• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kk 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அத்தியாயம் 19


அடுத்த நாள் கண்மணிக்கு மனநிலை மிகவும் சோர்ந்திருந்தது.
என்றேனும் அவன் மாறுவானா?
பள்ளியிலும் அன்று பிள்ளைகளிடம் நிரம்பவும் எரிச்சலைக் காட்டிக் கொண்டிருந்தாள். எப்போதும் ஜாலியாக நடத்தும் ஆசிரியருக்கு இன்று என்னவாயிற்று என்று அந்த மாணவர்களும் குழம்பிப் போயினர்.
திவ்யா வீட்டுக்குப் போய் தமிழினியை அழைத்து வரப் போக, இவள் சோர்ந்த முகத்தைப் பார்த்த திவ்யா என்னவென்று கேட்க, நீண்ட நேரம் எதையோ சொல்லிச் சமாளித்தாலும் அவளால் தப்பிக்க முடியவில்லை.
“நேற்று முகில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க கூப்பிட்டுப் போனார்...” என்று, நடந்ததைச் சொல்லி விட்டாள்.
“என்ன டி சொல்றே?” திவ்யாவுக்கு அதிர்ச்சி. முகில் என்ன மாறவே மாட்டானா? இந்தப் பெண்ணுக்கு ஏன்தான் இப்படிக் கொடுமை மேல் கொடுமையோ.
“கேட்கவே நாராசமா இருக்கு தானே? ஆனா அது தான் நடந்துச்சு...” என்று, கைகளுக்குள் தன் முகத்தைப் பொத்தி அழுத கண்மணியை தேற்ற திவ்யாவுக்கு தெரியவில்லை.
பிள்ளைகள் இரண்டும் இந்தக் களேபரத்தில் இவர்கள் பக்கம் வந்தது. “வொய் இஸ் கண்மணி அத்தை கிரையிங்?” என்றாள் நிரல்யா.
தமிழ் குட்டியோ, “மா... மா” என்று கண்மணியை தட்டிக் கொண்டிருந்தது.
திவ்யா இரண்டு பிள்ளைகளையும் எதையோ சொல்லி சமாளித்து, தொலைக்காட்சி போட்டுவிட்டு கண்மணி பக்கம் வந்தாள்.
“இங்க பார் கண்மணி... அழுகை எதற்கும் தீர்வாகாது. சமாளித்துப் போ. வாழ்க்கை ஈசி இல்லை. கொஞ்சம் காலம் எடுத்தாலும், கண்டிப்பா முகில் மனசு உன்பக்கம் வரும் டி”
ஆமாம், அவள் பட்ட துன்பத்தின் முன் இதெல்லாம் சாதாரணம். திவ்யாவின் பேச்சில் சற்றுச் சமாதானம் ஆனவள்,
“அது நடக்குமா திவ்யா?” என்றாள் பாவமாய்.
“கண்டிப்பா நடக்கும்... பார் என் நாக்கு கறு நாக்கு... நான் சொன்னா அப்படியே பலிக்குமாக்கும்.”
“க்கும்... இப்படித் தான் அந்த ஜீன்ஸை போடு, அப்புறம் பாரு மாற்றத்தைன்னு சொன்ன? முகிலோ என் வாழ்க்கையே மாத்துற வழியைப் பார்த்துட்டிருக்கான்...” என்று சொன்னபடி திவ்யா தலையைத் தட்டிவிட.
“ஆ வலிக்குது கண்மணி. முகில்ன்ற பேரை எடுத்திட்டு நானும் மூங்கில்னே இனி கூப்பிடுறேன். எத்தனை அருமையா இருந்தே தெரியுமா அந்த டிரெஸ்ல. ரசிக்கத் தெரியாத ஆள், உனக்கு அமைஞ்சிருக்கு. அதுக்கு நான் என்ன டி பண்ணுவேன்?” என்றாள் இவளும்.
தோழிகள் இருவரும் எதேதோ பேச, கண்மணி நல்ல மனநிலைக்கு மாறியபின் வீட்டுக்குத் திரும்பினாள்.

