• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thenmazhai 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
தேன்மழை 3

இரவின் பனித்துளிகள் முத்து முத்தாகக் கோட்டைச் சுவர்களில் மின்ன காலைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியெங்கும் முத்தமிட்டுக் கொண்டிருந்தன.
காதலியை முத்தமிடும் காதலனை எச்சரிக்கும் முகப்பருக்கள் போல அந்த நீர்த்துளிகள் சூரியனின் உஷ்ணப்பார்வையில் காணாமற் போயின.
அந்த இளஞ்சூரியனின் வரவின் போதே கழ்வராயனின் கோட்டை அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அதிகாலைப் பூஜை முடிந்து பக்திப் பழங்களாக வயதானவர்கள் கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து நாட்டு நடப்பை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.
கறவை மாடுகள் தங்கள் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணிகள் அசைந்தாட இன்னிசையோடு மேய்ச்சலுக்காக நடந்து போய்க்கொண்டிருந்தன. பூக்கள் விற்கும் பெண்களின் கூச்சல் அந்த இடத்தையே கதிகலங்க வைத்தது.
வணிகர்கள் கூட்டம் கோட்டையெங்கும் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தன. ஆகமொத்தம் கழ்வராயனின் கோட்டை அஷ்டைசுவரியத்துடன் கூடிய மகாலக்ஷ்மியைப் போல காட்சியளித்தது.
கழ்வராயன் கோட்டையின் அந்தக் காலைப் பொழுதைத் திருப்தியோடு நோட்டமிட்ட ஒரு ஜோடிக் கண்கள் நகர்வலம் வந்து கொண்டிருந்தது.
கண்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல. ராஜதந்திரத்திற்குப் பெயர்போன சோழநாட்டு முதலமைச்சர் திருச்சிற்றம்பலமுடையான் பல்லவராயர் தான்.
தங்கள் இளவரசருக்குப் பெண்கொடுக்க அத்தனை தகுதிகளும் கழ்வராயனுக்கு இருப்பது அவருக்குத் திருப்திகரமாக இருந்தது.
நாட்டை இத்தனை ஐஸ்வர்யங்களுடன் வைத்திருப்பவன் பாண்டிய விசுவாசி என்பது அவருக்குக் கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், பாதகமில்லை... பேசிப் பார்க்கலாம் என்று தன்னைத்தானே சமாதானம் பண்ணிக் கொண்டார்.
"மன்னவா! சோழ நாட்டிலிருந்து தூதுவர் வந்திருக்கிறார்." சபாமண்டபத்தில் தன் மந்திரிகள் புடைசூழ ராஜிய விவாதத்தில் ஈடுபட்டிருந்த கழ்வராயனைத் தலைமைக் காவலனின் குரல் கலைத்தது.
"அப்படியா? வந்திருப்பது யார்?" மிதமிஞ்சிய ஆச்சரியத்தில் கேட்டான் கழ்வராயன். சோழத் தூதுக்கு இப்போது எந்தத் தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை மன்னவனுக்கு.
ஆனால், மந்திரிகளுக்கு இணையாக சபையில் உட்கார்ந்திருந்த வண்டார்குழலி கண்கள் மின்ன நிமிர்ந்து அமர்ந்தாள்.
'சோழத்தூதுவர் என்றால்...' அவள் மனதில் வர்ணிக்க முடியாத பேரின்ப அலையொன்று பொங்கிச் சிதறியது.
"சோழ சாம்ராஜ்யத்தின் முதலமைச்சர் திருச்சிற்றம்பலமுடையான் பல்லவராயர் வந்திருக்கிறார்." அந்தப் பெயரை உச்சரிக்கும் போதே அத்தனை மரியாதை தெரிந்தது தலைமைக் காவலனின் குரலில்.
