Kuppaithotti

#1
குப்பைத்தொட்டி


"த! இப்ப நீ இஸ்கோலுக்கு போப்போறியா? இல்லியா?" உச்சஸ்தாயில் கத்தினாள் முத்தம்மா!

"ம்மா!"

"இந்த டக்கால்டி வேலல்லாம் என்னாண்ட ஓணா! சொல்ட்டேன்! மருவாதயா... இஸ்கோலுக்கு போ...."

"ம்மா! போம்மா!" என்று கோபமாகக் கூறினான் தங்கதுரை!

"அம்மாவாண்ட ராங் காட்டாத! ராங் காட்டாதன்னு எத்தினி தபா சொல்லிகீரன்!" என்று கத்திக் கொண்டே தங்கதுரையை விளாசினான் அவனுடைய தந்தை மாரியப்பன்!

"ஆ....! ஐயோ....! அடிக்காத நைனா! ஆ..... வலிக்கிது! ஆ...!" என்று துள்ளிக் குதித்து அங்கிருந்து ஓடினான் தங்கதுரை!

"த! சொம்மா கெட! புள்ளைய இப்டி அட்ச்சிகினே கெட்ந்தா அவன் எப்டி நீ சொல்ற பேச்சு கேப்பான்! அறிவில்ல...." இப்போது கணவனை வசை பாடினாள் முத்தம்மா!

"ஏண்டீ! ஆரப் பாத்து அறிவில்லன்னு கேக்கற! இம்மாந் நேரமா நீத்தான் அவன கயுவி கயுவி ஊத்திகினு கடந்த.... இப்ப என்ன சொல்றியா நீ.... உனுக்கு சப்போட்டு பண்ணேன் பாரு! என்னிய சொல்லணும்! சோத்தப் போடு! டூட்டிக்கு டைமாச்சி!" என்று அங்கலாய்த்தபடி தன் சீருடையை அணிந்து வந்தான் மாரியப்பன்.

மாரியப்பன் ஒரு தனியார் நிறுவனத்தில் குப்பைத் தொட்டி சுத்தம் செய்பவனாக பணிபுரிகிறான். அவனுடைய மனைவிக்கு இந்த வேலை பிடிக்கவேயில்லை! போயும் போயும் குப்பை வாறும் பணியா என்று வேதனைப் பட்டாள். அதனாலேயே எப்போது எங்கே குப்பைத் தொட்டியைப் பார்த்தாலும் அருவருப்பில் முகம் சுளித்துக் கொள்வாள். அவள் அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்து தன் கணவனின் பணிச்சுமையை தன்னால் முடிந்தவரை குறைக்க முயற்சி செய்யும் சராசரி ஏழை குடும்பத்து இல்லத்தரசி!

இவர்களுக்கு மூன்று குழந்தைகள்! மூத்தவன் பத்தாவது படிக்கும் தங்கதுரை! இரண்டாமவன் ஏழாவது படிக்கும் தர்மதுரை! மூன்றவதாக கடைக்குட்டியாக பிறந்த ஒரே மகள் சங்கீதா! அவளுக்கு ஐந்து வயதாகிறது.

ஒரே பெண்ணாகப் பிறந்ததாலும் வீட்டின் கடைசி குழந்தையென்பதாலும் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் சங்கீதாவின் மேல் அத்தனை பாசமாக இருந்தனர். அவர்கள் அவள் மேல் அதீத பாசமாக இருப்பதற்கு அது மட்டும் காரணமல்ல! அவளுக்கு சமீபகாலமாக கண்பார்வையில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது! அதனை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிட முடியுமென்றாலும், அதற்கு ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகும் என்பதுதான் அவர்களைப் பொருத்தவரை வருத்தமான விஷயம்!

