• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
காதல் கடன்

(11)



ராதிகா தன்னருகில் வந்து அமர்ந்துகொண்டதை அறிந்தாலும், அவள் பக்கம் திரும்பிப் பார்க்காமல், இதழ்களில் லேசான புன்னகையுடன் காரைக் கிளப்பினான் பரத்...

முதல்முறையாக எந்தவிதமான குழப்பங்களின் தாக்கமும் இல்லாமல் காருக்குள் ஒரு இதமான அமைதி சூழ்ந்தது. என்ன பேசுவது என்று தெரியாததால் எதுவுமே பேசிக்கொள்ளவும் முயற்சிக்கவும் இல்லை இருவரும். இருவர் மனத்திலும் ஒரு இனம்புரியாத குறுகுறுப்பு. ஆனாலும் அமைதியாகவே கடந்துகொண்டிருந்தது அந்தப் பயணம்.

திடீரென்று, “அப்பறமா சாப்பிடறேன்னு சொன்னாரே...என்ன சாப்பிட்டார்ன்னு தெரியலையே?” என்று நினைத்தவள், அதைக் கேட்க அவனை நோக்கித் திரும்பியவளைப் பார்த்து, “நான் அத்திம்பேரோட கிச்சன்லையே சாப்பிட்டுட்டேன்,” என்று பதிலளிக்க...தன் மனதில் தோன்றிய கேள்விக்கு இவன் எப்படி பதிலளிக்கிறான் என்ற வியப்போடு கண்கள் விரிய அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“உங்களுக்கு மைன்ட் ரீடிங் தெரியுமா? எப்படி நான் நினைச்சதுக்கு நீங்க பதில் சொல்றேள்?” என்று வியப்பு மாறாமலேயே ராதிகா கேட்க...அதைக் கேட்டு வெடித்துச் சிரித்தவன்...”அதெல்லாம் ஒண்ணும் இல்லை, என்னவோ நீ அதைத்தான் கேக்கப்போறேன்னு தோணித்து, அதான் பதில் சொன்னேன்” என்று சாலையிலிருந்து விழியகற்றாமல் அவளுக்கு பதிலளித்தான்.

ஆனாலும் ராதிகா வியப்பாகவே அவனைப் பார்த்துக்கொண்டிருக்க...(கள்ளிடி நீ ராதிகா...நீ வியப்பா எல்லாம் ஒண்ணும் பாக்கலைடி...இதுதான் சான்ஸ்னு என்னோட ஹீரோவ சைட் அடிக்கற அவ்வளவுதான்...)பரத்தும் திரும்பி அவள் விழிகளைச் சந்தித்தான்...மீண்டும் ஒருமுறை அவனுடைய பார்வை வீச்சால் தாக்கப்பட்டவள்... “அப்பாடி, என்ன பார்வை பாக்கறார்...அப்படியே முழுங்கறா மாதிரி...”என்று நினைத்தபடி தனது பார்வையை விலக்கிக்கொள்ள முயல, “மனுஷாள முழுங்கற பழக்கமெல்லாம் நேக்கு இல்லை...” என்று கூறினான் பரத் குறும்பாகப் புன்னகைத்தபடி.

அவனுடைய பதிலில் திகைத்தவள்...முகம் சிவந்து முகத்தை ஜன்னல் பக்கமாகத் திருப்பிக் கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்...இல்லை இல்லை, வேடிக்கை பார்ப்பதுபோல நடிக்க ஆரம்பித்தாள். “எப்பிடி நான் நினைக்கிறதுக்கெல்லாம் இவர் பதில் சொல்றார்? ஒருவேளை மனசுல நினைக்கிறதா நெனைச்சுண்டு சத்தமா பேசிட்டோமோ? என்று அவள் மனதுக்குள் தனக்குத் தானே கேட்டுக்கொள்ள...”இல்லை இல்லை, நீ சத்தமால்லாம் பேசலை...” என்று அதற்கும் பதிலளித்தான் பரத்.

அதற்கு மேல் அவன் பக்கம் திரும்பிப் பார்க்கும் தைரியம் ராதிகாவுக்கு வருமா என்ன? இன்னும் நன்றாக ஜன்னல் பக்கமாகத் திரும்பி உட்கார்ந்துகொண்டு நிஜமாகவே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

காரில் மீண்டும் அமைதி சூழ்ந்துகொள்ள...இப்பொழுது ராதிகாவைப் பார்க்கும் முறை பரத்துடையதானது.

