• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irandalla Ondru - Episode 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
Dear Friends,
Thank you so much for your wonderful likes and comments... :)

இரண்டல்ல ஒன்று – 10

மணமேடையில் அமர்ந்திருந்த நந்தினி தன் இரு கண்களை சுருக்கி ராம் பிரசாத்தை கூர்மையாகப் பார்த்தாள். அவளறியாமல் நந்தினியின் வெட்கம் மறைந்து யோசனை மேலோங்கியது.

ராம் பிரசாத் குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தான். அவனால் திருமண சடங்குகளில் முழுதாக ஈடுபட முடியவில்லை.'வைஷ்ணவியின் எண்ணமா?' இந்தக் கேள்விக்கு ராம் பிரசாத்திடம் பதில் இல்லை.

'காதலா?' என்ற கேள்வி ராம் பிரசாத் மனதில் எழுந்தால், 'ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுக்க முடியாத பட்சத்தில் காதல் அர்த்தமற்று போனதாக தோன்றியது' அவனுக்கு.

வைஷ்ணவியின் எண்ணங்கள் பின்னுக்கு சென்று, தற்போதைய பிரச்சனை ராம் பிரசாத் முன் பூதாகரமாய் நின்றது.

நந்தினி! நந்தினி! நந்தினி! என்ற பெயரோடு...

தன் மணவாளனிடம் எதிர்பார்த்த பார்வை, புன்னகை என அனைத்தையும் மறந்து நந்தினி அவனை கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்க, அவள் உள்ளுணர்வு ஏதேதோ கூறியது.

இது அறியாமல்… நந்தினியைப் பார்க்கும் தைரியம் இல்லாமல்… குற்ற உணர்ச்சி மேலோங்க, ‘என்னால் இவளிடம் சகஜமாக பேச முடியுமா? காதல் அத்தனை பெரிய குற்றமா? இந்தக் காதல் எத்தனை பேரின் வாழ்க்கையை அழிக்கப் போகிறது?’ போன்ற குதர்க்கமான கேள்விகளோடு இலக்கில்லாமல் எங்கோ பார்த்தபடி ஐயர் கூறியதை செய்து கொண்டிருந்தான் ராம் பிரசாத்.

அப்பொழுது அனைவரின் கவனத்தை திசை திருப்பும் விதமாக, ஒருவர் வேஷ்டி சட்டையோடு கம்பீரமாக நுழைய அவரோடு இன்னும் சிலர் நுழைய அங்குப் பதட்டம் நிலவியது.

சந்துரு பதட்டமாகவும் மரியாதையாகவும் மேடையில் இருந்து இறங்கி வந்தான். அவனோடு வாசுதேவனும் இறங்கி வந்தான். அவர்கள் இருவரும் ஒன்றாக நடந்து இல்லையில்லை ஓடி வர, அந்தக் காட்சியை ரசித்துப் பார்த்தாள் வாசுதேவனின் தங்கை சுபா.

அவர்கள் இருவரும் ஒன்றாக வந்த காட்சி அவர்களின் நெருங்கிய நட்பு நிறைந்த காலத்தை நினைவு படுத்த, 'அந்த காலம் மீண்டு விடாதா?' என்று ஏக்கத்தோடு அவர்களை மணமேடையில் நின்றபடி பார்த்தார் பார்வதி சந்துருவின் தாய்.

நான்காவது வரிசையில் அமர்ந்திருந்த உத்தமி… தன் மகனையும், சந்துருவையும் சொல்லிலடங்கா வெறுப்போடும்... வேதனையோடும் பார்த்தார்.

அந்த வெள்ளை வேஷ்டி, சட்டை அணிந்த பெரியவரை இருவரும் பலத்த மரியாதையோடு வரவேற்க… அருகே சென்றால் அவர் அந்த ஊரின் MLA என்று நமக்குத் தெரிய வருகிறது.

தாலி கட்டும் நேரம் நெருங்க நெருங்க வைஷ்ணவியும், அவள் தந்தையும் எண்ணி நமக்குப் பதட்டம் மேலோங்க… அவர்கள் இன்னும் வராத காரணத்தினால் நாம் அவர்களைத் தேடி செல்வோம்.

வைஷ்ணவி மதுரை மருத்துவமனை ICU வாசலில் சோர்வான முகத்தோடும், கலங்கிய கண்களோடும் சோகமாக அமர்ந்திருந்தாள்.

