• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kattangal-35

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
கட்டங்கள் – 35

மருத்துவமனையில் புஷ்பாவின் அறை வாசலில் இருந்த நாற்காலியில் நித்யா சோர்வாக அமர்ந்திருக்க, முகிலனுடன் பேசிவிட்டு மீண்டும் நித்யாவின் அருகில் வந்தமர்ந்தாள் ரூபா.

ரூபா அவள் அருகே அமர்ந்ததை அறிந்தும் ரூபாவை திரும்பியும் பார்க்காமல், சுவரை பார்த்தபடி நித்யா அமர்ந்திருக்க, "என்ன நித்யா நீ அவ்வளவு சொல்லியும் உன் ஹஸ்பண்ட் பிசினெஸ் தான் முக்கியமுன்னு கிளம்பிட்டார் போல..!!! ", என்று ரூபா நக்கல் தொனித்த குரலில் கேட்க, நித்யா தன் கண்களை இறுக மூடிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தாள்.

"நீ கேட்டு நான் இப்பொழுது எது இல்லைன்னு சொல்லிருக்கேன்..", என்று மதுசூதனனின் வார்த்தைகள் நித்யாவின் காதில் மீண்டும் மீண்டும் தேனாய் ஒலிக்க ரூபாவை பார்த்து நக்கலாக சிரித்தாள் நித்யா.

ரூபா கண்களைச் சுருக்கி கொண்டு நித்யாவை பார்க்க, "யார் சொன்னாங்க ..,? அவங்க கிளம்பிட்டாங்கன்னு.., அவங்க போகலை.. இங்க தான் இருக்காங்க... கொஞ்சம் நேரத்துல வருவாங்க...", என்று நித்யா சிரித்தபடி கூற, "இவளுக்கு என்ன ஆயிற்று.. இப்பொழுது தானே நான் call பண்ணேன்... Call அட்டென்ட் பண்ணாம On the way to airport ன்னு மெசேஜ் பண்ணிருந்தானே..", என்று ரூபா வெகுவாக யோசித்தாள்.

"இல்லை.. இவள் என்னை குழப்புகிறாள்..", என்ற எண்ணம் ரூபாவுக்கு தோன்ற, " இப்பொழுது திரும்பி வருவான்னு நினைச்சிட்டு இருக்கியா..? மதுவுக்கு அம்மா, அப்பா, முகிலனை விட பிசினெஸ் முக்கியம்... ", என்று ரூபா கண்ணுயர்த்தி கேலியாக கூற, "ஆஹான்...", என்று தலை அசைத்து கேட்டாள் நித்யா.

ஏர்போர்ட்க்குள் நுழைந்த மதுசூதனனுக்கு தலை விண்வினென்று வலித்தது.

அவன் முன் தோன்றிய அனைத்து பெண்களின் முகமும் நித்யாவின் முகமாய் தெரிய, அவன் தலை வலி இன்னும் அதிகரித்தது.

அங்கிருந்த நாற்காலியில், சற்று நேரம் தலையை தாங்கியபடி கண்மூடி அமர்ந்தான் மதுசூதனன்.

அவன் கண்களை மூடி அமர்ந்திருக்க, , "முகில்.. உங்க அண்ணன் நம்மளை இந்த நிலைமையில் விட்டுட்டு கிளம்புவதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லைன்னு சொல்லு...", என்ற நித்யாவின் குரல் மீண்டும் மீண்டும் ஒலிக்க.., தன் மொபைலில் சிலரிடம் பேசிவிட்டு காரை நோக்கி நடந்தான் மதுசூதனன்.

மருத்துவமனை வந்தடைந்த மதுசூதனன் வேகமாக உள்ளே செல்ல, அவன் உள்ளே நுழைவதை பார்த்த ரூபா, "மது...", என்று அதிர்ச்சியாக அழைத்து கொண்டே அவன் அருகே சென்றாள்.

