• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Madhumitha's Vallamai Thaaraayo 30

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
வல்லமை தாராயோ 30 – மதுமிதா

அதிகாலை நேரம் தான் மனதுக்கு எத்தனை இனிமையைத் தருகிறது. முதல் நாளின் களைப்பைப் போக்கி அன்றைய நாளில் செயல்படும் சக்தியைப் பெற நான்கு மணிக்கே மொட்டைமாடிக்குச் சென்றவள் நடைப்பயிற்சி மூச்சுப்பயிற்சிகளை முடித்து விட்டு ஐந்து மணிக்கு கீழே இறங்கி வந்தாள். வாசலில் கோலம் போட்டுவிட்டு சமையல் செய்துகொண்டிருந்தாள்.

ஜன்னலின் வழியே மேலிருந்து இறங்கும் குழாயில் கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொறித்து குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த இரு குருவிகள் கீச் கீச் என்றன. மெதுவாக அவற்றைப் பார்த்தாள். டிவி கேபிள் வயர்களின் மேல் அமர்ந்து ஊஞ்சலாடுவது இருப்பதும், காம்பவுண்ட் சுவரில் உட்காருவதும், பறந்து சென்று சின்ன புழுவைப் பிடித்துக்கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டுவதுமாக இருந்தன. குஞ்சுகளோ அதிபுத்திசாலிகள். நார் நாராகப் பரப்பி மெத்து மெத்தென்று கூடு கட்டி வைத்திருந்தன. மூன்று குஞ்சுகள் கண்களைத் திறக்காமல் கீச் கீச் என்று சொல்லிக் கொண்டு இருந்தன. அம்மா குஞ்சுகளுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டுப் போகும் போலிருக்கிறது. வேறு சத்தம் ஏதும் கேட்டால் குஞ்சுகள் சத்தமே இல்லாமல் தலையை உள்ளே இழுத்துக்கொண்டு அமைதியாக இருக்கும். அம்மாவின் சத்தம் கேட்டுவிட்டால் போதும் கீச் கீச் என்று வாய் திறந்து மூடுவது மட்டும் தெரியும். அலகில் எடுத்து வந்த புழுவை கொடுத்துவிட்டு தாய்ப்பறவை பறந்து போய்விடும். இந்த பால்கனி குழாய் இப்போது இப்படி பறவைகளின் சரணாலயமாகி இருப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

இதுவரையில் ஐந்து பறவை ஜோடிகள் வந்து குடித்தனம் இருந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்து வளர்த்தெடுத்துக்கொண்டு போயிருக்கின்றன. போட்டோ எடுக்கும் அளவில் அமைப்பு இல்லை.

கிரைண்டரில் இட்லிக்கு அரைக்க நனைய வைத்திருந்த அரிசியைப் போட்டுவிட்டு வந்தாள். காலம்தான் என்னென்ன மாற்றங்களைச் செய்கிறது. ஆட்டுரல் நிலையாக இருக்க குழவியை ஆட்டி இட்லிக்கு மாவரைத்த காலம் போய், இப்போது உரல் சுற்றிக்கொண்டிருக்கிறது. குழவி நிலையாக இருக்கிறது. இடது கை குழவியைச் சுற்ற வலது கையால் மாவை தள்ளிக்கொண்டே இருந்த காலம் பல வருடங்களுக்கு முன்பே எப்போதோ மாறிவிட்டது. மாவில் கொஞ்சம் தண்ணீர் தெளித்துவிட்டு வந்து, ஸ்டவ்வை நிறுத்தி, பொங்கிய பாலை இறக்கி வைத்தாள். கையைத் துடைக்கத் துணியைத் தேடியவள் நைட்டியிலேயே துடைத்துக் கொண்டாள். சென்னையில் இதேபோல இப்படி துடைத்தபோது குழந்தைகள் சின்னப்புள்ளை போல இப்படித் துடைக்கிறீங்க என்று கேலி செய்தது நினைவுக்கு வந்தது. சேலை என்றால் முந்தானையில் துடைத்துக்கொள்வது பழக்கமாகி இருந்தது.

அடைக்கு ஊற வைத்ததை இன்னும் இட்லிக்கு மாவு அரைப்பது முடியவில்லை என்று கிரைண்டரில் போடாமல் மிக்சியில் போட வந்தாள்.

