• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Venpani Thoovum Nilave-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasumathishiva

நாட்டாமை
Joined
Apr 11, 2019
Messages
62
Reaction score
178
Location
Kumbakonam
எதிரில் கண்ட காட்சியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அதிர்ந்தனர்.பெற்ற பெண்ணை அந்த கோலத்தில் கண்ட சிவகாமி மணிவாசகத்தின் நெஞ்சில் நெருப்பு தணலைக் கொட்டியதைப் போல ஆனது.ராஜமாணிக்கம் முத்துசெல்விக்கோ மகன் இந்தளவு கீழெறங்கிவிட்டானே என்ற அவமானம்.மீனாட்சி ஜெயந்தனோ தம் பெண்ணின் திருமணத்தில் இப்படிப்பட்ட அசிங்கம் நடந்துவிட்டதே என மனம் வெதும்பினர்.ரமேஷின் நிலையோ அந்தோ பரிதாபம்.பல நாள் திட்டம் போட்டு அவன் ஆரம்பித்த நாடகத்தில் அவனே கதாநாயகன் என்று எண்ணி அவன் இறுமாந்திருந்த போது எவனோ ஒருவன் அவன் இடத்தில் அவன் திட்டத்தை அரங்கேற்றியதில் ஏகத்திற்கு காண்டாகியிருந்தான்.

இதற்கு மேலும் அந்த காட்சியைக் காண சகிக்காமல் சிவகாமியும் முத்துசெல்வியும் தங்கள் பிள்ளை செல்வங்களை எழுப்ப முயன்றனர்.ஆனால் இடியே விழுந்தாலும் எழாதவரைப் போல இருவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.பொறுக்க முடியாமல் பக்கத்தில் இருந்த டம்பளர் நீரை மகளின் முகத்தில் தெளித்தார் சிவகாமி.ஆனால் முத்துசெல்வி ஜக்கு நீரையும் மகனின் முகத்தில் ஊற்றி விட்டார்.

திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தனர் இருவரும்.தங்கள் இருந்த நெருக்கத்தில் பதறி இருவரும் பிரிந்து தங்கள் அன்னையரிடம் சென்று நின்றனர்.மகன் அருகில் வரவும் சப்பென அவன் கன்னத்தில் அறைந்தார் முத்துசெல்வி.இதுவரை தன்னை அதட்டி ஒரு வார்த்தை கூட கூறியிறாத தன் அன்னை இத்தனை பேர் எதிரில் தன்னை அடித்தது சொல்லமுடியாத வேதனை அளித்தது அவனுக்கு.

"அம்மா?!!"

"என்னடா அம்மா!சே சே நீயும் ஒரு மனுசனா?!!நீ எத்தன கெட்டழிஞ்சாலும் நா இதுவரை ஒரு வார்த்தை உன்ன வெஞ்சதில்ல...ஆனா இன்னிக்கு குடும்ப பொண்ணு மேலேயே கைய வெச்சிட்டே...இதுக்கு உனக்கு மன்னிப்பே கெடையாதுடா...படுபாவி...."

"அம்மா!நீ நெனைக்கிற மாதிரி எந்த தப்பும் இங்க நடக்கல... இந்த பொண்ணு எப்ப ரூமுக்குள்ள வந்துச்சுன்னு எனக்கு தெரியாதுமா...."

அவன் அப்படி சொன்னதும் விலுக்கென்று அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் நித்திலா.அவன் கூறியது ஏதோ அவளே அவன் படுக்கை வந்து அவனோடு படுத்ததுப் போல் இருந்தது.அதில் அவள் கோபம் தலைக்கேறியது.அதற்குள் அவள் தாய் சிவகாமி தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

"ஐயோ வரமாட்டேன்னு சொன்னியே கட்டாயப்படுத்தி கூட்டி வந்தது இந்த அலங்கோலத்த பாக்கவா...கட்டி காத்த மானம் மரியாதியெல்லாம் போச்சே..."

அவர் கையைப் பிடித்துத் தடுத்த நித்திலா

"அம்மா! அப்படி எந்த தப்பும் ஆயிடலம்மா.... உன் பொண்ணு மேல உனக்கு நம்பிக்கை இல்லையா...நா அப்படியெல்லாம் செய்வேனா...நா அப்படிப்பட்டவளா?!!!"

