• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanne Unthan Kai Valaiyaay.....Episode 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 19.

கம்பெனியின் முதலாளி முதலிலேயே சொந்தப் பிரச்சனைகள் காரணமாக அலுவலக வேலையில் எந்த சுணக்கமும் ஏற்படக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லி விட்டதால் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் சென்றாள் அனிதா. ஆனாலும் பயந்து பயந்தே தான் இருந்தாள். எந்த நேரம் ஆனந்தன் அனுப்பிய அடியாட்கள் வருவார்களோ? எந்த நேரம் மானம் பறி போகுமோ என உயிர் பயத்துடனே இருந்தாள் . அன்று வெள்ளிக்கிழமை. வழக்கமாக செல்ல வேண்டிய சரக்குகள் சென்று விட்டன. சனிக்கிழமை எல்லா கணக்குகளையும் சரி பார்க்கும் நாள் என்பதால் அன்று எந்த சரக்குகளும் அனுப்ப மாட்டார்கள். ஆகையால் அன்றைய வேலை முடிந்து தேநீர் குடித்தபடி மேலதிகாரியான ஜெயந்தியிடம் பொதுவாக ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அந்த நேரம் திமு திமுவென நாலைந்து ஆட்கள் உள்ளே நுழைந்தனர். எப்போதும் சரக்கு கொள்முதல் செய்பவர்கள், ஏஜென்சி வேண்டி விண்ணப்பித்தவர்கள், விவசாயிகள் என எப்போதும் அலுவலகத்து வந்து கொண்டே தான் இருப்பார்கள் ஆனால் இப்போது வந்தவர்களைப் பார்த்தால் அப்படிப்பட்டவர்களாக தோன்றவில்லை. எல்லாரும் முரட்டு மீசையும் சிவந்த விழிகளுமாக பார்க்கவே அடியாட்கள் போல இருக்கவே பயந்து போனாள் அனிதா. நெஞ்சு வேகமாகத் துடிக்க திகைத்து நின்றாள்.

வந்தவர்கள் வரவேற்புப் பெண்ணிடம் ஏதோ கேட்க அவள் அனிதா அமர்ந்திருந்த திசையைக் காட்டி பதில் சொன்னாள். அவளுமே கொஞ்சம் போல பயந்திருந்தாள் போல. ஐவரும் நேராக இவளை நோக்கி வரவும் பயந்து போன அனிதா. "ஐயையோ என்னை விட்டுடுங்க. நான் போலீஸ் கிட்ட சொல்லுவேன். மேடம் ப்ளீஸ் என்னைக் காப்பாத்துங்க" என்று ஜெயந்தியிடம் ஓடினாள்.

"அனிதா! காம் டவுன். என்னாச்சு உனக்கு? இவங்க என்னைப் பார்க்கத்தான் வந்திருக்காங்க. நம்ம குடோன்ல சரக்கு ஏத்தறவங்க. அவங்களுக்கும் போனஸ் அறிவிச்சிருக்கோம் இல்ல? அதை வாங்கிட்டுப் போக வந்திருக்காங்க. அவங்களைப் பார்த்து நீ ஏன் பயப்படுற?" என்றாள் இதமாக. சட்டென அவமானமாகத் தோன்ற பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள். வெளியில் வந்த போது அவர்கள் இல்லை. ஆனால் ஜெயந்தியின் கண்களில் ஏகப்பட்ட கேள்விகள்.

"அனிதா! நான் இங்க ஜெனெரல் மேனேஜர். நம்ம அலுவலகத்துல நடக்குற அத்தனை விவகாரமும் எனக்கு தெரியும். ஊழியர்களோட சொந்த பிரச்சனையில கூட நாம தலையிட்டு நல்லபடியா சால்வ் பண்ணியிருக்கோம். ஏன் அப்படி செய்யுறோம்னா வீட்டுல பிரச்சனைகள் இருக்கும் போது முழு மனசோட அலுவலகத்துல வேலை செய்ய முடியாது. அது நம்ம திறமையை பாதிக்கும். அதுக்காகத்தான் நம்ம எம் டி இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்காரு." என்று நிறுத்தினாள்.

இதற்கு மேலும் நான் சொல்ல வேண்டுமா என்று கேட்டது அவள் பார்வை. மௌனமாகத் தலை குனிந்தாள் அனிதா.