பின்னலை வலதுபக்கம் முன்னால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் ராதிகா. அவளே அறியாமல் அவளுடைய கை விரல்கள் ஜடை நுனியில் இருந்த கூந்தலை அளைந்தபடி இருந்தது. மருதாணி சிவப்பேறிய நீண்ட வெண்டைப்பிஞ்சு விரல்களில் அடர்த்தியான பிங்க் நிறத்தில் நெயில்பாலிஷ் போட்டிருந்தாள். மூக்கின் வலது பக்கத்தில் போட்டிருந்த வைர மூக்குத்தி கடந்து சென்ற வண்டிகளின் ஒளியைப் பிரதிபலித்து மின்னியது. ஏசி போடாமல் ஜன்னலைத் திறந்து வைத்திருந்ததால் அடித்த காற்றில் அவளுடைய பிரெஞ்சு பின்னலில் இருந்து சில கூந்தல் கற்றைகள் விடுபட்டு அவள் கன்னங்களில் நடனமாடிக்கொண்டிருந்தன. கன்னம் வருடிய கூந்தலால் கூச்சம் ஏற்பட அவற்றை எத்தனை முறை காதுக்குபின்னால் ஒதுக்கி அடக்க முயன்றாலும் முடியாமல் தோற்றுக்கொண்டிருந்தாள். அவளுடைய இந்த முயற்சியில் காதில் அணிந்திருந்த ஜிமிக்கி ராதிகாவின் கைபட்டு லேசாக அசைந்துகொண்டிருந்தது...

காற்றுடனான இந்த ஸ்ருங்கார நாடகத்தை சுவாரசியமாக ரசித்துக் கொண்டிருந்த பரத்தின் பார்வை, அப்பளிங்குக் கன்னத்தில் வழுக்கி பொன்சங்குக் கழுத்தில் இறங்க...மிடறு விழுங்கினாள் போலும்...அதனால் ஏற்பட்ட லேசான அசைவில் கழுத்தில் நகர்ந்த அந்தப் பச்சை நரம்பு உன்மத்தமேற்ற... அதற்கும் கீழிறங்கத் தாவிய பரத்தின் மனம்...காருக்கு அருகில் ஹார்ன் அடித்தபடி விரைந்து சென்ற வாகனத்தின் சப்தத்தால் தன்னிலைக்கு வந்தது...

“என்ன பண்ணிண்டு இருக்கே பரத்...பிஹேவ் யுவர்செல்வ்ஸ்” என்று தன்னைத்தானே சாடிகொண்டவன் கைகள் ஸ்டியரிங்கில் இறுக...மனதைக் கட்டுப்படுத்தி கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

அறிமுகமற்ற பெண்ணிடம் அத்துமீறியது போன்ற குற்றஉணர்வு தோன்ற, தன்மீது தனக்கே உண்டான கோபத்தை அடக்கமாட்டாமல் அதைக் காரின் வேகத்தில் வெளிப்படுத்தினான் பரத்.

திடீரென்று கார் வேகமேடுத்ததை உணர்ந்த ராதிகா, என்னவாயிற்று என்பதுபோல் திரும்பி பரத்தைப் பார்க்க, அவனுடைய இறுகிய கடுமையான முகம் “தள்ளி நில்” என்று அவளிடம் கூறாமல் கூற... எதுவும் பேசாமல் அமைதியாகிப்போனாள். ஒரு இனம்புரியாத கலக்கம் வந்து மனதில் கல்லாய் உட்கார்ந்துகொண்டது.

இதே இறுக்கத்துடன் வீடு வந்து சேர, காரை நிறுத்திய பரத், வேகமாக இறங்கி, அவளுக்காகக் காத்திருக்காமல் விடுவிடுவென்று வீட்டிற்குள் சென்றுவிட்டான். ராதிகாவும் வெளியில் எதுவும் காட்டிக்கொள்ளாமல், மற்றவர்களுடன் இணைந்து உள்ளே சென்றாள்.

எங்கும் நிற்காமல் மாடியேறிய பரத், திரும்பி இறங்கி வந்து ராதிகவுடன் வந்துகொண்டிருந்த பர்வதத்தைப் பார்த்து, “அம்மா, லேசா தலை வலிக்கறாப்ல இருக்கு, ஒரு கப் காபி மட்டும் குடுக்கமுடியுமா?” என்று கேட்டான்.

“என்னடா பரத், மணி பத்தரையாறது, இப்போ போயி யாராவது காபி குடிப்பாளா? பேசாம கொஞ்சம் அமுர்தாஞ்சனத்தை தடவிண்டு படுத்துக்கோ சரியாயிடும்...”என்று அவர் கூற, தலையை இருவிரல்களால் தேய்த்தபடி, “இல்லைம்மா, கொஞ்சம் வேலையிருக்கு, தலைவலியோட செய்யமுடியாது, விடுங்கோ, நானே போட்டுக்கறேன்,” என்று சமையலறையை நோக்கிச் செல்ல எத்தனிக்க... “அதெல்லாம் வேண்டாம், நீ போ நான் போட்டு குடுத்தனுப்பறேன்,” என்று அவனை அனுப்பிவைத்தார்.

“நீங்க இருங்கோம்மா, நான் போட்டுக் குடுக்கிறேன், எவ்வளவு சக்கரைன்னு மட்டும் சொல்லுங்கோ?” என்று கேட்ட இளைய மருமகளை அன்பாய்ப் பார்த்த பர்வதம், “ரெண்டு ஸ்பூன் சக்கரை போடு ராதும்மா, கார்த்தால நாம சாப்டோமே அதைவிட கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கணும் அவனுக்கு...” என்றார்.

