• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanne Unthan Kai Valaiyaa.....Episode 15.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 15.

மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் கதிரவன் அனிதாவை கோவாவுக்கு அழைத்தான். அவன் அப்படிச் சொன்னதன் காரணம் அனிதாவை அவள் கணவனிடமிருந்து பிரிக்க க வேண்டும் என்பதல்ல. அவனது குரூரத்தன்மையை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே. அதோடு அவன் ஏமாற்றுப் பேர்வழியாகவும் இருந்தான். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல தொழிலுக்கு முதலீடாகக் கொடுத்த பணத்தைக் கண்ட பெண்களிடமும் தொலைத்தான் என்று வேறு அவனைப் பற்றி தகவல் வந்திருந்தது. இவற்றையெல்லாம் சொன்னால் அனிதா நம்புவாளா? நம்பினால் மட்டும் அவளால் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வி குடைந்தது. அதையும் மீறி அவன் இதயத்தில் அனிதாவுக்கு ஏதோ ஆபத்து என அடித்துக்கொள்வது புரிய அவசரமாக டிரைவரைக் கூட மறுத்து விட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு அந்த வீட்டை அடைந்த போது அவன் கண்ட காட்சி! அப்பப்பா இன்னும் வரும் ஜென்மங்களுக்கும் போதும்.

கதவை விரியத் திறந்து போட்டு விட்டு ஆனந்தன் வெளியேறிக்கொண்டிருந்தான். அவன் மறு புறம் திரும்பி இருந்ததால் கதிரவனைக் கவனிக்க வில்லை. அதை மட்டுமா அவன் கவனிக்கவில்லை? உள்ளிருந்து எழும் அவலக்குரலையும் அல்லவா அலட்சியப்படுத்தி நடந்தான்? இனியும் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை என்று எண்ணி அவசரமாக உள்ளே நுழைந்தான் கதிரவன். தாயின் மடியில் அனிதாவின் தலை இருந்தது . வலியினால் அவள் உடல் கோணியிருக்க அங்கே ரத்தம் சிறு குட்டையாகத் தேகிக் கிடந்தது. அதற்கு மேல் தாங்க முடியாமல் அவளை தூக்கிக்கொண்டு காரில் கிடைத்தி விட்டு அவசரமாக தங்களது உறவினர் வைத்திருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தான். இரு மருத்துவர்கள் முயன்று போராடி அவள் உயிரைக் காப்பாற்றி விட்டனர் என்றாலும் கருவிலிருந்த உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

உறவினருக்கு சொந்தமான மருத்துவமனை என்பதால் பெரியம்மாவிற்கு தகவல் போயிருக்கிறது போலும் என எண்ணிக்கொண்டான் கதிரவன். யாரைப் பற்றியும் பெரிதாக கவலைப்படுபவன் அவன் இல்லை என்றாலும் தொழிலுக்கு கெட்ட பெயர் வந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையும் கவனமும் உண்டு. அவற்றையும் மீறி அனிதாவைக் காப்பாற்றுவது தான் ஒரே குறிக்கோள் என்பதால் தான் உடனடியாக அந்த மருத்துவமனைக்கு சென்றான். ஆனால் சரசு டீச்சர் என்னென்ன பேசி விட்டார்? நானா? நானா அனிதாவின் வாழ்க்கையை கெடுப்பேன்? நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறேனே அவளை இன்னமும். அது ஏன் புரியவில்லை அவர்களுக்கு? அனிதாவும் என்னை அப்படித்தான் தவறாக நினைக்கிறாளோ? என்னால் தான் அவளுக்கு இந்த நிலை என்று அவள் அம்மா கூறினார்களே? அது ஏன்? அலுவலகத்திலிருந்து வந்ததும் அவள் வீட்டில் என்ன நடந்தது? மனைவியை அந்த நிலையில் இரக்கமே இல்லாமல் விட்டுச் சென்றானே ஆனந்தன் அது ஏன்? பலவற்றையும் எண்ணிக் குழம்பித்தவித்தது அவன் மனது.

