Epi 1

anisiva

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அத்தியாயம் 1


‘காக்க காக்க கனகவேல் காக்க’
உறக்கம் கலைந்து அவள் கண் விழித்த நொடி, படுக்கையில் இருந்தாள். அந்த வீட்டில் ஒலித்துக் கொண்டிருந்த சஷ்டி கவசம் அவள் அறை வரைக்கும் கேட்டது!
‘இத்தனை நேரமும் தான் கண்டது கனவா! கனவை போலவே இல்லையே! அவர் குரல் கூட கேட்டது போலிருந்ததே!’
‘உனக்கு ரொம்ப முத்திப்போச்சு, எந்திரி!’ மனசாட்சி போட்ட அதட்டலில் தன் கண்களை சிரமப்பட்டு முழுவதுமாக திறந்தவள், தன் தினப்படி பழக்கம் என்பது போல் சுவற்றிலிருந்த அந்த புகைப்படத்தை வணங்கிவிட்டு கைகடிகாரத்தில் மணி பார்க்க, அது காலை ஏழு என்றது!

‘இன்னிக்கு பஸ்ஸை விட்டேன்ன அவரோட இரண்டு கிளாஸை அநியாயமா மிஸ் பண்ணிடுவேன், நோ!’
அவள் எண்ணத்திற்கு ஏற்ப உடலும் ஒத்துழைக்க, வேகமாய் தயாரானாள்.

மருத்துவ கல்லூரியில் தன் இரண்டாம் ஆண்டு படிப்பை போன திங்களிலிருந்து தொடங்கியிருக்கிறாள் மயூரவள்ளி. அவசர அவசரமாய் தலையைக் பின்னிக் கொண்டே தன் அறையை விட்டு வெளியேறிய வேகத்தில் அவன் மீது வசமாய் மோதிக் கொண்டாள்! இருவரின் நெற்றியும் முட்டிக் கொண்டதில் அவளின் முன்னெற்றி விண் விண்ணென்று தெறிக்க ஆரம்பித்திருந்தது.

மொட்டை மாடியை ஒட்டி அவளுக்கென்று தனியே ஒரு அறை! அங்கே யாரும் அதிகம் வருவதில்லை. அதே நினைப்பில் அவள் வர இந்த விபத்து நடந்தேவிட்டிருந்தது! அவனுக்கும் வலி போல! அடிப்பட்ட இடத்தை தேய்த்துக் கொண்டிருந்தான்.
அவன் தன்னை வழக்கம் போல் முறைத்து வைக்க போகிறான் என்ற ஐயத்தில் நிமிர்ந்து பாராமலே அங்கிருந்து ஓடியிருந்தாள். போனவளை பார்த்துக் கொண்டிருந்தவன் முகத்தில் தோன்றத் தொடங்கியது ஒரு புதுப் புன்னகை! அந்த வீட்டில் இதுவரை யாருமே பார்த்திடாத அளவுக்கு அதில் அத்தனை வசீகரம்!

“அமுதா அத்தை, எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம். லேட்டாயிடிச்சு! இன்னிக்கு பஸ்ஸை விட்டேன்ன கஷ்டம்”
என்றபடி தனக்கு ஒரு காபியை மட்டும் கலந்துக் கொள்ள,
“இராத்திரி சீக்கிரம் தூங்குன்ன எங்கே கேட்குறே! எப்பவும் காலை வேளையில் இதே பதட்டம் தான் உனக்கு!”

தினசரி அறிவுரைகளுடன் அவர் தந்த மதிய உணவையும் எடுத்துக் கொண்டவள் சிட்டாய் பறந்திருந்தாள்.

அத்தனை வேகமாய் ஓடியும் கல்லூரிக்கு செல்லும் பேருந்தை பிடிக்க முடியவில்லை. இவள் கண்ணெதிரே அவள் நிறுத்தத்தை விட்டு போய்க் கொண்டிருந்தது. என்றோ ஒரு நாள் என்றாலும் பரவாயில்லை, எப்போதும் இதே ‘லேட்’ கதை என்றால் ஓட்டுனரும் என்ன தான் செய்வாராம்!