வைஷ்ணவியை நெருங்கப் பயந்து அவளை நெருங்காமல் அவளைச் சுற்றி பலர் மரியாதையாக நின்று கொண்டிருந்தனர்.

வைஷ்ணவியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரைத் தாரையாக வழிந்து கொண்டிருந்தது. பலர் அவளைச் சுற்றி இருந்தாலும், தாய் இல்லா அந்த இளம் பெண்… தந்தையும் ICU யில் இருக்க… தோள் சாய்ந்து அழுவதற்கோ… தேற்றுவதற்கோ ஆள் இல்லாமல் தனியாக அமர்ந்திருந்தாள்.

"ராம் பிரசாத்தின் முகூர்த்த நேரம் நெருங்கியிருக்கும்..." என்று ஏதோ ஒரு ஓரத்தில் வைஷ்ணவிக்குத் தோன்றினாலும், அதைச் சிந்திக்க மனமில்லாமல் அவள் எண்ணம் நேற்று இரவு நடந்து சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் தவித்தது.

"வைஷ்ணவி..." என்று அவள் தந்தை தர்மலிங்கம் படபடப்பாக அழைக்க, "அப்பா.. அப்பா.." என்று அழைத்துக் கொண்டு அருகே ஓடினாள் வைஷ்ணவி.

அவர் முகமெங்கும் வியர்வைத் துளிகள். அவர் முதுகு பக்கம் வியர்வையால் நனைந்திருக்க, அவர் சரிந்து படுத்தார்.

அவரைத் திருநெல்வேலியில் உள்ள, பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, "ஹார்ட் அட்டாக்.." என்று மருத்துவர் சொன்னது மட்டும் தான் வைஷ்ணவிக்கு நினைவிலிருந்து.

அதன் பின் கலந்து பேசி மதுரை இல்லையென்றால் சென்னை அழைத்து வர வேண்டும் என அவர்கள் நினைக்க, "சென்னை வரை அழைத்துச் செல்வது உசிதம் இல்லை..." என்று மருத்துவர் கூறினார்.

தன் திருமணத்தை பற்றிய கவலையே தந்தையை இந்நிலைக்குக் கொண்டு வந்து விட்டதாக எண்ணினாள் வைஷ்ணவி. 'அப்பாவை யாராலும் என்னிடமிருந்து பிரிக்க முடியாது...' என்று தனக்குள் சூளுரைத்து பழக்கம் இல்லாத ஊராயினும் மதுரைக்குத் தந்தையை அழைத்துச் செல்வதாக முடிவு செய்தாள் வைஷ்ணவி.

இடையில் கண் விழித்த தர்மதுரை, "வைஷ்ணவி... இவங்க எல்லாம் என் கூட இருக்கட்டும்... நீ கல்யாணத்துக்குப் போ..." என்று அவர் தன் மகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு கூறினார்.

மறுப்பாகத் தலை அசைத்து, "என்னுடைய இந்தப் பிடிவாதமே, நான் உங்களை விட்டுப் பிரிய கூடாதுன்னு தான்... அப்படி இருக்க நீங்க இந்த நிலையில் இருக்கும் பொழுது எனக்குக் கல்யாணமா அப்பா? " என்று நிதானமாகக் கேட்டாள் வைஷ்ணவி.

"உன் வாழ்க்கை?" என்று தர்மலிங்கம் கேள்வியாக நிறுத்த, "நீங்கப் பழைய மாதிரி தெம்பா வந்தா நல்லாருக்கும்..." என்று அவர் உடல் நலத்தோடு திரும்பி வர தன் தந்தைக்கு மறைமுக ஆணைப் பிறப்பித்தாள் வைஷ்ணவி.

மகளின் ஆணையை ஏற்றுத் தானே அவருக்குப் பழக்கம்... சம்மதமாகத் தலை அசைத்து operation theatre க்குள் சென்றிந்தார் தர்மலிங்கம்.

தலை அசைத்து , கண்ணீரைத் துடைத்து, 'நான் அழக் கூடாது... அழுவது கோழைத்தனம்... அழுவது என்னைப் பலவீனப்படுத்தும்... இப்ப என்ன நடந்திருச்சு... அப்பாக்கு உடம்பு சரி இல்லை... இந்த ஆபரேஷன் முடிந்தால் எல்லாம் சரி ஆகிரும்...' என்று யோசித்து தன்னை தானே தேற்றிக் கொண்டு நிமிர்வாக அமர்ந்தாள் வைஷ்ணவி.

