Latest Episode Punnagaiku Neeye Thesamadi

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
புன்னகைக்கு நீயே தேசமடி

love.jpg
மணி இரவு ஒன்பது ஆனதும் கணிணியை ஷட்டவுன் செய்த உமாபாரதி, கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டாள். எப்பொழுதும் இவ்வளவு நேரம் ஆகாது. இன்று நடந்த ஆடிட்டிங்கில் பல குளறுபடி. அதனால் வேலை இழுத்துவிட்டது.
‘இந்த ஸ்கிரினையே முறைச்சு முறைச்சுப் பார்த்து கண்ணு ரெண்டும் அவிஞ்சு போகுது. மண்டையும் சூடாகிறுதுடா சாமி. வீட்டுக்கும் போனதும் மொத வேலையா தலைக்கு எண்ணெய அப்பிட்டு, சோபாவுல சாஞ்சிக்கனும்.’
உமாபாரதி கணக்கு பண்ணுவதில் கெட்டிக்காரி. (ஆடிட்டர்பா) எம்சிஎஸ் பேங்கின் இண்டெர்னல் ஆடிட்டர் அவள். அடிக்கடி எல்லா டிபார்ட்மெண்டுக்கும் திடீர் வருகை அளித்து, அவர்களின் வேலையை பரிசோதிப்பது, தில்லுமுல்லு நடந்திருக்கறதா என கண்காணிப்பது அவளது வேலை. அவளைப் பார்த்தாலே பேயைப் பார்த்தது போல முழிப்பார்கள் மற்ற டிபார்ட்மெண்ட் ஆட்கள். வேலையில் அவ்வளவு கறார். அதனாலேயே அவளுக்கு வேலை இடத்தில் நண்பர்கள் யாரும் இல்லை. நட்பை ஏற்படுத்தி கொள்வதும் தடுக்கப் பட்டிருந்தது நிறுவனத்தால்.
லிப்டினுள் நுழைந்து க்ராவுண்ட் ப்ளோரின் பட்டனை அழுத்தினாள். அங்குதான் கார் பார்க்கிங் இருந்தது. தனது சுசுக்கி ஸ்வீப்டை நெருங்கியவள், ரிமோட்டில் பட்டனை அழுத்தினாள். சத்தமும் கேட்கவில்லை, காரும் திறக்கவில்லை.
‘என்னடா இது ரோதனையா போச்சு.’
மீண்டும் மீண்டும் முயன்றவள், பீதியுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். அந்த பார்கிங் இடத்தில் எப்பொழுதுமே வெளிச்சம் குறைவாக தான் இருக்கும். இன்று பார்த்து கும்மிருட்டாக இருந்தது.
எப்பொழுதும் பார்க்கிங் போட்டவுடன் குடுகுடுவென லிப்டுக்கு ஓடுபவள், திரும்ப வரும் போது அவசரமாக காரைக் கிளப்பி வெளியேறிவிடுவாள். வெளியே டெரர் போஸ் கொடுத்தாலும், நிஜத்தில் தொடைநடுங்கி அவள். ஊரில் உள்ள போபியா எல்லாம் இவளிடம் கைக்குலுக்கி குடி இருந்தார்கள். அதில் அதி முக்கிய நிக்தோபோபியா(இருட்டில் ஏற்படும் பயம்) தலையை நீட்டி எட்டிப் பார்த்தது இப்பொழுது.
உடல் நடுங்க , வியர்த்து விறுவிறுக்க, மூச்சு சீரில்லாமல் துடித்தது உமாவுக்கு. கைப்பையைத் துளாவி போனை எடுத்தவள், அதில் இருந்த டார்ச்லைட்டை ஆன் செய்து சுற்றிப் பார்த்தாள். டார்ச் வெளிச்சம் தனக்கு வெகு அருகில் நின்றிருந்த உருவத்தின் மேல் பட, பயந்து அலறியவள் ஓட எத்தனித்து கால் இடறி கீழே விழுந்தாள்.
அவள் அருகே நெருங்கிய அந்த உருவம்,
“பாரதி, உனக்கு ஒன்னும் அடி இல்லையே. என்னைப் பார்த்து என்ன பயம்? ஆர் யூ ஆல்ரைட்” என கேட்டது.
‘நம்ம பேருலாம் தெரியுது! குரலும் கேட்ட மாதிரியே இருக்கு. யாரோ தெரிஞ்சவங்கதான் போல இருக்கு’ என பயத்தை விலக்கியவள், எகிறி துடிக்கும் மூச்சை சமன் செய்ய நெஞ்சை நீவிவிட்டாள்.
