• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

DUECP | Vijay | Episode 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,205
Location
Chennai, Tamil Nadu, India
புவி

’நிலவில் இருக்கும் களங்கம்
அதன் குளிர்ந்த வெண்மையான ஒளியில் மூழ்கி மறைவதைப் போல
இமயமலையின் பல்வகைச் சிறப்புகளின் இடையே
அதனை மூடும் வெண்பனியை ஒரு குறையாக யாரும் சொல்லமாட்டார்’


-என்ற காளிதாசரின் ’குமாரசம்பவம்’ காவியத்தின் பாடலை நினைவூட்டியது அச்சூழல்.

கண்ணுக்கெட்டிய தொலைவுவரை வெண்பனிதான். ஆங்காங்கே சிறு சிறு காடுகளாய் மண்டியிருந்த மரங்களும், அவற்றுக்கிடையில் இருந்த மனிதன் கட்டிய கட்டடங்களும் கூட அந்த வெண்பனியில் மூழ்கி இருந்தன.

யாரோ ஒரு ஓவியன் வந்து வரையக் காத்திருக்கும் வெண்பட்டுச் சீலையைப் போலக் காட்சியளித்தது அச்சூழல்.

வளவன் தனது கம்பளிக் கையுறையையும் மீறி கதகதப்பு பாய்ச்சிய சூடான தேநீர்க் கோப்பையை மேலும் இறுகப் பற்றியபடி கண்ணை நிறைக்கும் அவ்வெண்மையையும் உடலை அணைக்கும் அக்குளிரையும் சுவைத்தான்.

“எப்படி டா உன்னால் இந்தக் குளிர்லயும் சீக்கிரம் எழுந்திருக்க முடியுது?”

புகாராய்க் கேட்டபடியே பிரபு அருகில் வந்தான். அவன் இப்பொழுதுதான் எழுந்திருந்தான் என்று அவனது முகம் அறைகூவியது. பல்தேய்த்தானோ இல்லையோ, ஆனால் கையில் சூடான தேநீர்க் கோப்பை இருந்தது. அதை வளவனை நோக்கி உயர்த்தினான்.

“இப்போதைக்கு இந்தக் கருமந்தான்! ஒரே ஆறுதல் இது சுடச்சுட இருக்குறதுதான்!”

தேநீரை ஒரு மிடறு மெல்ல விழுங்கிவிட்டு கண்ணைச் சுற்றிலும் மேயவிட்டான்.

“நாம எக்சாக்ட்டா எங்க இருக்கோம் வளவா?”

“தெரியாது பிரபு! இது நம்ம இராணுவத்தோட இரகசிய பயிற்சி மையம். கடுமையான சூழ்நிலைகளைத் தாங்க வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மையங்களில் இதுவும் ஒன்னு... இமயமலை கிட்டத்தான் எங்கயோ இருக்கோம்!”

வளவன் தீவிரமாகச் சொல்ல, பிரபு அவனை எரிச்சல் கலந்த அலுப்போடு முறைத்தான்.

”என்ன டா?”

“ஏண்டா, நாம இமய மலைக்கிட்ட இருக்கோம்னு நீ சொல்லித்தான் எனக்குத் தெரியனுமா? அதான் இத்தாம் பெருசா நிக்குதே, வெள்ள வெளேர்னு!”

தேநீர்க் கோப்பைக் கையால் மலையைச் சுட்டிக்காட்டினான்.

”இங்க பாரு, நீ கேட்ட, நான் எனக்குத் தெரிஞ்சத சொன்னேன்! அண்டார்ட்டிக்கால பிராஜக்ட்னு சொல்லிட்டு, பயிற்சினு இங்க அனுப்பிட்டாங்க... உன் கூடத்தான என்னையும் கண்ணைக் கட்டி ஹெலிகாப்டர்ல கொண்டு வந்து இறங்கிவிட்டாங்க, அப்புறம் எனக்கு மட்டும் என்ன தெரியும்?”

வளவனின் குரலிலும் இலேசான எரிச்சலும் அலுப்பும் இருந்தன.