கா கா என்று சத்தம் கேட்டது. ஒரு காகம் குரம் கொடுக்க இன்னொரு காகம் கா கா என்றது. இன்னொன்று இன்னொன்று இன்னொன்று என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது போல பல காகங்களின் குரல்கள் திடீரென்று கேட்டதும் என்ன என்று கவனித்தாள். குரல் வீட்டின் முன் வாசல் அருகே கேட்டது. முன் வாசலுக்கு வந்து படியில் இறங்கிப் பார்ப்பதற்கு முன்பே முப்பதுக்கும் மேற்பட்ட காகங்கள் எலக்ட்ரிக் வயர்களிலும் மொட்டை மாடி சுவரிலும், காம்பவுண்ட் சுவர் என்று மாறி மாறி இங்கும் அங்கும் பறந்தபடியே குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. முன் கேட்டைத் திறக்க வந்து நின்றாள். காகங்கள் நிறுத்தாமல் கா கா என்று குரல் கொடுத்துக்கொண்டே இருந்தன. சாலையில் நடுப்பகுதியில் கொத்தாக காகத்தின் இறகுகள் சில இருந்தன. என்னதிது என்று நிதானித்துப் பார்த்தால், ஒரு காகம் இறந்திருக்க வேண்டும், மற்ற காகங்கள் அதைப் பற்றி பேசுகின்றன என்று புரிந்தது. மேலே இருந்து தவறி கீழே விழுந்து விட்டதா? ஏதேனும் வாகனத்தில் அடிபட்டு கீழே விழுந்துவிட்டதா? எதுவும் தெரியவில்லை.

மறுபடியும் கீழே கிடந்ததை கூர்ந்து பார்த்தால் உடலோ காலோ முகமோ எதுவும் தெரியவில்லை. இறகுகள் மட்டுமே இருந்தன. தொடர்ந்து காகங்களின் குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தது. இன்னும் காகங்கள் பறந்து வந்து கொண்டிருந்தன. சுரேகா முன் கேட்டைத் திறந்ததும் காகங்கள் இந்த வீடு எதிர்வீட்டு என்று இங்கும் அங்கும் பறந்து மொட்டை மாடி சுவரில் உட்கார்ந்துகொண்டு குரல் கொடுத்தன. கேட்டை மூடிவிட்டு உள்ளே வந்து விட்டாள். சிறிது நேரம் அவளுடைய உடலும் மனமும் அதிர்ந்துகொண்டிருந்தது. மனிதர்களின் மரணத்தில் உறவுகளும் நண்பர்களும் கூடுவதுபோல இவை கூடி இருக்கின்றன. இருபது நிமிட கா கா கதறல் கரைதலுக்குப் பிறகு அமைதி.

சமைத்துவிட்டு மீதி வேலையை முடித்தபோது கூட சுரேகாவுக்கு இந்த காகங்களின் குரலே காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. மனது சரியில்லை. வேலை முடிந்ததும் லைப்ரரிக்குப் போய்வரணும் என்று நினைத்துக் கொண்டாள்.

ஒரு காகத்துக்கு ஆபத்து என்று இத்தனை காகங்கள் வந்தன. இப்போது இல்லை. அவைகளுக்கு இறந்த காகத்தின் நினைவு இனி இருக்குமா?

மனிதனுக்கு ஒரு ஆபத்து என்றால் மனிதர்களின் ஆதரவு இந்த காலகட்டத்தில் கிடைக்கிறதா… இதுபோல சில மணி நேரங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகு காகங்கள் காலைந்து போய்விடுவதுபோல, மனிதர்களும் கலைந்து போய் மறந்தும் போய்விடுகிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு இல்லாத ஆதரவா? அந்த இரவில் ஒளிர்ந்த கலகக்குரல்களின் மொபைல் ஒளி உலகமெல்லாம் பெரும் ஆதரவைப் பெற்றுத் தரவில்லையா? ஆனால் சில நாட்களில் என்ன ஆயிற்று?

போன் சத்தம் அவளை நனவுலகுக்கு கொண்டு வந்தது.

அக்கா லைப்ரரிக்கு வர முடியுமா

வர்றேன்மா

நூலகர் முத்துலட்சுமிதான் பேசினாள்.

போனை வைத்ததும் மறுபடியும் போன் வந்தது.

தங்கபாண்டியன் எம் எல் ஏ பேசினார்.

