DUECP | Vijay | Episode 8

Vijayanarasimhan

Author
Author
SM Team
#1
புவி

வளவன் மீண்டும் மயங்கியதில் பிரபு சந்துரு பிரபாகரன் மருத்துவர் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

“டாக்டர், அவன் பேசினதப் பார்த்தா அவனுக்கு எங்களைலாம் அடையாளம் தெரியாத மாதிரி இருந்துச்சு...” சந்துரு யோசனையோடு சொன்னான்.

“எங்களைலாம் தெரியலனாலும் பரவால்ல, எனக்கென்னவோ அவனுக்கு அவனையே தெரியலனு தோனுது... நீங்க உள்ள வரும்போது கூட நான் வளவன் இல்ல ஜீவானு சொல்லிட்டு இருந்தான்!”

பிரபுவின் குரலில் மெல்லிய கவலை இருந்தது.

”வாட், அவரையே அவருக்குத் தெரியலயா? அப்ப இது எதாவது சீரியஸ் கண்டிஷனா இருக்கலாம்... முதல் தடவ ஆள் எப்படி மயங்கினாரு? தலைல அடி ஏதாச்சு பட்டுச்சா?” மருத்துவர் வளவனின் பின் மண்டையைச் சோதித்தவாறே கேட்டார்.

”எங்களுக்குத் தெரிஞ்சவரை அப்படி எதுவும் இல்ல டாக்டர்! இங்க வந்து இறங்கினதும் பொத்துனு மயங்கிட்டான்! அதுவரைக்கும் நல்லாத்தான் இருந்தான்... நீங்க கூட எல்லா டெஸ்டும் எடுத்துப் பார்த்தீங்களே!”

பிரபு வளவனையே வாஞ்சையோடு பார்த்தபடி சொன்னான்.

“யெஸ்! யெஸ்! மயங்குறதுக்கான எந்த காரணமும் இல்லாமத்தான் இருந்தாரு! சரி, இப்ப இவர் மறுபடி கண்ணு முழிச்சார்னா நாம யாரும் அவரைக் கேள்விகள் கேட்க வேண்டாம், அவரைப் பேசவிடுவோம், அவர் என்ன நினைக்குறாருங்கறதைத் தெரிஞ்சுப்போம்... என்ன?”

மருத்துவர் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

“டாக்டர், எனக்கென்னவோ பிரபுவும் நீங்களும் மட்டும் இருந்தா போதும்னு தோனுது... நாங்க கிளம்புறோம்... வேணும்னா துணைக்கு இரெண்டு ஜவான்ஸ வெளில நிறுத்தி வெக்குறேன், நீங்க குரல்கொடுத்தா உடனே அவங்க வந்துடுவாங்க... என்ன?”

பிரபாகரன் அவர்களைப் பார்த்தபடியே பேசி கடைசி கேள்வியைச் சந்துருவைப் பார்த்தபடி கேட்டார்.

“ஆமா, எனக்கும் நிறைய வேலை இருக்கு, வந்து இறங்கி என் திங்க்ஸ்லாம் அன்பாக் கூட பண்ணல... நான் என் டெண்ட்டுக்குப் போறேன் பிரபு, ஏதாச்சு தேவைனா கால் பண்ணு...”

என்று கூறிவிட்டுச் சந்துரு வெளியேற, பிரபாகரனும் அவர்களைப் பார்த்து ஒருமுறை மிடுக்காய்த் தலையாட்டிவிட்டுக் கிளம்பினார்.

மருத்துவர் தானும் சென்றுவிட்டுப் பிறகு அவன் கண்விழித்ததும் வரலாம் என்று எண்ணினார்.

“பிரபு, நானும் போய் மத்த வேலையலாம் பாக்குறேன், வளவன் கண் முழிச்சா நீங்க அவர்கிட்ட அதிகம் பேச்சு கொடுக்காம உடனே எனக்கு கால் பண்ணுங்க, என்ன?”