"நீ லண்டன் கிளம்பலையா..?", என்று ரூபா அதிர்ச்சியாக கேட்க, "அம்மாவை பார்க்கணுமுன்னு தோணுச்சு.. அது தான் போகலை...", என்று கூறிக் கொண்டே அவர்கள் அறையை நெருங்க முகிலன் அவன் அருகே சென்று.., "நல்லது ப்ரோ...", என்று நிம்மதியாக கூறினான்.

முகிலனின் நிம்மதியான முகம்.., அவனை ஏதோ செய்ய.., தலை அசைத்துக் கொண்டான் மதுசூதனன்.

அவனை பார்த்த நித்யாவின் முகத்தில் ஒரு மலர்ச்சி. அவள் கண்களில் ஒரு மின்னல். ஆனால் எழுந்து அவனிடம் செல்லாமல் நாற்காலியில் அமர்ந்தபடியே மதுசூதனனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்யா.

எதற்கும் அலட்டிக்கொள்ளாத நித்யாவின் நிமிர்வு..., இன்றும் மதுசூதனனை ஈர்த்தது.

நித்யாவின் முகத்தின் மலர்ச்சியை பார்த்த மதுசூதனனின் மனமோ, “நான் இந்த மலர்ச்சிக்காக எதையும் செய்வேன்”, என்று எண்ண, அறிவோ, "அழுத்தக்காரி.. இவள் என்னிடம் பேசியிருந்தால், பேசி புரிய வைத்து நான் இந்நேரம் லண்டன் கிளம்பியிருப்பேன்.. என் பிசினெஸ் டீலும் ஒழுங்காக நடந்திருக்கும்.. ஆனால் என்னிடம் பேசாமல் இருந்து அவள் நினைத்தை சாதித்துவிட்டாள்..", என்று கூற மதுசூதனனின் வீம்பு எட்டிப் பார்த்தது.

நித்யாவின் அருகே மதுசூதனன் செல்ல, அவள் முகத்தில் புன்னகை தோன்றியது. அந்த புன்னகையை மறைக்க, அவள் அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தாள்.

"சிரிக்கவா செய்ற..", என்று எண்ணியபடி நித்யாவின் அருகே நாற்காலியில் சாய்ந்தமர்ந்தான் மதுசூதனன்.

"பேசலாமா? வேண்டாமா?", என்று நித்யா சிந்திக்க, "கை நீட்டி அடித்தது தப்பு தான்.. அதற்கு தான் சாரி சொன்னேன்.. ஒரு மனுஷன் சாரி சொல்லியும் நீ பேச மாட்ட... இனி நீயும் என் கூட பேச வேண்டாம்... நானும் உன் கூட பேசவில்லை...", என்று வீராப்பாக நித்யாவிடம் கூறிவிட்டு தன் தாயை நோக்கி சென்றான் மதுசூதனன்.

" கோபம் வந்தால் இவன் என்னை அடிப்பான்.. அப்புறம் சாரி சொல்லுவான்... நான் சரி.., நீங்க அடிக்கறப்ப அடிங்கன்னு வாங்கிக்கணும்... இது எந்த ஊரு நியாயம்.. ", என்று தன் தலையை சண்டை கோழியாக திருப்பி கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் நித்யா.

அங்கு ரூபா குறுக்கும் நெடுக்குமாக யோசனையோடு நடக்க, அவளை அன்பாக அழைத்தாள் நித்யா.

"மதுவுக்கு அம்மா, அப்பா, முகிலனை விட பிசினெஸ் முக்கியமுன்னு தெரிஞ்ச உனக்கு.. அந்த பிசினெஸ்ஸை விட, என் வார்த்தை அவருக்கு முக்கியமுன்னு உனக்கு தெரியாம போச்சே...!!!", என்று நித்யா ரூபாவை பார்த்து அவளுக்கு மட்டும் கேட்கும் படி பரிதாபமாக கூற, ரூபா வேகமாக அறைக்குள் நுழைந்தாள்.

