• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode முத்தாடு முத்தாரமே... 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,209
Reaction score
50,094
Location
madurai
முந்தைய பதிவிற்கு விருப்பங்கள் கருத்துகள்அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!
***

முத்தாரம்-2

முந்தைய தினத்தை போலவே மற்றுமொரு அழகான மணமேடை அலங்காரத்தில் மணமக்கள் அமர்ந்திருக்க சுற்றிலும் நின்ற உறவுகள் மட்டுமே எண்ணிக்கையில் அதிகமாகி இருந்தனர்.

தனது வழமையாக இரு மனைவிகளையும் தனதருகில் நிறுத்திக் கொண்டே நிறைவான புன்னகையுடன் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார் சண்முகநாதன்.

‘இன்னும் எத்தனை வருசத்துக்கு தான் இந்த மனுஷன் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டி தொலைக்கணுமோ?’ மனதிற்குள் மூண்ட எரிச்சலை அடக்கிக்கொண்டு அமைதியாக மகனின் திருமணக்கோலம் கண்டு மகிழ்வுடன் நின்றார் பைரவி..

புது உறவான மாப்பிள்ளை வீட்டிற்கு எந்த கௌரவக் குறைச்சலும் நேர்ந்து விடக்கூடாதென நிமிடந்தோறும் வேண்டிக் கொண்டிருந்தார் பானுமதி. மூத்தாரும் மகனும் எந்த நிமிடத்தில் எப்படி முகம் சுருக்கி வெட்டிக் கொள்வார்களோ என பல விதமாய், பலமுறை வலிக்கக் கற்றுக்கொண்ட அனுபவப்பாடத்தின் எதிரொலியில் மனதின் தவிப்பை மறைத்தபடி மகள் மாப்பிள்ளையின் முகம் பார்த்து பூரித்து நின்றார்.

துர்காவிற்கு மகளின் திருமணம் கூடுதல் பரபரப்பைக் கொடுத்திருக்க, தள்ளியே நின்று மணமக்களை ஆசையோடு கண்களில் நிறைத்துக் கொண்டார். சற்றுமுன் தந்தையின் இடத்தில் இருந்து புது மனைவியுடன் ஜோடியாக நின்று தங்கையை தாரை வார்த்துக் கொடுத்திருந்தான் ஈஸ்வர்.

குடும்பப்பொறுப்புகளை முகம் சுளிக்காமல் தோளில் சுமக்கும் மகனை நினைத்து எப்போதும் பெருமிதம் பொங்கும் துர்காவிற்கு! அதே சமயம் யாராலும் மாற்ற முடியாத அவனது முடிவுகளையும் நினைத்து சற்றே கலக்கம் கொள்ளும்.

நேற்றைய தினம் திருமண இரவுச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்த சண்முகநாதன், சற்றும் சங்கோஜமில்லாமல் துர்கா, ஈஸ்வரை அழைத்து பெருமையாகச் சொன்னதை நினைத்து இப்போதும் மனம் சங்கடம் கொண்டது.

“உங்க சடங்கெல்லாம் முடிச்சதும் பொண்ணு மாப்பிள்ளையை ஹோட்டலுக்கு அனுப்பி வச்சிடுங்க!” உத்தரவான செய்தியாகவே பேசினார் சண்முகநாதன்.

“ஹோட்டலுக்கா?” என்ற ஈஸ்வரையும்,

“ஹோட்டல்ல எதுக்கு?” புரியாமல் கேட்ட துர்காவையும் பார்த்து, மழுப்பலோடு சிரித்தார்.

“எப்ப நினைச்சு பார்த்தாலும் சந்தோஷபட்டுக்கற மாதிரி இருக்கணும்னு தானே இந்த காலத்துல இந்த விசேசத்தை இவ்வளவு தோரணையா நடத்திக்கறாங்க!” என்றவர்,

“சடங்கு சாங்கியம் முடிச்சிட்டு மாப்பிள்ளைகிட்ட விவரம் சொல்லி அனுப்புங்க! இன்னும் விவரம் தெரியாத சின்னப் பிள்ளையாவே இருக்கார்!” மாமனார் விளங்கச் சொல்லும் பொழுதே ஈஸ்வருக்கு புரிந்து விட்டது.