அவர் பேசி முடிக்கும்போதே வளவனிடம் அசைவுகள் தென்பட, பிரபு பரப்பரப்பானான். மருத்துவரும் செல்வதை விடுத்து வளவனை நெருங்கினார்.

ஜீவா மீண்டும் தன்னினைவு அடைந்த போது தொண்டையிலும் வயிற்றுப் பகுதியிலும் கடுமையான ஒரு எரிச்சலையும் வலியையும் உணர்ந்தான்.

கண்விழித்த போது எதிரே இருந்த அந்த இருவர் மீதும் அளவற்ற கோவம் வந்தது.

சட்டென எழுந்து மருத்துவரின் கையை இறுக்கிப்பிடித்தான்.

“என்ன டா பண்ணீங்க என்ன? என் வாய்ஸ் பாக்ஸ்ல அப்டமென்லாலாம் என்னவோ பண்ணுது!”

சொல்லும்போதே அவனது இன்னொரு கை அனிச்சையாகத் தொண்டையையும் வயிற்றையும் தடவியது.

“வாய்ஸ் பாக்ஸா? என்ன டா ரோபோ மாதிரி பேசுற?”

பிரபு குழப்பத்துடன் கேட்டான்.

ஜீவா மருத்துவரை விட்டுவிட்டு அவன் மீது பாய்ந்தான்.

“மிஸ்டர்! அவசரப்படாதீங்க... கொஞ்சம் பொறுமையா இருங்க, நாங்க உங்க எதிரிகள் இல்ல... நம்புங்க... நாங்க உங்களை ஒன்னும் பண்ணல... நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க...”

மருத்துவர் ஜீவாவின் கவனத்தைத் தன் பக்கம் இழுத்தார்.

“என் வாய்ஸ் பாக்ஸுக்கு என்ன ஆச்சு?”

ஜீவா கோவத்துடன் கேட்டான்.

“ஐ திங்க், உங்களுக்குத் தாகம் எடுக்குதுனு நினைக்குறேன்... ட்ரை திஸ்...”

அவர் தண்ணீர் புட்டியை எடுத்து நீட்டினார்.

ஜீவா அதை வாங்கி அப்படியே அதைத் தன் தொண்டை மேல் வைத்துக்கொண்டான்.

“டேய்... என்ன டா ஆச்சு உனக்கு! பிளாஸ்கைத் திறந்து தண்ணியக் குடிடா!”

பிரபு இலேசான எரிச்சலோடு சொன்னான்.
“வாட்? குடிக்கனுமா? தண்ணி உள்ள போச்சுனா சர்க்யூட்ஸ் ஷார்ட்டாகிடும் டா முட்டாள்!”


ஜீவா சொல்லவும் பிரபு பொறுமை இழந்தான்.

“டேய், ஏண்டா இப்படி உளறிக் கொட்டி உசுர வாங்குற! உனக்குள்ள ஏதுடா சர்க்யூட்ஸ்?!”

“டாக்டர் பிரபு, கொஞ்சம் பொறுமையா இருங்க, லெட் மீ ஹேண்டில் ஹிம்! மிஸ்டர்...?”

மருத்துவர் பிரபுவிடம் கூறிவிட்டு, ஜீவாவைக் கேள்வியுடன் பார்க்க, அவன்

“ஜீவா! கமாண்டர் ஜீவா! கலாவிக் ஸ்பேஸ் கார்ப்ஸ்!” என்று மிடுக்காகப் பதில் சொன்னான்.

‘நல்லா கோர்வையா உளறுறானே! பிளைட்ல வரப்ப சயின்ஸ் பிக்‌ஷன் மாத நாவல் ஏதாச்சு படிச்சிருப்பானோ?’ என்று பிரபு மனத்திற்குள் எண்ணிக்கொண்டான்.


