Latest Episode Kathal Solla Vanthen...! EPI - 8

shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் பிரண்ட்ஸ்.....

எல்லாரும் எப்படி இருக்கீங்க... இதோ அடுத்த காதல் கொண்டு வந்துட்டேன்... கெளதம் மதி கிட்ட எப்படி இண்ட்ரோ ஆகுறான் என்று பார்ப்போமா வாங்க...

இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... படிக்கிறவங்க ஒரு லைக் பண்ணலாமே ;);)... இந்த எபிக்கும் உங்க ஆதரவை ரொம்பவே எதிர் பாக்கிறேன். ஏதாவது தப்பு இருந்தாலோ/ புரியாம இருந்தாலோ சொல்லுங்க கிளியர் பண்ணுறேன் பிரண்ட்ஸ் நன்றி :love:

காதல் – 8

அவளை மீண்டும் பார்த்ததும் உணர்ந்து கொண்டேன்...

பல ஜென்மம் தொடர்ந்த இந்தக் காதல் பயணம்

இந்த ஜென்மமும் தொடர ஆரம்பித்து விட்டதென்று...!

காலேஜில் இருந்து வெகு தாமதமாக வந்த மதியிடம், நாகு ஒரு கவரைக் கொடுக்க “என்ன பாட்டி இது?” நாகுவிடம் வினவினாள் மதி.

“தெரியலை, உன்கிட்ட கொடுக்கச் சொல்லி கொடுத்தாங்க?” அவர் சொல்லவே யோசனையாக அதை வாங்கிக் கொண்டாள்.

நாகு கொடுத்த கவரின் வெளியே பார்க்க எந்த முத்திரையோ, போஸ்டல் சீலோ ஏதும் இருக்கவில்லை.

ஒரு காக்கி கவர், அவ்வளவு புதியதாக இருந்தது. போஸ்டலிலோ, இல்லை கொரியரிலோ வந்திருந்தால் வெளி கவர் இத்தனை புதியதாக இருக்க வாய்ப்பில்லை புருவம் நெறிய அதையே பார்த்திருந்தாள்.

“என்ன கிழவி, இதில் எந்தச் சீலும் இல்லை, இதை எப்படி வாங்கின? யார் என்ன கொடுத்தாலும் வாங்கிடுவியா?” சற்று கோபமாகவே கேட்டாள்.

“அதில நம்ம வீட்டு அட்ரஸ் அவ்வளவு தெளிவா இருக்கு, உன் பேர் வேற அத்தனை தெளிவா சரியான ஸ்பெல்லிங்கோட எழுதிருக்காங்க, உன் பிரெண்ட்ஸ் யாராவது கொடுத்து அனுப்பிருப்பாங்கன்னு வாங்கி வச்சேன், அதற்கு இத்தனை பாடா? முதலில் அதில் என்ன இருக்குன்னு பாரு?” கொஞ்சம் கடுப்புடனே கூறினார் நாகு... பின்ன வந்த பொருளை வாங்கி வைத்ததற்கு இத்தனை கேள்வி. அவளை முறைத்து நிற்க,

“கிழவி நானே கடுப்புல இருக்கேன், வீணா கோபப்படுத்தாதே?”

“என்ன கடுப்புல இருக்கியா? வெயிட்?” என்றவர் வேகமாக அறைக்குச் சென்று அணிந்திருந்த நைட்டியை கழட்டி எறிந்து விட்டு ஒரு சுடியை அணிந்தவர், கையில் பௌடர் எடுத்து அதை முகத்தில் போட்டுக் கொண்டே வெளியே வந்தார்.

அவளோ வந்திருந்த கவரின் வெயிட்டை சோதித்துக் கொண்டிருந்தாள். ‘என்னடா..? இது உள்ளே பேப்பரா இருக்கு? இப்படி வெயிட்லெஸ்ஸா இருக்கு’ எண்ணியவள் கத்திரியை எடுக்கச் சோபாவை விட்டு எழ,

“வா ஷாப்பிங் போகலாம்” என வந்து நின்றார் நாகு.

“ஷாப்பிங்கா...? எதுக்கு...?”