மாரியப்பன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை ஒரு சராசரி "குடிமகன்!" ஆமாம்! வேலைக்குப் போகாமல் மனைவியின் சம்பளத்தை உரிமையாய் தட்டிப் பறித்துக் கொண்டு போய் குடிப்பது, எப்போதாவது கிடைக்கும் வேலையைச் செய்துகொண்டு அப்படி கிடைத்த சம்பாத்தியத்தையும் குடிக்க செலவு செய்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை கேடு கெட்ட வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டே கன்னாபின்னாவென்று போட்டு அடிப்பது என்று நாம் எல்லோருக்கும் அறிமுகமான ஒரு சராசரி ஏழை குடும்பத்து ஆண்மகன்.

அவனுடைய மனைவி அவனையும் அவனுடைய மூன்று பிள்ளைகளையும் தன்னுடைய அன்பாலும் சகிப்புத் தன்மையாலும் கட்டி மேய்க்கும் சராசரி ஏழைப் பெண். அவர்களின் மக்கள் இருவரும் அருகிலிருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார்கள். அதில் சின்னவன் தர்மதுரை வீட்டின் நிலை புரிந்து நடப்பவன்! நன்றாகப் படிப்பவன்! ஆனால் பெரியவன் தங்கதுரை கொஞ்சம் தன்னலம் பார்ப்பவன்! படிப்பில் அத்தனை விருப்பம் கிடையாது! அவனுக்கு நன்றாக சாப்பிட வேண்டும்! சாப்பாடு ஒன்றுதான் வாழ்க்கை என்று நினைப்பவன். பள்ளியில் போடும் சத்துணவுக்காகத்தான் பள்ளிக்கே செல்கிறான். சில நாட்கள் வீட்டில் சரியான சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் பிச்சை எடுக்கவோ, குப்பையிலிருந்து பொறுக்கியெடுத்தோ, அவ்வளவு ஏன்? கடைகளில் திருடித் தின்னவும் தயங்க மாட்டான். ஏனென்று கேட்டால், "போம்மா! பசிக்கிது! அதான்!" என்று விட்டேற்றியாக பதிலிருத்துவிட்டு ஓடிப்போவான். அவனுடைய புத்தகங்கள் பாதி நாட்கள் குப்பைத் தொட்டியருகில்தான் கிடக்கும்! முத்தம்மாவோ தர்மதுரையோதான் முகம் சுளித்தபடியே புத்தகங்களை பொறுக்கியெடுத்துக் கொண்டு வருவார்கள்.

ஆனால் இதெல்லாம் இப்போது மாறிவிட்டது!

மூன்றாவது குழந்தை சங்கீதா, பிறந்ததிலிருந்தே கொஞ்சம் நோஞ்சான்தான். வயதுக்குச் சரியான வளர்ச்சி இல்லை. தவழ்வது, நடப்பது, பேசுவது எல்லாவற்றிலும் தாமதம்! குறைப் பிரசவத்தில் பிறந்ததால் இப்படி இருக்கிறாள் என்று விட்டுவிட்டனர். ஆனால் சமீப காலமாக அவள் நல்ல வெளிச்சத்திலும் பொருட்களை தடவிப் பார்த்து எடுப்பதும், அருகில் இருப்பவர்களையும் அடையாளம் தெரியாமல் தொட்டுப் பார்த்தும் குரல் கேட்டும் தெரிந்து கொள்வதைப் பார்த்த பின்னரே அவளுடைய நிலை அவர்களுக்குப் புரிந்தது.

அடித்துப் பிடித்துக் கொண்டு மருத்துவரிடம் சென்றால் குழந்தை வயிற்றிலிருக்கும் போதிலிருந்தே சரியான ஊட்டச் சத்து இல்லை என்றார் மருத்துவர். அதுவும் மாரியப்பனின் குடிப் பழக்கமே இதற்கு மூல காரணம் என்று அவர் கூறியதைக் கேட்டதிலிருந்து துடித்துப் போனான் அவன்! ஐயோ! தன்னாலேயே தன் ஆசை மகளின் பார்வை பறிபோய்விட்டதே என்று மிகவும் வருந்தினான். அன்றிலிருந்து குடிக்கு முழுக்குப்போட்டுவிட்டு ஒழுங்காக இருக்கத் தொடங்கினான்.

