Mazhaiyaga naan varava - 17

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அடுத்த அத்தியாயம். லைக் கேட்டா தான் வருது. இத்தனை நாளா மறந்துட்டா போடாம போனீங்க.. நான் இனி நியாபகப்படுத்துறேன்...:D:D:D நன்றி. எனக்கு ரொம்ப யோசிக்க முடியல மூளை புல்லா aptitude reasoning ன்னு சுத்துது. சோ கவிதை வரல :LOL::LOL::LOL: எபி படிச்சிட்டு மறக்காம உங்க கருத்தை கருத்தா சொல்லுங்க. நன்றி :love::love::love:

மழை - 17

சற்று முன் தான் கலியபெருமாள் தன் மனைவி மகளோடு அறைக்கு வந்திருந்தார். அங்கே அரசன்
மட்டும் அமர்ந்திருக்க அம்மா எங்கே என்று அவர் கேட்டதற்கு குளிக்கச் சென்றிருப்பதாகக் கூறினான்.


என்ன பேசுவது என்று நினைத்து ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாய் யோசிக்க ரூபிணி, “அரசன்
தான உங்க நேம்?” என்று ஆரம்பித்து வைத்தாள். ஆம் என்பது போல் மேலும் கீழும் தலையாட்டியவன்
“நிலவரசன்” என்று அவள் பெயரைக் கேட்பதை ஊகித்துக் கூறினான்.“ஒஹ்.. நைஸ் நேம். என்ன பண்ணுறீங்க அரசன்?” என்று கேட்கையில் தான் பாட்டி வெளிவந்து
“அரசன் உனக்கு அத்தை மகன் அதனால அத்தான்னு கூப்பிடனும்” என்றார். அதைத்தான் மதி கேட்டது.


“அத்தானா...” என்று முகம் சுருக்கிய ரூபிணி “அதெல்லாம் எனக்கு வராது பாட்டி. நீங்க சொல்லுங்க அரசன் நான் உங்களை பேர் சொல்லி கூப்பிடலாம்ல” என்று அரசனிடம் கேட்க அவன் என்ன சொல்வான்? “உங்க இஷ்டம்” என்ற பதில் கூறி தப்பித்தான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த மதியின் மனம் அத்தான் என்று அழைக்காததில் நிம்மதி அடைந்தாலும், ‘ஹான் என்ன இவ பேர் சொல்லிக் கூப்பிடுறா’ என்று அடுத்த குற்றப்பத்திரிக்கை வாசித்தது.

வேண்டாத மருமகள் கைகால் பட்டால் மட்டும் இல்ல வேண்டாதவங்க யாரா இருந்தாலும் அவங்க
கைகால் பட்டால் குத்தமாத்தான் தெரியும் போல என்ற அரும்பெரும் தத்துவத்தை மனதினுள் நொடியில் எண்ணியவள் அங்கிருந்தே பாட்டி மேலும் பேசும்முன், “மாமா...” என்று அழைத்தாள்.


“என்ன மதி?” என்றவனிடம் “எல்லாரையும் சாப்பிட கூட்டிட்டு வாங்க... சாப்பாடு ரெடி” என்று
தலையை மட்டும் நீட்டியவாறு கூறி அனைவருக்கும் பொதுவான ஒரு புன்னகையுடன்
சென்றுவிட்டாள்.


டைனிங் டேபிளில் அரசன் வழக்கம் போல் சம்மணமிட்டு அமரப் போக அருகில் அமர்ந்திருந்த மதி
வேகமாய் அவனின் தொடையைப் பற்றித் தடுத்தாள். இத்தனை நாள் வீட்டினர் இருந்ததால் அவன்
இஷ்டத்திற்கு விட்டுவிட்டனர். அதற்காக இப்போதும் அப்படி இருந்தால் எப்படி? என்றெண்ணி
கேள்வியாய் புருவம் தூக்கிப் பார்த்த அரசனிடம் கண்ணாலேயே வேண்டாம் என்பது போல்
கருவிழிகளை உருட்டி தடுத்தாள்.


அவனும் அதைப் புரிந்து ஒழுங்காக அமர்ந்து சாப்பிட அவனால் எப்போதும் சாப்பிடுவதை விட பாதி
அளவே சாப்பிட முடிந்தது. எல்லாருக்கும் முன் எழுந்துவிட்டவன் தான் தோட்டத்திற்கு சென்று அப்படியே வேலை நடக்குமிடத்தை ஒரு பார்வை பார்த்து வருவதாகக் கூறி விடைப்பெற்றான்.