“ஐம் ஓகே! நீங்க யாரு?” என கேட்டவாறு எழ முயற்சித்தாள்.
அவன் கைப்பிடித்து அவளைத் தூக்கி நிறுத்தினான்.
“என்னைத் தெரியலயா பாரதி?”
டார்ச்சை மீண்டும் அவன் முகத்தில் அடித்துப் பார்த்தவள்,
“தெரிஞ்ச மாதிரி தான் இருக்கு. தெரியாத மாதிரியும் இருக்கு சார்”
“சார்னு கூப்பிட்டு என்னை அந்நியப்படுத்தாதே பாரதி. காலேஜ்ல உன்னோட சீனியர் ராமானுஜம். மறந்துட்டியா?” முறுவலித்தான்.
‘அடேய்! அந்த அம்மாஞ்சி ராமானுஜமா நீ? ஆளே அடையாளம் தெரியல! எண்ணெய் சட்டியில தலைய விட்ட மாதிரி முடிய வழிச்சு சீவிட்டு வருவீயே, இப்போ என்ன ஸ்டைலா ஸ்பைக் வச்சிருக்க. என்னைப் பார்த்தாலே முகத்த குனிஞ்சிக்குவ, இப்போ கண்ண பார்த்து பேசற. தாடி மீசைலாம் வச்சு பெரிய அப்பாடக்கரு மாதிரி இருக்க! டோட்டல் சேஞ்ச் ஓவர் மாமு’
“நல்லா இருக்கீங்களா மிஸ்டர் ராமானுஜம்?” எவ்வளவு மறைத்தும் குரலில் லேசாக எரிச்சல் எட்டிப் பார்த்தது. இருக்காதா பின்னே! இவள் எங்கு போனாலும், பாடிகார்ட் மாதிரி பின்னாலேயே சுற்றுவானே காலேஜில். இவளின் நண்பர்கள் பட்டாளம் இவன் பெயரை சொல்லியே இவளைக் கலாய்த்து தள்ளுவார்கள்.
“டீ உமா! உன் ஆளு ராமா வந்துட்டாருடி. உமா, ராமா வாவ்! பேருல கூட என்ன ஒரு பொருத்தம். இன்னிக்கும் உனக்கு மேட்சிங்கா சட்டைப் போட்டுட்டு வந்துருக்காருடீ. நிஜமா சொல்லு, நீ கிளம்பற முன்ன அவனுக்கு மேசேஜ் போட்டு இந்தக் கலருல சட்டை போடுங்கன்னு சொல்லிட்டு தான வர? “ ஓட்டி எடுப்பார்கள்.
கடுப்பில் இவள் திரும்பி பார்த்தால், சட்டென முகத்தைத் தொங்கப் போட்டுக் கொள்வான். சுறுசுறுவென கோபம் ஏறும் இவளுக்கு.
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
“அவன் பேர வச்சு என்னை ஓட்டுனீங்க, தற்கொலை பண்ணிக்குவேன் பாத்துக்கோ! பேர பாரு, ராமானுஜம்! அவன் குடுக்கற ரியாக்சனுக்கு கோமானுஜம்னு வச்சிருக்கனும்.” அவனுக்கு கேட்க வேண்டும் என கத்தியே சொல்லுவாள். அவ்வளவு கடுப்பு அவன் மேல். பின்னால் சுற்றுவது மட்டும் இல்லாமல், இவளும் இவள் நண்பர் கூட்டமும் சாப்பிடும் அத்தனைக்கும் பணம் கட்டி விட்டு ஓடி விடுவான். தேடிப்பிடித்து முகத்தில் பணத்தை விட்டு அடித்து விட்டு வருவாள்.
அவள் குரலின் எரிச்சலை உணர்ந்தவன்,
“இன்னும் என் மேல கோபமா பாரதி? அப்போ உன்னை ரொம்பவே மெண்டலி டார்ச்சர் பண்ணிட்டேன். மன்னிச்சிரு!” உணர்ந்து மன்னிப்புக் கேட்டான்.
“இல்ல பரவாயில்ல. அதெல்லாம் நான் அப்போவே மறந்துட்டேன். சரி வரேன். நான் கிளம்பனும்”
போன் டார்ச் வெளிச்சத்தின் உதவியுடன் கார் அருகே வந்தவள், மீண்டும் திறக்க முயன்றாள். முடியவில்லை. அவனுடன் அந்த இருட்டு இடத்தில் இருப்பது வேறு அசௌகரியமாக இருந்தது. ஆத்திரத்தில் கார் டயரை எட்டி உதைத்தாள் உமா.
அவள் அருகே நெருங்கியவன், அவள் கைப்பற்றி ரிமோட்டை வாங்கினான்.