சமையலறைக்குச் சென்ற ராதிகா, புதிதாய் டிகாக்ஷன் போட்டு, ப்ரிட்ஜிலிருந்து பாலை எடுத்து காய்ச்சி, இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, ஒரு ஸ்ட்ராங் காபியைக் கலந்தவள், மாலையில் பரத்திற்கு காபி கொண்டு சென்ற இன்சுலேட்டட் கப்பில் அதை ஊற்றி மூடியிட்டு பரத்தின் அலுவலக அறைக்குக் கொண்டுசென்றாள்.

அறைக்குள் நுழையுபோதே மாலையில் பரத் தன்னிடம் செய்த வம்பு நினைவுக்கு வர...அதை நினைத்துப் புன்னகைத்துக்கொண்டே அறைக்குள் நுழைந்தவளை இருட்டே வரவேற்றது. “எங்க இவரைக் காணோம், வேலையிருக்குன்னா இங்கதானே வந்திருக்கணும், இல்லைன்னா ரூமுக்குப் போயிட்டாரா?’ என்று நினைத்து திரும்பப் போனவளின் பார்வை அதற்குள் அந்த இருளிற்குப் பழகியிருக்க, பிரெஞ்சு விண்டோவின் அருகில் நின்று வெளியே வெறித்துக்கொண்டிருந்த பரத்தின் மீது விழுந்தது.

இருளில் அவனுடைய முகத்தில் இருந்த உணர்ச்சிகள் தெரியாவிட்டாலும், அவன் நின்றிருந்த விதத்திலேயே அவனுடைய ஒதுக்கமும், விலகலும் தெள்ளத் தெளிவாகப் புரிய...ஏதோ ஒன்று உடைந்தது போல் இருந்தது ராதிகவினுள்.

“காபி” என்ற ராதிகாவின் மெல்லிய குரல் பரத்தின் சிந்தனையைக் கலைத்தது. தலைவலியினாலோ அல்லது மண்டையைக் குடைந்த எண்ணங்களின் தாக்கத்தாலோ, பரத்தின் கை தன்னிச்சையாக நெற்றியைத் தேய்த்துக்கொண்டது. மெதுவாக வந்து காபியை வாங்கிக்கொண்டவன், “தேங்க்ஸ்” என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று ஜன்னலருகிலேயே நின்றுகொண்டு காபியைக் குடிக்கலானான்.

“ம்ம்...தலைவலி ஜாஸ்தியா இருந்தா ஒரு மாத்திரை வேண்ணா போட்டுக்கறேளா?” என்று கேட்டவளைப் பார்த்து, “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், காபியே போறும், மறுபடியும் தேங்கஸ், குட் நைட்” என்று கூறிவிட்டு திரும்பிக்கொண்டான். இதற்குமேல் தனக்கிங்கு வேலையில்லை என்று உணர்ந்த ராதிகா, மெளனமாக அங்கிருந்து வெளியேறினாள்.

அவள் வெளியே செல்லத் திரும்பியதும் அவளை நோக்கித் திரும்பிய பரத், ராதிகா விட்டுச்சென்ற வெற்றிடத்தையே வெறித்தபடி நின்றிருந்தான்.
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
கீழே வந்தவள் உடை மாற்றும்பொருட்டு தாயின் அறைக்குச் சென்றவள், மரகதத்தைப் பார்த்து, “அம்மா, நான் இன்னிக்கி உன்னோடவே இங்கேயே படுத்துக்காட்டுமா?” என்று கேட்க, தூக்கிவாரிப் போட்டது மரகதத்திற்கு... “என்ன ராதிகா இது, சும்மா அச்சுபிச்சுன்னு ஒளறாதே, கல்யாணம் ஆன ரெண்டாவது நாளே யாராவது அம்மாகிட்ட வந்து படுத்துப்பாளா? யாராவது கேட்டா என்ன நெனைப்பா?” என்று மகளைக் கடிந்துகொண்டாள் அந்தத் தாய்.

“இல்லைம்மா, இன்னும் ரெண்டு நாள்ல நீ என்னை விட்டுட்டு ஊருக்குப் போயிடுவே, அதனால்தான் உன்கூட இருக்கணும் போல இருந்ததும்மா...” என்று கூறிய மகளைப் பார்த்து, “டி, பொண்ணே, இங்க பாரு,” என்று குனிந்திருந்த மகளின் தலையை நாடியைப் பிடித்து உயர்த்தியவர்... “என்ன ராதும்மா, ஏதாவது பிரச்சினையா? மாப்பிள்ளை உன்கிட்டக்க பிரியமாதானே இருக்கார்...இன்னிக்கி ஹோட்டல்ல கூட பிரியமா நடந்துண்ட மாதிரிதானே இருந்தது, என்னடி ஆச்சு? ஏதாவது சொல்லேன், இப்பிடி மௌனமாவே நின்னுண்டு இருந்தா நான் என்ன பண்ணுவேன், இரு அப்பாவைக் கூப்பிடறேன்...” என்று படபடப்பாகப் பேசியபடி வெளியே செல்ல முற்பட்டவரைக் கைப்பிடித்து நிறுத்தினாள் ராதிகா.