‘சரி டிரெயினில் போயிடலாம்’ என்ற எண்ணத்தில் பையை துலாவ, காசு வைத்திருக்கும் பர்சை காணவில்லை! காலை வேளையில் வரும் சோதனைகள் என்றைக்கும் தனியே வருவதில்லையே! ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்! தன் நிலையை நொந்தபடி வீட்டுக்கு திரும்பி நடக்கலானாள்!

‘பேசாம இன்னிக்கு லீவ் போடலாமா? மணி இப்பவே ஏழரை, இனி எப்படி காலேஜ் போறதாம்? ஆனா...அந்த இரண்டு பீரியட்...?’
யோசித்தபடியே வீட்டினுள் நுழைய முயல, அமுதா அத்தையின் குரல் ஓங்கி உயர்ந்திருந்தது!

“எத்தனை நாளா கேட்குறேன்! இந்த பொண்ணுக்கு என்ன டா குறைச்சல், நம்ம குடும்பத்துக்கு ஏத்தவளா இருக்கா! இதையும் விட்டிட்டு இன்னும் என்னால, பொண்ணு தேடி ஊர் பூரா அலைய முடியாது. உனக்கு என்ன தான் டா பிரச்சனை!”
உள்ளே போவதா வேண்டாமா என்ற யோசனையில் அங்கேயே நிற்க அவர்கள் பேச்சுக்குரல் நிதானத்திற்கு மாறியிருந்தது!

எப்போதும் அவனிடம் கோபமாய் பேசும் கனகவேல் மாமா கூட இன்றைக்கு மகனிடம் யாசித்திக் கொண்டிருந்தார்!
“விவேக் என்ன பா! காமிக்கிற போட்டோவையெல்லாம் தூக்கிப் போட்டா சரியா போச்சா! உனக்கு வயசு இருபத்தி எட்டு ஆகுது. இன்னமும் எங்களால் காத்திருக்க முடியாது. உன் மனசில் யாரையும் நினைச்சிருக்கியா? வேற எந்த பொண்ணையாவது பிடிச்சிருக்கா? எதுவாயிருந்தாலும் சொல்லு!”

‘மறுபடியும் இவன் பிரச்சனை தானா! தினமும் இவங்களும் கேட்குறாங்க அவனும் சொல்ற மாதிரி தெரியலை!’
இதற்கு மேல் நமக்கு தாங்காது. நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தில் வீட்டினுள் நுழைத்தவளை அங்கு யாரும் அப்போது எதிர்பார்க்கவில்லை. அவள் பக்கம் பார்வையை திருப்பிய கனகவேல்-அமுதா தம்பதியினரை துள்ளி குதிக்க வைத்தது மகனின் வார்த்தைகள்.

“அப்பா எனக்கு இந்த பொண்ணை தான் பிடிச்சிருக்கு”
பெற்றவர்களின் திகைத்த பார்வையை பார்த்தவன் தொடர்ந்தான்!
“அவளுக்கும் விருப்பமிருந்தா பேசி முடிச்சிடுங்க” என்றபடி தன் லாப்டாப் பையை தூக்கிக் கொண்டவன் தன் பணியை சாக்காக வைத்துக் கொண்டு வெளியேறிவிட்டான்.

பாதி மாடிப்படியில் ஏறிக் கொண்டிருந்தவளின் காதுகளில் அவன் சொன்ன அனைத்தும் தெள்ளத் தெளிவாய் விழுந்தது.
‘அமுதா அத்தை ஒரு பொண்ணை சொன்னா இவன் வேற பொண்ணை வேணுங்கிறான். தோசை கொடுத்தாலே பூரி வேணும்பான், இவங்க சொன்ன பொண்ணை மட்டும் கட்டிக்கவா போறான்! ஃபன்னி பீப்பிள்’

விஷயம் முழுவதும் அறியாமல் தனக்குள் சிரித்துக் கொண்டாள்! அவன் சைகையில் பெற்றோரிடம் இவளை குறிப்பாய் காட்டியதை பாவம் இவள் அறியவில்லை. அவன் வெளியே போய்விட்டான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு இவள் இறங்கி வர, அமுதா முகத்தில் ஏக புன்னகை.