“இன்னைக்கு எதுவும் வேண்டாம் மாமா... எல்லாம் கேன்சல் பண்ணிடுங்க! அதுவும் ஹோட்டல்ல... எனக்கு சுத்தமா பிடிக்கல...” ஒரேடியாக மறுக்க,

“ஹோட்டல் வேண்டாம்னா, நம்ம வீட்டுக்கு போங்க!” துர்கா அவசரமாய் கூறியதிலேயே ஹோட்டல் சம்பிரதாயம் அவருக்கும் பிடிக்கவில்லை என்பதை தெரிவித்து விட்டார்.

“நாளைக்கு யுதி கல்யாணத்தை வச்சுட்டு, இன்னைக்கு அவசியமா இதெல்லாம் நடந்தாகணுமா? கட்டாயத்துல நடத்திக்க இதென்ன ஸ்கூல் சிலபஸா?” அமைதியாக தனது கண்டனத்தை முன் வைத்தான் ஈஸ்வர்.

“உங்க ரெண்டு பேர் ஜாதகத்துக்கும் இன்னைக்கு விட்டா அடுத்த ஒரு வாரம் கழிச்சு தான் நாள் நேரம் நல்லா இருக்கு. அதை அனுசரிச்சு தான் ஏற்பாடு பண்ணியிருக்கு மாப்ள...” தீர்மானமாகப் பேசியவரின் பாவனையே மீறமுடியாத குரலில் ஒலித்தது.

“நாள், நட்சத்திரம் பாக்கறத விட முக்கியமா, ஒருத்தருக்கொருத்தர் பேசி புரிஞ்சக்கணும். எங்க விஷயத்துல ஹாய் ஹலோன்னு பேசிக்க கூட இல்லையே... கம்பெல் பண்ணாதீங்க, கேன்சல் பண்ணிடுங்க!”

“என்ன தம்பி விளையாடுறீங்களா? எல்லாம் ஏற்பாடும் முடிச்ச பிறகு கேன்சல் பண்றது நல்லாவா இருக்கும்? அதனால எதுவும் மிஞ்சப் போகுதா? செலவு செலவு தானே! உங்க முடிவுல நான் தலையிடல... ஏற்பாடு பண்ணின குறைக்கு, அங்கே போயி படுத்து எந்திரிச்சிட்டாவது வாங்க!” சற்றே அழுத்தமாய் சொன்னதைக் கேட்டு அசரவில்லை மாப்பிள்ளை.

“பணம் தான் பிரச்சனைன்னா அந்த ஹோட்டல் பில் செட்டிமென்ட் நான் பார்த்துக்கறேன்! உங்களுக்கு நட்டம் வராது!” நேரடியான பதிலில் சண்முகநாதனின் மூக்கு உடைபட்டது.

இத்தனை வருட காலமாய் இவர் கிழித்த கோட்டைத் தாண்டி அடுத்தவரை செல்ல விட்டதில்லை. அவரின் எல்லைக்குள் அனைவரும் அடங்கிவிட வேண்டுமென்றே நினைப்பார். முதன்முறையாக அதிலும் திருமணமான முதல்நாளே மாப்பிள்ளையானவன் அவரை விட பெரிய கோடு போட்டு சமன் செய்ய முயன்றது அவருக்கு பிடிக்கவில்லை.

சச்சரவாகத் தோன்றாவிட்டாலும் மாப்பிள்ளையும் மாமானாரும் முட்டிக் கொள்ளாத குறையாக பேசிக்கொண்டது சற்றும் சகிக்கவில்லை. இவர்கள் இருவரையும் மாறிமாறிப் பார்த்து கழுத்து வலி வரவழைத்துக் கொண்டது மைத்ரி மட்டும் தான்!