என்னம்மா மனுவை கலெக்டர் ஆபீசில் குடுக்கச் சொன்னேனே குடுத்தீங்களா

உங்களுக்கு தானே மனுவைக் குடுத்தோம். நீங்கதானே அதைப் பார்த்துட்டு கலெக்டரிடம் பேசறேன்னு சொன்னீங்க.

என் வேலையை நான் செய்தாச்சு. நீங்க உங்க வேலையைச் செஞ்சீங்களா

என்ன வேலையைச் சொல்லறீங்க. இருபத்தி ஆறு வருஷமா செஞ்சுட்டுதானே இருக்கிறோம்

நான் சொன்னதை செஞ்சீங்களா

…………………………………….

என்னம்மா சத்தத்தைக் காணும்

இல்லீங்க… வந்து… என்ன செய்யச் சொன்னீங்க

நீங்க உங்க டிபார்ட்மெண்ட்டிலிருந்து லைப்ரரிக்காக இடம் கேட்டு குடுக்க வேண்டிய மனுவை குடுத்தீங்களா

அன்னிக்கே லைப்ரேரியன் விருதுநகருக்குப் போய் குடுத்துட்டாங்களே…

முதல்ல அவங்க கிட்ட கேட்டுட்டு சொல்லுங்க. இப்பதான் டிஆர்ஓட்ட கேட்டேன். உங்க டிபார்ட்மெண்ட்டிலிருந்து மனு வரலைன்னு சொல்லறாங்க. என்ன விபரம்னு கேட்டுட்டு உடனே என்னைக் கூப்பிடுங்க.

டக் கென்று போனை வைத்து விட்டார்.



இதென்ன வம்பாகப் போச்சு. அன்னிக்கே கொடுத்தாச்சுக்கா என்று லைப்ரேரியன் சொன்னது நினைவுக்கு வந்தது. நூலகத்துக்குப் போனாள் சுரேகா.

என்னம்மா அவசரமா வரச்சொல்லி போன் பண்ணினீங்க?

அக்கா எம் எல் ஏ அன்னிக்கு சொன்னாருல்ல. நாம குடுக்கிற மனுவை நாம கலெக்டர் ஆபீசில் குடுக்கறதுக்கு முன்னாலேயே அவர் நம்ம மனுவை வெச்சு, அவரோட லெட்டர்பேடில் எழுதி குடுத்துட்டாருக்கா. நான் அந்த மனுவைப் பார்த்தேன். சொன்னத அப்படியே செஞ்சுட்டாருக்கா.

ரொம்ப நல்ல விஷயம்மா. நீங்க போனை வெச்சதும் எம் எல் ஏ பேசினாரு. கோபமா பேசினது போல இருந்துச்சு. நம்ம பக்கம் இருந்து மனு குடுத்தாச்சுன்னு சொன்னா. நீங்க மனுவை இன்னும் குடுக்கலைன்னு சொல்லறாரே.

இல்லக்கா நான் தான் நேரா போய் குடுத்தேன்

நீங்க ஏன் போனீங்க. டிஎல்ஓ (மாவட்ட நூலக அலுவலர்) தானே போய் கொடுக்கணும்.

இல்லக்கா அவரு லீவுல இருக்குறாரு. அதனால நான் போய் குடுத்துட்டேன்.

யாருட்ட குடுத்தீங்கம்மா. இப்பதான் எம் எல் ஏ போன்ல ’டிஆர்ஓட்ட குடுத்தீங்களா? இப்பதான் டிஆர்ஓட்ட பேசினேன். உங்க டிபார்ட்மெண்ட்டிலிருந்து மனு வரலைன்னு சொல்லறாங்க. என்ன விபரம்னு கேட்டுட்டு உடனே கூப்பிடுங்க’ ன்னு சொல்லிட்டு டொக்குன்னு போனை வெச்சுட்டாரும்மா.

ஆமா அக்கா அவரு சொன்னாப்புல மனுவை டிஆர்ஓட்ட குடுங்கன்னு நீங்க சொன்னது ஞாபகம் இருக்கு. அங்கே ஒருத்தங்க கிட்ட டிஆர்ஓ எங்கே இருக்காருன்னு தான் கேட்டேன். என்னன்னு கேட்டாங்க. டிஆர்ஓட்ட மனு குடுக்கணும்னு சொன்னவுடனே, அவர் இப்பதான் வெளியே போனாரு, வர்றதுக்கு இன்னும் ஒரு மணிநேரம் ஆகும்னு வேற இடத்தக் காட்டுனாங்க. அவங்க என்னைய திருப்பி விட்டுட்டாங்கக்கா. அவங்க சொன்ன இடத்துலதான் குடுத்துட்டேன்.