"என்ன? வந்திருப்பது சோழத்தின் முதலமைச்சரா?" ஆச்சரிய மிகுதியில் அரியணையை விட்டு எழுந்த கழ்வராயன் தலைமைக் காவலருடன் சபா மண்டபத்தின் வாசலுக்கே சென்று தூதுவரை வரவேற்றார்.
இத்தனை பெரிய வரவேற்பை பல்லவராயர் எதிர்பார்க்கவில்லை. நீதிக்கும் நேர்மைக்கும் பெயர் போன கழ்வராயன் இத்தனை பண்பாடும் மரியாதையும் தெரிந்தவன் என்ற செய்தி பல்லவராயருக்குப் புதிது.
"வரவேண்டும் முதலமைச்சரே! தங்கள் வரவால் என் மாளிகை மிகவும் கவுரவம் பெறுகிறது." வார்த்தைகள் லாவகமாக வந்து விழ பல்லவராயர் மெய்மறந்து போனார்.
"மன்னவா! கழ்வராயரைப் பற்றி இதுவரை என் செவி புகுந்த சேதிகள் அனைத்தும் சொற்பம் என்று நிரூபித்து விட்டீர்களே. உங்களைக் காணக் கிடைத்தது என் பாக்கியம்." தலை தாழ்த்தி அந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார் பல்லவராயர்.
முதலமைச்சரை வரவேற்று தன் மந்திரிகள் அனைவரையும் அறிமுகம் செய்தார் கழ்வராயர். இறுதியாகத் தன் மகள் வண்டார் குழலியிடம் வந்தவர்,
"முதலமைச்சரே! என் அருந்தவப் புதல்வி வண்டார் குழலி." என்றார்.
பல்லவராயரின் கண்கள் அந்த மங்கையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தது. தங்கள் இளவரசருக்குத் தக்க துணை என்று அவர் மனம் களியாட்டம் ஆடியது.
வண்டார் குழலியைப் பற்றி அறியாது அப்போது எந்த வீரனும் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. ஏனென்றால், வாள் வேல் வீச்சுக்களில் அபார தேர்ச்சி பெற்றவளும், போர் முனைகளில் பங்கெடுத்து படைகளை நடத்திச் செல்வதின் சூட்சுமங்களும் அறிந்த பெண் என்பதால் அவளின் புகழ் நாலாபக்கமும் பரவித்தான் இருந்தது.
தனக்கொரு ஆண்வாரிசில்லையே என்ற கவலையைத் தூக்கி ஆற்றில் போட்டுவிட்டு தன் பெண் மகவை அனைத்திலும் தேர்ந்த வீர மங்கையாக வளர்த்திருந்தார் கழ்வராயன்.
"மன்னர் பெருமானே! தங்கள் புல்வியைக் கண்களால் காணவில்லையே தவிர அவளின் வீர சாகசங்கள் சதா எங்கள் காதுகளில் மோதிக்கொண்டு தான் இருக்கின்றன."
இந்த வார்த்தைளைக் கேட்ட மாத்திரத்தில் கழ்வராயன் தன் மீசையைத் தடவிக் கொள்ள, வண்டார் குழலி தன் இரு கை கூப்பி பல்லவராயரை வணங்கினாள்.
"நீ நீடூழி வாழ வேண்டும் மகளே! உன் தாய்நாட்டுக்குப் பெருமை சேர்த்தது போல நீ வாழப்போகும் தேசத்திற்கும் உன்னால் பெருமை விளைய வேண்டும்."
அந்த ஆசீர்வாதத்தில் குழலியின் கண்கள் வெட்கத்தோடு நிலம் பார்க்க கழ்வராயனின் சிந்தையில் மணியடித்தது. எந்தவித சுற்றிவளைப்பும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார் பல்லவராயர்.
"மன்னர் பெருமானே! அடியேனுக்குச் சுற்றிவளைக்கத் தெரிந்ததெல்லாம் கோட்டைகளைத்தான், பேச்சுக்களையல்ல. நான் நேரடியாகவே விஷயத்திற்கு வந்து விடுகிறேன்." சொன்னவர் மன்னரின் அனுமதிக்காகக் காத்து நின்றார்.