வைஷ்ணவி தன் வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் நிலைமையில் இல்லாததால், நம்மாலும் எதையும் கணிக்க முடியவில்லை.

முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டதால்… நாம் அழகியபுரம் நோக்கிப் பயணிப்போம்.

"கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை

இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று" என்ற பாடல் நாம் செல்லும் வழியில் உள்ள டீ கடையில் ஒலிக்கிறது.

அழகியபுரம் திருமண மண்டபம்...

அனைவரும் மணமக்களை ஆசிர்வதிக்கத் தயாராக இருக்க, "கெட்டிமேளம்... கெட்டிமேளம்..." என்ற சத்தம் ஓங்கி ஒலித்தது.

ராம்பிரசாத் நந்தினியின் கழுத்தில் முதல் முடிச்சைப் போட, மீதி இரண்டு முடிச்சான நாத்தனார் முடிச்சை வாசுதேவனின் தங்கை சுபா முடிச்சிட்டாள்.

சுபா... அவளுக்குக் கட்டுப்பாடு எதுவும் இல்லை என்பதும்... அவள் சந்துருவையும், ராம் பிரசத்தையும் அண்ணா என்றழைத்தது வாய் வார்த்தையில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

அனைவரும் திருமண நிகழ்வைச் சந்தோஷமாக அனுபவிக்க, உத்தமி யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தார்.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
திருமணம் முடிந்து அனைவரும் உணவருந்தச் செல்ல… வாசுதேவனும், சந்துருவும் பந்தியை கவனித்துக் கொண்டனர்.

அட! ஒருவரிடம் மற்றவர் பேசாமலே... ஒருவர் நினைப்பதை மற்றவர் புரிந்து கொண்டு இத்தனை பிரமாதமாகப் பந்தியை கவனித்துக் கொள்ள முடியுமா என்ற ஆச்சரியம் இவர்கள் சண்டையை பற்றித் தெரிந்தவர்களுக்கு மேலோங்கியது.

சந்துருவும், வாசுதேவனும் எதைப் பற்றியும் யோசிக்க நேரமில்லாமல் பம்பரமாக சுற்றி வேலை பார்த்தனர்.

உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் தங்கள் உணவை முடித்த பின், குடும்ப உறுப்பினர்கள் உண்ண ஆரம்பித்தனர்.

கோமதி, பவித்ரா, சுபா, அவள் கணவர்… ஒரு வரிசையில் அமர்ந்திருக்க , ராம் பிரசாத் நந்தினி எதிர்பக்கமாக அமர்ந்தனர். ராம் பிரசாத் அருகே சந்துரு அமர, வேறு எங்கும் இடமில்லாததால் சந்துரு அருக வாசுதேவன் அமர்ந்தான்.

"பவித்ரா, சந்தோஷ் சாப்பிட்டுட்டானா?" என்று கோமதி வினவ, "ம்ம்.. சாப்பிட்டுட்டான்... அவனும்… அகல்யாவும் தான் விளையாடிகிட்டு இருக்காங்க.." என்று பவித்ரா கோமதிக்கு பதில் கூற, அவர்கள் இலையில் பொரியல், அவியல், கூட்டு, பச்சடி என விதவிதமாக பரிமாறப்பட்டது.

நந்தினி எதுவும் பேசாமல் உண்ண… ராம் பிரசாத் சிந்தனையில் ஆழ்ந்தவனாகச் சாப்பிட்டு கொண்டிருந்தான்.

"ராம்..." என்று கோமதி அழைக்க, "டேய்.. கல்யாணம் ஆகி இம்புட்டு வருசம் ஆனதால, உங்க அண்ணன் என்னைக் கொஞ்சம் கூட கண்டுக்காம சாப்பிடறதில் ஒரு அர்த்தம் இருக்கு... நீயுமா இப்படி?" என்று கோமதி கேலி பேச, நந்தினி ராம் பிரசாத்தின் பதிலுக்காக அவனைப் பார்த்தாள்.

ராம் பிரசாத், " சும்மா இருங்க அண்ணி..." என்று மெலிதான புன்னகையோடு கூறினான்.

"டேய்.. உங்க அண்ணி உன்னை சொல்ற மாதிரி எங்களை சொல்றா டா?" என்று கூறி பெருங்குரலில் சிரித்தான் சந்துரு.