மகளின் பார்வை திரும்ப வேண்டுமானால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்! அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் வேண்டும்! அதற்காக வேலைக்குப் போய் சம்பாதிக்கத் தொடங்கியிருக்கிறான் அவன்.

தன் தங்கையின் பார்வைக்காக அப்பா திருந்தியதைப் பார்த்த தங்கதுரைக்கு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதனால் நான் பள்ளிக்கூடம் போகாமல் வேலைக்குப் போகிறேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான். ஆனால் முத்தம்மாவோ, நீ இப்போது வேலைக்குப் போனால் உனக்கு கூலி வேலைதான் கிடைக்கும்! அதுவும் உங்கப்பா செய்யும் குப்பையள்ளும் வேலைதான் கிடைக்கும்! படித்து முடித்தால் நல்ல வேலை கிடைக்கும்! அதனால் கஷ்டமோ நஷ்டமோ இப்போது பள்ளிக்கூடம் சென்று நன்றாகப் படித்து முடி! என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

அப்பாவிடம் அடிவாங்கிய தங்கதுரை தன் புத்தக மூட்டையை எடுத்துக் கொண்டு தங்கையிடம் வந்தான்.

"அண்ணன் இஸ்கோலுக்கு போய்ட்டு வந்துர்றேன்! நீ டானிக்கெல்லாம் ஒயிங்கா குடி சங்கீ! அண்ணனுக்கு டாட்டா சொல்லு!"

"டாட்டாண்ணே! இஸ்கோலேந்து வரசொல்லோ முட்டாய் வாங்க்கினு வரியா?"

"வாங்க்கினு வரன் சங்கீ! டாட்டா!" என்றவன்,

"ம்மா! போய்ட்டு வரன்!" என்று முறைத்தபடி கூறிவிட்டுப் போனான். அவனுடன் தம்பி தர்மதுரையும் தங்கையிடம் கொஞ்சிவிட்டு கிளம்பினான்.

"தொர சாப்ட மாட்டானோ?" என்றான் மாரியப்பன்.

"அவன் அப்டித்தான்! நீ கௌம்பு!" என்று கணவனை கிளப்பினாள் முத்தம்மா.

மாரியப்பன் கிளம்பிச் சென்றதும், வீட்டை பூட்டிக் கொண்டு மகளையும் அழைத்துக் கொண்டு தன் வேலைக்குப் புறப்பட்டாள் முத்தம்மா.

மாலை பள்ளியிலிருந்து வந்த தங்கதுரையும் தர்மதுரையும் கூடிக் கூடிப் பேசுவதும், தங்களுக்குள் எதையோ மறைத்து மறைத்து எடுத்துச் செல்வதுமாக இருந்ததைப் பார்த்த முத்தம்மாவுக்கு சந்தேகமாக இருந்தது. கொஞ்ச நாட்களாக ஒழுங்காக இருந்தவன் திரும்பவும் திருடத் தொடங்கிவிட்டானா என்று பயமாக இருந்தது. தான் கெட்டது போதாதென்று தம்பியையும் கெடுத்துவிட்டானா என்று வேறு கவலையாக இருந்தது.

அவனிடம் கேட்டாலும் ஒழுங்காக பதில் சொல்ல மாட்டானே! என்று வேறு வருந்தினாள். ஆனால் அவளுக்கு அந்த வருத்தத்தை மகன்கள் தரவில்லை! அவர்களே நேராக வந்து முத்தம்மாவிடம் பேசினார்கள்.

"ம்மா! தங்கச்சி ஆப்ரேசன்க்கு எவ்ளோ துட்டும்மா வோணும்!"

"ஏன்டா! உன்னாண்ட கீதா?"

"அக்காங்ம்மா! எவ்ளோ துட்டு வோணும்! அத்த மொதல்ல சொல்லு!"

"அடி செருப்பால! திரும்பியும் திருடறியா? எத்தினி தபா சொல்லிகீரன் திருடாத... திருடாதன்னு..." சொல்லிக் கொண்டே அடிக்கத் தொடங்கினாள்.