"சபையில் சொல்வது உசிதமென்றால் தாராளமாகச் சொல்லுங்கள் பல்லவராயரே."
"மன்னா! பார்போற்றும் சோழ சிம்மாசனத்தின் முடிக்குரிய இளவரசரும், ராஜதந்திரங்களுக்கும் போர்த்தந்திரங்களுக்கும் இணையில்லாது விளங்குபவரும், போர் முனைகள் பலவற்றில் வெற்றி வாகை சூடி சோழ எல்லைகளை விஸ்தீரனப் படுத்துவதில் இடைவிடாது ஈடுபட்டிருக்கும் சுந்தரச் சோழரின் தவப் புதல்வன் ஆதித்த கரிகாலனுக்கு உங்கள் மகள் வண்டார் குழலியைப் பெண் கேட்டே யான் இங்கு வந்துள்ளேன். இது சோழமன்னரின் விண்ணப்பம்."
பல்லவராயரின் கம்பீரமான குரல் தங்கள் சோழ சாம்ராஜ்யத்தின் இளவலின் பெருமைகளைச் சொன்ன போது கர்ஜித்து ஓய்ந்தது. மண்டபத்தின் சுவர்களில் அவர் குரல் முட்டி மோதி அந்த மண்டபத்தை முழுவதும் ஆதித்த கரிகாலனின் புகழால் நிரப்பியது.
தன் காதுகளையே நம்ப முடியாமல் கழ்வராயன் ஸ்தம்பித்து நின்றார் என்றால் அந்த மண்டபமே சுவாசிக்க மறந்து அமைதியானது.
இவையனைத்தையும் தாண்டி நிதானத்தில் இருந்ததென்றால் அது குழலி மட்டும்தான். தன் மனங்கவர்ந்த காதலனின் வீர தீரப் பிரதாபங்களில் லயித்துப் போனவள் அவன் தொட்டணைத்த நிமிடங்களில் கரைந்து போனாள்.
"மன்னவா! சோழ மன்னரின் அபிலாஷையை உங்களிடம் தெரிவித்து விட்டேன். உங்கள் பதில் தெரிந்தால் அதை சோழ மன்னரிடம் கொண்டு சேர்ப்பதே இந்தத் தூதுவனின் நோக்கம்." மிகவும் பணிவாக வந்தது பல்லவரின் வாய்மொழி.
இதுவரை அதிர்ச்சியின் பிடியிலிருந்த கழ்வராயர் தன்னைச் சுதாரித்துக் கொண்டார். தன் மீது வத்து மோதிய அதிர்ஷ்ட தேவதையில் மெய்மறந்து போனவர் இப்போது சிந்தனை வயப்பட்டார். அவர் சிந்தனையைக் குலைக்காமல் அந்த மண்டபமே மௌனித்திருந்தது.
"பல்லவராயரே! உங்கள் வார்த்தைகள் என்னை மகிழ்ச்சியின் உச்சிக்கே இட்டுச் செல்கின்றன. இந்தக் க்ஷணம் யான் உணரும் மகிழ்ச்சியை அளவிட முடியாது." நிதானமாக வந்தது கழ்வராயனின் வார்த்தைகள்.
இதன் பிற்பாடு மன்னர் என்ன பேசப்போகின்றார் என்று சபையே எதிர்பார்த்திருக்க... பல்லவராயர் மர்மமாகப் புன்னகைத்தார்.
"பல்லவராயரே! கிடைப்பதற்கரிய பொக்கிஷம் என் வாசல் தேடி வந்திருக்கிறது. மகிழ்ச்சிதான்... இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், சோழ சாம்ராஜ்யத்தின் நேசக்கரத்தைப் பற்ற முடியாத துர்ப்பாக்கியசாலி நான்." வார்த்தைகள் நயமாக வந்தாலும் கழ்வராயரின் முகத்தில் ஒரு தீர்மானம் இருந்தது.
