பார்வையே ரம்மியமாய் - 2

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#1
பார்வை - 2

"என்ன மாப்புள எப்படி இருக்க?"

"பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா?"

"ஐயா பிரபா என்னய்யா ஆளே இப்படி இளைச்சுப் போயிட்ட?"

இப்படி ஆள் மாற்றி ஆள் கேட்ட எந்தக் கேள்விக்குமே பிரபாவிடமிருந்து பதில் வரவில்லை. வீட்டைப் பார்த்த அதிர்விலிருந்து அவன் இன்னும் மீளவில்லை. தாயார், மூன்று தமக்கைகள், அவர்களின் கணவன்மார்கள் அந்த இடமே சொந்த பந்தங்களால் சூழப்பட்டிருந்தாலும் பிரபாவால் எப்பொழுதும் போல அவர்களோடு ஒன்ற முடியவில்லை.

சுற்றி வர நிறைய இடம் விட்டுப் பல வகையான செடிகள் மற்றும் மரங்களுக்கு நடுவில் வீடு இருக்க வேண்டும் என்பதே பிரபா மற்றும் அவன் அப்பத்தாவின் விருப்பமாகும். அதற்காகத்தான் வாங்கும் பொழுதே இரண்டு கிரவுண்ட் வருமளவுக்குக் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் சதுரடியில் இடம் வாங்கிப் போட்டான்.

கொஞ்சம் ஊரை விட்டுத் தள்ளி இருந்தாலும் இதற்காகவே இந்த இடத்தைத் தேர்வு செய்து வாங்கியிருந்தான் பிரபா. மனிதர்களுக்கு மட்டுமல்லாது ஆடு, மாடு, கோழி என்று அவன் வளர்க்கத் திட்டமிட்டிருந்த அனைத்து ஜீவராசிகளுக்குமே அது வீடாக இருக்க வேண்டுமென்று எண்ணியிருந்தான்.

மூன்று தமக்கைகளும் வரப் போக சற்றுப் பெரிய வீடாகவே ஒரு கிரவுண்டில் கட்டினாலும் எஞ்சியிருக்கும் இடம் தாராளமாக செடிகளுக்கும், மரங்களுக்கும், வளர்ப்புப் பிராணிகளுக்கும் போதும் என்றே நினைத்திருந்தான் பிரபா. ஆனால் இங்கு நடந்திருப்பதோ வேறாக இருந்தது.

அவனை வரவேற்றது ஒன்றல்ல மொத்தமாக நான்கு வீடுகள். பகுதிக்கு இரண்டாக இரண்டு பக்கமும் இரண்டிரண்டு வீடுகள் கார் பார்க்கிங் மற்றும் சகல வசதிகளோடு. நிலம் வாங்கிய புதிதில் சுற்றி ஃபென்சிங் போட்டுப் பாதுகாத்துத், தானும் அப்பத்தாவும் பார்த்துப் பார்த்து வைத்த மர வகைகளில் கால்பகுதி மட்டுமே மிஞ்சியிருந்தது.

"புண்ணியவான் வீட்டு வாசல்ல புங்க மரம் இருக்கணுமப்பு" என்று சொல்லியபடி அப்பத்தா வாசற்புரத்தில் நட்டு வைத்த நான்கு புங்கக்கன்றுகள் மட்டுமே ஆளுயர மரமாக வளர்ந்திருந்தன. இது தப்பியதற்குக் காரணம் தன் தாயார் சுந்தரவடிவாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் பிரபா.

இப்படித் தன் நினைவுகளுடன் அதிர்ந்து போய் நின்றிருந்த பிரபாவை, "ஷாக்கைக் குறை, ஷாக்கை குறை இல்ல அதுக்கு வேற உன் மாமனுங்கத் தனி ஆவர்த்தனம் வாசிப்பானுங்க" என்று காதோரம் ஒலித்த பாண்டியின் கிசுகிசுப்பான குரல் நிஜத்திற்கு மீட்டு வந்தது.