“அம்மா, ஒரு நிமிஷம் நிறுத்தறியா...ஏன் இப்பிடி அனாவசியமா படபடங்கறே...நீ நெனைக்கிறா மாதிரில்லாம் ஒண்ணும் இல்லைம்மா, அவர் என்கிட்ட பிரியமாத்தான் இருக்கார். நீ நாளக்கழிச்சு ஊருக்குப் போயிடுவியே, அதனாலதான், உன்னோட இருக்கணும்னு தோணினதால மட்டும்தான் அப்படி கேட்டேன், இனிமே நீயே கேட்டாலும் உன்பக்கத்துல வந்து படுத்துக்க மாட்டேன் போறுமா...இப்போ ஆளை விடு,” என்று கூறியவாறே மாற்று உடையை எடுத்துகொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள் ராதிகா.

பாத்ரூம் கதவில் சாய்ந்து நின்று படபடத்த இதயத்தைச் சமன்படுத்திக்கொண்டாள் ராதிகா. “அம்மாடி, வசம்மா மாட்டிக்கன்னா தெரிஞ்சோம், கொஞ்சம் ஏமாந்திருந்தா இந்த அம்மா, அப்பாவை மட்டுமில்லை, எல்லாரையும் கூப்பிட்டு ஒரு பஞ்சாயத்தே வெச்சிருப்பா...நல்ல காலம் எப்படியோ சமாளிச்சுட்டோம்,” என்று நினைத்துக்கொண்டாள்.

“இனி யார்கிட்டக்க எது பேசினாலும், பாத்து நிதானமா யோசிச்சு பேசணும், அவசரத்துல ஏதானும் பேசப்போய் அவரை வம்புல மாட்டிவிட்டுடக்கூடாது. எதுவா இருந்தாலும் எங்களுக்குள்ளேயே பேசி தீத்துக்கறதுதான் நல்லதுன்னு தோண்றது...” என்று ஒரு முடிவுக்கு வந்தவள் வந்த வேலையில் இறங்கினாள்.

பாவம், உதாசீனம் செய்யும் கணவனுக்கும் பரிந்துகொண்டு நின்றது அந்தப் பேதை மனது.

உடை மாற்றிக்கொண்டு பரத்தின் அறைக்குச் சென்றவள் பரத் இன்னும் அறைக்கு வந்திராதது கண்டு லேசாக நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அவன் இருந்தால் அவனை எப்படி எதிர்க்கொள்வவது என்ற தயக்கத்துடனேயே வந்தவளுக்கு அவனில்லாதது சற்று ஆறுதலாகவே இருந்தது. ஆனாலும் அவனுடைய அறைக்குள் அவனையே இருக்கவேண்டாம் என்று நினைப்பது அவளுக்குள் சிறிய குற்ற உணர்வையும் தோற்றுவித்தது.

இன்று எங்கே படுத்துக்கொள்வது என்னும் சந்தேகம் ஏற்பட்டது. நேற்று தன்னாலேயே பரத் சோபாவில் தூங்கவேண்டி வந்தது நினைவுக்கு வர, அவனிடம் அதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைத்தவள் முன்தினம் அவள் படுத்துக்கொண்ட பக்கத்திலேயே உட்கார்ந்து பரத்துக்காக காத்திருக்கத் தொடங்கினாள். அப்படி எவ்வளவு நேரம் காத்திருந்தாளோ தெரியாது, அவளையும் அறியாமல் தூங்கிப்போனாள்.

பரத் தன்னுடைய அறைக்குள் நுழைந்தபோது ராதிகா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். புடவை கட்டுவதற்கு சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு சுடிதார் போட்டுக்கொண்டிருந்தாள். காத்திருந்தபடியே தூங்கிவிட்டதால் விளக்கை அணைக்க மறந்திருந்தாள். புடவையை விட சுடிதாரில் இன்னும் சின்னப்பெண்ணாய்த் தெரிந்தாள்.

விளக்கை அணைக்க அவளருகில் சென்றவன், சில நொடிகள் தூங்குபவளையே பார்த்தபடி நின்றிருந்தான். இரண்டு கைகளையும் சேர்த்து கன்னத்துக்கடியில் வைத்துக்கொண்டு ஒருக்களித்துப் படுத்திருந்தாள் ராதிகா. உறக்கம் கொடுத்த வெம்மையாலோ என்னவோ கன்னங்கள் லேசாகச் சிவந்திருந்தன. திறந்திருந்த ஜன்னல் வழியாக வந்த தென்றல் அவளுடைய கூந்தலைக் கலைத்து விளையாடிக் கொண்டிருந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் அதை உணரவில்லை, பரத்துக்கோ முகத்தில் படர்ந்து விலகும் கூந்தல்கற்றையை விலக்க விரல்கள் பரபரத்தன. தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவந்து சிறிது நேரம் அவளையே பார்த்தபடி நின்றிருந்தவன், நீண்ட பெருமூச்சோடு விளக்கை அணைத்துவிட்டு கட்டிலின் இன்னொரு பக்கத்தில் சென்று படுத்துக்கொண்டான். தூக்கம் வராமல் வெகுநேரம் விழித்திருந்தவன் தன்னையும் அறியாமல் தூங்கிப் போனான்.