இனியும் அனிதா என்ற பெண் தன் வாழ்வில் வரவே இல்லை என்னது போலத்தான் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் அப்படி இருக்க என்னால் முடியுமா? என் உயிரோடு கலந்து விட்டவள் அவள். அவளுக்கு அழகான நல்ல வாழ்க்கை அமையவில்லையே? வெறும் பணமும் ஆடம்பரமும் மட்டுமே வாழ்க்கை இல்லை ஆனால் கணவனின் அன்பு கூட அவளுக்குக் கிடைக்கவில்லை போலிருக்கிறதே? அவளைப் பார்க்கும் போதே மனதில் ஒரு ஆனந்தம் தோன்றி இதயம் நிரம்புகிறதே? அவள் என்னோடு வாழ வேண்டாம் வெறுமே பார்த்துக்கொண்டே இருந்தால் கூடப் போதும் எனத் தோன்றுகிறதே? ஆனால் எனக்கு எத்தனை அவப்பெயர்? பரவாயில்லை. அவளுக்காக எதையும் தாங்கலாம். இனியும் அனிதாவை அவள் விதிப்படி போகட்டும் என விட்டு விடக் கூடாது. எந்த உதவியாவது செய்தே தீர வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு நிம்மதியாக உறங்கத் தலைப்பட்டான் கதிரவன்.

சரியான மனக்குழப்பத்தில் இருந்தாள் அனிதா. தன் கணவன் எத்தனை பெரிய ஏமாற்றுக்காரன்? நயவஞ்சகன்? கூசாமல் மற்றொருவனுடன் கோவா போ என்றானே? அப்படியானால் தனக்கு வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யத்துணிவான் போல? அதைத்தானே அன்று கதிரும் சொன்னார்? அம்மா என்னடாவென்றால் கதிரவனை கெட்டவன் என எண்ணுகிறாள். அம்மாவிடம் ஆனந்தைப் பற்றி எப்படிச் சொல்ல? இனி என் எதிர்காலம் என்ன ஆகும்? என் பயணம் எதை நோக்கியதாக இருக்கும்? எல்லாமே இருட்டாகவும் பயமுறுத்துவதாகவும் இருக்கிறதே? உடல் அசதி கண்களை மூட வைத்தது. ஆனாலும் மனம் ஓயாமல் வேலை செய்து கொண்டிருந்தது. அம்மா தான் கூடவே இருந்து ஆறுதல் சொல்லித் தேற்றினாள்.

மூன்றாம் நாள் வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டாள் சரசு அனிதாவை. அது வரையிலும் எதுவும் கேட்காமல் மௌனம் காத்த பெரியவளுக்கு அதற்கு மேல் பொறுக்கவில்லை. காலை உணவு உண்டு இத்தனை நாளாக கவனிக்காமல் இருந்த கூந்தலை சிக்கெடுத்து பின்ன்னியபடியே கேட்டாள் அம்மா.

"நீ எதுக்கும்மா அந்த கதிரவனைப் பார்க்கப் போன? அவன் உன்னை பொண்ணு கேட்டான் நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்னு நீ ஆனந்தன் கிட்ட சொன்னியா? அதனால உன்னை சந்தேகப்படுறாரா மருமகன்? அதனால உன்னை அவனோட போன்னு சொல்லி சோதிக்குறாரா?" என்றாள்.

வேதனைச் சிரிப்பை முகத்தில் படர விட்டாள் அனிதா.

"அவரு சந்தேகப்பட்டாக்கூட நான் சந்தோஷப்படுவேனே அம்மா?" என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.

"எங்கிட்டயே விஷயங்களை மறைக்கக் கத்துக்கிட்டியா அனிதா? உனக்கு நான் அவ்வவளவு அன்னியமாயிட்டேனா? சொல்லும்மா. உனக்கு நான். எனக்கு நீன்னு தானேம்மா இத்தனை ஆண்டுகளா வாழ்ந்தோம்? இப்ப என்ன ஆச்சு? சொல்லும்மா?"

பெருமௌனம் பூண்டாள் மகள். தலையை வாரிப்பின்னி விட்டு சமையலறைக்குள் சுழைந்து கொண்டாள் சரசு.

"அம்மா நீ காலையில சாப்பிடவே இல்லியே?"

விட்டேத்தியாக பதிலளித்தாள் அன்னை.

"நான் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து என்ன பண்ணப் போறேன் அனி? நான் பெத்த மகளுக்கு என்னால எதுவும் செய்ய முடியல்ல! இப்ப சாப்பாடு ஒண்ணு தான் குறைச்சல்" என்று திருத்த வேண்டிய பேப்பர் கட்டுகளை எடுத்து வைத்துக்கொண்டாள் . மனம் நெகிழ்ந்ததை கண்கள் காட்ட அம்மாவின் கன்னத்தைப் பிடித்தாள் மகள்.