“குட்! கமாண்டர் ஜீவா, நான் ஒரு மருத்துவர், நான் சொல்றத்தைக் கொஞ்சம் கேளுங்க... முதல்ல இந்தத் தண்ணியக் குடிச்சுப் பாருங்க, உங்க தொண்டை எரிச்சல் அடங்கும், அதுக்குப் பேரு தாகம்... அப்புறம் ஏதாச்சு சாப்பிட்டீங்கனா உங்க வயித்து வலியும் குறையும், அதுக்குப் பேரு பசி...”

ஜீவா மருத்துவரைச் சற்று நேரம் விசித்திரமாகப் பார்த்துவிட்டு, பின் தயங்கித் தயங்கி அந்தப் புட்டியில் இருந்த தண்ணீரை ஒரு மிடறு விழுங்கினான்.

சற்று ஆறுதலாகத் தோன்றவே மேலும் கொன்சம் நீரைக் குடித்துவிட்டு மருத்துவரைப் பார்த்தான். அவர் அடுத்து அவனுக்குத் திண்ண பிஸ்கட் துண்டுகளைக் கொடுத்தார்.

ஜீவா அவற்றை கையில் வாங்கி அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தான்.

மருத்துவர் தனக்கொரு பிஸ்கட் துண்டை எடுத்துக்கொண்டு அதைக் கடித்து மென்று விழுங்கிக் காட்டினார். ஜீவாவும் அவ்வாறே செய்து அவற்றைச் சாப்பிட்டு முடித்தான். தன் வயிற்றில் இருந்த குடைச்சலும் தணிந்ததைப் போலத் தோன்றவே சற்றே ஆசுவாசமாகி மருத்துவரையும் பிரபுவையும் குரோதம் இன்றிப் பார்த்தான்.

”பரவல்லயே டாக்டர், ரொம்ப அழகா பொறுமையா அவனுக்குக் குடிக்கவும் சாப்பிடவும் கத்துக்கொடுத்துட்டீங்களே...”

பிரபு அடுத்துப் போடப் போகும் குண்டை அறியாதவராய் மருத்துவர் அவனது பாராட்டில் சிலிர்த்து பெருமிதத்தோடு இளித்தார்.

“என் சர்வீஸ்ல எத்தன பேர ஹேண்டில் பண்ணிருக்கேன்... டாக்டர் பிரபு!”

“உண்மைதான் டாக்டர்... நீங்க இல்லனா நான் திண்டாடிப் போயிருபேன்... அப்படியே நீங்களே கூட இருந்து அடுத்தடுத்த வேலைகளையும் அவனுக்குக் கொஞ்சம் கத்துக்கொடுத்துட்டுப் போயிடுங்க...”

பிரபு மெல்லத் தன் குண்டைப் பற்ற வைத்தான்.

“அடுத்தடுத்த வேலையா?”

மருத்துவர் புரியாமல் கேட்டார்.

“ஆமா டாக்டர், குடிச்சாச்சு, சாப்டாச்சு, அடுத்து அவன் ரெஸ்ட் ரூம் போகனும்ல?”

பிரபு அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க, மருத்துவருக்கு அப்போதுதான் அவனது சூழ்ச்சி புரிந்தது. பிரபுவை எரித்துவிடுவதைப் போல முறைத்தார்.

“உங்களை மாதிரி திறமையா அவனை எங்களால ஹேண்டில் பண்ண முடியாது, டாக்டர்!”

பிரபு கஷ்டப்பட்டுத் தன் கிண்டலை அடக்கிக்கொண்டு படுசீரியஸாகச் சொல்ல, மருத்துவரால் தன் கோவத்தை வெளிப்படையாகக் காட்ட இயலாத நிலை.

“சரி சரி, அதைலாம் அப்புறம் பாத்துக்கலாம், இப்ப முதல்ல இவர் தன்னை யாருனு நினைச்சுருக்காருனு டீட்டெய்லா தெரிஞ்சுப்போம்...”

என்று பேச்சைத் திசைதிருப்பினார்.

இருவரும் வளவன் பக்கம் திரும்பினர்.