**********​

மறுநாள் பொழுது இனிமையாக விடிந்தது. எழுந்ததும்தான் பரத்திற்காக காத்திருந்து அவன் வருவதற்கு முன்பே தூங்கிவிட்டது நினைவுக்கு வர, அவனை தேடியவளுக்கு, பரத்தும் தன்னருகிலேயே தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து சற்று நிம்மதியாக இருந்தது. எழுந்தவள் அவனுடைய தூக்கத்தைக் கலைக்காதவண்ணம் தன் வேலைகளை முடித்துக்கொண்டு கீழிறங்கி சமையலறைக்குச் சென்றாள். பர்வதமும் கீதாவும் அவளுக்கு முன்னரே எழுந்து காபி குடித்தபடியே மறுநாள் சுமங்கலிப் பிரார்த்தனைக்குத் தேவையான காய்கறிகளின் பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவராய் மெதுவாக எழுந்து வரத்தொடங்க, காபிக்கடை ஓய்ந்து, அன்றைய பூஜை புனஸ்காரங்களை முடித்துக்கொண்டு, மறுநாள் மனையில் உட்காரப்போகும் சுமங்கலிகளுக்கு நலுங்கு வைத்து மஞ்சள் குங்குமம் இட்டு, எண்ணை சீயக்காய்க்கு பணம் கொடுத்து, சுமங்கலி பிரார்த்தனைக்கு வருமாறு பர்வதமும், கீதாஞ்சலியும் ராதிகாவும் அழைத்தனர்.

ஐந்து சுமங்கலிகள்தான் உட்காரும் முறை என்றாலும், அபூர்வமாக குடும்பத்தில் தாயாதிக்காரர்கள், சம்பந்திகள் என்று எல்லோரும் கூடியிருக்க, இருபத்தியொரு சுமங்கலிகள், ஐந்து கன்யா குழந்தைகள் மற்றும் ஒரு பிரம்மச்சாரியை உட்காரவைக்க முடிவெடுக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பிரதாயம் முடிந்தபின், காலை உணவை சாப்பிட்டுவிட்டு, அவரவர், ரிசப்ஷனுக்குத் தயாராவதைப் பற்றி பேசிக்கொள்ளத் தொடங்கினர்.

அனைவரும் உற்சாகமாக சளசளத்தபடி இருக்க, ஹாலில் அனைவருடனும் உட்கார்ந்திருந்த ராதிகாவிற்கு மட்டும் ஏனோ மனதில் மகிழ்ச்சியின் சாயல் கூட இல்லை. எவ்வளவு முயன்றும் புன்னகைக்க முடியாமல் தோற்றுக்கொண்டிருந்தாள். அனைவரின் மத்தியிலும் உட்கார்ந்திருப்பதே மூச்சு முட்டுவதுபோலிருக்க, எழுந்து சென்று தோட்டத்தில் உள்ள ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டாள்.

பர்வதம் கொடுத்த லிஸ்டில் உள்ள பொருட்களை ஆர்டர் செய்யச் சென்றிருந்த பரத் வீடு திரும்பியபோது ராதிகாவை அந்த நிலையிலேயே கண்டான். தோட்டத்தில் தனியாக சோகமான முகத்தோடு உட்கார்ந்திருந்தவளைப் பார்க்க அவனுக்கு மனதைப் பிசைந்தது.

அவனும் ஊஞ்சலில் ராதிகாவின் அருகில் சென்று உட்கார்ந்துகொண்டான். பரத் வந்து தன் அருகில் உட்கார்ந்ததை அறிந்தபோதும் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே உட்கார்ந்திருந்தாள் ராதிகா.

“இங்க வந்து தனிய உக்காந்துண்டு என்ன பண்ணிண்டு இருக்கே?” என்ற அவன் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை அவள். சட்டென்று எழுந்து செல்லப்போனவளை கைப்பிடித்து நிறுத்தியவனைத் திரும்பி ராதிகா முறைக்க, “சாரி, சாரி, தொடமாட்டேன், ப்ளீஸ் கொஞ்சம் உக்காரு, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்,” என்றான் பரத்.