‘ஏக் மார் தோ துக்கடா தானா? ஸ்ட்ரிக்ட் ஆபீசர் அப்பாவையே வாயடைக்க வச்சுட்டாரே... இந்த லட்சணத்துல இவர்கிட்ட என்ன பேசி என்ன புரிய வைக்கிறது? ஃலைப் முழுக்க ட்வென்டி ட்வென்டி மேட்சா போகப் போகுதோ?’ கண்ணுக்கு தெரியாத எதிர்கால சந்தேகங்கள் படிப்படியாக முளைவிட பதில் தெரியாத பேதையாக முழித்தாள்.

“எனி அப்ஜெக்சன் மைத்தி? வீ ஹேவ் லாட்ஸ் ஆஃப் டைம்டா! யுதி மேரேஜூக்கு முன்னாடி நின்னு கவனிக்கிறது தான் இப்ப ரொம்ப முக்கியம். கம் வித் மீ பியூட்டி!” ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ என்று பேசியவன் மனைவியை தன்னுடன் இரவு உணவிற்கு அழைத்துச் சென்றான்.

அந்த நிமிடம் முதல் அவளை அருகில் வைத்துக்கொண்டே மணமேடை அலங்காரம் முதல் தண்ணீர் கேன் ஸ்டாக் வரை கலந்தாலோசிக்க, மற்றைய சிந்தனைகள் எல்லாம் தூரம் ஓடிப் போனது.

இதோ இப்போதும் அந்த அரவணைப்பும் அன்னியோன்யமும் மாறாமல் தங்களின் உடன்பிறந்தவர்களின் திருமணத்திற்கு ஜோடியாக முன்நிற்கின்றனர். நிமிடத்திற்கு ஒருமுறை ஒருவரையொருவர் பார்த்து புன்னகை சிந்திக் கொண்டிருந்தவர்களின் ஜோடிப் பொருத்தம் கொள்ளை அழகாய் கண்பட்டு விடும் போல இருந்தது.

மணமகனான ருத்ரேஷுக்கு நடப்பவை எல்லாம் சரிதான் என்றாலும் அருகில் நின்று அனைத்து சடங்கு சாங்கியங்களிலும் தங்கையும் முன்நின்றதுதான் முள்ளாக நெருடியது.

திருமணத்திற்கு முன்பே தங்கையை, மச்சான் பொண்டாட்டியாக, மாமானார் வீட்டு உறவாக மட்டுமே பார்க்க வேண்டும் என்கிற பிடிவாத முடிவெடுத்தவன், ‘இட்ஸ் ஓகே... இதுவும் கடந்து போகும்’ என்ற மேம்போக்கோடு சகித்துக் கொண்டான்.

பெரும் குழப்பம் தீராமல் தவித்துக் கொண்டிருந்தவள் இன்றைய மணமகள் யுதிகா தான்! திருமணத்தில் விருப்பம் தான் என்றாலும் எதிர்காலத்தை நினைத்து மனதளவில் பெரும் தளர்வு வந்திருந்தது.

‘இத்தனை யோசனை எதற்கு? தற்போதைய மகிழ்ச்சியை மட்டும் பார்!’ என அம்மா சமாதானப்படுத்தினாலும் பெண்மனம் அமைதியடையவில்லை.
நேற்று தனக்குள் உறுத்திய கேள்விகளை அன்னையிடம் கொட்டித் தீர்த்தும் பதில் என்னவோ கிடைக்கவில்லை!

“அவருக்கு எத்தனை பொண்டாட்டி இருந்தா என்ன? மாப்பிள்ளை எப்படிபட்டவர்... அததான் பாக்கணும் யுதி!”

“அப்ப உங்களுக்கு முன்னாடியே இவங்க குடும்பம் இப்படின்னு தெரியுமா?”

“முன்கூட்டியே தெரியாது. பொண்ணு மாப்பிள்ளை பார்த்து சம்மதம் சொல்லும் போது பெரியவங்க விஷயம் எனக்கு பெருசா தெரியல...” தெளிவாகச் சொன்னார் துர்கா.