"என்ன மாப்ளே அப்படியே அசந்து போய் நின்னுட்ட? என்னடா நாம ஒரு வீடு கட்டத்தானே காசு கொடுத்தோம், எப்படி மாமா நாலு வீடு கட்டியிருக்காங்கன்னு பார்க்குறியா?

உனக்கும் நல்லது கெட்டது சொல்ல எங்களை விட்டா யாரு இருக்கா மாப்ளே? அதான் நாங்க சகலைங்க மூணு பேருமா சேர்ந்து பேசி உனக்கும் அத்தைக்கும் ஒத்தாசையா இங்கனக்குள்ளவே இருந்துக்கலாமுன்னு முடிவு பண்ணோம்.

உங்கக்காங்களுக்கு செய்ய வேண்டிய கடமை உனக்கிருந்தாலும் உன்னையும் ரொம்ப கஷ்டப்படுத்தக் கூடாது பாரு. அதான் நாங்களாவே பணம் பொரட்டிக் கட்டிக்கிட்டோம்" என்று ரொம்பவும் பெருந்தன்மையாகக் கூறினார் மூத்த அக்கா தங்கத்தின் கணவர்.

"நீ கொடுத்தக் காசுக்கெல்லாம் வரவு செலவுக் கணக்கு வழக்குப் பக்காவா வச்சிருக்கேன் பிரபா. நீ எப்பக் கேட்டாலும் உடனே கொடுத்திடுவேன்" என்று கேட்டால்தான் வரவு செலவு கணக்கு கைக்கு வரும் என்பதைக் குறிப்பால் உணர்த்தியது இரண்டாவது அக்கா தனத்தின் கணவர்.

"அடடா இப்ப எதுக்குத் தேவையில்லாததெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க? பிரபா முதல்ல குளிச்சு முடிச்சு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். ரவைக்கு எங்க வீட்டுலதானே எல்லாருக்கும் சாப்பாடு. அப்பப் பேசிக்கலாம்" என்று எதுவுமே நடக்காதது போல் கூறி அனைவரையும் அங்கிருந்து கிளம்பச் சொல்லியது மூன்றாவது அக்கா சொர்ணத்தின் கணவர்.

இப்பொழுது எந்த வீட்டிற்குள் தான் செல்வது என்பதே புரியாமல் திகைத்து நின்ற பிரபாவை, "எஞ்சாமி, உப்புக் காத்து பட்டுப்பட்டு இப்படிக் கறுத்துப் போயிட்டியே ராசா" என்று சொல்லியவாறே பிரபாவின் கைப்பிடித்து அவனைத் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றார் சுந்தரவடிவு.

"ஹ்ம்க்கும்... இல்லாட்டி மட்டும் உன் புள்ள அப்படியே அரவிந்த்சாமி கலரு" என்று கூறிக் கொண்டே அவர்களைப் பின்தொடர்ந்தான் பாண்டி.

"நீ சொன்னாலும் சொல்லலையின்னாலும் என் மகன் ஆளும் சரி அவன் மனசும் சரி எப்போதுமே வெள்ளை தான்டா பாண்டி" என்று அவனுக்குப் பதிலளித்தார் சுந்தரவடிவு.

"நீ என்கிட்ட மட்டும் நல்லா வாய் பேசு சித்தி. உன் மருமகனுங்களைக் கண்டுட்டா மட்டும் அப்படியே வாயை ஜிப்புப் போட்டு மூடிறு."

"என்னடா பண்ணச் சொல்ற? பொட்டப் புள்ளைகளைக் கட்டிக் கொடுத்திருக்கோமே" எனறு பெருமூச்சோடு கூறினார் சுந்தரவடிவு.

