• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathalaakik kasinthu...: Aththiyaayam 25.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 25:

கன்னியம்மாள் பதிலே சொல்லாமல் நின்றிருந்தாள். ஆனால் கலங்கவும் இல்லை. தாயை வியப்போடு பார்த்தாள் கீதா. அந்த நேரம் ஒரு குரல் கம்பீரமாக ஒலித்தது.

"உங்க மகன் தாராளமா அந்த மல்லிகையையோ முல்லையையோ கல்யாணம் செஞ்சுக்கட்டுமே நாங்க வேண்டாம்னு சொல்லையே?" என்ற பரிச்சயமான குரல் வர திடுக்கென நிமிர்ந்தாள் கீதா. அங்கே சிரித்தபடி மாலினி நின்றிருந்தாள். அந்த அதிர்ச்சியிலிருந்து அவள் மீளு முன் ஒரு பிஞ்சுக்கரம் அவளைத் தொட்டது. யாரெனத் திரும்பினாள். நீல நிற பட்டுப்பாவடைஅ ணிந்து சிட்டுப்போல நின்றிருந்தாள் கயல். ஆனந்தக் கண்ணீர் கண்களை மறைக்க அவளை அப்படியே தழுவிக்கொண்டாள்.

தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக நினைத்துக்கொண்டிருந்த தாயும் மகனும் இதை எதிர்பார்க்காததால் திகைத்துப் போயினர்.

"என்ன நடக்குது இங்கே? இதெல்லாம் என்ன நாடகம்?" என்றாள் காமாட்சி.

பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளைக் கோலத்தில் நின்றிருந்த சேகர் கன்னியம்மாளிடம் சாடை காட்டி விட்டு ராஜேந்திரனை நோக்கினான்.

"இந்தக் கல்யாண ஏற்பாடு எனக்கும் கீதாவுக்கும் தான். நீங்க பேரம் பேசுன தொகையை கொடுக்க அவங்க இஷ்டப்படல்ல! அது மட்டுமில்ல உன்னை மாதிரி பச்சோந்தியை கல்யாணம் செஞ்சுக்கிட்டு கஷ்டப்பட கீதாவும் தயாரா இல்ல! அதனால நீங்க போகலாம்" என்றான் அழுத்தமான குரலில்.

"ஓஹோ! எங்க ஊருக்கே வந்து எங்களை அவமானப்படுத்திட்டு போயிடலாம்னு நினைக்கறீங்களா? ஏ கன்னியம்மா உன் பொண்ணு கெட்டுப் போனதைச் சொன்னியா நீ இந்த மாப்பிள்ளை கிட்ட? "

"எல்லாம் தெரியும் எங்களுக்கு! நீங்க உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க" என்றாள் மாலினி கோபமாக. அவளது கணவன் ராஜேஷ் முன்னால் வந்தான்.

"இவங்க கிட்ட நீ ஏன் பேசுற மாலு! நான் பார்த்துக்கறேன்." என்று மனைவியை சமாதானப்படுத்தி விட்டு கன்னியம்மாளிடம் திரும்பினான்.

"அம்மா! சீக்கிரம் தங்கச்சியை மணமேடைக்கு அழைச்சுக்கிட்டுப் போங்க! நல்ல நேரம் போயிடப் போகுது! சேகர் நீங்களும் இவங்களோட போயி மண மேடையில இருங்க" என்றான்.

"என்னப்பா? யாரு நீ? என்ன எங்களைக் கேவலமாப் பேசுற? நாங்க நெனச்சா உன்னை என்ன வேணும்னாலும் செய்வோம் தெரியும் இல்ல?" என்றான் ராஜேந்திரன்.

"இதைப் பாருப்பா ராஜேந்திரா! நான் ஒரு வக்கீல்! நீ மைனர் பொண்ணைக் கட்டாயக் கல்யாணம் சேஞ்சேன்னு சொல்லி உன்னை உள்ளே தள்ள எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. அதுவும் போக நீங்க வரதட்சிணை கேட்டதா கீதாவும் அவங்க அம்மாவும் உங்க மேல புகார் கொடுத்தா ஏழு வருஷம் ஜெயில் கம்பி தான் எண்ணணும். எப்படி வசதி? "

"இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்? நாங்க வர தட்சிணை கேட்டோம்னு உங்கிட்ட என்ன நிரூபணம் இருக்கு?" என்றாள் காமாட்சி. கன்னியம்மாள் திகைத்தே போய் விட்டாள். எப்பேர்ப்பட்ட ராட்சசி இவள்? என் மகள் இவளிடம் என்ன பாடு பட்டிருப்பாளோ? என நடுங்கினாள் அந்தத் தாய்.