“என்னம்மா இவ்வளவு சாதரணமா சொல்ற? ஒருத்தர் பாக்கியில்லாம அதியச குடும்பம் கணக்கா கேட்டு வைப்பாங்களே? என்ன பதில் சொல்ல?”

“சிரிச்சுட்டே மழுப்ப பழகிக்கோ!” என்றவரை அலுப்பாகப் பார்த்தாள்.

“நீ வளர வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு யுதி! இந்த சம்மந்தம் தான் வேணும்னு யாரும் பிடிவாதம் பிடிச்சு முடிக்கல! ஒருநாள் இந்த பெரிய மனுசர் ஏதோ ஒரு மூலையிலிருந்து உங்க அண்ணனை மாப்பிள்ளை கேட்டு ஃபோன் பண்ணாரு... பொண்ணுக்கு முடிக்காம பையனுக்கு பாக்கிறதில்லனு நான் சொல்லவும் உடனே உன் போட்டோ ஜாதகம் எல்லாம் கேட்டு வாங்கிட்டாரு!

அடுத்தநாளே இவன் தான் பையன், எப்படியிருக்கான் பாருங்க... உங்க பொண்ணு ஜாதகத்தோட பொருந்தியிருக்குனு அவர் சொல்லும் போது எனக்கே ஆச்சரியம் தான்! என்னடா இந்த மனுஷன் இவ்வளவு வேகமா இருக்காரேன்னு ஈஸ்வருக்கு உடனே ஃபோன் போட்டு விசயத்தை சொல்லிட்டேன்!

அவனும் ஆபீசுல என்னைப் பார்த்துட்டு தான் உங்ககிட்ட பேசியிருக்காருமா... என்கிட்டே நேரடியாவே கேட்டாரு, எல்லாம் என் அம்மா முடிவுன்னு தெரிஞ்ச பிறகு என்கிட்டே உங்க நம்பர் வாங்கி என் முன்னாடியே பேசினாருனு சொல்றான். யுதிக்கு அந்த பையனை பார்க்கச் சொல்லுங்க... அவளுக்கு பிடிச்சா முடிச்சுடலாம்னு அவனும் சொல்லவும் தான் உனக்கு அனுப்புனேன்!

அது இன்னுமே சௌரியமா போச்சு... ஏற்கனவே பேஸ்புக், இன்ஸ்டால ஃபிரெண்டா இருக்கோம், எங்க ரெண்டு பேர் வேலையும் மேட்ச் ஆகும்னு நீயும் சரின்னு சொல்லிட்ட... அப்புறம் நடந்தது தான் உனக்கும் தெரியுமே! இதோ கல்யாணத்துல வந்து நிக்குது!” என்று நீளமாகப் பேசி மூச்சு வாங்கினார்.

“நான் சம்மதம் சொல்லும்போதே, நீ குடும்ப விவரம் சொல்லி இருக்கலாமே?” மனதின் குறுகுறுப்பு குறையாமல் கேட்டாள் மகள்.

“அட யாருடி இவ? மாப்பிள்ளை ஏற்கனவே உன் ஃபிரென்ட்னு சொன்னபிறகு என்ன விவரத்தை நான் சொல்லணும்னு எதிர்பாக்கற? கல்யாணம் முடிவான நாள்ல இருந்து ரெண்டு பேரும் மணிக்கணக்கா பேசிட்டே இருந்தீங்க தானே? அப்ப ரெண்டு பேர் குடும்பத்தை பத்தி விசாரிச்சுக்கலையா?” துர்கா திருப்பிக் கேட்டதும் அசடு வழிந்தாள் மகள்.

“ஸ்வீட் நத்திங்க்ஸ் பேச எவ்வளவோ இருக்கு! இதெல்லாம் யார் யோசிச்சா? ரெண்டு பேருக்கும் என்னென்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு லிஸ்ட் போட்டே இன்னும் முடிக்கல... வெல் ப்ரிபேர்டு ஃலைப் ஸ்டார்ட் பண்ணனும்னு பிளான் பண்ணியிருக்கோம்!” வேகமாகக் கூறி நாக்கை கடித்துக் கொண்டாள்,

“அவ்ளோ தூரத்துக்கு பேசத் தெரியுது! அப்பா, அம்மா, குடும்பம் எப்படின்னு கேட்டுக்க தெரியல... என்ன புள்ளைகளோ! அந்த பெரிய மனுசர் அவசரத்துக்கு உன் அண்ணனுக்கு லீவு கிடைச்சதும் எதிர்ப்பார்க்காத நல்ல விசயம் தான்!