“நீ தானே சொல்லுவ, கடுப்பானா ஷாப்பிங் போகணும்னு?”

“அங்க ஒரு வாத்தி கடுப்பேத்துறான்னா நீ ரொம்பப் பண்ணுற?” முறைக்க,

பேசாமல் சமையல் அறையை நோக்கி நடையைக் கட்டினார் நாகு.

கவரின் வாயை மிகக் கவனமாகக் கத்தரித்துப் பிரித்தவள், உள்ளே இருந்ததை மெதுவாக வெளியில் எடுத்துப் பார்த்தவள் அப்படியே அதிர்ச்சியாகி நின்றாள்.

“பாட்டி...?” அவள் போட்ட கூச்சலில் சமையல் அறையில் காப்பிப் போட்டு இருந்தவர், காப்பிக் கப்பை தவற விட்டபடி ஹாலுக்குக் கிட்டத்தட்ட ஓடி வந்தார்.

“என்னாச்சுடி” பதட்டத்துடன் கேட்டார் நாகு.

அவளோ பதில் சொல்ல முடியாமல், பார்வை அந்தப் போட்டோவில் நிலைக்குத்தி, அதையே வெறித்துப் பார்த்திருந்தாள். அவருக்கு அருகே வந்தவர் தானும் அதில் பார்வையைச் செலுத்தினார்.

“இதுக்கு ஏண்டி இப்படிக் கத்துற, உன் பிரண்ட்ஸ் யாராவது அனுப்பிருப்பாங்க. இது தான் நீயும் வச்சிருக்கியே?” அவளைப் பார்த்து கூறியவர் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தார். அவருக்குத் தெரியாதே இந்த நிழல்படம் ஒரு காலத்தில் அவளின் துணையாக இருந்தது என்று.

தன் சிறு வயது நண்பன். ஊரை விட்டு வந்த பிறகு அதிகமாகத் தேடியவன். அவளின் கிச்சாவிடம் அவள் கடைசியாகக் கொடுத்த புகைப்படம் பெரிதாக்கப்பட்ட நிலையில் இப்பொழுது அவளிடம்.

‘இது எப்படி இங்கே, அவளால் நம்பமுடியவில்லை, இதை இப்பொழுது யார் அனுப்பியது, கிச்சாவா? கிச்சா எங்கே இருக்கிறான்.’ அந்தக் கவர் முழுவதுமாக உள்ளே தேடினாள், அவன் ‘ஏதாவது எழுதி வைத்திருகிறானா?’ பார்க்க எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தது அந்தக் கவர்.

எந்த அடையாளமும் இல்லாமல் போக ‘யாராவது தன்னிடம் விளையாடுகிறார்களா?” யோசனையோடு அமர்ந்திருந்தாள்.

அப்படியே அந்தப் புகைப்படத்துடன் சோபாவில் அமர, அவளைத் தேடி வந்த நாகு “போ அதை அங்க வச்சிட்டு வந்து சாப்பிடு... இந்தர் உனக்குக் கால் பண்ணினானாம், நீ எடுக்கவே இல்லை போல, போ சாப்பிட்டு அவன்கிட்ட பேசு, நீ பேசினா தான் அவன் ஒழுங்கா வேலை செய்வான், இல்லைன்னா உனக்கு என்னாச்சோ, ஏதாச்சோன்னு பயப்படுவான்” உரைத்தவர் அவளுக்கு உணவு எடுத்து வைக்கச் சென்றார்.

அவள் அந்தப் போட்டோவையே பார்த்திருக்க “மதி, வந்து சாப்பிடு” நாகு அழைக்கவே, தனது யோசனையை ஒதுக்கி வைத்து விட்டு சாப்பிடப் போனாள்.

தட்டில் இருந்த உணவை கண்ணை மூடி விழுங்கியவள் அடுத்த நிமிடம் அந்தப் போட்டோவுடன் தன் அறைக்குள் நுழைந்திருந்தாள்.