"இதைச் சொல்லிச் சொல்லியே எங்க வாயை அடைச்சிறு. நீயே கேளுடா பிரபா, இந்த வீட்டு விஷயத்துல இவைங்க அடிச்சக் கூத்து அஸ்திவாரம் போட்டதுக்குப் பொறவு தான் எங்களுக்கே தெரிஞ்சுது.

அப்பயாவது உன்கிட்ட உடனே சொல்லி இதை அப்பவே தடுத்து நிறுத்தலாமுன்னு சொன்னா இந்த சித்தி விடவே இல்ல. பத்தாததுக்கு என்னையும் சொல்லக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கிடுச்சு" பல நாள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தான் பாண்டி.

"என் ராசா பல ஆயிரம் மைல் கடந்து எந்தக் கப்பல்ல எந்தக் கடல்ல நிக்கிறானோ? அவன்கிட்ட இதையெல்லாம் சொல்ல வேண்டாமுன்னு நாந்தான்யா சொன்னேன். அப்படியே விஷயம் தெரிஞ்சாலும் இதை உன்னால தடுத்து நிறுத்த முடியாதுன்னு தான்யா சொல்லலை. அக்காங்களுக்காகவாவது பார்க்கணுமில்ல ராசா" என்றார் சுந்தரவடிவு.

"ஒத்த கண்ணுல வெண்ணையும் மத்த கண்ணுல சுண்ணாம்பும் வைக்கிற சித்தி நீ" என்று பட்டென்று கூறிவிட்டான் பாண்டி.

அதைக் கேட்ட மாத்திரத்தில் சுந்தரவடிவின் கண்களில் இருந்து கண்ணீர் கரையுடைக்கத் தொடங்கியது. “என்னடா பாண்டி நீயும் இவுக அப்பாத்தாளை மாதிரியே பேசுற? சரி நான் நல்ல அம்மாவா இல்லாமலேயே இருந்துட்டுப் போறேன். உனக்கென்டு ஒரு பொண்ணைப் பார்த்துக் கட்டி வைச்சுப்புட்டா அவ வந்து என் மவனை நல்லா பார்த்துக்குவான்னு நினைச்சேனே.

அதுவுமில்ல தள்ளிக்கிட்டே போகுது. உஞ்சோட்டுப் பசங்க எல்லாம் பொண்டாட்டி, புள்ள, குட்டின்னு இருக்கும் போது எஞ்சாமி மட்டும் இப்படி ஒத்தையில் நிக்கிறானே" என்று சுந்தரவடிவு அழத் தொடங்கிவிட்டார்.

"ம்மா ஏன்ம்மா இப்படியெல்லாம் பேசுற்? உன்ன விட நல்ல அம்மா இந்த உலகத்துலேயே கிடையாதும்மா. நீ எம்புட்டு கஷ்டப்பட்டு எங்களை ஆளாக்கினன்னு எனக்குத் தெரியாதாம்மா? நம்ம அக்காங்களுக்கு செய்றது என் கடமைம்மா. இதுக்கெல்லாம் நீ போட்டு மனசைக் குழப்பிக்காதே. இவன் கிடக்கான் கிறுக்குப் பய" என்று பாண்டியை முறைத்தவாறேத் தன் தாயை அணைத்துக் கொண்டு கூறினான் பிரபா.

"இங்காரு பிரபா, இந்தாட்டி என்ன ஆனாலுஞ்சரி பரிசம் போட்ட பிறவுதான் நீ கப்பலுக்குப் போற. அடுத்த ட்ரிப்பு வரும் போது கல்யாணத்தை முடிக்கிறோம். வயசும் முப்பதாகப் போவுதில்ல ராசா.

இந்தக் கப்பல் வேலைதானே இந்தக் காலத்துப் புள்ளைகளுக்குப் புடிக்குதில்ல. போனதாட்டி வந்தப்ப சொன்னியே அந்த கனடா நாட்டு வேலை, பேசாம அதுல சேர்ந்துடுய்யா" என்று முடிவாகக் கூறினார் சுந்தரவடிவு.