சரி இருங்க

எம் எல் ஏ க்கு போன் செய்தாள். இந்த விபரத்தைச் சொன்னாள்.

அவரோ போனை வைங்க நான் டிஎல்ஓ ட்டயும், டிஆர்ஓட்டயும் பேசிட்டு சொல்லறேன் என்று போனை வைத்து விட்டார்.
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
இப்ப என்ன பண்ணறதுக்கா

அதான் நானும் யோசிக்கிறேன். அவரே வந்து உதவறேன்னு சொன்னாலும், நம்ம டிபார்ட்மெண்ட்டில் இவ்வளவு மெத்தனமா இருந்தா என்ன பண்ணறது. இத்தனை வருஷமா நாம கேட்டுட்டு இருந்தோம். மேலிடத்துல யாரும் ஒத்துழைக்கல. இப்போ முதல் முதலா நம்ம தொகுதி எம் எல் ஏ நம்ம லைப்ரரிக்கு வேலை பண்ணறேன்னு கேட்டும், இங்கே ஒத்துழைக்கலைன்னா என்ன பண்ணறது. அவருக்கு என்ன பதில் சொல்லறாங்கன்னு பார்ப்போம். நீங்க டிஎல்ஓ நம்பர் இருந்தா குடுங்க. நான் பேசறேன்.

அவரு சேலத்துக்கு எங்கேயோ போயிருக்கிறாருக்காருக்கா.

போன் வந்தது. எடுத்தால் எம் எல் ஏ.

அம்மா கலெக்டர் அன்னிக்கே சரின்னு சொல்லிட்டார். இப்போ டிஎல்ஓ, டிஆர்ஓ ரெண்டு பேருட்டயும் பேசியாச்சு. இடத்தைப் பாத்துட்டு உடனே முடிவு பண்ணலாம்னு சொல்லி இருக்கிறாங்க.

அப்போ இடம் முடிஞ்சிடுமா. அந்த இடத்துல நீர்ப்பிடிப்புன்னு சொல்லிட்டாங்கன்னா. 25 செண்ட் வேற கேட்டிருக்கிறோம். அஞ்சு இல்லைன்னா பத்து செண்ட் கேட்டிருக்கலாம்.

அன்னிக்கு சொன்னதைதான் இன்னிக்கும் சொல்லறேன். நாம கேட்கிறது கேட்கலாம். அவங்க வந்து இடத்தைப் பார்க்கட்டும். அவ்வளவு இடம் கொடுக்க முடியாது. அஞ்சு செண்ட் தான் கொடுக்க முடியும்னு அவங்க சொல்லட்டும். இடம் கிடைச்ச உடனே நம்ம சட்டமன்ற உறுப்பினர் ஃபண்ட்டில் கட்டடம் எடுக்கலாம்.

நிஜமாதான் சொல்லறீங்களா. சென்னை மக்களுக்கு கன்னிமரா, அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம்னு இருக்கு. நம்ம மக்களுக்கு அது மாதிரி வர வாய்ப்பு இருக்கா

வரும்மா. நம்ம தொகுதிக்கு செய்ய வேண்டியது என்னோட கடமை. இந்த மார்ச் மாதம் எட்டாம் தேதி மகளிர் தினம் வருதே. அதுக்குள்ள இடத்தை வாங்கி கட்டத்துக்கு அஸ்திவாரம் போட்டுடலாம்.

மிகவும் நிதானமாகப் பேசினார். முதல் இரண்டு முறை பேசிய எரிச்சலும் கோபமும் தொனித்த குரல் இப்போது இல்லை.

நன்றிங்க. உங்களைப்போல மக்களுக்காக பேசறவங்க, சொன்னதை சொன்னபடி செய்யறவங்க இந்தியா முழுக்க இருந்தா நம்ம தேசம் எவ்வளவு நல்லா இருக்கும். இது மட்டும் நடந்துட்டா உங்களைப் பற்றி நிச்சயம் எழுதுவேன். கவிதைத்தோழி சுமதிகிட்ட லைப்ரரி பத்தி பேசுனப்போ…

யாரவங்க சுமதி…

தமிழச்சி தங்கபாண்டியன்… தங்கம் தென்னரசு அவங்களுடைய அக்கா… நாங்க அவங்களை சுமதின்னு தான் சொல்லுவோம்.