பெரியவர்கள் விழாவைப் பற்றி பேச ஒன்றுகூடினர். கலியபெருமாள் நாளை கிளம்புவதாக கூற
தாத்தா விழா முடிந்து போகும்படி வற்புறுத்தினார். பின் யோசித்து, “உங்க ஊருலயும் திருவிழா
வருதோ? அதான் கிளம்புறீங்களா” என்று வினவ, பாட்டி அதைத் தடுத்து “இல்லை சம்மந்தி எங்க
ஊருல மீனாட்சிக்கு தான் திருவிழா. குலதெய்வத்துக்கு பங்குனி மாசம்தான் கொண்டாடுவோம்”
என்று கூற, “அப்போ இருந்து சாமி கும்பிட்டு போகலாமே ஒரு வாரம் தானே” என்றார் தாத்தா.


மதிக்கு பற்றிக்கொண்டு வந்தது தாத்தாவின் மேல். ‘அவங்களே போறாங்க... இந்த தாத்தா விட
மாட்டிக்குறாங்களே’ என்று. கூடவே அவளிடம் இருந்த நல்ல மனது அவளை இப்படி நினைத்ததற்கு
திட்டவும் செய்தது.


கடைசியில் கலியபெருமாள் மற்றும் அவர் மனைவி ஊருக்கு போவதாகவும் ரெங்கநாயகியும்
ரூபிணியும் ஒரு வாரம் கழித்து வருவதாகவும் முடிவாகியது. கூடவே மதியின் விடுமுறையும்
சத்தமில்லாமல் அவளாலேயே திருவிழா முடியும் வரை நீடிக்கப்பட்டுவிட்டது.


‘இது நம்மால தாங்க முடியாதுபா... சென்னை போகும் முன் அரசு மாமாகிட்ட காதலைச் சொல்லி,
அவங்களையும் சொல்ல வச்சி, கல்யாணத்துக்கு தாத்தா பாட்டிகிட்ட சம்மதம் வாங்கிட்டு தான்
போறோம். நினைச்சாலே கதி கலங்கி கண்ணைக் கட்டுதே ஆண்டவா’ என்று புலம்பினாள்.


எத்தனை நாள் ஆனாலும் சரி இது நடந்தாதான் நிம்மதி என்று முடிவெடுத்துவிட்டாள். இவள்
நினைப்பது அவ்வளவு சுலபமாக ஈடேறிவிடுமா என்ன?


அடுத்து இரு நாள்களில் கலியபெருமாள் கிளம்பி விட அரசன் தனக்காகத் தங்கியிருக்கும் பாட்டியுடன் சிறிது நேரம் செலவழிப்பான், பின் மூலிகை கலந்து மீனாம்பிகைக்கு கொடுத்து அங்கே சிறிது நேரம்
அப்படியே வெளியே நடக்கும் வேலைகளைப் பார்வையிட்டு மாலை தான் வருவான்.


வாணிமாபுரத்தில் கால்வாசி நிலமே இருந்தது மீதமெல்லாம் சுதர்சன் ஆலையாக நிமிர்ந்து நிக்க
அவனிற்கு அதை இடித்து மண்ணோடு மண்ணாக்க வேண்டும் என வெறியே கிளம்பும். ஆனாலும்
திருவிழா முடியட்டும் என்று அடக்கிக்கொள்வான்.


போகும் போதே பழங்களை வண்டியில் எடுத்துச் செல்வதால் மதிய உணவுக்கு வீட்டிற்கு வர
வேண்டிய அவசியமும் இல்லாமல் இருந்தது.


இதுவே அவனின் தினப்படி வழக்கமாக இருக்க அன்றைக்கு காலையில் தோட்டம் செல்லும் வழியில்
பின்னோடே வந்து இடைமறித்தாள் ரூபிணி. “என்ன அரசன் பாட்டிகிட்ட மட்டும் தான் பேசுவீங்களா?
என்கிட்டலாம் பேச மாட்டீங்களா?” என்ற கேள்வியோடு.


“அப்படிலாம் இல்லங்க. அதான் நேத்து சாப்பிடும் போது கூட பார்த்தோமே” என்று தப்பாக நினைத்துக்
கொண்டாளோ என்றெண்ணி விளக்கம் கொடுக்க, “பார்த்தோம் தான் பேசுனோமா?” என்று தலை
சரித்துக்கேட்டாள்.


“ஆஹா இப்படி ஒரு பழியா? சரி என்ன பேசணும்ன்னு சொல்லுங்க” நடந்துக்கொண்டே பேசியதால்
தொழுவம் தாண்டி தோட்டத்திற்கு வந்திருந்தனர். ரூபிணியின் முகம் அங்கிருந்து வந்த வைக்கோல்
கலந்த பசுஞ்சாணம் வாடையில் மாறியது. ஆனால் காட்டிகொள்ளாமல் அவனுடன் பேசும் ஆர்வத்தில் செல்ல மேலிருந்த அவளின் அறை ஜன்னலில் இருந்து ரூபிணி வரும்போதே பார்த்த மதி
குடுகுடுவென இறங்கி ஓடி வந்து தொழுவத்தின் அருகில் மூச்சி வாங்க தன்னை நிலைப்படுத்த
நின்றாள். இப்படியே மூச்சு வாங்க போனால் சந்தேகம் வருமே என்றெண்ணி.