"என்னால நீ பட்ட சிரமம் எல்லாம் போதாதாம்மா? இன்னும் வேணுமா? சரி சொல்றேன் ஆனா நீ முதல்ல சாப்பிடு" என்றதும் தலையாட்டினாள் அன்னை. ஒரு தட்டில் மூன்று தொசைகளையும் சட்னியையும் எடுத்து வந்து தாயின் முன் நீட்டினாள். ஒரு வாய் பிய்த்து மகளுக்கு கொடுத்து விட்டு உண்ணத் தொடங்கினாள் தாய். சிறு வயது நினைவுகள் குமிழியிட பேசாமல் பார்த்தாள் அனிதா. உண்டு முடித்து கையையும் கழுவிக்கொண்டு மகளின் முன் வந்தமர்ந்தாள் சரசு. கரங்கள் தலையைத் தடவியது.

"உம் இப்ப சொல்லு! அந்தக் கதிரவன் என்ன செஞ்சான்?" என்றாள்.

"ஐயோ அம்மா! நீ ஏன் எப்பப் பார்த்தாலும் கதிரை தப்பா நினைக்குற? அவரு தப்பு இதுல எதுவுமே இல்ல" என்றாள் மகள். கதிரவனை கதிர் எனக் குறிப்பிட்ட மகளை ஊன்றிப் பார்த்தாள் அன்னை.

"அம்மா! உன் மருமகன் நீ நினைக்குற மாதிரி நல்லவர் இல்லைம்மா" என்று ஆரம்பித்து அத்தனையும் சொல்லி முடித்தாள். தீயை மிதித்தது போல பொங்கி எழுந்தாள் சரசு. கண்கள் சிவந்து நாத்துடிக்க அவள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்ததும் பதறிப்போனாள் அனிதா.

"என்ன நெனன்ச்சுக்கிட்டான் அந்த ராஸ்கல்? அன்னைக்குக் கூட விஷயம் இத்தனை சீரியசா இருக்கும்னு நான் நினைக்கல்ல. அவனைப் புருஷன்னு இனி சொல்லாதே. ஏன்னா அவன் மனுஷனே இல்ல. அவனுக்குப் போய் உன்னைக் கட்டி வெச்சேனே? எல்லாம் என் தப்பு " என்று கத்தினாள். ஆத்திரம் அதிகமாகி கண்ணீரும் பெருகி ஒரு மாதிரியாக இருந்த சரசுவை மெல்ல ஆசுவாசப்படுத்தினாள்.

"அந்தக் கதிரவனும் லேசுப்பட்டவன் இல்ல! உன்னை கோவாவுக்குக் கூப்பிடுறான்னா என்ன அர்த்தம்?" என்றாள்.

"நல்லா யோசிச்சுப் பாரும்மா! அவரு என்னைக் கூப்பிடல்ல. உன் புருஷன் கிட்டப் போய் சொல்லுன்னு தான் சொன்னாரு. அதுக்கும் மேல உனக்கு இது பிடிக்காதுன்னு எனக்குதே தெரியும்னும் சொன்னாரு "

"என்ன இருந்தாலும் அவன் செஞ்சது தப்பு தான்." என்றாள். எதுவும் பேசாமல் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி அழுதனர் தாயும் மகளும். வீட்டில் ஆண் துணை என ஒருவனும் இல்லாததால் தான் இப்படி நடக்கிறதோ? தட்டிக் கேட்க ஆளில்லை என இரு கயவர்களும் ஆடுகின்றனரோ என எண்ணினாள் சரசு. ஆனால் அனிதாவின் எண்ணம் வேறு மாதிரி இருந்தது. அன்று கதிரிடம் கோபமாகப் பேசிவிட்டு வந்து விட்டேனே? அதன் பிறகும் எப்படி அவன் சரியான நேரத்துக்கு வந்தான்? ஏன் என்னை மருத்துவனையில் சேர்த்தான்? அதற்கெல்லாம் என்ன காரணம்? அவனது அலுவலகத்துக்குப் போன போது என்னை ஒரு அரசியைப் போல அல்லவா நடத்தினார்கள்? இவற்றையெல்லாம் அவன் எதை எதிர்பார்த்து செய்கிறான்? " என்ற எண்ண ஓட்டத்தில் மூழ்கிருந்தாள்.