மீண்டும் ஊஞ்சலில் சென்று அவனருகில் உட்கார்ந்துகொண்டாள் ராதிகா. அப்போதும் அவனை ஏறெடுத்தும் பாராமல் நேராகவே பார்த்தபடி ராதிகா உட்கார்ந்திருக்க, பரத் அவளைப் பார்த்தபடியே அமைதியாக இருந்தான். ஏதோ பேசவேண்டும் என்று கூறிவிட்டு அமைதியாக இருக்கிறானே என்று திரும்பிய ராதிகாவின் கண்களை பரத்தின் கண்கள் கைது செய்ய... “இதுக்கொண்ணும் குறைச்சலில்லை” என்று நினைத்தபடி அவனிடமிருந்து பிடிவாதமாக தனது கண்களை விலக்கிக் கொண்டாள் ராதிகா.

“இன்னிக்கி நடக்கற இவெண்டே உனக்காகத்தான் நடக்கறதுங்கறது உனக்கு தெரியுமா?” என்று கேட்டான் பரத். அப்படியா என்பதுபோல அவனைப் பார்த்தவளிடம், “யோசிச்சு பாருங்கோ மேடம், தனியா இருந்த பரத்துக்கு இதுவரைக்கும் ஒரு ரிசப்ஷன் நடத்தணும்னு எவனாவது ஆஃபர் பண்ணினானா? ஒருத்தனும் என்னை கண்டுக்க கூட இல்லை, இதோ நேத்து கல்யாணம் ஆச்சு, அதனால இன்னிக்கி ரிசப்ஷன், அப்படின்னா இது உனக்காக நடக்கற ஃபங்க்ஷன்னு தானே அர்த்தம்,” என்று கேட்க, அவனுடைய லாஜிக்கைக் கேட்டு ராதிகாவிற்கு சிரிப்புதான் வந்தது.

ஆனாலும் அவள் மனம் “இவனை நம்பாதே ராதிகா, இவன் தேனா சக்கரையா பேசி எல்லாரையும் வலைக்குள்ள போட்டுக்கற ஆளு, அன்னிக்கி அம்மாவையும் இப்பிடியேதான் பேசி மயக்கினான், நம்பிடாதே...” என்று எச்சரித்தது.

சற்று உஷாரானவள், இன்னும் என்னதான் சொல்கிறான் பார்ப்போம் என்று இப்போது அவனைப் பார்த்து திரும்பி உட்கார்ந்துகொண்டாள். “பொய்யான ஒரு உறவுக்காக, எதுக்காக இவ்வளவு மெனக்கெட்டு ஒரு ரிசப்ஷனை நடத்தணும். இதெல்லாம் பொய்ன்னு என்னோட மனசு சொல்லிண்டே இருக்கு, என்னால இதுல ஒட்டமுடியல” என்றாள் ராதிகா.
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
“ஒரு உண்மையைச் சொல்லட்டுமா, இன்னிக்கி இவென்ட் மாதிரி இதுவரைக்கும் ஒரு இவென்டை நான் பண்ணினது கிடையாது. இனிமேலும் நான் ஏற்பாடு பண்ணபோற எந்த இவெண்டும் இவ்வளவு எக்ஸ்க்ளூசிவா, ஆப்யுலேண்டா அமையுமான்னு நேக்கு தெரியாது. ஏன் நாளைக்கி துளசிக்கு கல்யாணம் பண்றச்சே கூட இப்படி பண்ணமுடியுமாங்கறது டவுட்தான். உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கணும்னு, அரவிந்தும் மேகாவும் ரொம்ப மெனக்கெட்டுருக்கா, அதுல சொதப்பி உன்னண்ட நன்னா வாங்கிக் கட்டிண்டாங்கறது வேற விஷயம். ஆனா ஒரு விஷயம் ஞாபகத்துல வெச்சுக்கோ...இது உன்னோட நாள்...யுவர் சன்ஷைன்...இந்த குடும்பத்துக்குள்ளேயும், ஆன் அ பிக்கர் ஸ்கேல், அன்னபூர்ணா ஃபுட்ஸ் அண்ட் பெவரேஜஸ் குடும்பத்துக்குள்ளேயும் உன்னை வரவேற்கறதுக்காகவே நடக்கற ரிசப்ஷன் இது. அதனால உன்னால முடிஞ்சா நம்ம ரெண்டுபேருக்குள்ள இருக்கற குழப்பத்தை எல்லாம் இன்னிக்கி ஒருநாளுக்காக தள்ளி வெச்சுட்டு, கேன் யு ப்ளீஸ் ஜஸ்ட் என்ஜாய் த டே.?” என்றான் பரத்.

பரத் கூறிய வார்த்தைகள் ராதிகாவின் மனதைத் தொட்டதோ இல்லையோ, அவன் ராதிகாவிடம் வந்து இவ்வளவு தன்மையாகப் பேசியது அவளுடைய மனதிற்கு இதமாக இருந்தது. சிறிது நேரம் யோசித்து பரத்திற்கு டென்ஷனேற்றியவள், பின்னர் மெதுவாக சரி என்பதுபோல் தலையசைத்தாள்.