படுக்கையில் குப்புற விழுந்தவள், ஏதோ தோன்ற போட்டோவின் பின் பக்கத்தைத் திருப்ப,

“தினமும் உனக்களிக்கும் ஒற்றை முத்தத்துடன் உன் கிச்சா” என எழுதி அதில் ஒரு இதயம் வரைந்திருந்தது.

அந்த நேரம் ஏனோ, அவள் கனவில் வரும் முத்தம் நினைவுக்கு வந்தது. அந்த வரிகளையே சில நொடிகள் பார்த்திருந்தாள். “கிச்சா” என்ற பெயர் அவளை உறைய வைத்திருந்தது.

நாம் தேடும் ஒருவர், அவரைக் கனவில் கூடக் காணமுடியாது என எண்ணும் ஒருவர், அவரைச் சந்திக்கவே முடியாது என அறியும் ஒருவர், கனவில் மட்டுமே தொடர்ந்த ஒருவர், திடீரென நம் முன்னால், நம்மைத் தேடி வந்தால்?

அதிலும் நம் அடிஆழத்தில் ஆசைப்பட்ட ஒருவர், கிடைக்கவே கிடைக்காது என எண்ணிய ஒருவர்,

நேரில் வந்தால்? மயக்கம் போட்டு விழும் நிலைக்கே செல்வோமே அப்படி ஒரு நிலையில் இருந்தாள் மதி.

அந்த நேரம் ஏனோ அவள் கல்யாணம் அவளுக்கு நினைவு வரவே இல்லை... அந்தக் கனவு அவளைத் தொடர்ந்தாலே அவளை மறந்து விடுவாள். அப்படிப் பட்ட கனவுக்கு உரிய நபர் நேரில் வந்தால்? தன்னையே மறந்தாள்.

கனவும்? கிச்சாவும் ஒன்னா? அவள் மனம் அரற்ற ஆரம்பித்தது.

‘இல்லை யாராவது தன் வாழ்கையில் விளையாடுகிறார்களா?’

அதே நேரம், அவளது அலைப்பேசி கைப்பைக்குள் சிணுங்க, அதை எடுக்கும் எண்ணமே இருக்கவில்லை. ஆனாலும் இரவு ஒன்பது மணிக்குமேல் அழைக்கிறார்கள் என்றால், ஏதும் விஷயம் இல்லாமல் இருக்காது, ‘ஒருவேளை இந்தர் தான் அழைத்திருப்பான்’ என எண்ணி வேகமாக அதை எடுத்தாள்.

‘ப்ரைவேட் நம்பர்...’ இப்படி ஒளிர்ந்த அலைபேசியைச் சில நொடிகள் புரியாமல் வெறித்தாள். ‘யாராக இருக்கும், இந்தர் இன்னும் வீட்டுக்கு வரவில்லை. என்னாச்சு’ யோசனையாக அலைப்பேசி ஒலித்து முடிக்கும் வரைக்குமே அதை அப்படியே பார்த்திருந்தாள். அது தன் ஒலியை நிறுத்தவே யோசனையாக அதைக் கீழே வைக்கப் போனாள்.

அது மீண்டுமாக இசைக்கவே, சிறு யோசனைக்குப் பின் அதை எடுத்தாள். “ஹாய் பியூட்டி...” தன் காதுக்குள் வந்து விழுந்த அந்த அழைப்பும், குரலும் அவள் அடிமனது வரைக்கும் அசைத்தது என்றே சொல்லலாம்.

“ஹலோ... யார் நீங்க...? உங்களுக்கு என்ன வேணும்? ஏன் இப்படி ராத்திரி வந்து டிஸ்டர்ப் பண்ணுறீங்க?” சற்று கோபமாகவே வினவினாள்.

“நான் யார்...? எனக்கு என்ன வேணும்? ஏன் இப்படிப் பண்ணுறேன்? நீ கேட்ட எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்ல ஆசை தான், ஆனா சொல்ல முடியலை, ஆனாலும் பியூட்டி நீ கேட்டு நான் சொல்லாமல் இருப்பேனா?”