அரசண்ணனோட அக்காங்களா… அண்ணனைத் தெரியுமா உங்களுக்கு…

ஆமாங்க. எனக்கு அவரைத்தெரியும். அவருக்கு என்னைத் தெரியும்னுதான் நினைக்கிறேன். தோழி சுமதி என் மகளுடைய திருமணத்துக்கு நம்ம ஊருக்கு அவங்க வந்திருந்தாங்க. அவங்க தம்பியை சுமதியின் மூணு புத்தக வெளியீடுகள், அப்புறம் அவங்க மகளுடைய திருமண ரிசப்ஷன்னு நான்கு முறை பார்த்திருக்கிறேன். வணக்கம் நலம்தானேன்னு பேசினோம். அன்பா புன்னகையோடு வரவேற்பார். உங்க லைப்ரரி பற்றி தம்பிட்ட பேசேன் என்று சுமதி சொல்லி இருக்கிறாங்க. அந்த சமயத்தில் ஆட்சி மாறிட்டதால அவங்க கிட்ட பேச முடியல. இல்லைன்னா அவரும் நம்ம நூலகத்துக்கு உதவி செஞ்சிருந்திருக்கலாம்.

உங்களைபோல இருக்கிறவங்க அமைச்சராக இருந்தால் இன்னும் மக்களுக்கு நல்லது பண்ணலாமே.நீங்க மக்களுக்கு செய்யறது போல வேற யாரும் செய்யறதா தெரியலையே.

வேணாம்மா. அப்படி இல்ல. செயல்தலைவரும் அரசண்ணனும் மக்களுக்கு என்ன நல்லது செய்ய நினைக்கிறாங்களோ, அதை நான் நல்லபடியா மக்களுக்காக செஞ்சாலே போதும். நான் ரொம்ப சாதாரமானவன்மா. நம்ம பீரியட்ல நம்மளத்தேடி வந்தவங்களுக்கு நம்மால முடிஞ்சதை செஞ்சாலே போதும். அதுக்கு மேல வேறெதுவும் வேணாம்.

நன்றிங்க...

என்னக்கா

மார்ச் மாதம் கட்டட வேலை ஆரம்பிக்கலாம்னு சொல்லறாரும்மா.

நிஜமாவாக்கா. சொன்னத செஞ்சுடுவாரா...

மாசாமாசம் அவர் கையிலிருந்து பணத்தைப் போட்டு, கல்விக்கு உதவி, மருத்துவ முகாம் இல்லைன்னா மருத்துவ செலவுக்கு பணம்னு ஏதாச்சும் ஒரு நற்பணின்னு ஒரு நல்லபணி பண்ணிட்டிருக்காரு. அதை வாட்ஸப் குழுமத்துல புகைப்படத்தோட போட்டுட்டும் இருக்கிறாரு. நம்ம லைப்ரரிக்கு வந்து மனுவாங்கிட்டு போனாருல்ல… அந்த போட்டோவும் லைப்ரரிக்கு இடம் வாங்கி கட்டடம் கட்டுவோம்னு எழுதியும் அந்த குரூப்பில் போட்டிருந்தாங்க. வெறும் காத்தோடு போகிற பேச்சு இல்ல. எழுதி போட்டோவோட பதிவு பண்ணறாருன்னா. உண்மையைப் பேசறாரு. அதை செயல்படுத்தறாருன்னு தானே அர்த்தம். இத்தனை நல்ல காரியங்களை செஞ்சுட்டு நான் சாதாரணமானவன்னு சொல்லறாரே.

ஆமாக்கா. நல்ல மனுஷனா தெரியறாரு. இதுவே நல்ல சகுனமா தெரியுது. நம்ம லைப்ரரிக்கும் நல்ல காலம் பொறக்கட்டும்.

அப்படியே நடந்தா நல்லது.

ஏதாவது தேவதைகள் மேலிருந்து ததாஸ்து அப்படியே ஆகட்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்.

காலையில் காகங்கள் கத்தியபோது இருந்த மனக்கலக்கம் சற்றே குறைந்திருந்தது.
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
பசுமையான தென்றல் நகர், தூய்மையான தென்றல் நகர், வளமையான தென்றல்நகர் என்று தென்றல் நகரின் வளங்களைக் காக்கும் பணியை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் துளி அமைப்பு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தது.