"ம்மா! திருடலம்மா.... கீய கெட்ச்சது.... இத்தப் பாரு...." என்று அவளுடைய கையில் எதையோ திணித்தான்.

தன் கையில் அவன் வைத்ததை கவனமாகப் பார்த்தாள். முதலில் எதுவும் புரியவில்லை! சில நிமிடங்கள் கழிந்த பின்னரே அது என்னவென்று அவளுக்கு புரிந்தது. சிறியதாக இருக்கும் வைர மூக்குத்தி! பளபளவென்று கண்ணைப் பறித்தது.

"டேய்! இது எங்கடா கெட்ச்சது? மெய்யாலுமே கீயதான் கெட்ந்துச்சா! டே! பொய் சொல்லாத நைனா..." என்று மிரட்டலாக ஆரம்பித்து கெஞ்சலாக கேட்டாள்.

"ம்மா! மெய்யாலுமே கீயதான் கெட்ந்துச்சும்மா!" என்றான் சின்னவன் தர்மதுரை!
"எங்கடா கெட்ந்துச்சு?"

"குப்பத்தொட்டிலம்மா..." என்றான் தங்கதுரை!

"வ்வே... குப்பலயா... போயும் போயும் குப்பய நோண்டினீங்களாடா ரெண்டு பேரும்... கர்மம்... கர்மம்... ஊட்டாண்ட வராதீங்கடா... என்று தன் வசவை தொடங்கினாள். தர்மதுரை அவளை சமாதானப்படுத்தி நடந்ததைக் கூறினான்.

"ம்மா! இஸ்கோல்லேந்து வர சொல்லோ அம்மங்கோயிலாண்ட பெர்சா குப்பதொட்டி கீதுல்ல! அது பக்கத்தில ஐரு பயய பூவெல்லாங் கடாசிருந்தாருல்ல... அதுலதான் இருந்துச்சி.... நாங்க நட்ந்து வரசொல்லோ பளபளன்னு டாலடிச்சிதா... இன்னான்னு பாக்க சொல்லோ இது கெட்ச்சிதும்மா.... " என்றான் தர்மதுரை.

"இத்த வெச்சி தங்கச்சி ஆப்ரேசன நல்லபடியா முட்சிறலாந் தானேம்மா..." என்றான் தங்கதுரை.
 
#2
முத்தம்மா ஏதோ சொல்லத் தொடங்கும் முன்,

"ஆத்தா! நீ கண்ணத் தொற்ந்துட்ட.... எம்பொண்ணு கண்ண நீத்தான் சரியாக்கணும்...எங்க குப்ப வார்ர வேலைல எவ்ளோ துட்டு சேக்க முடியும்னு கஸ்ட்மா இருந்துச்சு... நீ காப்பாத்திட்ட ஆத்தா..." என்று கூவினான் மாரியப்பன்.

"யோவ்... வோணாய்யா.... எந்த பொறப்புல இன்னா பாவம் செஞ்சோமோ... நீ குப்ப வாரிகினு கெடக்கற... நம்ம பொண்ணுக்கு டோரிக் கண்ணா பூட்சி! இப்ப ஆத்த நெகைய அட்சினு போனா நம்ம புள்ளிங்களுக்கும் எத்னா ஆய்டும்யா!" என்றாள் கண்களில் கண்ணீருடன்.

மாரியப்பன் அதிர்ந்தான். தர்மதுரையும் தன் அம்மா கூறுவது சரியென்றான். ஆனால் தங்கதுரை வேறு மாதிரி கூறினான்.

"ம்மா... நா இன்ன வோணும்னேவா ஆத்தா நெகைய அட்சினு வந்தன்.... கீய கெட்ந்த நெக தானேம்மா... ஆத்தாவா பாத்து நம்க்கு ஆப்ரேசனுக்கு குட்திருக்கும்மா..." என்றான்.

"இல்ல கண்ணு... ஆத்தா நெகன்னு கண்டுகினப்றம் இப்டி பேசக் கூடாது நைனா... வா... கோயிலாண்ட போய் ஐராண்டயே குட்த்திறலாம்!" என்றாள்.