“இங்க தனியா ஏன் உக்காந்துண்டு இருக்கே, உள்ள போலாம் வா,” என்று பரத் எழுந்துகொள்ள, இல்லை, நீங்க போங்கோ நான் சித்தநாழி இங்கே இருந்துட்டு வரேன்,” என்று அவனை வீட்டிற்குள் அனுப்பிவைத்தாள்.

வீட்டிற்குள் சென்றவன், மீண்டும் வெளியே கிளம்ப, “என்ன பரத், சாயங்காலம் பங்க்ஷனை வெச்சுண்டு ஆத்துலேயே இல்லாம இப்படி வெளியே போயிண்டு இருந்த என்ன அர்த்தம்” என்று திட்டிய பர்வதத்திடம், “அம்மா நான் ரிசப்ஷன் வென்யூக்குதான் கிளம்பிண்டு இருக்கேன். அங்க போய் எல்லாம் சரியா இருக்கான்னு பாத்தாதான் நேக்கு நிம்மதி, அதுக்கு முன்னாடி கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சுட்டு நான் நேரா வென்யூக்கு வந்துடறேன், நீங்க எல்லாரும் கிளம்பி அங்கே வந்துடுங்கோ,” என்றான் பரத்.

“என்னடா பேசற நீ, ரிசப்ஷனுக்கு நீ தனியா ராதிகா தனியா வந்தா நன்னாவா இருக்கும். சேர்ந்து போனாத்தண்டா கண்ணா லக்ஷணம்,” என்றார் அவர்.

“அம்மா, அஞ்சு மணிக்குதான் ரிசப்ஷன் ஆரம்பிக்கறது. நீங்கல்லாம் எப்படியும் நாலு மணிக்கெல்லாம் அங்க வந்துடுவேள், அதுக்கப்பறம் உங்க கூடவேதான் இருப்பேன். ரிசப்ஷன் நடக்கற இடத்துக்கு எல்லாரும் சேர்ந்துதான் போகப்போறோம், நான் இப்போ போனாதான் வேலை நடக்கும்மா, இங்க இருந்தா என்னால நிம்மதியாவே இருக்க முடியாது, வேணும்னா, வென்யூக்கு போய் பார்த்துட்டு நான் திரும்பி ஆத்துக்கு வந்துடறேன், அப்பறம் நீ சொல்ற மாதிரி சேர்ந்து போகலாம்,” என்று பரத் கூற,

“எத்தனை வாட்டி வந்துட்டு வந்துட்டு போவே, அதுவே அலைச்சலாயிடும் உனக்கு. வேண்டாம் நீ அங்கேயே இரு, நாங்களே கிளம்பி வந்துக்கறோம், நாலரை ஆறு ராகுகாலம், அதனால ஆத்துல இருந்து மூணு மணிக்கு கிளம்பினாத்தான் சரியா இருக்கும், சரிப்பா, நீ கிளம்பு, நான் பாத்துக்கறேன்,” என்று பர்வதம் அவன் வழிக்கே வர, “போயிட்டு வரேன்மா, ஏதாவது வேணும்னா, ஃபோன் பண்ணுங்கோ, என்று வெற்றிப் புன்னைகையுடன் கிளம்பினான் அந்தக் கள்வன்.

*****​

அதன்பின் அழகுக்கலை நிபுணர்களும் வந்துவிட, நேரம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது. முன்தினம் ஒத்திகை பார்த்தபடியே அலங்காரம் செய்துகொண்டு தயாராகியிருந்தாள் ராதிகா. பிங்க் நிற லேஹெங்கா அணிந்து அதற்கு மேட்சாக நகைகளை அணிந்திருந்தவள், கூந்தலை கொண்டை அலங்காரம் செய்து, நெற்றியில் நெற்றிச்சுட்டி அணிந்து, கை நிறைய வைர வளையல்களை அடுக்கியிருந்தாள். அழகுப் பதுமையாய் கிளம்பி கீழிறங்கி வந்தவளைக் காண இரு கண்கள் போதவில்லை அனைவருக்கும். ராதிகாவிற்கு திருஷ்டி சுற்றிப் போட்டார் பர்வதம். மகளின் அலங்காரம் கண்டு வாயடைத்துப்போய் நின்றிருந்தனர் மரகதமும் ஆடியபாதமும். ராதிகாவுக்கு நிகராக துளசி, பானு, கீதா, நந்தினி என்று குடும்பத்தில் இருந்த அனைவரும் அமர்க்களமாக அலங்காரம் செய்து தயாராகி இருக்க, பர்வதத்திடம் வந்து ராதிகா, “அம்மா, இந்த நகையெல்லாம் கொஞ்சம் அதிகமாத் தெரியறது, ஒண்ணு ரெண்டை கழட்டி வெச்சுடவா, சிம்பிளா போட்டுக்கறேனேம்மா,” என்றாள்.
5a9c5d84db0b5e027e536b7c3a3d970b.jpg

