Porkalathil oru penpuraa...(part-5)

Sri Sathya

Active member
#1
போர்க்களத்தில் ஒரு பெண்புறா ...(பகுதி -5)

மகேசின் நெற்றிப்பொட்டில் சுக்வீந்தர் வைத்த பிஸ்டல் அழுத்த ...

"என்ன சார் மிரட்டுறிங்களா? ??" என்றான் மகேஷ்!

"நீ எப்படி வேணாலும் நினைச்சுக்க மகேஷ் ...
நீ இந்த ஆப்ரேஷனை செஞ்சிதான் ஆகணும் ..."

"என்ன சார் நெற்றியில துப்பாக்கியை வெச்சி மிரட்டினா நான் ஒத்துப்பேன்னு நினைச்சிங்களா? ??

நான் உங்களைப் பத்தி கம்ப்ளெய்ன்ட் கொடுக்க வேண்டி வரும் பி கேர் ஃபுல் ..."

"ஹாஹாஹா ..." சுக்வீந்தர் பலமாய் சிரிக்க அந்த அறையில் எதிரொலித்தது!

"தம்பி நீ செத்து ரெண்டு மூணு நாளாச்சி தெரியம்ல ..."என்று சுக்வீந்தர் கூற மகேசின் முகம் கலவரமானது!

"வெளி உலகத்துக்கு நீ உயிரோட இருக்கறது தெரியாது ...
இப்போ, இங்கேயே உனேனை சுட்டு புதைச்சிட்டு போயிட்டே இருப்பேன் ...
என் தேசத்துக்கு உதவாத ஓர் உயிர் எதுக்கு பூமிக்கு பாரமா ..."

"என் தேசம் ...என் தேசம்னு சொல்றிங்களே நீங்க என்ன பண்ணியிருக்கிங்க இந்த தேசத்துக்காக ...
ஏன் என் மனைவி, குழந்தைனு நான் ஏங்குறாப்போல உனக்கும் உன் மனைவி,குழந்தைனு பாசம், ஏக்கம் எல்லாமே இருக்கும்ல ...
நீ பேரெடுக்கணும்னு என்னை பகடைக்காயா பயன்படுத்தாதே ..."என்று மகேசின் வார்த்தைகள் ஒருமைக்கு மாறியது!

"என் மனைவி, என் குழந்தைனு ஒரு சராசரி வாழ்க்கை வாழ நாம இங்கே வரல. ..
என் தேசம் ...
என் தேசம் அமைதியாயிருக்கணும்னு நினை ...
என் தேசத்து பொம்பளைங்க கழுத்துல தாலி பலமா இருக்கணும்னு நினை ...
என் தேசத்து குழந்தைங்க அம்மா,அப்பாவா பறிகொடுத்துட்டு ஒரு சாண் வயித்துக்காக குப்பைத் தொட்டியில கிடக்குற எச்ச இலையை பொறுக்கி சாப்பிட கூடாதுனு நினை ...

என்ன கேட்ட ...
என் மனைவி, என் குழந்தைனு பாசமும் ஏக்கமும் எனக்கும் இருக்கானு தானே கேட்டே ...
இருந்துச்சி. இல்லாம இல்ல ...
நாலு வருசத்துக்கு முன்னாடி என் பொண்டாட்டி ரெண்டாவதா கர்ப்பமாயிருந்தா ...
அஞ்சி வயசுல மகன் ...
அன்னைக்கு காலையில நான் டியூட்டிக்கு கிளம்பி வரும்போது கன்னத்துல முத்தம் கொடுத்து அனுப்பினான் ...
திரும்ப அவனை நான் எந்த நிலமையில பார்த்தேன் தெரியுமா ...

அப்போ நான் இந்தியாவோட முக்கியமான நகரங்கள்ல வெடிகுண்டு தாக்குதல் நடத்த இந்தியாவுக்குள்ள ஊடுருவியிருந்த இந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவனை அரஸ்ட் பண்ணி என் கஸ்டடியில வெச்சியிருந்தேன்.

ஹாஸ்பிட்டல், கோயில்,சர்ச்,மசூதி,பள்ளிக்கூடம்னு எல்லா இடத்துலேயும் தாக்குதல் நடத்த திட்டம் அவனுங்களுக்கு ...அதுக்காக வந்தவன்தான் நான் கஸ்டடியில வெச்சியிருந்த தீவிரவாதி ...