அப்பொழுது வாசுதேவன் பவித்ராவை பார்த்து புருவம் உயர்த்த, பவித்ரா வெட்க புன்னகையோடு குனிந்து கொண்டாள். இதைப் பார்த்த கோமதி, "நான் உங்களை மட்டும் தான் சொன்னேன்... மத்த இடத்தில் கவனிப்பெல்லாம் பலமா தான் நடக்குது..." என்று வாசுதேவனைப் பார்த்தபடி கோமதி பதிலளித்தாள்.

இதைக் கேட்டு சந்துரு பெருங்குரலில் சிரிக்க, அவனுக்குப் புரை ஏறியது.

சந்துருவின் டம்ளர் காலியாக இருக்க, அதைப் பார்த்த ராம் பிரசாத் தன் டம்பளரை எடுத்து தன் சகோதரனுக்கு கொடுக்குமுன் வாசுதேவன் தன் டம்பளரை எடுத்து சந்துருவின் முன் வைத்தான்.

இதைப் பார்த்த ராம் பிரசாத் அமைதியாக தன் அண்ணி கோமதியை பார்த்து, புன்னகைத்தான்.

கோமதி, பவித்ரா இருவரும் எதுவும் தெரியாதது போல் தங்கள் தலையைக் குனிந்து கொண்டு உணவில் கவனம் செலுத்துவது போல் பாசாங்கு செய்தனர்.

சுபா அங்கு நடப்பவற்றை அமைதியாகப் பார்த்து கொண்டிருந்தாள்.

சந்துரு தண்ணீரை குடிக்காமல் இருமலோடு அமர்ந்திருக்க, எல்லாரும் பதட்டமாக சந்துருவை பார்க்க… வாசுதேவன் தன் பற்களை கடித்துக் கொண்டு அந்த டம்பளரை சந்துருவின் கைகளில் கொடுக்க சந்துரு தண்ணீரை அருந்தினான்.

'என் தேவ்... இவனால் மட்டுமே என் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியும்... ஆனால் அன்று...' என்று கலங்கிய கண்களோடு தண்ணீரை குடித்துவிட்டு சந்துரு உண்ண ஆரம்பித்தான்.

"வாசு அண்ணா..." என்று சுபா மெல்லிய குரலில் அழைக்க, வாசுதேவன் தன் தங்கை சுபா கூற வருவதை அறிந்தது போல் அவளைக் கோபமாக முறைத்தான்.

ராம் பிரசாத் சுபாவை தன் கண்களால் எச்சரிக்க, சுபா கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள். சுபாவின் கணவர், பவித்ரா, கோமதி அனைவரும் இந்தக் காட்சியை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கு நடப்பவை எதுவும் புரியாமல் நந்தினி குழப்பமாக பார்த்தாள். ஆனால், அவள் சிந்தனை ராம் பிரசாத்தை சுற்றி வந்தது.

அங்கு மௌனம் ஆட்சி செய்து கொண்டிருக்க… இந்த காட்சியை, ஒரு ஓரத்திலிருந்து குரோதமாக பார்த்துக் கொண்டிருந்தார் உத்தமி.

மாலை வரவேற்பு...

மணமேடையில் நந்தினி Lehenga வில் ஜொலிக்க, ராம் பிரசாத் coat suit இல் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான்.

ராம் பிரசாத் நல்ல உயரம்... கம்பீரமான தோற்றம்... புன்னகை தேக்கிய முகம்... ஆனால், அவன் முகம் இன்று சற்று குழப்பமாகக் காட்சி அளித்தது. நந்தினி, ராம் பிரசாத்துக்கு ஏற்றார் போல் உயரம்… மெல்லிடை… மாநிறத்திருக்கும் அதீத நிறம்... சாமுந்திரிகா லட்சணம் பொருந்தி ராம் பிரசாத்தின் கம்பீரத்திற்குச் சிறிதும் குறைவின்றி தேவதையாக காட்சி அளித்தாள்.

பவித்ரா டிசைனர் சில்க் சேலை அணிந்து, பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தாள்.

வாசுதேவன் சற்று ஓய்வாக, அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்தமர்ந்து அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் அருகே சந்தோஷ், அகல்யா இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பெரியவர்கள்... சிறியவர்கள்... என அனைவரும் வேலையில் மூழ்கியிருக்க உத்தமி வாசுதேவன் அருகில் வந்தமர்ந்தார்.