அண்டார்ட்டிக்காவில் புவி வெப்பமாதல், புவியின் தட்பவெட்ப நிலை மாறுதல் குறித்து பல நாடுகளின் அறிவியலாளர்கள் குழு ஆய்வு செய்கின்றன. இந்தியாவும் தன் பங்கிற்கு அங்கு ஆய்வு செய்ய அனுமதி வாங்கியுள்ளது. ஆனால், உண்மை என்னவென்றால், அங்கே நடக்கும் ஆய்வுகள் புவியின் தட்பவெட்பம் பற்றியதல்ல, அங்கு மண்டிக் கிடப்பதாகச் சொல்லப்படும் எரிபொருள் படிமங்கள், இயற்கை எரிவாயு மூலங்கள் இவற்றைக் கண்டறிந்து அவற்றைத் தனது நாட்டிற்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் அரசியல்-பொருளாதார போட்டியே ஆகும்!

இதில் தானும் பங்கேற்க முடிவு செய்துதான் இந்திய அரசாங்கம் ‘பிராஜக்ட் பிளூ பேர்ல்’ என்று இவர்களின் குழுவை அங்கே அனுப்பி வைக்கிறது. இயற்பியலாளனான வளவன், கணித (புள்ளியியல்) நிபுணனான பிரபு, உயிரியல் வித்தகியான நந்தினி, மேலும் ஒரு புவியியக்கவியல் நிபுணரையும், ஒரு வேதியியல் நிபுணரையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் கொண்ட குழுவாய் இவர்களை அங்கே அனுப்புகிறது. மேலோட்டமாக இந்த ஆய்வு புவி வெப்பமாதல், தட்ப வெட்ப மாறுதல் பற்றியது, ஆனால் அடிப்படையில் அங்கே பிற நாடுகளின் குழுக்கள் என்ன செய்கின்றன, அவர்களின் ஆய்வுகளின் நிலை என்ன, அண்டார்ட்டிக்காவில் கிடைக்கக் கூடிய இயற்கை வளங்கள் என்னென்ன என்பவற்றை அறிந்துவரவே இக்குழு!

புவியின் தெந்துருவமான அண்டார்ட்டிக்காவில் நிலவும் மிக அதிகமான குளிரை இவர்கள் தாங்குவார்களா என்று சோதிக்கவே இமயமலை அருகில் இருக்கும் இந்த இராணுவ தளத்தில் ஒரு வாரப் பயிற்சி.

நேற்று மாலை இங்கு உலங்கூர்தியில் கண்கள் கட்டிய நிலையில் கொண்டு வரப்பட்டனர். இன்று முதல் பயிற்சி தொடக்கம்!

“சரி சரி, டென்ஷன் ஆகாத... ஆமா உன் ஆளு எழுந்துட்டாளா?”

பிரபு இன்னொரு மிடறு தேநீரைப் பருகிவிட்டுக் கேட்டான்.

வளவன் விடை சொல்லாமல் வெண்பனி மலையை இரசித்தவண்ணம் தானும் ஒரு மிடறு தேநீரைப் பருகினான். சூடான அந்தத் திரவம் மெல்ல அவனது உணவுக்குழாய் வழியாக இறங்குவதை அவனால் உணர முடிந்தது. தடித்த கம்பளி உடைகளையும் மீறி உடலைத் தழுவிய குளிரும், உள்ளே சூடாய் இறங்கிய தேநீரும் ஒரு ஜென் நிலையைத் தந்தன. அதில் பிரபுவின் புண்ணியத்தால் நந்தினியின் பெயர் சேர்ந்துகொண்டது. தூரத்து கோயில் மணியின் தாளத்திற்குட்பட்ட ‘டண்ண்ண்... டண்ண்ண்...’ ஓசையைப் போல அவளது பெயர் வளவன் மனத்தில் முழங்கியது.

“பகல் கனவா? கட்டாயம் காண வேண்டியதுதான்! ஹனிமூனுக்கு ஏத்த இடம்... நீ கண்டினியு பண்ணு, நான் போய் டிபன் ரெடியாச்சானு பார்க்குறேன்...”