"ஏம்மா! நீங்களே இவ்வளவு யோசிக்கும் போது நான் படிச்ச வக்கீல் யோசிக்காம இருப்பேனா? இப்ப பேசுனீங்களே நீங்க அதை அப்படியே என் செல்ஃபோன்ல ரெக்கார்டு செய்திருக்கேன். தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் என் நண்பர் தான். என்ன அவருக்கு ஃபோன் போடட்டுமா? இல்லை இந்தக் கல்யாணம் நடக்க விடுறீங்களா?"

"என்னய்யா எல்லாரும் பார்த்துக்கிட்டு இருக்கீங்க? வெளியூர்ல இருந்து யாராரோ வந்து எங்களை அவமானப்படுத்துறாங்க! நீங்க வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கீங்களா? இதெல்லாம் என்ன நியாயம்?" என்றாள் காமாட்சியம்மாள்.

சங்கர் முன்னால் வந்தான்.

"ராஜு! நியாயத்தையும் அநியாயத்தையும் பத்தி நீயும் உங்கம்மாவும் பேசக்கூடாதுப்பா! தாலி கட்டின பொண்டாட்டியை தவிக்க விட்டுட்டு ஓடிப்போனவன் தானே நீயி? இப்ப எந்த முகத்தோட வந்த?"

"சங்கரு! நீயே சொல்லிட்ட என் மகன் இந்தப் பிள்ளைக்கு தாலி கட்டிட்டான்னு அப்புறம் எப்படி திரும்பவும் இந்தச் சென்னை ஆளு தாலி கட்டுவான்? ஒரு பொண்ணு கழுத்துல எத்தனை தாலி ஏறும்?" என்றாள் காமாட்சி. அவள் முகத்தில் வஞ்சம் மின்னியது.

"அத்தை! நீங்களா இப்படிப் பேசுறது? அன்னைக்கு காலேஜ்ல எல்லாப் பெரிய மனுசங்க முன்னாலயும் என் மகன் கட்டுன தாலி செல்லாது கழட்டி எறின்னு சொல்லிட்டு இப்ப எப்படி உரிமை கொண்டாடுறீங்க?"

"என்ன கன்னியம்மா மத்தவங்களைப் பேச விட்டு எங்களை அவமானப்படுத்துறியா? நான் நெனச்சா உன் மக வாழ்க்கையை நாசமாக்கிடுவேன் தெரியுமா? " என்று கத்தினாள்.

மாலினியும் ராஜேஷும் முன்னால் வந்தார்கள்.

"ஆண்ட்டி! இவங்களுக்கு பதிலடி கொடுக்கறா மாதிரி இப்பவே இங்கேயே நாம இந்தக் கல்யாணத்தை நடத்திக் காட்டுவோம். இவங்க என்ன செய்யறாங்கன்னு பார்த்திடுவோம்" என்றாள் மாலினி.

செல்ஃபோனைக் கையில் பிடித்தபடி நின்றிருந்தான் ராஜேஷ்.

கன்னியம்மாள் ஊர்க்காரர்களையும் அங்கே நின்றிருந்த பெரிய மனிதர்களையும் ஏறிட்டாள்.

"ஐயா பெரியவங்களே! எப்பவோ சின்ன வயசுல என் மக தப்பு செஞ்சிட்டான்னு அதே தப்பை நான் திரும்ப செய்ய தயாரா இல்ல! இந்த சென்னைத் தம்பி என் மகளை மனசார விரும்புறாரு. தாயில்லாத அவரோட தங்கச்சிக்கு என் மகளால மட்டும் தான் தாயா இருக்க முடியும்னு இந்தச் சின்னப்பிள்ளை நினைக்குது. அதனால நீங்க எல்லாரும் சேர்ந்து இந்தக் கல்யாணத்தை நடத்திக் கொடுக்கணும்" என்று கை கூப்பினாள்.

கல்லூரியின் முதல்வர் திரு ராமநாதன் அவர்கள் முன்னால் வந்தார்.