மதுசூதனனும் உள்ளே செல்ல, "அத்தை அவங்களை பார்த்தா சந்தோஷப்படுவாங்களே....", என்ற எண்ணம் தோன்ற நித்யா புஷ்பா இருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

மதுசூதனனை பார்த்த புஷ்பா.., "நீ போகலையா...? பிசினெஸ் விஷயமா நீ போகும் பொழுது தடுக்க வேண்டாமுன்னு அமைதியாக இருந்தேன்…. நீ என் கூட இருந்தாலே பாதி தெம்பு வந்திரும்...", என்று புஷ்பா உணர்ச்சி பொங்க பேச, "அம்மா அது தான் நான் வந்துட்டேனே.. எதுக்கு இவ்வளவு strain பண்ணிக்கிறீங்க...", என்று மதுசூதனன் கலக்கமாக கூறினான்.

"ஆண்ட்டி.. மது ஒன்றும் உங்களுக்காக வரலை.. நித்யா சொன்னதால வந்திருக்கான்..", என்று நித்யாவை நக்கலாக பார்த்தபடி ரூபா கூறினாள். "தெரியுமே... நித்யா எப்பவுமே நல்லதை தானே சொல்லுவா...", என்று தலையணையில் சாய்ந்தபடி புஷ்பா அன்பாக கூற, மதுசூதனன் நித்யாவை வாஞ்சையோடு பார்த்தான்.

நித்யாவின் முகத்தில் அழகான புன்னகை பூத்தது.

தான் வீசிய பந்து இப்படி நித்யாவுக்கு சாதகமாக பறக்கும் என்று எண்ணாத ரூபா, நித்யாவை கடுப்பாக பார்த்தாள்.

"வயதான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அருகாமையையும் அன்பையும் தான் எதிர் பார்க்கிறார்கள்." , என்ற செய்தி நித்யாவின் கண்களில் இருப்பதாக மதுசூதனனிற்கு தோன்றியது.

புஷ்பா ஆபரேஷன் முடிந்து உடல் தேறி வீடு திரும்பினார். நித்யாவின் மேல் அனைவருக்கும் மதிப்பு உயர, மதுசூதனனுக்கு அவள் மேல் அன்பு பெருகியது.

மதுசூதனன் தன்னிடம் பேசுவான் என்று நித்யா அமைதி காக்க, அவளாக தன்னிடம் வந்து பேசட்டுமே என்று மதுசூதனன் அமைதி காத்தான்.

இருவரும் பேசிக் கொள்ளமாட்டார்களாம்..!!!!

ஆனால் இருவரும் வாட்ஸாப்., மெயில் செய்து கொள்வது நமக்கு தெரிகிறது. இவர்கள் ஊடலுக்கு தனிமை கொடுத்து, நாம் வெண்பாவின் உடல் நிலையை காண செல்லுவோம்.

"வெண்பா நல்லா சாப்பிடு... இது எப்படி உனக்கு போதும்..?", என்று அமுதவள்ளி மிரட்டும் தொனியில் கூற, "அத்தை போதும்... என்னால இதுக்கு மேல் சாப்பிட முடியாது...", என்று வெண்பா சாப்பிட்டுக் கொண்டே கூறினாள்.

"அண்ணி.. இந்தாங்க அன்று ஆரஞ்சு மிட்டாய் கேட்டிங்களே..!!!", என்று அசோக் ஆரஞ்சு மிட்டாயை வெண்பா அருகில் வைத்த படியே அவள் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

"வெண்பா.. எனக்கு என்னவோ நீ குழந்தை பெயரை சொல்லி நீ நல்ல சாப்பிடற மாதிரி தெரியுது...", என்று சோபாவில் அமர்ந்து அவளை பாத்தபடி முரளி கேலியாக கூற, "அண்ணா.. சும்மா இரு.. இப்படி நீ அண்ணியை கிண்டல் பேசினா.. குழந்தை வெளிய வந்த பிறகு உன்கிட்ட சண்டை போடும்...", என்று சித்ரா முரளியிடம் தீவிரமாக கூறினாள்.