“சரியா 7.30 மணிக்குத்தான் டிபன்! இது மிலிட்டரி கேம்பஸ்... இப்பத்தான் மணி 6 ஆகுது... கொஞ்சம் நேரம் இரு... அப்புறமா போய் குளிச்சிட்டுச் சாப்ட போலாம்...”

“என்னது... குளிக்குறதா? இந்தக் குளிர்லயா? ஏண்டா, என்ன அண்டார்ட்டிக்கா கூட்டிட்டுப் போய்தான் சாவடிப்பேன்னு நெனச்சேன், இங்கயே சாவடிக்க திட்டம் போட்டுட்டியா? நான் வரும்போதே என் அம்மாவப் போய்ப் பார்த்துட்டு வரேன்னு சொன்னேன், அதுக்குக் கூட டைம் கொடுக்காம நீயும் அந்த டிராகனும் என்னைக் கிளப்பிக் கூட்டிட்டு வந்துட்டீங்க... இப்ப நான் எங்க அம்மாவப் பார்க்கமலே சாவப் போறேன்...”

பிரபு போலியாக அழ ஆரம்பித்தான். வளவன் அவனை நெருங்கி நெஞ்சில் ஓங்கி ஒரு குத்துவிட்டான், கம்பளி உடைகளைத் தாண்டி வலிக்காது என்று தெரிந்தே!

“என்ன டா ஓவரா அம்மா செண்ட்டிமெண்ட் காட்டுற? அப்பவே கேக்கனும்னு நெனச்சேன், ஏன் ஸ்கூல் பையன் மாதிரி அம்மாவப் பார்த்துட்டுதான் வருவேன்னு அடம்பிடிச்ச? நீ அப்படிப்பட்ட ஆளு கிடையாதே? தீபாவளி பொங்கலுக்கு ஊருக்குப் போறது கூட ஆசீர்வாதம் பண்ணிட்டுக் காசு கலெக்ட் பண்ணத்தான?”

வளவன் கிண்டலாகக் கேட்டான். பிரபு அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டான்.

“எனக்குலாம் பிள்ளையாரைவிட அம்மா பாசம் அதிகம் டா... நான் எஸ்டாபிளிஷ் பண்ணிக்குறதில்ல... எவ்ளோ எபிசோடுக்குத்தான் இந்தக் கதையை அறிவியல் புனைவாவே எடுத்துப் போறது? ’குடும்பக் கதை’ வேணும்னு அட்மின் சொல்லிருக்காங்கல? எனக்கும் குடும்பம் இருக்கு... ஆமா...”

“டேய் என்ன டா உளறுர? ஓவர் குளிர்ல மூளை உறைஞ்சு போச்சா?”

“இல்ல தெறைஞ்சு போச்சு... போடா, போய் அந்த மலைய வெறிச்சுப் பார்த்துக்கிட்டே நந்தினியோட கற்பனைல டூயட் பாடு...”

பிரபு மிச்சமிருந்த தேநீரை ஒரே மடக்கில் விழுங்கினான்.

“வளவன், பிரபு... எங்கலாம் தேடுறது உங்கள!”

நந்தியின் குரலைக் கேட்ட அதிர்ச்சியில் விழுங்கிய தேநீர் புரையேறியது பிரபுவிற்கு.

‘சத்தியமா டா மச்சான், இவதான் உன் ஆளுனு கன்பார்ம் ஆச்சுனா மொதோ வேலையா உன் பிரெண்ட்ஷிப்பைக் கட் பண்ண போறேன்!’ என்று மனத்திற்குள் திட்டிக்கொண்டான்.

“சொல்லு நந்தினி, என்ன விஷயம்?”

“என்ன தெரியாத மாதிரி கேக்குறீங்க? நம்ம டிரெயினிங் 6 மணிக்கே ஆரம்பிக்குது... ஆறுலேர்ந்து ஏழுவரை உடற்பயிற்சி... ஜிம்ல எல்லாரும் வந்தாச்சு, உங்க ரெண்டு பேரையும்தான் காணும்... அதான் தேடிட்டு வந்தேன்!”