அப்போது அவள் அருகில் இருந்த அரசனின் பிரியத்திற்குரிய கன்றானது அவனைக் கண்டதும்
துள்ளிகுதித்தது. எப்போதும் தன்னைக் கண்டால் தூக்கிவைத்து தலை கோதுபவன் இன்று
கண்டுக்காமல் சென்றதும் அதற்கும் மதியைப் போல் உரிமை உணர்வு தலைத் தூக்கியதோ?


மதிக்கும் இது தெரியும் அதனால், “ஒஹ் உன்னையும் மறந்தாச்சா? கஷ்டகாலம்டா கன்னுகுட்டி ஓடு
ஓடு போய் அங்க நிற்கிறவளை தள்ளிவிட்டுட்டு என் மாமனை ஒரு பிடி பிடி” என்றவாறு கையிற்றை அவிழ்த்துவிட்டாள்.


அதுவும் இவள் சொல்வதை புரிந்தோ இல்லை அதற்கே தோன்றியோ வேகமாக ஓடி அரசனின் காலோடு உரசி நக்க, “ஹேய் வா வா...” என்றவாறு அதைத் தூக்கிக்கொண்டான். இதைப் பார்த்த ரூபிணியின் கால் தன்னால் ஒரு அடி பின்னால் எடுத்து வைக்க அதைப் பார்த்த மதியின் உதட்டில் வெற்றிப்புன்னகை தவழ்ந்தது.

இவ்வாறு மதி ரூபிணி வீட்டில் பொழுது போக்கினர் ஆனால் ஒருவருக்கொருவர் பேசவில்லை. ரூபிணி பேச வந்தாள்தான் ஆனால் மதி இயல்பாக பேசமுடியாமல் தடுமாற அவளும் அதைப் புரிந்து விலகிவிட்டாள்.

அன்று இந்த ஊரிற்கு வந்த முதலாக சுமூகமாக போன வாழ்க்கையில் சிறு சங்கடத்தைச் சந்தித்தான் அரசன். தினமும் ஊரைச் சுற்றுபவனுக்கு அங்காங்கே மரத்தடியில் அல்லது டீக்கடையில் கும்பலாக எப்போதும் சுற்றும் இளவட்டப் பசங்களின் மீது பார்வை போனது. மரத்தடியில் வண்டியை நிறுத்தி இறங்கியவன், “ஊரெல்லாம் வேலை நடக்குதே திருவிழா வேற வருது நீங்களும் ஒத்துழைச்சா சீக்கிரம் முடிஞ்சிருமே. போய் உதவி செய்யலாம்ல” என்று கேட்டான்.
 
Last edited:

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
அவர்கள் சொல் பேச்சு கேட்காத வருத்தபடாத வாலிபர்கள். சங்கம் இருக்கிறதா
இல்லையா என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இவர்களைப் பற்றி தெரிந்தவர்கள்
யாரேனும் இருந்திருந்தால் “சொல்லித் திருத்த கூடிய ஜென்மங்கள் இல்லை தம்பி இது”
என்று அரசனின் காதோடு கூறி கையோடு அழைத்துச் சென்றிருப்பர்.


“ஒஹ் அப்படியா சரி. வந்து செஞ்சா எங்களுக்கு என்ன கிடைக்கும்? எதோ தம்மாத்துண்டு
பணம் சம்பளம்ங்கற பேர்ல தருவீங்க... அதெல்லாம் எங்களுக்கு வேணாம். வீணா இங்க
வந்து வாங்கி கட்டாதீங்க. ஊருக்கு புதுசு அதான் எங்களைப் பற்றி தெரியல” என்று
தலைவன் போல் இருந்தவனின் குரல் ரவுடியிசம் பேசியது.


“ஊருக்கு புதுசா வந்த எனக்கே உங்களைப் பற்றி தெரியுது. ஒரு வேலையும் செய்யாம
சுத்துறதுதான் உங்களோட வேலைன்னு. ஊருக்குள்ள உங்களைப் பற்றி பேசியதை
கேட்டுத்தான் நான் வந்து பேசிட்டு இருக்கேன் எதுக்கு இப்படி வீணா உங்க பேரை இந்த
வயசுல கெடுத்துட்டு அலையுறீங்க?” என்று கேட்டதுதான் தாமதம்.
“ஏய் எவனோ நம்மளைப் பற்றி வாய் மேல பல்ல போட்டு பேசிருக்கான் டா... அவங்களை
சும்மா விட கூடாது. யாரு யாரு உங்க கிட்ட சொன்னது” என்று வம்பு வளர்க்கத்
தொடங்கியது.