சுந்தரமும், அமுதவள்ளியும் இவர்களை பார்த்து சிரிக்க, அந்த சிரிப்பில் அசோக்கும் இணைந்து கொண்டான்.

வெண்பா புன்னகைக்க முரளி அவளை ஆழமாக பார்த்தான்.

வெண்பா உதட்டில் தோன்றிய புன்னகை அவள் கண்களில் எட்டவில்லை. முரளி வெண்பாவை பார்த்துக் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தான்.

"இவள் மனதில் பெரிய குறை இருக்கிறது... என்னால் என்ன செய்ய முடியும்...?!!", என்று சிந்தனையில் ஆழ்ந்தான் முரளி.
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
சனி கிழமை காலை 9: 00 மணி.

முரளி வெளியே கிளம்ப, "சனிக்கிழமை எங்க கிளம்பிடீங்க..?", என்று வெண்பா சோபாவில் அமர்ந்தபடி வினவினாள். "ஒரு நண்பனை பார்க்க போகிறேன்.. மதியத்துக்குள்ள வந்துருவேன்...", என்று கூறிக் கொண்டே முரளி வெளியே கிளம்பினான்.

"யார் அந்த நண்பன்..", என்று வெண்பா அடுத்த கேள்வியைக் கேட்பதற்குள் முரளி படியிறங்கி பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பிருந்தான்.

முரளியின் பைக் வேகமாக பறந்தது. முரளியின் முகத்தில் எள்ளவும் சிரிப்பில்லை. அவன் பைக் ஒரு பங்களாவின் முன் நின்றது.

முரளி தன் மனதில் உள்ள தயக்கத்தை மறைத்து வேகமாக கதவருகே செல்ல, அவனை நிறுத்தி, "யாரை பார்க்கணும்..?", என்று வினவினார் காவலாளி.

"நான் சதாசிவம் சாரை பார்க்கணும்..", என்று முரளி அவர்கள் வீட்டை பார்த்தபடியே கூற, காவலாளி முரளியை கூர்மையாக பார்த்தார்.

"நீங்க யார்..?", என்று காவலாளி முரளியிடம் வினவ, "அவர் பெண்ணோட கணவன்..", என்று முரளி அழுத்தமாக கூறினான்.

அந்த காவலாளி முகத்தில் பெரிய புன்னகை தோன்றியது. "வெண்பாம்மா நல்லா இருக்காங்களா..?", என்று அன்போடு அவர் விசாரிக்க, முரளி சிரித்த முகமாக தலை அசைத்தான்.

"உங்களை உள்ள விட்டா கண்டிப்பா பெரிய ஐயா திட்டுவாரு... ஆனாலும் பரவாயில்லை நீங்க உள்ள போங்க ஐயா..", என்று கூறி கதவை திறந்தார் காவலாளி.

முரளி வேகமாக வீட்டிற்குள் நுழைய, முரளியை பார்த்த சதாசிவம் வேகமாக அவன் அருகில் வந்து அவன் சட்டையை கொத்தாக பிடித்து, "நீ ஏன்டா இங்க வந்திருக்க..?", என்று கோபமகா கேட்டார்.

வெண்பாவின் தாய் குறுக்கே புகுந்து, “அவரை விடுங்க.. நீங்க எவ்வளவு கோபப்பட்டாலும்.. கத்தினாலும் இவர் மாப்பிளை என்பது மாற போவதில்லை..", என்று சதாசிவத்தை பார்த்து கண்ணீர் மல்க கூறினார்.