அவள் அன்று முகிலிடம் தன் காதலை சொன்ன பின் தன் பராமுகத்தை அவளிடம் காட்ட ஆரம்பித்தான் முகில். பாதி நாட்கள் மீட்டிங் என்று வெளியில் சாப்பிடுவதும், பிள்ளைக்கு மட்டுமாய் ஏதாவது வாங்கி வருவதுமாய்ச் சில சேட்டைகளை அவன் ஆரம்பிக்க கண்மணி அதைக் கண்டுகொள்ளாமல் விட்டாள்.
ஆனால் தன்னால் இதை எத்தனை நாட்கள் சமாளிக்க முடியும் என்பதில் அவளுக்கே ஒரு ஐயம். அவள் ஒருத்தி அங்கிருக்கிறாள் என்பதையே அவன் கண்டு கொள்வதில்லை. இவளாகச் சென்று வலிய ஏதாவது கேட்டாலும் பதில் சொல்லாமல் உதாசினப்படுத்தினான்.
இதற்கிடையில் திவ்யா வீட்டில், “என்ன திவ்யா, என் கூடப் பேசவே இப்போ எல்லாம் உனக்கு நேரமே கிடைக்க மாட்டேங்குதே? ஒன்னு நிரல்யாவுக்கு சொல்லித் தந்திட்டிருக்கேன்னு இல்லை சாப்பாடு கொடுக்கிறேன்னு சொல்றே. இதை எதையும் பண்ணாம நீ சும்மா இருக்கிறப்போ, ஃபோன் வந்திடுது. முழு நேரமும் கண்மணி பொண்மணின்னு ஃபோனில் பேசிக்கிட்டிருக்கே... அப்படி என்ன தான் பேசுவீங்க ரெண்டு பேரும்?” என்றான் கார்த்திக்.
“அவ பாவம் கார்த்தி. உங்க பிரண்டு முகிலும் அவளை ரொம்பவும் உதாசினப் படுத்துறாரு... அவர் அவக்கிட்ட பேசி நான் பார்த்ததே கிடையாது. பாவம் அவ மனசில என்னவெல்லாம் இருக்கும்? அதை யார்கிட்ட தான் சொல்லுவா?”
“முகிலை அவ்வளோ எளிதா மாத்திட முடியுமுன்னு எனக்கு தோணலை... அந்த பொண்ணு நிலை கொஞ்சம்...”
“ஆமா கார்த்தி, முகில் கூட வாழ அவளுக்கு இஷ்டம் இருக்கு, ஆனா என்னவோ தடங்கள். எல்லாத்தையும் என் கிட்ட சொல்லக் கூடாதுன்னு இருக்கா போல...”
“உன் கிட்ட சொல்லலைன்னா, அப்போ பெரிய கஷ்டம் எதுவும் இருக்காது திவ்யா, முகில் ஒன்னும் கொடுமைக்காரன் கிடையாது...”
“ஐய்யோ கொடுமைக்காரனும் இல்லை பாசக்காரனும் இல்லை... அவ பட்ட கஷ்டத்துக்கு முன்னடி இது பெரிய விஷயம் இல்லைன்னு சமாளிச்சிட்டு இருக்கா. ஆனா இது எத்தனை நாளைக்கு முடியும்? அவளும் சின்ன பொண்ணு தானே, அவளுக்கும் ஆசா பாசம் இருக்காதா?”
“என்ன கஷ்டம் அந்த பொண்ணுக்கு?”
“இருங்க நிரல்யாவை தூங்க வச்சிட்டு வந்து சொல்றேன், அது வரை பிக் பாஸ் பாருங்க...”

பிள்ளைக்கு எல்லாம் செய்து முடித்துவிட்டு அவன் புறம் வந்தவள் கண்மணி தன்னிடம் சொன்ன அவளின் வாழ்க்கை கஷ்டங்களை கார்த்திக்கு சொல்ல ஆரம்பித்தாள்.
‘கண்மணி பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில். அவள் தந்தை அந்த ஊரில் ஆட்டோ டிரைவர். இவளுக்கு இன்னொரு அக்கா, பேர் பூங்கோதை. அவங்க கல்யாணம் பண்ணி போனப்ப கண்மணி பள்ளியில் படிக்கும் வயசு தான்.
அக்கா திருமணம் முடிஞ்சு சில வருஷத்தில அப்பா ஒரு சாலை விபத்தில் இறந்து போக, அந்த குடும்பச் சுமை மொத்தமும் கண்மணிக்கு வந்திடுச்சு. அவங்க அம்மாவுக்கு அத்தனை விவரம் கிடையாது.