“நல்ல வேளை நீ திரும்ப வந்தே, இல்லைன்ன இன்னும் எத்தனை நாள் இதை சொல்லாம இழுத்தடிச்சிருப்பானோ”
அவர் சொன்னது ஒன்றும் மயூரிக்கு விளங்கவில்லை.
கனகவேல் மாமாவோ,
“அமுதா எல்லாம் சாயந்திரம் நிதானமா பேசிக்கலாம், நீ சீக்கிரம் காலேஜுக்கு கிளம்பு மா”
இருவரின் முகத்தில் தெரிந்த சந்தோஷம், காரணம் ஒழுங்கே தெரியாவிட்டாலும் அவளையும் தொற்றிக் கொண்டது!
“வரேன் மாமா, பார்க்கலாம் அத்தை”

வெளியே வந்தவளை தன் வாகனத்தை துடைத்தபடி வரவேற்றது மறுபடியும் அவனே தான்.
“என்ன இன்னிக்கும் வழக்கம் போல பஸ்ஸை விட்டாச்சா?”
ஆமாம் என்பதாய் தலையசைத்தவளை,
“வண்டியில் ஏறு, நான் போறவழியில் விடுறேன்” என்றான்!

என்னவாயிற்று இவனுக்கு? இத்தனை நீண்ட வாக்கியமெல்லாம் தன்னிடம் பேச மாட்டானே! தயங்கியபடியே அவன் பின்னால் அந்த வண்டியில் அமர்ந்ததும்,
‘ஹி, யு நோ வாட், யுவர் ப்ரோ ...ஹீ இஸ் டாக்கிங் டு மி!!!’

விஷ்ணுவின் மொபைலுக்கு ஒரு மெசேஜை அனுப்பினாள்.
“போனை அப்புறம் நோண்டலாம்! ஒழுங்கா உட்கார்! கீழ விழுந்து வச்சி வீட்டில் எனக்கு திட்டு வாங்கித் தராதே!”

ஹெல்மெட்டின் இடுக்கு வழியே அவன் குரல் கேட்க, தன் பையினில் எல்லாம் திணித்தவள் நன்றாக அமர்ந்துக் கொண்டாள், அவனுக்கும் அவளுக்கும் நடுவே இன்னுமொருவர் உட்காரும் அளவுக்கு இடைவெளி விட்டு!

“விஷ்ணு டேய் தம்பி, எத்தனை தடவை போன் போட்டேன் எடுக்குறியா நீ! எப்போ பார்த்தாலும் என்ன டா தூக்கம்?”
அமுதா தன் சின்ன மகனிடம் தன் வசவை ஆரம்பித்திருந்தாள்!

“மா, கிளம்பிட்டிருந்தேன்! அதான் போனை கவனிக்கலை! காலங்காத்தால செஞ்சியிருக்கே! என்ன மா விஷயம்?”
“சந்தோஷமான விஷயம் டா! உன் அண்ணன் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்! பொண்ணு யாருன்னு நீ சரியா சொன்னேன்னு வையி, அப்பாவுக்கு தெரியாம நான் உனக்கு ரெண்டாயிரம் தரேன்”

“இரண்டாயிரமா? அமுதா நீ நிஜமா தான் சொல்றியா? எப்போதும் போல ஏமாத்திட மாட்டியே?”

“ஆண்டவா! எனக்கு மட்டும் ஏன் இப்படி அம்மா மேல நம்பிக்கை இல்லாத ஒரு பிள்ளையை கொடுத்தே!”