"நான் உன்னை கவனிச்சுட்டு தான் வரேன். சேர்ந்த புதுசுல இருந்த ஆர்வமும் உற்சாகமும் இப்ப உங்கிட்ட இல்ல. அதுவும் கடந்த ஒரு வாரமாக உன் வேலையில் ஏகப்பட்ட குளறுபடிகள். கோயம்புத்தூருக்கு அனுப்ப வேண்டிய சரக்கு திருப்பூருக்கு போக இருந்தது. நல்ல வேளை நான் பார்த்து மாத்தினேன். நான் கவனிக்காம போயிருந்தா நம்ம கம்பெனிக்கு எத்தனை கெட்ட பேரு? இதுக்குக் காரணம் நிச்சயமா உன் திறமை இன்மை இல்ல. உனக்கு ஏதோ பிரச்சனை. இல்லியா?"

அப்போதும் மௌனம் காத்தாள் இளையவள். குரலில் சற்றே கடுமை ஏறியது ஜெயந்திக்கு.

"அனிதா! நானோ எம் டியோ உன்னோட எதிரி இல்ல. உனக்கு என்ன பிரச்சனைனு வாய் விட்டு சொன்னாத்தான் எங்களால ஏதாவது செய்ய முடியும். இன்னைக்கு நீ நடந்துக்கிட்ட விதத்தை வெச்சுப் பார்த்தா உன்னை அடியாட்களை அனுப்பி மிரட்டுவோம்னு யாரோ சொல்லியிருக்கணும்னு எனக்குத் தோணுது. அது நிஜம்னா விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான். உன்னை தேடிக்கிட்டு அப்படி யாராவது வந்தாங்கன்னா எம் டி அவங்களை சும்மா விட மாட்டாருன்றது ஒரு பக்கம், ஆனா உன்னையும் வேலையை விட்டு அனுப்பிடுவாரு. அதுக்கப்புறம் உனக்கு உதவி செய்யவோ, என்ன பிரச்சனைன்னு கேக்கவோ யாருமே இருக்க மாட்டாங்க. அதனால யோசிச்சுகோ" என்றாள்.

ஏற்கனவே ஜெயந்தியிடம் தன் பிரச்சனைகளை சொன்னால் என்ன என்று யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு மேலதிகரியின் பேச்சு பயத்தைக் கிளறவே அனைத்தையும் சொல்லி விடுவது என முடிவெடுத்தாள்.

"நான் எல்லாத்தையும் சொல்றேன் மேடம்" என்றாள்.

"சொல்லும்மா! நான் எப்பவும் உன் பக்கம் தான். தயங்காம சொல்லு" என்று ஊக்கப்படுத்தவே ஆனந்தன் அனிதா திருமணத்திலிருந்து ஆரம்பித்து கதிரவனுடன் கோவா போவது வரை சொல்லி முடித்தாள். அதோடு ஆனந்தன் தன்னை மிரட்டியதையும் கூறினாள். சொல்லி முடித்ததும் தோளை தட்டிக்கொடுத்தாள் ஜெயந்தி. அவள் கண்களில் மெல்லிய நீர்ப்படலம் தெரிந்தது.

"உன்னோட தைரியத்தை நான் பாராட்டுறேன் அனிதா. ஆனா உன் மனசுல என்ன இருக்கு? உனக்கு உன் கணவனோட சேர்ந்து வாழ விருப்பமா?" என்ற கேள்வியை முடிக்கக் கூட இல்லை "ஐயையோ இல்லவே இல்ல மேடம். நான் அந்த ஆளை வெறுக்கறேன். என் பெண்மையை அவமானப்படுத்தினவன் அவன். அவனோட எப்படி மானங்கெட்டு சேர்ந்து வாழ என்னால முடியும்?"

அப்போது ஜெயந்தியின் முகத்தில் தோன்றிய மலர்ச்சியின் காரணம் என்ன என்று புரிந்து கொள்ள இயலாமல் அவளை நோக்கினாள் அனிதா.

"இப்பத்தான் புத்திசாலித்தனமான முடிவு எடுத்திருக்கே அனிதா. இது உன்னோட தனிப்பட்ட முடிவா இல்ல? உங்கம்மாவும் சேர்ந்து எடுத்த முடிவா?"

"எப்பவுமே நானும் எங்கம்மாவும் ஒரே முடிவைத்தான் எடுப்போம் மேடம். எங்கம்மா எனக்கு செஞ்சிருக்குற உதவிக்கெல்லாம் நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கடனை தீர்க்க முடியாது மேடம்" என்றாள் உணர்ச்சி வசப்பட்டு.

"ஹூம்! உன் வாழ்க்கை இப்படி ஆனதுக்கே உங்கம்மா தானே காரணம் அனிதா? அன்னைக்கே கதிரவனுக்கு உன்னை கல்யாணம் செஞ்சு வெச்சிருந்தா நீ எத்தனை மகிழ்ச்சியா இருந்திருப்பே? அவங்க வறட்டு கௌரவத்துக்காக நீ இல்ல துன்பப்பட்ட?" என்றாள்.

