பத்திலும் துன்பத்திலும் என் கை கோர்த்து நடந்தவள்..... துவண்ட போது அரவணைத்ததும், மகிழும் போது பரவசப்பட்டதும் இவள்ளல்லவா? கல்லையும் மண்ணையும் கொண்டு நான் கட்டிய வீட்டை, அன்பையும் பாசத்தையும் கொண்டு இல்லமாக்கியவள் இவள் தானே? இவளை போல தானே என் மகள்களும் என் மருமகன்களின் வாழ்க்கை அகராதியாவார்கள்?” என தோன்றிய கணம் பெண் பிள்ளைகளை பெற்றதில் பெருமை கொண்டார். ஆண்களின் வாழ்வு பெண்களால் தானே பூரணம் ஆகிறது? மலரை பிய்த்து வேறிடம் வைத்தாலும் அங்கேயும் வேறூன்றி கிளை பரப்பும் அதிசய பிறவியல்லவா பெண்? ( ஆண்களுக்கு சப்போர்ட் பண்ணல னு யாரும் பொங்கிடாதீங்க.... இன்னொரு எபியில் அவர்களது மகிமையை சொல்கிறேன்)

“ மல்லி..... என்னை கல்யாணம் பண்ணிட்டு வந்ததுல ரொம்ப பீல் பண்ற போல” என மனைவியை சீண்டினார்.

“ சே...சே.... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க.... இவளுங்க தான் ஏதேதோ பேசி என்னை அழ வைச்சிட்டாலுங்க” சேலை தலைப்பால் கண்களை துடைத்தபடி கூறினார்.

“ அப்பா.... உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன்பா. எனக்கு ஊருக்கு போகவே பிடிக்கல” என்றாள் வர்ஷினி.

“ அப்பா.... நா... நான் அவங்கள லவ் பண்ணாலும் நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு பர்ஸ்ட். மத்த எல்லாரும் நெக்ஸ்ட் தான்பா. மேரேஜுக்கு அப்புறம் தினமும் இங்கே வந்திடுவேன் பா. உங்க கூட எல்லாம் நைட் வரைக்கும் இருந்துட்டு தான் போவேன்” – தர்ஷினி.

இருபெண்களையும் குறுநகையோடு நோக்கியவர்,” வர்ஷினி.... மருமகனுக்கு போன் பண்ணியா? அவர் காலையில சாப்பிடாமலே பேங்க் போயிட்டாராம் தெரியுமா?” என கேட்க,

“ அச்சச்சோ..... உண்மையாப்பா? அவருக்கு சாப்பிடலனா தலைவலி வந்திடுமே. சே... சாப்பிட்டு போக வேண்டியது தானே. சரிப்பா நாம கிளம்புவோமா? மதியம் சீக்கிரம் சமைக்கணும்” என்ற மகளை பார்த்து வாய் விட்டு சிரித்தார். அவர் சிரித்ததும் தான் தான் பேசியது புரிய அசடு வழிந்தாள்.

“ ம்...... பத்து மணி ஆபிஸுக்கு ஏழரை மணிக்கே கிளம்பி நிற்கிறியேமா? என்ன விஷயம்?” என தர்ஷினியை பார்த்து கேட்க, அங்கே டன் டன்னாய் அசடு வழிந்தது. தந்தை சற்று சகஜமாக பேசியதில் மனம் வேறு குதூகலித்தது.

“ இது தான்டா வாழ்க்கை. நீங்க பக்கத்துல இருந்து பார்த்துகிட்டா தான் எங்க மேல பாசம் இருக்கு னு அர்த்தமில்ல. நாம பார்க்காமலே இருந்தாலும் அது அப்படியே தான் இருக்கும். ஆனா உங்க குடும்ப வாழ்க்கைக்கு நீங்க அவசியம் அங்கே இருக்கணும். சரி.... சரி.... நேரமாகுது சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புங்க” என்றவர் சாப்பிட அமர்ந்தார்.

அனைவரும் சேர்ந்து அமர்ந்து உண்டனர். ஹரிக்குட்டியோடு சின்ன டூயட் ஆடிவிட்டு கிளம்பினாள் தர்ஷினி. அவள் கையில் இரண்டு இனிப்பு பெட்டிகள் அடங்கிய பையை திணித்தார்.

“ அங்கே மாப்பிள்ளை எங்களுக்கு நிச்சயமாகிடுச்சு னு சொல்லுவாரில்ல.... வெறுங்கையோடு நிற்பியா? இரண்டு பேரும் சேர்ந்து கொடுங்க” என்ற தாயை நெழ்ந்து பார்த்தாள் தர்ஷினி.

ஆபிஸுக்குள் நுழையும் போது மனதில் எழும் படபடப்பை தவிர்க்க முடியாமல் திண்டாடினாள் தர்ஷினி. ஒருவேளை ஹர்ஷா தனக்கு முன்னாடியே வந்திருப்பானோ என அவள் மனம் குறுகுறுத்தது. அவள் பணிபுரியும் தளத்திற்கு விரைந்து சென்று பார்க்க, அவளோடு அதிகம் பழகியிராத சிலர் மட்டுமே வந்திருந்தனர். இனிப்பு பெட்டிகளை தன் கப்போர்டில் வைத்தவள், மணியை பார்த்தாள்..... அது எட்டரை என காட்டியது.