"சோழ முதலமைச்சரே! பாண்டியனும் இந்த கழ்வராயனும் தாயாதிகள். இந்தச் சிற்றரசை எனக்கு அமைத்துக் கொடுத்து எனக்கொரு ஸ்தானத்தையும் வழங்கிய பாண்டியனுக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்ய மாட்டேன். நாட்டில் உலவும் செய்திகளை நீங்களும் அறிந்திருப்பீர்கள். சோழத்தின் பார்வை ராஜீய விஸ்தரிப்பில் கழ்வராயன் பக்கம் திரும்பியிருப்பதால் இந்தச் சிற்றரசைப் பலப்படுத்தும் பொருட்டு பாண்டிய இளவலுக்கு என் மகளை மணமுடிக்கப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன."
"மன்னர் பெருமானே! தங்களைக் குறுக்கிடுவதற்கு என்னைப் பொருத்தருள வேண்டும். ராஜீய விசுவாசத்திற்காக உங்கள் மகளின் வாழ்க்கையைப் பணயம் வைக்கப் போகிறீர்களா?"
"பல்லவராயரே! நாட்டின் நலனுக்காக எதையும் பணயம் வைப்பான் இந்தக் கழ்வராயன்."
"சோழ சாம்ராஜ்யத்தினுடனான சம்பந்தம் நாட்டிற்கு இன்னும் நலனைத்தான் கொண்டு வரும் கழ்வராயரே!"
"அது துரோகம் பல்லவராயரே!"
"ஈடு அத்தனை விரும்பத்தக்கதாக இல்லையே? உம் பெண்ணின் வீரத்துக்கு பாண்டிய இளவல் எந்த வகையில் பொருத்தமானவன்?"
"பொருந்திக் கொள்வதுதான் பெண்ணின் இயல்பு. என் பெண்ணின் வீரத்திலாவது பாண்டியனின் பரம்பரை இனி வீரமிக்கதாகட்டும்."
"இதுதான் தங்களின் இறுதி முடிவா?"
"நிச்சயமான முடிவு முதலமைச்சரே!"
"மாற்றம் வர வாய்ப்பில்லையா?"
"ஒருகாலும் இல்லை."
"அப்படியென்றால் சோழ மன்னரின் முடிவையும் உங்களிடம் இந்தச் சபையில் கூறிவிடுகிறேன். மன்னர் பெருமானின் முடிவு சாதகமாக இருந்தால் கிடைப்பதற்கரிய வைரங்கள் பதித்த ஆபரணம் ஒன்றை தனது மருமகளுக்குப் பரிசாக அனுப்பினார் சுந்தரச் சோழர். அதற்கு வேலையில்லை என்று ஆகிப் போனது. முடிவு பாதமாக இருந்தால்... இன்னும் சரியாகப் பத்து நாட்களில் கழ்வராயன் எல்லையில் சோழப்படைகள் பாசறை அமைக்கும். அன்று இரவு மூன்றாம் ஜாமத்தில் போர் முரசு கொட்டும். உயிர்ப் பலி இல்லாமல், ரத்தம் சிந்தாமல் கைகோர்த்துக் கொள்ள ஆசைப்பட்டது சோழ அரசு. அதற்கு அவசியமில்லை... ரத்தம் சிந்தித்தான் நாங்கள் கைகோர்ப்போம் என்று கழ்வராயர் சொன்னால் நாங்கள் அதற்கும் தயார்தான். மன்னர் பெருமானே! நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சோழ சாம்ராஜ்யத்தின் நாளைய மன்னன் ஆதித்த கரிகாலன் தான் தங்கள் மகளை மணக்கப் போகும் மணாளன். அதில் எந்த மாற்றமுமில்லை. மாமனாரைப் போர் முனையில் அறிமுகம் செய்து கொள்ளும் பாக்கியம் எந்த மருமகனுக்குக் கிடைக்கும்?"