"வாசு...பவித்ரா கட்டிருக்கிற சேலை... என்ன சேலை டா இது... ஜிகு ஜிகுன்னு அம்சமா ஒரு பட்டு சேலை கட்டிருக்கலாம்ல..." என்று பவித்ராவை பார்த்தபடியே முணுமுணுக்க, வாசுதேவன் சிரித்துக் கொண்டான்.

உத்தமி மேலும் பேச, "அம்மா... அவளுக்கு பிடிச்சிருக்கு... என்னைக்கோ ஒரு நாள் தானே..." என்று தன் தாயிடம் சமாதானமாக பேசினான் வாசுதேவன்.

'அப்படி என்ன ரதி இந்த பவித்ரா...' என்று எண்ணாமல் உத்தமியால் இருக்க முடியவில்லை.

உத்தமி தன் ஆயுதத்தை வேறு பக்கமாக வீசினார்.

"உங்க அப்பாவுக்குக் கொஞ்சம் கூட அறிவேயில்லை... இவுக என்ன பெண் வீட்டுக்காரரா? இப்படி மாஞ்சி மாஞ்சி வேலை பாக்குறாக... சந்துரு வீட்ல மாப்பிள்ளை வீடுன்னு மின்னுக்கா இருக்காக..." என்று உத்தமி வாசுதேவனின் காதில் கிசுகிசுக்க வாசுதேவனின் புருவங்கள் நெளிந்தது.

தன் அம்பு இலக்கு தவறாமல் பாய்ந்ததை உத்தமி கணித்து விட்டார்.

"சந்துரு செய்த வேலைக்கு..." என்று ஆரம்பித்து உத்தமி பதினைந்து நிமிடம் கிசுகிசுக்க, வாசுதேவன் எதுவும் பேசாமல் மௌனமாகத் தலை அசைத்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது பவித்ரா அவனருகே வருவதை பார்த்துவிட்டு, இங்கிதமாக இடம் கொடுப்பது போல் அங்கிருந்து நகன்றார் உத்தமி.

"அத்தான் வாங்களேன்... நலுங்கு ஆரம்பிக்க போகுது... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க காத்து கிட்டு இருக்காங்க.." என்று பவித்ரா குழைவாக அழைக்க, "அப்ப நாங்க யாரு பவி?" என்று வாசுதேவன் மெதுவாகக் கேட்டான்.

பவித்ரா ஒரு நொடி அவனைப் புரியாமல் பார்க்க, வாசுதேவன் நாற்காலியில் சாய்ந்தமர்ந்து கால் மேல் கால் போட்டு அவளைச் சிரித்த முகமாகப் பார்த்தான்.

"அத்தான்... என்ன கேட்கறீங்க?" என்று பவித்ரா அவனருகே அமர்ந்து மெதுவாகக் கேட்க, அவள் சேலையில் தொங்கிக் கொண்டிருந்த ஜிமிக்கி அருகே இருந்த நாற்காலியில் மாட்டிக் கொண்டது.