“எனக்கு நீ வேணும்... நீ மட்டும் தான் வேணும், அதுக்குத் தான் இப்படிப் பண்ணுறேன்” அவன் உல்லாசமாக உரைக்க,

தன் காதில் இருந்து அலைபேசியை எடுத்து, முகத்துக்கு நேராகப் பார்த்தாள். இரவு ஒரு பொண்ணுக்கு அழைத்து, அதுவும் தன் நம்பர், அடையாளத்தை மறைத்து, அதிலும் அவள் வேண்டும் என இவ்வளவு தைரியமாகச் சொல்லும் ‘இவன் யார்’ எனச் சிந்தித்தது.

“ஹலோ, இந்த ராத்திரி நேரம் ஒரு பொண்ணுக்கு போன் பண்ணி இப்படிப் பேசுறீங்களே, இது தான் உங்க பழக்கமா? அதைவிட உங்க நம்பர் எனக்குத் தெரிஞ்சிடக் கூடாதுன்னு பிரைவேட் நம்பரில் வந்து இவ்வளவு கவனமா இருக்கீங்களே? நீங்க எப்படிப் பட்டவராய் இருப்பீங்க?” சூடாகவே கேட்டாள்.

“நான் அனுப்பிய போட்டோ கிடைத்ததா?” அவள் கேட்டதையே அவன் கவனிக்காமல், திருப்பித் தன்னையே கேள்வி கேட்கும் அவனை எண்ணி சற்று திகைத்தாள்.

‘இந்தப் போட்டோ இவன் அனுப்பியதா?’ எண்ணியவள் “எந்தப் போட்டோ?” அவனிடமே திருப்பிக் கேட்டாள்.

“எந்தப் போட்டோ...ம்ம்ம்... ஹா... ஹா... உனக்குப் பொய் சொல்லவே தெரியலை சபர்மதி” அவனது சிரிப்பும், பேச்சும், அவளின் முழுப் பேர் சொல்லி அழைத்த விதமும் அவளுக்கு எங்கேயோ இடறியது.

மானசீகமாகத் தன்னைத் தானே தலையில் அடித்துக் கொண்டவள், பின்ன ‘உங்களுக்கு என்ன வேணும், ஏன் இப்படி எல்லாம் பண்ணுறீங்க? இப்படி எல்லாம் கேட்டுவிட்டு,

அவன் அனுப்பிய படம் கிடைத்து விட்டதா என்ற கேள்விக்கு ‘படமா?’ என்று கேட்காமல் ‘எந்தப் படம்’ எனக் கேட்டு நீ அனுப்பிய படம் எனக்குக் கிடைத்து விட்டது என மறைமுகமாக அவனுக்குத் தெரிவித்து விட்டால், அவன் சிரிக்காமல் என்ன செய்வான்? அதை விடத் தான் சொன்ன பொய்யை அவன் ஈஸியாகக் கண்டுபிடித்த விதம் ‘கண்டிப்பாக அவன் புத்திசாலியாக இருப்பான்’ என வியந்தாள்.

‘ஆமாடி உனக்கு இப்போ இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியம்’ மனம் இடித்துரைக்க, அவனைப் பற்றி அறிய முற்பட்டாள்.

“விட்டா நீங்க தான் கிச்சான்னு சொல்லுவீங்க போலிருக்கு?” அவள் கேட்க,

“ஹா... ஹா... உன்ன ட்ரிக்ஸ் எனக்குப் புரியுது... ஆனா என் வாயால் நான் எதுவும் சொல்லமாட்டேன், உனக்கு என்னைப் பற்றித் தெரியணும் அது தானே, ஒன்னு மட்டும் சொல்லுறேன், உனக்கு அனுப்பிய போட்டோக்கு நான் தான் தினமும் கிஸ் கொடுப்பேன், ஆனால் கிச்சா யார்? வேறு ஏதாவது தெரியணுமா?” உற்சாகமாக கேட்டானவன்.

“நோ... எனக்கு யாரை பற்றியும் தெரிய வேண்டாம்... நீ யாராகவும் இருந்துட்டு போ” கோபமாக உரைத்தவள் அலைபேசியை அணைத்து விட்டாள்.

அவளை எண்ணி அந்தப் பக்கம் பலமாகச் சிரித்துக் கொண்டான். அவளின் கிச்சா.
 