நெஞ்சை நிமிர்த்தி ஆவேசமாக இதுவரை பேசியவர் கேலியாக முடித்தார். அரியணையை நோக்கித் தலை சாய்த்து விட்டு கூடியிருந்தவர்களுக்கு வணக்கம் வைத்தார் பல்லவராயர். கடைசியாகக் குழலியைப் பார்த்தவர்,
"மனம் தளராதே மகளே! சோழ இளவரசன் சொன்ன சொல் தவறமாட்டான். கூடிய சீக்கிரம் வந்து சேருவான்... மணமாலையோடு." சத்தமாகச் சொன்னவர் மீண்டுமொருமுறை சபையை வணங்கிவிட்டு வெளியேறிவிட்டார்.
அலையொன்று அடித்து ஓய்ந்தது போல் அந்த இடமே அமைதியாகிப் போனது. அத்தோடு சபையைக் கலைத்து விட்டு கழ்வராயனும் எழுந்து போய்விட்டான்.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நந்தவனத்தில் உலவிக் கொண்டிருந்தாள் வண்டார் குழலி. மாலை ஸ்நானத்தை அப்போதுதான் முடித்திருந்ததால் அவள் மேனியிலிருந்து ஸ்நானப் பொடிகளின் நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது.
சோழத் தூதுவர் வந்து போய் அன்றோடு மூன்று நாட்கள் கடந்திருந்தன. தந்தையின் பதிலில் காதல் கொண்ட மனது சீற்றம் கொண்டாலும் அதிலும் ஓர் நியாயமிருப்பதை அவளும் அறிந்துதான் இருந்தாள்.
அந்த ஆஜானுபாகுவான சரீரமும், விசாலமான நெற்றியும், புருவத்தில் தெரிந்த போர் வடுவும் உள்ளத்தை விட்டு நீங்காமல் அவளைச் சதா இம்சித்துக் கொண்டே இருந்தன.
நாட்களை எண்ணியபடி நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தாள் இளவரசி. நிலவும் அவள் சோகத்தைப் புரிந்து கொண்டது போல நகராமல் அவளையே பார்த்தபடி இருந்தது.
"இளவரசி." அல்லியின் குரலில் திரும்பிப் பார்த்தாள் குழலி.
"ஒற்றன் ஒருவன் உங்களைக் காண வந்திருக்கிறான்." சுற்று முற்றும் பார்த்தபடி ரகசியமாகச் சொன்னாள் அல்லி.
"என்ன? ஒற்றனா? என்னைப் பார்க்கவா?"
"ஆமாம் தேவி. சோழ தேசத்து ஒற்றன்." அந்த வார்த்தைகளில் வண்டார் குழலி சட்டென்று எழுந்தாள்.
"என்ன சொல்கிறாய் அல்லி?"
"இளவரசி! இரைந்து பேச வேண்டாம், என்னோடு வாருங்கள்." சொல்லியபடியே அல்லி முன்னால் நடக்க, அவளைப் பின் தொடர்ந்தாள் குழலி.
சற்றுத் தொலைவிலிருந்த மரத்திற்குப் பின்னால் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு ஒரு மனிதன் நிற்பது தெரிந்தது. அவசரமாக அந்த மனிதன் அருகில் சென்ற வண்டார் குழலி,
"ஒற்றனே! இளவரசர் நலமாக இருக்கிறாரா? எதன் பொருட்டு உன்னை இங்கே எனைக் காண அனுப்பி இருக்கிறார்? முக்கியமான சேதியா?" ஆனந்தப் பரபரப்பில் குழலியின் வார்த்தைகள் அத்தனை வேகமாக வந்தது.