விசாரிச்ச வரைக்கும் ருத்ரேஷ், மைத்ரி பத்தி ரொம்ப நல்லாவே சேதி வந்துச்சு! ஃபோட்டோ பார்த்த பதினைஞ்சு நாள்ல கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியாச்சு... இந்த முகூர்த்தம் விட்டா அடுத்த மூணு மாசத்துக்கு சேர்ந்தாப்பல அடுத்தடுத்து ரெண்டு மூகூர்த்த நாள் கிடைக்கல... பெத்தவர் குடும்ப வாழ்க்கை மட்டும் தான் கொஞ்சம் பேசுபொருளா இருந்தது. தப்பான முறையில வாழல... முறையா கல்யணம் பண்ணிட்டு தானே குடும்பம் நடத்துறார்! இதுல யாரை தப்பு சொல்ல?”

“ஆனா ரெண்டு குடும்பம் ஆச்சே...”

“இருந்தா என்ன? நீ சதா சர்வகாலமும் மாமனார் வீட்டுலயே இருந்து குப்பை கொட்டப் போறியா? வேலை அமையுறதை பொறுத்து தனியா தானே குடித்தனம் பண்ணப் போறீங்க? இதுல என்ன உறுத்தல் வருது உனக்கு?” பெற்றவளே சர்வ சாதாரணமாக அனைத்தையும் பேசியதில் இரண்டு திருமணம் என்பது தவறில்லையோ என்று தோன்றியது.

ஆனால் ருத்ரேஷின், தங்கையின் மீதான காரப்பார்வையும் ஒதுக்கமும் பார்த்து, இரண்டு குடும்பங்களும் எதிரெதிர் துருவம் என்றே புரிந்து போனது. பெண் கொடுத்து பெண்ணெடுத்து நடக்கும் திருமணத்தில் இந்த எதிரெதிர் துருவங்கள் முட்டிக் கொள்ளுமா? அமைதியாக ஒதுங்கிப் போகுமா என்ற யோசனையில் இரவு உறக்கம் தொலைத்து தெளியாத குழப்பத்துடன் மணவறைக்கு வந்தாள் யுதிகா.

புன்னகை முகமாக திருமணச் சடங்கினை செய்யும் ருத்ரேஷும் தன் அம்மாவை அருகில் நிறுத்திக் கொண்டிருந்தான். தவிர்க்க முடியாத அருகாமையாக சண்முகநாதனும் பானுமதியும் நின்றதை வேறு வழியில்லாமல் பல்லைக் கடித்து சகித்துக் கொண்டான்.

"இன்னைக்கு மட்டும் கொஞ்சம் பொறுமையா இருக்கப் பாரு ருத்ரா! அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்றேன்! உன் கல்யாணத்துல எந்த பேச்சும் வந்துடக் கூடாது. நேத்து அவள பார்த்த தானே! அப்பா சொன்னதும் மறுபேச்சு சொல்லாம சட்டுன்னு என்கிட்டே வந்து ஆசீர்வாதம் வாங்கிட்டா... சபையில மெச்சாதவங்க இல்ல...” வேண்டுதல் வைக்காத குறையாக சொன்ன அம்மாவின் குரல் மகனை அடக்கி வைத்திருந்தது.

புரோகிதர் கெட்டிமேளம் சொல்ல, ஊரார் பூத்தூவி வாழத்த, ருத்ரேஷ் பொன்தாலி எடுத்து இரண்டு முடிச்சுகளை முடிந்த நேரத்தில், “மைத்தி மூணாவது முடிச்சு நீ போடணும்!” துர்காவின் குரல் ஆணையாக வந்தது.