Last edited:
#2
😘😘அருமையான பதிவு அக்கா...மதி கிச்சாவ பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டாள்...அஷோக் வாழ்த்துகள்....
 
Last edited:

shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
மதியின் இதயம் பலமாக அடித்துக் கொண்டது. ‘யார் இவன்? என் நம்பர் எப்படிக் கிடைத்தது? இந்தப் போட்டோ அனுப்பியது யார், கிச்சா அனுப்பியது என்றால் அவன் ஏன் இப்படி மறைமுக அழைப்பு கொடுக்க வேண்டும், நேராக வந்திருக்கலாமே? அதிலும் அவனுக்கு நான் வேண்டுமாமே? கனவு முத்தம் இவனுக்கு யார் உரைத்தது, இந்தப் புகைப்படம் இவன் கையில் யார் கொடுத்தது, ஒருவேளை கிச்சா உறவா?’ கேள்விகள் சூறாவெளியாக அவளைச் சூழ்ந்தது.

‘ஏதோ சொன்னானே, அந்தப் புகைப்படத்துக்கு அவன் கிஸ் கொடுப்பானா? அது எப்படிக் கனவில் என்னைத் தாக்கும்? இவனிடம் நான் பேசினால் கிச்சா கிடைப்பானா? கிச்சாவும், கனவும் ஒன்றாக இருக்குமா? ஒரு பக்கம் ஆவலாகவும் இருந்தது. இன்னொரு பக்கம் பயமும், குழப்பமும் அதிகரித்தது.

இதற்கிடையில் இந்தர் வந்ததோ, கதவை தட்டியதோ எதுவுமே அவள் காதில் எட்டவில்லை.

ஆவல் கொண்ட மனம் புலம்பத் தன்னையே நொந்துக் கொண்டாள். அந்தப் போட்டோவை தன் மார்போடு அணைத்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.

வீட்டில் இருந்த கெளதமோ மிகவும் சந்தோசமாகவே வளைய வந்தான். கருத்தபாண்டி கூட மகனின் புன்னகை முகத்தைக் கண்டு சந்தோசம் அடைந்தார்.

தங்கையை அவனாக அழைத்து இரு முறை பேசிவிட்டான்... சீக்கிரம் ஊருக்கு வரும்படி அழைப்பு வேறு...

நடப்பதை எல்லாம் ஒரு மார்க்கமாகவே பார்த்து வைத்தான் அஷோக். இதற்கிடையே அவ்வபோது அந்த வெள்ளை நிற சுடிதாரும் அவனை மனத்தை அரிக்க ஆரம்பித்தது.

‘பையனோட காதலுக்கு எல்லாம் தூது போக ரெடியா இருக்கு மீசை, நம்மளை தொந்தரவு பண்ணுற அந்த மோகினியை கண்டு பிடிக்க ஆளில்லை’ மனதில் புலம்பியபடி அலைந்தான் அஷோக்.

மதி காலையில் கண்விழித்தது அந்தப் புகை படத்தில் தான். அடுத்தக் கொஞ்ச நேரத்தில் நினைவுகள் நேற்று பேசியவனிடம் சென்றது.

‘இன்றைக்குப் பேசுவானா? பேசினால் நான் என்ன செய்யவேண்டும்? கிச்சாவை பற்றி விசாரிக்க வேண்டுமா? இல்லை அவனைப் பற்றி விசாரிக்க வேண்டுமா?’ மனம் பலவாறாகச் சிந்திக்க முயன்று அதை அடக்கி கல்லூரிக்கு கிளம்பினாள்.

ஏதோ யோசனையோடு வந்து அமர்ந்தவளை யோசனையாகப் பார்த்தான் இந்தர். ‘சொல்ல வேண்டிய விஷயமாக இருந்தால் கண்டிப்பாகத் தன்னிடம் கூறுவாள்’ என எண்ணியவன், அவளை அழைத்துக் கொண்டு கல்லூரியில் விட்டான்.