“என்னது... உடற்பயிற்சியா? ஏம்மா, இந்தக் குளிர்ல காலங்காத்தால எழுந்துக்குறதே ஒரு கொடுமை, இதுல உடற்பயிற்சி வேறயா? டேய் வளவா, கண்டிப்பா நீ என்னக் கொல்லத்தாண்ட திட்டம் போட்டிருக்க!”

பிரபு புலம்புவதைச் சற்றும் காதில் வாங்காமல் வளவன் நந்தினியைப் பார்த்தான்.

“சாரி, ஷெட்யூல்ல இருந்துச்சு, மறந்துட்டேன்... வா போலாம்...”

‘அவனவன் காதலிச்சா அவனவன் போய்ச் சாவுங்கடா... கூட இருக்குறவனைலாம் சேர்த்துச் சாவடிக்காதீங்க...’ என்று மனத்திற்குள் புலம்பியவாறே பிரபுவும் அவர்கள் பின்னால் சென்றான்.

*******

கலாவிக்

ஜீவா தன் கையில் இருந்த கோப்பை நம்ப முடியாமல் நீனாவைக் கேள்வியோடு நோக்கினான்.

“இங்க பாருங்க ஜீவா, நீங்க யாரு, உங்க முக்கியத்துவம் என்னன்றதுலாம் எனக்கு நல்லாவே தெரியும். அதனாலத்தான் என் ஆராய்ச்சிக்கு நீங்களேதான் வேணும்னு ரொம்ப கஷ்டப்பட்டு இந்த அனுமதிய வாங்கிருக்கேன். ஆளுநர் ஒன்னும் சும்மா எடுத்த எடுப்புலயே அனுமதி வழங்கிடல... ஆயிரம் கேள்விகள் கேட்டு, நான் விளக்கம் சொல்லி, அப்பயும் சமாதானம் ஆகாம மறுபடி கேள்விகள் கேட்டு... இரெண்டு திங்கள் போராடி இந்த அனுமதிய வாங்கிருக்கேன் நான்... சும்மா இல்ல!”

“டாக்டர் நீனா... நீங்க முடியாத ஒரு காரியத்தை முயற்சி பண்ண விரும்புறீங்க... நான் சொல்றதைக் கேளுங்க, உங்க ஆராய்ச்சியக் கைவிட்டுடுங்க... அது சரி வராது!”

“ஜீவா, நீங்க அடிப்படைல ஒரு இயந்திரம், அதனால உங்களுக்கு முடியும் முடியாதுங்கறதுல்லாம் பைனரி, ஆமா இல்ல மட்டுந்தான்! ஆனா, நான் ஒரு மனுஷி, மனுஷங்க முடியாதுங்குறத ஒத்துக்கமாட்டோம்... அது எங்க பலவீனம், ஆனா, எங்க பலமும் அதுதான்... முதன் முதல்ல ஒரு கருத்தா முன் வைக்கப்பட்டபோது இந்தக் கலாவிக் திட்டம் கூட முடியாத ஒன்னுனுதான் எல்லாக் கணினிகளும், சில மனுஷங்களும் சொன்னாங்க... ஆனா நாம இன்னிக்கு இந்தக் கிரகத்துல நின்னுதான் பேசிட்டு இருக்கோம்...”

நீனாவின் பேச்சில் ஒரு தீர்மானம் இருந்தது.

ஜீவா அயர்ச்சியை வெளிப்படுத்தும் முகபாவங்களைக் காட்டினான்.

“கலாவிக்கை உருவாக்கின அதே ஆளுதான் என்னையும் உருவாக்கினார்... இதை நிகழ்த்திக் காட்டிய அவரேதான் நீங்க செய்ய விரும்புற ஆய்வு சரிவராதுன்னு நிறுத்தினார்... முன்னூத்தி இருபது ஆண்டுகளுக்கு முன்ன அவரே முடியாதுனு கைவிட்ட ஒன்னை நீங்க முடியும்னு கைல் எடுக்குறது சரியில்ல... சொன்னாக் கேளுங்க...”