"அதுக்காக இவனை சீராட சொல்றியா..?", என்று சதாசிவம் கோபமாக கேட்க, "உங்க மனசை காயப்படுத்தணும்னு நான் நினைக்கலை.. அது என் பொண்ணை தான் பாதிக்கும்.. என் பொண்ணு எங்கு இருந்தாலும் நல்லா இருந்தா போதும்... எந்த பிரச்சனையும் வேண்டாம்.. தயவு செய்து இங்கிருந்து போய்டுங்க...", என்று கூறி , முரளியை பார்த்து கண்ணீர் மல்க கை எடுத்து கும்பிட்டார் வெண்பாவின் தாய்.

சதாசிவம் கூறியதை தான் இவரும் கூறினார். ஆனால் கூறிய விதம் முரளியின் மனதை தொட்டது.

ஆனால் எதற்கும் அசையாமல் மறுப்பாக தலை அசைத்து அவர்களை நிமிர்ந்து பார்த்தான் முரளி.

"நீங்க வெளிய போக சொன்ன உடன் போகிறதுக்காக நான் இங்கு வரவில்லை...நாங்க செய்த தவறை நியாயப்படுத்தவும் வரவில்லை..", என்று முரளி அவர்களை பார்த்தபடி மேலும் தொடர்ந்தான்.

"நீங்க பாட்டி, தாத்தாவாக போறீங்க... வெண்பா உங்களை பார்க்கணுமுன்னு ஆசை படறா...", என்று வெண்பாவின் தாயை பார்த்தபடி கூற, அவர் முகத்தில் சந்தோஷ மின்னல் ஒன்று தோன்றி மறைந்தது.

அதை கவனித்த முரளி மேலும் பேசுவதற்க்குள், "அப்படி அவள் சொன்னாளா..?", என்று கடுமையாக கேட்டார் சதாசிவம்.

"உங்க பொண்ணு அப்படி சொல்லுவாளா...?", என்று அவரை பார்த்து அழுத்தமாக நிமிர்வாக முரளி கேட்க, "அப்ப சார் ஏன் இங்கு வரணும்..?", என்று நக்கலாக கேட்டார் சதாசிவம்.

முரளி, வெண்பாவின் தாய் முகத்தை பார்த்தபடி, "நாங்க அவளை எவ்வளவு சந்தோஷமாக பார்த்தாலும்.., அவள் கண்ணில் ஒரு ஏக்கம் தெரியுது.. என் சுய கவுரவத்தை விட, வெண்பாவின் சந்தோசம் எனக்கு முக்கியம்.. உங்களுக்கு என் வீட்டிற்கு வருவது பிடிக்காது.. நாங்களும் இங்க வரலை... எங்கையாவது கோவிலில் சந்திக்கலாம்.. நீங்க சொல்ற நேரத்துக்கு நான் வெண்பாவை அந்த கோவிலுக்கு அழைத்துக் கொண்டு வருகிறேன்... நீங்க அவளிடம் பேசினால் போதும்.. உங்களை பார்த்துவிட்டால் வெண்பா சந்தோஷமாக இருப்பாள்..", என்று முரளி கோர்வையாக கூறி முடித்தான்.

சதாசிவம் கோபமாக பேசுமுன், "சரி.. நாளை காலை 10.00 மணிக்கு வடபழனி கோவிலுக்கு வரேன்..", என்று சம்மதம் தெரிவித்தார் வெண்பாவின் தாய்.

"தேங்க்ஸ்...", என்று கூறிவிட்டு வாசல் வரை சென்ற முரளி, மீண்டும் திரும்பி உள்ளே வந்து, "நான் உங்களிடம் பேசியது வெண்பாவிற்கு தெரிய வேண்டாம்.. நான் யாரிடமும், எதற்காகவும் தலை குனிவது என் வெண்பாவிற்கு பிடிக்காது.. ", என்று நிமிர்வாக கூறிவிட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான் முரளி.