"அம்மா! நீங்க இப்ப செய்யப் போறது ரொம்பவும் நல்ல விஷயம். படிக்காதவங்களா இருந்தாலும் உங்களுக்குப் பரந்த மனசு இருக்கு. இந்த கல்யாணத்தை நடத்திக் கொடுத்திட்டு சாப்பிட்டுட்டுத்தான் நாங்க போவோம்" என்று சொல்ல மற்றவர்கள் தலையாட்டினார்கள்.

உலகமே ஆனந்தத்தால் நிறைந்திருக்க கன்னியம்மாள் கைகளைக் கூப்பி வணங்கி விட்டு கண்களைத் துடைத்துக்கொண்டாள். குறிப்பிட்ட நல்ல நேரத்தில் குருக்கள் மந்திரம் சொல்ல கீதாவின் கழுத்தில் தாலி கட்டினான் சேகர். ஊர்க்காரர்கள் பூக்களைத் தூவி வாழ்த்தினர். இந்த சந்தடிகளுக்கு நடுவே ராஜேந்திரனும் காமாட்சியும் கோயிலை விட்டு வெளியேறியதை யாருமே கவனிக்கவில்லை. இனி ராஜேந்திரன் என்ற வில்லனால் கீதாவை ஒன்றும் செய்ய முடியாது. மகிழ்ச்சியில் கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்தாள் கீதா.

கயல் கீதாவை விட்டு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நகரவேயில்லை. கல்யாணம் விருந்து முடிந்து கீதா வீட்டில் அனைவரும் கூடியிருந்தனர். கல்யாண அலங்காரத்தைக் கலைத்து விட்டு சாதாரண சில்க் சேலையில் இருந்த கீதா கண்கள் கலங்க மாலினியை அணைத்துக்கொண்டாள்.

"ரொம்ப தேங்க்ஸ் மாலு! உன்னால என் வாழ்க்கையே சரியாச்சு. உனக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியல்ல" என்றாள்.

"இதைப் பாருடா தாலி கட்டுனது நான். நன்றி அங்கேயா?"

"இல்லை சேகர் சார்! வாழ் நாள் முழுக்க இனிமே கீதா உங்களுக்கு மட்டும் தான் நன்றி சொல்லிக்கிட்டே இருப்பா" என்றதும் பெரிதாகச் சிரித்தான் சேகர். கன்னங்கள் சிவக்க சிரித்தாள் கீதா. சட்டென நினைவு வந்தவள் போலக் கேட்டாள்,

"ஆமா! நீங்க எப்படி இங்க வந்தீங்க? உங்களை எங்கம்மா எதிர்பார்த்தா மாதிரி தோணுச்சே? கொஞ்சம் விவரமா சொல்லுங்க சேகர்" என்றாள் அவன் அருகில் அமர்ந்து கொண்டு உரிமையாக.

"நீ உண்மையிலேயே நன்றி சொல்லணும்னா கயலுக்குத்தான் நன்றி சொல்லணும் கீதா. ஏன்னா அவ தான் எனக்கு ஃபோன் செஞ்சு அவங்க அத்தை மாமா கொடுமையையும் அவங்க போட்ட கேவலமான திட்டத்தையும் சொன்னா. இவங்களைக் காப்பத்தவாவது உன்னைக் கண்டு பிடிக்கணும்னு எங்க வீட்டுக்காரர் யோசனை சொன்னார்" என்றாள்.

"என்ன? என்ன? கயலை அவங்க அத்தை மாமா கொடுமைப்படுத்தினாங்களா? என்ன இது மாலு? எனக்கு ஒண்ணும் புரியலையே?"

"நான் சொல்றேன் அண்ணி! எங்க அத்தையும் மாமாவும் எங்க அண்ணனை ஏமாத்தத் திட்டம் போட்டாங்க! அதை நான் வெளிய இருந்து வரும் போது கேட்டுட்டேன். உடனே பக்கத்துல இருந்த பே ஃபோன்ல இருந்து மாலினி ஆண்ட்டிக்கு ஃபோன் செஞ்சிட்டேன். அவங்க நம்பரும் உங்க நம்பரும் என் டைரில எழுதி வெச்சிருந்தேன் அண்ணி" என்றாள்.

"ராஜேஷ் சார் அதான் மாலினியோட ஹஸ்பண்ட் வந்து எங்கிட்ட விஷயத்தைச் சொன்னாரு. அப்பத்தான் எங்க அத்தை மாமாவோட உண்மையான முகம் எனக்குத் தெரிஞ்சது. அவங்களை விரட்ட நான் பட்டபாடு இருக்கே? அப்பா! ராஜேஷ் சார் அவங்க மேல 420 கேஸ் போடுவேன்னு சொன்னப்புறம் தான் போனாங்க!"