"என்ன சேலை இது பவி... அம்மா சொல்ற மாதிரி பட்டு சேலை கட்டிருந்தா இந்தக் கஷ்டம் வருமா?" என்று அவளுக்கு உதவி செய்த படியே கேட்டான் வாசுதேவன்.
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
வாசுதேவனின் அனைத்துக் கேள்விகளையும் பேச்சுக்களையும் பின்னுக்கு தள்ளி விட்டு, "மேடைக்கு வாங்க..." என்று அழைத்தாள் பவித்ரா.
"பவித்ரா..." என்று அவள் தாய் செல்வி அழைக்க, "அம்மா... இதோ வரேன்..." என்று சத்தம் கொடுத்தாள் பவித்ரா.
"மாப்பிள்ளையும் கூட்டிட்டு வா..." என்று செல்வி கூற, சிரித்த முகமாகத் தலை அசைத்தாள் பவித்ரா.
"அத்தான் வாங்க... அப்புறம் பேசிக்கலாம்..." என்று பவித்ரா விடாப்பிடியாகக் கூற, "நீ கூப்பிட்ட உடனேவோ... இல்லை உன் வீட்டு ஆளுங்க கூப்பிட உடனே நாய் மாதிரி வாலை ஆட்டிக்கிட்டு வரதுக்கு வேற ஆளை பாரு..." என்று வாசுதேவன் சிடுசிடுத்தான்.
"அத்தான்..." என்று பவித்ரா கண்டிப்பான குரலில் கூற, "என்ன?" என்று அழுத்தமாகக் கேட்டான் வாசுதேவன்.
அருகே விளையாடிக் கொண்டிருந்த சந்தோஷை அழைத்து, "உங்க ஆச்சி அப்பா கூட பேசிட்டு இருந்தாங்கல்லா?" என்று பவித்ரா சந்தோஷிடம் கேள்வியாக நிறுத்தினாள்.
"என்ன டி கொழுப்பா?" என்று வாசுதேவன் பற்களை கடிக்க, "உத்தமி மகன் பேசுற பேச்சு எனக்குத் தெரியாதா?" என்று முணுமுணுத்தாள் பவித்ரா.
"அப்பாவும்... ஆச்சியும் ரொம்ப நேரம் பேசினாங்க..." என்று சந்தோஷ் குழந்தைத்தனத்தோடு தனக்குத் தெரிந்த விஷயத்தைப் பெருமையாக கூற, "நினச்சேன்..." என்று கழுத்தை நொடித்தாள் பவித்ரா.
"பவித்ரா..." என்று செல்வி மீண்டும் அழைக்க, வாசுதேவனின் பிரச்சனையை தள்ளி வைத்து மணமேடை நோக்கி ஓடினாள் பவித்ரா.
"மாப்பிள்ளை எங்க டி?" என்று செல்வி பவித்ராவிடம் சிடுசிடுக்க, "அவுங்க வருவாங்க அம்மா..." என்று மெதுவாகக் கூறினாள்.
"கொஞ்சமாவது அறிவு இருக்கா? வீடியோ, போட்டோ எடுக்கிறாங்க... மாப்பிள்ளை இல்லைனா நல்லா இருக்குமா? கூட கூட்டிட்டு வர சாமர்த்தியசாலிதானம் இல்லை... நீ எல்லாம்..." என்று செல்வி தன் மகளைக் கடிக்க… பவித்ரா கண் கலங்கினாள்.
நந்தினி தன் அக்காவைப் பார்த்த, கேள்வியாக கண்ணுயர்த்த… பவித்ரா கலங்கிய தன் கண்களை மறைத்துக் கொண்டு, மறுப்பாகத் தலை அசைத்தாள்.
"அத்தான் எங்க?" என்று நந்தினி கேட்க, "இதோ கூட்டிட்டு வரேன்..." என்று பவித்ரா மீண்டும் வாசுதேவனிடம் சென்றாள்.
கலங்கிய கண்களோடு, "அத்தான்... மேடைக்கு வாங்க..." என்று கெஞ்சும் குரலில் கேட்டாள். வாசுதேவன் பவித்ராவை யோசனையாகப் பார்க்க, அப்பொழுது அங்கு வந்த உத்தமி, "வாசு... எனக்கு தலை வலிக்குது டா... ஒரு காபி குடிக்கணும்.. யாரும் இல்லை அங்க… கூட வரியா?" என்று பாவமாக கேட்டார்.
"பவித்ரா நீயும் வா... சோர்வா தெரியுற..." என்று அவளை அக்கறையாக அழைத்தார் உத்தமி.
தன் தாய் மனைவி மீது காட்டிய அக்கறையில் உச்சி குளிர்ந்து தன் தாயை பார்த்தான் வாசுதேவன்.
பவித்ராவை மேடையில் இருந்து கவனித்து கொண்டிருந்த அவள் தாய் செல்வி அவளைக் கண்களால் அழைக்க, அவர் அருகே சென்றாள் பவித்ரா.
"எதுவும் பிரச்சினையா?" என்று செல்வி கேட்க, பவித்ரா கண் கலங்கினாள்.
"அழாத... படமா ஓட்டிக்கிட்டு இருக்கீங்க... எல்லாரும் உங்களை தான் பாக்குறாங்க.... மாப்பிள்ளையோடு போ... நான் இங்க பாத்துக்கிறேன்..." என்று தன் தாய் கூற, தலை அசைத்து வாசு தேவனோடு சென்றாள் பவித்ரா.
செல்வி சிரித்து சூழ்நிலையைச் சமாளிக்க… பவித்ரா அமைதியாக வாசுதேவனைப் பின் தொடர்ந்தாள்.
சுபா மணமேடையில் நின்று கொண்டு அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.
வாசுதேவன், உத்தமி இருவரும் உண்ணும் இடத்திற்குச் செல்ல, பவித்ரா அங்குச் சென்று வாசுதேவன் அருகே மௌனமாக அமர்ந்தாள்.
அவள் கட்டுப்படுத்த நினைத்தும், கட்டுக்கடங்காமல் கண்ணீர் வலிய, அதை தன் புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டாள் பவித்ரா.
'ஆசை ஆசையாகக் கட்டிய புடவை...' என்ற எண்ணம் பவித்ராவுக்கு தோன்றியது.
'எதிர்பார்ப்போடு ஆரம்பித்த வரவேற்பு... இத்தனை ஏமாற்றமாக அமையும், என்று நான் நினைக்கவில்லையே... நந்தினி என்னைத் தேடுவாளோ? நான் இந்த முகத்தோடு அங்கு எப்படிச் செல்வது? அத்தானும் கூட வந்தால் நல்லாருக்கும்...' என்று பாழாப்போன பெண்ணின் மனது இப்பொழுது அவனைத் தான் தேடியது.
மண்டபத்தில் இருந்தும் விழாவில் கலந்து கொள்ள முடியாத ஏமாற்றம்... சுற்றிலும் உற்றார் உறவினர்... கோபத்தை வெளிக் காட்ட முடியாத அவல நிலை... பொறுமையை மட்டுமே கையாள வேண்டிய சூழ்நிலை...
'இது தான் பெண்ணாய் பிறந்தவளுக்கு விதிக்கப்பட்ட விதியோ?' என்ற எண்ணத்தில் பவித்ராவின் கண்ணீர் வழிந்தோடியது.
அங்கே வந்த சுபா, "அண்ணன் வரலைனா என்ன, நீங்க வாங்க மதினி..." என்று அழைக்க, பவித்ரா வாசுதேவனைப் பரிதாபமாக, எதிர்பார்ப்போடு ஆசையாகப் பார்த்தாள்.
அவனும் அவளோடு வரவேண்டும் என்ற ஏக்கம் பவித்ராவின் கண்களில் தெரிந்தது.
இரண்டல்ல ஒன்று இணையாக பயணிக்கும்…