தென்றல்நகர் முகநூல் நண்பர்கள் அமைப்பு நிறுவனர் செல்வா, அவருடைய மனைவி விஜயராணி. இருவரும் மனமொத்து விரும்பி காதல் மணம் புரிந்தவர்கள். கடந்து வந்த பாதையின் அனுபவங்கள் அவர்கள் இருவரையும் கனிய வைத்திருந்தது. சேவைப் பணியில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். தென்றல்நகரின் செய்திகளாக அனைத்து விஷயங்களையும் சேவைப் பணிகளையும் புகைப்படத்துடன் முகநூலில் பதிவு செய்வார்கள். நூலகத்துக்கான ஆதரவைத் தெரிவித்து உடன் உறுதுணையாக இருப்போம் என்று உற்சாகப்படுத்துபவர்கள்.

பெர்னி க்ராவ்ஸ் பேசிய உரையின் எழுத்து வடிவத்தை,

இயற்கையை அழித்து விரைவில் அழியவுள்ள மனித மிருகத்தைவிட, தான் என்ற ஆறாவது அகந்தை அறிவு பெறாத மிருகங்கள் உயர்வானதே, என்று

தென்றல்நகர் முகநூல் நண்பர்கள் இயக்கம் மூலம் சேவைப் பணியாற்றிக்கொண்டிருக்கும் செல்வா ஒரு கட்டுரையை பகிர்ந்திருந்தார்.

இந்தக் கதைகளைப் படித்து முடித்ததும் சில நிமிடங்கள் கண்களை மூடி உட்காருங்கள். சுற்றியிருக்கும் இயற்கையின் ஒலிகளைக் கேளுங்கள். அதில் உங்களுக்குச் சில விஷயங்கள் கேட்கலாம். பல விஷயங்கள் புரியலாம் என்று

தன் உரையை இப்படித் தொடங்குகிறார் பெர்னி க்ராவ்ஸ் ( Bernie Krause )

"சான் பிரான்சிஸ்கோவிற்கு கிழக்கே இருக்கும் சியரா நிவேடா மலைப்பகுதியின் ' லிங்கன் மியடோ'. 1988 ல் நான் பதிவு செய்த இந்த ஒலியைக் கேளுங்கள் ..." என்று சொல்லி அதை ஒலிக்க விடுகிறார். ஓடையின் மெல்லிய சத்தம், பறவைகள் பறக்கும்போது வரும் சிறகடிக்கும் சத்தம், காதலோடும், அன்போடும் அவை பாடும் சத்தம், பூச்சிகளின் சத்தம் என... அத்தனை இன்பமாய் இருக்கிறது. அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தைக் காண்பிக்கிறார். பசுமையாக இருக்கிறது. " 1988 ல் அங்கு மரம் அறுக்கும் ஒரு தனியார் நிறுவனம் வந்தது. அந்தப் பகுதி மக்களிடம், 'நாங்கள் 'செலக்டிவ் லாகிங்' என்ற புது முறையில் மரங்களை வெட்டப் போகிறோம். இதனால், காடு மொத்தமாக அழிக்கப்படாது. அங்கொன்றும், இங்கொன்றுமாக மரங்களை வெட்டுவோம். காட்டின் உயிர்ச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாது ' என்று சொல்லி வேலைகளைத் தொடங்குகிறார்கள். இப்போது இதைக் கேளுங்கள்...." என்று சொல்லி சமீபத்திய புகைப்படம் ஒன்றையும் காண்பிக்கிறார். காட்டின் முகப்பைக் காட்டும் அந்த இரண்டு புகைப்படங்களில் பெரிய மாற்றமில்லை. ஆனால், அந்த ஒலி... அது சொல்லும் செய்தி அபாயகரமானதாக இருக்கிறது.