"தப்பு ஆயிடுச்சோ இல்லியோ...ஒரே ரூம்புல ராத்திரி பூரா ஒரு ஆம்பளயோட இருந்த பின்னாடி உன் பேரு கெட்டது கெட்டது தான்...இனி குடும்பத்தோட நாண்டுகிட்டு சாகறது ஒண்ணு தான் நமக்கு வழி...."என்று கூறி ஹோவென அழுதார் சிவகாமி.

"அண்ணி... அப்படியெல்லாம் சொல்லாதீங்க"என முத்துசெல்வியும்

"தங்கச்சி! அப்படியெல்லாம் சொல்லக் கூடாதும்மா..."என்றார் ராஜமாணிக்கம்.

"வேற என்னதண்ணே பண்ணட்டும்... பொண்ணு வாழ்க்கை பாழா போச்சே...இனி இந்த சேதி தெரிஞ்சு யாரு இவள கட்டுவாங்க...பழிய சொமந்துகிட்டு வாழறத விட சாகறது எவ்ளோவோ மேலு"

"சே சே அப்பிடியெல்லாம் பேசாத தங்கச்சி....என்னமோ தெரிஞ்சோ தெரியாமலோ தப்பு நடந்து போச்சு...இப்ப என்ன பொண்ணு வாழ்க்கை கெட்டுப் போச்சோன்னு தானே நீ கலங்குற...யாரால இப்படியாச்சோ அவனே அவ கழுத்துல தாலிக் கட்டுவான்...என் பையன் கார்த்திகேயனுக்கும் உன் பொண்ணு நித்திலாவுக்கும் கல்யாணம்...யாரு தடுத்தாலும் இது நடந்தே தீரும்...."

"அப்பா....!"என்று கோபமாக ஏதோ கூற வந்த கார்த்தியை ஒரு முறைப்பில் அடக்கினார்.

"தங்கச்சி உனக்கு இதுல சம்மதம் தானேம்மா?"

"அம்மா!வேண்..."என்று ஆரம்பித்த நித்திலாவின் கையை அழுத்தி அவள் பேச்சை நிறுத்திய சிவகாமி

"அண்ணே! அதெல்லாம் சரிதாண்ணே...ஆனா உங்க அந்தஸ்தென்ன எங்களுது என்ன....ஏணி வச்சாலும் எட்டாதேண்ணே!!"

"அந்தஸ்து என்னம்மா... அந்தஸ்து... இன்னிக்கு இப்படி ஆனதால இப்பிடி கேட்டேன்னு நெனைக்காதே... எனக்கும் உங்க அண்ணிக்கும் முதல்ல இருந்தே நித்திலாவ கார்த்திக்கு கேக்கனும்னு கொள்ள ஆசை...அது இப்பிடி ஒரு அசம்பாவிததுல கேக்க நேந்தது நம்ம விதி தான்...நீ ஒண்ணும் யோசிக்காத... சரின்னு சொல்லு..."

"நீங்க இவ்ளோ சொன்னப்புறம் எங்களுக்கு என்னண்ணே... எங்களுக்கு பூரண சம்மததேன்"

"மச்சான் ஒண்ணும் சொல்லலையே...என்ன மச்சான் உங்க விருப்பத்த சொல்லுங்க..."

"நா சொல்றது என்ன மச்சான்...நல்லதனமா இது கூடி வரலையேங்கறத சங்கடத்த தவிர உங்க வீட்டுக்கு பொண்ணு கொடுக்க நாங்க குடுத்து வச்சிருக்கனும்"

"அப்புறம் என்ன இன்னும் ரெண்டு நாளைல நல்ல முகூர்த்தம் இருக்குன்னு ஜோசியர் ஐயா சொன்னாரு...சட்டுப்புட்டு அதுலயே முடிச்சிடுங்க...தள்ளிப் போட்டா சும்மா வேண்டாத பேச்சு கெளம்பும்... என்ன நா சொல்றது"என்றார் ஜெயந்தன்.