"சோழத்தின் தூதுவருக்கு என் தந்தை சம்மதம் சொல்லவில்லை என்று அவருக்குக் கோபம் வந்ததா? நான் என்ன பண்ணட்டும் சொல்? கழ்வராயன் எல்லையில் நிம்மதியாக வாள் சுற்றிக் கொண்டிருந்தேன். அவர் தானே என்னைக் கோட்டைக்குத் திரும்பு என்றார். இங்கு நடக்கும் கூத்துக்களைப் பார்க்கும் போது எனக்கு இங்கே இருக்கவும் பிடிக்கவில்லை."
அவள் போக்கில் புலம்பிக் கொண்டிருந்தவள் அப்போதுதான் கவனித்தாள். அந்த ஒற்றன் இதுவரை எதுவும் பேசவில்லை.
"ஏனப்பா எதுவும் பேசாமல் நிற்கிறாய்? இளவரசர் என்ன சேதி சொல்லி அனுப்பினார்? அவர் வருகைக்காக இங்கொருத்தி அல்லும் பகலும் காத்துக் கிடக்கிறாள் என்று அவரிடம் போய்ச் சொல். உண்ணவும் பிடிக்கவில்லை. உறக்கமும் தழுவவில்லை. பைத்தியக்காரி போல் நந்தவனத்தில் உன்னிடம் புலம்பினேன் என்று அந்தக் கல்நெஞ்ச இளவரசரிடம் போய்ச் சொல். போ!"
கோப மிகுதியில் தன் இயலாமையக் கொட்டியவள் திரும்பி நடந்தாள். சட்டென்று அவள் கை பின்னே இருந்து தீண்டப் பட தீப்பார்வை ஒன்றை ஒற்றனின் புறம் திரும்பி வீசியவள் பிரமிப்பில் வாய்பிளந்து நின்றுவிட்டாள்.
"பேரழகே!" அந்த வார்த்தை அவள் செவிகளில் மதுர கானமாக நுழைந்தது.
"அன்பரே! வந்திருப்பது தாங்கள் தானா? நான் கனவொன்றும் காணவில்லையே?" குழலியின் சந்தேகத்தில் மந்தகாசப் புன்னகையொன்றை உதிர்த்தான் சோழ இளவல். அவள் கரம் பற்றியிருந்த அவன் கை, விரல்களை லேசாக அழுத்திப் பிடித்தது.
"கனவல்ல... நிஜம்தான் இளவரசி." அப்போதுதான் சுயநினைவிற்கு வந்த குழலி சுற்று முற்றும் பார்த்தாள். அல்லியைக் கூடக் காணவில்லை.
"உன் தோழி போய் நெடுநேரம் ஆகிவிட்டது." சட்டென்று கரிகாலனை மரங்கள் அடர்ந்திருந்த இருள் சூழ்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்றாள் குழலி.
"இளவரசே! என்ன இது? இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலையில் தாங்கள் இப்படி வரலாமா? கழ்வராயரின் வீரர்கள் பார்த்தால் என்ன ஆவது?"
"எது வேண்டுமானாலும் ஆகட்டும். இந்தப் பேரழகைப் பார்க்காமல் கரிகாலனுக்கு எதுவும் ஓடவில்லையே. அதுதான் புறப்பட்டு வந்து விட்டேன்."
"ஆனாலும்... உங்களுக்கு இத்தனை தைரியம் ஆகாது."
"அப்படியா என்ன? யாரோ இப்போது ஒற்றனிடம் என்னைப் பற்றிக் குறை கூறினார்களே?"
"அது... அது..." திக்கித் திணறியவள் சட்டென்று சிரித்துவிட்டு தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.