செய்வதறியாமல் மைத்ரி குனிந்த நேரத்தில், மறுப்பு சொல்ல முடியாமல் தன்போக்கில் ருத்ரனும் மூன்றாவது முடிச்சிற்கு தங்கையின் கைகளில் தாலிக்கயிற்றின் நுனியை கொடுத்திருந்தான்.

நம்ப இயலாத ஆச்சரியம் நொடிக்குள் நடக்க, எதையும் ஆராயாமல் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் மூன்றாவது முடிச்சிட்டு நாத்தனார் உறவை பலப்படுத்திக் கொண்டாள் மைத்ரி.

முடிச்சிட்ட கையோடு, “கங்கிராட்ஸ் அண்ணா... கங்கிராட்ஸ் அண்ணி!” முதல் வாழ்த்தையும் பூரிப்புடன் சொல்லிவிட்டு கணவனின் முகம் பார்க்க, “வெல்டன் பியூட்டி!” என கட்டைவிரலை உயர்த்தி பாராட்டினான் ஈஸ்வர்.

“யுதி, உன்னைப் போல உன் அண்ணி விட்டுக் கொடுக்கல... நாத்தனார் முடிச்சு போட்டு பலமா நின்னுட்டா!” ஈஸ்வரின் பேச்சில் மனம் சுருக்கென்றது யுதிகாவிற்கு!

‘அந்த குடும்பம் என்றாலே வேப்பங்காயாக கசக்கும் என்றிருப்பவன் எப்படி இதற்கு சம்மதித்தான்?’ துணுக்குடன் நொடிநேரம் அதிர்ந்து மீள்வதற்குள் அடுத்தடுத்த சடங்குளில் மூழ்கிப் போயினர். ஆனாலும் மனதின் குறுகுறுப்பு குறையவில்லை.

திருமணம் முடிந்ததும் கூட்டம் கலைய ஆரம்பிக்க, “ஜமாயிச்சுட்ட சண்முகம்... உன்னை மாதிரி நீதான்! நீ மட்டும் தான் இருக்க முடியும். அன்னைக்கு என்ன சொன்னியோ அதுபடிதான் இன்னைக்கும் நீ இருக்க...” ஊர் பெரியவர் தானாக வாழ்த்தியதில் மீசையை முறுக்கிக் கொண்டார் சண்முகநாதன்.

அவரைத் தேடி வந்து புகழும் அளவிற்கு கௌரவமும் அந்தஸ்தும் உயர்வதற்கு இவர் எடுத்த முயற்சியும் அர்பணிப்பும் மகத்தானது. வெற்றியடைந்த மனிதனின் வாழ்க்கையை உற்றுப் பார்த்தோமானால், அவனுக்கு பின்னால் அவனது நிதானமும் அஹிம்சையும் கைகோர்த்து அவனை வழி நடத்தியிருப்பது தெரியவரும்.

சண்முகநாதனும் அவ்வாறான மனிதர் என்பதில் எள்ளளவும் பொய்யில்லை. திருச்சி மாநகர துறையூர் தாலுகாவைச் சேர்ந்த ஆதனூர் தான் இவர் பிறந்து வளர்ந்த கிராமம். பெற்றோருக்கு ஒரே மகன், அத்தை மகள் பானுமதியிடம் கொள்ளை ஆசை என அந்த பதினாறு வயதிலயே பல கனவுகளோடு பத்தாம் வகுப்பை முடித்தார்.

விவசாயம் பொய்த்து, கடன்சுமை தாளாமல் நெஞ்சுவலியில் தந்தை தவறிப் போக, குடும்பப் பொறுப்பினை ஏற்று திருச்சி மாநகரில் பெரிய அங்காடிகளில் கடைநிலை ஊழியனாக வேலைக்கு சேர்ந்தார். பதின்ம வயதில் வாழ்க்கை சுமூகமாகச் சென்றது, ஆனால் செழிப்பாக இல்லை. அன்றைய கால கட்டத்தில் எளிய தவணை முறை வசதியில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து பல சிறிய நிறுவனங்கள் முன்னேற்றம் கண்டு வந்தன.