“நான் என்னன்னு பார்க்கறேன் பாரதி. கோபத்துல கைகாலை காயப்படுத்திக்காத” மென்மையாக சொன்னான். ரிமோட்டை என்னவோ செய்து, அதன் உள்ளே இருந்த சிறிய சாவியை எடுத்தான்.
“இந்தா பாரதி! சாவி போட்டு திற” என நீட்டினான்.
‘அடக்கர்மமே! ரிமோட் உள்ளுக்கு சாவி இருக்கும்னு கூட ஞாபகம் வரலியே. பயம் வந்தா பத்தும் பறந்து போயிருது’ தன்னையே கடிந்துக் கொண்டவள், நன்றி உரைத்து கார் கதவைத் திறந்தாள். காரை ஸ்டார்ட் செய்தவள்,
“நான் வரேன் மிஸ்டர் ராமானுஜம்.” என கஷ்டப்பட்டுப் புன்னகைத்தாள்.
“பாரதி! இப்படிதான் பாதியிலேயே கலட்டி விட்டுட்டுப் போவியா?” ஒரு மாதிரியான குரலில் கேட்டான்.
“வேற என்ன செய்யனும்?” குரலில் கடுப்பு.
“வெளிய மழை தூறுது. என்னோட மோட்டர்பைக்ல போனா நனைஞ்சிருவேன். எனக்கு லிப்ட் குடுக்கறியா ப்ளீஸ்” கார் கண்ணாடி அருகே குனிந்து பளீரென புன்னகைத்தான்.
அவனின் புன்னகை இவளை என்னவோ செய்தது.
“வாங்க”
காரை சுற்றி வந்து அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தான் ராமா.
“தேங்க்ஸ் பாரதி”
“இருக்கட்டும். எங்க போகனும்?”
“என் வீட்டுல ட்ரோப் பண்ணுறியா பாரதி?”
“அட்ரஸ்?”
அட்ரசை சொன்னான். காரில் ஒளிர்ந்த கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தை நெருங்கி இருந்தது.
‘இந்த நேரம் ட்ராபிக்கா இருக்கும். விட்டுட்டு திருப்பிட்டு என் வீட்டுக்கு வரனும். ரிமோட்ல சாவிய எடுத்து குடுத்ததுக்கு, வைர பதக்கம் எடுத்து குடுத்த மாதிரி பில்ட் அப் பண்ணி லிப் கேக்கறான். கலட்டி விட்டுட்டுப் போறியான்னு இடக்கு கேள்வி வேற. இம்சைடா, அப்பவும் சரி, இப்பவும் சரி’
“ஓகே!”
காரை பார்கிங்கில் இருந்து எடுத்து சீராக செலுத்த ஆரம்பித்தாள் உமா.
“வேலைலாம் எப்படி போகுது பாரதி?”
“ஓகே!”
“எல்லாத்துக்கும் ஒரு வரி பதில் தானா? மனசுல பட்டத பேசு பாரதி”
“தாங்குவியா?”
“கம் அகைன்!”
“நான் மனசுல உள்ளத பேசுனா தாங்கிவியான்னு கேட்டேன். சாம்பிராணி!” கோபமாக பேசினாள்.
அவனோ மனசு விட்டு சிரித்தான்.
“லூசாயா நீ? திட்டறேன், என்னமோ தீட்சை குடுத்த மாதிரி இளிக்கற? சொரணை இல்ல? சூடு இல்ல?”
“தப்பு பாரதி!”
“என்னா தப்பு?”
“சொரணையையும், சூடயும் தனித்தனியா சொல்லக் கூடாது! சூடு சொரணைன்னு சேர்த்து சொல்லனும்”
“உங்கப்பன் மவனே! வாயில வண்ணம் வண்ணமா வந்துரும். எனக்கே கிளாஸ் எடுக்கறியா?”
இன்னும் மலர்ந்து சிரித்தான் ராமா.
“இப்போத்தான் என் பாரதி வெளிய வந்துருக்கா. இவ்வளவு நேரமா மரியாதையா பேசன உமாவ எனக்குப் பிடிக்கவே இல்லை”
“டேய்! உனக்கு பிடிச்சா என்ன, பிடிக்கலனா என்ன? அதென்னா என் பாரதி? டங்குவார அத்துவுட்டுருவேன். நடந்த கர்மம்லாம் மறந்து போச்சா?”
“எதுவும் மறக்கல பாரதி! பசுமையா இந்த மனசுல பச்சைக் குத்தி வச்சிருக்கேன்.”