ஆனால் தங்கதுரை தான் செய்வது சரியென்று வாதாடினான். அப்போது குழந்தை சங்கீதா,

"அண்ணே! பக்கத்து வீட்டு பாயம்மா கூட சொல்ச்சி... தப்பு பண்ணா சாமி கண்ண குத்தும்னு... நா எதோ தப்பு பண்ணிருக்கேன் ... அதான் சாமி எங்கண்ண குத்திருச்சி... அண்ணே... நீயாச்சி தப்பு பண்ணாதண்ணே... இல்லாங்காட்டி சாமி உங்கண்ணையும் குத்திருண்ணே.... " என்றாள் அழுகையுடன்!

"ஆமாண்ணே... அந்த ஆத்தா நமக்கு உதவி பண்ணணும்னா வேற எப்டியாச்சும் பண்ணும்ணே... நம்ம ஆத்த நெகய திருப்பி குட்த்திரலாம்ணே..." என்றான் தர்மதுரை.

இதைக் கேட்ட தங்கதுரை மௌனமாகிவிட்டான். மகளை வாரியணைத்து அழுத முத்தம்மாவை சமாதானப் படுத்திய மாரியப்பன் அனைவரயும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றான்.

ஐவரும் கோவிலை அடைந்த போது அங்கே பரபரப்பாக இருந்தது. அம்மனுக்கு புஜை செய்யும் அர்ச்சகரே அம்மனின் மூக்குத்தியை திருடிவிட்டதாக எல்லாரும் பேசிக் கொண்டனர்.

மாரியப்பன் நேராக அர்ச்சகரிடம் சென்றான்.

"சாமி! நேத்து அம்மனுக்கு மஞ்சக் காப்பு போட்டிருந்திச்சுல்ல... நீங்க மஞ்சளோட சேத்து இந்த மூக்குத்தியும் எனக்கு ப்ரசாதமா தன்ட்டீங்க.... அத்த குட்த்துட்டுப் போலான்னு வந்தோம் சாமி..." என்று கூறி அம்மனின் மூக்குத்தியை அவரிடம் தந்தான்.

"அம்மா.... மகமாயி... என்னிய காப்பாத்திட்டம்மா..." என்றபடி அதை வாங்கிக் கொண்டார் அர்ச்சகர்!

அர்ச்சகர் மாரியப்பனுக்கு நன்றி சொல்ல, கோவில் தர்மகர்த்தா மாரியப்பனைப் பற்றி விசாரித்தார். அவரிடம் அவன் தன்னுடைய குடும்பத்தைப்பற்றி கூறி அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தான். தர்மகர்த்தா குழந்தை சங்கீதாவைப் பார்த்துவிட்டு, யாருக்கோ போன் செய்தார். பின்னர் மாரியப்பனிடம் கூறினார்.

"கவலப்படாத மாரி! உம்பொண்ணுக்கு ஆப்ரேஷன் செய்ய நானாச்சு! நாளைக்கு காலைல நா சொல்ற எடத்தில போய் இந்த டாக்டரப் பாரு! கொழந்தைய அவருகிட்ட காட்டு! உனக்கு வேண்டிய உதவிய அவரு பண்ணுவாரு! இன்னும் ஒரு வாரத்தில ஒனக்கு ஒரு பைசா செலவில்லாம கொழந்தைக்கு ஆப்ரேஷன் ஆய்டும்! வர ஆடி மாசம் திருவிழாவ கொழந்த கண்குளிர பாப்பா! இது நிச்சயம் நடக்கும்!" என்று கூறி ஒரு விசிட்டிங் கார்டை அவனிடம் தந்தார் அவர்!

கண்களிலிருந்து வழியும் ஆனந்தக் கண்ணீருடன் அம்மனை வணங்கிவிட்டு வெளியே வந்தார்கள் மாரியப்பன் குடும்பத்தினர். அவர்களின் கண்களுக்கு இப்போது அந்த குப்பைத்தொட்டி அழகாய்த் தெரிந்தது!♦♦♦♦♦♦♦♦♦♦♦♦​
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top