“ ம்ப்ச்.... ரொம்ப சீக்கிரம் வந்துட்டோமோ?” என எண்ணியபடி தான் மிச்சம் வைத்திருந்த பணிகள் செய்ய தொடங்கினாள். அரைமணி நேரம் சடுதியில் கரைந்திருக்க அவளது அலைபேசி சிணுங்கியது. வேலையில் கவனமாயிருந்தவள் அலட்சியமாய் யாரென திரும்பி பார்க்க, அதில் ஹர்ஷாவின் முகம் மின்னிக் கொண்டிருந்தது. ஒரு நொடி சுவாசிக்கவும் மறந்தவளுக்கு உடம்பு முழுவதும் சிலிர்த்தது.

எதற்கு அழைக்கிறான் என எண்ணியபடியே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

“ ஹாய் தர்ஷினி.... ஹவ் ஆர் யூ டியர்?” தன் மன்னவனின் குரலுக்காக அவளது ஒவ்வொரு அணுவும் ஏங்கிக் கொண்டிருக்க, ஆர்பாட்டமாய் வந்தது ஆர்த்தியின் குரல்.

“ ஆங்....”

“ ஆ..... நான் உன்னை டியர் னு சொல்லிட்டேன்னு ஹர்ஷா என்னை அடிக்கிறான் பாரு...” தர்ஷினிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“ ஹே..... நான் ஆர்த்தி பேசுறேன். ஏன் தர்ஷினி என்கிட்ட எல்லாம் பேச மாட்டியா?”

“அய்யய்யோ.... அதெல்லாம் இ...இல்ல அண்ணி. நான் நல்லாயிருக்கேன். நீங்க நல்லாயிருக்கீங்களா? அங்கே வீட்டுல எல்லாரும் நல்லாயிருக்காங்களா?”

“ ஹப்பா.... ரொம்ப நீ......ளமா பேசிட்ட..... எல்லாரும் நல்லா இருக்கோம். ஆனா வீட்ல இல்லை ட்ரெயின்ல..... நீ வழியணுப்ப வருவேனு நினைச்சேன்”

“ அதுக்குள்ள கிளம்பிட்டீங்களா அண்ணி. தெரிஞ்சிருந்தா கண்டிப்பா சென்ட் ஆப் பண்ண வந்திருப்பேன். சாரி அண்ணி”

“ ஹே இட்ஸ் ஓ.கே தர்ஷினி.... ஹர்ஷா உன்கிட்ட சொல்லலையா? என கேட்டதும் திரு திருவென விழித்தாள் தர்ஷினி.

“ அது... அது....”

“ தர்ஷினி.... உன் வருங்கால அத்தை பேசணுமாம்” என தொடங்கி அலைபேசி ஒவ்வொருவரிடமாக மாறியது. தர்ஷினிக்கு மிக நீளமாக பேசியதில் தலை கிறுகிறுத்தது. இரண்டு முறை அலைபேசி ஹர்ஷாவிடம் சென்றும் அவன் பேசவில்லை.

இறுதியில், “ ஓ.கே தர்ஷினி.... ட்ரெயின் கிளம்ப போகுது.... நாங்க அப்புறம் பேசுறோம். நீ ஹர்ஷா கிட்ட பேசு” என்றவள் சில நொடிகளுக்கு பிறகு,” அவன் ஆபிஸுக்கு தான் வாரானாம். அங்கே பேசிக்கிறேன் னு சொல்லிட்டான். நான் வைக்கிறேன் தர்ஷினி. பாய்.....” என அழைப்பை துண்டித்தாள்.

தர்ஷினிக்கு ஏதோ ஹர்ஷா அவளை புறகணிப்பதை போலவே தெரிந்தது. கடைசியாக ஆர்த்தியிடம் கூறியதை தன்னிடமே சொல்லியிருக்கலாமே என தோன்றியது. தன்னோடு சேர தனியாய் நின்று போராடியவன் தன்னை ஏன் ஒதுக்குகிறான் என புரியவில்லை. என்ன ஆனாலும் இன்று ஹர்ஷாவோடு பேசிவிட வேண்டும் என எண்ணியவள் தன் மூளையை கசக்க, ஒரு யோசனை உதித்தது.

நேராக அவனது க்யூபுக்கு சென்றவள் அவனது கணினியை உயிர்ப்பித்தாள். பாஸ்வேர்டு எதுவும் இல்லாததால் எளிதாக திரை திறந்தது. விரைவாக ஒரு பாஸ்வேர்டு கொடுத்து கணினியை பூட்டினாள். இப்போது ஹர்ஷா தான் பாஸ்வேர்டுகாக தர்ஷினியை தேடிவர வேண்டும். வண்ண கனவுகளுடன் காதலன் + வருங்கால கணவனின் வரவிற்காக காதலோடு காத்திருந்தாள் தர்ஷினி.

தொடரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 

Sponsored

Advertisements

Top