“விட்டா, ஹார்ட்டுக்குள்ள பச்சைக் குத்தியே
போகாத என் பச்சைக்கிளியேன்னு பாடுவ போல. பாவம்னு கார்ல ஏத்தனதுக்கு உன் ஊமை குசும்ப என் கிட்ட மறுபடியும் காட்டறியா? கொன்னுருவேன் பாத்துக்கோ”
“என்னை மன்னிக்கவே மாட்டியா பாரதி?” குரலில் அவ்வளவு குழைவு.
“உன் நினைப்பு இருந்தா தானே நீ செஞ்சத ஞாபகம் வச்சிருப்பேன். எப்போவோ உன்னை மறந்து மன்னிச்சாச்சு.” விட்டேற்றியாக சொன்னாள்.
“நான் உன்னை மறக்கவே இல்லை பாரதி. நான் குடுத்த முத்தத்தையும் தான்”
“டேய்! கைல ஸ்டியரீங் பிடிச்சிருக்கேன். இல்ல கன்னம் மாங்காய் மாதிரி பழுத்துரும். அப்புறம் யாராவது வெட்டி ஊறுகாய் போட்டுருவாங்க. முத்தமாம், மறக்கலயாம். மண்ணாங்கட்டி! அதெல்லாம் ஒரு முத்தமாடா? சின்ன புள்ளைங்க குடுத்துக்கற மாதிரி” பொங்கிவிட்டாள் உமா.
“ஓ! பெரிய புள்ளைங்க மாதிரி இப்போ குடுத்துப் பார்த்துக்கலாமா பாரதி?” மென்னகை அவனிடம்.
“வெளுத்துக் காயப்போட்டுருவேன். அப்போ மாதிரி இல்ல நான். களரி கிளாசுக்குப் போறேன். உன்ன மாதிரி இன்னொருத்தன் குடுத்துறக்கூடாதுல. அதுக்குத்தான். தேங்க்ஸ் டூ யூ! ப்ளடி ராஸ்கல்” குரல் உயர்ந்துக் கொண்டே போனது.
“ரிலாக்ஸ் பாரதி! கத்தாதே ப்ளீஸ்! அன்றைக்கு மாதிரி மூச்சி இழுத்துக்கப்போகுது. ப்ளிஸ் கால்ம் டவுன் பாரதி” கெஞ்சினான் ராமா.
“என் மூஞ்சில ஏன்டா திரும்பவும் வந்து முழிச்ச? உன்னைப் பார்க்க பார்க்க டென்ஷன் ஏறுது. நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரி நடிக்கறது? வலிக்குதுடா. மனசு வலிக்குது!” கண்களில் நீர் வழிந்தது.
“பாரதி, கார ஓரம்கட்டும்மா ப்ளீஸ்! இந்த நிலைமல ஓட்ட வேணாம்டா ப்ளீஸ்”
காரை சாலை ஒரம் நிறுத்தியவள், முகத்தைத் அந்தப்புறம் திருப்பிக் கொண்டாள். அழுவதை அவன் பார்ப்பதில் அவளுக்கு விருப்பமில்லை.
“தப்பு செஞ்சது நான் பாரதி! என்ன தண்டனை வேணும்னாலும் எனக்கு குடு. நீ அழாத” வேதனையுடன் சொன்னான்.
பட்டென திரும்பியவள், அவன் உணரும் முன்னே பளீரென அறைந்திருந்தாள். அப்பொழுதும் கோபம் அடங்காமல் மாறி மாறி அறைந்தாள்.
“நீலாம் சாகாம ஏன்டா இன்னும் உயிரோட இருக்க? என் முன்னுக்கு வராம செத்துரு, செத்துரு!” மேலும் மேலும் அறைந்தாள்.
அடித்து ஓய்ந்தவள், கண்ணைத் துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள். அவன் கன்னங்கள் இரண்டும் சிவந்து கன்றி இருந்தன.
“சாரி, ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டேன்”
“பரவாயில்ல பாரதி. எனக்கு கிடைக்க வேண்டிய பரிசுதான் இது” கண்கள் சோகத்தைக் காட்டினாலும், உதடு சிரித்தது.
“என் மேலயும் தப்பு இருக்கு. அன்னிக்கு நானும் அப்படி பேசி இருக்கக் கூடாது. ப்ச். விடுங்க. இப்ப எதுக்கு பழச எல்லாம் கிளறனும்.”
“நீ இங்க வா பாரதி! நான் கார் ஓட்டறேன்.”