"அனிக்கண்ணு! இனிமே உன்னை அந்த ஆனந்தன் கூட அனுப்ப மாட்டேன். சட்டப்படி என்ன செய்யணுமோ செஞ்சிக்கலாம். பொம்பளைன்னா அவ்வளவு இளக்காரமாப் போச்சா அவனுக்கு? பாக்கறேன் ஒரு கை" என்றாள் ஆத்திரமாக.

சரசு அப்படிச் சொன்னதும் மனதினுள் ஏதோ மிகப்பெரிய மகிழ்ச்சியும் நிம்மதியும் பெருக அன்னையைக் கட்டிப்பிடித்துக்கொண்டவள் உறங்கியும் விட்டாள். கண் விழித்த போது மதிய சமையல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை வாசனை சொல்லியது. எழுந்து முகம் கழுவி தலை சீவி சமையற்கட்டுக்குள் புகுந்து ஏதேனும் உதவி செய்யலாம் எனப் பார்த்தாள். எல்லாம் முடிந்து பாத்திரங்கள் மூடி வைக்கப்பட்டிருந்தன. வாசலில் யாரோ பெல் அடிக்க கதவைத் திறந்தாள் அனிதா. எதிரே நின்றவனைப் பார்த்ததும் உடலெங்கும் யாரோ தணலை வாரிக்கொட்டியது போல இருந்தது. கையில் மிட்டாய்ப் பெட்டியுடன் ஆனந்தன் தான் நின்றிருந்தான். மனைவியைக் கண்டதும் ஈயென இளித்தான். உடலெங்கும் பதற பேசாமல் உள்ளே சென்று விட்டாள். யாரும்மா எனக் கேட்டுக்கொண்டே வந்த சரசு மின் அதிர்ச்சி தாக்கியதைப் போல நின்று விட்டாள்.

"என்னத்தை? வீட்டுக்கு வந்தவனை வான்னு கூடக் கூப்பிட மாட்டீங்களா? இன்னைக்கு என்ன சமையல்? வாசனை தூக்குது? " என்று கொஞ்சமும் கூச்சமின்றிப் பேசியவன் அவனாகவே நாற்காலியில் அமர்ந்தான்.

"முதல்ல நீ வெளிய போடா" என்றாள் சரசு கோபமாக.

"என்ன? என்ன? என்னையா வெளிய போகச் சொன்னீங்க?"

"ஆமாடா! உன்னைத்தான் போடா வெளிய" என்றாள் மீண்டும். கேட்டவனின் முகம் பயங்கரமாக மாறியது. பயத்தில் நெஞ்சு கலங்க கண்களை மூடிக் கொண்டாள் அனிதா.

"உனக்கு என்னடா மரியாதை? என் மகளைக் கேவலப்படுத்தினவன் தானே நீ? எந்த முகத்தை வெச்சுக்கிட்டு வந்த? உனக்கெல்லாம் ஒரு பொண்டாட்டி குடும்பம் தூ" என்றாள் சரசு கோபமாக.

மீண்டும் ஒய்யாரமாக நாற்காலியில் அமர்ந்து கொண்டான் ஆனந்தன்.

"ஓ! எல்லாத்தையும் சொல்லிட்டாளா உங்க மக? ஏதோ புருஷனுக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கன்னு சொன்னா? என்னவோ ரொம்ப எகிறுறாளே? நீங்களாவது நல்ல புத்தி சொல்லக் கூடாதா?" என்றான் எக்காளமாக.

ஏதாவது ஒரு பாத்திரத்தை எடுத்து அவன் தலையிலேயே போடலாம் என வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டனர் இரு பெண்களும்.

"இதைப்பாருப்பா! உனக்கு என் மகளைக் கட்டிக்கொடுத்ததும் போதும், அவ வாழ்க்கை நாசமானதும் போதும். இனியாவது அவளைக் கொஞ்சம் நிம்மதியா விடு. உன் கூட இனிமே அவ வாழ மாட்டா. சீக்கிரமே விவாகரத்து நோட்டீஸ் வரும். கையெழுத்துப் போட்டுட்டு போய்க்கிட்டே இரு" என்றாள் சரசு கோபத்தை அடக்கிக் கொண்டு.

முகம் கறுக்க யோசனை செய்தான் அந்தக் கயவன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top