"ம்மா என்னால உங்களையெல்லாம் விட்டுட்டு அப்படியெல்லாம் போக முடியாதும்மா. பொறுத்தது பொறுத்துட்ட. இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம் மட்டும் பொறுத்துக்க. நான் கொஞ்சம் காசு ரெடி பண்ணிட்டு இந்த வேலையவே விட்டுடறேன். நிலம் வாங்கி நாம பழையபடி விவசாயம் பண்ணலாம்மா. அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறேன்ம்மா" என்றான் பிரபா.

"யார்றா இவன் சுத்த கூறு கெட்டவனா இருக்கான். கப்பலு என்ஜினியரென்டு சொன்னாலே எவனும் பொண்ணு குடுக்க மாட்டேங்குறான். இதுல விவசாயம் பார்க்கிறான்னு சொன்னோமென்டு வையி, சாதகத்தைக் கூட குடுக்க மாட்டாய்ங்க" சுந்தரவடிவு அங்கலாய்த்துக் கொள்ளவும் "தம்பி" என்று அழைத்தவாறே மூன்று அக்காமார்களும் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

"இந்தா வந்தாச்சுல்ல முப்பெரும் தேவியர்களும்" என்றவாறே அவர்களை வரவேற்றான் பாண்டி.

"ஐயா பிரபா, அஸ்திவாரம் எல்லாம் போட்டப்புறம் அம்மாவுக்கு எப்ப விஷயம் தெரியுமோ அப்பத்தான்யா எங்களுக்கும் சொன்னாவ. இந்த ஒரு தாட்டி இந்தப் பாவிச் சிறுக்கியளை மன்னிச்சிறு சாமி" என்றார் மூத்த அக்கா தங்கம்.

"எக்கா எதுக்கு மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றவ? உங்களுக்குச் செய்யாம நான் யாருக்குக்கா செய்யப் போறேன்? இதுவும் என் கடமை தானேக்கா"

"இன்னொரு சென்மம் சேர்ந்து பொறப்போமா தெரியாது. ஆனா எங்களைப் பாரமா நினைக்காம பாசமா நினைக்குற பாரு, அதுக்காகவே இன்னும் எத்தனை சென்மம் எடுத்தாலும் உன் கூடவே பொறக்கணும்டா தம்பி" கண்ணீருடன் கூறினார் இரண்டாவது அக்கா தனம்.

மூவரில் சற்றுக் கஷ்ட ஜீவனம் இவருக்குத்தான். கணவருக்கு எதாவது கட்டிட வேலை கான்டிராக்ட் கிடைக்கும் நாட்களில் சமாளித்து விடுவார். அது கிடைக்காத பொழுதோ வீட்டுச் செலவு, வாடகை, பிள்ளைகளின் பள்ளிக் கட்டணம் என்று மிகவும் திணறிப் போய் விடுவார். அந்த சமயங்களில் அவருக்குக் கைகொடுத்து உதவுவது சுந்தர வடிவுதான்.
 
Last edited:

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#2
"மூணு பேருமா சேர்ந்து மதுரையில வெள்ளம் வர வைச்சிராதீகக்கோவ். கண்ணுல இருந்து வார வாட்டர் ஃபால்சை முதல்ல எல்லாரும் க்ளோஸ் பண்ணுங்க" சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டுக் கேலியில் இறங்கினான் பாண்டி.

"ம்க்கூம் ரொம்பத்தான்டா பாண்டி பண்ற" என்று பாண்டியிடம் நொடித்துக் கொண்டு, "எம்மா நம்ம மாணிக்கம் மாமா சொன்ன விஷயத்தை தம்பிகிட்ட சொல்லிட்டியளா" என்றார் மூன்றாவது அக்கா சொர்ணம்.

"அது என்னது எனக்குத் தெரியாத புது மேட்டரு" என்று பாண்டியும்,

"எந்த மாணிக்கம் மாமா ம்மா?" என்று பிரபாவும் ஒரே நேரத்தில் கேட்டார்கள்.