"பேரழகே! இது நியாயமா? இத்தனை ஆவலாக உனைக் காண ஓடோடி வந்தால் உன் மலர் முகத்தை மூடிக் கொள்கிறாயே?" அவன் பேச்சில் கைகளை லேசாக அவள் இறக்க அந்தக் கண்கள் மட்டும் அவனைக் குறி வைத்துத் தாக்கியது. அவள் சூடியிருந்த மல்லிகைச் சரத்தின் ஒற்றை இழை பிரிந்து நிற்க அதைச் சரியாகக் கூந்தலில் சொருகியவன்,
"பேரழகே! அதிக நேரம் என்னால் தாமதிக்க முடியாது. உன் வீரர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு வந்திருக்கிறேன். புறப்படட்டுமா?"என்றான்
அத்தனை நேரமும் உல்லாசமாக இருந்த வண்டார் குழலியின் முகம் கூம்பிப் போனது.
"அன்பரே! ஏனிந்த அவசரம்? எனை மீறி அப்படி யார் உங்களை என்ன செய்ய முடியும்? ஒரு வார்த்தை சொல்லுங்கள். இப்போதே நானும் உங்களோடு புறப்பட்டு வருகிறேன்."
அவள் கண்ணீர்க் குரலில் தன் காதல் சொன்னபோது கரிகாலன் மனம் கனிந்து போனது.
"குழலி! உன்னை என்னோடு அழைத்துச் செல்ல நான் நினைத்தால் என்னைத் தடுப்பவர் தலை இந்த மண்ணில் உருளும். அது உனக்குத் தெரியாதா? ஆனால் அந்த அகௌரவத்தை உனக்குக் கொடுக்க நான் விரும்பவில்லை." அவளின் இடையணைத்துத் தன்னருகே கொண்டுவந்த கரிகாலன் அவள் தலையைக் கோதிக் கொடுத்தான்.
"கலங்காதே! இன்னும் சொற்ப நாட்கள் தான். சோழப் போர் முரசு கழ்வராயன் எல்லையில் முழங்கி இரண்டு நாட்களில் உன்னை இந்த ஆதித்த கரிகாலன் அந்தப்புரத்தில் சந்திப்பான். அப்போதும் இது போல ஒற்றை முத்துச் சரத்தோடு நிற்காமல் அலங்கார பூஷிதையாக என் முன்னே வா."
அவன் கேலியில் குழலியின் கண்களில் கோபம் கனன்றது.
"ஏது? என் தேவிக்குக் கோபம் வருகிறது போல் தெரிகிறதே?"
"பேசாதீர்கள்! உங்களைக் காண முடியவில்லையே என்ற சஞ்சலத்தில் நான் வாடுகிறேன். நீங்கள் என்னைக் கேலி செய்கிறீர்கள்."
"ஹா...ஹா..." இரைந்து சிரித்த கரிகாலனின் வாயை மூடினாள் குழலி.
"இளவரசே! என்ன இது? இந்த நேரத்தில் இப்படி இரைந்து சிரிப்பது சரிதானா?"
"என் காதலியோடு நந்தவனத்தில் இப்படிச் சிரிக்காமல் வேறு எப்படிச் சிரிப்பது தேவி? நாழிகை ஆகிறது. நான் கிளம்பட்டுமா?" அந்தக் கேள்வியில் குழலியின் கண்கள் இரண்டும் கலங்கிப் போயின.
"சென்று வாருங்கள் அன்பரே! பார் போற்றும் இந்தச் சோழ இளவலின் வருகைக்காக இந்தக் குழலி வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பாள்."
"வாள் சுற்றும் என் வீர மங்கை என் காதல் கேட்ட நாள் முதல் காணாமற் போய்விட்டாளோ?"
"பாசறையில் வாள் சுற்றும் கழ்வராயன் மகள் வேறு. இவள்... இந்த அன்பரின் காதலில் கட்டுண்ட காதலி..." மேலே சொல்ல முடியாமல் நாணம் தடுக்க, அவள் சொல்ல வந்ததைச் சோழ இளவரசன் சொல்லி முடித்தான்.