தந்தையை அடித்து நொறிக்கி விடும் ஆத்திரம் கிளம்பியது ரமேஷுக்கு.இது எல்லாம் அவன் போட்டத் திட்டம்.ஆனால் எப்படியோ தப்பி நித்திலா இப்போது வேற்றொருவன் சொத்தாவது அவனுக்கு உள்ளுக்குள் பற்றி எறிந்தது.ஏதாவது செய்து இந்த ஏற்பாட்டை நிறுத்தலாம் என்றால் அவன் தந்தையே அவர்கள் திருமணத்தை விரைந்து நடத்த யோசனை கூறுகிறார்.இதில் இப்போது தலையிட்டு இந்த ஏற்பாட்டிற்கு எதிராகப் பேசினால் அவனை எல்லோரும் சேர்ந்து வெட்டிப் பொலிப் போட்டு விடுவர்.அதனால் பொங்கிய கோபத்தை அடக்கிக் கொண்டு அங்கு நடப்பதை வெறித்தான்.
 




Vasumathishiva

நாட்டாமை
Joined
Apr 11, 2019
Messages
62
Reaction score
178
Location
Kumbakonam
ஜெயந்தன் கூறிய யோசனை எல்லோருக்கும் சரியென்றே தோன்றியது.அதன்படி இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டது.இரண்டு வீட்டாரும் பம்பரமாக சூழன்று அத்தனை ஏற்பாடுகளையும் விரைவாக செய்து முடித்தனர்.

இந்த இரண்டு நாட்களும் கார்த்தி நித்திலா இருவரின் எதிர்ப்பும் இரு வீட்டாருக்கும் செவிடன் காதில் ஊதிய சங்கானது.யாரும் அதை சட்டை செய்யவேயில்லை.கார்த்தி எங்காவது ஓடி விட்டால் என்று அவனுக்கு பலமான காவல் வைக்கப்பட்டது.ஆனால் நித்திலாவிற்கு சிவகாமியின் கண்ணீர் அவளை பேசாமடந்தை ஆக்கி சாவிக் கொடுத்த பொம்மைப் போல் சொன்னதை செய்தாள்.

குறித்த நல்ல நேரத்தில் ஊராரும் உறவினரும் வாழ்த்த கார்த்திகேயன் நித்திலாவின் கழுத்தில் தாலிக் கட்டி அவளைத் தன் மனைவியாக ஏற்றான்.இருவரின் மனமும் பிடிக்காத திருமணத்தை ஏற்க மாட்டாமல் துன்பத்தில் தவித்தது.

சடங்குகள் முடிந்து இருவரும் பெரிய வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.ஆரத்தி சுற்றி இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றனர்.பாலும் பழமும் கொடுத்து சுமங்கலிப் பெண்கள் ஆசிக் கூறினர்.ஊரையேக் கூட்டிப் பெரிய விருந்தே ஏற்பாடு செய்திருந்தார் ராஜமாணிக்கம்.ஒருவொரு மூலையில் திருமணத்தைப் பற்றிய கிசுகிசு மெல்லியக் குரலில் பேசிக் கொள்ளப்பட்டது.ஆனால் பண்ணையாரின் கோபத்திற்கு ஆளாக விரும்பாததால் யாரும் அவர்களிடம் வந்து எதுவும் அதைப்பற்றி விசாரிக்கவில்லை.

விருந்து முடியவும் நித்திலாவின் குடும்பம் தங்கள் ஊருக்கு கிளம்பினர்.கண்ணீர் தாரையாக வழிய அவர்களுக்கு விடைக் கொடுத்தாள் நித்திலா.

விருந்து முடிந்து முக்கால்வாசி சொந்தங்கள் விடைப்பெற்று சென்றுவிட்டனர்.மீதி இருந்தோரும் விருந்துண்ட களைப்பில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.

மாலைக் காப்பிக்காக கணவனை அழைத்து வருமாறு நித்திலாவை அவன் அறைக்கு அனுப்பினார் முத்துசெல்வி.வேண்டாவெறுப்பாக அவன் அறைக்கு சென்றப் போது விட்டதை வெறுத்தவாறு படுத்திருந்தான் கார்த்தி.எப்படி அழைப்பது என்று திகைத்த நித்தி தன் கையில் கலகலத்த வளையலை ஆட்டி ஓசைப் படுத்தினாள்.அதில் உணர்வுப் பெற்ற கார்த்தி எழுந்து அமர்ந்தான்.அவன் முகத்தை நிமிர்ந்துப் பாராமல் சுவரைப் பார்த்தபடி

"அத்த காப்பிக்கு கீழ வர சொன்னாங்க..‌"என்றவள் விருட்டென திரும்பியும் பாராமல் சென்றுவிட்டாள்.