"அவுக உங்கப்பாரு வழியில தூரத்து சொந்தம்ய்யா. உங்க அப்பத்தா இறந்ததை சாரிக்க வந்திருந்தாவ. அப்பத்தேன் உனக்கு பொண்ணு பார்க்குறோமென்டு தெரிஞ்சு அவுக பொஞ்சாதி வழியில் பொள்ளாச்சியில் ஒரு பொண்ணு இருக்குறதா சொல்லிக் கையோட சாதகமும் புள்ள போட்டோவும் மறுக்கா ஒரு தரம் வந்து தந்துட்டும் போனாக" என்றார் சுந்தரவடிவு.

"பொண்ணு பார்க்க அம்புட்டு அழகா இருக்கா தம்பி. அவுக அம்மா அப்பா அம்மாச்சி எல்லாம் ரொம்ப நல்ல மாதிரியாம். ஒரேயொரு தம்பி மட்டுந்தானாம் அந்தப் புள்ளைக்கு."

"பெரிய ஜமீன்தார் வம்சமாம் தம்பி. பொள்ளாச்சி பக்கத்துல பூங்குளம் தான் இவுக ஊராம்."

"பொண்ணும் உனக்கு சமமா நல்லா படிச்சிருக்கு தம்பி. அந்த ஊருலேயே ஒரு பள்ளிக்கூடத்துல கணக்கு டீச்சரா இருக்காம்."

மூன்று அக்காக்களும் மாற்றி மாற்றிக் கூற அவர்கள் கூறியதில் எது காதில் விழுந்ததோ இல்லையோ 'கணக்கு டீச்சர்' என்ற ஒற்றை வார்த்தையில் மற்ற அனைத்தும் மறந்து போயிருந்தது பிரபாவுக்கு.

மனம் வேகமாகத் தனக்கு வந்த அத்தனைக் கணக்கு வாத்தியார்களையும் எண்ணிப் பார்க்க வேகமாகத் தன் தலையை உலுக்கிக் கொண்டான் பிரபா. மற்ற அனைத்துப் பாடங்களையும் எளிதில் படித்து விடுபனுக்கு கணக்கு மட்டும் இன்று வரை தண்ணிக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

"எக்காவ் கறிவேப்பிலை கொத்து கணக்கா ஒத்தத் தம்பியை வளர்த்து யாரோ ஒரு வாத்திச்சி கையில மாட்டி வுட பார்க்குறீயளே. இதெல்லாம் கொஞ்சங் கூட நல்லாயில்ல ஆமா" பொங்கி விட்டான் பிரபாகரன்.

"அதானே என் மாப்பிக்குத் தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை கணக்கு" விஜய்காந்த குரலிலேயே கூறினான் பாண்டியன்.

"போங்கடா போக்கத்தவனுகளா. சொல்றானுக பாரு தேடிக் கண்டுபுடிச்சு ஒரு காரணத்தை. ஒரு நல்ல நாளா பார்த்து நான் சாதகம் பொருத்தம் பார்க்கப் போறேன். எல்லாம் நல்லபடியா பொருந்தி வந்தா இந்தப் பொண்ணுக்குப் பரிசம் போட்ட பொறவுதான் நீ கப்பலுக்குக் கிளம்பணும்" இறுதியில் உறுதியாகக் கூறிவிட்டார் சுந்தரவடிவு.

"எம்மா நீ அந்த போட்டொவைக் கொண்டு வந்துக் காட்டும்மா. அப்புறம் பார்க்கலாம் இவன் என்ன சொல்லுறான்டு" பரிகாசமாக சிரித்துக் கொண்டே கூறினார் தங்கம்.

"எக்கா உன் தம்பியை என்னன்டு நினைச்ச? அவ எந்தூரு ரம்பையா இருந்தாலும் எனக்கு வேண்டான்னா வேண்டாம் தான்" மிதப்பாகவே சொன்னான் பிரபா.