சந்தோஷமாகச் சிரித்தாள் கீதா. கயலை இழுத்து அணைத்துக்கொண்டாள்.

"கெட்டிக்காரி தான் நீ கயல். ஆனா எனக்கு இன்னமும் நிறைய விஷயம் புரியல்ல! எங்கம்மாவை எப்பப் பார்த்தீங்க?"

"வியாழக் கிழமையே நாங்க எல்லாரும் தெங்காசி வந்தாச்சு. உங்க வீட்டைக் கண்டுபிடிக்க கல்லூரி முதல்வர் ராமநாதன் சார் தான் ஹெல்ப் பண்ணினாரு! இலஞ்சி கோயிலல் வெச்சு தான் உங்கம்மாவை மீட் பண்ணி விஷயத்தைச் சொன்னோம்."

"நேரே வீட்டுக்கு வராம ஏன் கோயிலுக்குப் போனீங்க?"

"கேப்பியே கேள்வி! நீ எங்க எல்லாரையும் எத்தனை நாள் தவிக்க விட்ட? கயல் உன்னை நெனச்சு எவ்வளவு அழுதிருப்பா? உன்னை அத்தனை லேசுல விடலாமா? அதான் நாங்க இப்படி ஒரு திட்டம் போட்டோம். "

"வெள்ளிக்கிழமை என்னைக் கோயிலுக்கு குருக்கள் வரச் சொன்னதா சங்கர் சொன்னான் இல்ல? வரச் சொன்னது இவங்களைப் பார்க்கத்தான். அங்க வெச்சு எனக்கு மாலினி எல்லா விஷயத்தையும் சொன்னாங்க. அதோட ராஜேந்திரன் மாதிரி கயவனுக்கு கீதா ஏன் வாழ்க்கைப்படணும்? தவறை திருத்திக்க கடவுளா நமக்குக் கொடுத்த சந்தர்ப்பம்னு வக்கீல் சார் எடுத்துச் சொல்லவும் எனக்கு தைரியம் வந்தது. " என்றாள் கன்னியம்மாள்.

"நீ கூட எங்கிட்ட மறைச்சுட்ட இல்ல?" என்றாள் அம்மா தாயிடம் விளையாட்டாக.

"அவங்களை ஒண்ணும் சொல்லாதே கீதா! எல்லாமே ராஜேஷ் சார் மாலினி மேடம் ஏற்பாடு தான். உங்கம்மா அவங்க சொன்னடி தைரியமா செயல்பட்டாங்க அவ்வளவு தான். ஆனா நீ ஏதோ பைத்தியக்கார வேலை செய்யுறதா இருந்தியாமே? ஏம்மா? என்னைக் கூட நெனச்சுப் பார்க்கலையா?" என்று மெல்லக் கேட்டான் சேகர்.

ஒரு நிமிடம் தான் செய்ய இருந்தது நிறைவேறியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என எண்ணி நடுங்கினாள் கீதா.

"என் மேலயும் தப்பு இருக்கு மாலினி மேடம்! நான் தான் அவளை ராஜேந்திரனைத்தான் கட்டிக்கணும்னு சொல்லிட்டு இருந்தேன். அதுல தான் என் மக குழம்பிப் போயிட்டா. எப்படியோ எல்லாமே நல்லபடியா முடிஞ்சது. கயலுக்காகத்தான் நான் இத்தனை தைரியமா இந்தக் காரியத்துல இறங்கினேன். அவ என் மக மேல வெச்சிருக்குற பாசத்தைப் பார்த்து அசந்து போயிட்டேன்" என்றாள் கன்னியம்மாள். தோளைச் சுற்றியிருந்த கயலின் கரங்களை முத்தமிட்டாள் கீதா.

"எனக்குக் கிடையாதா கீதா முத்தம்?" என அவள் காதில் மெல்லக் கேட்டான் சேகர். குப்பென முகம் சிவக்க திணறினாள் அவள். இருவரும் காதலாகிக் கசிந்து உருகி ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தனர். அவர்களை தொந்தரவு செய்யாமல் மற்றவர்கள் கயலை அழைத்துக்கொண்டு வெளியேறலாயினர். அனைவர் முகங்களிலும் ஆனந்தம் நிறைந்திருப்பது போல இனி கீதாவின் வாழ்வில் ஆனந்த வெள்ளமே!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top