பொங்கிய கோபத்தை அடக்கிக் கொண்டாள் அனிதா.

"மேடம்! நீங்க எனக்கு உதவி செய்வீங்கன்னு நம்பித்தான் என்னைப் பத்தின எல்லா விஷயத்தையும் நான் உங்க கிட்ட சொன்னேன். எங்கம்மாவைப் பத்தி தப்பா பேசாதீங்க. எனக்குப் பிடிக்காது. நான் தான் இங்க வேலை செய்யறேன் எங்கம்மா இல்ல" என்றாள் கடினமாக.

"இல்ல அனிதா நான் நெனச்சதை சொன்னேன் அவ்வளவு தான். கதிரவனைப் பத்தி எனக்கும் கொஞ்சம் தெரியும். அவரு ரொம்ப நல்லவரு அவரை ஏன் வேண்டாம்னாங்க உங்கம்மா?"

"அவருக்கு மரியாதையே தெரியல்ல மேடம். இப்பக் கூட என் புருஷனுக்காக நான் பேசப் போன போது என்னையே கோவாவுக்கு வான்னு கூப்பிட்டாரே அவரு? அப்ப அவருக்கும் இந்த ஆனந்தனுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க?" என்றாள்.

"சரிம்மா! ஆனா உன்னை ஆஸ்பத்திரியியல் சேர்த்து உன் உசிரைக் காப்பாத்தினாரே இதுக்கு மேல என்ன வேணும்?"

ஜெயந்தி கதிரவனுக்கு ஆதரவாகப் பேசுவது மனதுக்கு இதமாக இருந்தது. இருந்தும் சொன்னாள் "மேடம்! இப்ப நாம கதிரவனைப் பத்திப் பேச இங்க வரல்ல. என்னோட பிரச்சனையைக் கேட்டீங்க. சொல்லிட்டேன். உங்களால உதவி செய்ய முடியுமா? சொல்லுங்க"

"கவலைப் படாதே அனிதா! நிச்சயமா நான் உதவி செய்யறேன். எனக்குத் தெரிஞ்ச ஒரு அண்ணன் இருக்காரு. அவரு இதை ஈசியா முடிச்சிருவாரு. நீ அந்த ஆனந்தனோட மோபை எண்ணைக் கொடு, அவரு இனியும் வந்து வீட்டுல தொந்தரவு கொடுத்தா உடனே எனக்கு சொல்லு" என்றாள்.

வேறு ஒருவரிடம் தனது பிரச்சனையை மனம் விட்டுப் பேசியதாலோ என்னவோ மனம் சற்றே லேசாகி இருந்தது. என்ன வந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கை வந்தது. அலுவலகம் முடிய ஒரு மணி நேரம் இருக்கும் எங்கோ போது கிளம்பிச் சென்றாள் ஜெயந்தி. ஏதேதோ சின்னச் சின்ன வேலைகள் வர அனிதா கிளம்பும் போது மணி ஏழாகி விட்டது. முன்னே இல்லாத பயம் இப்போது சேர்ந்து கொள்ள அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையத்தை அடைந்தாள். அங்கே யாருமே இல்லை. சற்றே ஓரத்தில் முறுக்கு மீசை யோடு ஒருவன் நின்றிருந்தான். அவனை எங்கோ பார்த்ததாக நினைவு அனிதாவுக்கு. ஒரு வேளை இவன் ஆனந்தன் ஏற்பாடு செய்த ரவுடியோ? தன்னை ஏதேனும் செய்து விடுவானோ? என எண்ணி நடுங்கினாள். யாரேனும் துணைக்கு வந்தால் நன்றாக இருக்குமே என எண்ணியது மனம். ஆனால் சற்று நேரத்தில் பேருந்து வர ஏறினாள். கூடவே அந்த முறுக்கு மீசையும் ஏறிக்கோண்டான். பஸ்ஸில் இன்னும் சிலர் இருந்ததால் அவனால் எதுவும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையோடு அமர்ந்தாள். தினம் தினம் இப்படி செத்துப் பிழைக்க வேண்டுமா? என எண்ணி பயந்தது அவளது உள்ளம்.