"சரி சரி எங்க தம்பி தங்கக் கம்பிதான். நீ முதல்ல குளிச்சு சாப்பிட்டுட்டு நிதானமா போட்டோவைப் பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வா. இப்ப நாங்க கிளம்புறோம்" என்று கூறிவிட்டு வாசலை நோக்கிச் சென்றவர்கள் திரும்ப வந்து,

"தம்பி இந்த விஷயம் இப்போதைக்கு உன் மாமனுங்களுக்குத் தெரிய வேண்டாம்ய்யா. இப்பவே சொன்னோமுன்னா எதாவது சொல்லி ஆட்டையக் கலைச்சாலும் கலைச்சிறுவாக. எல்லாம் ஒத்து வந்த பொறவு சொல்லிக்கலாம்" என்பதையும் மறக்காமல் சொல்லி விட்டுச் சென்றார்கள்.

"பார்த்தியா மாப்பி, எதை எங்க சொல்லணும் சொல்லக் கூடாதுன்னு பூராத்தையும் டிசைட் பண்றது இதுகதேன். எதையும் எப்படி ப்ளான் பண்ணிப் பண்ணனுங்குறதை உன் அக்காங்க கிட்ட தான் கத்துக்கணும்டா" பாண்டி பிரபாவின் காதோடு கிசுகிசுத்துக் கொண்டிருக்க, தன் மகள்களோடு சேர்ந்து அவர்கள் தாய் சுந்தரவடிவும் வெளியே வந்தார்.

"என்னடி இவன் பொண்ணு பேரைக் கூட கேக்க மாட்டேங்குறான்?" கவலையோடுப் பெண்களிடம் முறையிட,

"ம்மா அதெல்லாம் தம்பி ஒத்துக்கும்மா. நீ முதல்ல அந்தப் புள்ள போட்டோவைத் தம்பிக்கிட்ட குடு" என்றார் தங்கம்.

"முதல்ல சாதகம் பார்த்துட்டுப் பொறவு கொடுக்கலாமென்டு இருந்தேன். நான் இன்னைக்கே நம்ம சோசியரைப் போய் பார்த்துட்டு வாரேன்" என்றார் சுந்தரவடிவு ஒரு முடிவெடுத்தவராக.

"டேய் பாண்டி நீ இன்னும் கடைக்குக் கிளம்பாம இங்கனதேன் சுத்திக்கிட்டிருக்கியாடா?" என்று பாண்டியை நோக்கிக் குரல் கொடுத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சுந்தரவடிவு.

"அதானே பார்த்தேன்! என்னடா சித்தி இன்னும் ஆரம்பிக்கலையேன்னு நினைச்சேன். டேய் பிரபா இதுக்கு மேல நான் இங்கன இருந்தா உங்கம்மா இட்லிச் சட்டியில மாவுக்குப் பதிலா என்னை ஊத்தி வேவ வைச்சிரும். நான் கிளம்பறேன். சாயங்காலமா நீ அப்படியே கடைப் பக்கம் வாடா" என்றுவிட்டு அவர்களின் சாப்பாட்டுக் கடை நோக்கிக் கிளம்பி விட்டான் பாண்டி. பாண்டி தான் சுந்தரவடிவுக்குத் துணையாக அவர்களின் கடையைத் தற்போது கவனித்துக் கொள்கிறான்.

பாண்டி கிளம்பியதும் பிரபா சென்று குளித்துவிட்டு வர, வெள்ளை வெளேரென்று ஆவி பறக்க சுடச்சுட புழுங்கலரிசிச் சாதமும், மணக்க மணக்க மண் சட்டியில் அயிரை மீன் குழம்பும் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

டைனிங் டேபிளைத் தவிர்த்துவிட்டுத் தரையில் சப்பணமிட்டு அமர்ந்தவன், "ஸ்ஸ்ஸ் எத்தனை நாளாச்சு எங்கம்மா வைக்கிற அயிரை மீன் குழம்பு சாப்பிட்டு? இன்னைக்கு ஒரு புடி புடிக்கப் போறேன்" என்று கூறிக் கைகளைப் பரபரவென்றுத் தேய்த்துக் கொண்டு உண்ணத் தொடங்கினான்.