“இல்ல பரவாயில்ல! ஐ கென் மேனேஜ்”
“உன்னைக் கடத்திட்டுப் போயிர மாட்டேன் பாரதி. பயப்படாதே. ஒரு காலத்துல அப்படி நினைச்சிருக்கேன். உன்னைக் கடத்திட்டுப் போய் என் கைவளைவிலேயே வச்சிக்கனும்னு. அது வயது முதிராத ராமானுஜம். இப்ப இருப்பவன், நாலும் பிரிச்சறிய தெரிஞ்சவன். லெட் மீ ட்ரைவ் பாரதி” கெஞ்சலாக வந்தது குரல்.
சற்று நேரம் அவனையே வெறித்தவள், கார் கதவைத் திறந்து இறங்கினாள். அவனும் இறங்கி வந்தான். காரின் முன்னே நின்றவர்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர். மெல்ல அவளின் தாடையை நிமிர்த்தியவன், இன்னும் அழுகிறாளா எனப் பார்த்தான். அவள் அவன் கண்களை சந்திக்காமல், முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் கன்னம் வருட துடித்த விரல்களை கஷ்டப்பட்டு விலக்கியவன், கார் ட்ரைவர் சீட்டில் வந்து அமர்ந்தான்.
அவள் அமர்ந்ததும் கார் பயணப்பட்டது. இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. இருவர் மனதிலும் பழைய நினைவுகள்.
“உம்ஸ், உன் பேர்த்டேக்கு நம்ம க்ளாஸ்ல எல்லோருக்கும் புது பட சினிமா டிக்கேட் கிடைச்சிருக்குடி. உன் ஆளு ராமானுஜம் காதல் பிரம்மாடி. டிக்கேட் வாங்கி குடுத்து அசத்திட்டான். கேக் கூட குடுத்து விட்ருக்கான். வா வந்து வெட்டு”
“அவன் யாருடி எனக்கு கேக் குடுக்க? வர வர அவன் அழும்பு தாங்க முடியல. எனக்கு வர கோபத்துக்கு, அவன் மண்டைய புடிச்சு ஆட்டிருவேன்.”
கடுப்பில் கிளாசுக்குள் நுழைந்தவளை, கரும்பலகையில் எழுதி இருந்த உம்ஸ் வேட்ஸ் ராம்ஸ் வரவேற்றது. கீழே இவர்கள் இருவரின் படம் வேறு கட்டிப்பிடித்து நிற்பது போல வரைந்து வைத்திருந்தார்கள். வேகவேகமாக அதை அழித்தவள், ஹேப்பி பேர்த்டே மிசஸ் ராம்ஸ் எனும் கோரசில் காண்டாகினாள். கையில் இருந்த டஸ்டரை விட்டடித்தவள், ராமானுஜத்தைத் தேடி கிளம்பினாள்.
அவள் தேடி வருவாள் என எதிர்பார்த்தோ என்னவோ, திடலருகே இருந்த மரத்தடி பெஞ்சில் காத்திருந்தான் அவன். பக்கத்தில் ஒரு கிரிடீங் கார்ட், ரோஜா மலர் ஒன்று, சின்ன பெட்டியில் கேக் என வரிசைக் கட்டி நின்றன.
கோபமாக அவன் அருகே சென்று நின்றாள் உமா.
“பா..பாரதி!” திணறினான். இன்று தான் முதன் முதலாக அவளிடம் நேரிடையாக பேசுகிறான்.
“என்ன பா பாரதி? உனக்கு அறிவு இருக்கா இல்லையாடா?”
“அது வந்து”
“இல்லைன்றயா?”
“பாரதி, நான் சொல்லுறத..”
“நீ என்ன சொல்லுறது நான் என்ன கேக்கறது?”
“பாரதி எனக்கு..”
“உனக்கு என்ன? என்னன்னு கேக்கறேன்? உடம்புல கொழுப்பு நிறைய இருந்தா அம்மா கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணி வைக்க சொல்லு. என் பின்னால ஏன் சுத்தி டார்ச்சர் பண்ணுற?”
“பாரதி, எனக்கு உன்னை தான் பிடிச்சிருக்கு. உன்னைதான் கல்யாணம் பண்ணுவேன்” படக்கென சொல்லியவன் கைகளைப் பிசைந்தான்.
“உன் முகரைக்கு என் கூட கல்யாணம் கேக்குதா? நம்ம ரெண்டு பேருக்கும் ஏணி வச்சாலும் எட்டுமா? என் கலர் என்ன உன் கலர் என்ன? சரி கலர விடு, வேற எந்த விதத்துலயாச்சும் பொருத்தம் இருக்கா? நீ படிப்ஸ், நான் நடிப்ஸ். அதான் படிக்கற மாதிரி நடிக்கறத சொன்னேன். நீ கட்டம் போட்ட சட்டை, நான் கலர்புல் கட்டை. ஐ மீன் செம்ம கட்டை. “
அவளின் பேச்சு அவனிடத்தில் புன்னகையை வரவைத்தது.