அதன்படி தான் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து கிராமத்தில் இருந்த நான்கு நபர்களுக்கு தனது சிபாரிசில் கட்டில், நாற்காலிகளை வாங்கிக் கொடுத்தார். நல்லமுறையில் தவணை முடியவும் அந்த முதலாளியே மேற்கொண்டு ஊக்குவித்ததில், மேலும் பலருக்கு தவணை முறையில் பொருட்களை விற்றுக் கொடுக்க கமிஷனாக குறிப்பிட்ட தொகையும் கைக்கு வந்து சேர்ந்தது.

இலாபத்தின் ருசியை அனுபவித்து பார்த்த பிறகு அதில் முன்னேற்றம் காணும் வழியை யோசித்தார். மொத்தக் கொள்முதல் செய்தால் தான் அதிக லாபத்தை எடுக்க முடியும் என்பதை தெரிந்து திருச்சி முதலாளியின் சிபாரிசின் பேரில் சென்னை வந்திறங்கினார்.

அந்நாளின் முன்ணணி நிறுவனமான, ‘தேவநாதன் அன் கோ’ இவரின் கனவுகளை நனவாக்கும் வாசலை திறந்து வைத்தது. வயதிற்கு மீறிய அயரா உழைப்பும், நேர்மையும் பொறுமையுடனும் செயல்படும் சண்முகநாதனை எல்லோருக்கும் பிடித்துப் போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

வயதிற்கேற்ற களையான வசீகரிக்கும் தோற்றமும், மாறாத புன்சிரிப்பும் கண்ணியமும் பார்ப்பவரை கவர்ந்திழுத்தது. பத்து வருடம் தொடர்ந்த வியாபாரப் பங்களிப்பில் உரிமையாளர் தேவநாதனின் பார்வையில் அக்மார்க் நல்லவன் என்ற முத்திரை குத்தப்பட்டு பலரின் நன்மதிப்பையும் பெற்றார்.

தனது ஒரே பெண் பைரவிக்கு பார்க்கும் மாப்பிள்ளை, சண்முகநாதனைப் போன்ற முக லட்சணத்தோடு, தொழில் சாதுரியமும் இருக்க வேண்டுமென்று என எதிர்பார்க்கும் அளவிற்கு தேவநாதனின் மனதில் இடம் பிடித்திருந்தார். மகளுக்கு மாப்பிள்ளை அமைவது தான் குதிரைக் கொம்பாகவே இருந்தது.
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,598
Reaction score
7,777
Location
Coimbatore
சண்முகநாதன் ஈஸ்வர்.
சந்திப்புகள் சுமுகமா போனால்தான்
ரெண்டு பெண்களுக்கு நிம்மதி
என்ன நடக்குமோ
 




amuthasakthi

இணை அமைச்சர்
Joined
Sep 10, 2019
Messages
535
Reaction score
750
Location
Kamuthi
பைரவி ஏன் மகன அடக்கிட்டே இருக்காங்க...அவன் கல்யாணத்துல கூட அவன் இஷ்டப்படி இருக்க முடியல...நாத்தனார் முடிச்ச மைத்ரி போடக் கூடாதுனு நினைச்சான்னா சொல்ல வேண்டியது தானே...அப்பானா பயமா இல்ல அம்மா சொன்ன மாதிரி பிரச்சனை வரக்கூடாதுனா...ருத்ரன் ஃபீலிங்க்ஸ ஈஸ்வர் புரிஞ்சுக்கலீனா கஷ்டம் தான்...இதுல பானுமதி வேற எப்ப மூத்தாரும் அவங்க புள்ளையும் முகத்தை சுருக்குவாங்களோனு நினைக்குது...சண்முகம் உங்களுக்கடுத்தும் ஒன்ன கட்டிருந்தார்னா அவங்க உணர்வுகள் உங்களுக்கு புரியும்...
சண்முகம் தொழில் வளர்ச்சிக்காக பைரவிய கட்டி காதலுக்காக பானுமதிய கட்டிருக்காரோ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top