'என்ன திமிரு....ஏதோ வேலக்காரனுக்கு சொல்றத போல சொல்லிட்டு போறாளே...கொஞ்சமாச்சும் புருஷன்னு பயம் மருவாதி ஒண்ணுமே இல்லியே..ம்....பாத்துக்கறேன்டி உன்ன'என்று கருவினான் அவன்.

இருவருக்குமே அன்று நடந்த விஷயம் புரிந்துக் கொள்ள முடியாத மர்மமாகவே இருந்தது.என்ன முயன்றும் அன்று என்னதான் நடந்திருக்கும் என்று இருவராலுமே அனுமானிக்க முடியவில்லை.இருவருமே இன்னொருவர் அன்று அறைக்குள் வராமல் இருந்திருந்தால் இந்த கஷ்டமும் அவமானமும் நேர்ந்திராதே என்று மற்றவர் மேல் வெறுப்பை வளர்த்தனர்.

சிறிது நேரத்தில் கீழே இறங்கி வந்த கார்த்தி அங்கே தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த தந்தை தமையன் அருகில் அமராமல் மூலையில் இருந்த சேரில் அமர்ந்தான்.அத்தை வைத்துக் கொடுத்த காப்பி டம்பளர்கள் அடங்கிய தட்டை எடுத்து வந்த நித்தி முதலில் ராஜமாணிக்கத்திற்கும் சந்துருவுக்கும் கொடுத்தாள்.பின்னர் கணவனுக்கு கொடுத்துவிட்டு காலி டம்பளரை எடுத்துப் போவதற்காக அங்கேயே நின்றாள்.அப்போது அங்கே வந்த முத்துசெல்வி

"என்னங்க ராத்திரி சடங்குக்கு பூவு போதாது போல இருக்கு...நம்ப பொன்னப்பன டவுனுக்கு அனுப்பி வாங்கியற சொல்லுங்க..."

"அதுக்கென்ன செல்வி!இப்பவே போயி வாங்கியாற சொல்றேன்..."என்றார் அவரின் கணவர்.

அது என்ன சடங்கு என்று புரிந்துக் கொண்ட நித்தியின் முகம் சிவந்து விட்டது.அங்கே நிற்க வெட்கி உள்ள செல்ல நினைத்தாள்.ஆனால் கார்த்தியோ தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் காப்பியை ரசித்து ருசித்துக் குடித்துக் கொண்டிருந்தான்.

பெரியவர்கள் பேச்சை செவிமடுத்தப்படி அப்போது அங்கே வந்த தெய்வானை

"அத்தே! ராத்திரி என்ன சடங்கு இருக்கு?"என்றாள் ஏதும் அறியாதவள் போல்.

'இவளுக்கு எப்போ எத பேசனும்னு வெவஸ்தையே கிடையாது...'என்று மனதிற்குள் மருமகளை திட்டிய செல்வி

"அது மொதராத்திரிக்கு தான் பூ பத்தல வாங்கிட்டு வர சொன்னேன்"

"மொதராத்திரியா?!!!!அத முதல்லையே முடிச்சிட்டுத் தானே இரண்டு பேரும் கல்யாணம் கட்டியிருக்காங்க... அப்படி பாத்தா இன்னிக்கு ஒண்ணும் இவங்களுக்கு மொதராத்திரி இல்ல"என்றாள் எகத்தாளமாக.

"அண்ணி......!!!"சிம்ம கர்ஜனையாக சீறிய கார்த்தி தான் அமர்ந்த நாற்காலி பின்னுக்கு விழ எழுந்தவன் கையிலிருந்த டம்பளர் முற்றத்தில் சென்று சப்தமிட்டப்படி விழுந்தது.

மைத்துனன் கோபம் எப்படிப்பட்டது என்பதை பலமுறை அனுபவத்தில் கண்டவளாதலால் சத்தமில்லாமல் அங்கிருந்து நழுவி விட்டாள் தெய்வானை.