“மதிக்குட்டி, இன்னைக்கு எனக்கு ஆபிஸ்ல நிறைய வேலை இருக்குடா, நீ நேற்று மாதிரி இன்னைக்கு மட்டும் பஸ்ல வர்றியா?” அவளிடம் கேட்க தலையை ஆட்டியவள் தன் வகுப்பறைக்குச் சென்றாள்.

அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த கெளதம் மனதோ ஆனந்த கூத்தாடியது. இப்பொழுதே அடுத்தத் திட்டத்தைத் தீட்ட ஆரம்பித்தான்.

லஞ்ச் ஹவரில் மதி கிளாஸ் முன் இருந்த வராண்டாவில், கௌதமும், அசோக்கும் எப்பொழுதும் போல் ரௌண்ட்ஸ் செல்ல, மூன்று மாணவர்களின் வாக்குவாதத்தைக் கண்டு அப்படியே அங்கு நின்றுக் கொண்டனர் இருவரும்.

ஒரு வாரத்துக்கு முன் புதிதாகச் சேர்ந்த ஆந்திர மாணவன் ரன்வீர். வந்த ஒரே நாளில் சுபிக்கு நண்பனானவன்.

பயந்து பயந்து வந்தவனை, கொஞ்ச நாளில் மாற்றியது அவள் தான். அவளுக்கு அவனைப் பிடிக்கும். வந்த ஒரு வாரத்திலே அவர்கள் நண்பர்களாய் மாறினார்கள். இன்று அவனுக்கு அவள் உணவு கொண்டு கொடுக்கச் சுற்றி இருந்தவர்கள் காதல் அது, இதுன்னு புரளியை கிளப்பி விட, இருவரும் பொங்கி விட்டனர்.

“ஒரு ஆணும் பெண்ணும் எப்பொழுதும் நண்பர்களாய் இருக்க முடியாது” என அவர்கள் வாக்குவாதம் தொடர்ந்தது.

ஆனால் இன்னொருவனோ “ஏன் இருக்க முடியாது, அதெல்லாம் இருக்கலாம், நானும் என் பக்கத்துக்கு வீட்டு பொண்ணும் இன்னும் நண்பர்கள் தான்” அவன் கூற ஒரு மாதிரியாகச் சிரித்தனர் மற்றவர்கள். சுபிக்குக் கோபம் வர, அவர்களைத் திட்ட செல்ல, அஷோக், கௌதமை பார்த்து அடக்கிக் கொண்டாள். மதியும் அமைதியாக இருக்கும் படி கூறினாள். மது எப்பொழுதும் ஆண், பெண் நட்பை மதிப்பவள்.

கௌதமுக்கு எப்பொழுதும் இந்த ஆண், பெண் நட்பில் விருப்பம் கிடையாது. ஒரு ஆணும், பெண்ணும் எந்த நேரமும் நண்பர்களாய் இருக்க முடியாது என்ற எண்ணம் உடையவன். அவனின் நிலாக்குட்டியும் அப்படித் தான் அவனின் தோழியாய் இருந்து காதலியாய் இடம் மாறியவள். அதனால் தான் அவர்கள் பேச்சில் அப்படியே அந்தச் சுவற்றில் சாய்ந்து நின்றான்.

அவர்களை நோக்கி வந்த அஷோக், “ஏண்டா இப்படி எல்லாம் யோசிக்குறீங்க? ஒரு பொண்ணும், பையனும் பிரண்டா இருக்குறது ரொம்ப நல்ல விஷயம் தானேடா அதை ஏன் இப்படி அசிங்கப்படுத்துறீங்க, நல்லா இருக்கப் பசங்க மனசையும் கெடுத்துராதீங்கடா? இப்படியே பேசி அவங்களைப் பிரிச்சிடாதீங்க?” கூறியவன் விலகி செல்ல,

அதைக் கேட்டுக் கொண்டிருந்த சுபி மனம் ஆனந்த கூத்தாட, அவன் பின்னே ஓடினாள்.

“அஷோக் சார்” அழைத்தபடியே அவன் முன் போய் நிற்க, கேள்வியாகப் புருவத்தை உயர்த்தினான் அஷோக்.

“நீங்க இப்போ சொன்னது உண்மை தானே, நீங்க ச்சும்மா பேச்சுக்கு சொல்லலியே?”