"பாசறை வேறு... பள்ளியறை வேறு. அப்படித்தானே பேரழகே!" இளவரசனின் மொழிகளில் வெட்கியவள் தலை குனிந்து கொண்டாள். தன் இடைக்கச்சையிலிருந்து எதையோ எடுத்தவன் அதை அவள் கைகளில் கொடுத்தான்.
"என்ன இது?"
"என் அன்னையின் பரிசு."
"அப்படியா?" அவள் குரல் ஆனந்தக் கூத்தாடியது. அந்த நவரத்தின மாலையை நிலவொளியில் தன் இரு கைகளாலும் தூக்கிப் பிடித்தவள் தன் இரு கண்களிலும் அதை ஒற்றிக் கொண்டாள்.
"நீங்கள் இங்கே வருவது அவர்களுக்குத் தெரியுமா?"
"தெரியும்."
"அனுமதி கிடைத்ததா?"
"அனுமதியும் கிடைத்தது. பரிசும் கிடைத்தது."
"என் நன்றியையும் வந்தனத்தையும் ராணிக்குத் தெரிவியுங்கள்."
"ஆகட்டும் தேவி." அந்த மாலையை அவளிடமிருந்து வாங்கியவன் அதை அவள் கழுத்தில் அணிவித்தான். மின்னிய நவரத்தினங்களையும் தாண்டி அவன் பார்வை அவை தழுவிய இடங்களையும் தொட்டுச் சென்றது.
"பேரழகே! நான் புறப்படுகிறேன்."
"சென்று வாருங்கள் அன்பரே!" முகம் வாடியிருந்தாலும் அழகான புன்னகை அதில் பூத்தது. சற்றே நகர்ந்தவன் சட்டெனத் திரும்பி அந்தப் பேரழகைத் தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தான்.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவள் அதரங்களைச் சிறை செய்தவன் அடுத்து வந்த ஒரு சில வினாடிகளைத் தனதாக்கிக் கொண்டான்.
அந்த இன்பத்தேனை இயன்றவரை சுவைத்தவன் அவள் கன்னத்திலும் இதழ் பதித்துவிட்டு நிற்காமல் நகர்ந்து விட்டான். கணப்பொழுதில் மறைந்து போனவனைப் பார்த்தபடியே நின்றாள் வண்டார் குழலி. அவள் கைகள் கழுத்தில் கிடந்த மாலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அழகியாரே இதற்கு மேல் என்னால் ஒரு கணமும் பொறுக்க முடியாது. எனக்கு உடனடியாக அடுத்தடுத்த பதிவுகளும் வேண்டும். சொக்குப்பொடி போட்டுத்தான் எழுதத் தொடங்குவீர்களோ!!! மயங்கித்தான் போகிறோம் உமது வார்த்தைகளில்... பசலை நோய் காதலனை பிரிந்தால் மட்டுமல்ல உமது எழுத்துக்களை எதிர்பார்த்து கூட வருமென்று நான் உணர்ந்து கொண்ட தருணமின்று...
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
மச்சான்.... இதுவல்லவோ... காதல் மழை.. அடர் மழை... தேன் மழை??

பாசறைக்கும் பள்ளியறைக்கும் இன்று தான் வித்தியாசம் தெரிந்தது??

சோழ இளவள் களவு புரிவதிலும் வல்லவர் போலும் ...

அருமை அருமை ??
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
நான் அம்மா வீட்டில்... அவசர கதியில் வாசிப்பதற்கு விருப்பமில்லை. கூடவே வாசிப்பதற்கு என் கண் கண்ணாடி கையில் இல்லை. So வீட்டுக்கு போய் தான் ஆர அமர, நிதானமாக படிப்பேன்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
அழகான தமிழ் ??அருமையான வார்த்தைகளில்??? தங்களின் கை வண்ணத்தில் ஜொலிக்கிறது ?????? போர்களத்தில் அன்பரின் காதலி வாள் சுற்ற வருவாளா?? எங்களை தவிக்க விடாமல் விரைந்து தெரிவிக்கவும்??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top