“இதுவரைக்கும் நீ சொன்ன காசையெல்லாம் நான் வாங்கியிருந்தா இந்நேரம் கோடீஸ்வரன் ஆகியிருப்பேன் மா! சரி அதிருக்கட்டும், யாரா இருக்கும்! அண்ணனுக்கு பிடிச்சிருக்குன்ன கண்டிப்பா இவனை விட அந்த பொண்ணு பெரிய மெண்டலா தான் இருக்கும்! சோ நான் அந்த ஆங்கிலில் யோசிக்கிறேன்”

“உன் மைண்ட் வாய்ச்ஸை எல்லாம் என்கிட்ட சொல்லாம, பொண்ணு மட்டும் யாருன்னு சொல்றா சீக்கிரம். எனக்கு வேலையிருக்கு!”

“எதிர்த்த வீட்டு பிரேமாக்கா? பக்கத்து வீட்டு பேகம்? தெரு முனையில் இருக்கிற மோனிகாவா? ஆனா அவ அப்பன் நம்ம வீட்டுக்கெல்லாம் பொண்ணு தரமாட்டானே! அண்ணன் ஆபிஸில் கூட வேலை பார்க்குற நந்தினியா? ஆனா அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சே! மா உன் பையனுக்கு கல்யாணம் ஆன போதும்னு ஏற்கனவே கல்யாணம் பண்ண புள்ளையெல்லாம் வேணும்னு சொல்றியா நீ!”

“அடச்சீ! உன் வாயில் தீ வச்சி கொளுத்த! ஒழுங்கா சொல்லுடான்னா பேகம் மோனிகான்னு உளறிகிட்டிருக்கே! நீ சொன்னதிலிருந்து உனக்கு அப்படியெல்லாம் ஐடியா இருக்குன்னு புரிஞ்சிகிட்டேன்!”

“நீ வேற ஏன் மா! ஒரு ஐடியாவும் இல்லை! இன்னிக்கி தான் கிளாஸை கவனிக்கலாம்னு முடிவெடுத்திருந்தேன், இன்னிக்கும் என் நினைப்பில் மண்ணு தானா? நீயே அது யாருன்னு சொல்லிடு!”

“ஹப்பா என்னோட ரெண்டாயிரம் தப்பிச்சது!” அமுதாவின் குரலில் எகத்துக்கும் மகிழ்ச்சி! அவனுக்கும் அது புரிந்தது!

“தெரியுமே! விஷயத்தை சொல்லுமா சீக்கிரம்!”
“நம்ம மயூரவள்ளி தான் டா!”

சற்று நேரம் விஷ்ணு பேசவில்லை! அவனுக்கு எப்படி இவளை! நடக்கக் கூடிய விஷயமா இது? அவனை ஏற்றுக் கொள்ள அவளால் முடியுமா?

“விஷ்ணு...விஷ்ணு லைன்ல இருக்கியா?”
அமுதாவுக்கு அவள் அளவு சந்தோஷத்தை மகன் காண்பிக்கவில்லை என்றிருந்தது!
“மா ஃபிரண்டு வந்துட்டான், நான் கிளம்புறேன்! சாயந்திரம் பேசுறேன்!”
வைத்துவிட்ட பின்பே அவளுடமிருந்து வந்திருந்த குறுந்தகவலை படித்தான்! பதில் ஏதும் அனுப்பும் எண்ணமில்லாமல் நண்பனுடன் தன் கல்லூரிக்கு நடக்கலானான்!

அவளை கல்லூரி வாசலில் இறக்கிவிட்ட விவேக்,
“சாயந்திரமும் உன்னை நானே கூப்பிட வரட்டா?”

ங்கே! என்று விழித்தது அவளே தான். அவளின் அந்த முகமாறுதலை பார்க்க அவனுக்குள் பொங்கி வந்த சிரிப்பை வெளிக்காட்டாமல்,
“கேட்குறேனில்ல!” என்றவனிடம்,

“ஆங், இல்ல நானே போயிடுவேன். டைம் ஆயிடிச்சு, வரேன்!”
வெள்ளை கோட்டை கைகளில் பற்றியபடி அவள் கல்லூரிக்குள் ஓடும் காட்சியை கண்டதோடு இவனும் கிளம்பிவிட்டான்.
 

Sponsored

Advertisements

Top