“ஸோ... கமாண்டர் ஜீவா, உங்க வசிப்பிடம் எங்க?”

“கலாவிக் டாக்டர், செக்டர் 051!”

அவன் சாதாரனமாகச் சொன்னான்.

“கலாவிக்?”

“ஆமா, ஹெச்.டி. 5583 -னு அழைக்கப்படும் நட்சத்திர மண்டலத்துல இருக்கு... ஆண்ட்ரோமெடா கேலக்சில...”

ஜீவா ‘ஃபைகிராப்ட்ஸ் ரோட்ல் இருக்கு, ட்ரிப்ளிகேன்ல’ என்பதைப் போலச் சொன்னான். பிரபுவும் மருத்துவரும் ஒருவரையொருவர் புதிராகப் பார்த்துக்கொண்டனர்.

*******
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#2
கலாவிக்

வளவன் மீண்டும் நினைப்பு வந்து கண்விழித்த போது நீனா அவனையே பார்த்துக்கொண்டு அருகில் அமர்ந்திருந்தாள்.

“ஜீ- சாரி, வளவன்... எப்படி உணருறீங்க இப்ப?”

நீனா நிதானமான குரலில் கேட்டாள்.

“எனக்கு எதுவும் புரியல... நான் எங்க இருக்கேன், என் உடம்புக்கு என்ன ஆச்சு... இதெல்லாம் எப்படி ஆச்சு... மிஸ்...?”

“நீனா! நான் டாக்டர் நீனா, நானோபயாலஜிஸ்ட்!”

அவன் கையைப் பிடித்துக் குலுக்கினாள். வளவன் மெல்ல எழுந்து அமர்ந்தான்.

“வளவன், இப்போதைக்கு நீங்க உங்க நடப்புச் சூழலோடு சமாதானத்துக்கு வாங்க... இது ஏன் நடந்துச்சு, எப்படி நடந்துச்சுன்ற ஆராய்ச்சிக்கு நாம் அப்புறம் போகலாம்... நீங்க மறுபடி அதிர்ச்சி ஆகாம இருக்குறது முக்கியம்...”

நீனா சொல்லச் சொல்ல வளவன் ‘ம்ம்’ என்றபடி சிந்தனையோடு கேட்டுக்கொண்டான்.

“நான் உங்க நிலைமையை எடுத்துச் சொல்றேன், எனக்குத் தெரிஞ்சவரை... அதை ஒருமுறை என் மூலமா நீங்க கேட்டுறது நல்லதுனு தோனுது எனக்கு... என்ன?”

“சரி!”

“குட்! ஸோ, இப்ப நீங்க இருக்குறது ஒரு இயந்திர மனிதனின் உடலில்... அவன் பேரு ஜீவா, அவன் முழுக்க இயந்திரம் அல்ல, கொஞ்சம் ஆர்கனிக் உறுப்புகளும் இருக்கு...”

“ஓ... என்னென்ன உறுப்புகள்?”

”முக்கியமா மூளை! ஜீவாவின் மூளை செமி ஆர்கானிக், அதனாலதான் அதுல ஏ.ஐ. () இந்தளவுக்கு வெற்றியடைஞ்சுது...”

“ஓ...” வளவன் ஆழ்ந்த யோசனையுடன் கேட்டுக்கொண்டான்.

”ஆமா, எனக்குத் தெரிஞ்சு அதனாலத்தான் உங்களாலயும் இந்த உடம்புல இருக்க முடியுது!”

“யு மீன்?”

“ஐ மீன், இந்த உடல்ல இருக்குற நீங்க இதன் மூளைல மட்டுந்தான் இருக்கீங்க... இங்க பிசிக்கலா எதுவுமே மாறல, ஸோ, உங்க ‘ஸ்விட்ச்’ வெறும் எண்ண அலைகளின் மாற்றம்தான்...”

“ஸ்விட்ச்? அப்போ ஜீவா என் உடல்ல இருக்கான்னு சொல்றீங்களா?”