2804df8edb31f42ce676cbc88069883d.jpg

35294129_213100282653433_2207742606098563072_n.jpg

stock-photo-henna-mehndi-wedding-design-247189417.jpg

diamond set.jpg

pooja_joseph.jpg
(இந்த பொண்ணு கண்டிப்பா ராதிகா இல்லை, ஆனா இந்த ட்ரெஸ் ராதிகாவோடது...டயலாக் கொஞ்சம் படையப்பா சாயல்ல இருக்கோ???)
அதற்கு சிரித்தபடி அவளைப் பார்த்த பர்வதம், அங்கே வர்ற கெஸ்ட்டையெல்லாம் பாத்தேன்னா, இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியா போட்டிருக்கலாமோன்னு தோணும் கண்ணம்மா, அதனால நீ டென்ஷனே ஆகாதே, அங்க வர்ற ஒவ்வொரு பொம்மனாட்டியும் நகைக்கடை விளம்பரம் மாதிரியே வருவா, நீ இவ்வளவு போட்டுக்கலைன்னாதான் தப்பு,” என்று கூறிவிட்டு, “நேரமாயிடுத்து பாருங்கோ, இப்போ கிளம்பினாத்தான் ராகுகாலத்துக்கு முன்னாடி போயி சேரமுடியும்,” என்று அனைவரையும் துரிதப்படுத்தி கிளப்பினார்.

*****​

ரிசப்ஷன் நடக்குமிடத்திற்கு சரியாக நான்கு மணிக்கு வந்து சேர்ந்தனர் அனைவரும். விழா தொடங்க இன்னும் ஒருமணி நேரம் இருப்பதால், அதுவரை காத்திருக்க அங்கேயே ராதிகாவிற்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ராதிகாவை அந்த அறையில் துளசி மற்றும் பானுவின் துணையுடன் விட்டுவிட்டு மற்றவர் அனைவரும் விழா நடக்குமிடத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றனர்.

சரியாக ஐந்து மணியாக ஐந்து நிமிடம் இருக்கும்பொழுது அறையின் கதவு தட்டப்பட, நிச்சயமாக பரத்தான் வந்திருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் ராதிகாவே சென்று கதவைத் திறக்க, அங்கே அரவிந்த் நின்றிருந்தான். “ஓஹோஹோ, அவ்வளவு சோகமால்லாம் ஆகவேண்டாம், உங்களோட ஹீரோ உங்களோட ட்ரமாட்டிக் என்ட்ரிக்காக வழிமேல விழி வெச்சு காத்திருக்கார்...” என்று கூற, அப்போதும் அவள் முகம் மலராமல் போகவே, தனது மொபைலில் இருந்து பரத்துக்கு ஃபோன் செய்து, “நீ வராம உங்க மேடம் வரமாட்டேன்னு அடம் பிடிக்கறாங்கடா, இந்தா நீயே பேசு,” என்றபடி ராதிகாவிடம் ஃபோனைக் கொடுக்க, அதை வாங்கி காதில் வைத்தவள், “ம்ம்” என்றாள், “நான் உனக்காக இங்க என்ட்ரன்ஸ்லையே காத்துண்டு இருக்கேன், அரவிந்தோட கிளம்பி வா,” என்று பரத் கூற, அதற்கும் ஒரு “ம்ம்”ஐ உதிர்த்துவிட்டு அரவிந்துடன் கிளம்பினாள் ராதிகா.

வாசலில் அவளை அழைத்துச் செல்ல ஒரு கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் நின்றிருந்தது. ராதிகா அதில் ஏறியதும் ஆவலுடன் துளசியும் பானுவும் ஏறிக்கொள்ள அரவிந்த் காரை ஓட்டிக்கொண்டு விழா நடக்கும் இடத்தின் வாயிலை வந்தடைந்தான்.

துளசி மற்றும் பானுவின் உதவியோடு காரிலிருந்து இறங்கியவள் நுழைவாயிலில் செய்யப்பட்ட அலங்காரத்தைப் பார்த்து மெய்மறந்து நின்றுவிட்டாள்...
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
நான் ஸ்பெல் செக்லாம் ஒண்ணும் பண்ணலை, அப்படியே போட்டிருக்கேன்...எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும், ப்ரூஃப்ரீட் பண்ணி திருத்திடறேன்.
அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்...நாளைக்கு நைட் சுமார் 10 மணிக்கு ஸ்பெஷல் மெகா எபிசோட், ராது அண்ட் பரத்தோட ரிசப்ஷன்...எல்லாரும் மறக்காம வந்துடுங்க...
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
:D :p :D
நான்தான் First,
ஷிவப்ரியா டியர்
வாங்கோ வாங்கோ பானுமா...வெல்கம். எபி படிச்சுட்டு கமென்ட் சொல்லுங்கோ...மீ வெயிட்டிங்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
"ஆசையாசையாய் இருக்கிறதே
இதுபோல் செய்து கொள்ளவே
But வயசு ஆயிடுத்து-ன்னு
நிஜங்கள் வந்து மண்டையில்
உறைக்கிறதே.........."
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top