ஏதோ இட்லி வியாபாரம் செஞ்சு குடும்பத்தை ஓட்டிட்டு இருந்தாங்க. இதுக்கு நடுவில கண்மணியின் அக்கா பூங்கோதை அடிக்கடி, தன் அம்மா வீட்டுக்கு வந்து இருக்க ஆரம்பிச்சா.
கேட்டா, மாமா பிரச்சனை செய்றாருன்னு ஒரே புலம்பல். ஆனா மாமா அப்படி பட்டவர் இல்லை. கண்மணிக்கு அந்த விஷயம் நல்லாவே தெரியும். இவ அக்கா செய்ற ஆர்ப்பாட்டத்துல, வீட்டுச் செலவுக்கு பத்தாம, காலேஜ் படிக்கும் போதே வேலைக்கும் போய் செலவுகளை சமாளிச்சிருக்கா கண்மணி.’

‘அவங்க அக்கா இப்படி அடிக்கடி இவங்க வீட்டுக்கு வர்றது கண்மணிக்கு முதலில் சிரமம் இல்லாம தான் இருந்திருக்கு. ஆனா அவங்க வந்து இருக்க ஆரம்பிச்ச காரணமே வேற.
பூங்கோதை அக்காவோட வீட்டுக்காரருக்கு ஒரு அண்ணன், பேரு பாண்டியன். ஊரில் அடிதடி பஞ்சாயத்துன்னு சுத்திட்டிருக்கிற ஆள். சரியான ரெளடியாம். அவர் தம்பியே அவர் செய்கையால அண்ணன்கிட்ட நெருங்காம ஒதுங்கி இருந்திருக்காரு.
அப்படி இருக்கிறப்போ பாண்டியனோட பொண்டாட்டி திடீர்னு இறந்து போயிட்டாங்க. ஏதோ வெளியே தெரியாத நோய்னு எல்லார்கிட்டையும் பாண்டியன் சொல்லி நம்பவைச்சாலும், அந்தப் பொண்ணோட அப்பா போலீஸில இவர்மேல, கம்பிளைண்ட் பண்ணிட்டாரு, தன் மகளுடைய இறப்பில் சந்தேகம் இருக்குன்னு.
போலீஸும் விசாரணைன்னு பாண்டியனை கூப்பிட்டு போனாங்க தான். ஆனா கேஸ் போட்டும், கொஞ்ச நாள்ல திரும்பி வந்துட்டானாம். கண்மணி வேலைக்குப் போகிற வழியில் சில நாள் அவளைப் பார்த்தவன், அவளைக் கட்டிக்கணும்னு ஆசை பட்டிருக்கான்...’ என்று திவ்யா சொல்லவும்,
“சங்கூதர வயசில் சங்கீதாவா...” என்றான் கார்த்திக்கும்.
அவன் சொன்னதில் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிய படி, “சீரியஸா பேசும் போது காமெடி பண்ணாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்...” என்றாள் திவ்யா.

‘கண்மணியை தனக்குக் கட்டித் தரணும்னு பூங்கோதையிடம் வந்து கேட்டிருக்கான் அந்தப் படுபாவி பாண்டியன். அப்படிக் கல்யாண ஏற்பாடு செஞ்சா அவளுக்கு மதுரையில நல்ல வாடகை வர மாதிரி ஒரு கடையைச் சொந்தமாக்கி தரேன்னு சொல்லி ஆசைக் காட்டியிருக்கான்...” எனும்போதே,
கார்த்தி குறுக்கே புகுந்து, “ஒரு சொத்து வேணும்னு தங்கையைப் பணையம் வைக்க முடிவு பண்ணிட்டாங்களா?” என்றான் வேகமாய்.
“ஆமா கார்த்தி. அதுக்கு அவங்க புருஷன் ஒத்துக்கலைன்னு, அம்மா வீட்டுக்கு வந்துட்டாங்க... கடை தனக்குச் சொந்தமாக வேணும். அம்மாவுக்கு அப்புறம் கண்மணியின் பொறுப்பும் தனக்கு வந்துடக் கூடாதுன்னு எல்லாத்தையும் யோசிச்சு அந்த மகராசி எடுத்த முடிவு தான் இது.