அவனை சித்ரவதை பண்ணி அவன்கிட்டேயிருந்து உண்மையை வாங்கி எங்கே வெடிகுண்டு வெச்சானோ அதை டிஸ்போஸ் பண்ணேன் ..

இதுக்கு எனக்கு சன்மானம் என்ன தெரியுமா என் மனைவி, மகன், அப்புறம் என் மனைவி வயித்துல இருந்த என் பொ...பொ...பொண்ணு மூணு பேரையும் நான் பறிகொடுத்ததுதான் ...

கர்ப்பமா இருந்த என் மனைவி வயித்த அறுத்து ...."அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைத்தது சுக்வீந்தருக்கு!

"நான் என் மனைவி என் குழந்தைகளை காப்பாத்தணும்னு நினைச்சிருந்தா அந்த தீவிரவாதியை ரிலீஸ் பண்ணியிருந்தாலே போதும் ...
நிச்சயம் என் மனைவி,குழந்தைகளோட ஆன்மா இத்தனை உயிரை காப்பாத்தியிருக்கோம்னு நிம்மதியாதான் இருக்கும் ...

இப்போ கூட உன் உயிருக்கு ஏதாவது ஆச்சுனா உன் மனைவியும், உன் குழந்தைகளும் தவிப்பாங்கனுதான் நினைக்குற ...
எத்தனையோ பெண்களோட தாலியை காப்பாத்தப்போற ...
எத்தனையோ குழந்தைங்க அனாதையா நிக்குறதை தடுக்கப் போறனு நினைச்சி பாரு உன் உயிர் துச்சமா தெரியும் ..."
சுக்வீந்தர் பேசிக் கொண்டிருக்கும் போதே இரண்டு இளைஞர்கள் உள்ளே நுழைந்து விரைப்பாய் சல்யூட் ஒன்றை வைத்து நின்றனர்!

"வாங்க குல்தீப் ...வாங்க ஃபரூக்..." என்றார் இருவரையும் பார்த்து சுக்வீந்தர்!

"இவங்க ரெண்டு பேரும் இந்த ஆப்ரேசன்ல என் கூட தானா முன்வந்து கை கோர்த்தவங்க ...
குல்தீப் வயசு 23...
ஃபரூக் வயசு 25. ..
ஒரு முஸ்லீமா இருந்து ஃபரூக் தான் வாழும் தேசத்துக்காக செய்ய போறது என்ன தெரியுமா...
உயிரை விட போறான் அதுவும் அவனா முன்வந்து ...
இவங்க ரெண்டு பேரோட உயிரும் இந்த ஆப்ரேசனோட முதல் காவுனு சொல்லலாம் ...
அப்கோர்ஸ் இந்த ரெண்டு பேரையும் கொல்ல போறது யாரு தெரியுமா? ??
நீ தான் ...நீயேதான் ..."என்று சுக்வீந்தர் கூற மகேசிற்கு பயத்தால் வியர்த்துக் கொட்டியது!


*************************

"இன்னும் எத்தனை நாளைக்குதான் மாமா நீ இப்படி எதுவும் சாப்பிடாமா இருக்கப்போறே ..."என்று கூறிய மலரை கலங்கும் கண்களோடு பார்த்தான் திலீப்!

"இப்படி நீ சாப்பிடாம தூங்காமயிருந்தா உங்க பிரண்டு திரும்பி வந்துடுவாறா மாமா ..."

"மலர் ...அவன் என்னோட 17 வருட நட்பு மலர் ...
அவனுக்கும் எனக்கும் எந்த வித ஒளிவு மறைவும் எந்த விசயத்துலேயும் இருந்ததேயில்லை மலர் ...
கண்ண மூடினா அவன் முகம்தான் தெரியுது மலர்..." திலீப்பின் கண்களோரம் துளிர்த்த நீரை துடைத்தவாறே அவனருகில் அமர்ந்தாள் மலர்!

"மாமா இங்கே பாரேன் ...
உலகத்துல பிறந்த எல்லா உயிரும் ஓர்நாள் போகத்தான் செய்யும் ...
நாமதான் மாமா அந்த இழப்புலயிருந்து மீண்டு வரணும் ..."