"சே! நான் என்ன தவறு செய்தேன்? ஆண்கள் இல்லாத குடும்பத்தில் பிறந்தது தவறா? இல்லை ஆனந்தனை மணந்தது தவறா? இல்லை கதிரவன் கண்களில் பட்டது தவறா? இதில் எதிலுமே என் தவறு இல்லையே? ஆனால் ஆண்டவனே என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்? பேசாமல் இந்த ஊரை விட்டுப் போய் விட்டால் என்ன? சென்னையில் ஏதேனும் வேலை கிடைக்கமலா போய் விடும்? அங்கே எத்தனையோ தங்கும் விடுதிகள் இருக்கின்றனவாம். அதில் ஒன்றில் இருந்து கொண்டு நிம்மதியாக காலத்தைக் கழித்தால் என்ன? ஆனால் அம்மா தனியாக இங்கே என்ன செய்வாள் பாவம்? என்னைக் காணாமல் அவளை ஆனந்தன் துன்புறுத்தினால் என்ன செய்வது? ம்ஹூம். கூடாது. அம்மாவையும் கூடவே அழைத்துப் போய் விட வேண்டும். ஆனால் அம்மா அரசு வேலையை விட்டு வருவாளா? பல விதமான எண்ணங்கள் அலைக்கழிக்க வீடு வந்து சேர்ந்தாள்.

அம்மா வாசலிலேயே நின்றிருந்தாள். பதைத்துப் போய் ஓடினாள் அனிதா.

"அம்மா எதுக்கு வாசல்ல நிக்குற? என்ன விஷயம்?" என்றாள் மூச்சு முட்ட.

"நீ வரக்காணுமேன்னு தான் நின்னேன் அனிக்கண்ணு. ஏன்னா யாரோ ஒரு ஆளு நம்ம வீட்டு வாசல்ல நோட்டம் போட்டுட்டே திரிஞ்சான். அதான் எனக்கு பயம் வந்திரிச்சு. அங்க பாரு" என்றாள். அவள் காட்டிய திசையில் பார்த்த அனிதாவுக்கு கண்ணில் மின்னல் ஓடியது. முரட்டு மீசையுடன் வேறு ஒருவன் அவளைப் பார்த்ததும் பக்கத்து வீட்டை பார்ப்பது போலப் போய் விட்டான்.

உள்ளே நுழைந்து கதவையும் தாழிட்ட பின்னரே உயிர் வந்தது தாய்க்கும் மகளுக்கும். அன்றைய இரவை பயந்து பயந்து கழித்தார்கள் இரு பெண்களும். சிறு ஓசை கேட்டால் கூட நடுக்கம் தோன்றியது இருவருக்கும். தன்னால் வயதான தன் தாய்க்கும் உறக்கம் போகிறதே நிம்மதி இல்லாமல் இருக்கிறாளே என மருகினாள் அனிதா. விடியற்காலை நேரம் சற்றே கண்ணயர்ந்தனர். இரு பெண்களுக்கும் அவரவர் வேலை பார்க்கும் இடம் மிகுந்த பாதுக்காப்பானது என்பதால் விரைந்து தயாராகிக் கிளம்பினர்.

"இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பயந்து பயந்து இருக்க? பேசாம இந்த வீட்டை வித்து பணத்தைக் கொடுத்து தொலைச்சிருவோமாடி?" என்றாள் அம்மா.

திடுக்கிட்டாள் அனிதா.

"என்னம்மா பேசுற நீ? இது அப்பா நமக்காகக் கட்டின வீடு. இதை விக்குறதுன்ற பேச்சையே எடுக்காதே. அதுவும் போக நாம பணம் கொடுத்த பிறகும் அவன் நம்மை தொந்தரவு செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம்? அப்ப என்ன பண்ணுவ?" என்றாள்.

மகள் சொல்வதில் இருந்த நியாயம் உரைக்கவே வேறு என்ன வழி என சிந்தித்தவாறு இருவரும் அவரவர் அலுவலகம் கிளம்பினர். அன்றைய நாளில் எதுவும் புதிதாக இல்லை. வழக்கமான வேலை தான். அதிலும் சனிக்கிழமை என்பதால் வேலை மிகவும் குறைவாகவே இருந்தது. ஜெயந்தி அடிக்கடி அனிதாவின் பக்கம் பார்த்தபடி இருந்தாள். அவளது பார்வை வித்தியாசமாக இருக்கவே யோசித்தாள் இளையவள். ஆனால் எதுவும் பிடிபடவில்லை. அனிதாவுக்கு இருந்த குழப்பத்தில் யாரேனும் தன்னை பின் தொடர்கிறார்களா என்பதைக் கூட கவனிக்கவில்லை. அம்மாவை வாசலில் காணவில்லை என்றதும் சிறு பதற்றம் தொற்றிக்கொள்ள விரைந்தாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top