இப்போது கேட்கும் அந்த ஒலியில்... ஓடையின் சலசலப்பு அதிகமாகக் கேட்கிறது. காற்றின் ஓசை மெலிதாகக் கேட்கிறது. பறவைகளின் அந்த இன்பச் சத்தங்களை ஒன்றும் கேட்க முடியவில்லை. சில மரங்கொத்திப் பறவைகளின் " டொக்...டொக்..." என்ற ஒலி கேட்கிறது. அது ரொம்பவே வறட்சியான ஓர் ஒலியாகக் கேட்கிறது. இப்படியாக, காட்சிகளால் அதிக மாற்றத்தைக் கண்டிராத பல இடங்களின் ஒலி மாற்றத்தை, ஒலிக்கவிடுகிறார். அதில் இயற்கை அழிக்கப்படும் பேரவலத்தின் அழுகுரல் அத்தனை ஆழமாய்க் கேட்கிறது. " ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம். ஒரு ஒலிக் குறிப்பு ஆயிரம் புகைப்படங்களுக்கு சமம்... ஆனால், காட்சியின் ஈர்ப்பு, ஒலியின் குரலை அழுத்திவிடுகிறது. இந்த இயற்கையின் அழிவை காட்சிகள் மூலம் உணர்வதைவிட, ஒலிகளின் மூலம் உணர்வதுதான் உண்மைகளை எடுத்துரைக்கும் " என்று சூழலியல் பிரச்னைக் குறித்த மிக முக்கியக் கருத்தைப் பதிவு செய்கிறார் பெர்னி. உலக இசைக் கலைஞர்கள் வகையிலும், சூழலியலார்கள் வகையிலும் பெர்னி மிகவும் தனித்துவமானவர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெர்னி தன்னுடைய நான்கு வயதிற்குள்ளாகவே கிடார் இசையில் தேர்ச்சிப் பெற்றிருந்தார். தொடர்ந்து ஹாலிவுட் உலகில் முக்கிய இசைக் கலைஞராக இருந்து வந்தார். " வீவர்ஸ்" என்ற புகழ்பெற்ற இசைக் குழுவைத் தொடங்கி, உலகம் முழுக்க பல இசைக் கச்சேரிகளை நடத்திவந்தார். 1968ம் ஆண்டில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், தன்னுடைய ஒரு படத்திற்காகக் காட்டின் ஒலிகளைப் பதிவு செய்ய விரும்பி பெர்னியைக் காடுகளுக்கு அனுப்பியது. அதுவரை அறைகளுக்குள்ளும், ஸ்டூடியோக்களிலும், மேடைகளிலும் மட்டுமே இசை இருப்பதாக நினைத்திருந்த பெர்னிக்கு... அந்த இயற்கையின் ஒலி... தனி ஒளியைப் பாய்ச்சியது. அந்த ஒலிகளைக் கேட்ட அந்த நொடி..இனி இங்குதான், இதில்தான், தன் மிச்ச வாழ்வும் அடங்கியிருப்பதாக நம்பினார். தொடர்ந்து பயணித்து இயற்கையிடம் தன் காதுகளைக் கொடுத்து கேட்க ஆரம்பித்தார். இதுவரை 4500 மணிநேரங்களை இந்த ஒலிகளைப் பதிவு செய்வதில் செலவிட்டுள்ளார். 15 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்களின் சத்தங்களைப் பதிவு செய்துள்ளார். உலகின் பல காடுகள் அழிந்த வரலாற்றை ஒலிக்குறிப்புகளாக தன்னிடம் வைத்துள்ளார்.

" 40 வருடங்களுக்கு முன்னர் 10 மணி நேரம் பதிவு செய்தால், அதிலிருந்து ஒரு மணி நேரத்திற்கான தரமான ஒலிக் குறிப்புகளைப் பிரித்தெடுக்க முடியும். ஆனால், இன்று பூமி வெப்பமயமாதல், வளங்கள் சூறையாடப்படுவது, காடுகளுக்குள் மனிதனின் கைகள் ஓங்கியது உட்பட பல காரணங்களால் கிட்டத்தட்ட ஆயிரம் மணி நேரங்களைச் செலவிட்டால் தான் அந்த ஒரு மணிநேர ஒலிக் குறிப்பை நம்மால் எடுக்க முடிகிறது.." என்று சொல்கிறார்.

அறிவியல்பூர்வமாகவும், தொழில்நுட்ப ரீதியிலும் ஒலிப்பதிவு சம்பந்தமாக இவர் பல கண்டுபிடிப்புகளையும், கோட்பாடுகளையும் உருவாக்கியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் ஒலிக்குறிப்பை இவர் மூன்று வகைகளாகப் பிரிக்கிறார்.

ஒரு இடத்தில் ஒலிக்கும் உயிரற்ற உயிர்களின் ஒலியை... எ-கா - மரத்திலிருந்து வரும் காற்றின் ஓசை, கடல் அலைகளின் ஓசைப் போன்றவை ஜியோஃபோனி ( Geophony ).

ஒரு இடத்தில் வாழும் உயிர்கள் எழுப்பும் சப்தங்கள்... எ- கா - பறவைகள், மிருகங்கள் , மீன்கள் எழுப்பும் சப்தங்கள் பயோஃபோனி ( Biophony ).