“ஆக்சுவலி நான் அப்படி மீன் பண்ணல, ஆனா, நீங்க கேட்டதுக்கு அப்புறம் அப்படியும் இருக்கலாமோனோ தோனுது... நான் இதுவரைக்கும் நீங்க ஜீவாவவை அழிச்சிட்டோ இல்ல அடக்கிட்டோ இந்த மூளையை ஆக்குபை பண்ணிக்கிட்டீங்கனுதான் ஹைப்போதஸிஸ் வெச்சிருந்தேன்...”

“ஓ... ஆமா, நீங்க சொல்றதும் சாத்தியம்... நான் ஜீவாவை ஓவர்ரைட் பண்ணிருக்கலாம், அல்லது சப்ரச் பண்ணிருக்கலாம்... எதுனு எப்படித் தெரிஞ்சுக்குறது?”

“அதுக்குத்தான் எந்த வழியுமே இல்ல வளவன்! நான் அடுத்து சொல்லப் போறத அதிர்ச்சியாகமா கேளுங்க...”

“சொல்லுங்க!”

“இப்ப நீங்க இருக்குறது கலாவிக்ன்ற கிரகத்துல... இது ஆண்ட்ரோமெடா கேலக்சில இருக்கு...”

“ஆண்ட்ரோமெடா? அப்ப நாம பூமிலேர்ந்து இரண்டரை மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவுல இருக்கோமா?!”

வளவன் சற்றே அதிர்ச்சியுடன் கேட்டான்,

“அ- ஆமா... அதே மாதிரி...”

“சொல்லுங்க நீனா, எதா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க... இதுக்கு மேல என்ன பெரிய அதிர்ச்சி இருக்கப் போவுது!”

வளவனின் குரலில் ஒரு விரக்தி இருந்தது.

“அதாவது, இப்ப இங்க 318வது ஆண்டு...”

“318? எந்தக் கணக்குப்படி? கி.மு.வா? கி.பி.யா?”

“க.உ.பி.!”

”க.உ.பி?”

“ஆமா, ‘கலாவிக் உருவாகிய பின்’, புவியாண்டு கி.பி. 2050ல இந்த கிரகம் உருவாக்கப்பட்டது, அதனால எங்க ஆண்டை அதுலேர்ந்துதான் கணக்குப் பன்றோம்...”

“வாட்? நீங்க சொல்றதுபடி பார்த்தா நான் என் காலத்துலேர்ந்து சுமார் 350 ஆண்டுகள் தாண்டி, 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தாண்டி இருக்கேனா?”

“ஆமா!”

நீனா அவன் மீண்டும் மயங்கி விழுவான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

ஆனால் வளவன் சற்று நேரம் எந்தச் சலனமும் இல்லாமல் அசைவற்று இருந்துவிட்டுப் பின் சட்டென அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“இப்ப எப்படி நான் திரும்ப என் காலம் இடத்துக்குப் போக முடியும்? முடியுமா?”

(தொடரும்...)
கலாவிக் கையேடு # குறிப்பு 21

கலாவிக் கிரகத்தில் அனைத்து போக்குவரத்துகளும் பறக்கும் கலங்கள் மூலமாகத்தான். தரைக்கு அருகில் ’தாழ்நிலைத் தடங்களில்’ பறக்கும் ’மிதவுந்துகள்’ குறுகிய தொலைவு பயணத்திற்கும், விண்ணில் உயரத்தில் பறக்கும் ‘விண்படகுகள்’ நீண்ட தொலைவு பயணத்திற்கும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இராணுவத்தினர், விண்காப்பு படையினர் ஆகியோரிடம் ‘விண்கப்பல்கள்’ என்ற பெரிய அளவிலான வாகனங்கள் உள்ளன. உயர்மட்ட அதிகாரிகளும் ஆளுநரும் மட்டும் பயன்படுத்த சுரங்க வழிகளும் அவற்றுக்கான வண்டிகளும் உள்ளன.
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#4

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top