யாரையும் நிமிர்ந்து பாராமல் வெளியேறி தன் பூல்லடில் பறந்து விட்டான் கார்த்தி.

தெய்வானையின் குத்தல் பேச்சும் கணவனின் கோபமும் மனதைத் தாக்க நித்தி தங்கள் அறைக்கு சென்று அமர்ந்து விட்டாள்.

சிறிது நேரத்தில் வாயிலில் அரவம் கேட்டு நிமிர்ந்தவள் அங்கே நின்றிருந்த முத்துசெல்வியைக் கண்டு எழுந்து நின்றாள்.இவள் அருகே வந்தவர்

"உட்கார்ரா ராசாத்தி"என்று அவளை அமர்த்தியவர் அவள் அருகில் அமர்ந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

"இந்த உலகத்துல நடக்குற சராசரி கல்யாணத்தப் போல உங்க கல்யாணம் நடக்கல.... ஏதேதோ நடந்து எப்படியோ ஆயிடுச்சு...ஆனா எப்படி நடந்திருந்தாலும் அது உசத்தியான கல்யாணந்தான்...உங்க பந்தம் புனிதமானது தான்.யாரோ எத பேசினாலும் நீ அத மனசுல போட்டுக்காத தங்கம்....எங்க கார்த்தி பத்தி நீ ஏதேதோ கேள்விப்பட்ருக்கலாம்.... பதினெட்டு வயசு வரைக்கும் அவனும் ஊரு மெச்சும் புள்ளயாத்தான் இருந்தான்.சிரிப்பு விளையாட்டுமா எங்களையே சுத்தி வருவான்...எங்க அப்பாரு சாகும் போது சொத்துல பாதியை இவன் பேர்ல எழுதி வச்சுட்டாரு.... அனுபவத்தோடு சேந்த பணமா இருந்தா வாழ்க்கை வளமா இருந்திருக்கும்....ஆனா அறிஞ்சும் அறியாத வயசுல கை நிறைய பணம் வந்தா கூடவே அவங்கள அழிக்க எல்லா வேண்டாத பழக்கமும் வந்து ஒட்டிக்கும்... கொஞ்சம் காலம் உங்க மாமா புத்தி சொல்லி பாத்தாரு... கொஞ்ச நாளு பயந்தவன் பின்னாடி அவரு திட்டின போது வீட்ட விட்டு வெளியே போற அளவு துணிஞ்சிட்டான்....நா போகாத கோயிலில்ல....வேண்டாத தெய்வமில்ல....ஆனா அந்த புண்ணியம் தான் சாமி உன்ன அவனுக்கு பொஞ்சாதியா கொடுத்திருக்கு.... எப்படிப்பட்ட போக்கிரியும் பொண்டாட்டின்னு ஒருத்தி வந்திட்டா திருந்திடுவாங்க....நீ படிச்ச பொண்ணு நா உனக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்ல....நா உன்கிட்ட கேக்றது ஒண்ணு தான்...கார்த்திய திருத்தி நல்ல வழில கொண்டு வா.... அவனுக்கு வாழ கத்துக் கொடு....அவன் திருந்தி உன்னோட சந்தோஷமா வாழ்ந்தா அதுவே எனக்கு போதும்....எனக்காக இத செய்வியா ராசாத்தி.... செய்வேன் வாக்கு கொடு...."என்று தன் கையை நம்பிக்கையோடு நீட்டினார் செல்வி.

மனதில் வாழ்வைப் பற்றி எத்தனை குழப்பங்கள் இருந்தாலும் மகனுக்காக தன்னிடம் கெஞ்சும் அந்த தாய்க்காக கணவனை எப்படியாவது திருத்திவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள்...தனக்காக இல்லையென்றாலும் அத்தைக்காக கார்த்திகேயனை திருத்துவதாக தன் கையை அவரின் கையில் வைத்து

"அத்தே!கவலைப்படாதீங்க....உங்க மகன எந்த கெட்ட பழக்கமும் இல்லாத உத்தமனா மாத்தி உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்தறேன்...‌இது என் சத்தியம்"
என்று புதிதாக பிறந்த தைரியத்தோடு சத்தியம் செய்தாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top