பின் குறிப்பு

அன்பான வாசகர்களே...
அழுது வடியும் பெண் காதாபாத்திரத்தையோ... சோக சித்திரமான பெண் கதாப்பாத்திரத்தையோ... படைக்க வேண்டும் என்ற ஆவலில் படைக்க பட்ட பெண் இல்லை பவித்ரா.
"தைரியம் நிறைந்த இன்றைய பெண் தலைமுறையினர் பவித்ராவை போல் இன்றும் வாழ்கிறார்களா?" என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றினால்...

என் வருத்தமான பதில் இதுவே...

பெண்கள் சிறப்பாக படித்து... மேன்மேலும் உயர்ந்து... பெரிய பதவிகளில் வீற்றிருந்தாலும்... அவள் உடலுக்கு எதிரான வன்முறையிலிருந்து பாதுகாப்பு கொடுக்கும் குடும்பமும், சமுதாயமும் அமைந்திருந்தாலும்... அவள் மீது திணிக்கப்படும் மனரீதியான பிரச்சனைகளை சகித்துக் கொண்டு, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் மனக்குமுறலோடு தான் பெரும்பாலான இன்றைய பெண் தலைமுறையினரும் வாழ்கிறார்கள் என்ற வருத்தமே இரண்டல்ல ஒன்று கதையின் வெளிப்பாடு.
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஓர் பவித்ரா வாழ்கிறாள்... பவித்ராவுக்குள் ஓர் பெண்ணின் மறைக்கப்பட்ட வலி ஊமையாய் அழுது கொண்டிருக்கிறது.

காட்சிகள் மாறலாம்... குணாதிசயங்கள் மாறலாம்... ஆனால் அவளுக்கு ஏற்படும் வலி... அவமானம்... ஏமாற்றம்... வருத்தம்.....
இவை எல்லாவற்றுக்கும் பதில் கேள்விக்குறி தானே

??????????
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
????.. vaasu sathiyama seiko thaan ka.. mudiyala.. ini avan eppo amma va pathi purinchikiraano annaki thaan avana pathi pesuven.. rascal..

Naan adichi solven santhuru entha thappum pannirukka maattaan.. nandhini eppadiyum ipothaikku un aalukku love varaathu.. avana pathi yosikuratha vittuttu unga akka padura paatta paathu antha uthami nu per vachirukuma maha uthami yaa oru kai paaru maa..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top