அவள் எதைக் குறிப்பிடுகிறாள் என்று புரிந்துக் கொள்ளவே அவனுக்குச் சில நொடிகள் பிடித்தது. அதிலும் அவளின் இந்தக் குரல் அவனின் அடியாழத்தில் இருந்த குரலுடன் ஒப்பிட்டுக் கொண்டிருந்தது. ஆனாலும் அவள் எதைக் கேட்கிறாள் எனப் புரியாமல் அவள் முகத்தையே பார்த்திருந்தான்.

“இல்ல இப்போ சொன்னீங்களே, ஒரு பொண்ணும், பையனும் பிரண்டா இருக்குறது நல்ல விஷயம் என்று, நீங்க இதைத் தப்பா நினைக்கலை தானே?”

‘என்ன வேண்டுமாம் இவளுக்கு’ கைகளைப் பின்னால் கட்டியபடி அவளையே ஆழ்ந்து பார்த்திருந்தான் அஷோக். இன்னொரு மனமோ ‘எப்போ பார்த்தாலும், இப்படி ஏதாவது அதிர்ச்சி கொடுக்க வேண்டியது’ கறுவி கொண்டான். ஆனாலும் அந்தக் குரலுக்குச் சொந்தகாரியை கண்டுபிடித்தது போல் காட்டிக் கொள்ளாதவன் அவளையே பார்த்து நின்றான்.

“சொல்லுங்க?” அவனின் எண்ணப் போக்கை அறியாதவளோ அவனின் பதிலை வேண்டி அவன் முகம் பார்த்திருந்தாள்.

“ஆமாம்” கூறியவன் அவளை விட்டு விலகி செல்ல, அவன் பின்னே ஓடி வந்து அவனைத் தடுத்தவள், அவன் முன் நின்று “தேங்க் யூ... தேங்க் யூ... சோ மச்” கூறியவள் துள்ளி குதித்து ஓட,

“ஏய் மோகினி” அவளை அஷோக் அழைக்க, அதிர்ந்து நின்றவள் ‘அச்சோ அவசரத்தில் மாட்டிகிட்டியே மாப்பு’ தன்னைத் தானே தலையில் தட்டிக் கொண்டாள் சுபிக்ஷா.

சுபிக்ஷா, சுரேஷின் சித்தி பொண்ணு, லீவுக்கு வீட்டுக்குச் செல்லும் பொழுது, ஸ்கூல், காலேஜ் முதற்கொண்டு நடப்பதை வீட்டில் கூற, பெரும்பாலும் அவன் பேச்சில் அஷோக் இடம் பெற்றிருப்பான். மிகவும் கலகலப்பானவன் என்பதால்.

எப்பொழுதும் விளையாட்டு பையன், அவன் பெயர் மனதில் படிய, நாளடைவில் ஓவ்வொரு முறையும் நான்கு பேரும் எடுக்கும் போட்டோவை அவளுக்கு அனுப்ப, அவன் கொஞ்சமாய் அவள் மனதில் குடிபுகுந்தான். அப்படித் தான் அன்று இரவு எதிர் பாராத விதமாக அவனைக் கண்டவள் கொஞ்சமாய்க் கலாய்த்து சென்றாள்.

ஆனால் அடுத்த நாள் இவனே அவளுக்குப் பேராசிரியராய் வருவான் என எதிர் பார்க்கவே இல்லை. அவனைக் காணாதவள் போல் தான் இருந்தாள். இன்றோ அவளின் ஆர்வ கோளாறில் மாட்டிக் கொண்டவள், ஒரே ஓட்டமாக ஓடி கிளாஸில் புகுந்துக் கொண்டாள். கொஞ்ச நாள் மனதை சுற்றிய மோகினியை கண்டு பிடித்த சந்தோஷத்தில் அறைக்குச் சென்றான் அஷோக்.

மாலை ஆகவே, வீட்டுக்குச் செல்லும் பஸ்சில் மதி ஏற, அவள் பின்னே கௌதமும் ஏறிக் கொண்டான்.

Next Epi Saturday :)
 

Sponsored

Advertisements

Top