வருஷக் கணக்கில் இவங்க மெதுவா, அவங்க அம்மா கிட்ட நகை நட்டுக் கேட்காத மாப்பிள்ளை பார்க்கணும், இரண்டாம் கல்யாணம்னாலும் பரவாயில்லை. கண்மணிக்கு அதுதான் நல்லதுன்னு பேசி பேசி மசிய வச்சிட்டாங்க.
அவங்க அம்மா தனக்குத் தெரிஞ்சவங்கக்கிட்ட அந்த பாண்டியனை பத்தி விசாரிக்க, போலிஸ் கேஸ் தெரிய வந்திருக்கு. அதைப் பத்தி பூங்கோதைக் கிட்ட அவங்க கேட்க, ‘அவர் தங்கமானவர் மா... தேவையில்லாமல் அவரைப் பிடிக்காதவங்க செஞ்ச வேலை இதுன்னு...’ சொல்லி அவங்க அம்மாவை சரி கட்டிட்டாங்க.
இப்படி போயிட்டிருக்க, அந்த ஆள் ஏற்கனவே கிழவன், இதில கல்யாணம் பேச இத்தனை வருஷமான்னு பூங்கோதை கிட்ட எகிறியிருக்காரு. இவளும் அதுக்கு அவரைச் சமாளிச்சு தங்கையைப் பொண்ணு பார்க்க வாங்கன்னு கூப்பிட்டிருக்கா.
கண்மணி அப்போ ஒரு ஸ்கூலில் வேலை பார்த்திட்டிருந்தா. ஒரு நாள் வேலை முடிச்சு வீட்டுக்கு வந்தவளை பொண்ணு பார்க்க வந்திருக்காங்கன்னு, வந்தவனைக் காட்டும் போது அந்தப் பாண்டியனை பார்த்தவளுக்கு அதிர்ச்சி.
எல்லாரும் இருக்கிறப்ப எதுவும் பேசாமல, அவங்க போனபிறகு, ‘என்னால அந்த ஆளைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு...’ சொல்லிட்டா.
அவ சொன்னதைக் கேட்ட அவங்க அக்கா இல்லாத ஆட்டம் போட்டிருக்காங்க, ‘உனக்காக நான் என் புருஷனை விட்டு வந்து இங்க எல்லாம் இழுத்துப்போட்டு செய்றேன், உனக்கு அத்தனைக் கொழுப்பா...’ அது இதுன்னு..
கண்மணி அவ அம்மாக்கிட்ட சொல்லி பார்த்திருக்கா, அந்த ஆள் ரெளடி, கொலைகாரன்னு. அவங்க அம்மா மூத்தப் பெண் சொன்ன வார்த்தையை நம்பி, ‘இல்லம்மா நாலு பேருக்கு நல்லது செஞ்சா இந்த ஊர் உலகம் அப்படித் தான் பேசும்’னு சொல்லி அவ வாயை அடைச்சிட்டாங்க.
எந்நேரமும் கண்மணிக்கும் அவ அக்காவுக்கும் இந்த விஷயத்தில சண்டை தொடர அவங்க அம்மாவுக்கு குழப்பம் ஆயிட்டு. பூங்கோதை இல்லாத சமயம் கண்மணிக்கிட்ட ஏன் சம்மதிக்க மாட்டேங்கிறன்னு கேட்க அவ பாண்டியனை பத்தி தனக்குத் தெரிஞ்சா எல்லா விஷயமும் சொல்லி அழுதிருக்கா.
ஸ்கூல் போகிற வழியில் வந்து நின்னுகிட்டு அவளை வம்பிழுக்கிறான். அவன் நிஜ வயசு ஐம்பதுக்கு மேலன்னு எல்லாத்தையும் சொல்லிட்டா. அக்காவுக்கு இது எல்லாம் தெரியும், ஏன் இப்படிச் செய்றான்னு தெரியலைன்னு அவங்க அம்மா மடியில் விழுந்து கதறின பொண்ணை அவங்க தேற்றியிருக்காங்க.
சரி அம்மா நமக்கு ஆதரவா இருக்காங்க, சமாளிச்சு இதுல இருந்து வெளியே வந்திடலாம்னு நினைச்சு இவ அன்னிக்கு தூங்கப் போக, அவங்க அம்மாவோ தூக்கத்தில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாங்க. இருந்த ஒரு ஆதரவும் போய் அநாதையாகிட்டா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top