“என்ன இளிக்கற? செம கட்டை இல்லையா? அப்புறம் ஏன் என் பின்னால மாஞ்சு மாஞ்சு சுத்துற?” கடுப்பானாள் உமா.
“உன்னோட இந்த துடுக்குத்தனம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பாரதி. என் கிட்ட இல்லாதது எல்லாம் உன் கிட்ட இருக்கு. உன் கிட்ட இல்லாதது எல்லாம் என் கிட்ட இருக்கு. காலேஜ் முடிச்சுட்டு நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” மூச்சு விடாமல் வேகமாக பேசினான்.
“இங்க பாரு சீனியர், உன் கிட்ட நல்ல படியா சொல்லுறேன். இனிமே என்னை டிஸ்டர்ப் பண்ணாத. என்னை கொலையே பண்ணா கூட உன்ன மாதிரி ஒரு அம்மாஞ்சிய என் லவ்வரா , லைப் பார்ட்னரா நினைச்சுப் பார்க்க மாட்டேன். சோ இப்படியே எல்லாத்தையும் மறந்துட்டு ஓடிரு” என மிரட்டினாள்.
“நீ லவ் பண்ணலைன்னா கூட பரவாயில்ல. நான் உன்னை மட்டும் தான் நினைச்சுட்டு இருப்பேன் பாரதி.” அவள் அவ்வளவு அவமானப்படுத்தியும் தன் முடிவிலே நின்றான்.
போடா என்று இவள் போயிருக்கலாம், ஆனால் விதி யாரை விட்டது. கோபத்தில் அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தாள் உமா.
“என்னை லவ் பண்ணுவியா? பண்ணுவியா ?” என அவனை நிமிர்ந்துப் பார்த்து சட்டையைப் பிடித்து உலுக்கினாள். அவ்வளவு நெருக்கத்தில் அவளைப் பார்த்தவனுக்கு தடுமாற்றமாக இருந்தது.
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
“விடு பாரதி!” விலக்க முனைந்தான். அவளோ இன்னும் ஆக்ரோஷமாக அவன் சட்டைக் காலரைப் பிடித்து அவள் அருகில் இழுத்தாள். இழுத்தது மட்டும் தான் அவளுக்குத் தெரியும். அதன் பிறகு அவளை, அவன் சற்று மேல் தூக்கி உதட்டோடு உதடு பொறுத்தியதோ, அவளுக்கு தலைதூக்கிய பிலேமாபோபியாவினால் (முத்த பயம்) அவள் மயங்கி சரிந்ததோ எதுவும் ஞாபகம் இல்லை.
அவளின் மயக்கத்தில் பயந்துப் போனான் ராமானுஜம். அப்படியே தன் மேல் சாய்த்து, கன்னம் தட்டி, உலுக்கியும் அவளுக்கு மயக்கம் தெளியவில்லை. கண் கலங்க கைகளில் அள்ளிக் கொண்டவன், லெக்சரர்ஸ் அறையை நோக்கி ஓடினான். அவர்கள் அசவரமாக உமாவை ஹாஸ்பிட்டலில் சேர்த்தார்கள்.
என்ன நடந்தது என கேட்டதுக்கு அவளுக்கு எந்த அவமானமும் வரக்கூடாது என நினைத்தவன், தான் காதலிக்க சொல்லி மிரட்டியதில் மயங்கி விட்டாள் என சொல்லிவிட்டான். டிசிப்ளினரி ஆக்‌ஷன் எடுத்து சீட்டைக் கிழித்துவிட்டார்கள் அவனுக்கு.
குணமாகி வந்தவளும், யாரிடமும் விஷயத்தை சொல்லவில்லை. இருந்தாலும் மறுநாளே, வாட்ஸாப்பில் ராம்ஸ் ஜல்ஸ் உம்ஸ் என இவர்களின் முத்தக்காட்சி காலேஜ் முழுவதும் பரவியது. யார் போட்டோ எடுத்தார்களோ தெரியவில்லை, ஆனால் அது இவர்கள் இருவரின் வாழ்க்கையை வைத்து செய்து விட்டது.
இருவரும் காலேஜில் இருந்து நீக்கப்பட்டார்கள். ராமாவின் பெற்றோர் வயசு கோளாறு என விட்டுவிட்டாலும், இவளின் பெற்றோர் இவளை வரிக்குதிரை ஆக்கிவிட்டனர். அப்படியே இவளை அழைத்துக் கொண்டு ஊரை விட்டே நடையைக் கட்டிவிட்டனர்.