“என்ன ஜீவா, நீங்களும் மனுஷங்க மாதிரி சில விஷயங்கள மறந்துடுறீங்க போல? இல்ல மறந்துட்டா மாதிரி நடிக்குறீங்களா? கலாவிக்கோட உண்மையான திட்ட நோக்கம் என்ன? ஆனா, இன்னைக்கு அது எப்படி மாறியிருக்கு?”

நீனா ஒரு மெல்லிய வெற்றிப் புன்னகையோடு ஜீவாவைப் பார்த்தாள்.

“நீ சொல்றது எனக்குப் புரியுது... ஆனா...”

“ஆனா? ஜீவா நீங்க ஒரு இயந்திரம்! செயற்கை மனிதன்! கணினிக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட ஒரு நிலைல இருக்கீங்க நீங்க! உங்களைப் படைச்சதன் நோக்கம் என்ன? முழுக்க முழுக்க இயற்கை மனிதர்களை ஒத்த செயற்கை மனிதர்களை உருவாக்கும் குறிக்கோளில் கிட்டத்தட்ட வெற்றியை எட்டிய சோதனை நீங்க... நான் அந்தக் குறிக்கோளை முழுமையாக்க விரும்புறேன்... அதன் தேவை முன்னூறு ஆண்டுகளுக்கு முன்ன இருந்ததவிட இப்ப அதிகமா இருக்கு...”

“ஆனாலும்...”

“ஜீவா, உங்களுக்கு ஒன்னு சொல்லவா? நம் முதல் கௌரவ ஆளுநர், உங்களையும் இந்தக் கலாவிக் கிரகத்தையும் உருவாக்கிய ஜீவா என்கிற ஜீவப்பிரபு உங்க ஆய்வை முடியாதுனு கைவிடல, முன்னூறு ஆண்டுகளுக்கு அப்புறம் தொடர்கனு ஒத்தித்தான் போட்டிருக்கார்... அவர் விட்டுப்போன அந்த வேலையைத்தான் நான் இப்ப செய்ய விரும்புறேன்... நீங்க ஒத்துழைச்சே ஆகனும்!”

நீனா உறுதியாகச் சொன்னாள். ஜீவா அவள் சொன்னதைக் கேட்டு கிட்டத்தட்டத் தொங்கினான் ('hang' ஆயிட்டாப்ல, என்ன இருந்தாலும் தம்பி கம்ப்யூட்டர்ல!)

(தொடரும்...)
கலாவிக் கையேடு - குறிப்பு #16

கலாவிக்கின் வளிமண்டலத்தைப் பதப்படுத்த புவியின் செடிகளும் விலங்குகளும் அங்கு விடப்பட்டன, ஆனால் அவற்றால் அங்குத் தாக்குப்பிடிக்க இயலவில்லை. எனவேதான் செயற்கை உயிரினங்கள் திட்டம் தொடங்கப்பட்டது. புல் பூண்டுமுதல் மனித இனம்வரை கலாவிக்கின் சூழலைத் தாக்குப்பிடிக்கும் வகையிலான செயற்கை உயிரினங்கள் உருவாக்கப்பட்டு அங்கு வாழ வைக்கப்பட்டன. சூழ்நிலை மாற மாற செயற்கை உயிரினங்களும் மாற்றப்பட்டன. அவை புவியின் நிலைக்கு வரும்வரை!
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,128
Location
Chennai
???அருமையான பதிவு ஆசிரியரே....நீனா மனுஷியா...இங்கயும் ஆராய்ச்சி அங்கயும் ஆராய்ச்சி....ஆனாலும் நந்தினி இவ்ளோ strict ஆ இருக்க கூடாது....உலங்கூர்தி என்றால் helicopter ஆ?
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,809
Location
Coimbatore
Site sathi senjiruchi.. munthittale en thangachi.. ???

Haha.. sooperaa iruku.. jeeva prabu kandupidichatha.. ?? yaaru avanga.. intha aaraichiyum antha aaraaichiyum idayila link irukumo.. ??

Unmaiya urakka sollirukeenga.. ivanga boomiya pathi kavalai pattu aaraichi pannitaalum.. ??
 




Last edited:

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,205
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,205
Location
Chennai, Tamil Nadu, India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top