அரசனிற்கு எரிச்சல் வந்துவிட்டது. “அதெல்லாம் சொல்ல முடியாது அவங்க சொன்னது
உண்மைத்தான். நான் நேரிலேயே பார்த்துட்டேன். எனக்கு வேலை இருக்கு நான்
கிளம்புறேன்” என்றவாறு வண்டியை கிளப்ப, “உங்களை மாதிரி எங்களுக்கும் சொத்து
இருந்தா நாங்களும் தான் சம்பளம் கொடுத்து சும்மா மண்ணை கீற சொல்லுவோம்
என்னடா? ஹாஹா” என்று பெரிதாக ஜோக் சொல்லியதைப் போல் சிரிக்க ஆரம்பித்தான்.


அதற்கு சுற்றி இருப்பவர்களும் கூச்சல் போட மனிதர்களின் வேறொரு பரிணாமத்தைப்
பார்த்த அரசனிற்குள் கோபத்திற்கு பதில் அவர்களை நினைத்து வருத்தமே மிஞ்சியது.
ஒன்றும் கூறாமல் ஒரு பார்வை பார்த்துச் சென்றுவிட்டான்.


திருவிழாவிற்கு முளைப்பாரி போடுதல், பந்தல் கட்டுதல், வீடுதோறும் தோரணம் கட்டுதல்
கூடவே சிறிய அளவிலான ஜல்லிக்கட்டிற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.


அன்று பொங்கல் திருவிழா. வெளியூரில் இருந்தும் மக்கள் கூட்டம் தங்கள்
குலதெய்வத்தை காண அலைமோத சாமிபெட்டியை தூக்கி ஊரை வலம் வரும்
நிகழ்ச்சியை தொடங்கினர். அரசன் தான் அதைத் தூக்கி வலம் வர வேண்டும்.


சாமிபெட்டியில் தெய்வத்திற்குரிய ஆபரணங்கள், உடைகள், பூசைமணி, தாம்பூலம்
போன்ற பொருட்கள் கிராமங்களில் பிரம்பு அல்லது மரபெட்டிகளில் வைத்து
பாதுகாக்கப்படும். அதனை தெய்வமாகவே வைத்து வழிப்படுவதால் அதனை எடுத்து
ஊரைச் சுற்றிவைத்தால் ஊரிற்கு ஒரு கெடுதலும் வராமல் அந்த ஐயனார் காப்பார் என்பது
ஐதீகம். சாமிப்பெட்டி வரும் வழியெல்லாம் பந்தல் அமைத்து வாழைமரம்
கட்டியிருந்தார்கள். அதனைத் தூக்குபவர் விரதம் எடுத்து தான் தூக்க வேண்டும் என்பதால்
அரசன் முதல் நாளில் இருந்து விரதம் இருந்தான்.


அவனிற்கு இது அனைத்தும் புதுமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. கூட்டமும்
கும்பலும் முற்றிலும் அவனிற்குப் புதிது தானே. சாமிப்பெட்டியை தூக்கியதும்
அவனையறியாமல் உடல் சிலிர்த்து ஒரு பரவச உணர்ச்சி தாக்கியது. மனமோ ‘ஊரையும்
காத்து தந்தையின் இறப்பிற்கு ஒரு நியாயம் செய்ய உதவி செய் இறைவா’ என்று
வேண்டியது.


அவனின் வேண்டுதல் ஐயனாரை எட்டியதோ அன்றி எதேச்சையாகவோ இவர்களுக்கு
உதவ கோவிலில் வாசலில் ஒரு உதவி காத்திருந்தது.


மழை வரும்...

வானும் மண்ணும் கைகுலுக்க
மழையாக நான் வரவா?


(கவிதை premalatha கா சொன்னது :love::love::love:)

(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y)

லைக் நியாபக படுத்த ;););):p:p:p
 
Last edited:
#10
அருமையான பதிவு அக்கா....அரசா அட்வைஸ் பண்ணா நல்லது சொன்னா யாருக்குமே பிடிக்காது...அது இன்னும் உங்களுக்குப் புரியல....மதி உன் கன்னுக்குட்டி கூட்டணிலாம் ரொம்ப ஓவர்.....ரூபிணி நல்லவேளை மா உனக்கு அரசனோட ஒத்துப் போகல... இனியும் போகக் கூடாது....உதவியா யாரது ......
 

Advertisements

Latest updates

Top