இது நடந்து நான்கு வருடம் ஆகி விட்டது. இப்பொழுதுதான் அவனை மறுபடியும் பார்க்கிறாள் உமா.
காரின் அமைதியை மெல்லிய குரலில் அவனின் பாடல் முனுமுனுப்பு கலைத்தது.
“பாரதிக்கு கண்ணம்மா
நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு
பக்தன் இங்கே
ஒரு நாள் விழிகள் பார்த்தது
என் வாழ்நாள் வசந்தம் ஆனது”
“பாட்ட நிறுத்திட்டு எதுக்கு இப்போ என்னை தேடி வந்தீங்கன்னு சொல்லுங்க? தற்செயலா என்னைப் பார்த்தேன்னு சொல்லாதீங்க! நான் நம்ப மாட்டேன்” அமைதியாக கேட்டாள்.
“நான் எழுந்ததும், உன்னைத் தேடி வந்துட்டேன் பாரதி!”
என்ன உளறல் என்பது போல பார்த்தாள் அவள்.
“ராமா, கோமான்னு கிண்டல் பண்ணுவியே பாரதி, அது நிஜமாகிருச்சு. என்னை விட்டு வேற ஊருக்குப் போக போறேன்னு தெரிஞ்சவுடனே, உன்னைத் தேடி வந்தேன். நீங்க ரயிலுக்குப் போயிட்டதா சொன்னாங்க. எப்படியும் உன்னைப் பார்க்கனும் மன்னிப்பு கேக்கனும்னு தலை தெறிக்க பைக் ஓட்டிட்டு வந்தேன். அப்படியே லாரியில மோதி மயங்கிட்டேன். தலைல அடிப்பட்டு, போன வருஷம் வரைக்கும் கோமால தான் இருந்தேன். உடம்பு தேறியதும் உன்னைத் தான் தேடி வந்தேன் பாரதி. என்னை மன்னிப்பியா? மன்னிச்சுட்டேன்ன்னு சொல்லு பாரதி. நான் உன்னை அதுக்கு மேல தொந்தரவு பண்ண மாட்டேன். உன்னை நினைச்சுட்டு அப்படியே வாழ்ந்துருவேன். ப்ளீஸ் பாரதி”
“கோமால இருந்தியா?” அதிர்ச்சியாக பார்த்தாள்.
தலையை ஆமென ஆட்டினான் அவன்.
“இப்போ நல்லா இருக்கியா? மண்டைல களிமண் நல்லா இருக்கா? இல்ல அடிப்பட்டதுல கொட்டிருச்சா?” சூழ்நிலையை சகஜமாக்க கிண்டலாக கேட்டாள்.
“களிமண்ண வெளியாக்கிட்டு, மூளைய வச்சிட்டாங்க. இனிமே நீ பயப்படற மாதிரி எதுவும் தப்பா செய்ய மாட்டேன்.” சிரித்தான்.
“க்கும்! பைத்தியமாடா உனக்கு? வேற யாரயாச்சும் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருடா. எதுக்கு என்னை நினைச்சுட்டு இப்படியே இருக்க போற? சரி விடு, மன்னிச்சுட்டேன். இனிமே உன் பொழப்ப பாரு”
“நெஜமா மன்னிச்சுட்டியா?”
“நெஜமா, சத்தியமா. போய் தொலை!”
“இப்போதான் எனக்கு சந்தோசமா இருக்கு. தேங்க்ஸ் பாரதி. இதுக்கு மேல நான் நிம்மதியா இருப்பேன். தூரத்துல இருந்து உன்னைப் பார்த்துட்டே இருந்துருவேன்”
“நான் கல்யாணம் பண்ணிப் போயிட்டனா? அப்போ என்னை செய்வ?”
“அவன போட்டுத் தள்ளிருவேன்”
“டேய்!”
“சும்மா சொன்னேன் பாரதி. எங்கிருந்தாலும் வாழ்கன்னு ஓல்ட் ஸ்டைல பாடாம, போ நீ போ, தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போன்னு பாடிகிட்டே காசிக்குப் போயிருவேன்.”
பக்கென சிரித்துவிட்டாள் உமா.
“கோமால இருந்து நல்லா பேசக் கத்துகிட்டடா அம்மாஞ்சி. முன்னலாம் என்னைப் பாத்தாலே வாய் வெத்தலை பாக்கு போடும், இப்போ பாட்டு படிக்குது” இன்னும் சிரித்தாள்.
“ஐ லவ் யூ பாரதி” பட்டென சொன்னான்.
திரும்பி நன்றாக முறைத்தாள் அவள்.