முதற் கவளம் அமுதமாய் அவன் தொண்டைக்குள் இறங்க, கண்களை மூடி அதை அனுபவித்து ருசித்தவன், நாவால் சப்புக் கொட்டியவாறே, "ம்மா மீன் குழம்பு வைக்கிறதுல இந்த ஜில்லாவிலேயே உன்னை அடிச்சுக்க ஆள் கிடையாதும்மா" என்று கூறி வியர்க்க விறுவிறுக்க ரசித்து உண்டான்.

ஆவலாகப் பிரபா சாப்பிடுவதையே ஆசையோடுப் பார்த்திருந்தார் சுந்தரவடிவு. 'ஆத்தா மீனாட்சி என் மவனுக்கு இந்த சம்பந்தம் எப்படியாவது முடிஞ்சிடணும். உனக்குப் பொங்க வைச்சுப் படையல் போடுறேன் தாயீ' என்று அவசரமாக மீனாட்சி அம்மனுக்கு ஒரு வேண்டுதல் விண்ணப்பத்தையும் வைக்கத் தவறவில்லை அந்தத் தாய் மனது.

'உண்ட களைப்பு தொண்டை வரைக்கும்' என்று கூறி அம்மாவின் மடியிலேயே ஒரு தூக்கமும் போட்ட பிறகுதான் பிரபாவுக்கு வீடு வந்து சேர்ந்த நிறைவே கிட்டியது. அந்தி சாயும் பொழுதில் கையில் காஃபி டம்ளரோடு பின்கட்டுக்கு வந்தவன் அங்கிருந்ததைப் பார்த்து அந்த நாளின் இரண்டாவது முறையாக அதிர்ந்து போனான்.

அதிர்ச்சியின் உச்சிக்குச் சென்றவன் "அம்மா" என்று கோபமாக அவனையும் மீறிக் கத்தியிருந்தான் பிரபா.
 
Last edited:

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
Hai hai.. ingayum naan first tuu.. kavya un kattula inaki mazhai thaan poo.. :love::love:

Akka... Semaya kondu poreenga.. but enaku pidicha kanaka ippadi solliputaane.. 🤐🤐🤐 dei kanaku athuvum school pullangalukku vara kanaku embuttu easy teriyuma daa.. 😤😤 neeyellam engineer marine engineer solliraatha veliya.. podaangu.. 😬😬😬

Aduthu enna aappu.. 😂😂😂 but really paavam kaa avanuku eppadi irukum.. antha 4 veeta paarthu.. ivanuku antha kanaku teacher thaan.. koodave panakaariyaam la.. idam kondu varumo.. 😀😉🤔🤔
 
Last edited:

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#9
Hai hai.. ingayum naan first tuu.. kavya un kattula inaki mazhai thaan poo.. :love::love:

Akka... Semaya kondu poreenga.. but enaku pidicha kanaka ippadi solliputaane.. 🤐🤐🤐 dei kanaku athuvum school pullangalukku vara kanaku embuttu easy teriyuma daa.. 😤😤 neeyellam engineer marine engineer solliraatha veliya.. podaangu.. 😬😬😬

Aduthu enna aappu.. 😂😂😂 but really paavam kaa avanuku eppadi irukum.. antha 4 veeta paarthu.. ivanuku antha kanaku teacher thaan.. koodave panakaariyaam la.. idam kondu varumo.. 😀😉🤔🤔
எழுதும்போதே நீ இப்படி சொல்லுவன்னு நினைச்சேன் காவ்யாம்மா :love::love::love:
 

Sponsored

Advertisements

Top