ஒரு இடத்தில் மனிதன் ஏற்படுத்தும் அல்லது மனிதனால் ஏற்படுத்தப்படும் சப்தங்களை ஆந்த்ரோஃபோனி ( Anthrophony ) என்று வகைப்படுத்துகிறார். இதில் தன்னுடைய 40 ஆண்டுகால வனப் பயணங்களில் ஜியோஃபோனியும், பயோஃபோனியும் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். தன் வாழ்வில், தன்னை உலுக்கிய, தன் கண்ணீரை உருக்கியெடுத்த ஓர் ஒலியைப் பற்றி பெர்னி எப்போதும் குறிப்பிடுவார்.

அது கிட்டத்தட்ட 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான ஓர் ஏரி. பனிக்காலத்தின் இறுதி நாட்களில் உருவான ஏரி. அதில் ஒரு நீர்நாய்க் குடும்பம். நீர்நாய்கள் பொதுவாக , தங்களைக் காத்துக் கொள்ள சிறு குளம் போல் உருவாக்கி, அரண்களை ஏற்படுத்தி வாழும். அன்றும் அப்படித்தான்... அந்தப் பெண் நீர்நாயும், அதன் குழந்தைகளும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தன. ஆண் நீர்நாய் உணவை சேகரிக்க சென்றிருந்தது. பெர்னியின் நண்பர் அந்த சந்தோஷப் பாடல்களைப் பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது... அங்கு திடீரென வந்த அந்த வனக் காவலர்கள் சிறு குண்டை அந்த நீர்நாய்களின் வீட்டில் போடுகின்றனர். சிரித்தபடியே அங்கிருந்து நகர்கிறார்கள்.

சில நிமிடங்களுக்கு முன்னர் வரை பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்த அந்த நீர்நாய்கள் செத்து மிதந்தன. அங்கு நிலவும் அந்த அமைதியையும் ஒலிப்பதிவு செய்தபடியே , அந்த நண்பர் என்ன செய்வதென அறியாமல் நீண்ட நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தார். அப்போது... உணவு சேகரிக்கச் சென்றிருந்த அந்த நீர்நாய் அங்கு திரும்ப வந்தது. தன் மனைவிக்கும், பிள்ளைகளுக்கு உணவளிக்கலாம்... அவர்களோடு சேர்ந்து விளையாடலாம் என்ற ஆசையோடு வந்து பார்க்கிறது. அங்கு தன் மொத்தக் குடும்பமும் சின்னாபின்னமாய் கிடப்பதைக் கண்டு அமைதியாக இருக்கிறது.சில நிமிடங்கள் கழித்து, மெதுவாக நீந்தத் தொடங்குகிறது. நீந்திக் கொண்டே மெதுவாக அழத்தொடங்குறது. கொஞ்சம், கொஞ்சமாக கதறியழத் தொடங்குகிறது. தன்னுடைய முழு பலத்தையும் கொண்டு, இயன்ற வரை... கத்தி அழுகிறது. அந்தக் குரல் தான்... அந்த வலி மிகுந்த குரல் தான் இதுவரை தான் கேட்ட குரல்களிலேயே வேதனையானது என்று குறிப்பிடுகிறார் பெர்னி.



*

கண்களில் நீர் பொங்கி வழிய வாசித்து முடித்தாள் சுரேகா. மனதை உருக வைக்கும் இந்த ஒலிக்குறிப்புதான் எத்தனை சக்தி வாய்ந்தது. ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அரசை நிர்வாகம் செய்பவர்களுக்கும் இதில் என்ன அக்கறை இருக்கிறது. அதிகார போதை கண்களை மறைத்து பல்லுயிர்களையும் வனங்களையும் மக்களையும் சூறையாடும் அசுர மனதை அல்லவா கொடுக்கிறது.

அன்பான மக்களுக்காக மக்களின் நலனுக்காக உருகும் உள்ளத்தை அளிக்கவில்லையே.

ஆனால், சேவைப்பணியில் இருப்பவரின் உள்ளங்கள் உருக உருக, தென்றல்நகரை பழைய நிலைக்கு மீட்க வேண்டும் என்னும் பணியில் அனைவரும் ஒன்றிணைந்தனர். ஊரின் வளம் கொஞ்சம் கொஞ்சமாக மீள்வது போல நூலகத்தின் வளர்ச்சியும் இருக்குமா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top