“கொஞ்சம் இடம் குடுத்தா, உன் புத்திய காட்டுற பாத்தியா! போடா”
“வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கறதுக்கு, உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்ச என்னைப் பண்ணிக்கலாம் இல்லையா பாரதி! உன்னோட பயங்கள், தடுமாற்றங்கள் எல்லாத்துலயும் நான் அணுசரனையா இருப்பேன் பாரதி. கொஞ்சம் கன்சிடர் பண்ணக் கூடாதா?”
“முடியாது?”
“சரி விடு, காசிக்கு டிக்கட் போட்டுற வேண்டியதுதான். பாவம் எங்கம்மாவுக்கு தான் பேரப்பிள்ளைங்கள பார்க்கற யோகம் இல்ல”
“ஓவரா சீன் போடாதடா! இப்போத்தான் கும்முன்னு இருக்கியே, நல்ல பொண்ணா பாத்து கட்டிக்க.”
“கும்முன்னு இருக்கேன்னு நீயே சொல்லுறதானே, என்னை கல்யாணம் பண்ணிகோயேன் பாரதி”
“சுத்தி சுத்தி என் கிட்ட தான் வந்து நிப்பியா?”
“தெய்வத்த மட்டும்தான் சுத்தி வரனும்னு இல்ல, மனசுக்கு புடிச்சவங்களையும் சுத்தி வரலாம். தப்பில்ல”
“எப்படியோ போ! உன்னால எங்கப்பா என்னை மாட்ட அடிக்கற மாதிரி அடிச்சிட்டாரு. அவரு பார்க்கற மாப்பிள்ளைய மட்டும் தான் கட்டிக்குவேன்னு வாக்கு குடுத்துருக்கேன். அதனால என்னை விட்டுரு ராம்ஸ்”
“சரி விட்டுட்டேன். என் மேல கோபம் இல்லல?”
“இல்ல ராம். எனக்காக அடிப்பட்டு கோமால இருந்துருக்க, எப்படி இன்னும் கோபத்த இழுத்து வைக்க முடியும்? இனி நீ என்னோட ப்ரண்ட்”
“சந்தோசம் பாரதி. வீடு வந்துருச்சுப் பாரு. நான் பார்க் பண்ணிட்டு, டேக்சி எடுத்து போறேன். யூ டேக் கேர்” என கிளம்பி விட்டான்.
‘என்னடா பொசுக்குன்னு பாய் சொல்லிட்டுப் போயிட்ட! அவ்வளவுதானா உன் டக்கு?’
வீட்டின் உள்ளே வந்தவளை , அவள் அம்மா எதிர்கொண்டார்.
“உமா, அப்பா உனக்கு மாப்பிளை பார்த்துருக்காருடி. இந்தா போட்டோ. அடுத்த மாசம் கல்யாணம். வாக்கு குடுத்தது ஞாபகம் இருக்குல்ல?” கொடுத்து விட்டுப் போய்விட்டார்.
அவனிடம் பேசிவிட்டு வந்தது மனம் லேசாகி இருந்தது. திருமணம் எனும் பேச்சு மீண்டும் மனதை கணக்க வைத்தது. ரூமுக்கு சென்றவள் வேண்டா வெறுப்பாக படத்தை எடுத்துப் பார்த்தாள். அதில் ராமானுஜம் சிரித்தபடி நின்றிருந்தான். இவளுக்கும் முகத்தில் சிரிப்பு படர்ந்தது.
போன் மேசேஜ் சத்தத்தில், அதை கையில் எடுத்து திறந்துப் பார்த்தாள். புது எண்ணில் இருந்து,
“ராம்ஸ் வெட்ஸ் உம்ஸ்?” என வந்திருந்தது.
“உம்ஸ் கில்ஸ் ராம்ஸ்” என பதிலளித்தவள் சிரித்துக் கொண்டாள்.
“ப்ளீஸ் உம், சே ஹ்ம்” (please um, say hmm)
“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” என அடித்து அனுப்பினாள்.
“ஐ லவ் யூ பாரதி! உன்னை கண் கலங்காம பாத்துக்குவேன். இது நம்ம புள்ளைங்க அம்ஸ்(அம்ரிதா) அண்ட் நம்ஸ்(நம்ரிதா) மேல சத்தியம்”
“பிள்ளைங்க பேரு வரைக்கும் செலெக்ட் பண்ணி வச்சிருக்கியா? கொன்னுருவேன்டா ராஸ்கல்.” மேசேஜ் தட்டி முத்த ஸ்மைலியை அள்ளி அனுப்பினாள் உமாபாரதி.

(முற்றும்)
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top