"என்னால முடியல மலர் ..."என்று அவள் மார்பில் முகம் புதைத்து திலீப் கதறியழ அவன் தலைமுடியை ஆறுதலாய் கோதினாள் மலர்!

"மாமா நீ இப்படி சாப்பிடாம கிடந்தா உடம்பு என்னாத்துகாகும் ...
ஏதாச்சும் சாப்பிட்டு இதுக்கு மேல நடக்க வேண்டியதை பார்க்கறதுதான் மாமா புத்திசாலித்தனம் ..."

"அந்த ...அந்த ...பிச்சி குழந்தை கையில கொள்ளி போட வெக்கும் போது என் உயிரே போயிடுச்சி மலர் ...
மகேசும், மகாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டவங்க ...
இந்த இழப்பை மகா எப்படிதான் தாங்கப்போறாளோ தெரியலை மலர் ..."

"நீங்கலாம்தான் மாமா அவங்களுக்கு ஆதரவா இருக்கணும் ...இப்படி நீங்களே உடைஞ்சி போயிட்டா அந்த அக்காவோட நிலமை என்னாகறது ...
அந்த பிள்ளையோட எதிர்காலம் என்னாகுறது ...

மாமா அப்புறம் ஒரு விசயம் ..."என்ற மலர் முகத்தில் லேசாய் வெட்கம் வந்து குடியேறியது!

"என்ன மலர்? ??"

"நீங்க இந்த லீவு முடிஞ்சி போறதுக்குள்ள நம்ம கல்யாணத்தை பண்ணிடனும் அத்தை வந்து அப்பாகிட்ட பேசிட்டு போனாங்க மாமா .. "என்று மலர் வெட்கத்தோடு கூற...

"இப்போ இந்த கல்யாணத்துக்கு என்ன அவசரம் மலர் ...
இப்போ நான் இருக்கற மனநிலையில எனக்கு கல்யாணம் வேணாம் மலர் ..." தன்னை விட கல்யாணத்திற்கு அவசரப்பட்ட திலீப்பின் இந்த வார்த்தைகள் மலரின் முகத்தை வாடச் செய்தது!

"ஹே மலர் புரிஞ்சிக்கோடி ...
இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் மலர் ..."

"................"

"என் செல்லம்ல ...எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன. ..
இப்போ என்னோட மனநிலை சரியில்ல குட்டிமா புரிஞ்சிக்கோடி ..."என்ற வாறே மலரை திலீப் அணைத்துக் கொள்ள மலரின் கண்களில் கோர்த்திருந்த ஒரு சொட்டு நீர் மெல்ல உடைந்து திலீப்பின் நெஞ்சில் விழுந்தது!

"ஹே அழறியா ...
லூசு இதுக்கெல்லாம அழுவாங்க ...
என் குட்டிமாவுக்கு என்ன ஆறுதல் சொல்லணும்னு எனக்கு தெரியும் ..."என்றவாறே மலரின் கன்னத்தை தன் இரு கைகளிலும் தாங்கி பிடித்து அவன் முகத்தருகே கொண்டு வர மலர் தன் இரு கண்களையும் மூடி மயக்க நிலையில் கிறங்கிப் போய் நின்றிருக்க அவளின் உதடருகே தன் உதட்டை திலீப் கொண்டு செல்ல மலரின் இறுக்கமான பிடியில் திலீப்பின் சட்டையின் பொத்தானொன்று கழன்று விழ திடீரென திலீப்பின் நினைவில் மகேஷ் வந்து போகவே சட்டென்று மலரை விட்டு விலகினான் திலீப்!

(போர்க்களம் புழுதி பறக்கும்)

-சத்யா ஸ்ரீராம்
 
#3
நாடா ! வீடா ! என மனப்போராட்டத்துடன் மகேஷ், காதலின் இன்பத்தை அனுபவிக்கக் கூட முடியாமல் மகேஷின்றி மகாவின் நிலை என்னவென்று யோசிக்கும் தடுமாற்றத்துடன் திலீப் செம்மயா இருக்கு சத்யா மிக அருமை superb ,
 

Sponsored

Advertisements

Top