"எதற்காக சம்மதம் சொன்ன..? ", என்று சதாசிவம் கோபமாக கேட்க, "மனைவிக்காக சுயகௌரவத்தை விட்டுவிட்டு, வீடு தேடி வந்து.., உங்கள் பணம் எனக்கு துச்சம் என்று கூறி, மனைவியின் சந்தோசம் எனக்கு முக்கியம் என்று சொல்லாமல் சொல்லி சென்ற இளைஞனுக்காக....", என்று வெண்பாவின் தாய் அழுத்தமாக கூறினார்.

பொதுவாக வீட்டின் முடிவை சதாசிவம் எடுத்தாலும், சில நேரங்களில் அவர் வீட்டில் வெண்பாவின் தாய் முடிவு இறுதியாகிவிடும்.

இன்று அவ்வாறு நடந்து விட்டது என்று புரிந்து கொண்ட சதாசிவம்., அவர் மனைவியை அமைதியாக பார்த்தார்.

"வெண்பா கல்யாணம் செய்த முறை தவறாக இருக்கலாம்.. ஆனால் தேர்ந்தெடுத்த மனிதன் தவறானவன் இல்லை...", என்று வெண்பாவின் தாய் கூறிவிட்டு தன் வேலையை செய்ய தொடங்கினார்.

ஞாயிறு காலை 10:00 வடபழனி முருகன் கோவில்.

"முரளி.., எதுக்கு திடிர்னு கோவிலுக்கு கூட்டிட்டு வந்திருக்க...?", என்று வெண்பா முரளியின் முகத்தை பார்த்தபடி கேட்க, "கோவிலுக்கு எதற்கு வருவாங்க.. சாமி கும்பிட தான்...", என்று கூறிக்கொண்டே இறைவனை கை கூப்பி வணங்கினான் முரளி.

முருகனை தரிசித்துவிட்டு, அவர்கள் பிரகாரத்தை சுற்ற, திடிரென்று வெண்பா முரளியின் கைகளை அழுத்தமாக பற்றி அசையாமல் நின்றாள்.

"வெண்பா என்ன ஆச்சு..?", என்று முரளி அக்கறையாக வினவ, "அ..ம்..மா..", என்று மெதுவாக கூறியபடியே தன் தாய் சென்று கொண்டிருந்த இடத்தை நோக்கி கை காட்டினாள் வெண்பா.

அவரையே பார்த்தபடி அமைதியாக நின்றாள் வெண்பா.

"நீ அம்மாகிட்ட பேசு...", என்று முரளி கூற, வெண்பா மறுப்பாக தலை அசைத்தாள்.

"அம்மா என் கிட்ட பேச மாட்டாங்க...", என்று வெண்பா கம்மலான குரலில் கூற, "நாம தப்பு பண்ணிருக்கோம் வெண்பா.. நாம தான் மன்னிப்பு கேட்கணும்.. நீ எத்தனை நாள் இப்படி மனசுக்குள்ளே வருத்தப்பட்டுட்டு இருப்ப.. இது கடவுளா பார்த்து நமக்கு கொடுத்த சந்தர்ப்பம்... போ.. பேசு....", என்று முரளி கூற, தன் தாயிடம் சென்றாள் வெண்பா.

வெண்பாவை பார்த்த அவள் தாய் ஒரு நொடி கல்லாக நிற்க, மறுநொடி தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.

"அ.. ம்... மா.......", என்று வெண்பா அழைக்க அவர் திரும்பாமல் கைகளை கட்டிக் கொண்டு இறுக்கமாக நிற்க, கோவிலில் எந்த நினைப்பும் இல்லாமல், அவர் காலில் விழுந்தாள் வெண்பா...

அவர் பாதத்தை தொட்டு.., "அம்மா மன்னிச்சிரு அம்மா..", என்று வெண்பா கூற, வெண்பாவின் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் அவர் காலில் விழுந்தது.

இதை பார்த்துக் கொண்டிருந்த முரளியின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவன் கைகளில் விழுந்தது.

கட்டங்கள் நீளும்....
 




Last edited:

Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
அற்புதமான பதிவு.... உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பதிவுக்கு நன்றி....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top